காதல் தர வந்தேன்…!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 22, 2024
பார்வையிட்டோர்: 3,996 
 

(2001ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம்-7

கணவனோடு காரில் வந்திறங்கிய மீனாவைப் பார்த்து அதிர்ந்தாள் மாலினி. 

“என்ன ஷாக்காயிட்டே? உன் தங்கை மீனாவேதான். இப்படி வா!” என்று தனியே அழைத்துச் சென்று காதில் கிசுகிசுத்தான். “இனிமே அவ இங்கேயே இருக்கட்டும். உள்ளே போ மீனா.. அவளை கூட்டிக்கிட்டு போ மாலு!” என்றான் மாதவன். 

“ஹி….ஹி…. வா வா… மீனா!” கையைப் பற்றி அழைத்துச் சென்றாள்.

“யார் இது?” என்றாள் எதிர்ப்பட்ட மாமியார். 

மீனா அவளையும், பிரம்மாண்டமான அந்த பங்களாவையும் பார்த்து அசந்து போய் விட்டாள். 

‘மாலினி அக்கா… இவ்வளவு பெரிய வீட்டிலா வாழ்கிறாள்?’ மாலினியுடன் அவள் போனில் பேசியிருக்கிறாளேயொழிய அவள் வீட்டிற்கெல்லாம் வந்ததில்லை. மாலினியும் அழைத்ததில்லை.

“என் தங்கை அத்தை!” என்றாள் தயக்கமாய். 

“ஓஹோ!” என்று அலட்சியமாய் பார்த்து விட்டு நகர்ந்தாள்.

“யாரிவ?” சோபாவில்அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த மாமனார் கேட்டார். 

“என் தங்கை….” 

“அப்படியா? நான் யாரோ புதுசா சர்வண்ட் அப்பாயிண்ட் பண்ணிட்டீங்களோன்னு நினைச்சேன்?” என்றவர் மறுபடி பேப்பரில் தலை கவிழ்ந்துக் கொண்டார். 

மாடிப்படி ஏறும்போது தாமோதரன் இறங்கிக் கொண்டிருந்தான். மாதவனின் அண்ணன். வீட்டின் மூத்த மகன். சென்ற வருடம்தான் அவன் மனைவி சுலோச்சனா ஹார்ட் ப்ராப்ளத்தால் இறந்து போனாள். அந்த வீட்டில் அண்ணன் தம்பி மட்டுமே.வேறு பெண் பிள்ளைகள் இல்லை. தாமோதரன் மீனாவை பார்த்ததும் கண்களில் கேள்வி தொக்கி நிற்க மாலினியைப் பார்த்தான்.

மெல்ல சொன்னாள் மாலினி. 

“ம்….ம்..” என்று தலையை ஆட்டியபடி இறங்கிப்போய் விட்டான். மாலினி மீனாவை தன்னறைக்கு அழைத்து வந்து கதவை உட்புறமாய் தாழிட்டு விட்டு தங்கையை கோபமாய் முறைத்துப் பார்த்தாள். “கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு? படிச்சவதானே நீ?” அரண்டு விட்டாள் மீனா. 

“அ…க்…கா!” 

“உன்னை யார் இங்கே வரச்சொன்னது? கூட்டிக்கிட்டு வரணும்னா… உன்னை அப்பா செத்த அன்னைக்கே அழைச்சிருக்க மாட்டேனா? உடம்பு நிறைய நகையும், லாரி நிறைய சீர் செனத்தியுமாகவா அப்பா என்னை இந்த வீட்டுக்கு அனுப்பி வச்சார்? நான் எப்படியோ காலத்தை தள்ளிக்கிட்டிருக்கேன். நீ இப்ப வந்திருக்கே! என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? நீயே பார்த்தே இல்லை… உனக்கு கிடைச்ச வரவேற்பை? ஏண்டி என்னை அசிங்கப்படுத்தறே?”

“…” 

“சரி… சரி… இருந்துக்க… அப்புறம் நான்தான் விரட்டி அடிச்சிட்டேன்னு என் புருஷன் என்னை கோவிச்சுக்கப் போறார். தப்பா நினைச்சுக்காதே மீனா. விருந்தும் மருந்தும் மூணு நாளைக்குன்னு சொல்லுவாங்க. சீக்கிரமா ஒரு வேலைய தேடிக்க…. என்ன?”

‘சீக்கிரமாய் கிளம்பற வழியைப் பார்!’ என்று சொல்லாமல் சொல்வது போலிருந்தது.

அவமானத்தில் உடல் சிலிர்த்தது மீனாவிற்கு. 

அமைதியாய் இருப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? 

ஆனால், மாலினி நிலையையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பணக்கார வீட்டில் கட்டின புடவையுடன் படியேறியவள். என்னால் அவளுக்கு மரியாதைக் குறைவு ஏற்படக்கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து புறப்பட வேண்டும். அதற்கேற்றாற்போல் ஒரு வேலையைத் தேடிக்கொள்ளவேண்டும்.

மீனாவிற்கு ஒரு சின்ன அறையை ஒதுக்கித் தந்தாள். மாலினி. 


இரண்டு நாள் ஓடிப்போனது. 

மீனா, சும்மாயிருக்கவில்லை. மாலினிக்கு எல்லா வேலையிலும் ஒத்தாசையாக இருந்தாள்.

“ஏ… பொண்ணு இப்படி வா!” மாமனார் திரிவேதி அவளை அழைத்தார். “சொல்லுங்க மாமா!” என்று அவரருகே சென்று பவ்யமாய் நின்றாள். “சூடா… ஒரு காபி எடுத்திட்டு வா… ஓடு! சர்க்கரை வேண்டாம். அப்படியே கொஞ்சம் எலுமிச்சம் பழம் பிழிஞ்சி எடுத்திட்டு வா!” விரட்டினார்.

“இதோ வந்திட்டேன்!” என்று அடுத்த இரண்டு நிமிடத்தில் காபியோடு வந்தாள். 

“பரவாயில்லே… சுறுசுறுப்பாத்தான் இருக்கே!” 

“அடியே பொண்ணு… உன் பேரென்ன சொன்னே?” 

“மீனா!” 

“மீனா… இங்கே வா..அப்பப்பா.” வலியால் முகம் சுருக்கினாள் மாமியார் லட்சுமி. 

“என்ன அத்தை பண்ணுது?” 

“கால் வலி தாங்க முடியலே… கொஞ்சம் தைலம் தேய்ச்சு விடறியா?”

“குடுங்க…!” என்று தைலத்தை வாங்கி அவளின் காலடியில் அமர்ந்து கொண்டு காலில் தேய்த்து நீவிவிட்டாள். 

கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்தபோது… போனால் போகட்டும் என்பது போல், போதும் என்றாள். 

“அம்மாடி மீனா… தாமு ரூமை கொஞ்சம் க்ளீன் பண்ணிடு. வேலைக்காரி திடீர்னு லீவு போட்டுட்டா.. ஒரு வாரம் வர மாட்டாளாம்..”

“சரி…!” என்று மாடிக்குப் போனாள். 

அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மாதவன் கோபத்துடன் அம்மாவிடம் வந்தான். 

“அம்மா.. நீ பண்றது உனக்கே நல்லாயிருக்கா? அந்தப் பொண்ணை இப்படி வேலை வாங்கறே?” 

“ஏன் செய்யட்டுமே! அதிலென்ன தப்பு? கஷ்டப்பட்ட குடும்பத்திலேர்ந்து வந்தவதானே? இங்கே வேலை செஞ்சா என்ன? சும்மாவா சோறு போடச் சொல்றே?” 

“அல்பத்தனமா பேசாதேம்மா… அசிங்கமாயிருக்கு. உன்னை எல்லாம் திருத்தவே முடியாது!” என்று கூறி விட்டு போய் விட்டான். 

அந்த வீட்டில் மாதவனுக்கு தனி குணம்தான். இரக்க சுபாவம் கொண்ட நல்லவன். 

மீனாவை நல்லபடியாய் பாதுகாத்து நல்ல இளைஞனாய் பார்த்து அவளுக்கு மணமுடிக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்துடன்தான் இங்கே அழைத்து வந்தான். 

அவளை அம்மா வேலைக்காரி போல் நடத்துவது பிடிக்கவில்லை. மீனா முதன்முறையாய் அந்த அறைக்குச் சென்றாள். இங்குமங்கும் துணிகள் இறைந்து கிடக்க… போர்க்களம் போல் காட்சியளித்தது. 

அறையில் யாருமில்லை. அறையை ஒட்டி இன்னொரு அறை இருந்தது. அட்டாச்டு பாத்ரூமாயிருக்கும் என்று எண்ணியவள் அதை திறந்து பார்க்க ஆர்வப்படாமல் அறையை சுத்தப்படுத்துவதில் தீவிரமானாள். கலைந்து கிடந்த துணிகளை மடித்து வைத்து தரையைப் பெருக்கினாள். 

இங்கொன்றும், அங்கொன்றும் சிகரெட் துண்டுகள் எறியப்பட்டிருந்தன. 

அவசர அவசரமாய் வேலை செய்ததில் இடுப்பில் வியர்வை கொப்புளங்கள் முத்தமிட்டிருந்த அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருந்தன. பாத்ரூமிலிருந்து தலையை துவட்டியபடி வெளிப்பட்ட தாமோதரன் அவளை தன் அறையில் எதிர்பார்க்காத திகைப்பில் அப்படியே நின்று விட்டான். அவன் கண்கள் அவளை அங்குலம் அங்குலமாக நோட்டமிட்டன. 

சந்தனச் சிலை போன்ற உடம்பு! நீளமான அழகிய கண்கள். சிவந்த உதடு. லேசாய் குழி விழுந்த கன்னம். கொஞ்சத் தூண்டும் மோவாய். சாதாரண ஏழை குடும்பத்தில் இப்படியொரு தேவ அழகை காண்பது அரிது.

பெண் உடம்பை தொட்டு நாளான அவன் கைகள் பரபரத்தது.

மிக எதேச்சையாகத்தான் நிமிர்ந்தாள் மீனா. இடுப்பில் டவலுடன் வெற்று மார்போடு தலையை துவட்டியபடி நின்றிருந்த தாமோதரனை பார்த்து திகைத்தாள். 

‘கடவுளே… இவர் உள்ளேதான் இருந்திருக்காரா?’

நல்லவேளை.. எல்லா வேலையும் முடித்து விட்டிருந்தாள். அதனால்… விறுவிறுவென்ற வெளியே சென்று விட்டாள். 

தாமோதரன் அவள் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். 


‘கடவுளே… சிக்கிரம் எனக்கொரு வேலை கிடைக்க அருள் புரி!’ கண் மூடி பிரார்த்தனை செய்து விட்டு படுத்தாள். 

அசதியாக இருந்தது. உடம்பெல்லாம் வலித்தது. இன்று வேலை பளு அதிகம். இரண்டு வேலைக்காரியும் சொல்லி வைத்தாற்போல் லீவு எடுத்துக் கொண்டதால் எல்லா வேலையும் இவளே செய்ய வேண்டியதாயிற்று. 

மாதவன் அறையிலிருந்த தின நாளிதழின் வரி விளம்பரம் பகுதியை மட்டும் எடுத்து வந்திருந்தாள். அவளுக்கு ஒத்துப் போவதுப்போல் நாலைந்து வேலை வாய்ப்புகள் இருந்தன. 

விடிந்ததும் முதல் வேலையாய் அவற்றிற்கு அப்ளிகேஷன் எழுதி அனுப்ப வேண்டும். 

யோசித்துக் கொண்டிருந்தவள், ‘டொக், டொக்’ என தன்னறை கதவு தட்டப்படுவது கேட்டு ஆச்சரியமாய் எழுந்து கதவைத் திறந்தாள். 

திறந்ததுதான் தாமதம்.. அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தது ஒரு உருவம். கணமும் தாமதியாது அவளை இறுக அணைத்து படுக்கையில் சாய்த்தது. 

அத்தியாயம்-8

அந்த பஸ் மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. 

குளிர் காற்று சிலிர்ப்புடன் ஓடி வந்து ஜன்னலோரம் அமர்ந்திருந்த மீனாவை வெடவெடக்க செய்தது. 

இருபதாவது முறையாக அந்த பேப்பரை எடுத்துப் படித்தாள். 

‘பாரிஸ நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வயதான அம்மாவை வீட்டோடு தங்கி கவனித்துக் கொள்ளஆதரவற்ற விதவைப் பெண் தேவை!’ என்று முகவரியும், போன் நம்பரும் தரப்பட்டிருந்தது. – மீனா போனில் தொடர்பு கொண்டாள். 

நேரில் வரச் சொல்லி ஒரு பெண்ணின் குரல் அழைத்தது. இதோ புறப்பட்டு விட்டாள். 

முந்தின நாள் நடந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் உடம்பு தூக்கி வாரிப் போட்டது. 

தாமோதரன் திடீரென்று தன்னறைக்குள் நுழைந்து அப்படி மூர்க்கத்தனமாய் நடந்து கொள்வான் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. 

காட்டுப் புலியிடம் சிக்கிய மானாய் அவள் தப்பிக்க துள்ளினாள், துடித்தாள். ஆஜானுபாகுவாய் இருந்த தாமோதரனிடமிருந்து அவளால் விடுவித்துக் கொள்ள முடியவில்லை. 

நல்லவேளை. கடவுளாய் பார்த்து அனுப்பியது போல மாதவன் அங்கு வந்தான். அவன் தாமதமாய் வீடு திரும்பியிருந்தான். உறக்கம் வராமல் பால்கனியில் நடந்தவன் அண்ணன் மீனாவின் அறைக்குள் நுழைவதைப் பார்த்து விட்டுத்தான் ஓடி வந்தான். 

தம்பியை அங்கு எதிர்பார்க்காத தாமோதரன் விக்கித்துப் போய் உடனடியாக வெளியேறினான். 

மீனா கூனிக் குறுகி அழுதாள். “ஸாரிம்மா… வெரி ஸாரி… அழாதே மீனா! எல்லாம் காலையிலே பேசிக்கலாம். இப்ப படுத்துத் தூங்கு. மனசில ஒண்ணும் வச்சுக்காதேம்மா!” குற்ற உணர்வுடன் மன்னிப்பு கேட்டு விட்டுப் போனான் மாதவன். 

உடனடியாக மறந்து விடக்கூடிய செயலா இது? கடவுளே… எனக்கு எங்குமே பாதுகாப்பில்லையா? ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறாயே! இனி இங்கு ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது. விடிந்ததும் கிளம்பி விட வேண்டியதுதான். இனி, இந்த ஊரே நமக்கு வேண்டாம்! என்று முடிவு பண்ணியவள், யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி விட்டாள். 

பேப்பரில் கண்ட விளம்பரம் அவளை ஈர்த்தது. தனக்கு எல்லாவிதத்திலும் இந்த இடம்தான் பாதுகாப்பானதாய் இருக்கும் என்று தோன்றியது. புறப்பட்டு விட்டாள். 


மேட்டுப்பாளையம் வந்திறங்கி அங்கிருந்து குன்னூர் சென்றாள். தினகர் எஸ்டேட்டை கண்டுபிடிப்பதில் அவளுக்கு அவ்வளவு சிரமம் ஏற்படவில்லை. 

மீனா முதல் காரியமாய் நெற்றியிலிருந்த பொட்டை எடுத்து வீசியெறிந்தாள். 

எஸ்டேட்டை ஒட்டி பெரிய பங்களா இருந்தது. வாட்ச்மேனிடம் விபரம் சொன்னதும் உள்ளே சென்று யாரிடமோ கேட்டு விட்டு வெளியில் வந்தான். 

“உங்களை வரச் சொன்னாங்க… நீங்க உள்ளே போங்கம்மா!” என்று அனுப்பி வைத்தான். 

ஒருவித கிலியுடன்தான் உள்ளே நுழைந்தாள். கேட்டைத் தாண்டி விசாலமான புல்தரை நீண்டுக் கொண்டே போனது. 

பழங்காலத்தில் கட்டப்பட்ட பங்களா! அங்கங்கு இக்கால நாகரிகத்திற் சேற்ப ஆல்டர் செய்யப்பட்டிருந்தது. பழமையும், புதுமையும் சேர்ந்த அந்த பங்களாவில் தெய்வீகம் குடி கொண்டிருந்தது. 

பங்களாவின் முன்புறம் ஒரு அறை தடுக்கப்பட்டிருந்தது. அங்கு நடுத்தர வயதுள்ள பெண்ணொருத்தி நின்றிருந்தாள். 

“நீங்க…” 

“என் பேர் மீனா… சென்னையிலிருந்து வர்றேன்!”

“வாங்கம்மா! உங்களுக்காகத்தான் மேடம் காத்திருக்காங்க… உள்ளே போங்க!” என்று அந்த அறைக் கதவைத் திறந்து அனுப்பினாள். 

அது அலுவலக அறை போன்ற அம்சங்களுடன் இருந்தது. உள்ளே நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் கண்ணாடி கண்களால் இவளை ஏறிட்டார். 

“வணக்கம்!” 

“வணக்கம்…. உட்காருங்க!” 

அமர்ந்தாள். 

“நீங்கதான் மிஸஸ் மீனாவா?” 

“ஆமாங்க!” 

“உங்க ஹஸ்பெண்ட் எப்ப இறந்து போனார்?”

“போன வருஷம்” 

“ஐ ஸீ…. குழந்தைங்க?” 

“இ…. இல்லே…” 

“ரொம்ப சின்னப் பொண்ணா இருக்கியேம்மா! தைரியமா ஊரை விட்டு வேற வந்திருக்கே! உன்னோட ரிலேஷன்ஸ் தடுக்கலியா?”

“எ… எனக்கு யாருமில்லேங்க.. போன மாசம் என் அப்பாவும் தவறிட்டார்.” 

“ச்சொ…. ச்சொ!” என்று கண்ணாடியை கழற்றி பரிதாபப்பட்டாள் புனிதா என்கிற அந்தப் பெண்மணி. 

பொய் சொல்கிறோமே என்கிற பயம் இவளுக்கு. 

“என் பேர் புனிதா! இந்த பங்களாவோட நிர்வாகத்தை நான்தான். பார்த்துக்கறேன்… குணவதி அம்மாவை கவனிக்க பொறுப்பான நல்ல பொண்ணாப் பார்த்து நியமிக்கிற பொறுப்பும் என்கிட்டேதான் ஒப்படைச்சிருக்காங்க. எங்க எம்.டி. ஐ.மீன்… குணவதி அம்மாவோட ஒரே மகன்… இப்ப வெளியூர் போயிருக்கார். ரெண்டு மூணு நாள்ல வந்திடுவார். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நீ முதல்ல குணவதியம்மாவை சந்திக்கணும். அப்புறம்… உனக்கு திருப்தி என்றால்… இந்த வேலை உனக்குத்தான்!” 

“எனக்கு இப்பவே முழு திருப்திதான். நான் இந்த வேலைய முழு மனசோட ஏத்துக்கறேன்!” 

புனிதா சிரித்தாள். 

“சரி…. உனக்கு முழு நேரமும் இங்கேதான் வேலை. அம்மாவை அருகேயிருந்து கவனித்துக் கொள்ளவேண்டும். அம்மாவோட உடம்பை சுத்தமா வச்சிருக்கணும். அம்மாவோட மனசு கோணாம நடந்துக்கணும். மாசம் ரெண்டாயிரம் சம்பளம். இங்கேயே தங்கிக்கலாம். சாப்பாடும் இங்கேயே… மனசுல கொஞ்சம் கூட அசூயை இல்லாம அம்மாவை பராமரிக்கணும்..”

“அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாங்க. நான் சிறு வயதிலேயே தாயை இழந்தவள். அதனால என் தாயை மாதிரியே பார்த்துக்குவேன்.”

“எனக்கும் அந்த நம்பிக்கையிருக்கு. என் கூட வாம்மா!” என்று அவளை அழைத்துச் சென்றாள் புனிதா. 

இடது கோடியில் விசாலமாய் இருந்தது அந்த அறை. இரட்டைக் கட்டிலில் கிழிந்த நாராய் படுத்திருந்தாள் குணவதி அம்மாள். பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அந்த அம்மாவால் பேச முடியவில்லை. தலை வெள்ளை வெளோர் என்று நரைத்திருந்தாலும் முகத்தில் களையும், கனிவும் இருந்தது. 

இவர்களை தலை சாய்த்துப் பார்த்தாள். 

“அம்மா… இது மீனா! உங்களை இனி இவங்கதான் கவனிச்சுக்கப் போறாங்க”

குணவதிக்கு ஏனோ மீனாவைப் பார்த்ததும் பிடித்துப் போய்விட கண்களால் அருகே அழைத்தாள். 

மீனா… அவளருகே குனிந்தாள். 

“அம்மா… கவலைப்படாதீங்க… நீங்க ரொம்ப சீக்கிரமே குணமாகி எழுந்து நடமாடிடுவீங்கம்மா! அந்த நம்பிக்கை எனக்கிருக்கு!” என்றாள் அன்பாக மீனா. 

குணவதி திருப்தியுடன் புனிதாவைப் பார்த்தாள். 


மீனா ஒரே நாளில் குணவதியோடு ஒட்டிக் கொண்டு விட்டாள். இதற்கு முன் அவளை கவனித்துக் கொண்டிருந்த லீலாவதி என்கிற பெண்… குணவதியால் பேச முடியாது என்ற காரணத்தை சாதகமாக்கிக் கொண்டு அவளை சரிவர பராமரிக்காமல், பால் பழமெல்லாம் அவளே சாப்பிட்டு தன்னை மெருகேற்றிக் கொண்டாளேத் தவிர நோயாளியை கவனிக்கவில்லை. அதுமட்டுமின்றி.. அவளெங்கே குணமாகி வந்து பேசப் போகிறாள் என்ற தைரியத்தில் குணவதியின் கண்ணெதிரிலேயே அந்த வீட்டு பொருட்களை திருடி எடுத்துக் கொண்டு செல்வாள். பல நாள் திருடி ஒருநாள் அகப்பட மாட்டாளா என்ன? அவள் அம்மாவின் எதிரே கால் மேல் கால் போட்டுக் கொண்டு பாலை அருந்திக் கொண்டிருந்ததை எதேச்சையாக அம்மாவைப் பார்க்க வந்த தினகர் பார்த்து விட்டான். அது போதாதா? அன்றே லீலாவதியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டான். 

மீனா குணவதியின் அறையிலேயே கட்டிலுக்கு அருகில் படுத்துக் கொண்டாள். காலை, மாலை இரு வேளையும் உடம்பை வெந்நீரால் துடைத்து உடை மாற்றினாள். இயற்கை கடன்க்ளை முகம் சுளிக்காமல் சுத்தம் செய்தாள். டாக்டர் தந்திருந்த மருந்து, மாத்திரைகளை வேளா வேளைக்கு உட்கொள்ள வைத்தாள். சாப்பிட பிடிக்காமல் முகம் சுளித்த வளை அன்பாக வற்புறுத்தி ஊட்டி விட்டாள். அது மட்டுமில்லாது அவளருகே அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்தாள். இரண்டு நாளைக் கொருமுறை பெட் கவர் முதற்கொண்டு, கதவு, ஜன்னல் திரைச் சீலைகளை எல்லாம் மாற்றுவாள். 

நோயாளிக்கு சுத்தமும், புத்துணர்ச்சியும் அவசியம் தேவை. ஒரே மாதிரி யான போரடிக்கக்கூடிய, விஷயங்களை பார்க்க நேரிடும்போது வெறுப்புதான் மேலோங்கும். அதுவும் குணவதி போன்ற கை, காலை அசைக்க முடியாத நோயாளிகளுக்கு இம்மாதிரியான விஷயங்கள் வெகுவாகவே தாக்கத்தை ஏற்படுத்தும். மன ரீதியாக பாதிக்கப்படும் விஷயங்கள் பற்றி மீனா அறிந்திருந்ததால்… அவள் ஒவ்வொன்றையும் கவனமுடன் செய்தாள். 

சுவாமி பாடல்களை மெல்லிய சப்தத்தில் டேப் ரிக்கார்டரில் ஓட விடுவாள். குணவதி பார்வையில் படுமாறு அழகான கோகுல கிருஷ்ணன் சிலையை வைத்து மலர்களால் அலங்கரித்து பூஜித்தாள். 

அவளின் இந்த அணுகுமுறை, சின்னச் சின்ன விஷயங்களையும் நேர்த்தியாக செய்யும் திறமை குணவதிக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ‘மகாலக்ஷ்மி மாதிரியிருக்கிறாள். இருபது வயதுக் கூட நிரம்பியிருக்காது போலிருக்கிறாள். அதற்குள் கணவனை இழந்து விட்டிருக்கிறாள். பாவம்! தினகரிடம் சொல்லி இவளுக்குத் தேவையான உதவிகளை செய்யச்சொல்ல வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டாள். 

குணவதி தூங்கிய பிறகு மீனா தோட்டத்திற்கு செல்வது வழக்கம். அழகழகான மலர்களால் சூழ்ந்திருந்த வண்ண வண்ண மலர்களையும், அதை தாங்கி, நின்றிருந்த மரம், செடி, கொடிகளையும் உரசியபடி செல்லும் மேகப் பொதிகளின் ஜில்லிப்பை தொட்டு ரசிப்பதென்பது அவளுக்கு மிக பிடித்தமான ஒன்று. போராட்டம், போராட்டம் என்று வாழ்க்கையில் ரண களத்தை மட்டுமே சந்தித்துக்கொண்டிருந்தவளுக்கு இந்த ஊரும், இயற்கை அழகும் அவளுக்கு அரு மருந்தாய் இருந்தது. பாதுகாப்பான இடத்தில், தாயின் மடியில் படுத்திருக்கும் நிம்மதி இப்போது அவளிடம். 

பூத்து உதிர்ந்து வீணாய் மலர்கள் சருகாகிப் போவதில் அவளுக்கு உடன்பாடில்லை. அதனால் அவற்றை தொடுத்து அழகிய மாலையாக்கி தினசரி கோகுல கிருஷ்ணனுக்கு அணிவிப்பாள். 

இரண்டு, மூன்று நாட்களில் வருவதாய் சொல்லிவிட்டு சென்றவன் ஒரு வாரம் கழித்துதான் வந்தான். 

வந்தவன் நேரே அம்மாவின் அறைக்குத்தான் சென்றான். 

அறைக்குள் சென்றவன் ஸ்தம்பித்து நின்றான். சுத்தமாய் மெல்லிய நறுமணம் வீச… மூடிய அறைக்குள் சூரிய ஒளி தங்கியிருப்பதுபோல் பளீரென்றிருந்த அறையும், அம்மா முகத்தில் கண்ட தெளிவும் அவனுக்குள் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் உற்பத்தி செய்தது. 

“அம்மா…. நல்லாயிருக்கியாம்மா…?” அம்மாவின் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டுஅவள் கைகளைப் பற்றிக் கொண்டான். மகனைப் பார்த்து புன்னகைத்தான் குணவதி. 

புனிதா அங்கு வந்தாள். 

“சார்… அம்மாவை கவனிச்சுக்க புதுசா ஒரு லேடிய போட்டிருக்கோம். அவங்கதான் இப்ப கவனிச்சுக்கறாங்க. அம்மாவோட உடம்புல ஓரளவு முன்னேற்றம் தெரியுதுன்னு டாக்டர் கூட சொன்னார் சார்!” 

“ஐ.. ஸீ…. அம்மாவை கவனிச்சுக்கிற அந்த லேடிய வரச் சொல்லுங்க…” என்றான் ஆச்சரியமாய். “இதோ இவங்கதான்!” வந்துக் கொண்டிருந்த மீனாவை காண்பித்தாள். அவனைப் பார்த்த மீனாவும், அவளைப் பார்த்த தினகரும ஒரு சேர அதிர்ந்தனர்.

– தொடரும்..

– காதல் தர வந்தேன்…! (நாவல்), ஏப்ரல் 2001, ரமணிசந்திரன் மாத இதழ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *