முயற்சியே பெருமை!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,637 
 

அது ஒரு மாலைப் பொழுது. நான்கு சிறுவர்கள் வயலோரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். வரப்பு ஓரமாகச் சென்று ஒரு மூலையை அவர்கள் அணுகியபோது, பூமிக்கடியிலிருந்து ஒரு மெல்லிய குரல் கேட்டது.

“என்னைத் தோண்டி, வெளியில் எடுங்கள்… நான் நீங்கள் விரும்பியதை எல்லாம் தருவேன்!’ என்றது அந்தக் குரல்!

முயற்சியே பெருமைஆச்சரியமடைந்து சிறுவர்கள் அனைவரும் உடனே வேலையில் இறங்கினர். சில நிமிடங்கள் பூமியைத் தோண்டிய பிறகு அங்கே ஒரு அழகிய சிறிய விளக்கு பளிச்சிட்டது!

அதை வெளியில் எடுத்தார்கள்.

அவர்கள் கைபட்டதும், அந்த விளக்கு பேச ஆரம்பித்தது!

“நான் அலாவுதீனுடைய அற்புத விளக்கு. நீங்கள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! நான் நீங்கள் கேட்பதையெல்லாம் தர வல்லவன். வாருங்கள். ஒவ்வொருவராக என்ன வேண்டும் என்று கேளுங்கள். அனைவருக்கும் அவரவர்களுடைய தேவை நிறைவேற்றப்படும். தயங்காமல் கேட்டுப் பெற்றுங்கள்!’ என்று ஆசை காட்டிக் கூப்பிட்டது அந்த அற்புத விளக்கு.

முதலாவது சிறுவன், “எனக்கு விளையாடுவது மிகவும் பிடிக்கும்! அதனால் எனக்குக் கிரிக்கெட் மட்டையும் பந்தும் விக்கெட் கட்டைகளும் தாருங்கள்…அதுமட்டுமல்ல வீட்டுக்குள்ளேயே விளையாடுவதற்கு வேண்டிய சில விளையாட்டுப் பொருட்களும் எனக்கு வேண்டும்’ என்றான்.

இரண்டாமவன், “தினமும் என் பள்ளி ஆசிரியர் நிறைய வீட்டுப் பாடங்களைத் தருகிறார். எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதனால் தினமும் நீ வந்து எனக்காக எனது வீட்டுப் பாடங்களைச் செய்து தர வேண்டும்!’ என்று கேட்டான்.

பிறகு, மூன்றாமவன், “தெருவில் பிச்சைக்காரர்கள் தொல்லை மிகுதியாகிவிட்டது. அவர்களுக்குப் போதுமான பணம் கொடுத்து, அவர்களைப் பிச்சை எடுக்காமல் இருக்கச் செய்ய நீ உதவி செய்ய வேண்டும்’ என்று கூறினான்.

தனது தோழர்களின் வேண்டுகோள்களையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் நான்காவது சிறுவன்.

அவன் அந்த அற்புத விளக்கைப் பார்த்து, “ஓ..! மந்திர விளக்கே, நீ எங்களுக்கு எதுவும் தருவதற்கு முன்பு இங்கிருந்து மறைந்து போய்விடு! கடவுள் அன்புகூர்ந்து, எங்களுக்கு கண், காது, மூக்கு, நாக்கு, கை, கால்கள், மூளை எல்லாவற்றையும் நல்லவிதமாக படைத்துத் தந்திருக்கிறார். இவற்றைக் கொண்டு நாங்கள் அறிவார்ந்த பணிகள் பல ஆற்ற முடியும்! கடவுள் கொடுத்த கொடைகளை நாங்கள் முழுமையாகச் செவ்வனே பயன்படுத்தி நாங்களும் நன்றாக வாழ்ந்து மற்றவர்களையும் மகிழ்வுறச் செய்ய வேண்டும். மனிதனுடைய பெருமையே முயற்சி செய்வதில்தான் அடங்கியுள்ளது. இப்படியிருக்கையில், பிச்சைக்காரர் போல நாங்கள் ஏன் உன்னிடம் பொருள்களையும் செயல்களையும் யாசிக்க வேண்டும்? கடவுள் தந்துள்ள உயரிய பரிசுகளான கண், காது, மூக்கு, கை, கால்கள், மூளை முதலியவைகளை ஏன் புறக்கணித்து ஒதுக்க வேண்டும்? ஆகவே, நீ இங்கிருந்து தயவுசெய்து உடனடியாக மறைந்து விடு!’ என்று வேண்டினான்.

அந்த அற்புத விளக்குக்கு நான்காவது சிறுவனின் கோரிக்கை மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவனுடைய உயர்ந்த உள்ளத்தையும் அறிவையும் பாராட்டி விட்டு அங்கிருந்து உடனே மறைந்து போனது!

– எம்.ஜி.விஜயலெக்ஷ்மி கங்காதரன் (ஜனவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *