கொள் எனும் சொல்ல்லும்மா

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 9,461 
 

– ஏ கிறுக்கு. அப்பாதாம்மா பேசறேன் .

– வீட்டுக்குள்ளயா இருக்க? வாசலுக்கு வந்து பேசு.

– எனக்கு நல்லா கேக்குது.

– ம்… நல்லாருக்கே நல்லாருக்கேம்மா… பேரப்புள்ளீக சொகந்தான?

– ம். இருக்கா. அவளுக்கென்ன?

– நா வெளீல இருக்கேம்மா…. அம்மா வீட்லதே இருப்பா.

– ஆமா… சலூன் கடைல பேப்பர் பாக்க வந்துருக்கேன்.

– ஆமாமா, வேல நாலுமணிக்கு முடிஞ்சிருதுல்ல. வீட்டுக்குப் போய்ட்டு வந்துட்டேன். சரி, நீங்கல்லாம் நல்லாருக்கீங்கள்ல?

– மருமகெ? சரி சரி

– அப்பிடியெல்லாம் இல்ல தனம். மாசக் கடேசி. அப்பா, சேப்புல பைசா கெடையாது. டெய்லி வீட்ல இருவது ரூவா குடுத்துவிடுவா. அத வச்சு சமாளிக்கணும். அதனால போனுக்கு காசு போட தோணல. சம்பளம் வாங்குன பெறகுதான் ஏத்தணும். அப்பிடி இருக்கப்ப நா எப்படி ஒங்கிட்டப் பேச?.

– அதெல்லாம் ஒருவயசுக்கு மேல யாரயும் தொந்தரவு பண்ணக்கூடாதும்மா. அவுங்களுக்கும் செலவு இருக்கும்ல?.

– யே… யே… நாயி… ங்ஙொம்மா காதுல விழுந்தாக்க என்னியக் கொன்னு போடுவா. மருமகெங்கிட்டக்க காப்பித் தண்ணி வாங்கிச் சாப்ட்டதுக்கே அன்னிக்கிப் பூரா எனக்கு வட்டில சோத்தப் போடமாட்டேனுட்டா. தெரியுமா? போனுக்கு நீ காசு ஏத்திவிட்டேன்னு வையி, அம்புட்டுத்தே என்னிய கழுமரத்தில ஏத்துனாலும் ஏத்தி விட்ருவா
கொள் எனும் சொல்ல்லும்மா
– அதனால என்னாம்மா, ந்தா ஆவுகம் வச்சு நீ கூப்புடுறீல்ல. இதுபோல ஆராருக்கு அப்பா ஆவுகம் வருதோ, அவுக கூப்புடட்டும்

– முட்டாத்தனமாப் பேசக்கூடாது. நா கூப்புடாத நாள் இருக்கா சொல்லு. என்னிக்கி நிய்யா கூப்புட்ட? . நா உன்னைய இப்பிடிக் கேக்கறதா . இன்னிக்கி நெலமய வச்சுமட்டும் பேசக்கூடாது.

– சரி சரி விடு.இனிமேல் நானே ஒன்னிய நெதமும் கூப்புடுவேன். சரிதான. கந்துவட்டிக்கி வாங்கிக்கூட செல்லுக்கு காஸ் போட்றமாட்டேனா. பெத்த பிள்ளைக்கு மேலயா மத்தது. .

– ஒந்தம்பி பேசுனானா?

– அட அவெம் மகெ காதுகுத்துக்கு பத்திரிக்க வக்கெ வந்தது தெரியும்மா? அதுக்குப் பெறவு எடைல பேசுனானா?

– என்னா பேசுனானான்னு என்னிய எதிர்க்கேள்வி கேக்க? விசேசத்துக்கு முன் செலவுக்கு வேணும்னு ரூவா வாங்கிட்டு வந்திருக்கான்ல, அப்ப மட்டும் அக்காவும் அக்கா புருசனும் ஆவுகம் இருக்கு. மத்த நேரம் மறதிவந்துடுது.

– அது தப்பும்மா, எம்புட்டுத்தேங் கஷ்டம்னாலும் கொண்டாங் கொடுத்தான் எடத்தில கை நீட்டக்கூடாது. களவாணிப்பய ஒங்கிட்ட பணம் வாங்கிகிட்டு வந்தப்பறம்ல வீட்ல சொல்றான். முன்கூட்டியே தெரிஞ்சிருந்தா விட்ருக்க மாட்டேன்.

– நல்லது தனம். நீயும் மருமகனும் அப்பிடி நெனைக்கிறது எனக்குப் பெருமையா இருக்கு. தங்கம் போல இப்பிடி ஒரு மருமகெ வாய்க்கணுமே? நானும் ஒங்கம்மாவும் முஞ்செம்மத்துல எதோ ஒரு புண்ணியஞ் செஞ்சிருக்கம்போல. எனக்கென்னா பயம்னா இத அந்தப் பய காப்பாத்தணுமேன்னுதான்.

காப்பாத்தீர்வான்.

– அது சரித்தான் உரிமை இருக்கப் போய்த்தான கேக்கறான். நீங்களும் குடுத்துருக்கீங்க. இருவதாயிரம் குடுத்தீகளாம்ல. ங்ஙொம்மாதே பொலப்பமா பொலம்பிக்கிட்டிருந்தா. “”ஏண்டா ஒம் மாமியா விட்ல வாங்க வேண்டிதான?”ன்னு ஒந்தம்பிய சத்தம்போட்டா.

– ஆமா மொத உரிம அவுகதானம்மா .

– ரைட்டு தனம். எனக்கு சந்தோசம். ஒடம் பொறந்ததுக இப்பிடித்தா விட்டுக்குடுக்காம இருக்கணும்.

– யே கிறுக்கு.. நா என்னாத்துக்கு அழுவுறேன். பசார்ல நிக்கிறன்ல..கார் சத்தம் பஸ் சத்தத்துல கொரல் மாறிக் கேட்ருக்கும் .

– ஆமா, அனேகமா பத்திரிக்க வச்சு முடிச்சிட்டான் போல. சாமான்செட்டு வாங்க அலஞ்சுகிட்டிருக்கான். அது சரி நீ என்னைக்கி வார?

– சரிம்மா. காதுகுத்துக்கு அத்தகாரம்மா செய்யவேண்டிய தட்டு வகைய விட்டுக் குடுக்காம செஞ்சிரு. அப்பறம்… நா ஒண்ணு சொல்லணும்.

– கரெக்கட்டு. கரெக்கட்டு. வழமப்படி வா. புள்ளகுட்டி இல்லாத சொத்தா . .அதுதான் எனக்கும் பிடிக்கும்.

– நான் சொல்லவாரது என்னன்னா, மொய்ப்பணம் வக்கிம்போது, கைமாத்து குடுத்திருக்கீல்ல . இருவது ரூவா, அதயும் கணக்குல வச்சு, கூடுதலா ஆயிரத்து ஒண்ணு சேத்துப்போட்டு இருவத்தோராயிரத்து ஒண்ணுன்னு எழுதீரு. கடலையத் தின்னமா கையக் கழுவுனமான்னு போயிரும்ல.

– ஆரு என்னா சொல்லுவா? உள்ளதுதான?

– இதுல என்ன அகமானம்? அப்பா சொன்னா அதில ஒரு அர்த்தம் இருக்கும்டா.

ஆமா, தும்பவிட்டு வாலப் பிடிப்பானேன் . மனுசப்பய மனசுக்கு ரூபங் கெடையாது தனம். எப்பிடி வேணும்னாலும் மாறும் தெரிமா ?

– வந்திட்டாரா? குடு குடு. மருமகன்ட்டப் பேசி நாளாச்சி. அய்யா . . சாப்டேங்யா . நல்லாருக்கம்ங்யா . எல்லாம் ஒங்க புண்ணியத்ல சொகந்தே. . எங்க . காலைல எந்திரிச்சு வேலைக்குக் கௌம்பறமா, சாய்ங்காலமான ரெண்டுவா கஞ்சியக் குடிக்க, படுக்கன்னு பொழுது ஓடிப்போகுதுங்யா . .

– சின்னதுக பூராம் கண்ணு ரெப்பையிலயே நிக்கிதுக. வந்துபாக்க ஏலல. அதேன் விசேசத்துக்கு வாரீகள்ல… முடிஞ்சா ரெண்டு நாளிக்கி முன்னக் கூட்டியே வந்துருங்க. கெழவி தவியா தவிக்கிறா.

– வாங்க, வாங்க.

– அதத்தேன்யா தனத்துகிட்ட சொல்லிட்ருந்தே.

– வாணம்ங்யா.

– மாமா நான் சொல்றேன்ல

– சவைல யாருயா நாக்குமேல பல்லுப்போட்டு பேச இருக்காங்கெ?

– நீங்க சொல்றது வழம.

– கரெக்ட்டு.

– பெருமதேன். சந்தோசம் சந்தோசம். பூரிப்பா இருக்குய்யா. உண்மையிலேயே இங்க பாருங்க கையில ரோமக்கால் நட்டுக்கிட்டு நிக்கிதுய்யா. ஆனாலும் மாமாநாஞ் சொல்றத நீங்க ஒருவார்த்த கேக்கணும். வழம வேற. நடமொற வேற.

– ஆமா, முக்காலுஞ் சத்தியம்.. நா அனுபவத்தில சொல்றேன். எல்லாருமே நல்லவங்கதான், ஆனா சுத்தியிருக்க சூழ்நெலம எப்பேர்க்கெத்த மனுசனையும் மாத்தீரும்யா. மச்சா, மச்சின ஒறவு எப்பவும் நெலச்சி நிக்கணும்னா சொல்றதக் கேளுங்க.

– நா பக்கத்தில தான நிப்பே. ஆடுவாங்க அமெரிக்காவுக்கா போகப்போறேன். ஏன்னா விசேசம் முடிஞ்சி வந்த மொய்ப் பணத்த எண்ணி, வரவு செலவு கணக்கு முடிச்சு, அதுக்கப்பறமா இந்தாக்கா ஒம்பணம்னு நீட்றப்ப ஒருநாப் பொழுது ஓடியடஞ்சிரும். அதுவரைக்கும் நீங்க காத்துக் கெடக்கணும். எடைல கேக்கவும் முடியாது. அது ஒண்ணாச்சா, ரெண்டாவது வசூல்லயோ, வரவு செலவுலயோ ஒரு மேடுபள்ளம், கெடுமுடி ஆச்சுன்னு வையிங்க. ஆகாது. கூட்டத்தில ஏதோ நல்லது பொல்லது வந்துச்சுனா, அக்கா பணம்தான நாளப் பின்ன சொல்லிக்கலாம்னு தோணும். சீக்கலு நீடிச்சிரும்.

– சரிங்யா சரிங்யா நேர்ல பேசிக்கலாம். வாங்க, வாங்க வச்சிடுறேன்.

செல்போனின் சூடு உள்ளங்கையைச் சுட்டபோது மனசில் விலகியிருந்த சூட்டையும் சேர்த்து உணர்ந்தார், வாட்ச்மேன் பெருமாள்.

“”பரவால்லங்யா ரேடியோ நாடகம் கேட்ட மாதரி ஆய்ப் போச்சு” சலூன் கடை காளிதாஸ் சிரித்துக் கொண்டே சொன்னான்.

“”காளி இன்னிய நெலம அப்பிடி. தருமர்கூட தண்ணியப் போட்டார்னா தட்டழிஞ்சு போற காலமப்பா இது . . நமக்கு பட்டத சொல்லி வப்பம். குடும்பம் முக்கியமில்லியா?” சொல்லிக் கொண்டே அடுத்தொரு நாளிதழை விரித்தார் படிக்க.

– ஏப்ரல் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *