அப்பா-மகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 26, 2023
பார்வையிட்டோர்: 1,901 
 

அரவித்தன் மூளையில் ஒரு பளிச்.

நாளிதழில் இருந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தார், சந்தேகமேயில்லை, குணசேகரனேதான். உறுதி செய்துகொண்டார். ‘கோட்டும் சூட்டுமாய் என்னமாய் இருக்கிறான்.! ‘டைரக்டர் குணசேகரன் சேஸ்…’ என்று ஹைலைட் செய்த கொட்டேஷன்களையெல்லாம் பார்த்தார். 

‘காலேஜ் படிக்கற காலத்திலே நாலு ஆங்கில வார்த்தையை சேர்ந்தாற்போல படிக்கத்தெரியாதவன் இந்த குணசேகரன்.. ஆனால் ‘அதிர்ஷ்ட்டக்காரன்’, கொழிக்கிறான். நானும்தான் இருக்கேனே ‘அதிர்ஷ்டக் கட்டை’,’ கழிவிரக்கத்தில் கலங்கினார்.

அரவிந்தனுக்கு அவசரமாய் ஒரு லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. மகனுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்திருக்கிறது. 

பிரபல அரக்கட்டளையின் கீழ் இயங்கும், அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில ஆசிரியர் வேலைக்கு மனு போட்டிருந்த அரவிந்தனின் மகன், இன்டர்வியூவில் ‘தந்தைக்காற்றும் உதவியை’ செவ்வனே செய்து திறமையை நிரூபித்துவிட்டான்.

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பது போல் இன்டர்வியூவை சிறப்பாகச் செய்துவிட்டு, தன்வேலையில் முனைந்துவிட்டான் அன்பரசன்.

வெறும் திறமை கதைக்காகுமா.! பதினைந்து லட்சம் கேட்கிறது நிர்வாகம். 

‘தந்தை மகற்கு ஆற்றும் நன்றி’யைச் செலுத்தி, திறமையை அரவிந்தன் நிரூபிக்கவேண்டிய நேரமிது.

வாய்க்கும் வயிற்றுக்குமே இழுபறியாக உள்ள வருமானத்தில் பெரிதாக கடன் இல்லாமல் வாழ்க்கையை நடத்தும் அரவிந்தனுக்கு பதினைந்து லட்சம் என்பது எட்டாக் கனவுதான்.

“உங்க மகன் திறமையை மனசுல வெச்சுத்தான் பதினைந்துனு ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க. இருபத்தைந்து கொடுக்கக் கூட ‘கேண்டிடேட்ஸ்’ தயாரா இருக்காங்க…வாய்ப்பை விட்டுடாதீங்க!. அரசு வேலை. கடனோ உடனோ வாங்கி முடிக்கப் பாருங்க..! ஹாட் கேஷ்தான் தரணும்…பெஸ்ட் ஆஃப் லக்” 

‘பர்ஸனலாக’ அட்வைஸும் ஆசியும் வழங்கினார் அரவிந்தனின் நெருங்கிய நண்பரும், அந்த அறக்கட்டளையின் முக்கியமான நிர்வாக உறுப்பினருமான கண்ணப்பன்.

‘நம் திறமைக்கு நல்ல வேலை கிடைக்கும். பணம் காசு தரமாட்டேன்..!’ என்று வரட்டு வேதாந்தம் பேசி, தன் ஐம்பத்தெட்டு வயது வரை பிரைவேட் டியூஷன் மாஸ்ட்டராகவே வாழ்ந்து வரும் அரவிந்தனுக்கு தன் மகனின் வாழ்வாவது ஒளிமயமாக இருக்கவேண்டும் என்ற ஆசை எழுவது நியாயம்தானே! 

எப்படியாவது அன்பரசனை கன்வின்ஸ் செய்து இந்த வேலைக்குள் நுழைத்துவிட வேண்டும் என்று உறுதி செய்துகொண்டார் அரவிந்தன்.

அரவிந்தனின் மகன் அன்பரசன் ஒரு ‘பக்கா ஜென்டில்மேன்.’ தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன். அனாவசியமாக மற்றவர் செயல்பாடுகளில் மூக்கை நுழைக்காதவன். தன்னை பாதிக்காத வரை அவன் எதிலும் தலையிடுவதில்லை. 

மகனின் பாலிஸி ஒரு விதத்தில் அரவிந்தனுக்கு சாதகமாக இருந்தது. 

‘கிராமத்தில் இருந்த பூர்வீக மனைக்கட்டு, வீட்டில் இருந்த தங்கம் வெள்ளி விற்றதில் பதினாலு தேறிவிட்டது. இன்னும் ஒரு லட்சத்திற்கு எங்கே போவது?’ என்ற சிந்தனையில் இருந்தபோது தான் அரவிந்தனுக்கு அப்படியொரு யோசனை வந்தது.

‘குணசேகரனைக் கேட்டால் என்ன? நிச்சயம் தருவான். அவன் படிக்கிற காலத்தில் செய்த உதவிகளை நிச்சயம் மறந்திருக்க மாட்டான்.’ அரவிந்தனின் பசித்த மனம் பழங்கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தது.

குணசேகரன் அறிமுகமானது அஞ்சல் வழியில் பி ஏ படித்தபோது நடைபெற்ற முதல் ‘செமினார்’ வகுப்பில்.

முதல் நாள் முதல் பிரிவேளை வகுப்பு துவங்கிவிட்டது.

தன்னை செந்தமிழில் அறிமுகம் செய்துகொண்ட ஆசிரியர். 

“நான் சேக்ஸ்பியர் நடத்தப் போறேன். யுனிவர்சிட்டி மெட்டீரியல் எடுத்துக்கங்க..” என்றார்.

“சேக்ஸ்பியர் சொல்றாப்ல….உலகமே நாடக மேடைனு…”

“……….”

“எண்ணிய எண்ணியாங்கு’னு அவர் எழுதிய நாடகத்துல.. அந்தக் முக்கியக் கதாபாத்திரம்….”

“………”

“இதை இலக்கணத்துல, ‘இடக்கரடக்கல்’னு சொல்லணும்.”

“……….”

ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காத விரிவுரையாளரின் ‘லெக்சரை’க் கேட்டபோது ‘நாம் பி ஏ ஆங்கில இலக்கிய வகுப்பில்தான் இருக்கிறோமா?’ என்று அனைவருக்குமே சந்தேகம் வந்திருக்கும். அனைவருக்கும் வந்ததோ இல்லையோ அரவிந்தனுக்கு வந்தது.

பேராசிரியர்களிடம் நிறைய நிறைய எதிர்பார்த்து, செமினார் வகுப்புக்கு வந்த, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் அரவிந்தனுக்கு இது புது அனுபவமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.

முழங்கை மேசையில் ஊன்றியிருக்க, உள்ளங்கை மோவாயிலும் விரல்கள் கன்னத்தையும் தாங்கியபடி நொந்துபோய் சோர்வாக அரவிந்தன் அமர்ந்திருந்தபோது, தாமதமாக வகுப்புக்கு வந்தவன்தான் குணசேகரன்.

முதல் பெஞ்சில் உட்கார்ந்திருந்த அரவிந்தனிடம், “இது பி ஏ இங்க்ளீஷ் லிட்’தானே?” என்று கேட்டான்.

“ஆமாமா..! பி ஏ இங்க்ளீஷ் லிட்தான்..! ‘தமிழ்மீடியம்!’” என்றான் அரவிந்தன் நக்கலாக.

கட்டாய வருகைப் பதிவுக்காக மட்டும் அந்த வகுப்புக்கு வந்து போனான் அரவிந்தன்.

ஆங்கிலம் அதிகம் தெரியாத குணசேகரனுக்கு விரிவுரையாளர், தமிழில் சொன்ன ஷேக்ஸ்பியர் கதைகளெல்லாம் மிகவும் பிடித்திருந்தது.

வகுப்பில் தமிழில் கேட்ட கதைகளுக்கு அரவிந்தனிடம் அவ்வப்போது வந்து ஆங்கில ஆக்கம் கேட்கத் தொடங்கி, அடிக்கடி வந்து பாடம் கற்றுத் தேர்ந்தான் குணசேகரன். 

அவன் வரவைப் பார்த்து இன்னும் சிலர் வர அந்த டியூஷன் வகுப்பெடுப்பதிலேயே பிஸியாகிவிட்டார் அரவிந்தன்.

தொடர்ந்து அரவிந்தன் எடுக்கும் டியூஷன் வகுப்பை கேட்டுக் கேட்டு அவர் மகன் அன்பரசனுக்கும் ஆங்கில இலக்கியத்தில் நாட்டம் வர, தந்தையின் திறமை மகனுக்கு சுலபமாக சித்தித்தது. அரவிந்தன் எட்டடி என்றால் அன்பரசன் பதினாறடி பாய்ந்தான்.

அரவிந்தனிடம் வந்தவர்கள் எல்லோருமே நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் செய்து அரசுத் தேர்வு, வங்கித் தேர்வு, குரூப் ஃபோர் என்று எழுதி, சம்திங் கொடுக்கவேண்டியதையும் முறையாகக் கொடுத்து உத்யோக காண்டத்தில் உயர்ந்து நின்றுவிட, அரவிந்தனோ, “லஞ்சம் தரமாட்டேன், என் திறமைக்கு இதைவிட நல்ல வேலை கிடைக்கும்!” என்றெல்லாம் வரட்டு வேதாந்தம் பேசி இன்று வரை இப்படி வாய்க்கும் வயிற்றுக்குமாக டியூஷன் வாத்யாராகவே இருக்கிறார்.

அங்கு கேட்டு… இங்கு சொல்லிவைத்து… நாலு இடங்களில் கல் விட்டெறிந்ததில் குணசேகரனின் செல் நம்பர் கிடைத்துவிட்டது அரவிந்தனுக்கு.

“நான் அரவிந்தன் பேசறேன்…” என்று சொன்ன உடனேயே “சொல்லுங்க சார்..! என்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமே நீங்கதான். சொல்லுங்க உங்களுக்காக எதுவும் செய்யத் தயாரா இருக்கேன்..” என்றான் குணசேகரன் உணர்ச்சிவசப்பட்டு.

அதோடு மட்டுமில்லை. அவசர தேவை உணர்ந்து இரண்டு ஐநூறு ரூபாய் செக்‌ஷன்களை ஒரு மஞ்சள் பையில் கொண்டுவந்து மரியாதையாக அரவிந்தன் கையில் கொடுத்து காலில் விழுந்து வணங்கினான்.

பதினைந்து லட்சம் தயார். ஒரு துணிப் பையில் போட்டு சுவாமி அலமாரியில் வைத்தார்.

“அன்பரசா…!”

“இதோ வரேம்ப்பா..” என்று குரல் கொடுத்துவிட்டு மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தான்..அன்பரசன்

“என்னப்பா..?”

“இன்னும் ஒரு மணி நேரத்துல நாம கிளம்பணும்.. சீக்கிரம் ரெடியாகு..”

“எங்கேப்பா..?”

“அதான், போன வாரம் இன்டர்வியூவுக்குப் போனியே.. அங்கேதான்…”

“அங்கே எதுக்கு இப்போ போகணும்.. அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் எதுனா வந்திருக்கா..?”

“அதெல்லாம் ஒண்ணும் வரலை. என் சிநேகிதன் ஒருத்தன் அந்த அறக்கட்டளைல கமிட்டி மெம்பரா இருக்கான். அவன்தான்…” என்று முடிக்கும் முன்னே…

“அப்பா… உங்களுக்குத்தான் இந்த சிபாரிசெல்லாம் பிடிக்காதேப்பா.. நீங்க எப்ப இப்படி மாறினீங்க..” அன்பரசனின் குரலில் அதிர்ச்சியும் ஆற்றாமையும் தெரிந்தன.

‘இதற்கே இப்படி அதிரும் இவனிடம் லஞ்சமாகத் தர பதினைந்து லட்சம் சேர்த்துவைத்திருக்கும் விஷயத்தை எப்படிச் சொல்வது’ என்று அரவிந்தன் யோசித்துக்காண்டிருந்தபோது அன்பரசனே பேசினான்.

“அப்பா.. நான் உங்க பிள்ளைப்பா.. எனக்கு உள்ள திறமை எனக்குத் தெரியும். என் திறமையை மதிச்சி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அனுப்பினால், அப்போ போகலாம். தேவையில்லாம உங்க மதிப்பை எங்கேயும் குறைச்சிக்காதீங்க..!”

“……” வாயடைத்து நின்றார் அரவிந்தன்.

“அப்பா நீங்க போய் உங்க வேலையப் பாருங்கப்பா, எனக்காக மாடீல டியூஷன் ஸ்டூடன்ட்ஸ் வெயிட்டிங்..” என்று சொல்லிக்கொண்டே பதிலுக்குக் காத்திராமல் மாடிப்படிகளில் ஏறினான் அன்பரசன்.

  • 12.06.2022, மக்கள் குரல்.
Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *