கடம்பரவாழ்க்கையான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 9, 2023
பார்வையிட்டோர்: 1,726 
 

“கடம்பரவாழ்கையா..கடம்பரவாழ்கையா..பால் வந்திருக்கு. ஏனம் எடுத்துட்டு வா..”

சுப்புலக்ஷ்மி கொல்லைப்புற திண்ணையிலிருந்து எட்டிப் பார்த்தாள். தேவூரார் அவளது தம்பியைக் கூப்பிடுவது கேட்டது. தெரிந்தது. அவள் போக முடியாது. அம்மா கொடுசொலி, அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறாள். ருது விஷேசம் முடித்தபிறகுதான் வெளியில் நடமாடவேண்டும் என்று. தான் எட்டிப் பார்ப்பது தெரிந்தால்கூட தொலைத்திடுவாள்.

அந்த வீடு ஓர திண்ணை, தாழ்வாரம், பெரிய திண்ணை, கூடம், ஒரு அறை, ஒரு அடுக்களை, பூஜை அறை, கொல்லைப்புற திண்ணை என்று செவ்வகமாக இருந்தது. சுப்புலக்ஷ்மி கொல்லைப்புற திண்ணையின் இடது புறத்தில் புடவைகளால் மறைக்கப்பட்ட இடத்தில் உட்கார்ந்திருந்தாள். ஜன்னல் வழியாக அடுக்களையும், கூடத்தில் ஒரு பகுதியும், வெளி திண்ணையும் தெரிந்தன.

சில நாட்கள் முன்னர் பள்ளியில் வகுப்பில் வயிற்று வலி வர, உமா டீச்சரும், சத்துணவு டீச்சரும் அவளைப் பார்த்துவிட்டு, தனியாக உட்கார வைத்து, அம்மாவைக் கூப்பிட்டு வரச் சொல்லி, அவரிடம் “பெரியமனுசி ஆயிட்டா” என்று அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அன்றிலிருந்து இன்றுவரை பின் திண்ணையில் மறைவு அமைத்து சுப்புலக்ஷ்மியை இருக்கச் செய்தார்கள். இரவில் அம்மாவும், பக்கத்து வீடு அபிராமி அக்காவும் துணைக்குப் படுத்துத் தூங்குவார்கள். ருது விழா தேதி

குறிப்பிடப்பட்டு, உறவினருக்கெல்லாம் போஸ்ட் கார்டு அனுப்பப்பட்டு, அனைவரும் வந்து சேர்ந்தனர்.

இந்த வீடு இட வசதி குறைவாக இருப்பதினால், பக்கத்தில் இருந்த கணக்கு பிள்ளை வீடும் கேட்கப்பட்டு, அங்கும் உறவினர்கள் தங்கவைக்க பட்டனர்.

தம்பியை கூப்பிட்டாள்.

“டேய் தம்பி. இங்க பாருடா. முத்துசட்டை. உன்ன கூப்புடுறாங்கடா”

மறைவுக்காக திரைபோல் கட்டியிருந்த துணியை விலக்கி எட்டி பார்த்தாள். முத்துசட்டை திரும்பவில்லை. கொல்லைப்புற படிகளில் உட்கார்ந்து என்னதான் செய்கிறான் என்று எட்டிப் பார்த்தாள்.

தம்பி கையில் உள்ள தட்டில் அதிரசமும், சோமாசும், தேன்குழலும், ரிப்பன் பக்கோடாவும் இருந்தன. சுப்புலக்ஷ்மிக்கு ஆத்திரமாக வந்தது. கத்தினாள்.

“மூத்திர சாக்கு. தீனி பண்டாரம். சாக்கு மூத்திரம். உள்ள அய்யா கூப்பிடுறாங்கடா. போடா”

முத்துசட்டை திரும்பினான். தட்டை கீழே வைத்தான். பக்கத்தில் இருந்த பம்பர கயிறை எடுத்து அடிக்க வந்தான். அவன் இரவில் தூங்கும்பொழுது சிறுநீர் கழிப்பதினால் சாக்கின் மேல் பாய் போட்டு அம்மா தூங்கவைப்பாள். இப்பொழுதெல்லாம் அவ்வாறு செய்யவில்லை என்றாலும், கோவத்தில் அவனை அவ்வாறு அழைப்பது சுப்புலக்ஷ்மிக்கு வாடிக்கையாக போனது.

“அம்மா. அடிக்க வரான்மா..இங்க பாரு”

அம்மா கொல்லைப்புற வேலியின் படலை திறந்து அவசர அவசரமாக சுப்புலக்ஷ்மிடம் வந்து,

“என்னடி ஆச்சி. இப்படி கத்துற. உனக்கு விஷேசம். கொஞ்சமாவது தெரியுதா” என்றாள்.

“அம்மா. தம்பிய அங்க கூப்புட்றாங்க. போகாம வாயால அறச்சிட்ருக்கான். நான் சொன்னாக்க, அடிக்க வர்றாமா” என்றால் சுப்புலக்ஷ்மி.

அம்மா தம்பியை முறைத்தாள்.

“அம்மா. இவ என்ன மூத்திர சாக்குனு கூப்பிட்றா. அது தப்புதானே”

அம்மா திரும்பி சுப்புலக்ஷ்மியை பார்த்து “தடிமாடு, அப்படி கூப்புடாதனு சொல்லியிருக்கேன்ல. நறுக்குன்னு குட்டிபுடுவேன். திரும்பி தலை குளிக்கணும்னு பாக்கிறேன்”

முத்துசட்டை அருகில் இருந்த தாத்தாவின் கைத்தடியை எடுத்து குடுத்தான். அம்மாவிற்கு புரிந்தது. சுப்புலக்ஷ்மியை தடியால் அடிக்க சொல்லுகிறான் என்று. சிரிப்பு வந்தது. அதனை மறைத்து கொண்டு,

“படுவா. உள்ள கூப்பிட்டா, போகாம, கத்தினாலும் கேக்காம இருந்தா. திட்டாம என்ன பண்ணுவாங்க. உள்ள போயி என்னனு கேளு” என்றாள்.

முத்துசட்டை வெளி திண்ணைக்கு ஓடினான். அங்கே இருந்த பெரியவர்களை பார்த்தான்.

தேவூரார் இவனை பார்த்து “கடம்பரவாழ்கையா..பால் வந்துருக்கு. ஏனம் எடுத்துட்டு வந்து வாங்குப்பா” என்றார்.

முத்துசட்டை உள்ளே ஓடினான். எப்பொழுதும் பால் வாங்கும் பெரிய ஏனம் எடுத்து வந்து பால் வாங்கினான். திரும்பி அடுக்களை சென்று பாலை வைத்தான். சுப்புலக்ஷ்மியிடம் வந்தான்.

“அக்கா. ஏன் என்ன கடம்பரவாழ்க்கையானு கூப்பிட்றாங்க”

சுப்புலக்ஷ்மி முறைத்தாள்.

“சொல்லு” என்றான் முத்துசட்டை.

“அதுவா. அதான் நம்ம ஊரு”

“நம்ம இருக்கறது பெருங்கடம்பனுர் இல்ல”

“ஆமாண்டா. ஆனா. நீ, அப்பா எல்லாம் பொறந்தது கடம்பரவாழ்க்கையிலதான்”

“ஓ. நான் கடம்பரவாழ்கையான்னா, அப்பாவ, தாத்தாவை எப்படி கூப்புடுவாங்க”

“நீ பாத்ததில்லையா. நீ கடம்பரவாழ்க்கையான். அப்பா, கடம்பரவாழ்கையார்; தாத்தா, கடம்பரவாழ்க்கை அய்யா. அவ்ளோதான்”

தலையாட்டிக்கொண்டு திரும்பி சென்று படிகளில் உட்கார்ந்து தீனியை கொறிக்க ஆரம்பித்தான். தட்டு காலியாக உள்ளே ஓடினான்.


“ஆச்சி. ஆச்சியோவ்” என்று கொல்லைப்புற படலை திறந்து உள்ளே வந்தாள் நடவாள், மாரியம்மா.

சுப்புலக்ஷ்மியை பார்த்தாள். அவளை பார்த்தவுடன் சுப்புலக்ஷ்மிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

போன மாதம் தலையெல்லாம் ஈறும் பேனுமாக தலையை சொரிந்து எடுக்க அம்மா இந்த மாரியம்மாவை வர சொல்லி சுப்புலக்ஷ்மியை உட்கார செய்து இரண்டு மணி நேரம் ஈறுகோலி வைத்து தலையை ஒரு வழி செய்து விட்டாள். போகும்பொழுது அம்மாவிடம்,

“எம்மா. நம்ம பொண்ணு கூட படிக்கறது எல்லாம் வயசுக்கு வந்துடிச்சி. இது மட்டும் இன்னும் சுத்திட்டிருக்கு” என்று சொல்லிவிட்டு போனாள். அதை கேட்டதிலிருந்து அம்மா ஏகப்பட்ட நிபந்தனைகளை போட ஆரம்பித்தாள். மரைக்காயர் வீட்டிற்கு சென்று வெள்ளிக்கிழமையில் தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்ப்பதற்கு தடை விதித்தாள்.

“அங்க விளையாடாதே. வீட்டிற்கு சீக்ரம் வா. பொண்ணுங்க கூட மட்டும் விளையாடு. பசங்ககூட விளையாடாதே.”

சுப்புலக்ஷ்மிற்கு அம்மாவிற்கு என்ன ஆயிற்று என்று புரிபடவில்லை. ஆனால் இந்த நடவாள்தான் இதற்கெல்லாம் காரணம் என்று நினைத்தாள். அவளை பார்த்தால் ஈறுகோலியால் அவளை அடிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தாள். அவளை பார்த்தவுடன், ஈறுகோலியை தேடினாள்.

மாரியம்மாள் சிரித்தாள். “என்ன தேடியாவது. அடிக்கறதுக்கு எதாவது தேடியாவதா?”

“ஆமா. நீ சொல்லிட்டு போய்ட்ட. அம்மா வெளில போனாலே ஒரு கத்துதான்”

“அப்புறமா அடி பாப்பா. என்ன. இப்ப போயி ஏனம் விளக்கிட்டு வரேன்” என்று கொல்லைகடைசியில் சென்றாள்.

சுப்புலக்ஷ்மிக்கு அழுகை வந்தது. போன வாரம் தெருவில் ஓடி பிடித்து விளையாடும்பொழுது கடைசி வீட்டு பையன் இவளை ஓடி வந்து தொட்டு ஆட்டத்தில் இருந்து வெளியேற்ற, முதலியார் வீட்டம்மாளிடம் பேசி திரும்பிய அம்மா அதனை பார்த்து, வீட்டிற்கு வந்ததும் கத்த ஆரம்பித்தாள்.

“முண்டம். என்ன சொன்னாலும் உனக்கு புரியாது”

“ஏன்மா, திட்டற”

“பய்யன்கோளோட விளையாடாதனு சொல்லிருக்கேன்ல”

“எல்லாரும்தானே விளையாண்டாங்க.”

“இங்க பாருடி. பசங்க உன்ன தொட்டா” சுத்தியும் பார்த்தாள். சுப்புலக்ஷ்மி ஆசையுடன் விளையாடும் மரமாச்சி பொம்மை இருந்தது. அதனை எடுத்து கையில் கொடுத்து,

“இந்த மரப்பாச்சி, உன் வயித்துக்குள்ள போயி, கொழந்தையா பொறக்கும்” என்றாள்.

சுப்புலக்ஷ்மிக்கு அதை கேட்டவுடன் வயிற்றை பிசைந்தது. பயந்து, நடுக்கம் வந்தது. அழுதாள். அதன் பிறகு விளையாட வெளியில் செல்லாமல் தவிர்த்தாள்.

பின்னர் ஒருநாள் பள்ளியில் டீச்சர் இவளின் பாவாடையில் கரையை பார்த்து, வீட்டிற்கு தகவல் சொல்லி, அம்மா அழைத்து வருகின்றபொழுதும் “இங்க பாரு. நியாபகம் இருக்கில்ல. பையனுவ விறல் பட்டாகூட மரப்பாச்சி வயித்துக்குள்ள போய் குழந்தையா மாறி வெளில வரும்.” என்று மறுபடியும் சொல்ல, சுப்புலக்ஷ்மிக்கு அழுகையும் பயமும் கலந்து பீறிட்டு வந்தது. மறுபடியும் அழுதாள். அம்மா கண்டுகொள்ளவில்லை. ருது சடங்கு முடிந்து என்ன சொல்ல போகிறாளோ என்ற பயம் அவளை வெகுவாக துளைத்து எடுத்தது. சற்றே ஆறுதலான விடயம் ரத்ன பாலா, கோகுலம், பாலமித்ரா புத்தங்கள் படிக்க போட்டிபோடும் தம்பியிடமிருந்து முன்னுரிமை கிடைத்தது மட்டுமே.


முத்துசட்டை திருக்குவளை அத்தையை அழைத்துக்கொண்டு அக்காவிடம் வந்தான்.

“சுப்புலக்ஷ்மி. நல்லா இருக்கியாடி” பின் திண்ணையில் உட்கார்ந்தாள் அத்தை.

“அத்த. அத்த” என்று அழுதுகொண்டே மூக்கை சிந்தினாள்.

“ஏண்டி..என்னடி ஆச்சி. உனக்குத்தான் விசேஷம்..இப்ப போயி அழலாமா” என்று அத்தை கேட்க விசும்பினாள் சுப்புலக்ஷ்மி.

மரப்பாச்சியை கையில் எடுத்து அத்தையிடம் காட்டி அம்மா சொன்னதை சொல்லினாள்.

“அழாதம்மா. அண்ணி நல்லதுதான் சொல்லுவாங்க. அக்கம் பக்கத்தில எதாவது நடந்திருக்கும். நீ இப்ப எட்டாவதுதான் படிக்கற. பன்னெண்டாவது படிச்சி முடிக்கும்போது உனக்கு புரியும். தம்பி இருக்கான். அப்புறமா நான் சொல்றேன் உனக்கு மூக்குத்தி வாங்கிட்டு வந்திருக்கேன். அப்புறமா காமிக்கிறேன். கண்ண தொடைச்சிக்க” என்றாள் அத்தை.

சுப்புலக்ஷ்மி கண்ணை தொடைத்துக்கொண்டாள்.

“மாமாக்கு காஃபீ கொடுத்துட்டு, உனக்கு சாப்டறதுக்கு எதாவது எடுத்துட்டு வர்றேன்.” என்று உள்ளே சென்றாள்.

முத்துசட்டை அக்காவை பார்த்தான். அருகில் வந்தான்.

“ஏங்க்கா. நீ வெளையாண்டா, மரப்பாச்சி வயித்துக்குள்ள போயிடுமா?”

“போடா, போயி அத்த பூந்தி வாங்கி வந்திருப்பாங்க. அத காலி பன்னு” என்றாள்.

“நான் கேக்றதுக்கு பதில். மரப்பாச்சிதான் உனக்கு பிரச்சினை”

“ஆமா, போ இங்கிருந்து”

“சரி. இப்ப போறேன். ஆனா, கவல படாதே. நான் பாத்துக்கிறேன். ” என்று வெளி திண்ணைக்கு ஓடினான்.


முத்துசட்டை திண்ணையில் உட்கார்ந்து தீவிரமாக யோசித்தான். அந்த மரப்பாச்சிதான் அக்காவின் அழுகைக்கு காரணம் என்று முடிவு செய்தான்.

அப்பாவிடம் அருகில் சென்று கேட்க ஆரம்பித்தான்.

“அப்பா எப்ப எல்லோரும் தூங்கி எந்திரிக்கணும்?”

“ஏண்டா தம்பி.”

“சொல்லுங்க. எல்லாரும் எப்ப தூங்கணும்”

“ராத்திரி பதினோரு மணியாய்டும். காத்தால நாலரை மணிக்கு எந்திருக்கணும். நீ என்ன பண்ண போற.”

“நானும் சீக்ரம் எந்திரிக்கணும்.”

“சரி. நான் எழுப்பி உடறேன்”

“இல்ல நானா எந்திரிக்கணும்”

அப்பா முத்துசட்டையை அருகில் இழுத்து “ஒரு சொம்பு தண்ணி குடி. ஒண்ணுக்கு வந்துடும். சீக்கிரமா எழுந்திடலாம்” என்றார்.

முத்துசட்டை விளையாடி கொண்டிருந்துவிட்டு தூங்கபோகுமுன் ஒரு சொம்பு தண்ணீர் குடித்து படுத்தான். பின்னிரவில் விழித்தான். எல்லாரும் தூங்கி கொண்டிருந்தனர். அவன் பின்புறம் ஓடி கொல்லைப்புற கடைசியில் ஒதுங்கி விட்டு திரும்பி வந்து கைகளையும் கால்களையும் கழுவி கொண்டு, மெதுவாக சுப்புலக்ஷ்மி படுத்திருக்கும் இடத்திற்கு வந்து மரப்பாச்சியை தேடி எடுத்தான்.

உள்ளே சென்று சிறுவர்மலர் புத்தகம் ஒன்றை எடுத்து, மரப்பாச்சியை நன்றாக சுற்றி, நூல்கொண்டு கட்டி நாற்காலியின் மேலேறி பரண்மேல் எறிந்தான். கீழே இறங்கி கையைகளை துடைத்து கொண்டு அப்பாவின் அருகில் போய் படுத்து தூங்கிபோனான்.

விடிந்தது. சுப்புலக்ஷ்மி தினமும் எழுந்தவுடன் மரப்பாச்சியை எடுத்து பார்த்து கொஞ்சி பின்னர் வேலையை ஆரம்பிப்பாள். இன்று மரப்பாச்சியை காணவில்லை. அழ ஆரம்பித்தாள்.

அம்மா வந்து காரணம் கேட்டாள்.

“மண்டு. இதுக்கா இவ்ளோ அழுகை. நடவாளு நேத்தி கூட்டும்பொழுது எங்காவது எடுத்துவச்சிருக்கும்.”

“எனக்கு வேணும். இப்பவே. என் பொம்ம வேணும்”

“சனியனே. அழாத. நம்ம வீட்ல ரெண்டு மரப்பாச்சி இருக்கு. கொலு பெட்டியில இன்னொன்னு இருக்கும். இரு எடுத்து தரேன்.” என்று சொல்லி உள்ளே சென்று ஒரு மரப்பாச்சியை கொண்டு வந்து சுப்புலக்ஷ்மியிடம் கொடுத்தாள்.

சுப்புலக்ஷ்மி அழுகையை நிறுத்தி மரப்பாச்சியை ஆசையாக வாங்கி கொண்டாள்.


முத்துசட்டை காலையில் எழுந்து வந்து பார்த்த பொழுது அக்காவிடம் அதே மரப்பாச்சி இருந்தது. எப்படி வந்தது என்று புரியவில்லை.

“அக்கா. மரப்பாச்சி எப்படி வந்திச்சி.”

“போயிடு. அடிச்சிடுவேன்”

முத்துசட்டை பேசாமல் வீட்டிற்குள் சென்றான். அக்காவிற்கு யாரோ பரண் மேல் இருந்து எடுத்து கொடுத்திருக்கிறார்கள் என்று நினைத்தான். அவளை கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறார் என்று வேதனை பட்டான். மரப்பாச்சியை என்ன செய்யலாம் என்று யோசித்தான். புத்தக பையில் ஒளித்து வைத்து பள்ளிக்கூடம் செல்லும்பொழுது வாய்க்காலில் போட்டுவிடலாம் என்று முடிவு செய்தான்.

அன்று இரவும் ஒரு சொம்பு தண்ணீர் குடித்தான் கடம்பரவாழ்க்கையான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *