சேறு குளிக்க, தெய்வமே வந்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 27, 2024
பார்வையிட்டோர்: 1,533 
 
 

நிஜம் பற்றாமல் நிழல் ஓடும் அந்தத் தருணத்தில் தான் மனோகரி வேதம் குறித்து யோசிக்கத் தொடங்கிருந்தாள். அன்று அவள் போக இருந்த ஒரு கனடா பையனின் கல்யாணம். பேஸ்புக் வழியாக மூண்ட காதல் நெருப்பு இந்தக் கல்யாண காட்சி. உலகமே கனவாய்த் தான் போகும். காலம் நம்மை விழுங்கிக் கொண்டிருக்கிறது. இதை சமன் செய்ய, அன்பு வழிபாடு ஒன்று தான் நிரந்தரத் தீர்வு. இந்த உண்மை, ஒரு வேதவாக்காகப் பிடிபட்டதால் தான், எதிலும் நிலை குலைந்து போகாமல் மனோகரி பூண்டிருகிற, அந்த மெளன தவக் கோலம்.

கல்யாணமாகிற பையனுக்கு அவள் நெருங்கிய உறவு தான். அவனின் அப்பா காந்தன் அவளுக்கு மச்சான் முறை. அதை மறந்து போகாமல் சென்ற கிழமைதான் காந்தனும் மனைவியுமாக நேரில் வந்து அழைத்து விட்டுப் போனார்கள். அவர்கள் இப்போது கனடா குடிமக்கள். இதில் அவள் உணர்ச்சி மனம் எடுபடுமா என்று தெரியவில்லை. அவளைப் பொறுத்தவரை கல்யாணமான நாளிலிருந்து இப்படியான விழாக்களும் கேளிக்கை கொண்டாட்டங்களும் மறுதுருவம் அவள் மனம் கொண்டாலும் போக இயலாத, கறுப்பு நிழல் வாழ்க்கை அவளுக்கு. துரத்துகிற கறுப்பு நிழலாய் வந்து சேர்ந்த அவளின் கணவனிடம் வேதம் சொல்லி எடுபடாது அது ஒரு தனிக் கதை.

ஊரிலென்றால் அந்தக் காலத்தில் அவள் சிறுமியாக இருந்த போது, நடந்து முடிந்த, பெரியக்காவின் கல்யாணம் போல் இனியொரு கல்யாணமும் காட்சி அழகும் இனி எங்கே அவள் காணப் போகிறாள்? ஒரு மாதம் வரை நீடித்த அந்தக் கல்யாண ஏற்பாடுகளே ஒரு சகாப்த்தைக் கண்ட மாதிரி. அதற்கென வில்லுப் பந்தல் போடவே, ஒரு கிழமை எடுத்தது. பந்தல் மேலே அப்படியொரு சோடனை. நாள் முழுக்க, பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் தோன்றும். அதிலும் அத்தான் அக்காவுக்கு நெருங்கிய உறவு. அதற்கு ஏன் இவ்வளவு தடல்புடல் என்று புரியவில்லை.

அவளுக்கு தலை சுற்றியது. சிறுவயதிலிருந்தே, ஒரு சராசரி பெண்ணைப் போல அவள் வாழ்ந்ததில்லை. பட்டிலும் பொன்னிலும் ஆசை வராமல், அவள் ஒரு துறவி போலவே வாழ்ந்திருக்கிறாள். அதனால் தானோ என்னவோ அவளுக்கு வாழ்க்கையில் வந்த எதுவும் ஒட்டவில்லை.

தெஹிவளை சந்திக்கு சமீபமாகத் தான் ஒரு மண்டபத்தில் கல்யாணம் உடல் சோர்வும் முதுமை காரணமாக ஏற்பட்ட தொய்வும் அங்கு போக விடாமல் முன்னின்று தடுத்தாலும், அவர்கள் வீடு தேடி வந்து சொன்னதால், போகாமல் இருக்கவும் முடியவில்லை. அதற்கு ஆயத்தமாக, அவள் புடவை கட்ட முனையும் போது ஒரு குறுக்கீடு வீட்டில் ஒரு நோய்வாய்ப்பட்ட மகள் இருக்கிறாளே. அதுவும் மனநலம் குன்றிய மகள். அவளுக்கு உலகம் வேறு. இந்தக் கல்யாணம் காட்சியெல்லம் இரண்டாம் பட்சம் தான். வாழ்க்கையே போய் விட்டது. விதியின் சுழற்சியில் தூக்கி வீசப்பட்ட சிறு துரும்பு அவள். அவளை மேலும் நிலை குலைய, வைக்காமல் அன்பு ஆராதனை செய்யும் வழிபாட்டுடன் மனோகரி கேட்டாள்.

என்னம்மா?

நானும் கல்யாண வீட்டிற்கு வரட்டே?

அதுக்கென்ன வாவன் என்று மனோகரியின் வாய் தான் கூறியதே தவிர மனதில் சிறு நெருடல். அது தேவதைகள் கூடும் இடம். அப்படியொன்று இருக்கிறதா? ஆம் மாய உடம்பின் அழகு குறித்து உலகம் கவலைப்படுவதில்லை. அதிலும் பெண்கள் பட்டிலும் பொன்னிலும் குளித்து, அவர்கள் வேடம் கட்டி ஆடுகிற அந்த பகட்டு உலகில் எடுபடாமல் கரை ஒதுங்கிப் போன சிறு துரும்பு தான் அவள். தீனமுற்றமகள் காரணி. அவள் பெயரென்ன முகூர்த்ததில் அந்தப் பெயர் வைக்கப்பட்டதோ தெரியவில்லை. மங்களகரமான வாழ்க்கை நிகழ்வுகளின் நிழல் கூட அவள் மீது பட்டதில்லை. அவள் ஒரு தலை நிமிரவே முடியாது பட்டமரம், அந்த பட்ட மரத்தை வாழ்க்கை பறி போன அவளை வாழ்விக்கவும் வாழ்த்தவும் ஆளின்றி, வரண்டு வரட்சி காய்கிறதே, அவள் உயிர் உணர்வு மனம் எல்லாம் இந்த நிதர்ஸன, உண்மையை அறிந்து கொள்ளத் தான், உலகம் வாவென்று அழைக்கிறதே போய்த்தான் பார்ப்போமோ என்று நினைத்தாலும் அதிலும் ஒரு பெரும் இடறல்.

காரணி! அப்படி நீ கல்யாண வீட்டிற்கு வாறாதெண்டால் உனக்கு எந்தப் பஞ்சாபி எடுத்துத் தாறது நான்?

எனக்கு பஞ்சாபி வேண்டாம், ஜீன்ஸ் தான் வேணும் என்றால் காரணி விடாப்பிடியாக.

இல்லையம்மா! உதெல்லாம் வெள்ளைக்காரன்ரை உடுப்பு. தமிழ்க் கலாச்சரம் பேணி நடக்கிற கல்யாணத்தில்லை உந்த உடுப்போடை போனால், உன்னை எல்லோரும் வித்தியாசமாகப் பார்ப்பினம், சிரிப்பினம். நான் சொல்லுறதைக் கேள் பிள்ளை.

இந்தக் காலத்தில் புத்தி விளங்குகிற பிள்ளைகளே அவிழ்த்து விட்ட மாடுகள் மாதிரி. பிள்ளைகள் பெற்றோருக்கு அடங்கி வாழ்ந்த, அந்தக் காலம் மலையேறி விட்டது. நிலைமை இவ்வாறிருக்க, புத்தி ஸ்வாதீனமமுற்ற, இவள் அம்மா பேச்சுக்கு எடுபடுவாளென்பது, கனவில் கூட நடக்காத காரியம்.

அவள் ஜீன்ஸும் ரீசேட்டுமாய வந்து நிற்கும் போது, மனோகரிக்கு தலை சுற்றி உலகம் இருண்டது.

இந்தக் கோலத்திலை உன்னைக் கூட்டிக் கொணடு போனால், என்னையும் சேர்த்து பழிப்பினம். நான் வரேலை. ஓட்டோவுக்குக் காசு தாறன். இடத்தைச் சொல்லி போய் இறங்கு, நான் வரேலை.

இதை சொல்லி விட்டு, துக்கத்தின் கனம் தாங்காமல் சுவரை, வெறித்து அழுது தீர்க்கும் போது, அவள் போய் வெகு நேரமாகி விட்டிருந்தது. வாழ்வைக் கொண்டாடுவதற்கு இது தருணமல்ல. இந்தக் கொண்டாட்டங்களூக்கும் அவளுக்கும் வெகு தூரம். அவள் கால் வைத்த இடம் அப்படி. வேண்டாத விருந்தாளியாய், ஒரு வாழ்க்கை அவள் கணவனைப் பொறுத்தவரை அவள் மூன்றாம் மனுஷி தான். உணர்வு பூர்வமான கல்யாண வாழ்க்கையென்பது அவளைப் பொறுத்தவரை உயிரோடு ஒட்டாமல், போன வெற்று சங்கதி தான். இதில் தேய்ந்து கர்கிப் போன இன்னொரு நிழல் புள்ளி அவள் மகள் காரணி. தூரத்திலிருந்து அவளை வேடிக்க பார்க்கத்தான் மனிதர்கள் சரி. அவளைக் கண்டால் கல்லெறிந்து கூடத் துரத்துவார்கள். கடவுளே! என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை.

ஓட்டோ பிடித்து, இடம் சொல்லிக் கல்யாண வீட்டிற்குப் போகத் தெரிந்த அவளை மூளை தடம் புரண்டு போன ஓர் அரை விசரியாகத் தான் அவளை உலகம் கணிக்கும். இந்த எல்லையைத் தாண்டி, அன்பு வழிபாடு அன்பு வழிபாடு செய்து, அவளை ஆராதிக்க. அங்கு, அந்தக் கல்யாண களியாட்டத் திருவிழாவில் எவருமே இல்லாமல் போனது தான் மனவருத்தம் தரக் கூடிய கசப்பான விடயம். அங்கு அவள் இயல்பாக இருந்த சமயத்திலும் குலை நடுங்கி அவளைப் பார்த்துக் கொள்ளுமாறு காந்தன் அந்தப் பெரிய மனிதன் மனோகரியின் அண்ணனிடம் கூறியதாக, பின்னர் அறிந்த, போது மனம் வெறுத்தது காரணியை ஓர் உயிராய்க் கூட மதிப்பளிக்கத் தவறிய இந்த சமூகம் தனி மனிதர் குறித்து ஆன்மீக விழுக்காடு மனவருத்ததோடு மிகவும் நொறுங்கிப் போனாள்.

நல்ல வேளை காரணி அந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்திடம் அகப்பட்டு உயிர் வதைப்பட்டு அடியோடு அழிந்து போகாமல், உயிர் தப்பி வந்ததே பெரிய ஆச்சரிய மலைப்போடு, ஒரு தினம் மனோகரி கொழும்புத் தெருவில் நடை பயின்று வந்து கொண்டிருந்த, போது எதிர்பாராத விதமாக காந்தன் எதிர்ப்பட்டான். அவளைக் கண்டதும் அவன் முகம்கருந் திரை மூட இயல்பாக அவளை எதிர்நோக்க முடியாமல் ஒரு குற்றவாளி முன் நிற்க நேர்ந்த அவமானத்துடன் அவளை எதிர் கொள்ள முடியாமல், திரும்பி ஓர் இருட்டு மூலைக்குள் அவன் சென்று மறைவதையே, ஒரு தீட்டுப் படிந்த கனத்துடன் அவள் பார்வை. அவன் போகும் திசையை நோக்கி வெறித்து அவனுக்கு அப்படியென்ன பெரும் கோபம் அவள் மீது காரணியை கட்டவிழ்த்து விட்டதற்கா, அவள் மீது இத்துணை கோபமும் வெறுப்பும் அவள் மீது?

அவளின் அப்பழுக்கற்ற அன்பு விழுமியத்தின் உச்ச நிலையையே களங்கப்படுத்தி சேறு குளிக்க வைக்கிற மாதிரி அவனின் மிகக் கீழ்த்தரமான அவளின் உண்மை நிலையை உள்ளபடி புரிந்து கொள்ளத் தவறிய அவனின் இந்தப் பாரதூரமான அன்பு விழுக்காட்டிற்கு முன் அவனையே புனிதப்படுத்தும் ஒரு சாந்த தேவதை போல அவள் நிலைமை அவளுக்குத் தெரியும். வழி தவறிப் போகிற அற்ப மனிதர் முன் பளிங்கு போல வாழ்வினை அன்பு வழிபாடு ஒன்றின் மூலமே சிறப்பித்து வாழ்ந்து காட்ட வேண்டிய தனது மிகப் பெரிய தார்மீகக் கடமை ஒன்றின் மூலமே தான் மெளன தவமாற்றி இங்கு நின்று கொண்டிருப்பதாக, அவள் பெருமையுடன் நினைவு கூர்ந்தாள்.

சாந்தனை நிலை நிறுத்தி இதைப் பற்றி தர்க்கித்து சண்டையிடப் போனால், ஒன்றும் மிஞ்சாது தானும் சேறு குளிக்க இது போல் ஒரு தருணமல்ல இப்படி எத்தனையோ வரும் அந்தச் சேறுபடாமல், உயரத்தில் ஏன் ஆகாயத்தில் நின்று கூட கங்கை குளிப்பதே நல்லதென்று அவளுக்குப்பட்டது. அப்படி எண்ண நேர்ந்ததனால் சிறு பொறியாக வந்து அவளைத் தாக்கி விட்டுப்போன அவளின் கவலை கூடப் போன தெரியாமல் வெளிச்சத்தில் மூழ்கி நிற்கும் ஓர் அற்புத கதாநாயகி போல இருட்டிலும் அவள் முகம் ஜொலிக்க நின்றிருந்தாள். காந்தன் சென்று மறைந்த இருள் கூட அவள் கண்கள் முன் வெறும் கனவாகவே மறைந்து போய்விட்டிருந்தது. இந்த மறைதலின் முன் அவளின் முகம் கூட அப்பழுக்கற்று பிரகாசிப்பது போல் ஓங்கி ஒளிர்கின்ற அந்த வெளிச்சத்துக்கு முன்னால் காட்டு மிராண்டி உலகின் கனத்த இருள் கூட கறை பூசிக் கொண்டு விழுந்து கிடப்பதாய் பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *