கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 9,110 
 

கந்தர்வபுரி என்ற நாட்டை காந்தன் என்ற அரசர் ஆண்டார். அரசர் நல்லவர் என்ற பெயர் பெற்று சிறப்பாக மக்களை ஆண்டார். கவிதைகள் என்றால் அரசருக்கு மிகவும் பிடிக்கும். அரண்மனையில் தினமும் கவியரங்கம் நடைபெறும். அற்புதமான கவிதைகள் எழுதுபவர்களை பாராட்டி பரிசு வழங்கி கவுரவிப்பது அரசரின் வழக்கம். அரண்மனையில் ஒரு ஆஸ்தான கவிஞன் இருந்தான். அவன் பெயர் பசுபதி. அற்புதமான கவிதைகள் எழுதுவதில் அவரை யாராலும் வெல்ல முடியாது. திறமை இருக்குமிடத்தில் சில சமயம் கர்வமும் வருவதுண்டு. கொஞ்சம் கர்வம் இருந்தது. கவிதைகள் பாடும் போது ஒருவன் அவைகளை விமர்சனம் செய்வான். அந்த விமர்சகன் பெயர் விமலன்.

எப்பேர்பட்ட கவிதைகளையும் விமலன் விமர்சனம் செய்து அதில் உள்ள குற்றங்களை கண்டுபிடித்து விடுவான். ஆஸ்தான கவிஞனான பசுபதியின் கவிதைகளும் விமலனிடம் இருந்து தப்புவதில்லை. எனவே, பசுபதி கவிதை பாடும் முன் பதட்டத்துடன் விமலனை பார்ப்பான். தனக்கு அபார புலமை இருந்தாலும் மனதுக்குள் விமலனுக்கு பயப்பட்டான். விமலன் நல்லவன். யாருக்கும் தீங்கு செய்யமாட்டான். எனவே, அரசர் அவனிடம் அதிக பற்று வைத்திருந்தார். இவர்களது நட்பு பசுபதியின் அமைதியை கெடுத்தது. அவன் மனதில் விமலன் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

அன்றும் வழக்கம் போல் அரசவை கூடியது. கவிஞர்கள் பலர் கவிதை பாடி பரிசு பெற வந்தனர். கவிஞர்களை கண்டு அரசர் மகிழ்ச்சி அடைந்தார். கவிஞர்களுடன் விமர்சகனும் இருந்தான். கவியரங்கம் ஆரம்பமாகும் நேரம் வந்தது. அரசர் முன் நின்று கவிஞர்கள் ஒவ்வொருவரும் அற்புதமான கவிதைகள் பாடினர். அதைக் கேட்டு அரசர் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு ஆஸ்தான கவிஞன் பாட அழைக்கப்பட்டான். பசுபதி எழுந்து நின்று கவிதை பாடினான். அதைக் கேட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்து கை தட்டி பாராட்டினார் அரசர். மற்ற கவிஞர்களும் பசுபதியை பாராட்டி கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

விமலன் மட்டும் மவுனமாக இருந்து பசுபதியை கவனித்துக் கொண்டிருந்தான். அவன் மனதில் பசுபதி பாடிய கவிதைகளின் வரிகள் ஆழமாக பதிந்து இருந்தன. ஒவ்வொரு வரிகளையும் ஒவ்வொரு எழுத்துக்களையும் அவன் ஆராய்ந்து கொண்டிருந்தான். பிறகு எழுந்து, அரசருக்கும் சபையோர்களுக்கும் வணக்கம் சொல்லிவிட்டு தன் விமர்சனத்தை தொடங்கினான். அந்த விமர்சனம் பசுபதியை மேலும் ஆத்திரப்படுத்தியது. அவன் பற்களை கடித்து ஆத்திரத்தை அடக்கிக் கொண்டான். விமலனின் விமர்சனம் கேட்டு அரசன் திடுக்கிட்டான். விமலனால் மட்டும் எப்படி இவ்வளவு நன்றாக விமர்சனம் செய்ய முடிகிறது என்று அனைவரும் வியந்தனர்.

“”பேஷ்… பேஷ்… உங்கள் விமர்சனம் அற்புதம். கவிதை எழுதுவதை விட அதை விமர்சனம் செய்வது தான் சிரமமான காரியம்,” என்று கூறி பாராட்டினார் அரசர். அன்று வீடு திரும்பிய பசுபதியால் அமைதியாக இருக்க முடியவில்லை. விமலனை எப்படி பழி வாங்குவது என்ற சிந்தனைதான் அவன் மனதில் நிறைந்து இருந்தது. இவனை விட்டு வைத்தால் தன் ஆஸ்தான கவிஞர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று பயந்தான். அவனால் இரவில் தூங்க முடியவில்லை. கண்களை மூடினாலே விமலனின் முகம்தான் தெரிந்தது. எப்படியாவது அவனை ஒழித்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்தான். தன் கவிதையை பாராட்டாமல் அவன் விமர்சனத்தை பாராட்டுகிறாரே அரசர் என்று நினைத்தபோது அவனுக்கு அரசர் மீது ஆத்திரம் வந்தது.

அன்று ராஜ சபை கூடிய போது அரசர் மகிழ்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். “”தன் பிறந்த நாள் அன்று கவிதை போட்டி ஒன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ஆயிரம் தங்கக் காசுகளும், வீடும், நிலமும் வழங்க இருக்கிறேன். அயல்நாடுகளில் இருந்தும் பல கவிஞர்கள் வர இருக்கின்றனர்,” என்றார் அரசர். அதைக் கேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்த போது பசுபதி மட்டும் உம் என்று இருந்தான். தான் போட்டியில் கலந்து கொண்டால் நிச்சயமாக வெற்றி பெற முடியாது. காரணம், அந்த விமலன் விமர்சனம் செய்தே தன்னை அவமானப்படுத்துவான், தோல்வி அடைந்தால் தன் ஆஸ்தான கவிஞர் பதவி போய்விடும். இப்படி பலவித சிந்தனையில் வேர்த்துப் போனான் பசுபதி. அரசனின் பிறந்த நாள் வந்தது. நாடே விழாக்கோலம் பூண்டது. மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக இருந்தனர். போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் பசுபதி. வருவது வரட்டும் என்று போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்தான் பசுபதி.

கவியரங்கம் ஆரம்பமாகிவிட்டது. அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டு கவிஞர்களை வாழ்த்தினார். பிறகு, “”கவிதை போட்டியை ஆரம்பிக்கலாம்,” என்றார். பல கவிஞர்களும் தங்கள் கவிதைகளை அழகாக பாடினர். அதைக் கேட்டு அரசர் மகிழ்ச்சி அடைந்தார். அனைத்தையும் கவனித்துக் கொண்டு மவுனமாக இருந்தான் விமலன். அடுத்தபடியாக ஆஸ்தான கவிஞன் பசுபதி கவிதை பாடுவார் என்ற அறிவிப்பு வந்த போது விமலன் சிரித்தான். அதைக் கவனித்த பசுபதிக்கு கடும் கோபம் வந்தது. ஆனால், கோபத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தான். பசுபதி எழுந்து அரசனை வணங்கிவிட்டு கவிதை பாட தொடங்கினான். அரசர் உட்பட அனைவரும் பசுபதியை பாராட்டினர்.

விமலன் அந்தக் கவிதையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து விமர்சனம் செய்து அனைவரையும் வியக்க வைத்தான். முதல் பரிசு பசுபதிக்கே கிடைத்தது. பரிசு பெற்றாலும் அவன் மனதில் விமலன் மீது இருந்த ஆத்திரம் தணிய வில்லை. பழிவாங்கும் எண்ணம் அவனை ஆட்டி வைத்தது. அவன் ஒரு வாளுடன் வீட்டை விட்டு ஓடினான். “விமலனை கொன்றுவிட்டு தான் மற்றவைகளை கவனிப்பேன்’ என்று மனதுக்குள் கூறிக் கொண்டே அவன் வீட்டை நோக்கி ஓடினான். யார் கண்களிலும் படாமல் விமலன் வீட்டு பூங்காவில் ஒளிந்து கொண்டான். அப்போது விமலன் தன் மனைவியுடன் பேசும் சப்தம் கேட்டது. அவன் மெதுவாக ஜன்னலை அடைந்து வீட்டுக்குள் எட்டி பார்த்தான்.

“”இன்னிக்கு கவிதை போட்டியில் பரிசு கிடைத்தது. யாருக்கு?” என்றாள் மனைவி. “”வேறு யாருக்கு, நம்ம பசுபதிக்கு தான்,” என்றான் விமலன். “”பசுபதிக்கு அற்புதமான திறமை இருப்பதாக நீங்களே சொல்கிறீர். பிறகு ஏன் தினமும் அவர் கவிதைகளை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்றாள் மனைவி. “”அடியே! பசுபதி அற்புதமான கவிஞன்தான். அவன் திறமையை மேலும் சிறப்பாக்குவதற்காக தான் அப்படி விமர்சனம் செய்கிறேன். என் விமர்சனத்துக்கு பயந்து அவன் மேலும் சிறந்த கவிதைகளை படைக்க வேண்டும் என்று கடும் முயற்சி செய்து கொண்டிருக்கிறான். அந்த முயற்சி அவனுக்கு பெரும் வெற்றியை தேடித் தருகிறது. இன்று அவனிடம் போட்டி போட்டு வெற்றி பெறும் தகுதி யாருக்கும் கிடையாது. இப்போது, நான் ஏன் விமர்சனம் செய்கிறேன் என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதா?” என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தான்.

வாளுடன் விமலனை கொல்ல வந்த பசுபதி இந்த உரையாடலை கேட்டு அதிர்ச்சி அடைந்தான். இப்பேற்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்டவரை தான் தவறாக நினைத்துக் கொலை செய்யும் அளவுக்கு வந்துவிட்டோமே என்று நினைத்த போது அவனுக்கு அழுகையே வந்தது. அவன் அழுது கொண்டே ஓடிச் சென்று விமலனின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான். “”அய்யா! நான் உங்களை தவறாக நினைத்தேன். இந்த உயர்ந்த உள்ளத்தை புரிந்து கொள்ள முடியாமல் போயிற்று. என்னை மன்னித்து விடுங்கள். அந்த பரிசு உங்களை தான் சாரும். அதைப் பெறும் தகுதி எனக்கு இல்லை,” என்று கூறி அழுதான் பசுபதி.

குட்டீஸ்களே… நம்மை விட பெரியவர்கள் நம்மை விமர்ச்சிக்கும் போது அதைக் கண்டு ஆத்திரப்பட வேண்டாம். பெற்றோர்களும் ஆசிரியர்களும் தம்மை குறை கூறும் போது கோபம் கொள்ளத் தேவையில்லை. நம் மீது இருக்கும் பற்றினால்தான் அவர்கள் அவ்வாறு கூறுகின்றனர். புரிந்ததா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *