கீழே விழும் நட்சத்திரங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 14, 2014
பார்வையிட்டோர்: 7,725 
 

ஸர்ரென்று டயர் ரோடில் உரசி ப்ரேக் அடிக்கும் ஓசை. “என்னாப்பா, வூட்டுலே சொல்லிக்கினிவந்துக்கினியா?” என்ற குரல் கேட்டப்பிறகுதான் சுயநினைவுக்கு வந்தார் செந்தில்நாதன். ட்ராஃபிக்கைக் கவனிக்காமல் ராங்க்சைடில் வந்து நல்லவேலையாக இருபுறமும் வந்தவர்கள் ப்ரெக் அடித்ததினால் தப்பினோம் என்று நினைத்து வெட்கி, சாரி சொல்லி ஸ்கூட்டரைக் கிளப்பினார்.

செந்தில்நாதனுக்கு நல்ல கௌரவமான வேலை, அழகான   குடும்பம். இரு குழந்தைகள்-நர்மதா, சித்தார்த். மனைவி கங்கா. நர்மதா 11வது  படித்துக்கொண்டிருக்கறாள். சித்தார்த் 6 வது படித்துக்கொண்டிருக்கிறான்.

நர்மதா இயல்பாகவே மிகவும் புத்திசாலி. கற்பூரபுத்தி. எதையும் பார்த்தவுடன், கேட்டவுடன் எளிதாக கிரஹித்துக்கொள்வாள். பள்ளியில் எல்லாவற்றிலும் முதல் மாணவியாக இருப்பவள். சித்தார்த் வெறும் படிப்பிலியே கவனம் என்று இல்லாமல் விளையாட்டுப்போக்காக எல்லாவற்றிலும் கவனத்தைச் செலுத்துவான்.

செந்தில் வீட்டுக்குள் நுழையும்போது மணி மாலை 6. நர்மதாவும், சித்தார்த்தும் ஹோம்வொர்க் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். கங்கா இரவுச் சாப்பாடு தயாரிப்பில் இருந்தாள்.

இப்போது செந்தில், கங்கா மனதில் நர்மதாதான் நிறைந்திருந்தாள். கொஞ்ச நாளாகவே அவளிடம் ஒரு தடுமாற்றமிருப்பதை கங்கா உணர்ந்து அதை மெதுவாக செந்திலுக்கும் உணர்த்தியுருந்தாள். அந்த வயசுக்கே உண்டான தடுமாற்றம். இன்று அதே சிந்தனையில் வண்டி ஓட்டியதால்தான் சாலையில் விபத்து ஏற்பட இருந்த்து. அப்போழுதே அவர் தீர்மானித்துவிட்டார்-இன்று அதற்கு ஏதாவது ஒரு வழி தேடணுமென்று.

கைகால் கழுவிவிட்டு, மனைவி கொடுத்த காபியைப் பருகிக்கொண்டே “நர்மதாக்கண்ணு, ஹோம்வொர்க் முடிச்சாச்சா? சித்தார்த்க்குட்டி நீ?” என்று வினவினார்.

“eஏங்க, பொண்ணு ப்ளஸ் ஒன் படிக்கிறா, இன்னும் கண்ணு,கண்ணுன்னு கூப்பிடாதிங்க” என்றாள் கங்கா.

“உங்களுக்கெல்லாம் ஏதாவது சினிமாநடிகர் செல்லம் னு கூப்பிட்டா உடனே எல்லோரும் அந்த மாதிரி கூப்பிடுவீங்க. நான் என் பெண்ணை செல்லமா கண்ணுன்னு கூப்பிட்டா உங்களுக்கெல்லாம் பிடிக்காதே” என்றார்.

“என்னவோ பண்ணிக்கோங்க, நீங்களாச்சு, உங்க பொண்ணாச்சு.”

பத்து நிமிடம் கழிந்தது.“அப்பா, ஹோம் வொர்க் முடிச்சாச்சுப்பா” என்று இருவரும் புத்தகத்தை ஒழுங்காக அடுக்கினர்.

“வரீங்களா, பீச்சுக்குப் போய்ட்டு வரலாம்” என்றவுடன் இருவரும் உற்சாகமாகக் கிளம்பினர்.

கங்கா மட்டும் கவலையாக இவ்வளவு நேரம் கழித்தா? என்று கவலையுடன் வினவினாள். பிறகு மெதுவாக இருவருக்கு மட்டும் கேட்கும்தொனியில் “பார்த்துப் பேசுங்க. பையன் வேறு கூட இருக்கான்” என்றாள்.

சீக்கிரம் வந்துவிடுகிறோம் என்று செந்தில் இருவருடன் கிளம்பினார்.

பீச்சுக்கு அருகில்தான் வீடு. காலாற நடந்தார்கள். சித்தார்த் கையில் கிரிக்கெட் பாட் இருப்பதுபோல் பாவனையில் காற்றில் பந்தை அடித்துக்கொண்டே நடந்தான். நர்மதா ஏதோ யோசனையில் இருப்பது பார்த்து செந்தில்நாதன் பேச்சுக்கொடுத்தார்.

“  நர்மதா, உனக்கு எப்போம்மா டேர்ம் எக்ஸாம்?”

“அடுத்தவாரம்ப்பா.”

“ நல்லா படிக்கிறாயாடா? போன தடவை ஏண்டா மார்க் குறைஞ்சிடுச்சு? இந்த்த் தடவை நல்லாப் படிடா”

அதற்குள் பீச்சும் வந்துவிட்ட்து. கடலின் இரைச்சலுடன் போட்டியாக மனிதர்களின் சத்தம். சித்தார்த், அவன் நண்பர்களும் அங்கு வந்திருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியுடன் அவர்களுடன் பந்து விளையாடப் போனான். செந்தில் நல்ல இடமாகப் பார்த்து மகளுடன் அமர்ந்து மகன் விளையாடுவதை வேடிக்கைப் பார்ப்பதைப்போல் நர்மதாவிடம் எப்படி அந்த விஷயத்தைப்பற்றிப் பேசுவது என்று யோசிக்க ஆரம்பித்தார். அப்பொழுது பசங்களின் ஓவென்று இரைச்சல். எல்லோரும் வானத்தைப் பார்த்துக் கூச்சலிட்டனர். வானில் ஒரு நட்சத்திரம் வேகமாக நகர்ந்து கீழே விழுந்து மறைந்த்து.

செந்தில், நர்மதாவும் அதைப் பார்ப்பதைப் பார்த்தார். நர்மதா,     “அப்பா, இந்த மாதிரி நட்சத்திரம் விழுந்தா கெடுதலாப்பா? “ என்று கேட்டாள்.

“இல்லைம்மா, அப்படி சும்மா சொல்லி பயமுறுத்தறாங்கம்மா. அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. அது நிஜமான நட்சத்திரம் இல்லைங்கறது உனக்குத் தெரியுமில்லையா?

“தெரியும்பா. அது விண்கல் என்று படித்திருக்கிறேன்.”

“ஆனால் அதை நாம் நட்சத்திரம் கீழே விழுகிறது என்று சொல்றோம். லைஃப்ல கூட சில நிஜமில்லாத விஷயத்தை நிஜம்னு நினைச்சுக்கொள்கிறோம். என்று சொல்லிவிட்டு, அவள் கையை எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டு அன்புடன் ஆமாண்டா, சில சமயம் கயற பாம்புன்னு நினைத்து பயப்படுவோம், நீ கூட படிச்சிருப்பே, பாலைவனத்தில் சூர்ய ஒளி பட்டு சில இடத்துல தண்ணீர் இருப்பதுபோல் தெரியுமாம், கானல்நீர்ன்னு சொல்லுவாங்க. நாமகூட தார் ரோடில் போகும்போது தூரத்தில் நீர் தேங்கியிருப்பதுபோல் தெரியும். கிட்டப்போகும்போது ஒன்றுமிருக்காது. அதுமாதிரி லைஃப்ல நிறைய விஷயங்கள். நான் அப்படித்தான் சின்ன வயசுல்ல நிழல்ல பார்த்து அழுவேனாம். சிலசமயம் சின்னவயசுல ஏற்படற சில ஃபீலிங்கையும் நாம் நிஜமுன்னு நினைச்சுட றோம். இப்ப உதாரணத்துக்கு டீனேஜில் வர்ற உணர்ச்சிகளும் அது மாதிரிதான்ம்மா. அதெல்லாத்தையும். நாம் ரொம்ப கவனம்மா இருந்து அதுலேருந்து வெளியில் வரணும் கண்ணு. இந்த வயசில் படிப்பில்தான் நம் கவனமெல்லாம் இருக்கணும்மா.

கொஞ்சம் இடைவெளிவிட்டு, உனக்குப் புரிஞ்சுதாடா என்று வாஞ்சையுடன்   கேட்டார். சிறு தயக்கத்துடன் ஆனால் தெளிவுடன் நர்மதா தலையாட்டினாள். தன் பெண் நிச்சயம் புரிந்துகொண்டிருப்பாள் என்ற நம்பிக்கையுடன் நேரமானதை உணர்ந்து, ஒரு பெரிய நிம்மதியுடன் செந்தில் குழந்தைகளுடன் வீட்டிற்குக் கிளம்பினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *