சொர்க்கத்தில் இடம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2023
பார்வையிட்டோர்: 1,829 
 
 

காலை பொழுது புலர்ந்து நன்கு வெளிச்சம் வந்து விட்டது. பக்கத்திலுள்ள கோவிலிருந்து நாதஸ்வர இசை இனிமையாகச் செவியில் விழ, உறங்கிக் கொண்டிருந்த தாரிணி படுக்கையிலிருந்து எழுந்து விட்டாள். பல் துவக்கி முகம் கழுவி கடிகாரத்தைப் பார்த்தாள்.

“அடடா, ஆறு மணியாகி விட்டதே” என்று கூறிய தாரிணி பரபரப்புடன் குப்பை பக்கெட்டை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே சென்றாள். அவள் வீட்டுக்குப் பக்கத்திலேயே குப்பை கொட்டும் ஓரிடம் இருந்தது. அங்குப் போய் குப்பையைக் கொட்டி விட்டுத் திரும்பினாள். சரியாக அதே நேரத்தில் எதிர் வீட்டிலிருந்து சித்ரா குப்பை கொட்ட வந்தாள். அவளுக்கு இரட்டை நாடி சரீரம். தாரணி குச்சி போல் ஒல்லியான உடம்பு. இருப்பாள். இல்லத்தரசிகள் இரண்டு பேருமே ஐம்பதைக் கடந்தவர்கள். குப்பை கொட்டும் இடத்தில் சந்தித்து தோழிகளானவர்கள். அந்த இடமே அவர்களுடைய மீட்டிங் பாய்ண்ட். தினந்தோறும் காலையில் குறைந்தது பத்து நிமிடமாவது நின்று பேசி விட்டுப் பிரிவார்கள். இல்லாவிட்டால் இருவருக்குமே என்னமோ போல் இருக்கும்.

”என்ன வேலையெல்லாம் எல்லாம் ஆச்சா?” சித்ரா

”எங்கே ஆறது. எங்க வீட்டுக்காரர் இருபத்து நாலு மணி நேரமும் சோபாவில் உட்கார்ந்து நாவல் படித்துக் கொண்டிருப்பார். எனக்கு யாரும் உதவிக்கு இல்லை. நானேதான் எல்லாத்தையும் செய்யணும். போட்டது போட்டபடி இருக்கு. ஒரு நாள் காபி குடிக்கலைன்னாலும் பொருட் படுத்தமாட்டேன். உன் கூட காலையில் பேசாவிட்டால் என்னால் தாக்குப் பிடிக்க முடியலை.அதனாலேதான் ஓடி வந்தேன்.” என்றாள் தாரணி. அரட்டை அடிப்பதில் அவளுக்கு அப்படி ஒரு சுகம்.”

அதைக் கேட்டு சித்ரா புன்முறுவல் பூத்தாள். ”பரவாயில்லை, என் வீட்டுக்காரர் சமையல் செய்யும்போது உதவி செய்கிறார். ஏன் சில சமயம் அவரே சமையல் செய்து வைத்து விடுகிறார். வாஷிங் மெஷினில் துணி துவைக்கிறார். அதை எடுத்து உலர்த்துகிறார். கடைக்குப் போய் காய் கறிகள், சாமான் வாங்கி வருகிறார். எப்பாவது மொபைலில் சீரியல் பார்க்கிறார்” என்று மனதுக்குள் நினைத்தவள் அதைச் சொல்லவில்லை. அவள் சொன்னது.

“என் கணவர் மட்டும் என்ன, எப்பவும் மொபைலில் சீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆம்பிளைங்களே அப்படித்தான். வீட்டிலே பண்டிகைன்னா நமக்கு உதவ மாட்டாங்க.” என்று கூறிச் சிரித்தாள்.

”நேற்றுதான் வரலட்சுமி நோன்பு முடிஞ்சிருக்கு. உங்க வீட்டிலே நோன்பு நல்லா நடந்ததா?” என்றாள் தாரணி.

”ரொம்ப சிறப்பா நடந்தது . ஆயிரம் ரூபாய்க்கு பூ வாங்கி பூஜை செய்தோம்.” என்றாள் பெருமையுடன்.

தாரணி திகைப்புடன், ”என்னது அவ்வளவு ரூபாய் ! என்னாலே அவ்வளவு முடியாது. ஐம்பது ரூபாய்….. அவ்வளவு தான் முடியும். எதோ ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை” என்றாள்.

நிறைய பூ போட்டு பூசை செய்தால் இறைவன் நம்முடைய கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றுவான் என்பது என்னுடைய நம்பிக்கை” என்றாள் சித்ரா.

”சரியா போச்சு, அப்போ பூ இல்லாமல் பூசை செய்பவர்கள் அல்லது குறைவான பூவினால் பூசை செய்பவர்கள் கோரிக்கையை இறைவன் நிறைவேற்ற மாட்டானா? யாரைக் கேட்டால் தெளிவு கிடைக்குமென்று தெரியலை” என்றாள் தாரிணி.

அவர்கள் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது குப்பையை அள்ளக் குப்பைத் தொட்டி வண்டி வந்து விட்டது. அது ஒரு பேட்டரி வண்டி. ஆட்டோவைப் போலிருக்கும்.

தோழிகள் இருவரும் சிறிது நகர்ந்து போய் நின்று பேச்சைத் தொடர்ந்தனர்.

நேற்று கிராண்டாக எங்க வீட்டிலே பூசை நடந்தது. அள்ள அள்ளக் குறையாத பூக்கள். எப்பவுமே நான் மாசத்துக்கு ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் பூசைக்கான பூக்களுக்குச் செலவிடுவேன். ஆனால் நேற்று பூசைக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் செலவழித்தேன். என்றாள் பெருமையுடன்.

”சிறப்பா பண்ணீங்கனு சொல்லுங்க. எங்க வீட்டிலே பூசை எளிமையாய் நடந்தது” என்றாள் தாரிணி.

”அதென்னமோ எனக்கு அதிக அளவில் பூப் போட்டு பூசை செய்தால்தான் மனநிறைவு உண்டாகிறது. வாக்கிங் போக வேண்டிய நேரம் வந்தாச்சு” என்றாள் சித்ரா.

”நாளை பார்க்கலாம்” என்று தாரிணி சொல்ல, இருவரும் பிரிந்தனர்..

சித்ரா, தாரிணி இருவரும் நெருங்கிய தோழிகள்.. ஆனால் நேர் எதிர் குணம் கொண்டவர்கள். சித்ராவின் கணவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர் . அவரே வீட்டில் எல்லா வேலையும் செய்து விடுவார். தாரிணிக்கு அப்படி அல்ல. கணவர் மின்சார இலாகாவிலிருந்து இருந்து ஓய்வு பெற்றவர். பென்ஷன் வருகிறது., ஒரு துரும்பைக் கூட அசைக்க மாட்டார். வீட்டில் எல்லா வேலையையும் அவள்தான் செய்ய வேண்டும்.

வீட்டுக்குள் நுழைந்த தாரிணி கணவன் ராகவன் படுத்திருந்த அறையைப் பார்த்தாள். ”அப்பா, அவன் இன்னும் எழுந்திருக்கவில்லை” என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

அவள் காபி போட்டு முடிப்பதற்குள் ராகவன் எழுந்து வந்து விட்டான். காபியை ஆற்றி அவன் கையில் கொடுத்து விட்டு, விஷயம் தெரியுமா உங்களுக்கு,சித்ரா நேற்று பூஜைக்காக ஆயிரம் ரூபாய்க்கு மேல் பூ வாங்கினாளாம். நீங்களும் இருக்கீங்களே. இருபது ரூபாய்க்கு பூ வாங்கறதுக்கே அழுறீங்களே. இருந்தா அவளைப் போல நல்லா பூ வாங்கிப் பூஜையை சிறப்பாக செய்யணும்.

தாரணி சொன்னது எதையும் ராகவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவன் கவனம் எல்லாம் அவன் படித்துக் கொண்டிருக்கும் பேப்பரிலியே இருந்தது. அவன் எப்பவும் அப்படித்தான். பேப்பரில் முழுகி விட்டால் என்ன பேசினாலும் காதில் விழாது.

நிதானமாக பேப்பர் படித்து விட்டுப் பிறகு குளித்து விட்டு வந்தான். நாவலைக் கையில் எடுத்துக் கொண்டு படிக்க சோபாவில் உட்கார்ந்து விட்டான். இரண்டு மணி நேரம் தொடர்ந்து நாவல் படித்துக் கொண்டிருப்பான்.

சில நாட்கள் வேகமாகக் கடந்தன. கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் அடுத்த பண்டிகை கோகுலாஷ்டமி வந்து விட்டது.

இந்த முறை நிறைய பூ வாங்கி பண்டிகையை விமர்சையாக கொண்டாடத் தாரணி நினைத்தாள். தன் கணவனிடம் சொல்ல அவன் இருக்குமிடம் தேடி வந்தாள். அவன் சோபாவில் உட்கார்ந்து கொண்டு நிம்மதியாக சுஜாதாவின் நாவல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான்.

தாரணிக்கு அவனைப் பார்த்தால் எரிச்சலாக வந்தது. ”நாசமாகப் போக ! உங்களுக்கு இது நியாயமா இருக்கா? நாளைக்கு கோகுலஷ்டமி. பட்சணம் பண்ண இப்ப வெண்ணெய் காய்ச்சணும். பட்சணம் பண்ணணும். உங்களாலே ஒரு ஹெல்ப் உண்டா. வெண்ணெயை நானே வாங்கிண்டு வந்தேன். இந்த சனியனை எப்பப் பார்த்தாலும் கையில் வைச்சுண்டு இருக்கேளே.” .தன் அதிருப்தியை வார்த்தையில் கொட்டினாள்.

அவள் பேசியது ஏதாவது ராகவன் காதில் விழுந்தால்தானே. அவன் புத்தகத்தில் மூழ்கி விட்டான்.

ஏங்க நான் சொல்றது காதில் விழுந்ததா?

எதுவும் பேசாதே நான் நாவல் படித்துக்கொண்டிருக்கும்போது தொந்தரவு செய்யாதே என்று சொன்னவனை வெறுப்புடன் பார்த்து விட்டு தாரணி சமையல் அறையில் நுழைந்து வெண்ணெய் காய்ச்ச ஆரம்பித்தாள். சீடை தட்டை. ரவா லட்டு செய்ய ஆரம்பித்தாள்.

பிறகு கடைக்குச் சென்று பூ வாங்கி வந்தாள். அவளிடமிருந்த பணத்தில் நூறு ரூபாய்க்குத் தான் பூ வாங்க முடிந்தது. அவளுக்கு அது ஒரு பெரிய குறையாகத் தோன்றியது.

அதே சமயத்தில் சித்ரா ஒரு லாங் வாக் போய் விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். கணவன் விசு கடைவீதி சென்று பழங்கள், வெண்ணெய் எல்லாம் வாங்கி வந்திருந்தான்.

அவள் சமையல் அறைக்குள் ஓமப்பொடி, தட்டை, மைசூர் பாகு செய்து முடித்தாள்..

இந்த தடவை எப்படியும் ஆயிரத்து ஐநுறு ரூபாய்க்கு பூ வாங்கி பண்டிகையைக் கொண்டாட வேண்டுமென்று நினைத்துக் கொண்டே உற்சாகத்துடன் எழுந்து சமையல் அறைக்குள் போகிறாள். காஸ் அடுப்பை பற்ற வைக்கிறாள்.. ஐயோ, ஐயோ என்று அவள் அலற தீ காங்குகள்.. நாலா பக்கமும் சூழ சித்ரா எரிந்து கரியாகிறாள்..

அவள் ஆவி மேலோகத்துக்குச் செல்கிறது.. அங்கு பிரம்மாண்டமான சுவர்க்க வாசல் முன் ஆயிரக்கணக்கான பேர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இவளும் வரிசையில் நின்றாள். சில நொடிகளில் இவள் வரிசையில் இவளுக்குப் பின்னால் ஆயிரம் பேர் வந்து விட்டனர். திரும்பி பார்க்கிறாள். கண் நன்றாக தெரிகிறது. கடையில் தாரணி நின்று கொண்டிருக்கிறாள். நான் ஆயிரம் ரூபாய்க்கு பூ போட்டு பூசை செய்தேன். எனக்குதான் முதலில் சொர்க்க வாசல் போகும் பாக்கியம் கிடைக்குமென்று நினைத்துப் புன்னகை பூக்கிறாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடைய தூதன் கடைசியில் நின்றிருந்த தாரணியைச் சுவர்க்க வாசலுக்குள் அழைத்துச் சென்று கொண்டிருந்தான்.

அதைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த சித்ரா, அவனிடம், ”நான்தானே முதலில் நிற்கிறேன். என்னை விட்டு விட்டு என் பின்னால் இருக்கும் இவளை ஏன் சுவர்க்கத்துக்குள் அழைத்துச் செல்கிறீர்கள். நான் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பூ வாங்கி பூசை செய்திருக்கிறேன். நீங்கள் செய்வது நியாயமாகத் தெரியலையே” என்று கூப்பாடு போட்டாள்..

இறைத்தூதன் சிரித்துக் கொண்டே சொன்னான்.

“ இவளின் பக்தி பூரண பக்தி என்பதால் இவளை அழைத்துச் செல்ல ஆண்டவன் கட்டளையிட்டான்.. ஆண்டவன் கணக்கு மனிதர்களுக்கு புரியாது. கடவுள் உங்களுக்குப் பதிலளிப்பார்” என்று சொல்லிவிட்டு தாரணியை அழைத்துச் சென்றான்.

சிறிது நேரத்தில் கடவுள் சித்ரா அருகே வந்து நின்றார்.

”சுவாமி நீங்கள் செய்வது நியாயமா? என் பூசையில் என்ன குறை? என்னை விடக் குறைவா பூ போட்டு பூசை செய்தவளை சொர்க்கத்துள்ளே அழைத்து செல்கிறீர்கள். நியாயப்படி எனக்குத் தானே முதலிடம் கொடுக்க வேண்டும்” என்றாள் சித்ரா.

கடவுள் சிரித்து விட்டுச் சொன்னார்.

”நான் பூப் போட்டு பூசை செய்யும்படி என் பக்தர்களை எப்போதுமே கேட்டதில்லை. ”ஒரு பூ, பழம், இலை அல்லது தண்ணீரைப் பக்தியுடன் சமர்ப்பித்தால் தூய்மையான உணர்வுடன் என் பக்தன் அளிக்கும் அந்தப் பொருளை நான் மகிழ்ச்சியுடன் சாப்பிடுகி/றேன்” என்று அர்ஜீனிடம் கீதா உபதேசத்தில் கூறியிருக்கிறேன். நான் எதிர்

பார்ப்பது நிஷ்காம்ய பக்தியைத்தான். அதாவது எதிர்பார்ப்பு இல்லாமல் பக்தி செய்வது.உன்னிடம் அது இல்லை.”

” சரி, நான் எப்போது சுவர்க்கத்துக்குள் நுழைய முடியும். “

”நீ கொஞ்சம் காத்திருக்க வேண்டும்,“

”எத்தனை நிமிஷம் …?”

”இருநூறு வருஷங்கள் ….”

”என்னது, இருநூறு வருஷங்களா?” திடுக்கிட்டாள்..

”ஆமாம், உனக்கு மூன்று பிறவிகள் இருக்கின்றன. அதன் பிறகு நீ சொர்க்கத்துக்குப் போக முடியும்.”.

சிலையானாள் சித்ரா. கண்கள் கலங்கி அதிலிருந்து இரண்டு சொட்டுத் தண்ணீர் இறைவனின் பாதத்தில் விழுந்தது.

”சித்ரா எழுந்திரு. நேரமாகிவிட்டது” என்று சித்ராவை எழுப்பினான் விசு.

கண்ணைக் கசக்கிக் கொண்டே எழுந்தாள் சித்ரா. அட, இவ்வளவும் கனவுதானா…! தனக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்கவில்லை. ஆனாலும் கடவுளைச் சந்தித்து விட்டோம் கனவில் அது போதும் என்ற திருப்தி மனதில் மட்டற்ற ஆனந்தத்தை உண்டாக்கியது.

காலை ஆறு மணிக்கு, வழக்கம் போல் மீட்டிங் பாயிண்டில் தாரிணியும் சித்ராவும் சந்தித்தார்கள்..

தாரிணி மலர்ந்த முகத்துடன் கூறினாள்.

”சித்ரா நேற்று இரவு எனக்கு ஒரு கனவு வந்தது. நான் சொர்க்கத்துள் நுழைகிறேன்..கடவுள் என்னைச் சிம்மாசனத்தில் அமரச் சொன்னார். உடனே கனவு கலைந்து விட்டது.”

”எனக்கும் நேற்று இரவு ஒரு கனவு வந்தது. சொர்க்கத்துக்குப் போக நான் வரிசையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ., ”நீ இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்“ என ஆண்டவன் என்னிடம் பகர்ந்தார்” என்றாள் சித்ரா வருத்தத்துடன்.

”எப்படியோ நம்ம இருவருக்கும் சொர்க்கம் நிச்சயம். உண்டுன்னு சொல்லு.”. கலகலவென்று சிரித்த தாரிணி, ”அதனாலே எப்போதும் போல் பூ போட்டு அர்ச்சிப்போம்” என்றாள்.

“நானும் இனிமேல் உன்னை மாதிரி இருபது ரூபாய்க்குத்தான் தினந்தோறும் பூ வாங்கப் போகிறேன். ஆண்டவனுக்குப் பக்தி செய்ய ஒரு பூ, இலை அல்லது ஒரு பழம் இருந்தால் கூட போதும். நிறையப் பூவையோ அல்லது பிரசாதத்தையோ அவன் எதிர்பார்க்கலை. என்று உணர்ந்து கொண்டேன்” என்று தெளிவுடன் சொன்ன சித்ராவை அவள் மனசின் மாறுதலுக்குக் காரணம் தெரியாததால் ஆச்சரியத்துடன் நோக்கினாள் தாரிணி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *