கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 13,858 
 

வர்மராஜா அரசர் தனது நாட்டில் நல்லாட்சி புரிந்து வந்தார். ஜனங்களும் எந்தவிதப் பிரச்னையும், கஷ்டமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். இயற்கையும் சதி செய்யாமல் மாதம் மும்மாரி பொழிந்தது.

நாட்டு மக்கள் அனைவரும் கவலையின்றி மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்போது ஒருவன் மட்டும் கவலையில் வாடினான். மனம் புழுங்கினான். அவன் வேறு யாருமில்ல, அரசனின் மூத்தமகன் ராஜகுமாரன். ராஜகுமாரனுக்கு ஒரு குறையும் இல்லை. திருமணம் முடிந்து ஒரு ஆண்குழந்தையும் உள்ளது. எந்தப் பொறுப்பும், கவலையும் இல்லை. உண்மையிலேயே அரச போகத்தை அனுபவித்தான் இளவரசன்.

AppaAppaஆனாலும் அவனைச் சுற்றிலும் எப்போதும் ஒரு வெட்டிகும்பல் உண்டு. “”இளவரசே! தாங்கள் எப்போது ஆட்சிக் கட்டிலில் அமர்வீர்கள்? தங்களுக்கு என்ன அதற்கான திறமை இல்லையா? தகுதி இல்லையா? உங்கள் தந்தை செய்வது கொஞ்சம் கூட சரியில்லை. இன்னும் எவ்வளவு நாட்கள்தான் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கப் போகிறார்?

“”பேசாமல் உங்களுக்கு முடி சூட்டிவிட்டு அவர் வனப்பிரஸ்தம் செல்லாமல் இன்னமும் சிம்மாசனத்தை விடமாட்டேன் என்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பது நன்றாகவா இருக்கிறது? தாங்களும் ஒருமுயற்சியும் எடுப்பதில்லை. மயிலே மயிலே இறகு போடு என்றால் போடுமா? பழம் தானாக வாயில் வந்து விழுமா? நாம்தான் முயற்சி செய்ய வேண்டும்…”

“”நான் என்ன முயற்சி செய்வது?”

“”தங்களுக்குத் தெரியாததா? நான்தான் சொல்லித்தர வேண்டுமா? பரம்பரைப் பழக்கப்படி செய்ய வேண்டியது தான்.”

“”பரம்பரைப் பழக்கமா? நான் கேள்விப்பட்டதே இல்லையே!”

“”விளையாடாதீர்கள் இளவரசே! பரம்பரைப் பழக்கம் என்றால் நமது பரம்பரைப் பழக்கமில்லை. பிறநாடுகளில் பரம்பரையாக நடைபெற்று வரும் வழக்கத்தைச் சொன்னேன்! மகனிடம் அரசாட்சியை ஒப்படைக்காத தந்தையை, தந்தை என்றும் பாராமல் சிறையில் தள்ளிவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டியது தான்.”

“”மக்கள் ஒத்துக் கொள்வரா?”

“”மக்கள் ஆட்டுமந்தைக் கூட்டம். உங்கள் தந்தைக்கும் ஜே போடுகிறது. நீங்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட்டால் உங்களுக்கும் ஜே போடும்.”

“”என் தாய் மனம் வருந்துவார்களே? என் தந்தைதான் என்னைப் பற்றி என்ன நினைத்து கொள்வார்?”

“”உங்கள் கதை கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற கதையாக இருக்கிறது. ஆட்சி வேண்டுமென்றால் தந்தை தாய் எதையும் பார்க்கக் கூடாது. தந்தை தாய்தான் பெரிது என்று நினைத்தால் ஆட்சியை நினைக்கக்கூடாது…” என்று வெட்டி நண்பர்கள் இளவரசருக்கு உருவேற்றி விட்டனர்.

இளவரசரும் துணிந்து விட்டார். தளபதியைக் கைக்குள் போட்டுக் கொண்டு தந்தையை சிறையிலடைத்து சிம்மாசனம் ஏறினான்.

“”நீ அரசனாக விரும்புகிறாய் என்று என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் போதுமே, உனக்கு நானே முடி சூட்டியிருப்பேனே? தந்தையை நடத்துவது போல் அல்லாமல் எதிரியைப்போல் நடத்துவது உனக்கே நன்றாக இருக்கிறதா? எனக்கு எதற்கு சிறை? ஊரார் உன்னைத்தான் ஏசுவார்கள், பழிப்பார்கள். என்னை விடுதலை செய்து விடு. கண்காணாத இடத்திற்கு சென்று அமைதியாகக் காலம் கழிக்கிறேன்!” அரசர் மகனிடம் வேண்டிக் கொண்டும் பயனில்லை.

சிறையிலடைத்ததும் இல்லாமல் அவருக்கும் உணவும், தண்ணீரும் கொடுக்கக் கூடாது என்ற கட்டளை வேறு. “”இப்படிச் சிறையில் அடைத்து பட்டினி போட்டு சித்தரவதை செய்வதை விட, ஒரே அடியாக தூக்கில் போட்டாலும் மகிழ்வேன். வீர மரணம் அடைய விரும்புகிறேனே தவிர பட்டினியால் சாக விரும்பவில்லை…” என்று அரசர் கேட்டுக் கொண்டும் பலனில்லை.

இளவரசரின் தாய், “”அவர் உன் தந்தையடா. அவர் எப்படி அரசபோகத்தில் வாழ்ந்தவர். இன்று அவருக்கு சிறைவாழ்வா? வேண்டாம். எங்களை விட்டுவிடு. எங்காவது போய் பிச்சை எடுத்தாவது அல்லது கூலி வேலை செய்தாவது பிழைத்துக் கொள்வோம். இல்லையேல் என்னையும் தந்தையுடன் சேர்த்து சிறையிலே அடைத்துவிடு…” என்று எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் மகன் மனம் இளகவில்லை.

“மகன் தகாத வழியில் செல்கிறான். நாமாவது உடனிருந்து அவனைத் திருத்துவோம்’ என்ற எண்ணத்தில் இளவரசரின் தாய், அனைத்தையும் பொறுத்துக் கொண்டு காலத்தை ஓட்டினாள். மகனின் மனம் மாறாதா என்று ஏங்கினாள்.

“”சாப்பாடு, தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று அவன் என்ன எனக்கு உத்தரவு போடுவது? கொடுத்தால் கூட நான் கையால் தொடப்போவதில்லை. பட்டினிக்கிடந்தே உயிர் நீத்துக் கொள்கிறேன். இந்த அவல வாழ்வு வாழ்வதை விட மரணம் எவ்வளவோ மேல்!” என்று முடிவுக்கு வந்த அரசர், ராணி ரகசியமாகக் கொண்டுவந்து கொடுத்த உணவையும், தண்ணீரையும் தொட மறுத்துவிட்டார்.

அன்று பவுர்ணமி. வானில் வெள்ளிநிலா தண்ணொளியைப் பரப்பிக் கொண்டிருந்தது. இளவரசர் தற்போது அரசர். மாளிகையின் நிலா முற்றத்தில் அமர்ந்து தனது ஒரு வயது மகனைக் கொஞ்சிக் கொண்டிருந்தான் இளவரசன். பக்கத்தில் இளவரசி, அரசரின் தாய் நீர்வடியும் கண்களுடன்.

“”நீயும் இதே போல் ஒரு வயதுப்பையனாக இருந்த போது, உன் தந்தையும் உன்னை இதே நிலாமுற்றத்தில் இது போன்ற முழுநிலா நாளில், உன்னைத் தூக்கி கண்ணே, மணியே என்று கொஞ்சிய காட்சி நினைவுக்கு வருகிறது. உன்னைத் தூக்கிய கரங்களில் விலங்கு. கொஞ்சிய வாய்க்கு தண்ணீர் கூட கிடையாது. உன் மகனும் வளர்ந்து நாளைக்கு உனக்கும் அந்த நிலைவர நேரமாகாது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கின்றனர்…” என்று அரசருக்கு தன் தாய் சொன்னது நெஞ்சைத் தொட்டது.

அரசர் கண்ணில் அந்தக் காட்சியும் படமாக தெரிகிறது. அதே நிலாமுற்றம். தன் தாய், தந்தையான அரசர் சிறு குழந்தையாக தான். தன்னை அரசர் கண்ணே, மணியே என்று கொஞ்சி மகிழ்ந்தது.

“அந்த தந்தை இப்போது என்னால் சிறைப்படுத்தப் பட்டு, தண்ணீர் கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்துகிறேன். தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி இதுதானா? எல்லாம் எதற்காக? இந்த ஆட்சிபீடத்திற்காகத்தானே? பெற்று வளர்த்த தந்தையைவிடவா ஆட்சி பெரிது? கேட்பார் பேச்சைக்கேட்டு மதிகெட்டுப் போய் இத்தகைய கொடுமையை இழைத்து விட்டேன். இதோ இப்போதே நான் நேரில் சென்று தந்தையை விடுதலை செய்கிறேன். ஆட்சியை அவரிடம் ஒப்படைத்து விட்டு நான் எப்போதும் இளவரசன் என்று கவுரவத்தோடு அரச போகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்…’ என்று நினைத்து நிலாமுற்றத்திலிருந்து சிறைச் சாலைக்கு ஓடினான் புதிய அரசரான மனம் மாறிய இளவரசர்.

அதற்குள் காலம் கடந்து விட்டது. உணவும், தண்ணீருமின்றி வாடிய அரசரின் உயிர், தூக்கத்திலிலேயே போய் விட்டது. மயிர் நீப்பின் வாளாக் கவரிமான் போன்ற அரசன் நீளத்துயிலில் ஆழ்ந்து விட்டார்.

“”அப்பா!” என்று அலரிக்கொண்டு தந்தையின் மேல் விழுந்து புரண்டு அழத்தான் முடிந்தது அரசரால்.

தன் செயல் இவ்வளவு தூரத்திற்கு கொண்டு செல்லும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. தனது இத்தகைய நடத்தைக்கு காரணமான புல்லுருவி நண்பர்களை முதலில் தன்னிடமிருந்து விலக்கினார்.

தன் தந்தையின் மறைவை முன்னிட்டு பெரும் தான தர்மங்களைச் செய்தான். “உயிரோடு இருக்கும் போது ஒரு குவளை நீரும் கொடுக்காது கொன்று விட்டு இப்போது அரசரின் மறைவிற்கு தானதர்மங்களா? நினைவஞ்சலியா?’ என்று ஜனங்கள் அரசரின் காதுபடவே பேசிக் கொண்டனர்.

என்னதான் தான தர்மம் செய்தாலும் அவன் செய்த பாவம் அவன் மனதை குத்திக் குதறிக் கொண்டே இருந்தது. அந்த மனசாட்சியின் உறுத்தலிலிருந்து அவனால் தப்பவே முடியவில்லை.

– ஆகஸ்ட் 20,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *