உள்ளம் உன் வசமானதடி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 7, 2023
பார்வையிட்டோர்: 7,632 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6

மிருணாளினி நிம்மதிப் பெருமூச்சுடன் நிமிர்ந்தபோது, “நாம இன்னிக்குக் கோவிலுக்குப் போயிட்டு வரலாமா?” கேட்டான் முகிலன்.

“ம்… போகலாம்” ஆர்வத்துடன் கூறியவள், உடனே பக்கத்து அறைக்குச் சென்று மெலிதான சரிகைக் கரையிட்ட பிங்க் நிற மைசூர் கிரேப் அணிந்து தயாராகி தேவதையாக வந்தாள்.

அவளைக் கண்டதும், சுவாரசியமாக ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி ரசித்தவனைப் பார்த்தபோது, மிருணாவின் மனதிற்குள் புதிதாய் சிறு நாணத்தின் சாயல்!

கீழே வந்து மாமனார் – மாமியாரிடம் கூறிவிட்டு கிளம்பினர்.

“ஒரு நிமிஷம் இரு!” என்று உள்ளே சென்ற தமிழரசி நெருக்கமாகத் தொடுத்திருந்த நித்யமல்லிப் பூச்சரத்தை அவளுடைய நீண்ட பின்னலுக்குப் பொருத்தமாக வைத்து விட்டார்.

கோவில் வாசலில் காரிலிருந்து இறங்கியதும், எதிர்ப் பட்டவர்களெல்லாம் முகிலனை மரியாதையுடன் வணங்கிச் செல்ல, அவனருகில் உரிமையுடன் செல்வது. புதுவித அனுபவம்!

அர்ச்சனை செய்து முடித்த பிறகு, கோவில் பிரகாரத்தில் சிறிது நேரம் மௌனமாக அமர்ந்திருந்தனர்.

ஆலய மணியின் எதிரொலியாய்ப் படபடவெனச் சிறகடித்த புறாக்களின் ஓசையையும், கோபுரத்துத் தேன் கூடுகளின் அழகையும் ரசித்தபடி இருந்தவளின் ஏகாந்தத்தை அவன் குரல் திடீரெனக் கலைத்தது!

“மிருணி! உனக்கு என் மேல வெறுப்பு எதுவும் இல்லையே?” மெதுவாகக் கேட்டான் அவன்.

சட்டென்று வந்த அந்தக் கேள்வி முகத்திலறைய, அவள் யோசிப்பதற்குள் “இல்லை!” என்று தன் அனுமதியின்றியே உதடுகள் முனுமுணுத்தது. அதிர்ச்சியைத் தந்தது.

“ம்.. சரி!” என்றபடி அவனும் ஏதோ யோசனையில் ஆழ்ந்து போக, தான் அவனைத் தவறாகக் கணித்திருக்கிறோமோவென்று தோன்றியது.

வெளித்தோற்றத்தை வைத்து அவனை மிகவும் முரட்டுத்தனமான பட்டிக்காட்டுப் பண்ணையார் என்று தான் எண்ணி இருந்ததை, அவன் முதல் நாளே சிதறடித்ததும் ஞாபகம் வந்தது.

தான் கண்ணியமானவன் என்பதை, படுக்கையறையில் அவன் செயல்கள் வெளிப்படுத்தியது.. உயர்ந்த சிந்தனையாளன் என்பதை அவனுடைய பேச்சுக்களும், புத்தகங்களும் நிரூபித்ததும்….நியாயமாக நடக்காவிட்டால் கோபப்படுபவன் என்பதை அவனுடைய முதல் கோபம் தெரிவித்ததும் நினைவில் படர்ந்து, பெரும் சஞ்சலத்தை அளித்தன.

வீட்டிற்குத் திரும்பி வரும்போது, வழியில் அந்தப் பைத்தியம் பாதையோரம் மயங்கிக் கிடப்பது தெரிந்தது.

உடனே காரை நிறுத்தச் சொன்ன முகிலன், “காசியண்ணன்… தண்ணி பாட்டிலை எடுத்துட்டுப் போய், அந்தப் பொண்ணு முகத்தில தெளிச்சு எழுப்புங்க… ஏன் இப்படி விழுந்து கிடக்கு?” என்று டிரைவரை அனுப்பி விட்டு இறங்கினான்.

மயக்கம் தெளிந்து விழித்தவளைக் கண்டதும், “நீங்க அந்தப் பொண்ணை பக்கத்துல இருக்கற பிரைமரி ஹெல்த் சென்டருக்கு அழைச்சிட்டுப் போய் டாக்டர்கிட்டக் காட்டுங்க. நாங்க ரெண்டு பேரும், எங்க மாமனார் வீட்டுக்குப் போயிட்டு வீட்டுக்கு வரோம்” என்றபடி காரில் ஏறினான்.


மாப்பிள்ளையும் பெண்ணும் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நின்று கொடுத்த இன்ப அதிர்ச்சியில், இருவருக்குமே ஒன்றும் புரியவில்லை.

அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று அமர வைத்து விட்டு, “டிபன் ஏற்பாடு பண்ணு வனி!” என்றார் லிங்கம்.

“இல்லை மாமா! எதுவும் வேணாம். அம்மா அங்கே நைட் டிபனுக்கு ரெடி பண்ண சொல்லியிருப்பாங்க. காபி மட்டும் போதும்” முகிலன் இயல்பான குரலில் கூறினான்.

“இருக்கட்டும் மாப்பிள்ளை! வனி… நீ போய் ஏதாவது ஸ்வீட், காரம் தயார் பண்ணு!” என்றார்.

“அப்பா விபூதிப் பிரசாதம் எடுத்துக்கங்க” என்று அளித்து விட்டு ஒரு துள்ளலுடன் தாயின் பின்னே சென்றவளையே ஒருவித ஆர்வத்துடன் கவனித்தவன், லிங்கத்திடம் திரும்பிப் பேச ஆரம்பித்தான்.

முதலில் சம்பந்தியைப் பற்றி விசாரித்தவர். பிறகு தொழிலைப் பற்றிக் கேட்க – இருவரிடையேயும் பேச்சு சுவாரசியமாகச் சென்றது.

உள்ளே சென்றதும், அம்மாவை அணைத்துக் கொண்டாள் மிருணா

“அக்கா எங்கேம்மா? நான் இல்லாம ஜாலியா இருக்கீங்க இல்லை?” சலுகையுடன் கேட்டபோது திரும்பிய தேம்பாவனியின் கண்களில் கண்ணீர் முத்துக்கள்!

“ஏம்மா அழறீங்க? சாரி.. நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்.” ஆதரவுடன் அவர் கண்களைத் துடைத்து விட்டாள்.

“உன்னைப் பிரிஞ்சாலும், உனக்கு ஒரு அருமையான வாழ்க்கை அமைஞ்சுதேன்னு சந்தோஷப்படறேன்டி! ஆனா உன் அக்காவை நினைச்சாத்தான்…” முடிக்காமல் நிறுத்தினார்.

“என்னம்மா! அக்காவுக்குக் குழந்தை இறந்து போயிடுச்சேன்னு வருத்தப்படறீங்களா? எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. பாருங்க கூடிய சீக்கிரமே அக்காவுக்கு ஹம்சத்வனி குட்டிப்பாப்பாவா வந்து சந்தோஷத்தைக் குடுக்கப் போறா பாருங்க” அவரைத் தேற்றும் விதமாகக் கூறினாள்.

“ம்… மீனாவை நேத்துத்தான் மாப்பிள்ளை அழைச்சிட்டுப் போனாரு.. சரி அதை விடு உனக்கு அவங்க வீடு பிடிச்சிருக்கா? எல்லாரும் நல்லாப் பழகுறாங்களா?” ஆர்வத்துடன் விசாரித்தார்.

“நான் நல்லாருக்கேம்மா! ஒரு வேலையும் இல்லை. சும்மா உக்காந்து துருப்பிடிச்சிப் போயிடுவேனோன்னு பயமா இருக்கு. எல்லாத்துக்கும் ஆள் இருக்கறதினாலே, அத்தை என்னை ஒரு வேலையும் செய்ய விடறதில்லை. இன்னும் கொஞ்ச நாளானா அங்கே நல்லாப் பழகிடும்னு நினைக்கிறேன்.”

“மாப்பிள்ளை உன்கிட்ட அன்பா நடந்துக்கறாரா மிருணா?”

அவர் கேட்க, “ம்… ரொம்ப! எனக்குப் படிக்கறதுக்கு ‘புக்ஸ்’ எல்லாம் வாங்கிட்டு வந்து தந்திருக்காரு. ‘எம்.எஸ்ஸி’ படிக்கறதுக்கு ‘கரஸ்’லே அப்ளிகேஷன் கூடப் போட்டாச்சு” என்ற போது, அவர் முகம் நிம்மதியிலும் சந்தோஷத்திலும் மலர்ந்தது.

இருவரும் பேசிக் கொண்டே கேசரியும், வெங்காய் பஜ்ஜியும் செய்து முடித்தனர்.

இரு தட்டுகளில் வைத்து எடுத்துச் சென்று அப்பாவிடமும் முகிலனிடமும் கொடுத்து விட்டுத் தானும் எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றாள் மிருணா.

அவளுக்கு மிகவும் பிடித்த செண்பக மரத்தடியில் நின்ற போது, அந்த மலர்களின் நறுமணம், நாசியில் ஒருவிதக் கிறக்கத்தை ஏற்படுத்தியது.

அதை ரசித்தபடி நிமிர்ந்தபோது, வான் நதியில் அழகாய் நீச்சல் பழகிக் கொண்டிருந்தன, மேகங்கள்!

சருகுகள் மிதிபடும் சப்தம், யாரோ வருவதை அறிவிக்க, வேகமாகத் திரும்பியபோது, முகிலன் வந்து கொண்டிருந்தான்..

“என்ன, உன்னோட தனிமைத் தவத்தைக் கலைச்சிட்டேனா?”

ஆழமான குரலில் கேட்டபடி. இயல்பாக அவளருகிலிருந்த துணி துவைக்கின்ற கல் மேடை மீது அமர்ந்து கொண்டான்.

அவன் பதில் கூறாததால், “எனக்கும் இது மாதிரி அமைதியான மாலை நேரம்… இதமான தென்றல் காற்று…. பலவித மலர்களோட மணம்… திடீர்னு வரும் சாரலான மழை….இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்” என்றான் மிருதுவாக.

வியப்புடன் அவனை நோக்கியவளுக்கு, தன்னுடைய ரசனைகள் பெரும்பாலும் அவனுடன் ஒத்துப் போவது, ஆச்சர்யம் தந்தது!

யோசனையுடன் நின்றிருந்தவளிடம், ”என்ன… நம்ம வீட்டுக்குப் போகலாமா?” என்றாள் முகிலன்.

‘சரி’யெனத் தலையசைத்தபடி அவனைப் பின் தொடர்ந்தாள்.

அப்பா அம்மாவிடம் விடைபெற்று அவன் வீட்டிற்குச் சென்றபோது, அவளுக்கு அங்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.

வாசலிலேயே காத்திருந்த கார் டிரைவர் காசி, காரிலிருந்து இறங்கியவர்களிடம், “ஐயா! அந்தப் பைத்தியம் கர்ப்பமா இருக்குதுங்களாம். டாக்டர் சொன்னாங்க” என்றார் பதட்டத்துடன்.

முகிலனின் இரு புருவங்களும் கோபத்தில் நெளிந்தன.

“சே! தான் யாருன்னே தெரியாத, தன் உணர்வில்லாத ஒரு பொண்ணைப் போய்… ப்ச்… யார் இப்படிச் செஞ்சிருப்பாங்க?” தலையைக் குலுக்கியபடித் திரும்பினான்.

பயத்தல் வெளிறிய முகத்துடன் அருகில் நின்ற மிருணாவைக் கண்டதும், “மிருணி… நீ ரூமுக்குப் போ. நான் வரேன்” என்று மெதுவாகக் கூறி அனுப்பியபோது கால்களில் தடுமாற்றத்துடன், சோர்ந்து நடந்து செல்பவளைக் கண்டபோது ஆயாசமாய்!

‘இவள்தான் எவ்வளவு மென்மையானவள்… பிறருக்கு ஒரு கஷ்டம் என்றால் அனிச்சமலராய் எப்படி வாடிப் போகிறாள். இவளைக் காயப்படாமல் மென்மையாகப் பார்த்துக் கொள்ள வேண்டு’மென்ற உறுதி, அந்த நிமிடம் மனதில் நிறைந்தது.

உடனே, காசியைத் தனியே அழைத்துச் சென்று விசாரித்தான்.

“அந்தப் பொண்ணுக்கு. இப்ப அஞ்சு மாசமிருக்குமாம் சின்னய்யா…கலைக்கவும் முடியாதுன்னு சொல்றாங்க”. என்றார் அவர்.

“பாவம்… அந்தச் சின்னக் குழந்தை தப்பு பண்ணிச்சி! கலைக்க வேணாம். சத்திரத்துலேயே இருக்கட்டும். ஆனா இதுக்கு யார் காரணம்னுதான் புரியலை.”

“சின்னய்யா… நான் ஒண்ணு சொன்னா நம்புவீங்களா? நம்ம சின்னம்மாவோட அக்கா புருஷன் இருக்காரே. அந்த வாத்தியாரு ஒரு நாளு அந்தப் பைத்தியத்தை சத்திரத்துல வச்சி தப்பா நடந்துக்கிட்டதைச் சிலர் பார்த்திருக்காங்க. எனக்குத்தான் அதை எப்படி உங்ககிட்டச் சொல்றதுன்னு கஷ்டமா இருந்தது.”

மனதிற்குள் கோபம் தீயாய் சுளன்று எரிய, ”சரி! இதை யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க. நமக்குள்ளே இருக்கட்டும்.” – என்று அவரை அனுப்பி விட்டு வந்து ஹாலில் அமர்ந்தபோது, மனம் எரிமலையாய்!

தன்னில் பாதியாய்.. தனக்காகவே உறவுகளைத் துறந்து வாழ வந்த மனைவிக்கு துரோகம் செய்தவனை, அவனால் மன்னிக்கவே முடியவில்லை.

உடனே தன் தந்தையிடம் எல்லாவற்றையும் கூறியவன். தங்கவேலுவைத் தனியே அழைத்து அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்க்கைக்கு என்று அபராதம் வசூலித்து, அவனை எச்சரித்து அனுப்பும்படிக் கூறினான்.

அக்காவின் கணவரைப் பற்றி மிருணா அறியாமலிருப்பதே நல்லது என்று அவனுக்குத் தோன்றியது.

ஆனால் தன் அக்காவின் வாழ்க்கையை எண்ணி அவள் தவித்துக் கொண்டிருந்ததையோ, தங்கவேலுவைப் பற்றிய நினைவுகள் அவளை துர்சொப்பனங்களாய் வாட்டியதையோ அவன் அறியவில்லை.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *