புதிய ஒளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 23, 2022
பார்வையிட்டோர்: 4,554 
 

“அதிர்ஷ்டம் அடிச்சாலும் இப்படி அடிக்கனும்…!”

“அல்பாயுசு அண்ணன்காரனுக்குத் தம்பியாய்ப் பொறக்கனும்….!”

“அதுவும் அண்ணன்காரன் பணக்காரனா இருக்கனும்…!”

“அனுபவிக்கனும்ன்னே ஒருத்தனைப் பணக்காரனாகவும், இன்னொருத்தனை ஏழையாவும் ஆக்கி இருக்கான் ஆண்டவன்!”

இதெல்லாம் வந்து சென்றவர்கள் பேசிய பேச்சுக்கள்.!,. இலை மறைவு காய் மறைவாகக் காதில் வந்து விழுந்த சொற்கள்.! – சுழற்றி நினைக்க நினைக்க மனசு வலித்தது தினகரனுக்கு.

கனத்த மனத்துடன் அந்த பங்களாவின் கூடத்திற்குச் சென்று சோபாவில் அமர்ந்து சுவரில் மாலையிட்டுத் தொங்கும் தன் அண்ணன், அண்ணி படங்களை வெறித்தான்.

கோரம்! கொடூரம்! பேருந்து விபத்தில் எடுத்து எரிப்பதற்குகு கூட அருகதை இல்லாமல் போன உடல்கள். – தினகரனுக்குக் கண்ணீர் திரையிட்டது.

பணம் சேர்த்து, பொருள் குவித்து வாழக் கொடுத்து வைக்காமலும், அனுபவிக்க ஆயுசு இல்லாமலும் ஆக்கி விட்டது விதி.! – திரையிட்ட கண்ணீர் முத்தாக உருவெடுத்து தினகரன் மடியில் விழுந்தது.

இனி இவர்களின் சேர்த்து வைத்த பணம், திரண்ட சொத்துக்களுக்கும் விட்டுப்போன குழந்தைகளுக்கும் ஆதரவும், பாதுகாப்பும் இவன் தலையில்.! நினைக்க இவனுக்கு நெஞ்சு நடுங்கியது.

இந்த வலி தெரியாமல் மற்றவர்கள் பேச்சு, ஏச்சு..! -தினகரன் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே வெறுப்பாகப் பார்த்தான்.

“என்னங்க…?!” சிறிது நேரத்தில் அவன் மனைவி விசாலம் குரல் கொடுத்துக் கொண்டே கணவன் அருகில் வந்தாள்.

“என்ன..?” மெல்ல கேட்டு தலையைத் திருப்பி அவளைப் பார்த்தான்.

“சுமன், சுருதி எங்கே..?” அவள் கண்கள் தேடின.

“இங்கேதான் இருந்தாங்க..”துணுக்குற்று கண்களால் துழாவினான்.

“இல்லேயே…!” அவள் பரபரத்தாள்.

வேகமாக வாசலுக்குச் சென்றாள்.

வெளியில் விளையாடுகிறார்களா..?!…. – பார்த்தாள்.

தோட்ட மைதானம், புல்வெளி வெறிச்!

கலவரமாக மாடிப்படிகள் ஏறினாள்.

கடைசி மாடிப்படியில் அந்த ஐந்து, ஆறு வயது . சிறுமியும், சிறுவனும் அமர்ந்திருந்தார்கள்.

சிறுமியின் கண்களில் கண்ணீர்.

“அம்மா, அப்பா சாமிகிட்ட பி[போயிருக்காங்க. அழக்கூடாது.” தேறுதல் சொல்லி அண்ணன்காரன் தன் பிஞ்சு கரங்களால் தங்கையின் கண்ணீரைத் துடைத்தான்.

இந்த பிஞ்சு மனங்களுக்குள் எத்தனை வலி.! விசாலத்திற்கு மனசைப் பிசைந்தது. பொறுக்க முடியாமல்…

“என் கண்ணுங்களா…!” – தாவி அணைத்தாள்.

அவளுக்குள்ளும் துக்கம் கரை புரண்டது. வந்த விம்மலை அடக்கிக்கொண்டு குழந்தைகளை நெஞ்சோடு இறுக்கினாள்.

விபரம் தெரியாத பிஞ்சு…

“அப்பா! எப்போ வரும்…?” கேட்டது.

“இப்போ வந்திடுவாங்கம்மா…”

“அம்மா..?”

“அம்மாவும்தான்!”

சித்தியின் சொல்லில் அவளுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும்.

மௌனமானாள்.

குழந்தைகளைக் கீழே அழைத்து வந்த விசாலம்…

“நீங்க ரெண்டு பெரும் அழாமக் கொள்ளாம சமத்தா விளையாடினா சாமிகிட்ட போன அம்மா, அப்பா சீக்கிரம் வந்துடுவாங்க…”சொன்னாள்.

“சரி!” அவர்கள் தலையை ஆட்டி விளையாட ஆரம்பித்தார்கள்.

விசாலம் நின்றாள்.

இவளுக்குக் குழந்தைகளென்றால் கொள்ளைப் பிரியம். இல்லாத குறை. வேதனை நெஞ்சைப் அடைத்தது. கட்டுப்படுத்திக்கொண்டு திரும்பினாள்.

தினகரன் அமர்ந்திருந்த இடத்திலேயே இன்னும் அமர்ந்திருந்தான்.

“என்னங்க….”அருகில் சென்றாள்.

ஏறிட்டான்.

“இனி இதுங்க நம்ம வளர்ப்புதானே..!” அவள் கண்கள் மின்னின.

“ஆமாம்!”

“நம்ம வீடு வாசலை விட்டு இனி இங்கேதானே இருக்கனும்..?!” கணவன் பக்கத்தில் அமர்ந்தாள்.

“அதான் கொஞ்சம் யோசனையாய் இருக்கு..”

“என்ன சொல்றீங்க…?”

“நீதான் வந்து போனவங்க பேச்செல்லாம் கேட்டிருப்பீயே…?”

“ஆமாம். அதுக்காக குழந்தைகளைத் தனியே விட்டுப் போறதா…?!”

“தனியே விட்டுப் போகனும்ன்னு யார் சொன்னா..?”

“அப்போ.. நம்ப கூரை வீட்டுல கொண்டு போய் வளர்க்கலாம்ன்னு சொல்றீங்களா..?”

”அது கஷ்டம்.!”

”என்ன கஷ்டம்..?”

“பொறந்ததிலேர்ந்து வறுமைன்னா என்ன, கூரைன்னா என்னன்னு தெரியாம வளர்ந்ததுங்க. இப்போ திடீர்ன்னு கொண்டு போய் அங்கே விட்டால் குழந்தைங்க திண்டாடிப்போவாங்க. அதே சமயம் இந்த பங்களாவையும் நாம பூட்டிவிட்டுப் போறது சரி இல்லே. அங்கே இருந்து இந்த சொத்துகளை நாம பராமரிக்க முடியாது. பங்களா பாழாகிடும். இருந்தா மத்தவங்க பேச்சு நிஜம். உண்மையா போகும்.!” நடப்பு சொல்லி நிறுத்தினான்.

“சரி. என்ன செய்யப் போறதா உத்தேசம்..?”

“நாம நல்ல பேர் எடுக்கனும்ன்னா குழந்தைகளையும் பங்களாவையும் பொறுப்பான ஆளிடம் ஒப்படைச்சுட்டு நாம நம்ம ஊருக்குப் போய் மேற்பார்வை பார்த்துக்கிட்டு இருக்கிறது நல்லதாப் படுது.’’

“இது சாத்தியமா..?”

“….”

“சரியா…?”

“குழப்பமா இருக்கு விசாலம். என்னைக் கொஞ்சம் தனியே விடேன். யோசிக்கிறேன்.!”

அவள் அகன்றாள்.

தினகரன் கண்களுக்குள் தூரத்தில் ஒரு ஒளி மங்கலாகவும், தெளிவில்லாமலும் தெரிந்தது.

இப்படி ஏச்சும் பேச்சும் காதில் வாங்கிய நாட்களிலிருந்தே அந்த ஒளி அப்படித்தான் தெரிகிறது. துருவி துருவி துலக்கிப் பார்த்தும் சுடர் சரியாகத் தெரியவில்லை.

தினகரன் தளர்ந்தபடி எழுந்து நடந்தான்.

தூரத்திலுள்ள டீ கடையில் டீ குடித்துக் கொண்டே அடுத்திருக்கும் பங்க் கடையில் தொங்கும் தினசரிகளை மேய்ந்தான்.

கண்களில் பட்டென்று மின்சாரம்.!

காசு கொடுத்து அந்த தினசரி பத்திரிக்கையை வாங்கி பரபரப்பாகப் பிரித்தான்.

இத்தனை நாட்கள் குழம்பித் தெரிந்த சுடர் இப்போது பளிச்சென்று தெளிவாகத் தெரிந்தது.

விடுவிடுவென்று வீடு நோக்கி நடந்தான்.

கணவனின் தெளிந்த முகம் விசாலத்திற்கு வியப்பை அளித்தது.

“என்ன..??..”திகைப்பாய்ப் பார்த்தாள்.

அவளை அருகில் அமர்த்தி…பத்திரிக்கையைப் பிரித்து……..

“இதை படி!” இடத்தைக் காட்டினான்.

“முதியவர்கள் தற்கொலை!” தலைப்பைப் படித்த விசாலம்…

“என்னங்க இது..?” முகம் வெளிறினாள்.

“மேலே படி”

“ஆறு மக்களை பெற்ற முதிய தம்பதியர்கள் ஆதரிக்க யாருமில்லாமல் மனம் உடைந்து விசம் அருந்தினர்.”

“போதும்!” பத்திரிக்கையை முடிய தினகரன்….

“இதைப் படிச்சதும்தான் முதியோர் காப்பகம்ன்னு ஒன்னு இருக்கிறது ஞாபகம் வந்தது விசாலம். குடும்ப சண்டை, பிள்ளைகளால் நிராகரிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு அது அடைக்கலமாக இடம். அவுங்கள்ல நாம மனசுக்குப் பிடிச்சவங்களாய்த் தேர்ந்தெடுத்து குழந்தைகளைத் தத்தெடுக்கிறது மாதிரி நம்ம தாய் தகப்பனாய்த் தத்தெடுத்து இங்கே வந்தால் பிரச்சனை தீர்ந்தது. தாத்தாப் பாட்டியாய் குழந்தைகளைப் பார்த்துப்பாங்க, பராமரிப்பாங்க. நம்ம பத்தின ஏச்சு, பேச்சு செல்லா காசாகும்.” சொன்னான்.

“என் மனசுக்கு இது சரியாய் படலை.”

“எப்படி..?”

“வயசான காலத்துல எல்லா தாத்தா பாட்டிகளும் பிரச்சனை இல்லாம இருக்கத்தான் ஆசைப்படுவாங்க..”நிறுத்த….

“சித்தப்பா…!”

“சித்தி…!”

குழந்தைகள் இருவரும் அழைத்துக் கொண்டு இவர்கள் அருகில் வந்தார்கள்.

“என்னப்பா..?” தினகரன் சிறுவனை அணைத்தான்.

“என்னம்மா..?” விசாலம் சிறுமியை அணைத்தாள்.

“குழந்தைகள் இல்லாத உங்களுக்கு அம்மா, அப்பா எங்களை முழுசாய் விட்டுப்போயிருக்காங்க. இதுல பங்கு பாகம் போட வேற யாரும் வேணாம்.. சித்தப்பா..!.”சொல்லி சிறுவன் தினகரனை அணைத்தான்.

“ஆமாம் சித்தி!” சிறுமிய விசாலத்தை அணைத்தாள்.

சட்டென்று புத்தொளி பிறக்க…

“என் கண்ணுங்களா…!!” கணவன், மனைவி இருவரும் குழந்தைகளை இறுக்கி அணைத்து மாறி மாறி முத்தமிட்டார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *