எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சமூக நீதி
கதைப்பதிவு: February 19, 2024
பார்வையிட்டோர்: 1,999 
 
 

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என்னுடைய மகள் ஒரு multi tasker. தமிழில் வேண்டுமென்றால் அட்டாவதானக்காரி என்று சொல்லலாம். ஒரு காரியத்தை ஒரு நேரத்தில் செய்வதென்று இல்லை. ஒரு சர்க்கஸ்காரி போல பல காரியங்களை ஒரே சமயத்தில் செய்யவேண்டும்.

அன்று அலுவலகத்தில் இருந்து வந்ததும் பதிலியை (answering machine) அமுக்கிவிட்டாள். அது தன் பாட்டுக்கு அன்று தான் சேகரித்த தகவல்களை அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டு வந்தது. வீட்டு தபால் பெட்டியில் விழுந்திருந்த கடிதங்களை அசிரத்தையாகத் தட்டிப்பார்த்து மேசையிலே எறிந்தாள். அதே சமயம் நுண்ணலை அடுப்பிலும் எதையோ வைத்து பட்டனை அமுக்கிச் சுழலவிட்டாள். இத்தனைக்கும் என் மகளின் நாரியில் 60 பாகை கோணத்தில் அப்ஸரா உட்கார்ந்திருந்தாள். அப்படியே அவளை இடது பக்கமாக கழற்றித் தூக்கி எடுத்து என்னிடம் கொண்டு வந்தாள். நானும் ஒரு மாதமாகக் காத்திருந்து, ஆறாயிரம் மைல் தாண்டி வந்த ஒரு பார்சலை பெறுவது போல, அவளைப் பெற்றுக்கொண்டேன்.

அப்ஸரா என்றால் அவளுக்கு இன்னும் ஒரு வயது எட்டவில்லை; பத்து மாதம்தான். ‘அப்பா, இந்த கிறேப்ஸை இவளுக்கு குடுங்கோ’ என்று சொல்லிவிட்டு அப்படியே சுழன்று கைபேசியில் ஏதோ ஒரு எண்ணை அமுக்கத் தொடங்கினாள் என் மகள்.

அப்ஸராவுக்கு பிடித்தது விதை இல்லாத சிவப்பு திராட்சை. அதிலும் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று அப்போதுதான் ஐஸ் பெட்டியில் வைத்து எடுத்தது போல இறுக்கமாக இருக்கும். மற்றது மிருதுவான தசைகளைக் கொண்டது. இரண்டாவதுதான் அவளுக்கு பிடிக்கும். தொட்டுப் பார்த்து அதை உறுதி செய்த பிறகுதான் வாயைத் திறப்பாள். ஒரு முழுத்திராட்சையையும் அவளால் சமாளிக்க முடியாது. ஏனென்றால் முன்னுக்கு இரண்டு பற்கள், அதுவும் கீழ் பற்கள், பஸ்மதி அரிசி போல, இப்போதுதான் தோன்ற ஆரம்பித்திருந்தன. திராட்சையை நீளப் பாதியாக நறுக்கி ஒரு பாதியை அவளுக்கு தருவேன். முகத்தை நாலு கோணலாக மாற்றி வாயை பல அசைவுகள் செய்து சாப்பிடுவாள். இதற் கிடையில் மற்ற பாதியை நான் சாப்பிட்டு விடுவேன்.

மீண்டும் வேண்டுமென்பாள். அவளுக்கு அவசரம். இன்னு மொன்றை நறுக்குவேன். வாயில் இருப்பது தீர்ந்துவிட்டதா என்று தீர்மானித்து தான் அடுத்ததை அனுப்பவேண்டும் என்பது என் மகளுடைய கட்டளை மீற முடியாது. மீறினால் வேலை போய்விடும்.

“ஆ காட்டு. ஆ காட்டு.” அவள் வாயைத் திறந்தாள். எல்லாமே அங்கே சிவப்பாக இருந்தது. திறந்து அப்படியே வைத்திருந்தாள்.

ஒருமுறை கிருஷ்ணர் தவழும் பருவத்தில் வாயில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார். யசோதை அவருடைய இடுப்பிலே தூக்கிப் பிடித்து வாயைக் காட்டு என்றாள். கிருஷ்ணர் பெட்டி போன்ற சிறு வாயைத் திறந்தார். அப்போது யசோதை அங்கே பிரபஞ்சத்தைக் கண்டாளாம்.

எனக்கும் அப்படியே தோன்றியது. உலகத்திலேயே அழகான காட்சி. சோகமான காட்சியும் கூட இன்னுமொரு திராட்சையை அவளுடைய வாய்க்குள் போட்டேன். அது தன் பயணத்தை தொடங்கியது.

இந்த அலுப்பு பிடிக்கும் நடைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டுவர நான் முயன்றேன். ஒருமுறை பாதி திராட்சையை அவள் கையில் கொடுத்து நான் வாயை ஆவென்று வைத்துக்கொண்டேன். அந்த பாதி திராட்சையை என் வாய்க்குள் அவள் வைக்க வேண்டும் என்பது என் விருப்பம். அது அவளுடைய சின்ன மூளைக்குள் ஏறவில்லை.

மனிதர்களுடைய வாயை இவ்வளவு குளோசப்பில் அவள் பார்த்த தில்லை. பெருவிரலில் எக்கி நின்று என் வாயை புகுந்து பார்த்தாள். பிறகு முகர்ந்தாள். மிகவும் அதிசயமான ஒன்றாக இருந்தது. பிறகு பரவசமாகி அந்தப் பற்களை தொட்டுப் பார்ப்பதற்கு பிரயத்தனமானாள். நான் எவ்வளவு முயன்றும் அந்த திராட்சையை என் வாய்க்குள் வைக்க வேண்டும் என்பது அவளுக்கு பிடிபடவே இல்லை. நாலு கறுப்பு நிரப்பிகள் கொண்ட என் பல் வரிசைகளை விளையாட்டு காட்டுகிறேன் என்றே நினைத்துக்கொண்டாள்.

நான் விடாமுயற்சிக்காரன். எப்படியும் இன்னும் இரண்டு நாளைக்குள் இந்த வித்தையை அவளுக்கு பழக்கி விடுவேன். அப்போது திராட்சைகள் இன்னும் சீக்கிரமாக மறையும், அதுவரைக்கும் நான் வேலையிலிருந்து நீக்கப்படாவிட்டால்.

***

இந்த முதல் நாள் என்பது முக்கியமானது. இதை நான் அப்ஸராவுக்காக எழுதுகிறேன். ஒரு காலத்தில் நான் எழுதியதை அவள் வாசித்துப் பார்ப்பாள். அப்போது அவளுக்கு தன்னுடைய முதல் நாள் எப்படி இருந்தது என்பது புரியும். அவளாக இதை எழுத முடியாது. ஏனென்றால் அவளுக்கு இப்பொழுதுதான் பத்து மாதம் நடக்கிறது.

ஒரு குழந்தைக்கு முதல் பத்து மாதம் மிகவும் முக்கியம் என்று சொல்கிறார்கள். தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் காலம் சரியாக 280 நாட்கள். இதை பத்து பெளர்ணமிகள் என்றும் சொல்லலாம். பத்து முறை சந்திரன் பூமியைச் சுற்றிய காலம். அல்லது பத்து முறை சந்திரன் தன்னைத்தானே சுற்றிய காலம். இரண்டும் ஒன்றுதான்.

ஒரு குழந்தை தாயின் கருவிலே பத்து மாதம் இருந்துவிட்டு முற்றிலும் அந்நியமான உலகத்துக்குள் வருகிறது. இந்த புது உலகத்தில் மூச்சு விடவும், வாயினால் உண்ண வும் பழகுகிறது. பத்து மாதம் பூரணமாகும் போது அது கர்ப்பத்தில் வாழ்ந்த காலமும், வெளியுலகில் வாழ்ந்த காலமும் சமமாகிறது. பத்து மாதத்திற்குப் பிறகுதான் குழந்தை முழுக்க முழுக்க வெளியுலக வாசியாகிறது.

அதி வேக விமானத்தில் பறக்கும் போது ஒலி அரணைக்கடக்கும் அந்த விநாடியில் கிளிக் என்று ஒரு சத்தம் கேட்கும். அதுபோல குழந்தைகளும் பத்து மாதக் கெடுவைத் தாண்டும் போது ஒரு சிறு அதிர்ச்சி அடைகிறார். கள். அப்ஸராவுக்கு பத்து மாதம் பூர்த்தியாகிவிட்டது. சப்பணம் கட்டி உட்காருவாள். வேகமாகத் தவழுவாள். எழுந்து நிற்பாள். ஆனால் நடக்க மாட்டாள். ஒவ்வொருமுறை பொக்டரிடம் போகும் போதும் அவளுடைய நீளத்தை அளந்து 24 இன்ச், 26 இன்ச் என்று குறித்துக்கொள்வார்கள். இப்பொழுது உயரம் 29 இன்ச் என்று குறித்து வைக்கிறார்கள்.

கால்களின் உபயோகம் இப்பொழுதுதான் அவளுக்குத் தெரிகிறது. இவ்வளவு காலமும் கீழ்மேலாகத் தெரிந்த உலகத்தை முதல் முறையாக பக்கவாட்டில் பார்க்கிறாள். எல்லாமே மாறிவிட்டது. அவளுக்கு வேண்டிய பொருளை அவளாகவே தவழ்ந்து போய் எடுத்துக் கொள்ள லாம். மற்றவர்கள் தயவு தேவையில்லை. அவள் இப்பொழுது சிந்திக்கும் திறமுடைய ஒரு தனி ஆள்.

என்னுடைய மகள் குழந்தைகள் காப்பகம் ஒன்றைத் தேடினாள். வேலைக்குப் போகும் போது அப்ஸராவை அங்கே விட்டுப் போகலாம். நல்ல காப்பகமாக இருக்கவேண்டும். வீட்டுக்கு அண்மையில் உள்ள மூன்று காப்பகங்களுக்கு கணவனும், மனைவியுமாக போய்ப் பார்த்தார்கள். அதிலே ஒன்று பிடித்திருந்தது. பளிச்சென்ற விசாலமான கட்டடம். புதிதாகக் கட்டியது. அதிலே ஒரு விசேஷம் இருந்தது. மற்ற டே கேர் போல சாதாரண வீடாகக் கட்டி பின்பு டே கேராக மாற்றப்பட்டதல்ல. ஒரு முழு ஏக்கரில் முற்றிலும் குழந்தைகளுக்காகக் கட்டப்பட்டது. ஒரு குழந்தை கட்டடக் கலைஞர் நிர்மாணித்து, ஒரு குழந்தை என்ஜினியர் கட்டியது போல. இங்கே பெரியவர்கள்தான் அட்ஜஸ்ட் பண்ணிப் போக வேண்டும்.

உதாரணம் இங்கே இருந்த தண்ணீர் போக்கி, கொம்மோட் போன்றவை குழந்தைகள் உயரத்துக்கு கட்டப்பட்டிருந்தன. குழந்தை களுக்கு எட்டாத உயரத்தில் பிளக் ஓட்டைகள். சின்னக்கைகள் அம்பிடும் தள்ளு லாச்சிகளோ, கப்போர்டுகளோ இல்லை. வயர்கள் இல்லை. விழுந்தால் கால்களில் உராய்வு ஏற்படாத மாதிரி தரை அமைப்பு. அவர்கள் திறக்க முடியாதபடி கதவுகள், சாளரங்கள் என்று முன் எச்சரிக்கையுடன் அமைக்கப்பட்டிருந்தன. வெப்பதட்ப சாதனங்கள் கூட குழந்தைகளுக்கு சௌகரியமான அளவில் இயங்கின.

ஆனால் பெற்றோர்கள் சமாளித்துப் போக வேண்டும். கதவுகளுக்கு கடவு இலக்கங்கள் இருந்தன. அதை ஞாபகத்தில் வைத்திருக்கும் பெரியவர்கள் உள்ளே போய் வரலாம். குறிப்பிட்ட எல்லைகளைத் தாண்டி குழந்தைகளிடம் ஒருவரும் அணுக முடியாது.

இந்த காப்பகம் என் மகளுக்கு நல்லாகப் பிடித்துக்கொண்டது. ஆனால் ஒரு பிரச்சினை இருந்தது. அப்ஸரா இன்னும் தளர் நடைப் (toddler) பருவத்தை எட்டவில்லை . கைக்குழந்தை (infant) வகுப்பில் அவளுக்கு இடமில்லை. ஆகவே அப்ஸராவின் பெயரைப் பதிவு செய்துவிட்டு வந்து அவள் நடக்கத் தொடங்கும் நாளுக்காகக் காத்திருந்தோம்.

மழை பெய்து நிலம் நனைந்த ஒருநாள் மாலை. எங்கள் வீட்டு செல்ல நாய் ஈரமான இலைகளின் கீழ் மோந்து கொண்டு திரிந்தது. அப்ஸராவின் 13வது மாதம். திடீரென்று தானாக ஒருவர் உதவியும் இன்றி நாலு அடிகள் வைத்து நடந்தாள். அன்றுதான் அப்ஸரா உத்தியோகபூர்வமாக தளர் நடைப் பருவம் அடைந்ததாக ஏற்கப்பட்டாள்.

அடுத்த வாரம் என் மகளும், கணவனும் அவளை toddler வகுப்பில் சேர்க்கத் தீர்மானித்தார்கள். அதற்கான பல ஆயத்தங்கள் நடந்தன. உடை பால், கட்டி உணவு, தொப்பி, சப்பாத்து, மேல் உடை தண்ணீரில் நடக்கக் கூடிய சப்பாத்து (பூட்ஸ் அல்ல) போன்றவை அடக்கம்.

ஒருநாள் காலை இருவரும் அப்ஸராவை வெளிக்கிடுத்தி, காரின் பின் சீட்டில், முன் பார்க்கும் குழந்தை இருக்கையில் இருத்தி கட்டிக் கொண்டு சென்றார்கள். நானும் பின் இருக்கையில் அப்ஸராவுக்கு பக்கத்தில் உட்கார்ந்து போனேன். என் தொழில் ஒரு பார்வையாளனுடையது மட்டுமே என்று டே கேர் வருவதற்கிடையில் நாலுதரம் திருப்பி திருப்பி என் மகளால் நினைவூட்டப்பட்டேன்.

அங்கே அப்ஸராவின் வகுப்பில் இரண்டு காப்பாளினிகள். அப்ஸராவையும் சேர்த்து வகுப்பில் ஐந்து குழந்தைகள். அவர்களுக்கு அளவான மேசைகள், கதிரைகள், சாப்பாட்டு மேசைகள், படுக்கைகள், சிறு வீடுகள், பொம்மைகள், புத்தகங்கள் என்று எல்லாமே தயாராக இருந்தன. ஆனால் அப்ஸரா இன்னும் தயாராக இல்லை. காப்பாளினி களிடம் அவளுக்கு ஒருவித பயமும் இல்லை . ஆனால் இது யார் இப்படி அசிங்கமாக நாப்பி கட்டியபடி தள்ளாடி நடப்பவர்கள். அவளுக்கு பயமாகி விட்டது. தாயைக் கட்டிப் பிடித்து முதலில் சிணுங்கினாள். பிறகு மெள்ள மெள்ள அழுகையை உயர்த்தி இறுதியில் இனிமேல் இல்லை என்பது போல கழுத்தைக் கட்டிக்கொண்டு வீரிட்டாள். குறட்டினால் கிளப்புவது போல ஒவ்வொரு விரலையும் பிரித்தெடுத்து தாயையும், பிள்ளையையும் வேறுவேறாக்க வேண்டி வந்தது.

என் மகள் சிறிது நேரம் அவளுடன் சேர்ந்து விளையாடினாள். அவளுக்கு பராக்கு காட்டிவிட்டு மெதுவாக நழுவுவதுதான் எண்ணம் அப்ஸராவுக்கு புரியவில்லை. எதற்காக இந்த அபத்தமான ஏற்பாடு. வீடு நல்லாய்த்தானே இருக்கிறது. இங்கே ஏன் வந்து இருக்கிறார்கள். கண்களில் மிரட்சியுடன் சுற்றுமுற்றும் ஆராய்ந்தாள். ஏதோ சரியில்லை என்பது அவளுக்கு விளங்கிவிட்டது. அந்தப் பெற்றோர்கள் அவள் கண்கள் திரும்பிய ஒரு கணத்தில் மறைந்துவிட்டார்கள்.

இது நடந்தது காலை ஏழு மணிக்கு.

அப்ஸரா தொடர்ந்து இரண்டு மணி நேரம் கதறினாள். அந்தக் களைப்பில் அயர்ந்து நித்திரையானாள். பிறகு எழும்பியதும் தனக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத முகங்களைக் கண்டு மீண்டும் அழுதாள். தளர் நடையில் நகர்ந்து தேடி தன் மேலங்கியை எடுத்து டீச்சரிடம் நீட்டினாள். அதை அணிவித்து அவளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அந்த சின்ன விஷயம் இந்தப் பெரிய டீச்சருக்கு தெரியவில்லை =.

எனக்கு காப்பகத்தில் இருந்து தொலை பேசி வந்த போது மணி 11.00 நான் புறப்பட்டேன்.

கடவு எண்ணை சரியாகப் பதிந்து உள்ளே நுழைந்தேன். கதவுக்கு வெளியே நின்று கண்ணாடி வழியே மெள்ள எட்டிப்பார்த்தேன். எல்லோரும் ஒதுக்கிவிட்ட ஒரு மூலையில், அநாதரவான தன் நிலையில் என்ன செய்யலாம் என்று தன் சின்ன மூளையில் யோசித்தபடி அப்ஸரா நின்றாள். என் நெஞ்சில் ஓங்கி அறைந்தது போல இருந்தது. திடீரென்று அவள் கண்கள் மின்னின. மறைந்து நின்ற என் முகத்தில் கால்வாசிக்கும் குறைவாகத்தான் தெரிந்திருக்கும். எப்படியோ பார்த்துவிட்டாள். வீல் என்று கத்தினாள். நான் பதைபதைத்து உள்ளே ஓடினேன். தூக்கி நெஞ்சோடு அணைத்தேன். நான் வந்திட்டன், நான் வந்திட்டன்’ என்று ஆயிரம் முறை சொன்னேன். அவள் விம்மி விம்மி அழுதாள். அது ஏன்? சிரிக்க அல்லவா வேண்டும். எனக்குப் புரியவில்லை.

காரில் பின் சீட்டில் போட்டுக் கட்டினேன். மெள்ள மெள்ள அன்பான வார்த்தைகளை மிருதுவாகச் சொன்னபடி காரைக் கிளப்பினேன். எவ்வளவு ஆற்றியும் ஆறாத துக்கமாக அழுகை பீரிட்டுக்கொண்டே வந்தது. கண்ணீர் கொட்டியது. அந்த சின்ன மூளைக்குள் ஏதோ ஆழமான குழப்பம் நடந்து கொண்டிருந்தது.

கார் வேகம் பிடிக்க பிடிக்க அழுகை ஓயத் தொடங்கியது. இருந்தாலும் நடுங்கும் அவள் சொண்டுகளுக்குள் இருந்து பல சொற்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வந்தன. ‘கொடுமை’, ‘துரோகம்’ போன்ற வார்த் தைகள். இன்னும் பல புதிய வார்த்தைகளும் இருந்திருக்கலாம். நான்தான் இவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு, இவ்வளவு பெரிய மூளையை வைத்துக்கொண்டு, இன்னும் அவளுடைய பாஷையை கற்றுத் தேறவில்லையே.

***

அப்ஸரா தீவிரமாக சிந்திக்கிறாள். அவளுக்கு ஒரு வயது முடிந்துவிட்டது. இரண்டு கால்களையும் விரித்து வைத்து புறப்படுவாள் ஓர் இலக்கை நோக்கி. ஆனால் பாதி வழியிலேயே வேறு யோசனை வந்துவிடும். அங்கே போவாள். இப்படியே இலக்கில்லாமல் அவள் பயணம் நடக்கும். ஒரு நிமிடம் கூட ஓயமுடியாமல் அவள் கால்களும், கைகளும், மூளையும் துடித்தபடியே இருக்கும்,

சில இலக்கியவாதிகள் பாதி நாவலை எழுதி விட்டுவிட்டு இன்னொரு நாவலை தொடங்கிவிடுவார்கள். அது போலத்தான். பாதி வழியில் சடக்கென்று திரும்புவதென்றால் அந்த ஸ்பீடில் அப்ஸராவால் பா திருப்பம்’ போட முடியாது. அது தவிர பலவிதமான பாலன்ஸ் வித்தை களைச் செய்ய வேண்டும். ஒரு விமானம் தாங்கி கப்பல் போல பெரிய வட்டம் போட்டு திரும்புவாள். அப்படித் திரும்பி முடியும் போது வந்த காரியத்தை மறந்துவிடுவாள். பழையபடி இன்னுமொரு ஆரம்பம் அங்கே நிகழும்.

இந்த வயதில் இன்னுமொரு விசேஷம் என்னவென்றால் அவளுடைய மூளையின் ஞாபகத்திறம். எவ்வளவு தீவிரத்துடன் சிந்தனை போகிறதோ அவ்வளவு தீவிரத்துடன் மறந்துவிடுவது. நேற்று விளை யாடிய அதே பொம்மையைக் கொடுத்தவுடன் முகம் மலர்ந்து போகும். ஒரு சிரிப்பை வெளியே விடாமல் உள்ளே வைத்திருக்கும் போது கிடைக்கும் பிரகாசம் அந்த முகத்தில் வீசும். அன்றைக்குத்தான் கிடைத்த புது பொம்மை போல விளையாடுவாள்.

அவளுக்கு ஒவ்வொரு நாளும் புதியதே. அந்த முக மலர்ச்சிக்கு அதுதான் காரணம். ஒரு வயர் ஓடினால் அதை இழுத்துப் பார்க்க வேண்டும். டெலிபோனைக் கண்டால் அதன் கைபேசியை படுக்கையில் இருந்து கீழே தள்ளிவிட வேண்டும். ரிமோட்டைக் கண்டால் எடுத்து அமுக்கிப் பார்க்கவேண்டும்.

அப்ஸராவுக்கு ஒரு லட்சியம் உண்டு. டிவியின் தொலை இயக்கியை எங்கே கண்டாலும் அதைத் தாவி எடுப்பது. இந்தக் கருவியிலே 43 பட்டன்கள் இருக்கின்றன. நான் எண்ணியிருக்கிறேன். நாலே நாலு பட்டன்களின் செயல்பாடுகள் பற்றி நான் அறிவேன். மீதி 39 பட்டன் களின் வேலை பற்றி இந்த வருடம் முடிவதற்கிடையில் படித்துவிடலாம் என்று பெரிய பிளான் வைத்திருக்கிறேன். அப்ஸரா அது அத்தனையும் அறிவாள். இங்கே பட்டனை அமுக்கிக்கொண்டு டிவியில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை கவனிக்கிறாள். அதை அணைப்பாள், பிறகு உயிர் கொடுப்பாள். இன்னும் சானல்களை கண்டபடிக்கு மாற்றுவாள். சத்தத்தைக் கூட்டுவாள், குறைப்பாள் ; மௌனமாக்குவாள். குதிரை பாய்வது போல கறுப்பு வெள்ளைக் கோடுகளை ஓட வைப்பாள். பிறகு எவ்வளவு தூரம் போகிறது என்று பார்ப்பதற்காகரிமோட்டை எறிவாள். இவ்வளவும் நாங்கள் மும்முரமாக ஏதாவது முக்கியமான காட்சியை டிவியில் பார்க்கும் போது நடக்கும்.

அது பரவாயில்லை. அவளுடைய தடுப்பு வைத்த குட்டி படுக்கையில் படுத்திருக்கும் போது தன் வாயிலிருக்கும் சூப்பியை பிடுங்கி சுழற்றி எறிவாள். பிறகு அதை எடுத்துத் தரும் வரைக்கும் நிறுத்தாமல் அழுவாள். தந்ததும் மறுபடியும் எறிவாள். இதுவும் ஒரு தந்திரம்.

சரியாக இரவு ஒரு மணி அடிக்கும் போது இது நடக்கும். இவளுடைய வயிற்றுக்குள் biological clock ஒன்று வேலை செய்கிறது. சரி, எங்கே சூப்பியை எறிவாள். இவளுடைய படுக்கைக்கும், சுவருக்கும் இடையில் இரண்டு இன்ச் இடைவெளி இருக்கிறது. அதற்குள் எறிவாள். தரையில் படுத்திருந்து பிரயத்தனமாக துடைப்பான் குச்சியால் நகர்த்தி, நகர்த்தி சூப்பியை வெளியே கொண்டு வரவேண்டும். அப்படி பாடுபட்டு எடுத்து கொடுத்தால் உடனேயே இன்னொருமுறை எறிந்துவிடுகிறாள், அதே இடத்தில். படுக்கைக்கு கீழே படுத்தபடி ஒருவர் தன் வாழ்நாளில் எவ்வளவு மணித்தியாலங்களைக் கழிக்கமுடியும்.

பைபிளிலே ஒரு வாசகம் இருக்கிறது. இதுதான் பைபிளிலேயே மிகச் சிறியது. இரண்டே இரண்டு வார்த்தைகள்தான். Jesuswept.

புத்திமான்கள் எல்லோரும் வியக்கும்படியான ஒரு முழு வசனத்தை 13 மாதம் தாண்டாத அப்ஸரா பேசினாள். அதுவும் பைபிள் வசனத்தைப் போல இரண்டு வார்த்தைகள் கொண்டது. இதுவே அவள் பேசிய வசனங்களில் மிகவும் நீண்டதாகும்.

கட்டடத் துண்டுகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். நான் பக்கத்தில் இருந்து கண்காணித்தேன். அவளும் அடிக்கடி திரும்பிப் பார்த்து நான் இருக்கிறேனா என்பதை கண்காணித்தாள்.

திடீரென்று ‘I think’ என்றாள். இதுவே அவள் பேசிய மிகவும் நீண்ட வசனம். ஒரு புத்தரோ, நியூட்டனோ, சோக்கிரட்டீஸோ பேசவேண்டிய இந்த வசனத்தை அவள் பேசினாள். நான் பிறகு எத்தனையோ தரம் கெஞ்சியும் அவள் அந்த வசனத்தை திருப்பிச் சொல்லவில்லை. ஆழமான சிந்தனையில் இருக்கும் போது மட்டும்தான் பேசுவாள் போலும்.

நான் காத்திருக்கிறேன். இவள் தன் முதல் வசனத்தை இன்னும் நீட்டுவாள். பிரான்ஸ் நாட்டின் 16 ம் நூற்றாண்டு கணித மேதை Rene Descartes சொன்னார், ‘I think, therefore lam’ என்று. இந்த வசனத்தில் அடங்கிய தத்துவத்தை பேசித் தீர்த்துக்கொள்ள முடியவில்லை. உலகத்து தத்துவவாதிகள் இன்னும் திணறுகிறார்கள்.

அப்ஸரா துளிரும் அறிவு ஜீவி. அவளுடைய முதல் வசனம் இரண்டு வார்த்தைகளாக வெளியே வந்துவிட்டது. மீதி மூன்று வார்த்தைகளையும் இன்னும் சில நாட்களில் சொல்லி விடுவாள். நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

***

ஒரு மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு காலை அன்னையருக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட இந்த தினம் அதிசயமான சப்தங்களுடன் விடிந்தது. படுத்திருந்தபடியே காதுகளைக் கூர்மையாக்கினேன். கிளைகள் முறியும் ஒலி; தழைகள் அசையும் ஒலி. மெதுவாக கதவைத் திறந்து வெளியே வந்தால் என் தோள் உயரத்துக்கு வளர்ந்த இரண்டு மான்கள் வேலி ஓரத்துக் கிளைகளை முறித்து மென்றுகொண்டிருந்தன. என்னுடைய அசைவுகளைப் பார்த்து அவை மிரளவில்லை. மனித இனத்துக்கு மிகவும் பழக்கப்பட்டவையாகக் காணப்பட்டபோதும் தலையை நிமிர்த்தி இருபக்கமும் பார்த்தபடி சாப்பிட்டன.

அப்ஸரா என் நாரியில் உட்கார்ந்து சவாரி செய்தபடி என்னை ம்,ம்’ என்று விரட்டினாள். அவளுடைய கண்கள் பக்கத்துப் பக்கத்தில் தொடாமல் இருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் போல ஒளி விட்டன. நான் அந்த மான்களைத் தொடும் தூரத்துக்கு வந்துவிட்டேன். அப்பவும் அவை எங்களை சட்டை செய்யவில்லை =. அவற்றின் பெயர் white tail deer என்றும், பொஸ்டன் நகரின் பாதுகாக்கப்பட்ட காடுகளில் சுதந்திரமாக வாழுகின்றன என்றும் பின்னால் தெரிந்து கொள்வேன். திடீரென்று இரண்டு மான்களும் ஒரே சமயத்தில் துள்ளி எழும்பின. பின் சடாரென்று திரும்பி குறைக்கப்பட்ட வேகத்தில் ஓடி மறைந்தன.

அப்ஸரா அழத்தொடங்கினாள். உலகத்தில் அவள் என்ன கேட்டாலும் அதை நான் நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கை அவளுக்கு. உடம்பின் சகல பாகங்களையும் துணைக்கு அழைத்துச் செய்யும் வேலைகள் எனக்கு பிடிக்காது. அவளை இடுப்பில் வைத்துக்கொண்டு, வேலியைத் தாண்டி, தேசிங்கு ராஜாபோல ஒரு குதிரை வேகத்தில் நான் விரைய வேண்டும் என்று அவள் எதிர்பார்த்தாள். அன்றைய நாள் சரியாகப் போகவேண்டு மானால் மான்களை நான் எப்படியும் திரும்ப அழைக்க வேண்டும். ராமர் சிறு குழந்தையாக இருந்தபோது சந்திரனை கையில் எடுத்துத் தரச் சொல்லி அழுதார். மதியூக மந்திரி சுமந்திரன் கண்ணாடியில் சந்திரனைப் பிடித்துக் கொடுத்து ஏமாற்றினாராம். ஆனால் மறைந்துவிட்ட மானை திரும்ப அழைப்பதற்கு சுமந்திரன் என்ன தந்திரம் செய்திருப்பாரோ.

ஒரு பதின்மூன்று மாதங்கள் வயதான மூளையை ஏமாற்றுவது சுலபம். அப்ஸராவுக்கு ஏதாவது விளையாட்டு காட்டினால் சரி. பிரமாத மாக ஒன்றுமில்லை, ஒரு தேயிலைப்பையை அதில் தொங்கும் நூலுடன் கொடுத்தாலே போதுமானது.

அவள் ஒரே விளையாட்டைத்திருப்பித்திருப்பி விளையாடும் பழக்கம் உடையவள் அல்ல. உங்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் அவளுக்கு ஏற்படவேண்டுமானால் பல புதிய விளையாட்டுகளை சிருஷ்டித்துக் காட்டும் திறமை உங்களுக்கு இருக்க வேண்டும். அவளிடம் பலவிதமான விளையாட்டுப் பொருள்களும், வண்ணவண்ணப் புத்தகங்களும், மிருதுவான துணிப் பொம்மைகளும், பட்டரியில் இயங்கி நகரும், பாடும், மணி அடிக்கும் சாதனங்களும் இருந்தன. ஆனால் சில வேளைகளில் ஒரு போத்தலின் மூடி முக்கியமான விளையாட்டுப் பொருள் ஆகிவிடும். இன்னும் சில சமயங்களில் ஐந்து வருடத்திற்கு முந்திய கிறிஸ்மஸ் அட்டையைத் தூக்கிக்கொண்டு பல தேசங்களுக்கு பயணித்துத் திரும்பு வாள், பிடியை விடாமல்.

ஒரு மத்தியான வேளை அவளுடைய நித்திரை நேரம் தாண்டிவிட்டது. பல விளையாட்டுகளை விளையாடினாள். புத்தகங்களை நான் வாசிக்க அவள் கேட்டாள். இடைக்கிடை அவள் மூளை வேறு திசையில் போய்விடும். தடித்த அட்டைப் புத்தகம். அதைத் திருப்பி வைத்தால் எகிப்து கோபுரம் போல நிற்கும். கவனம் திரும்பியதும் கதையை விட்ட இடத்திலிருந்து மறுபடியும் தொடரலாம். மழலைப் பாடல்களை நான் பாட அவள் ஆடினாள். கட்டடக்கட்டிகளை வைத்து பல கோபுரங்களைக் கட்டினேன். அவள் உடைத்தாள். இன்னொரு முறை கட்டினேன். அவள் உடைத்தாள். அவள் அகராதியில் விளையாடுவதும் அழிவு செய்வதும் ஒன்றே. பெரிய வித்தியாசம் இல்லை.

ஒளித்து விளையாடினோம். மேசைக்கு அடியிலோ, கட்டிலின் பின்னாலோ ஒளித்து விட்டு தலையை நத்தை போல நீட்டுவாள். நான் அந்தத் தலை நீளும் சமயத்தில் அதைப் பார்த்து கண்டிட்டேன்’ என்று சொல்ல வேண்டும். அவள் இக் இக்’ என்று நாரியில் வளைந்து சிரிப்பாள். இருபதாவது தடவை விளையாடிய பிறகு இந்த சிரிப்பு போலிச் சிரிப்பாக மாறிவிடும். பிறகு இன்னொரு விளையாட்டு ஆரம்ப மாகும்.

அப்ஸராவின் தலை, அவள் முழுக்க எழும்பி நின்றாலும் என் முழங்கால் அளவுக்கே வரும். பக்கவாட்டில் அவள் பார்க்கக்கூடிய உயரமான தூரம் என் முழங்கால் சில்லுகள்தான். அடிக்கடி ஓடிவந்து தன் தலையை முழங்காலுடன் மோதிவிடுவாள். அவளுக்கு ஒரு சிறிய மரக்குதிரை இருந்தது. அதில் ஏற்றி விடுவேன். அவசரமாக இறங்கி தன் கதிரையில் ஏறி அமர்வாள். பிறகு அதுவும் அலுத்துப்போய் என் மடியில் ஏறுவாள். ஒரு கோல்டிலொக் போல மாறி மாறி உட்காருவாள்.

அப்ஸராவை மடியில் இருத்தி சூப்பியை கொடுத்துத் தாலாட்ட முயன்றேன். துள்ளி எழும்பி விட்டாள். அவள் மயங்கிய சமயம் மெதுவாக படுக்கையில் கிடத்தி இரண்டு சிறு தலையணைகளை பக்கத்தில் அடுக்கி சூப்பியை வாயில் பூட்டி, அவளுக்கு பிடித்த இசைப் பாடல்களை வைத்தேன். சரியாக 20 செகண்ட் கழித்து எழும்பி சட்டங் களைப் பிடித்து ஆட்டிக்கொண்டு நின்றாள். நித்திரை போகும் சிந்த னையே இல்லை. மறுபடியும் விளையாட்டு.

சரி ‘ஆ போ’ விளையாட்டை ஆரம்பித்தோம். தலையிலே சிறு குட்டையை வைத்துவிட்டு அப்ஸரா முழங்காலில் இருந்து வளைந்து தலையால் தரையைத் தொடுவாள். நான் ஆ போ’ சொல்ல வேண்டும். குட்டை தரையில் விழும். நாங்கள் கையைத் தட்டுவோம். நான் குட்டையை எடுத்து மறுபடியும் அவள் தலையில் வைப்பேன். இன்னொருமுறை விளையாட்டு தொடரும்.

இந்த விளையாட்டை 26 தடவை விளையாடினோம். 27 வது தடவை தலையைக் கீழே வைத்தவள் அதை திரும்பவும் எடுக்கவில்லை. முழங்காலை மடித்து ஓர் அலங்காரப் பந்தல் வளைவுபோல இருந்தாள். தொட்டுப் பார்த்தேன். அசையவில்லை. தலையையும் முழங்காலையும் மட்டுமே பதித்து பாலன்ஸ் செய்தபடி தூங்கிவிட்டாள். எங்கோ ஒளித் திருந்த நித்திரை அவள் தலையை வைத்ததற்கும், அதை எடுப்பதற்கும் இடையில் இருந்த ஒரு செக்கண்டில் வந்து மூடிவிட்டது. ஒரு தொட்டாற் சிணுங்கி இலைபோல அவள் பட்டென்று சுருங்கிப்போய் கிடந்தாள்.

நித்திரையால் எழும்பியதும் முதல் ஐந்து நிமிடங்கள் தள்ளாடியபடி நடப்பாள். இந்த உலகத்தோடு தொடர்பு இலகுவில் கிடைத்துவிடாது. படிப்படியாக அவளுடைய energy level அதிகரிக்கும். பிறகு உச்சத்தை அடையும்.

அப்ஸராவின் அற்புதமான நேரம் குளிக்க வார்த்து, பால் குடிக்க வைத்த பிறகு தொடங்கும். இப்படி பால் குடித்த அரை மணி நேரத்தில் அவள் படுக்கைக்கு போய்விடுவாள். ஆனால் இந்த அரை மணி நேரத்தில் அவளுடைய energy உச்சத்தில் இருக்கும். சிரிப்பும், பாட்டும், டான்ஸும் விளையாட்டுமாக ஒரே அமர்க்களம்தான்.

ஒரு நாள் இந்தப் பொன்னான நேரத்தை வீணாக்கக்கூடாது என்று ஒரு பயிற்சி கொடுக்க முடிவு செய்தேன். முழு நேரப் பயிற்சி. அவளும் உற்சாகம் குறையாமல் பயின்றாள். பயிற்சி இதுதான்.

அம்மா சுட்ட தோசை
அப்பா முறுக்கிய மீசை
தின்ன தின்ன ஆசை
விளக்குமாத்து பூசை.

இந்தப் பாடலை நான் திருப்பித் திருப்பி பாடவேண்டும். கடைசி வரியில் விளக்குமாத்து என்று சொல்லிவிட்டு பேசாமல் இருப்பேன். அவள் பூயை’ என்று சொல்லி அந்த மழலைப் பாடலை முடிப்பாள். இது தான் நாங்கள் விளையாடிய அந்தாக்ஷரி ‘ விளையாட்டு பயிற்சி மிகவும் வெற்றிகரமாக நடந்தது.

இது தொடர்ந்து ஒரு வாரம் கொடுக்கப்பட்டது. பால் குடித்த பிறகு ஆனால் படுக்கைக்கு முதல். விளக்குமாத்து’ என்று விட்டு மௌன மாவேன், அவள் பூயை என்று சொல்லி முடிப்பாள்.

சரி, training முடிந்தது. இனி ஆட்கள் பார்க்க வேண்டிய சமயம். ஒரு நாள் இரண்டு விருந்தினர்கள் வந்திருக்கும் போது இந்தப் பாடலைப் பாடினேன். ‘விளக்குமாத்து? விளக்குமாத்து?” அப்ஸராவின் சொண்டுகள் ஒட்டிப் போய் இருந்தன.

நான் விருந்தினர்களிடம் கதையை மாற்றினேன். ஏதோ பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரம் சென்றது. அப்ஸரா என் முழங் கால்களைத் தொட்டாள். எனக்கு மட்டும் கேட்கும் மெதுவான குரலில் ‘பூயை என்றாள். பாவம், அவ்வளவு நேரமும் அவள் அந்த வார்த்தையை தேடியபடி இருந்திருக்கிறாள். ஒரு பெரும் சிரிப்பை என் முகத்தில் எதிர் பார்த்தபடி மீண்டும் பூயை என்றாள்.

எனக்கு பாவமாக இருந்தது. இந்தச் சிறுவயதில் மறக்கும் உரிமையைக் கூட பிடுங்குவது மகா சின்னத்தனமாகப் பட்டது. மூளையின் பெருமை அதன் நினைவுத்திறனில் கிடையாது; மறக்கும் திறனில் தான் இருக்கிறது. அவள் பெரியவளானதும் அவள் மூளையின் ஞாபக சக்தியை உறிஞ்சுவதற்கு பல காரியங்கள் காத்திருக்கும். பல எண்களை நினைவில் வைக்கவேண்டும். சமூகப் பாதுகாப்பு எண்; கம்ப்யூட்டர் கடவு எண்; கடன் அட்டை எண். வீட்டு காவல் எண். இப்படி எண்ணமுடியாத எண்கள். அந்த அப்பியாசத்தை இப்பொழுதே தொடங்குவதற்கு என்ன கேடு!

நான் உடனே என் பயிற்சியை நிறுத்திவிட்டேன். பூசை’ என்று அவள் இன்று சொன்னால் என்ன? நாளை சொன்னால் என்ன? ஒரு வருடம் கழித்துச் சொன்னால் தான் என்ன? மூழ்கியாவிடப் போகிறது !

மறதிக்கு போதிய அவகாசம் தருவது எவ்வளவு இன்பகரமானது. இந்தப் பிராயத்திலேயே மூளையைக் கசக்கி அதன் ஒவ்வொரு ஓட்டை யையும் நிரப்பவேண்டுமா? அப்ஸரா நாடியை நெஞ்சிலே தொடும்படி வைத்து, கீழ்க்கண்ணால் பார்த்தபடி சோகமாக நின்றாள். எனக்கு சந்தோசமூட்டுவதுதான் ஒரே நோக்கம். மறுபடியும் ‘பூயை’ என்றாள்.

***

ஒரு வயதுகூட தாண்டாத குழந்தைக்கு புத்தகங்களில் எப்படி பிரியம் ஏற்படும். இது ஓர் அதிசயம்தான். ஏனென்றால் அப்ஸரா உலகத்துக் குழந்தைகளைப்போல மிருதுவான துணிப் பொம்மைகளை வைத்து விளையாடுவதில்லை. புத்தகங்கள்தான் வேண்டும்.

என் மனைவியிடம் இருந்து அடிக்கடி எழும்பும் முறைப்பாடு ஒன்று உண்டு. படுக்கையில் ஒரு புத்தகம் விரித்தபடி கிடக்கும். படுக்கைக்கு பக்கத்திலுள்ள மேசையில் இரண்டு புத்தகங்கள் பிரித்த நிலையில், இனிமேல் எப்பொழுது நான் தொடுவேன் என்ற எதிர்பார்ப்போடு. என் படிப்பு அறையில் சில புத்தகங்கள், அவையும் திறந்து விட்ட நிலையில் என்னைக் குலைக்கப் பார்க்கும். இது தவிர பாத்ரூமில் ஒன்றிரண்டு புத்தகங்கள்.

என் மனைவி மணம் முடித்த புதிதில் இருந்து கேட்டு வரும் கேள்வி இதுதான். அது எப்படி ஒரு நேரத்தில் ஒரு மனிதர் ஏழு புத்தகங்களைப் படிக்க முடியும்.

இந்தக் கேள்வியை இப்பொழுது அவள் கேட்பதில்லை. ஏனென்றால் அப்ஸராவும் அதையேதான் செய்கிறாள்.

அப்ஸரா பிற்பகல் இரண்டு மணிக்கு நித்திரைக்குப் போவாள். சரியாக மூன்று மணி மட்டும், சில வேளைகளில் நல்ல கனவுகள் வாய்த்தால், மூன்றரை மட்டும் தூங்குவாள். நான் காத்திருப்பேன். அவள் நித்திரை முறிந்து தானாக அந்த உலகத்தில் இருந்து இந்த உலகத்துக்கு வரும் காட்சியை காண்பதற்காக நான் பக்கத்திலேயே இருப்பேன்.

அவள் எழும்புவது ஒரு சூரிய உதயம் போல இருக்கும். ஆயிரம் தடவை சூரியன் உதிப்பதை பார்த்தாலும் 100 வது தடவை அது புதுசாகத் தானே தோன்றும். அப்படி ஓர் அழகு. எழுந்ததும் புது அதிர்ச்சியுடன் சுற்றிலும் பார்ப்பாள். பிறகு மெதுவாக அவள் சின்ன மூளைக்குள் சின்ன ஞாபகங்கள் வரும். என்னைப் பார்ப்பாள். மூளையில் ஒரு தொடர்பு கிடைக்கும். சிரிப்பாள். அந்தப் புன்னகைக்கு இந்த உலகத்தில் ஈடு ஏதாவது உண்டா? நான் அள்ளிக்கொள்வேன்.

அந்தக் கணமே மறுபடியும் அடுத்த நாள் மூன்று மணிக்காக ஏங்கத் தொடங்குவேன்.

அப்ஸராவிடம் இருப்பதெல்லாம் அழகழகாக வர்ணப் படம் போட்ட வழுவழுப்பான தாளில் அச்சடித்த, கெட்டியான அட்டை போட்ட புத்தகங்கள், மழலைப் பாடல்கள், கதைகள் இப்படி பிரமாதமாக இருக்கும். அவை எல்லாம் ஒரே நேரத்தில் அப்ஸராவின் வருகையை எதிர்பார்த்து திறந்த நிலையில் கிடக்கும் கொள்கையை வைத்திருந்தன.

அப்ஸராவை மடியில் வைத்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிக் கொண்டே வரவேண்டும். ஒரு பக்கம் படத்தை பார்க்கும் போது அடுத்த பக்கம் என்ன வரும் என்ற ஆவலில் குனிந்து பார்ப்பாள். அடுத்த பக்கம் திருப்பியதும் அதில் என்ன என்று பார்க்காமல் மீண்டும் குனிந்து பார்ப்பாள். இப்படி அவளுடைய ஆவல் தீர்க்கமுடியாதபடி வளர்ந்து கொண்டே இருக்கும்.

சில வேளைகளில் தானாகவே பக்கத்தைத் திருப்பிப் பார்ப்பதும் உண்டு. அப்பொழுதும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவளுடைய நற்குணங்களில் ஒன்று அல்ல. ஒரு பக்கம், ஐந்து பக்கம், பத்து பக்கம் என்று புரட்டி முடித்து விடுவாள்.

இன்னும் சில சமயங்களில் அவளுடைய புத்தகங்கள் அவளிலும் பெரிசாக இருக்கும். அல்லது அவளுடைய எடையிலும் கூடியதாக இருக்கும். இவை எல்லாம் அவளுடைய முயற்சியின் வேகத்தைக் குறைக்க முடியாது. தூக்குவாள், முடியாவிட்டால் இழுத்துக்கொண்டு வருவாள். மறுபடியும் முதலில் இருந்து பாட்டுக்களைப் பாடவேண்டும். ராகங்களை மாற்றக்கூடாது. அந்தந்த பாட்டுக்கு அந்தந்த ராகம் என்ற வரையறை உண்டு. அப்படி மாற்றினால் இருந்த இருப்பில் தலையை மட்டும் 180 டிகிரி திருப்பி முகத்தைப் பார்ப்பாள். ஏதோ பிழை நடந்து விட்டது.

Humpty Dumpty பாட்டு அவளுக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் பாட்டு வரும் பக்கத்தில் சிவப்பும், மஞ்சளும், நீலமும் சேர்ந்த கலரில் பெரிய முட்டையும், அதற்கு ஏற்ற மாதிரி கைகளும், கால்களும் வரைந்து இருக்கும். இந்தப் பாடலை உரத்துப் படிக்க வேண்டும். ஒவ்வொரு வரிக்கும் நாலு தாளத்தட்டு உண்டு. அதை மறக்கக்கூடாது.

‘Fall’ என்ற வார்த்தை வரும்போது கீழே நிலத்தில் படு பயங்கரமாக விழுவது போல நடிக்க வேண்டும். இந்தப் பயிற்சியில் தேர்ந்தவர்களே இதை வெற்றிகரமாகச் செய்து முடிக்கலாம். பாட்டு முடியும் போது பரவசமாகி புத்தகத்தின் மேல் பாய்வாள். புதுமைப்பித்தன் கூறியது போல எதையும் அழுத்தமாக படித்து அறியும் ஆவல் அதிகம் அவளுக்கு. Humpty Dumpty யின் மேல் அழுத்தமாக ஏறி உட்கார்ந்துவிடுவாள். சுவரில் இருந்து அப்பொழுதுதான் விழுந்தவன் மேல் இப்படி ஏறி மிதிப்பது அத்து மீறியது என்பது அவளுக்குப் புரிவதே இல்லை.

இப்படி அவளிடம் கட்டுக்கட்டாக வண்ணப் புத்தகங்கள் இருந்தாலும், அவளுடைய அறிவுத் தாகம் லேசில் அடங்கும் தன்மையானது அல்ல. அவள் செய்யும் செயல்களும் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.

அப்ஸரா இப்பொழுதுதான் தத்தக்க புத்தக்க என்று நடக்கத் தொடங்கி யிருந்தாள். தளர் நடைப் பருவம். ஆரம்பம்தானே, மெல்ல மெல்ல அடி எடுத்து வைப்பாள் என்று நினைத்தேன். ஏதோ தன் பயணம் முடிவதற் கிடையில் நிலம் முடிந்துவிடும் என்பது போல அவசரத்துடன் ஓடிக் கடப்பாள். சர்க்கஸ்காரர்கள் கைகளைப் பக்கவாட்டில் நீட்டுவார்கள், ஒரு சமநிலை கிடைப்பதற்காக. இன்னும் சில குழந்தைகள் கைகளை முன்னே நீட்டுவதையும் பார்த்திருக்கிறேன். அப்ஸரா இரண்டு கைகளையும் பின்னே நீட்டுவாள். அப்படியும் பாலன்ஸ் கிடைக்காது. நிறையப் பால் குடித்திருப்பதால் தளும்பும் வயிறு. அந்த பாரத்தை ஈடுகட்டுவதற்காக அவளாகக் கண்டு பிடித்த ஒரு யுக்தியாக இது இருக்கலாம்.

ஜெயமோகன் என்ற பிரபல எழுத்தாளர் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். 175 பக்கங்கள் கொண்டது, ஆனாலும் ஆயிரம் பக்கங்களுக்கு சமம். அதில் ஒரு படம் கூட கிடையாது. அவ்வளவும் அச்சடித்த எழுத்துக்கள்தான். அதுகூட அவசரத்தில் படிக்கக்கூடிய புத்தகம் இல்லை. ஆழமான விஷயங்கள் கொண்ட புத்தகம் என்ற படியால் ஒரு வாரம் தொடர்ந்து படித்தால் தான் முடிக்க முடியும். அப்படி முடிக்கும்போது அரைவாசிதான் விளங்கும்.

அப்ஸரா எங்கோ இருந்து குடுகுடுவென்று ஓடி வருவாள். மின்னல் போல புத்தகத் தட்டுக்கு நேரே போய் அங்கே அடுக்கி வைத்திருக்கும் அத்தனை புத்தகங்களிலும் இந்த தத்துவப் புத்தகத்தை மாத்திரம் எப்படியோ கண்டுபிடித்து இழுத்து தூக்குவாள். தூக்கிய கணமே இது அனுமதிக்கப்பட்ட காரியம் இல்லை என்பது அவளுக்கு புரிந்து போகும். அதைத் தூக்கிக்கொண்டு ஓடத் தொடங்குவாள்.

நான் பின்னால் ஓடுவேன். பிடுங்கினால் இன்னும் பெரிய ஆபத்து. அழுவாள். ஆகவே அவள் பின்னால் அலைந்து நயமாகக் கேட்பேன். இன்னும் வேகம் கூட்டுவாள். விழுவாள். எழும்புவாள். ஓடுவாள். புத்தகப் பிடியை விடமாட்டாள்.

என்னுடைய பெரிய மூளையைப் பாவித்து பண்டமாற்று முறையில் வண்ணப் புத்தகம் ஒன்றை ஆசை காட்டுவேன். கடிகார முள் திசைக்கு எதிராகத் திரும்பி இன்னும் ஓட்டம் கார் சாவியை கிலுக்கி குடுப்பேன். சந்தேகம் வலுத்து விடும். இன்னும் ஓட்டம். தொக்கையான சிவப்பு Felt Penல் அவளுக்கு ஒரு கண். அதைக் கொடுப்பேன். தன் சின்னக்கையால் தட்டிவிட்டு ஓடுவாள். ஒவ்வொரு நாளும் இது நடக்கும். ‘உறவு உறவு என்றாலும் பறியில் கை போடாதே’ என்று ஒரு சொல் வழக்கு எங்களூரில் உண்டு. அவளுடைய உடமையில் நான் எப்படி கை போடுவது. அவளாக திருப்பித் தந்தால்தான் உண்டு.

ஜெயமோகன் எழுதிய ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ புத்தகத்துக்கு இவ்வளவு ஆர்வமான 26 இன்ச் உயரமான வாசகி உலகத்தில் வேறு எங்கும் இருக்க முடியாது.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *