சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 28,664 
 

அது ஓர் அழகிய அடர்ந்த காடு. அந்தக் காட்டில் தேக்கு, தோதகத்தி, மா, பலா என பலவகையான மரங்கள் வளர்ந்திருந்தன. அந்தக் காட்டைப் பார்க்கும்பொழுது பச்சைப் புல்வெளிகள் நிறைந்து பச்சைக் கம்பளம் விரித்தது போல அழகாக இருந்தது.

அங்கிருந்த மாமரங்களும் புளிய மரங்களும் மற்றும் பலவகையான மரங்களும் அதன் கிளைகளும் கொப்புகளும் ஏராளமான இலைகளுடன் பரந்து விரிந்த நிழலை கொடுத்துக் கொண்டு நின்றிருந்தன.

அந்தக் காட்டில் எல்லாவகையான மிருகங்களும் வாழ்ந்து வந்தன.

அந்தக் காட்டை சிங்க ராஜா நன்றாக ஆட்சி செய்து வந்தார். சீரும் சிறப்புமாக ஆட்சி நடத்தி வந்த சிங்கராஜாவுக்கு 60 வயது ஆவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருந்தன.

சிங்கராஜாவுக்குசிங்கராஜாவின் அறுபதாம் கல்யாணத்தை சிறப்பாகக் கொண்டாட மற்ற மிருகங்கள் தீர்மானித்தன. விழா மிகவும் பிரம்மாண்டமாக இருக்க, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தன.

விழாவன்று, சிங்கராஜாவும் ராணியும் அமர்வதற்கு தேக்கு மரத்தாலான சிம்மாசனமும் தோதகத்தி மரத்தினால் ஒரு பல்லக்கும் செய்வது என அமைச்சர் நரியும் தளபதி கரடியும் முடிவு செய்தன. எனவே காட்டில் உள்ள மரங்களிலேயே மிகவும் நல்ல மரங்களாகப் பார்த்துத் தேர்வு செய்து அவற்றை வெட்டின. விழா நடப்பதற்கான மேடை அமைப்பதற்காகவும் ஏராளமான மாமரங்களை வெட்டின.

நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் மற்ற மிருகங்கள் அமர்ந்து பார்ப்பதற்கு வசதியாக காலரிகள் அமைக்கவும் முடிவு செய்தன. இதற்காக ஏராளமான பலகைகள் தேவைப்பட்டன.

அதற்காக காட்டிலுள்ள அகன்று வளர்ந்த பெரிய மரங்கள் பல வெட்டப்பட்டன.

விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. அனைத்து மிருகங்களும் தங்களுக்கென கொடுக்கப்பட்ட வேலைகளை உற்சாகமாகச் செய்து கொண்டிருந்தன.

அந்தக் காட்டில் ஏழை முயல் ஒன்று வாழ்ந்து வந்தது. அதன் பெயர் பரணி. பரணி நட்சத்திரத்தில் பிறந்ததால் அதற்குப் பரணி என்று பெயர் வைத்திருப்பதாகவும் பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் என்றும் அம்மா முயல் அடிக்கடி கூறுவாள். ஆனால் பரணி முயல் ஒருவருடைய தோட்டத்தில் கூலி வேலை செய்து பிழைத்து வந்தது. ஆனாலும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தது.

சிங்கராஜாவின் அறுபதாவது கல்யாணத்துக்கு காட்டிலுள்ள எல்லா மிருகங்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டிருந்தன.

பரணி முயலுக்கும் அந்த அழைப்பிதழ் வந்தது.

உடனே பரணி யோசிக்க ஆரம்பித்தது. சிங்கராஜாவுக்குப் பரிசாகக் கொடுக்கத் தன்னிடம் போதுமான வசதி இல்லையே, என்ன செய்வது என்று யோசித்தது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தது.

மா, புளி, பலா, அரசு, வேம்பு ஆகிய மர விதைகளைச் சிறிய தொட்டிகளில் போட்டு வளர்க்க ஆரம்பித்தது.

சிங்கராஜாவின் அறுபதாவது கல்யாண தினமும் வந்தது. சிங்கத்தின் குகையிலிருந்து விழா மேடை வரை, வரிசையாக வாழை மரங்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன.

அன்று காலையில் அரச மரமும் வேப்ப மரமும் அருகருகே வளர்ந்திருந்த நிழலான இடத்தில் அமைந்திருந்த காட்டுப்பிள்ளையார் கோவிலுக்குச் சிங்கராஜாவும் ராணியும் வந்தனர். மான்கள் மந்திரம் ஓத சிங்கராஜாவும் ராணியும் கோவிலை 108 முறை வலம் வந்தனர்.

பின் ஆயுள் ஹோமம் செய்தனர். மதியம் சாப்பிட வந்த மிருகங்களுக்கு தவிட்டு கானப்பயிறு நெய்சாதம், கேப்பை பாயசம், அவித்த மொச்சை, முளைக்கீரை பெரியல், கொள்ளு ரசம் என விருந்து அமர்க்களப்பட்டது.

மாலை வேளையில் சிங்கராஜாவும் ராணியும் தோதகத்தி பல்லக்கில் காட்டில் ஊர்வலமாக வந்தனர். யானைகள் மலர் மாலைகள் அணிவிக்க, மேடையில் தேக்கினால் செய்த சிம்மாசனத்தில் சிங்கராஜாவும் ராணியும் அமர்ந்திருந்தனர்.

மேடையில் குயில்கள் பாட, குரங்குகள் மத்தளம் அடிக்க, கரடிகள் நாதஸ்வரம் வாசிக்க, மயில்கள் நடனமாட விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

எல்லோரும் சிங்கராஜாவுக்குத் தாங்கள் கொண்டு வந்திருந்த பரிசுகளைக் கொடுப்பதற்காக வரிசையில் நின்றிருந்தனர். சிலர் பொன்னாடை போர்த்தினர். சிலர் குத்துவிளக்குகளைப் பரிசாக அளித்தனர். மற்றவர்கள் வெள்ளியில் ஆன பொருட்களைப் பரிசாகக் கொடுத்தனர். எல்லோரும் சிங்கராஜாவிடமும் ராணியிடமும் ஆசிர்வாதம் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பி தங்கள் இடத்துக்கு வந்த அமர்ந்து கொண்டிருந்தனர்.

கடைசியில் தயங்கித் தயங்கி வந்த பரணி முயல் தனது பரிசை எடுத்து சிங்கராஜாவுக்கு முன்பு எடுத்து வைத்தது.

ஐந்து சிறிய அழகிய தொட்டிகளில் தான் வளர்த்த மரக்கன்றுகளைத்தான் பரிசாகக் கொண்டு வந்திருந்தது பரணி முயல். சிங்கராஜாவிடம் மிகவும் பணிவுடன் அவற்றை அளித்தது.

இந்தக் காட்சியைக் கண்ட மற்ற மிருகங்கள் சிரிக்க ஆரம்பித்தன. சிங்கராஜாவுக்கும் ராணிக்கும் பரணியின் பரிசு ஆச்சரியத்தை அளித்தது.

மற்றவர்களை அமைதிப்படுத்திவிட்டு, சிங்கராஜா பரணி முயலைப் பார்த்து, “”உனக்கு இந்தப் பரிசைக் கொடுக்க வேண்டும் என்று எப்படித் தோன்றியது?” என்று கேட்டது.

அதற்கு, பரணி முயல், “”சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே! முதல் காரணம் நானொரு கூலித் தொழிலாளி. என்னிடத்தில் விலையுயர்ந்த பரிசு வாங்கிக் கொடுக்கப் பொருளாதார வசதி இல்லை. மற்றொரு காரணம் இந்த விழாவுக்காக காட்டிலிருந்து பலவகையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் காட்டில் மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போய்விட்டது. மரங்கள் இல்லையேல் காடுகள் இல்லை. மழையும் சரியாகப் பெய்யாது. மழையில்லையென்றால் மீண்டும் மரங்கள் வளர்வது தடைபட்டு விடும். காட்டின் செழிப்பு குறைந்து போய்விடும். அப்புறம் நாமெல்லாம் வாழ்வதற்கு நல்ல இடமில்லாமல் போய்விடும். இதையெல்லாம் எண்ணிப் பார்த்தேன். அதனால்தான் இப்படியொரு பரிசை உங்களுக்குக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. சில நாட்களுக்கு முன்பாகவே இந்த மரக்கன்றுகளை வளர்க்க ஆரம்பித்தேன்” என்று கூறியது.

“”ஆமாம், நீ சொல்வது உண்மைதான். இந்த விழாவுக்காக ஏகப்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாதது எனது தவறுதான். நீதான் எனது அறிவுக் கண்களைத் திறந்தாய் பரணி. மற்றவர்கள் கொடுத்த பரிசுகளை விட மதிப்பு மிக்கது நீ தந்த பரிசு. இனி இந்த மாதிரி ஆடம்பர விழாக்களுக்காக மரங்களை வெட்டக்கூடாது என்று ஆணையிடுகிறேன். மேலும் இப்போது மரங்கள் வெட்டப்பட்டதற்கு ஈடாக எனது பிறந்த நாளை முன்னிட்டு 60 மரக்கன்றுகளை நடுவதற்கும் உத்தரவிடுகிறேன்.

உனக்கும் ஒரு வேலை தருகிறேன். அதன்படி உனக்கு ஒரு ஏக்கர் நிலம் தரப்படும். அதில் மரக்கன்றுகளை வளர்த்து நீ எங்களுக்கு அளிக்க வேண்டும். அதற்கான ஊதியம் உனக்குத் தரப்படும். நீ தரும் மரக்கன்றுகள் அனைத்தும் காட்டில் ஆங்காங்கே நடப்பட்டு சிறந்த முறையில் வளர்க்கப்படும்…” என்று சிங்கராஜா தனது கம்பீரக் குரலில் அறிவித்தது.

மற்ற மிருகங்கள் அனைத்தும் வாயடைத்து நின்றன. அவற்றின் திகைப்பு அடங்க வெகு நேரமாயிற்று. பரணி முயல் சிங்கராஜாவுக்கு நன்றி கூறிவிட்டு சந்தோஷமாகத் தனது வீட்டுக்குத் திரும்பியது.

பரணி முயலுக்கென தனி நிலம் கிடைத்துள்ளதால் அதுவும் ஒரு காலத்தில் தரணி ஆளப்போவது நிச்சயம்தானே!

– விஜயலெஷ்மி கங்காதரன் (செப்டம்பர் 2013)

Print Friendly, PDF & Email

1 thought on “சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

  1. அற்புதமான கதை!! படித்து படித்து இன்புற்றேன்!! குழந்தைகள் ரொம்ப விருப்பப்பட்டு படித்தார்கள்!! அருமை!! நிஜமான மனிதர்கள் நடுவே நடக்கும் சம்பவங்கள் போன்று அத்தனை ரசிக்கும்படியாக இருந்தது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *