தீராக் காதல்

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 14,317 
 

கடவுள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், ஒரு மகா அற்புதமான தருணத்தை எங்கேனும் ஒளித்துவைத்திருப்பார். எனக்கு முப்பத்தெட்டு வயதில், கொடைக்கானலில் வைத்திருந்தார்.
ஏரிக்கு எதிரேயிருந்த ஓட்டலிலிருந்து காலை ஆறரை மணிக்கு நான் வெளியே வந்தேன். குளிருக்கு இதமாக ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு, பனிப்புகையினூடே நடக்க ஆரம்பித்தேன்.

ஏரியைக் கடந்து, அப்சர்வேட்டரி ரோடுக்குச் செல்லும் மேட்டில் ஏறினேன். மரங்கள், சாலையை நோக்கி வளைந்து ஒரு குடை போல மூடி இருந்தன. ஈரத் தரையெங்கும் மஞ்சள் பூக்கள்.

மெலிதான சாரலில் நனைந்தபடி, உற்சாகமாக நடந்தேன். கோல்ஃப் கிளப்பை நெருங்கியபோதுதான் அந்தப் பெண்ணைக் கவனித்தேன். மழைச் சாரலுக்கு மறைப்பாக தலையைப் புடவைத் தலைப்பால் மூடிக்கொண்டு, சிதறியிருந்த பூக்களை சிறு குழந்தை போல் பொறுக்கிக்கொண்டு இருந்தாள்.

எனது ஷ¨ சத்தம் கேட்டு, அவள் திரும்பிப் பார்க்க… நான் ஆச்சர்யத்தில் உறைந்துபோனேன். அவள்… மீரா! கல்லூரி காலத்தில், ஒரு தலையாக நான் உருகி உருகிக் காதலித்த தேவதை!

பதினேழு வருடங்களுக்கு முன்பு, என் அடிமனதில் புதைந்து போன ஒரு வீணையின் ஒற்றைத் தந்தி மீட்டப்பட்டது. அந்தக் குளிரிலும் எனக்கு வியர்த்தது.

மீராவின் முகத்தில், கண்களுக் குக் கீழ் காலம் வரைந்த கருவளை யங்களைத் தவிர, வேறு எந்த மாற்ற மும் இல்லை. கற்பூரத் தட்டை முகத்துக்கு நேரே காட்டியது போன்ற அதே பொன்மஞ்சள் நிறம். பளபளக்கும் அகன்ற கண்கள். பூமியைத் தழுவத் துடிப்பது போன்று நீண்டு வளர்ந்த கூந்தல். எதுவுமே மாறவில்லை.

எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் நான் பேச்சு வராமல் நிற்க, மீராதான் உற்சாகத்துடன், ‘‘நீ… நீ… சிவாதானே..? இது கனவா, நிஜமானு தெரியலியே. மை காட்..!’’ என்றாள் ஆச்சர்யமாக.

‘‘என்னைத் தெரியுதா?’’ என்றாள்.

‘‘தெரியாம? உன்னை இத்தனை வருஷம் கழிச்சுப் பார்த்த சந்தோ ஷத்தில், என்ன பேசறதுன்னே தெரியல’’ என்றேன்.

‘‘நம்பவே முடியல சிவா! இவ்வளவு நாள் கழிச்சு, இந்த மழைல, குளிர்ல… காதோரம் நரைச்சு, கண்ணாடி போட்டுக்கிட்டு உன்னை இங்க… வாட் எ சர்ப்ரைஸ்?’’ என்று அழகாகச் சிலிர்த்தாள்.

‘‘பாலச்சந்திரன் சுள்ளிக்காடு கேள்விப் பட்டிருக்கியா?’’

‘‘யெஸ்… மலையாள பொயட்!’’

‘‘அவர் சொல்லியிருக்காரு… ‘வாழ்க்கை, ஒருபோதும் எதிர்பாராத ஏதோ ஒன்றை உங்களுக்காகப் பொத்திவைத்துக் காத்திருக் கிறது’ன்னு. அதை இப்பத்தான் அனுபவ பூர்வமா உணர்றேன்!’’

‘‘சுள்ளிக்காடு இருக்கட்டும்… நீ இப்ப எங்கே இருக்கே?’’

‘‘ஜெர்மனி. டுஸில்டார்ஃப்!’’

‘‘அய்யோடா! அங்கே எப்ப போனே?’’

‘‘அது ஆச்சு பதினஞ்சு வருஷம்!’’

‘‘அங்கே என்ன பண்றே சிவா?’’ என்றபடி நடக்க ஆரம்பித்தாள் மீரா.

‘‘ஒரு கம்பெனில டி.ஜி.எம். ப்ராடெக்ட் சப்போர்ட்!’’

‘‘ம்… பெரிய ஆளாயிட்டே!’’

‘‘இல்ல மீரா, உள்ளுக்குள்ள இன்னும் ராயல் டாக்கீஸ்ல ‘முதல் மரியாதை’ பார்த்த அதே சிவாதான். அதான்… வருஷத் துக்கு ஒரு முறை கட்டாயம் இந்தியா வந்துடுவேன்!’’

‘‘ஃபேமிலி..?’’

‘‘அழைச்சுட்டு வரலை. வொய்ஃப் ஜெர்மனிலேயே பொறந்து வளர்ந்த தமிழ்ப் பொண்ணு. ரெண்டு பசங்க. யாருக்கும் இந்தியா மேல எந்த இன்ட்ரஸ்ட்டும் கிடையாது. கூப்பிட்டாலும் வர மாட்டாங்க. ஸோ… ஒவ்வொரு முறையும் தனியாதான் கிளம்பி வந்து போறது. அது சரி, நீ எங்கே இருக்க?’’

‘‘சென்னைல. ஒரு கம்பெனில மெயின்டெனன்ஸ் இன்ஜினீயர். இங்கே ஒரு செமினார். நேத்துதான் வந்தேன்.’’

‘‘ஹஸ்பெண்ட்… குழந்தைங்க..?’’

‘’ஹஸ்பெண்டுக்கு பிசினஸ். ஒரே ஒரு பொண்ணு. ப்ளஸ் ஒன் படிக்கிறா!’’ என்ற மீரா, ‘‘ஸ்… அப்பா..! எப்படிக் குளிருது?’’ என்று பற்கள் வெடவெடக்க, கைகளைக் கட்டிக்கொண்டாள்.

ஏராளமான வெள்ளைப் பூக்கள் பூத்திருந்த ஒரு மரத்தடியில் நின்றோம்.

‘‘எங்கே தங்கியிருக்கே?’’ என்றேன்.

‘‘கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்ல. இதே ரோட்லதான் இருக்கு. நீ எங்கே தங்கியிருக்கே சிவா?’’

‘‘ஓட்டல்ல…’’ என்று நான் கூறிக் கொண்டு இருந்தபோதே, மீரா ஒரு தாழ்வான கிளையைப் பிடித்து அசைக்க, மழைத்துளிகளும், வெள்ளைப் பூக்களும் சிலுசிலுவென மேலே விழுந்தன. ‘‘இப்பவும் கவிதைல்லாம் எழுதறியா?’’ என்று தலையைச் சாய்த்து மீரா கேட்ட அழகுக்கே ஆயிரம் கவிதைகள் எழுதலாம்.

‘‘ம்… அதுதான் இன்னும் என்னை உயிர்ப்போட நடமாடவெச்சுட்டு இருக்கு!’’

கையில் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்தபடி, ‘‘நிறையப் பேசணும் சிவா. டயமாயிடுச்சு. பத்து மணிக்கு செமினார் போகணும். ஈவ்னிங் பார்க்கலாமா?’’ என்றாள் மீரா.

‘‘ம்… எங்கே?’’

‘‘லேக் பாலத்துக்கிட்டே ஒரு டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் இருக்கு, தெரியுமா? அங்கே ஷார்ப்பா அஞ்சு மணிக்கு வந்துடு. ரெண்டு பேரும் குறிஞ்சி ஆண்டவர் கோயில் போகலாம்’’ என்று விடைபெற்றாள். அவள் போவதையே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, தலை மறைந்ததும் பெருமூச்சுடன் திரும்பி நடந்தேன்.

நானும் மீராவும் ஒரே பொறி யியல் கல்லூரியில் படித்தவர்கள். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங். ஒரே வகுப்பு. தெர்மல் டைனமிக்ஸ் அலுத்துப்போகும் சமயங்களில், வகுப்பறையில் மீராவின் அழகை ரசிக்க ஆரம்பித்தேன்.

ஒரு முறை, கல்லூரி கலைவிழா வில் நான் கவிதை ஒன்றை வாசிக்க, ‘‘நீங்க கவிதைல்லாம் எழுதுவீங்களா?’’ என்று தனது நீண்ட கூந்தல் முனையைத் திருகிக்கொண்டே மீரா கேட்ட பொழுதில், ஒரு இனிய நட்பு வேரிட்டது.

இருவருக்கும் ஒரே ரசனை. இருவரும் ஹாஸ்டலில் தங்கி இருந்தோம். அடிக்கடி சந்திப்புகள், பேச்சு என்று தொடர, சீக்கிரமே அவளை மனசுக்குள் காதலிக்கத் தொடங்கிவிட்டேன். என்றாலும், கடைசி வரை அதை அவளிடத்தில் கூறவே இல்லை.

எத்தனையோ தனிமையான சந்தர்ப்பங்கள்… ‘‘சிவந்திருக்கா?’’ என்று அவள் தன் மருதாணி விரல்களை நீட்டிய காலைப்பொழுதில் சொல்லியிருக் கலாம். சந்தன சோப்பு வாசனை சுகமாகப் பரவ, நெருக்கமாக நின்ற மாலை வேளையில் கூறியிருக்கலாம்.

ஆனால், சொல்லவே இல்லை. கடைசி நாள் வரையிலும் சொல்ல முயற்சித்து, சொல்லாமலே சிறகு ஒடிந்த காதல் அது. இந்தியாவில் சொல்லித் தோற்ற காதல்களைவிட, சொல்லாமலே தோற்ற காதல்கள்தான் அதிகமாக இருக்கும்!

ஓட்டலை அடைந்து, என் அறை யினுள் நுழைந்து, ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு, அக்கடா வென்று சோபாவில் சாய்ந்தபோது, அந்த விபரீத எண்ணம் தோன்றியது. ‘அப்போது கூறாததை இப்போது அவளிடம் கூறினால் என்ன?’

அடுத்த கணமே, ‘சேச்சே! உனக்கு என்ன பைத்தியமா?’ என்று மனசுக்குள் என்னை நானே திட்டிக்கொண்டு, குளிப்பதற்காக எழுந்தேன்.

மாலை. நானும், மீராவும் குறிஞ்சி ஆண்டவர் கோயிலை நோக்கி நடந்தோம். மஞ்சள் சால்வையைப் போர்த்தியபடி அருகில் நடந்து வந்த மீராவின் முகம் என்னை ஏதோ செய்தது.

இந்த நடுத்தர வயது, பெண்களுக்கு ஒரு தனி அழகைக் கொண்டுவந்து விடுகிறது. கனவுகள், பரபரப்புகள் எல்லாம் ஓய்ந்து, தெளிந்த ஓடை போல முகம் அமைதியாகிவிடுகிறது.

‘‘என்ன பார்க்கிறே?’’ என்றாள் மீரா. ‘‘ஒண்ணுமில்ல…’’ என்றபடி குளிருக்கு இதமாக கைகளை இறுகக் கட்டிக் கொண்டு, ‘‘அப்புறம் மீரா, ஹெள இஸ் லைஃப்?’’ என்றேன்.

‘‘தெரியல!’’

‘‘தெரியலன்னா?’’

‘‘எது லைஃபுன்னே தெரியல, சிவா! காலைல ஆறு மணிக்கு எழுந்திருச்சு, அரக்கப்பரக்க வேலைய முடிச்சுட்டு ஓடுறேன். ஆபீஸ், மீட்டிங், ஃபேக்டரி விசிட், எம்.டி.யிடம் திட்டு… எல்லாம் முடிஞ்சு, அசந்துபோய் வீட்டுக்கு வந்தா, யாரும் இருக்க மாட்டாங்க. பொண்ணு டியூஷன் போயிருப்பா. அவர் வர 12 மணி ஆகிடும். வசதிக்குக் குறைச்சல் இல்லை. அடையார்ல ஒரு வீடு, குரோம்பேட்டைல ஒரு வீடு. பெருங்குடில ஒரு கிரவுண்ட் இடம் வாங்கிப் போட்டிருக்கோம். ஆனாலும், மனசு பூராவும் வெறுமையானது மாதிரி ஒரு ஃபீலிங்!’’

‘‘ம்… அப்படித்தான் ஆயிடுது மீரா! வாழ்க்கைக்காகப் பணம் தேட ஆரம்பிக்கிறோம். அப்புறம், பணம் தேடுறதுலேயே வாழ்க்கையைத் தொலைச்சுடறோம்!’’

‘‘புரியுது சிவா, ஆனா விட முடியலியே?’’ ‘‘முடியாதுதான், புலி வாலைப் பிடிச்ச மாதிரி!’’

மேற்கொண்டு ஒன்றும் பேசாமல், கோஹினூர் பங்களாவைக் கடந்து, செட்டியார் பார்க்கைத் தாண்டி, கோயிலினுள் நுழைந்தோம்.

சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்ததும், ‘‘எவ்வளவு அழகான ஊரு! பேசாம எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு இங்கேயே வந்து தங்கிடலாம்னு தோணுது, மீரா! எதுக்கு அழறான்னே தெரியாத புதுப் பெண்டாட்டி மாதிரி திடீர் திடீர்னு கண்ணீர் சிந்துற வானம்… யூனிஃபார்ம் ஸ்வெட்டர் போட்டுக் கிட்டு, கும்பல் கும்பலா கலர் கலர் குடைகளைப் பிடிச்சுக்கிட்டுப் போற அழகான குழந்தைகள்…’’ என்று பேசிக்கொண்டு இருந்த என் கண்களையே மீரா உற்றுப் பார்க்க, ‘‘என்ன மீரா? என்றேன்.

‘‘நீ பேசறதைக் கேட்கிறப்ப, தினம் உன்கூட பேசிக்கிட்டே இருக்கணும் போலத் தோணுது, சிவா!” என்றாள்.

பேசினோம். மெல்லிய சாரலில் நனைந்தபடி… ஏரிக்கரையோரம் நடந்த படி… உயரமான மரங்களைப் பார்த்தபடி… தினமும் பேசினோம்.

ஒரு வார காலம் ஓடியதே தெரிய வில்லை. அன்று, பரந்து விரிந்திருந்த பேரிஜம் ஏரிக்கரையில், ஆளரவமற்று அமர்ந்திருந்த மாலை நேரத்தில், ‘‘எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கு சிவா’’ என்றாள் மீரா.

‘‘ஏன்?’’

‘‘நாளையோடு செமினார் முடியுது. நாளை சாயங்காலம் கிளம்பறேன்!’’

நான் வேதனையுடன், கீழேயிருந்த புற்களைப் பிடுங்க ஆரம்பித்தேன்.

‘சொல்லிவிடலாமா?’ தயக்கத்துடன், தொண்டையைச் செருமிக்கொண்டு, ‘‘ஒரு விஷயம்..’’ என்று ஆரம்பித்தேன்.

‘‘என்ன?’’ என்று என் கண்களைப் பார்த்தாள் மீரா.

‘‘ஒண்ணுமில்ல…’’ என்று எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.

‘‘நாளைக்கு ஈவ்னிங் அஞ்சு மணிக்கு கம்பெனி கார் வருது. சென்ட் ஆஃப் பண்ண, கெஸ்ட் ஹவுஸ§க்கு வரியா?’’

‘‘கண்டிப்பா!’’ என்ற நான் மேற்கொண்டு ஒன்றும் பேசவில்லை. மீராவும் என் மௌனத்தைக் கலைக்க விருப்பமின்றி, அமைதியாக நடந்து வந்தாள்.

மறுநாள், மாலை ஐந்து மணி. மீராவின் கெஸ்ட் ஹவுஸ§க்கு நான் சென்றிருக்க வேண்டும். ஆனால், செல்லவில்லை. மீராவின் பிரிவைத் தாங்க முடியாமல், ஓட்டல் அறையிலேயே குடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

இரண்டு ரவுண்டுகளை முடித்துவிட்டு, மூன்றாவது ரவுண்டைத் துவங்கியபோது, அறைக் கதவு தட்டப்பட்டது. மெலிதான போதையுடன் எழுந்து போய்க் கதவைத் திறந்தால்… வெளியே மீரா!

‘‘என்ன சிவா, அஞ்சு மணிக்கு வரேன்னு சொல்லிட்டு…’’ என்றபடியே உள்ளே நுழைந்தவள், டீப்பாயில் விஸ்கி பாட்டிலைப் பார்த்ததும், ‘‘என்ன சிவா இதெல்லாம்?” என்றாள்.

‘‘அது… கொஞ்சம்… மனசு சரியில்ல. நீ உட்காரு!’’ ‘‘என்ன மனசு சரியில்ல? நீ என்னை வழியனுப்ப வருவேனு எவ்வளவு ஆசையா காத்துட்டிருந்தேன் தெரியுமா? பத்து நிமிஷம் வெய்ட் பண்ணிப் பார்த்துட்டு, நீ வரலேன்னதும் நானே கிளம்பி வந்துட்டேன். நீ என்னடான்னா இங்கே குடிச்சுட்டு உட்கார்ந்திருக்கே! ஏன் சிவா?’’

சோர்வாகச் சுவரில் சாய்ந்த நான், பொங்கி வந்த அழுகையை உள்கன்னத் தில் நுனிநாக்கால் அழுத்தி அடக்கிய படி, ‘‘ஏன்னா…’’ என்று ஆரம்பித்துப் பேச்சை நிறுத்திவிட்டேன்.

என் அருகில் வந்த மீரா, ‘’ஏன்னா… என்ன, சொல்லு?’’ என்று என் முகத் தைப் பார்க்க, அந்தப் பிரியமான பார்வையில் நெகிழ்ந்துபோய், ‘‘உன்னைப் பிரியறதை என்னால தாங்க முடியல மீரா!’’ என்றேன்.

‘‘ஏன்?’’ என்று மீரா மீண்டும் கேட்க, பீறிட்டுக் கிளம்பிய ஆவேசத் துடன், ‘‘ஏன்னா… ஏன்னா… ஐ லவ் யூ!’’ என்றபடி, அவளது தோள்களில் என் கைகளை வைத்தேன்.

சற்றும் எதிர்பாராத எனது வார்த்தை களிலும் செய்கையிலும் அதிர்ந்து போன மீரா, என் கைகளை விலக்காமல் பிரமிப்புடன் நின்றாள்.

‘‘என்ன சொல்றே சிவா?’’

‘‘ஆமாம் மீரா! இப்பவும் சொல்ல லைன்னா, அப்புறம் சாகிற வரைக்கும் சொல்ல முடியாமலே போயிடும். காலேஜ்ல கடைசி நாள் வரைக்கும் சொல்ல முயற்சி பண்ணி… ஏதோ ஒரு தயக்கம். நீ என்னை நிராகரிச்சுடுவி யோன்னு பயம். அப்படியும், கடைசி நாள் சொல்லிடறதுன்னு ஒரு முடி வோட கிளம்பி, உன் ஹாஸ்டலுக்கு வந்தேன். நீ ஒன்பது மணி பஸ்ஸ§க்குக் கிளம்பிப் போயிட்டதா சொன்னாங்க. நான் ஒன்பது மணி ட்ரெயினுக்கு ரிசர்வ் பண்ணியிருந்தேன். நான் ஊருக் குப் போகலேன்னாலும் பரவா யில்லேனு பஸ் ஸ்டாண்டுக்கு வந்து, பத்து மணி வரைக்கும் அங்கேயே சுத்திட்டிருந்தேன். ப்ச்… உன்னைப் பார்க்கவே முடியலே! வெறுத்துப் போய் ஊருக்குப் போயிட்டேன். அப்புறம், உங்க வீட்டுக்கு வரலாம், லெட்டர் போடலாம்னுகூட நினைச்சேன். ஆனா, தைரியம் இல்லாம விட்டுட்டேன்’’ என்று நான் சொல்லச் சொல்ல, மீராவின் கண்கள் ஓரம் கடகடவென்று நீர் கசிந்தது. ‘‘நீ பஸ் ஸ்டாண்ட்ல என்னைத் தேடிட்டிருந் தப்ப, நான் எங்கே இருந்தேன் தெரியுமா?’’ என்றாள்.

‘‘எங்கே?’’

‘’ரயில்வே ஸ்டேஷன்ல! நீ டிரெயின்ல போறேனு கேள்விப்பட்டு உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன்.’’

‘‘எதுக்கு?’’ ‘‘எதுக்கா? ராஸ்கல்… நீ எதைச் சொல்ற துக்காக என்னைத் தேடி அலைஞ்சுட் டிருந்தியோ, அதைச் சொல்றதுக்குத்தாண்டா பாவி!’’ என்ற மீரா, கதறியபடி என் தோளில் சாய்ந்துகொண்டாள்.

சந்தோஷத்தில் என் கால்கள் நடுங்கின. ‘‘மீரா…’’ என்று ஆவேசத்துடன் அவளை இறுகத் தழுவிக்கொண்டேன். ‘‘சிவா…’’ என்றபடி மீராவும் என்னை இறுக அணைத்துக்கொண்டாள். உலக இயக்கங் கள் எல்லாம் நின்றுபோய், நாங்கள் மட்டுமே உலகில் தனித்திருப்பது போல் ஒரு பிரமை.

மல்லிகைப்பூ, பவுடர் என எல்லாம் கலந்து வீசிய மீராவின் பின்கழுத்து வாசனை, என்னை வேறொரு உலகத்துக்கு இட்டுச் சென்றது.

எனது செவியில் அழுத்தமாகத் தனது உதடுகளைப் பதித்த மீரா, ‘‘இது போதும் சிவா, இது போதும்‘’ என்றாள்.

நான் மீராவை மேலும் இறுக்கமாக அணைத்தபடி, ‘‘ஆளைப் பொசுக்குற வெயில்ல நடந்துட்டிருக்கிறப்ப, ஒரு மரத்தடி நிழல் கிடைச்ச மாதிரி, ஒரு சின்ன இளைப்பாறல்’’ என்றேன். ‘‘ஆமாம். ஆனா, மரத்தடியிலேயே இருந்துட முடியாது. பயணத்தைத் தொடர்ந்துதான் ஆகணும். ஆனா, இந்த இளைப்பாறலை சாகிற வரைக்கும் மறக்க மாட்டேன் சிவா’’ என்ற மீரா, சட்டென்று என்னிடமிருந்து விலகிக் கொண்டாள்.

‘‘ஓ.கே. சிவா! நான் கிளம்ப றேன். வெளியே கார் வெயிட் பண்ணுது. டேக் கேர்!’’ என்றவள், பொங்கி வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வேகமாகத் திரும்பி நடந்தாள்.

ஒரு ஜீவனுள்ள காதலை உரியவளிடத்தில் சேர்ப்பித்து விட்ட திருப்தியுடன், மீரா சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றேன்.

வெளியான தேதி: 19 பெப்ரவரி 2006

Print Friendly, PDF & Email

1 thought on “தீராக் காதல்

  1. Chance.ஏ இல்ல சார், செம்ம , வாழ்நந்த மாதிரி இருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *