தாத்தா ஒரு மாதிரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2023
பார்வையிட்டோர்: 2,337 
 

சம்புபாதருடைய கொப்பாட்டனின் கிளைவழிமுறையில் சகோதரனாக வரும் பஞ்சாபிகேசன் என்பாரின் மகள் லலிதா என்கிற லலிதாகுமாரிக்கு கும்பகோணத்தில் இன்றைக்குத் திருமணம். மாப்பிள்ளை ஐடி பொறியாளராம், மும்பாயில் ஒரு குழுமத்தில சேர்ந்து ஆறேமாசந்தான், அதுக்குள்ள அமெரிக்காவிலொரு கணினிக்குழுமம் எப்போவந்து பணியிலே சேருறேள்னு மெசேஜ் அனுப்பிட்டே இருக்குதாம். லலிதாவும் இங்கிலிஷ் லிரறேச்சர் பி.ஏ முடிச்சிட்டிருக்காள். இணை விரைவில் இணைந்துபோய் அமெரிக்காவில் செட்டிலாகி விடுவார்களாம்.

தாத்தா வீட்டிலே எது விஷேசமின்னாலும் இரண்டுமூன்று நாளைக்கு முதலே குடும்பத்தோடு அமர்க்களமாய் வந்துநின்று எதிலும் ஒரு குறைவுமில்லாமல் நிறைவாய்ச்செய்து கொடுத்துவிட்டுபோகிற அக்குடும்பத்தின் முதற்கொண்டாட்டத்தைச் சாட்டுப்போக்குச்சொல்லித் தட்டிக்கழிக்க முடியாதல்லோ. தாத்தாவின் குடும்பத்தில் பாட்டி மிஸிஸ் சம்புபாதர், மகன் விச்சு, மிஸிஸ் மைதிலி விச்சு , மகள் சியாமளா அவள் புருஷன் + வாண்டுகள் எல்லோருமே திருமணத்துக்குப் போயிருந்தார்கள்.

தாத்தாவுக்கு ஆறுமாசமுன்னேதான் லேசாக மைல்ட் ஸ்ட்ரோக் ஒன்று வந்து கடவாயைக்கொஞ்சம் இழுத்தது. தீவிரவைத்தியத்தில் வாய்குணமாகி என்ன இப்போ முன்னரைவிடவும் அலாதியாகப்பேசுகிறார். திருமணத்துக்குத் தாத்தாவையும் தொடரியில் கூட்டிப்போவதானால் அவரையும் ஒரு பயணவுறையைப்போலப் பக்குவமாய் ஏற்றியிறக்கி எடுத்துப்போய் எடுத்துவரவேண்டும். அல்லது அவருக்காக ஒரு சீருந்தையாவது ஏற்படுத்தவேணும். பெற்றோல் விலையில அதுக்கு 3000 ரூபா தனியாகவேணும். அதுக்கு அந்தப்பணத்தை மொய்யாக எழுதிவிட்டால் அவாளுக்காவது பிரயோசனப்படுமேயென்று நடைமுறையில் யோசித்து முடிவெடுத்துவிட்டு இவருக்கு காலையாகாரமாக இட்லி சாம்பார், சட்னி, மிளகாய்ப்பொடி எல்லாம் எடுத்துவைத்துவிட்டு அவரை வீட்டில் கன்வேஸ் கட்டிலிலேயே விட்டுப்போனார்கள்.

தாத்தாவருகில் கை எட்டுக்குள்ளாக வேண்டிய அவ்வாரத்துப் பத்திரிகைகள் கல்கி கலைமகள் விகடன், தண்ணீர்ச்சொம்பு, மூக்குப்பொடிச்சிட்டிகை தலைவலிமாத்திரைகள் எல்லாம் எடுத்துத் தயாராக வைக்கப்பட்டன.

வீதிக்கு எதிர்த்தசாரியில நாலாவது வீட்டில இருக்கிற சாந்தம்மாவை மத்தியானம் ஒரு சுண்டு சாதம் வடிச்சுக்குடுடீன்னு பாட்டிசொல்லி அரிசி, பருப்பு, காய்கறிகள் பச்சமிளகாய், பூண்டு, துருவுபலகை அரிவாள்மனை எல்லாம் வெளியில் தயாராக எடுத்து வைத்தார்கள்.

காலையில் மாங்கல்யதாரணம், மதியம் உடனேயே ரிஷெப்சனுமாம். சாப்பாட்டுப்பந்திகள் மொய் எழுதுவதற்கான வரிசைகள் ரொம்ப நீளாமலும் இருந்து தெரிந்தவர்கள் யாராவது இவர்களை பொழுதோட ரயிலடியில விட்டுவிட்டாலோ, அல்லது டாக்ஸியோ ஆட்டோவோ கிடைத்துப்புறப்படமுடிந்தாலோ மாலை ஏழு எட்டுமணிக்குள்ளாற கொஞ்சம் கட்டுச்சாதம் பலகாரங்களோட வந்திறங்கிவிடலாம் என்ற பாட்டி மிஸிஸ் குமுதலேகா சிரையரின் ஊகத்தோடும், அவசியம் கல்யாணவீட்டுக் கட்டுச்சாதத்தையும் பாயாசத்தையும் கொணர்ந்துகொடுத்து அப்பாவுக்கு சுகரை ஏத்தணுமா என்ற சியாமளாவின் நியாயமான கவலையோடும், கல்யாணத்துக்காகக் கொண்டுபோகிற நகைகள் அத்தனையையும் குண்டுமணிகுறையாமல் பக்குவமாய்த் திருப்பிக்கொணர்ந்து சேர்த்திடணுமே என்ற அக்கறையில் பயணவுறையை சிக்காராகக் கட்டிப்பிடித்த மருமகள் மிஸிஸ்.மைதிலி விச்சுவின் கவலையோடும் ஏழே காலுக்கே டாக்ஸியை வரவழைத்து ரயிலடிக்குப் புறப்பட்டது கல்யாணக்கோஷ்டி.

போதாததுக்கு எதிராத்தில 32 வயதாகியும் வேலைவெட்டி கல்யாணங்காட்சி ஒன்றுமில்லாமல் இருக்கிற ரகோத்தமன் அப்பப்பவந்து தாத்தாவோட பேசிண்டிருக்கப்போறான், என்னமோ தத்துவவிசாரமாம், மணிக்கணக்கா கேட்கிறவாளுக்கு எதுவும் புரியாம இருவரும் சலம்பிண்டேயிருப்பாள்.

ரகோத்தமன் காலையில் எழும்பி பல்தேய்த்து முகங்கழுவி ப்றெஷாகி டீயெல்லாம் அவனே போட்டுக்குடித்து டீஷேர்ட்டை மாற்றிக்கொண்டு வீட்டுவாசலில் வந்துநின்று பள்ளிக்கூடம், காலேஜ், வேலைக்குப்போகிற அலரகவைகள், மடந்தைகள், அரிவையர் தெரிவையர் எல்லாத்தையும் வருடிவழியனுப்பிவிட்டு ஏறுவெயில் ஏறத்தொடங்கவும் தாத்தாவீட்டுக்குப் போக எண்ணினான். தாத்தாவீட்டுக்குள் நுழையமுன் அவனுக்கு டீ குடித்த வாயுக்கு ஒரு சிகரெட்பிடிக்கத்தான் மனம் பிரீதிப்பட்டது. ஷேர்ட் பாக்கெட்டில் வெள்ளைச்சல்லி இல்லை, சரி தாத்தாவின் மூக்குப்பொடிச்சரையிலிருந்து ஒரு சிட்டிகை எடுத்துக் கிறுகிறுப்பை ஏற்றுவோம் என்று வீதியைக்கடந்துபோய் கேட்டைத் திறந்து கொண்டு உள் நுழைந்தான்.

தாத்தாவின் இயற்பெயர் சம்புபாதாசிரியர். இவருக்கு திருவாதவூரில் பிறந்ததினாலோ என்னவோ எந்தக்கட்சியிலும் இல்லாமலே தன் வெறும் விசுவாசத்தினால் அரிமர்த்தனபாண்டியனுக்கே மதியுரைக்கவல்ல முதலமைச்சராக சேவகம் செய்த பாரெங்கும் கியாதியான மாணிக்கவாசகரின் பெயரை விடுத்து சம்புபாதாசிரியர் எனும் பெயரைச் சூடிய தாத்தாவின் அப்பாவிடம் நிச்சயம் ஒரு நியாயமான காரணம் இருந்திருக்கத்தான் வேண்டும். ஆனால் அந்தப்புரட்சிக்காரக் கொள்ளுத்தாத்தாவிடம் யாரும் அக் காரணத்தை இனி

விசாரித்தறிந்துவிடமுடியாது, சம்புபாதருக்கே இப்போ 73 அகவைகளாகுது…அவருமிருந்தால் செஞ்சுறியும் அடித்திட்டுத் தண்டால் எடுத்துக்கொண்டிருந்திருப்பார்!

தாத்தா பிரிடிஷ்காலத்து மெட்றிகுலேஷன் பாஸ்பண்ணிய விவேகமான மனிதர், தேச கால வர்த்தமான நடப்புகள், சமூக உலக ஒழுங்குகள் அறிந்தவர், என்ன சனாதன சாங்கியங்களில் இன்னும் கொஞ்சம் ஒட்டுதலிருக்கு, ஆனாலும் யாரிடமும் அவற்றை எதிர்பார்க்கவோ நிர்ப்பந்திக்கவோ மாட்டார். அரசு ஊழியராக பொதுக்கட்டுமானத் துறையில் இருந்தகாலத்தில் அவரது நண்பர்கள் அவரைச் சம்புவென்றோ சாம்புவென்றோ அழைக்க, இவரைப்பிடிக்காதவர்கள் மறைவிலும் தன் காதுபடவும் `சிரையர்’ என்று அழுத்தமாகச் சொல்வார்களென்றும் தாத்தாவே சொல்லியிருக்கிறார்.

“குட் மோர்ணிங் தாத்தா…….” என்றுகொண்டு எட்டவிருந்த நெகிழி நாற்காலியைத்தூக்கி அவர் அருகில் போட்டுப் பதுமையாக அமர்ந்தான். பதிலுக்கு இவனுக்கு “குட் மோர்ணிங்” சொல்லிவிட்டு இடைவெளி இல்லாமல் வீட்டில் எல்லோரும் இன்றைக்கு கும்பகோணம் பஞ்சாபிகேசன் வீட்டுத்திருமணத்துக்குப் போயிருப்பதை விவரித்தபோது அப்போதுதான் கேள்விப்படுவதைப்போலச் சுவாரஸியமாய்க்கேட்டான். இடையே ஸ்டூலில் தனித்திருந்த அவரது மூக்குப்பொடிச்சிட்டியை உரிமையுடன் நகர்த்தி ஒரு சிட்டிகை எடுத்து இழுத்துக்கொண்டான். அது தும்மல் வருவதைப்போல அவன் முகத்தைக் கோணவைத்துப் பாவனை காட்டிவிட்டுப்போய்விடவும், இரண்டாவது தடவையும் எடுத்துச்சற்று ஆழமாக இழுக்கவும் இம்முறை நிஜமாகவே தும்மல் வரவும் எழுந்துபோய் வாசலருகில் தாழ்வாரத்தில் தும்மிவிட்டு மீண்டும் கதிரையில் வந்தமர்ந்து தாத்தாவின் விவரணத்தை முன்னரைப்போன்ற சுவாரஸியத்துடன் கேட்டான். `அதையும் விட்டால் அவனுக்குத்தான் வேறுவேலையே இல்லையே’.

தாத்தா அவனுக்குச்சற்றுச் சுவாரஸியத்தைக் கொடுக்குமேயென நினைத்தாரோ…மனமிரங்கி இப்போது தன் `டாப்பி’க்கை மாற்றியமைத்தார்.

“ஏண்டா ரகு எப்போதான் நீ எங்களுக்குக் கல்யாணச்சாப்பாடு போடப்போறே…பருவத்தில் பயிர்செய்னு இருக்கு, எதுக்கும் பருவத்தைத் தப்பவிட்டிடாதப்பா. பார்த்திட்டிருக்கப் பறந்துபோயிடும்.”

தாத்தா அக்கறையாக அவனுடைய கல்யாணத்தைப்பற்றி விசாரித்ததில் பூத்தசந்தோஷம் செல்லமாய்ப்பொங்கி ரகோத்தமனது உட்கபாலத்துள் மொத்தியது. அவனுக்கும் உள்ளூரப்புளகந்தான் என்றாலும், அதுபற்றி அக்கறைப்படாதவன் மாதிரிப்பிகு பண்ணினான். தாத்தா திரும்பவும் அதையே அழுத்தவும்…

“ஒரு சின்னவேலைகூடக்கிடைக்காமல் எப்படி மாமா ஒரு பொண்ணை ஆத்துக்கு இட்டாந்து… அவளையும் நம்மகூடச் சேர்த்துவைச்சுப் பட்டியடைக்கறது…”

ரகோத்தமன் எல்லோரையும்போலத் ‘தாத்தா’ என்று சொல்லாமல் `மாமா’ என்றது தாத்தாவுக்கும் புளகமாயிருந்தது.

“அந்த மாப்பிள்ளை நாயக்கன்பட்டியில (தஞ்சாவூர்) இருந்து பேசிவந்த பெண்ணை வேணாமின்னிட்டியாமே ஏன்டா…. வர்ற பொண்ணு ராசியானவளாயிருந்தா அவளது ராசியின் வெளிச்சத்துக்கே உன்வீடு துலங்க ஆரம்பிச்சிடும்பா..உனக்கு வேலை அந்தஸ்த்தெல்லாம் கெடைக்க வெச்சு எங்கேயோ உயரத்துக்குத் தூக்கின்டு போயிடும்டா…இப்படி வலிய வர்ற மகராசிகளையெல்லாம் தட்டிக்கழிச்சிண்டேயிருந்தா ஒனக்கு ஒரு புது வழி திறப்பதெப்போ…கொஞ்சம் புத்தியோட சிந்திக்கணும்டா…எனக்குக்கூட மாமியைக் கட்டிண்டப்புறந்தான் ஜாப்பே பெர்மனென்டாகி புரோமோஷன், டிரான்ஸ்பர் எல்லாம் ஒண்ணாகக் கிடைச்சிச்சு..”

புதுக்கோட்டையில எலெக்டிரிகல் ஃபோமனாக இருக்கிற தாத்தாவின் ஃப்ரெண்டு ஒருத்தர்தான் “பத்தில செவ்வாயிருக்கிற பொண்ணுவேய் 26 நடக்குது…வரன் திகையாம அலையறாங்க…நல்ல வசதியான குடும்பம்வேய் சீர் சினத்தி ஒண்ணுக்கும் கொறைவில்லை, ஏதாவதொரு டிகிரி முடிச்சிருக்கிற, குடிகூத்தி இல்லாத பையனா இருந்தாச்சொல்லும் புண்ணியமாய்ப்போம்வேய்” என்று இவரைக் கேட்டிருந்தார்.

“ஒரு நல்ல பையன் இருக்கான்வேய்…டிகிறியெல்லாம் முடிச்சிருக்கான் தன்னை மார்க்சிஸ்ட் என்கிறான் அப்பப்ப கொஞ்சம் கொம்யூனிசமும் பேசுவாப்பல பரவாயில்லையா…”

என்ன இஸமோ இளவோ எதென்னாலும் பேசட்டும் அதெல்லாம் பின்னால அவள் பாத்துப்பாள், இந்தக்காலப் பொண்ணுங்களுக்கா தெரியாது பசங்க வாயை அடைக்கிற வித்தை, என்றவருக்குச் சம்பந்தத்தில நேரடியாத் தன்னுடைய பங்களிப்போ தலையீடோ இருக்குன்னா மடுத்திடுவாங்கிறதுக்காகத் தான் ஒதுங்கிநின்று ரகோத்தமன் வீட்டைக் கைகாட்டிவிட்டவரே தாத்தாதாங்கறது ரகோத்தமனுக்குத் தெரியாது.

“பொண்ணுவீட்டுப்பணத்தில முகூர்த்தம்வைச்சு, தாலிவாங்கி, ஹோமம்வளர்த்து, அவவீட்டுப்பணத்தில கல்யாணமண்டபம் பிடிச்சு, சமையல்போட்டு, பந்திபோட்டுக் கல்யாணம் வைச்சா மாப்பிள்ளைன்னு எனக்கு அங்கே என்னதான் மரியாதை இருக்கும், காலத்துக்கும் மாமன் மாமி மச்சான்மார் சொல்றதையே கேட்டிண்டு ஒழுக்குச்சட்டிமாதிரி அவங்க வைக்கற இடத்திலேயே கிடந்துண்டு அட்ஜஸ்ட் பண்ணிட்டுவாழணும், அதெல்லாம் என்னால முடியாது, நேக்குப் பிடிக்காது அப்படியொரு வாழ்க்கைன்னா வேண்டாம்மாமா..”

“நீ ஸொல்றதிலுள்ள டிஸ்-எஸ்டீம் ஃபீல் எனக்குப் புரியாமலில்லை ரகு, அவங்க கொஞ்சம் வசதியான ஆட்கள்போல இருக்கு, அவங்கப்பா அரிச்சந்திரனே State Bank of India இல எக்கவுண்டன்டாக வேர்க்பண்ணிட்டு ஏர்லி றிடையர்மென்ட் எடுத்திட்டு சவூதிக்குப்போய் Saudi Ryad Bank கில 5 வருஷம் வேர்க் பண்ணிட்டு வந்திருக்காரு ஏகப்பட்ட பணமிருக்கு. ஆனா அவாகிட்ட அந்தத்திமிரெல்லாம் பேச்சில நடப்புல கிடையாது, ரொம்பப் பௌவ்யமான மனுஷாள், தம்பொண்ணுக்கொரு வரன் திகைஞ்சு வந்தாப்போதுமின்னு தவமாய்த்தவமிருக்கா… பொண்ணோட அண்ணா ஒருத்தன் ஸ்டேட்ஸில வேற இருக்கானாம். பார்த்தியா ஒனக்கு வரப்போற பாக் – சப்போர்ட்டை.

நீயும் நான் மார்க்சிஸ்ட்டு, சீதனம் வாங்கறதெல்லாம் ஃப்யூடலிஸம், மானுடவிரோதம் அப்பிடின்னு வரட்டுத்தத்துவங்கள்பேசி முரண்டுபண்ணாத…. மார்க்சிஸத்திலகூட வெல்த் ஓரிடத்தில குவியக்கூடாது எங்கறதுதானே உங்க டொக்றீன், குவியிற வெல்த் இல்லாதவங்க தேவைக்கு மூவ் ஆகணும், அதாவது உபரியா நிக்கிற மலைகளால மடுக்கள் நிரவணும்…….. எதுன்னாலும் ஐஸ்வர்யமோ மிடிமையோ வாறதுன்னா லோகத்தில எல்லாருக்கும் சமமாக வரணும், அப்பிடித்தானே…”

இப்போது ரகோத்தமன் அவரை முறைத்தான்.

“சாரிப்பா…சும்மா டமாஸு பண்ணினேன், மாற்றங்கள் காலத்தோட வந்தேயாகும், அதுதான் என்னோட இன்ரபிறிடேசனும், புரிதலும் . ஓரிடத்தில இருக்கிற வெல்த்தை அவங்களா மனம் ஒப்பித்தர்றப்போ அதை. வாங்கி யூரிலைஸ் பண்ணி ஒருத்தன் மேல் வாறதுங்கறதுதான் புத்திசாலித்தனம். அதொன்னும் பெரியதப்போ மானிட அறங்களுக்கு விரோதமோ இல்லப்பா…

அப்படி உதவுவதை இஸ்லாத்தில அனுமதிச்சிருக்கு, ஒருத்தனுக்கு அவனுடைய வியாபாரம் மேலவர உன்னால உதவமுடியும்னா உதவு, அந்த உதவிக்காக அவங்கிட்ட வட்டி வாங்காத அப்படீன்னு. அப்படி ஈமானுள்ள ஒரு மிக்கோன் மீமகன் உதவுறான்னு எடுத்துக்கோ….. மீன் படுறப்போ சாதுர்யமா உன் வலையை வீசிக்கோ…பி பிராக்டிகல் மேன்.

கொம்யூனிஸ்ட் எங்கிறே….அப்புறம் நீயும் பிஸினெஸ் அன்ட் ஃபினான்ஸ் மனேஜ்மென்ட்தானே படிச்சிருக்கே…ஃபினான்ஸ் எவன் கையில இருக்கு அது கப்பிட்டலிஸ்ட் கையிலதான் இருக்கு இருக்கும். உனக்கு எதுக்கு அவங்க சமாச்சாரம்.. பார்த்தியா மாற்றம் உன்னிலேயே ஆரம்பிச்சுவிட்டிருக்கறத…இட்ஸ் த சேஞ்ஞ்பா…ஐ இன்சிஸ்ட் ஓன்.”

“என்ட ரிசல்ட்ஸுக்கு அதுதான் படிக்கக்கிடைச்சுது அது நம்ப எடியுகேஷன் சிஷ்டத்தில இருக்கிற கோளாறு மாமா…அதுதான் பேஸிக்கில இருந்து முழு சிஸ்டத்தையே மாற்றி அமைக்கணுங்கறோம்.”

“அதைவிடுத்து நாலு சிவப்புப் பழுப்புப் புத்தகங்களை அதிலே என்னதான் இருக்குன்னு பார்க்க படிச்சுவைக்கலாம் தப்பில்லே நான் குரானும் பைபிளும் முழுக்கப்படிச்சிருக்கேன், அதில ஒண்ணுந்தப்பில்லே. கோட்பாடுகளுக்குள்ளயே சிக்குண்டு அதுக்குள்ளயே கிடந்தாயானா அதுலேயிருந்து விடுதலையாக நோக்கு வயசாகிடும் கண்ணா, அப்புறம் நோக்கு இடுப்பும் xxxxxxxம்பாதுப்பா…” என்றவர் விட்டுவிட்டு

“கோட்பாடுகள் தத்துவங்கள் சித்தாத்தங்கள் எல்லாமே ஓடங்கள் மதிரி, எல்லாம் எமக்கு ஒரு ஏரியைக்கடக்க மட்டுந்தான் தேவை, கடந்தப்பறமும் அவற்றை முதுகில சுமந்திட்டுத் திரியவேண்டியதில்லைன்னு ராகுலசாங்கிருத்தியானே சொல்லியிருக்கார் படிச்சிருப்பே. மானுடத்துக்கு உடனடிப் பயன்மதிப்போ, பொருளியல் வார்த்தையில் இலாபமோ தராத எந்தச் சிந்தாந்தத்தையும் காவிட்டிருக்க வேண்டியதில்லை என்றுதான் நானும் நினைக்கிறேன். நீகூட இப்பவே கொஞ்சம் கிளெவரா யோசிச்சுத்துணிவா முடிவுகளை எடுக்கலாம்…… லோகமே லௌகீகம். அதுவே லௌகீகசமாச்சாரங்களைச் சுற்றிட்டுத்தான் இயங்குது, எந்தப்பெத்தவங்களும் தம் குழந்தைகளைக் தாழ்ந்துபோக விட்டிட மாட்டாங்க, நம்மளோட ஒப்பிட்டா நாயக்கன்பட்டிக்கரங்க ஒரு எலிட்ஃபமிலி, உன்னை நல்லாய்க் கவனிச்சுப்பாங்க… பேசாம ஒத்துக்கிடு…ராஜா மாதிரிவாழலாம்…சீரியஸாத்தான் ஸொல்றன் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையை பூரணமா அனுபவிக்கிறதுக்கு உனக்கு இளமையும் கொஞ்சம் வேணும்பா, முப்பதிலேயிருந்து நாப்பது கண்ண மூடித்திறக்கக்குள்ள வந்திடும், தத்துவங்களைப்பேசிண்டே இளமையைத்தொலைச்சிட்டேன்னா அப்றம் உன்னை யாரும் சீண்டமாட்டாக. அதுக்குமேல தாம்பத்தியமும் நீ நினைக்கிறமாதிரிச் சுவைக்காது…வாழ்க்கையெல்லாம் வண்வே றூட்டப்பா திரும்பிவராது, இன்னொருமுறை வாழ்ந்துபார்க்க முடியாதப்பா…பென்ஷன் வயசிலே அப்புறம் இப்பிடிப் பண்ணியிருக்கலாமே அப்படி வாழ்ந்திருக்கலாமேயென்று கோபுரத்து உச்சியில ஒக்காந்த மூஞ்சூறாட்டம் கிடந்து யோசிப்பே…”

‘மின்னல்போலாகும் இந்த வாழ்க்கையே…’ என்ற சினிமாப்பாட்டை லேசாகக் ஹம்மிங் செய்துபார்த்தார் சுரத்தை மேலே ஏற்றப் பிராணகோஜங்கள் ஒத்துழைக்கவில்லை, விட்டுவிட்டார்.

ரகோத்தமன் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி சோம்பேறித்தனமாய் ஒரு கொட்டாவி விட்டான்.

“நன்னா யோசிச்சுப் புத்திசாலித்தனமான முடிவாய் எடு கண்ணா.”

“இப்போ இன்னிக்குக் கும்பகோணத்தில கல்யாணம் பண்ணிக்கறாளே லலிதா செவப்பா, நெகுநெகுன்னு உயரமா, அழகாயிருப்பா உனக்கு மாட்ச்லெஸ் மாட்ஸாயிருப்பா, அவள் அப்பன் பஞ்சாபிகேசன் என்னைக் ஹொஸ்பிட்டல்ல ஸொகம் வெசாரிச்சு வந்தப்போ நானும் மெல்ல உனக்கு லலிதாவைக்கொடுத்தா என்ன, ரொம்ப மரியாதையான குடும்பத்துப்பையன் அப்படீன்னு கேட்டுப்பார்த்தன். அவனும் உனக்குத்தான் ஜாப் எதுவும் இல்லையே, உத்தியோகம் புருஷலக்ஷணம்னுசொல்லி மறுத்திட்டான்பா…ஐ ட்றைட் மை பெஸ்ட்…ரொம்பக் கொம்பெல் பண்ணப்போ வேணுன்னா நீர் உம்மோட மகள் சியாமளியைக் கொடுமேன்’என்றான். என்னால மேல அவன வலியுறுத்த முடியல்ல. அவபொறந்ததில இருந்துபக்கத்தாத்து ரகு அண்ணா…ரகு அண்ணா’ன்னு ஒரு சகோதர பாசத்தோட பழகிட்டிருக்கான்னு வெளங்க வைச்சேன்…எதையும் அவனால புரிஞ்சுக்க முடியலை…”

பேசிக்கொண்டிருந்ததில் ரகோத்தமனுக்கு மீண்டும் டீயும் நிகொட்டீன் தாகமும் எடுத்தன, வெட்கத்தைவிடுத்துத் தாத்தாவிடம் கேட்டான்:

“மாமா இருந்தால் ஒரு 2 றுபீஸ் கொடுங்களேன், அடுத்த வாரம் தந்திடறேன்..”

“உனக்கு அது சிகரெட்டுக்குத்தான்னு நேக்குத்தெரியும்…அந்த ஹால்ல சுவத்து ஹாங்கர்ல தொங்கிற என் ஜிப்பா பாக்கெட்டில பர்ஸிருக்கு, அதில 10 றுபீஸ் எடுத்துக்கோ, வரும்போது எனக்கு ஒரு ஹின்டுவும், மூக்குத்தூட்சரையும் வாங்கிட்டு வா…. ” என்றார்.

அதிலிருந்த 10 ரூபாத்தாளை எடுத்துக்கொண்டு ரகோத்தமன் பிரதான வீதியைக்கடந்து அம்பேத்கார் லேன் முக்கிலுள்ள சிறிய ஹொட்டலை நோக்கி நடந்தான். தாத்தாவுக்குத் தானும் இளமையில் சிலகாலம் படிப்புமுடித்து வேலையில்லாமல் இருந்தபோது டீக்கும் நஷ்டாவுக்கும் சிகெரெட்டுக்கும் சில்லறை இல்லாமல்த் தவித்தது நினைவுக்கு வந்து மறைந்தது.

ரகோத்தமன் இரண்டு வடையும் டீயும் சாப்பிட்டுவிட்டு ஒரு சிஷேர்ஸ் பாக்கெட்டும் வாங்கிப் புகைத்துக்கொண்டு தாத்தாவுக்கும் இரண்டு வடைகளும், எடுப்பு டீயும் எடுத்துவந்தான்.

டீயைக்குடித்து வடையைச்சாப்பிட்டு ஹின்டு பத்திரிகையைப் பாதியைப்படித்து முடிக்கையில் தாத்தாவுக்குக் கண்கள் சோர்ந்து குறாவத்தொடங்கின. கொஞ்சநேரத்தில் தூங்கிப்போனார். கண்விழிக்கவும் ரகோத்தமன் ஹின்டுவை வைத்துப்புரட்டிக் கொண்டிருந்தான், இவர் கண்விழித்ததைக்கண்டதும் சொன்னான்:

“அந்த மாப்பிள்ளை நாயக்கன்பட்டிப்பொண்ணு வீட்டுக்காரங்க அடிக்கடி ஆட்களை அனுப்பிக்கொண்டிருக்காங்கடா எதனாச்சும் சொல்லுடான்னு அப்பாவும் தினம் சத்தம்போடுறாரா…நானும் ஜாதகம் பொருந்திச்சின்னா மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பாருங்கண்ணு வீட்டில சொல்லிட்டன் மாமா.”

“வெறி குட் டிஸிசன்பா…நீ அமோகமா இருக்கப்போறே…கோ…எஹெட், டோன்ட் லுக் பாக்.”

ரகோத்தமன் பேசிக்கொண்டிருந்திட்டுப் போய்விட்டான். வீட்டில பாட்டி, பிள்ளைகள், பேராண்டிக் குருமானுகளின் இரைச்சல் எதுவுமில்லாமல் வீடே அமைதியாக இருக்கவும் தாத்தாவுக்கு மீண்டும் தூக்கம் தூக்கமாய் வந்தது. இடையில் எழுந்து இரண்டுதரம் பாத்றூம் போய்வந்தார், மூணுதரம் மூக்குப்பொடி போட்டார்.

சமையல்கட்டிலிருந்து இடைக்கிடை பத்திரங்கள் தட்டுமுட்டுப்படுற சத்தமும் தேங்காய் துருவுற சத்தமும் வந்தன. சாந்தம்மாள் வந்திட்டாள்போல.

*

“மாமா அந்த மாப்பிள்ளை நாயக்கன்பட்டிப்பாட்டி ஜாதகம் பிரமாதமாய்ப் பொருந்தியிருக்குன்னு வந்திருக்காம்…எப்போதைக்கு பரிசம்போடலாம்னு அவசரப்படுத்தறாங்க மாமா…”

இதைச்சொல்லிவிட்டு ரகோத்தமன் லேசாய் வெட்கப்பட்டான்.

“பார்த்தியா நான் சொல்லலை…உனக்கு இனி நல்லகாலம் பொறந்தாச்சு. இனி நீ தொட்டதெல்லாம் தொலங்கப்போகுது…இனியுன் வாழ்க்கையே ஒளிவெள்ளமாய் ஜொலிக்கப்போவுது பார்…” எனவும் மகிழ்ந்துபோன ரகோத்தமன் “என்னை ஆசீர்வதிங்க மாமா ” என்று வந்து அவர் பாதங்களைத்தொடவும் அடிமனதிலிருந்து கவித்துவத்துடன் வாழ்த்தினார்.

“எல்லாம் வளம் நலம் பெறும்…ஜெயம் நிஜம் வரும் அமோகமாக இருப்பே நீ ராஜா.”

“தாங்ஸ் மாமா “

சிவபாதர் தாத்தாவுக்கு மீண்டும் புல்லரித்தது.

“அவங்களுடை பொருளையோ ஆஸ்தியையோ அபகரிச்சிட்டமாதிரி எதுக்கு நீ எடுத்துக்கணும், அவங்க உனக்கொரு பிடிகொம்பைக் நீட்டுறாங்க நீ அதைப்பிடிச்சிட்டு மேல எம்பி வர்றே…அதில ஒரு கோட்பாட்டுச்சீரழிவும் இல்லப்பா…நடைமுறைதான்.”

தங்கம் சவரன் 600 தான் விற்றது, கல்யாணச்செலவுகளுக்கென்று அவர்களுக்கு இனாமாக 10 லட்சம் நல்கியது அரிச்சந்திரன் குடும்பம்.

`காலத்தோட என்னதான் மாறாது’ என்று மனதிலே நினைத்துச் சிரித்துக்கொண்டார். ஜாம்ஜாமென்று ரகோத்தமனுக்கும் பிரியகரிக்கும் கல்யாணம் நிறைவேறியது. பிரியகரி உலகம் தெரிந்த சூட்டிகையான பொண்ணு, புதுக்கவிதைகள் எல்லாம் எழுதுவாள்.

கல்யாணத்துக்கு பந்தல்போட அரிச்சந்திரன் உபரியாக அனுப்பிவைத்த வேலைக்காரர்களில் இரண்டுபேரரை ரகோத்தமன் இட்டுவந்து தாத்தா வீட்டின் பின்கொல்லையைக் கொத்துவித்துப் பயற்றையும், வெண்டியும் ஊன்றுவித்தான்.

திருமணம் நடந்தேறியதும் இணையர் ஒருமாதம் ஹனிமூனுக்கு சிம்லாவுக்கும், ஆக்ராவுக்கும் போய்த்திரும்ப மாமன்காரன் ரகோத்தமனுக்கு தனக்குச் செல்வாக்குள்ள குழுமமொன்றில் ஃபினான்ஸியல் கொன்ஸல்டன்ட் ஆக வேலையும் தயார்பண்ணி வைத்திருந்தார்.

இரண்டாம் ஆண்டில் அவர்களுக்குப் பெண்குழந்தையும் பிறந்தது, அனைத்து ஐஸ்வர்யங்களுடனும் பிறந்த மஹாலக்ஷ்மியல்லா…அவளுக்கு ஐஸ்வர்யாவென்றே பெயரும் வைத்தார்கள். அந்தத்தெருவுக்கே செல்லக்குழந்தை அவள்.

தத்தித்தத்தி வளர்ந்துவரவும் முன்பள்ளிபோய்வந்தாள். படிப்பிலும் டான்ஸிலும் சுட்டி. இன்னும் போதாததுக்கு குதிச்சுக்கொண்டு டேக்வொன்டோ, யோகா வகுப்புகளுக்கும் போய் வந்தாள். பசளைமேட்டில வளர்ந்த செங்கீரைமாதிரி அப்படியொரு வளர்த்தி. பளிச்சென்று இருப்பாள். கால்ல ஸ்கேட் றோலரைக் கட்டிக்கொண்டு எல்லா இடத்திலும் நிற்பாள்.

முந்தாநாத்துத்தான் பொறந்து லோகத்தைப்பார்த்து அலங்கமலங்க முழிச்சிண்டிருந்தாள் போலிருக்கு…இப்போ பத்தாவது படிக்கிறாப்பல. அயல்ல படிக்கிற மற்றக்குழந்தைகளுக்கு அப்பாவைப்போலவே கணக்கு, இங்கிலிஷ் எல்லாம் சொல்லிக்கொடுப்பாள். சமூகசேவகியான அவளுக்கு சம்புபாதர் தாத்தா பாட்டிமேலயும் அப்படியொரு பாசம், வர்றப்போவெல்லாம் அவங்க கழுத்தைக்கட்டிக் கொஞ்சாமல்ப் போகமாட்டாள்.

மாலையானதும் லேசான மழையொன்று வந்திறங்கி ஊரின் தூசை அமர்த்திவிட்டுச்செல்ல காற்றில் சீதளம் தவழ்ந்துகொண்டிருக்க மாலை சுறுசுறுப்பும் பொலிவுமானது. பின் மெல்லமெல்லச் சூரியன் தன் இறுதிக்கதிர்களையும் இழுத்து மடித்துவைத்துக்கொண்டான்.

எட்டரை மணியானது. டாக்ஸியொன்று கல்யாணவிருந்தினர்களை மெல்லவந்து இறக்கிவிட்டுப்போனது.ரகோத்தமன் தொலைக்காட்சியில் புதிதாக அட்சரசுத்தமாகச் செய்திகள் வாசிப்பவளின் உதட்டசைவுகளை அதிசயித்துப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.

டாக்ஸியைவிட்டிறங்கி நேராகச் சமையற்கட்டுக்குள் நுழைந்த பாட்டி திரும்பிவந்து

“ஏனுங்க எதுவுஞ்சாப்பிடல்ல்லே எல்லாம் அப்படியே வெச்சுவெச்சாப்பல கெடக்கு…பசி கெடந்து ப்ளட் ஸுகர் கொறைஞ்சு தலையைச்சுற்றி விழுந்திட்டா அப்புறம் என்னாவது…”

“என்ன ஸொல்றே நீ…நான்தான் ஜோராய்ச்சாப்பிட்டேனே…எதிர்த்தாத்து ஐஸ்வர்யா போட்டுத்தந்தாளே…”

“எந்த ஐஸ்வர்யாங்க…”

“உதில கும்பகோணம் போய்வர்றதுக்குள்ளாற ஐஸ்வர்யாவை மறந்துட்டே பார்…அவதான் ரகோத்தமன் பொண்ணு. அவன்ட கலயாணத்துக்குக்கூட நாமபோய் அக்ஷிதை போட்டோம்ல, ஐஸு ருதுவானப்போகூட அவன் பொண்டாட்டி பிரியகரியோட சேர்ந்துவந்து நம்பகால்லதானே விழுந்து ` மாமாவும் மாமியும் நம்மாத்துக்கு வாங்கோ…ஐஸு ருதுவாயிட்டா…குழந்தைக்குத் தண்ணிவார்க்கப்போறோம் வந்து ஆசீர்வதியுங்கோ’ன்னு நம்பளை இட்டுப்போனாளே…அதுக்குள்ளாற மறந்திட்டியாடி ஐஸ்வர்யாவை…மண்டுக் கெயவிக்கு வரவர ஞாபகமறதி ஜாஸ்தியாயிடுத்து.”

தாத்தா தன் தலையில் அடித்துக்கொண்டார்.

“நேக்கு இன்னிக்கு ஸ்கூல் இல்லைத்தாத்தா ஃப்றீயாத்தான் இருக்கேன்னு மதியம் அவளா வந்து எனக்குன்னு எல்லாத்தையும் பார்த்துப்பார்த்துச் சமைச்சாளே…மணத்தக்காளி வத்தக்குளம்பு, சேனைக்கிழங்குக்கூட்டு, பொன்னாங்காணிக்கீரை, சேப்பங்கிழங்குவறுவல், காய்கறிப்புரட்டல் தயிர்ப்பச்சடி, மிளகுரசம், அப்பளம்னு ஒரு அவுளும் இலையில்விடாமச் சாப்பிட்டேனா…என் சமர்த்துத்தாத்தான்னு என் தலையை வேற தடவி `இன்ஸுலினை மறந்திடாதீங்க’ன்னுட்டுப்போனாளே என்ன ஸொல்றே நீ…நான் சாப்பிடலையா…”

“என்னங்க எந்தச்சின்னப்பொண்ணு ஒங்களுக்கு சமைச்சுப்போட்டா…அப்போ சாந்தம்மாள் வரல்லியா…” எனவும்

இலேசான சந்தேகத்தில் தன் கையைத்தூக்கிச் முகர்ந்து பார்த்தார்.

“என்ன சேப்பங்கிழங்கை வறுத்தாளா…அதை ஆத்தில கண்ணால பார்த்தே மாமாங்கமாச்சே…டேய் விச்சு…இந்த அப்பா என்னவெல்லாம் சொல்றார்னு கேளடா…ரகோத்தமன் பொண்ணு ஐஸ்வர்யா மதியம் வந்து தனக்கு வகைவகையாய்ச் சமைச்சுப்போட்டாளாம் தானும் சப்புக்கொட்டித் துன்னாராம்.”

பொதியுறைக்குள்ளிருந்த நகைப்பெட்டியை அலமாரியுள் வைத்துப்பூட்டப்போன மிஸிஸ்.மைதிலி விச்சுவுக்கு `இனி இந்தாத்து நகையெல்லாம் மைதிலிக்குத்தான்’ என்று யாரோ சொல்வதுபோலக்கேட்கவும் தலைவாசலுக்குத் திரும்பி வந்தாள்.

விச்சுவின் குழந்தை அம்பாவும் சியாமளியின் பையன் அபயனும் போய்த்தாத்தாவின் மடியில்த் தாவி ஏறினார்கள்.

“ஏய் சியாமி சமையற்கட்டில…இன்னும் கெட்டியாய்ப் பால்ப்பாயாசமிருக்கு இந்தப் பசங்களுக்குத்தான் கொஞ்சம் சூடுபண்ணி ஊத்திக்கொடேன் ” என்றார் தாத்தா.

“நாங்கள் திரும்பத் தாமதமாயிடுச்சா… கொஞ்சம் மனம் கலங்கிப் பதகளிச்சிட்டா போலயிருக்கு…நாளைக்கு நோர்மலாயிடுவார் ஒண்ணும் பயப்படவேணாம்மா…” என்ற விச்சுவை பாட்டியும், மிஸிஸ் .மைதிலி விச்சுவும், சியாமளியும் நம்பிக்கையுடன் பார்த்தனர்.

தாத்தாவீட்டில் அமர்க்களமாயிருக்கே….கல்யாணக்கோஷ்டி திரும்பியாச்சுப்போலிருக்கு போனால் இரண்டு பக்ஷணமாவது பொத்தலாமென்று டீ ஷேர்ட்டை எடுத்துப்போட்டுக்கொண்டு அவர்கள் வீட்டுக் கேற்றைத் திறந்து நடையில் அவசரங்காட்டாது

“எப்படிப் பாட்டி, விச்சு அண்ணா பயணங்கள் சௌகரியமாய் இருந்திச்சா…ரயிலெல்லாம் கரெக்ட் டைமுக்கு வந்திச்சா…” என்றபடி உள்ளே நுழைந்த ரகோத்தமனைப்பார்த்து

“அதெல்லாம் நல்ல சௌகர்யமா இருந்திச்சுப்பா…என்னாவே உன் பொண்ணு ஐஸ்வர்யாதான் தாத்தாவுக்கு மதியம் சமைச்சுப்போட்டாளாமே…எங்களுக்குந்தெரியாம இத்தனகாலம் எங்கவே மறைச்சு வெச்சுருந்தீர் உம்ம பொண்ணையும் பொண்டாட்டியையும்…” என்ற பாட்டியைப் புதிராகப் பார்த்து அலங்கமலங்க முழிக்கொண்டு நின்றான் அவன்…!

– Amruthaa – 187 , June 2023

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *