வனஜா என் தோழி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 9,711 
 

வனஜா என் நெருங்கிய தோழி. நாங்க ரெண்டு பெரும் ரொம்ப அன்னியோன்னியம். என் வீட்டுக்கு பக்கத்திலேதான் அவள் வீடும். ரெண்டு பேரும் ஒண்ணாதான் ஸ்கூல் போவோம். சாப்பிடுவோம். விளையாடுவோம். படிப்போம். அரட்டை அடிப்போம்.

இத்தனைக்கும், குணத்திலே நானும் அவளும் இரு துருவங்கள்.

நான் எப்பவுமே தைரியசாலி. ஆனால், அவள் எனக்கு நேரெதிர்.

வனஜாவிற்கு எதுக்கெடுத்தாலும், ஒரு பயம், வேண்டாத கவலை. அனாவசிய கற்பனையை வளர்த்துக் கொண்டு திகிலில் டென்ஷன் ஆகி விடுவாள்.

பதற்றத்திற்கு ஒரு ஸ்டாப் லாஸ் போடத்தெரியாது அவளுக்கு.

“ஏன் ராதா, பஸ் இன்னும் வரல்லியே, நாம ஸ்கூலுக்கு லேட் ஆயிடுவோமோ? மிஸ் முட்டி போடச்சொல்வாங்களோ? என்னப்பா பண்றது? என் அப்பாவை அழைச்சிகிட்டு வான்னு சொல்லிட்டா வீட்டிலே கொன்னுடுவாங்களே ?” .

சொல்லும்போதே கண்களில் அவளுக்கு குளம் கட்டி விடும். தொண்டை அடைக்கும்.

“ஒண்ணும் ஆகாது! சும்மா ருப்பாம, வேகமா நட. நேரத்துக்கு ஸ்கூலுக்கு போயிடலாம். நான் இருக்கேன். கவலைப் படாதே”. நான் சொல்வதை கேட்டுக் கொண்டு ஆட்டு குட்டி மாதிரி என் பின்னால் வருவாள். கூடவே அவள் முனகலும் தொடரும். “என்ன ஆகுமோ தெரியலியே? என்ன பண்ணுவேன்?” . “உஷ்! கம்முன்னு வா!” நான் அதட்டுவேன். ரெண்டு நிமிஷத்திற்கு பிறகு திரும்ப அதே பல்லவி, பாட ஆரம்பித்து விடுவாள்.

இது போல் நிறைய சம்பவங்கள். தெனாலி படத்தில் வரும் கமல் மாதிரி, வனஜாவுக்கு, கொஞ்சம் திறந்த கதவும் பயம், முழுசா மூடின கதவும் பயம். காடு பயம், நாடு பயம்,கூடு பயம் , குளம் பயம் , குளத்துக்குள் இருக்கும் நண்டு பயம், பூச்செண்டு கண்டாலும் பயம், சன கூட்டம் பயம் , தனிமை பயம், தொங்க பயம், தாவ பயம்., காசு பயம், மாசு பயம், தூசு பயம். அழுக்கு பயம், குளிக்க,பயம், ஆடை பயம், கடிக்கிற நாயும், பூனையும், பூனை திங்கிற எலியும் பயம். பயந்து பயந்து சாகிற சாதி.

அதனால் தானோ, என்னவோ, அவளுக்கு எப்போதும் என் துணை வேண்டும். என் ஆறுதல் பேச்சு அவளுக்கு தேவையாக இருந்தது. சொல் சுடும், மற்றவர் மனதை புண்ணாக்கும் என்பார்கள். ஆனால், என் சொல், அவளது புண்ணான மனதுக்கு மருந்தானது. எனக்கும் அவளுக்கு துணையாக இருப்பது பிடித்திருந்தது.

பள்ளி இறுதி பரீட்சையின் போது, “ஏன் ராதா! நான் பிளஸ் டூலே நல்ல மார்க் வாங்குவேனா? இல்லே எனக்கு புட்டுக்குமா? என்ன ஆகுமோ தெரியலியே ? 98% கீழே வாங்கினா, அப்பா முகத்திலே எப்படி முழிக்கிறது? எங்க அம்மாவுக்கு கொலவெறி வந்துடுமே? ஐயோ ! நினைச்சாலே மயக்கம் வரது ?” பயத்தில், வனஜா புத்தகத்தை மூடி வைத்து விடுவாள். ஊத்து மாதிரி கவலை அவளை அரிக்கும்.

”சும்மா டர் ஆகாதே வனஜா. நீ கண்டிப்பா நல்ல மார்க் வாங்குவே, இன்ஜினியரிங் சேருவே! பேசாம, கவலைய விட்டு இப்போ படி”.

நல்ல மார்க் ரெண்டு பேருமே வாங்கினோம். கேட்ட காலேஜ் ரெண்டு பேருக்குமே கிடைத்தது.

“ஏன் ராதா, எனக்கு ரொம்ப பயமாயிருக்கு! நிஜமா சொல்லு, எனக்கு கல்யாணமாகுமா? நான் ஒன்னும் கலர் இல்லியே. என் தல முடி வேறே கம்மி. எவன் பண்ணிக்குவான்? இல்லே இப்படியே தனியாவே நின்னுடுவேனோ? எல்லாரும் என்னை கேலி பண்ணுவாங்களே? எப்படி ராதா, பிரண்ட்ஸ் முகத்திலே விழிப்பேன்?”

“தோடா, வனஜா, சும்மா சீன் போடாதே! உனக்கென்ன குறைச்சல், கல்யாணம் கட்டாயம் ஆகும். மம்முட்டி மாதிரி அழகா ஒருத்தன் உன்னை கொத்தி கிட்டு போக வருவான் பார். அப்போ என்னை மறந்துடாதே தாயே!”

வழக்கம் போல, அவளது தேவையற்ற பயம் பொய்த்து விட்டது. அவளுக்கு அவளது இருபதாவது வயதிலேயே திருமணமாகி விட்டது. அவள் திருமணத்தின் போது நான் இந்தியாவிலேயே இல்லை. கானடாவில் படிக்கப் போய்விட்டேன்.

அவளது திருமணத்திற்கு முன்பாவது அடிக்கடி போனில் பேசுவோம். அவள் புகுந்த வீடு போனவுடன், கேட்கவே வேண்டாம், அவளுக்கும் எனக்கும் சுத்தமாக தொடர்பு இல்லாமலே போய்விட்டது.

ஆனால், அவள் நினைவு மட்டும் என்னை விட்டு அகலவில்லை. அவளது பிரிவு என்னை ரொம்ப நாள் வாட்டியது. அவளுக்காக, அவளது அருகாமைக்காக, எனது மனம் ஏங்கியது.

இருந்தாலும், அவளது புகுந்த வீட்டில், அவளை தொடர்பு கொள்ள கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அவளும் என்னை தொடர்பு கொள்ள வில்லை.

கால ஓட்டத்தில், கொஞ்சம் கொஞ்சமாக அவளை மறந்து விட்டேன்.

இருபத்தி ஏழு வருடம் போனதே தெரியாமல் போய்விட்டது. திடீரென, எனக்கு அலுவலக வேலையாக, சென்னை வர ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவளை பார்க்க ஒரு வாய்ப்பு. சென்னை வந்த வுடனே, அவளது விலாசத்தை கண்டு பிடித்து, அவளை பார்க்க முடிவு செய்தேன்.

பார்க் ஹோட்டலில் என் செமினார் முடிந்தவுடன், ஒரு நாள் மாலை, அவளை பார்க்க நேராக மயிலாப்பூர் போனேன். அவளது வீட்டின் முன் காரிலிருந்து இறங்கினேன்.

வாசலில், தலை நரைத்த , குண்டு மாமி என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு அடையாளம் தெரிந்து விட்டது. என் வனஜாதான்.

“ஹலோ வனஜா! எப்படி இருக்கே? நான் யார் சொல்லு பார்க்கலாம்?”

“யாருன்னு தெரியலியே, பான்ட் கோட் எல்லாம் போட்டுண்டு, கண்ணிலே கருப்பு கண்ணாடி, நீங்க,.. நீ, ராதா தானே? அடேடே, அடையாளமே தெரியலே? அட்டகாசமா இருக்கே! வா, வா! உள்ளே வா. உக்காரு, காபி போடட்டுமா? ”. என்னை மீண்டும் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிந்தது.

“அப்புறம் சாப்பிடறேன். நீ மட்டும் என்ன? ரொம்ப தான் மாறியிருக்கே! கண்ணாடிய பார். ஆமா, ஏன் இப்படி வெயிட் போட்டுட்டே?”

‘அதை ஏன் கேக்கிறே ராதா ? மூட்டு வலி, ரத்த அழுத்தம், போதாக் கொறைக்கு இப்போ அல்சர் வேறே! ஆமா, நீ என்ன காய கல்பம் சாப்பிடறியா என்ன? பாத்தா இவ்வளவு ஸ்மார்ட்டா தெரியரே? ஒல்லியா, அழகா எப்படி? ”

“அதெல்லாம் விடு, நீ என்ன பண்றே? அதை சொல்லு முதல்லே. எத்தனை பசங்க உனக்கு? என்ன பண்றாங்க?அவர் என்ன பண்றார்?”

“ என்னத்தை சொல்றதுப்பா ? பையன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிறான், வீட்டிலே ஒரே சண்டை. பொண்ணுக்கு இன்னும் குழந்தை பிறக்க வில்லை ! என் பாசங்க ரெண்டு பெரும் இப்படியே இருந்துடுவாங்களோன்னு ஒரே கவலையா இருக்கு!. வம்சமே இல்லாம போயிடும்னு நினைச்சா பயமா இருக்கு. என்ன பன்னரதுன்னே தெரியலே! ”

“ ஒண்ணும் ஆகாது, அது அவங்க பிரச்சனை. நீ கவலைப் பட்டு என்ன பிரயோசனம்? பேசாம விடு. எல்லாம் நல்லாவே நடக்கும்” நான் தைரியம் சொன்னேன்.

“என்னமோ, நீ சொல்றே, நடக்குமான்னு தான் தெரியலை. போகட்டும், நீ எப்படி இருக்கே? அவர் வரலியா?”

“எவர்? எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே! அவர் எங்கே வரப் போறார்?” சிரித்தேன்.

“என்னடி இது, கூத்து ! நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை? எனக்கு தெரியாதே?”

“வேண்டாம்னு தோணித்து. பையன் சரியா கிடைக்கலை. பண்ணிக்கலை”

“அட பாவமே! என்ன அநியாயம் இது! உன் வாழ்க்கையை இப்படி வீனாக்கிட்டியே! அந்த ஆண்டவன் உன் வாழ்க்கையிலே இப்படி விளயாடிட்டானே ! இப்போ என்னப்பா பண்றது ? பெருமாளே! ” – கப்பலே கவிழ்ந்தது போல, வனஜா தலையில் கையை வைத்துக் கொண்டாள்.

“ஏய், வனஜா! ஸ்டாப் ஸ்டாப், நான் ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன். நீ என்னை பத்தி கவலைப் படறதை நிறுத்து”

“அதெப்படி ராதா முடியும்?உன் வாழ்க்கையே இப்படி சூனியமாயிடுத்தே! எனக்கு தாங்கலையே! உனக்கு இந்த சோகமா? ஐயோ! “ சொல்லும்போதே வனஜாவின் குரல் கரகரத்தது. கொஞ்சம் விட்டால், அழுது விடுவாள் போல இருந்தது.

“வனஜா! கொஞ்சம் ஓட்டறதை நிப்பாட்டரயா? ப்ளீஸ். நான் கானடாவிலே ஒரு பேராசிரியை. நிறைய வெளி நாடு போக வேண்டியிருக்கும். வீட்டை பார்த்துக்க முடியாது. எனக்கு கல்யாணம் பண்ணிக்க வேறே விருப்பம் இல்ல. இப்படி இருக்கிறது தான் எனக்கு பிடிச்சிருக்கு. போதுமா!”

“அப்படி சொல்லாதே ராதா, இப்படி தனி மரமா நிக்கறியே? நான் வேணா உனக்கு இங்கே நல்ல மாப்பிள்ளை பாக்கட்டுமா?“

எனக்கு சிரிப்பு தான் வந்தது. இவளது அல்சருக்கு காரணம் இவளே. இவளை திருத்தவே முடியாது. கவலைப் பட இவளுக்கு ஏதாவது காரணம் வேண்டும். இப்போ வனஜா, எனக்கு , இந்த 47 வயது அரைக்கிழவிக்கு மாப்பிள்ளை தேடப் போகிறாள்.

****முற்றும்

“If a problem is fixable, if a situation is such that you can do something about it, then there is no need to worry. If it’s not fixable, then there is no help in worrying. There is no benefit in worrying whatsoever.”
― Dalai Lama XIV

“If there is no solution to the problem then don’t waste time worrying about it. If there is a solution to the problem then don’t waste time worrying about it.”
― Dalai Lama XIV

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *