அது ஒரு கனாக் காலம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 19, 2023
பார்வையிட்டோர்: 5,386 
 

ப்ரியமானவளே,

உன் மூச்சுக்காற்றை சுவாசித்து, உன் புன்னகையை உண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நீ என்னைக் கடந்து போகையில் காற்றில் அலையும் பாலிதீன் காகிதம் போல் என் மனசு நடுங்கியதை நீ அறிவாய்.

ஞாபகமிருக்கிறதா அன்பே.

அன்றொரு நாள் கடற்கரை மணலில் நாம் இருவரும் கை கோர்த்து சேர்ந்து நடந்த போது நீ சின்னஞ்சிறுமி போல் ஓடி ஒடி கிளிஞ்சல்கள் பொறுக்கினாய்.

மேற்குச் சூரியன் கடலில் இறங்கிய செவ்வானப் பிண்ணனியில் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டோம்.

சூரியன் மறைந்த அந்தச் சாயங்கால நேர‌த்தில் ஒரு வசீகர நிலா போல் நீ இருந்தாய்.

பின்னொரு மாலை என் பிறந்த நாளுக்காய் நீ அடம் பிடித்து வாங்கிக் கொடுத்த உனக்குப் பிடித்த அடர் நீல நிற டீசர்ட்டை விடாப் பிடியாய் உடுத்தி உடுத்தி அதன் நிறம் மங்கிப் போனது .

எனினும் அதுவே என் மனசுக்குப் பிடித்த உடையாகும். அதுவே நம் காதல் தேசத்தின் தேச உடையாக நான் நினைக்கிறேன்.

என் பிரியத்திற்குரிய என் அம்மா இறந்த அன்று அத்தனை உறவினர்கள் முன்னிலையில் நான் கதறி உடைந்த போது என்னை அரவணைத்து நானும் உன் தாய் தான் என்று தேற்றி அழுது கதறினாய்.

உன் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அந்த அநாதை குழந்தைகள் விடுதிக்குப் போய் சப்பாடு வாங்கி உன் கையால் பரிமாறி அந்தக் குழந்தைகளுக்கு ஒரு தாயாய் பரிவுடன் பேசி அவர்களை மலர வைத்து வருவாய்.

பார்க்கும் ஆட்கள் அவ்வளவு பேரிடமும் கொஞ்சமும் சங்கடப் படாமல் அந்த அநாதை விடுதிக்கு நன்கொடை வசூலிப்பாய்.

எத்தனையோ பேர் முகம் சுளித்து மறுத்தாலும் உன் புன்னகை மாறாமல் இருப்பாய்.

அன்று நடந்ததை நினைத்தால் எனக்கு இன்றும் மனது கஷ்டமாகத்தானிருக்கிறது.

மிகச் சாதாரணமாகப் பேச ஆரம்பித்து நம் பேச்சு நம் திருமணம் பக்கம் திரும்பிய போது நான் கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டது உண்மைதான்.

அந்த மன நெகிழ்வான தருணத்தில் கடல் அலைகள் நம் கால்களை உரசிக் கொண்டிருந்த‌ போது நான் என் சமநிலை இழந்தேன்.

காதல் மீதூற நான் உன்னை இறுக்கி முத்தமிட முனைந்தது தவறுதான். அதற்கப்புறம் நான் அந்த நிமிடத்தை, அந்தத் தவறை நினைத்து, நினைத்து என்னுள் அழுது என்னை நானே சபித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆம். அதன் பின் எல்லாம் ஒரு துர்க்கனவு போல் நடந்தேறியது.

அதன் பின் என்னை விட்டு ஒதுங்கிப் போனாய்.

நான் எவ்வளவோ மன்றாடியும் உன் மனம் இரங்கவேயில்லை.

ஒரு பூ மாதிரி மிருதுவான மனம் கொண்ட உன்னால் எப்படி ஒரு பாறையைப் போல் உன்னை இறுக்கிக் கொள்ளமுடிந்தது அன்பே.

நான் உன்னை உண்மையாக நேசித்தேன் என்பது உனக்குத் தெரியும்.

நீயும் அப்படியே நேசித்தாய் என்பது நானறிவேன்.

உணர்வு மிகுந்த நேரத்தில் என் கட்டுப்பாட்டை இழந்ததுக்கு எவ்வளவு பெரிய தண்டனை?

என்னை நிராகரித்தாய். என் காதலின் மீது சத்தியம் வாங்கி என்னைப் பிரிந்து சென்றாய்.

பின் என்னை உயிருடன் கொன்று பிறிதொருவனை மணந்து தூர தேசம் சென்றாய்.

இதை எவரிடம் சொன்னாலும் ஒரு கட்டுக்கதை போல் தான் நினைக்கிறார்கள்.

நீ இப்பொழுது எங்கிருக்கிறாய் என்றும் தெரியாது.

எவரின் மனைவி என்றும் தெரியாது.

ஆனாலும் நான் இன்னும் சாகாமல் வாழ்ந்து கொண்டுதான் இிருக்கிறேன். உனக்குப் பின் எவரும் என் வாழ்வில் இது வரை குறுக்கிடவில்லை.

நான் எப்போதோ படித்த கவிதையொன்றின் ஞாபகம் வருகிறது.

நீ
யாருக்கு
வேண்டுமானாலும்
மகளாய் இரு.
யாருக்கு
வேண்டுமானாலும்
மனைவியாய் இரு.
யாருக்கு
வேண்டுமானாலும்
தாயாய் இரு.
மூழ்கி கொண்டிருக்கும்
என்னை
கைதூக்கிவிடேன்.

அன்பே இந்தக் கடிதம் உன் கையில் கிடைக்கலாம் .

கிடைக்காம‌லும் போகலாம்.

ஆனால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதியிருக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,

நான்.

கடிதத்தைப் படித்த ஸோரா சிரித்தாள்.

“என்ன பேத்தல் இது வ்யாபக்?”

வ்யாபக் முகம் இறுகியது.

“ஏய்.. பேத்தலா? இது ஒரு காதல் கிளாஸிக்.”

”யார் யாருக்கு எழுதின லெட்டர் இது? உனக்கு எப்படிக் கிடைத்தது. எப்படி இதை உன்கிட்ட வச்சிருக்கே?”

“ஸ்டாப்..ஸ்டாப்..ஸோரா..ஒரே சென்டென்ஸ்ல இத்தனைக் கேள்விக் கேட்டா நா எப்படி பதில் சொல்றது?”

“சரி.. ஒண்ணு ஒண்ணா சொல்லு.”

“இது என்னோட பெரிய தாத்தா அவரோட காதலிக்கு எழுதின லெட்டர்.”

“பாட்டிக்கா?”

“ஏய்.. லூஸு.. அவர் தான் கல்யாணமே பண்ணிக்கலேயே.”

“கல்யாணம்?”

“அதெல்லாம் இப்ப புழக்கத்துல இல்லாத வார்த்தை. இது அவர விட்டுட்டுப் போன காதலிக்கு எழுதினது. . என் அப்பா சாவறப்ப கொடுத்தது…. ரகசிய இடத்துல வச்சிருந்தேன்.”

”இப்ப எதுக்கு இங்க எடுத்து வந்தே ”

“திடீர்னு உன் மேல எனக்குக் காதல் வந்திடுச்சு..”

ஹை.. நம்ப உலகத்துல காதல் நாட் அலவ்ட் பாஸ்.”

“தெரியும்.”

“அப்பறம் எதுக்கு?”

“நான் நம்ப அரசாங்கத்த எதுத்துப் போராடப் போறேன்.”

“அட.. ரெண்டு பேரும் ஒரு வருஷமா அப்ளை பண்ணி காத்திருந்து இன்னைக்கு அரசு பரிமிட் பண்ணதுல நாம் மீட் பண்ணிருக்கோம்.. எதுக்கு?”

“காதல் பண்ண..”

சிரித்தாள்.

“இல்ல.. செக்ஸ்.. அதுக்கும் மட்டும் தான்.. நம் உலகில் காதல்,கண்ணீருக்கெல்லாம் இடமில்லே… தெரியுமா.”

“தெரியும்.. அதான்.. நாம என்ன மனுஷங்களா…மிருகமா?”

“ஹலோ..ஸ்டாப்.. மிருகங்களை எல்லாம் அழிச்சாச்சு தெரியும்ல..’

”மிருகங்கள மட்டுமா? எல்லா வயசானவங்களையும் அழித்தொழிப்புத் திட்டத்தின் கீழ் கொன்னுட்டாங்களே.. என் அப்பா, உன் அம்மா எல்லாரும் தான்.”

“இதுக்கெல்லாம் யார் காரணம்?

மெளனமாயிருந்தான்

“ நம்பளோட முன்னோர்கள் தான்.”

“அவங்க என்ன பண்ணினாங்க?”

“என்ன பண்ணல?..எவ்ளோ அழிவு. ஹ்யூமன் மேட் டெஸ்ட்ரக்க்ஷன் .”

சிரித்தான்.

“தேர்ட் வேர்ல்ட் வார் நடந்ததா என்ன? இல்லியே. அதைவிட பேரழிவு எப்படி பேராசையினாலே எல்லா ரிசோர்ஸ்களையும் நுகர்ந்து, நுகர்ந்து அழிச்சிட்டாங்க.. ஒஸோன் மண்டலத்துல ஓட்டை. எல்லா பனிமலையும் உருகிடுச்சு. குலோபல் வார்மிங்க்.ஊரெல்லாம் ஒண்ணு ஒண்ணா மூழ்க ஆரம்பிசச்சுடுச்சு. எல்லா மனிதர்களும் அழியாமக் காப்பாத்துனது இந்த அரசு தானே..?

“எப்படி காப்பாத்துனாங்க..? பெரியவங்களக் கொன்னாங்க.. குழந்தை பெத்துக்க அனுமதி இல்லே..என்ன வாழ்க்கை இது”

“எல்லாரும் சந்தோஷமாத்தானே இருக்கோம்.?

“என்னா சந்தோஷம்.. அரசு அனுமதிக்கறப்ப சாப்பிடறோம், தூங்கறோம்.. செக்ஸ் வச்சிக்கறோம்.. சுயமா யோசிக்கக் கூடாது. யோசிச்சா அழித்தொழிப்பு.”

“இங்க பார் வ்யாபக்.. நான் இங்க வந்த காரியத்தப் பாரு.. சரி.. இந்தப் பேப்பர் எப்படி யார் கண்ணுக்கும் படலை.”

“அது வந்து.. மாசம் ஒருமுறை சென்ட்ரல் பிராசஸர் மெய்ண்டெனன்ஸ் டிப்பார்ட்மெண்ட்ல எனக்கு டியூட்டிப் போடுவாங்க.. அங்க ஒரு மறை கழண்ட ரோபோவ மடக்கி வச்சிருக்கேன்..”

“எப்படி?”

“அதோட மெமரில கொஞ்சம் பூந்து விளையாண்டு கொழப்பி வச்சிருக்கேன். உள்ளுக்குள்ற சின்னதா ஒரு சிப் வச்சிட்டேன்.. என் ஆணைப் படி இயங்கும்.என் கண்காணிப்பு டேட்டாவ மாத்திடும்.. அதான்..”

”இது துரோகம் இல்லையா?”

“இந்த உலகத்துல காதல் இல்லே.. இல்லே..கண்ணீர் இல்லே… வலி இல்லே.. துரோகம் மட்டும் இருக்காக்கும்?”

“இந்த அரசு இல்லேன்னா மாசு அடைஞ்சக் காத்த சுவாசித்து எல்லார் மாதிரி நாமளும் செத்துப் போயிருப்போம்.”

“செத்துருக்கலாம் ஸோரோ. இந்த அடிமை வாழ்க்கை தேவையா.. அதுவும் மனுஷனுக்கு இல்லே.. மிஷினுக்கு .. சொந்தமா யோசிக்கத் தெரியாத மிஷினுக்கு..”

“நீ கோபத்துல உளர்றே வியாபக். மனிதன விட லட்சம் மடங்கு யோசிக்கத் தெரிஞ்ச மிஷின்.”

”எல்லாம் ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ்..”

வெளியே சப்தம் கேட்டது.

“என்ன சப்தம்?” வ்யாபக் கேட்டான்.

“அழித்தொழிப்புப் படையினரின் வாகனம்.”

“எதுக்கு?”

“என்ன மன்னிச்சுடு.. வ்யாபக்.. அரசுக்கு உன் மேல சந்தேகம்.. அதான் என்ன அனுப்பிச்சாங்க.. நீ என் கிட்ட பேசினது ஆட்டோ கம்யூனிகேஷன் சிஸ்டம் வழியா அவங்களுக்கு போய்டுச்சு.. அதான் வந்துருக்காங்க..”

”துரோகி.”

“நீ தான் சொன்னியே.. இந்த உலகத்துல காதல் இல்லே.. இல்லே..கண்ணீர் இல்லே… வலி இல்லே.. துரோகம் மட்டும் இருக்காக்கும்.”

வ்யாபக் முகம் மாறியது.

“பை.. வ்யாபக்.. வில் மிஸ் யூ.”

தட தடவென அழித்தொழிப்புப் படையினர் உள்ளே நுழைந்தார்கள்.

Print Friendly, PDF & Email

1 thought on “அது ஒரு கனாக் காலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *