குருவாயூரில் சிரிக்கும் குழந்தை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 21,231 
 

குருவாயூர் கோயில் சந்நிதி! கண்ணனின் பெருமைகளை விவரித்தார் பாகவதர். ஸ்லோகங்களை உச்சரிக்கும் பாங்கு, கிருஷ்ணர் மீதான ஈடுபாடு, இசைப் புலமை ஆகியவற்றால், இவரது பேச்சு அனைவரையும் கட்டிப்போட்டது. வாருங்கள்… அந்தச் சொற்பொழிவை நாமும் கேட்போம்:

”குழந்தை கண்ணன் அவதாரம் செஞ்சு மூணு மாசம் ஆச்சு. அன்னிக்கு ரோஹிணி நட்சத்திரம் உச்சத்துல இருந்துது. அதுவரை நிமிர்ந்து படுத்திருந்த கண்ணன் வலப் பக்கமா திரும்பிப் படுத்த திருநாள் அது.

குருவாயூரில் சிரிக்கும் குழந்தை!நந்தகோபன் மாளிகையில ஊரே கூடியிருந்தது. எல்லோரும் ஆனந்தத்தில் திளைத்திருந்த நேரம்… தடால்னு ஒரு சத்தம். ‘ஐயோ, மோசம் போயிட்டேனே கண்ணா!’னு கதறிகிட்டே கண்ணன் இருக்கற இடத்துக்கு ஓடுறா யசோதை. எதனால அப்படி ஓடிவந்தா யசோதை…?

தொட்டிலில் கண்ணைக் கவரும் புதுப் பஞ்சணையில் தூங்கிட்டிருந்தான் கண்ணன். அவனா தூங்குவான்? கண்ணை மூடி, ‘எங்கே இன்னும் ஆளைக் காணோம்?’னு யாரையோ எதிர்பார்க்கற மாதிரி படுத்திருந்தான்.

ஸ்வாமியோட அனுக்கிரகம் கிடைக்கறதுக்கு எத்தனை புண்ணியம் செஞ்சுருக்கணும்? அப்படிப் புண்ணியம் செஞ்சவனோட வருகையைத்தான், கண்ணன் எதிர்பார்த்துட்டிருந்தான். கண்ணனே எதிர்பார்க்கறான்னா… அவன் யாரு?

திரேதா யுகத்துல, உத்கசன்னு ஒருத்தன். இரண்யாட்சனோட பிள்ளை. தவசீலன். ஸ்வாமியோட அனுக்கிரகத்தை அடைய வழி தேடி, லோமாட்ச ரிஷி ஆஸ்ரமத்துக்குப் போனான். ஆனா, முனிவர் இவனை கவனிக்கவே இல்ல. அதுக்காக… அந்த ஆஸ்ரமத்தையே அழிக்க முயற்சி பண்ணினான்! இதைத் தெரிஞ்சிகிட்ட முனிவர், கடுங்கோபத்துல உத்கசனுக்கு சாபம் கொடுத்தார். ஆனா உத்கசனோ… தடால்னு அவர் கால்லே விழுந்து, தன் ஆசையை கோரிக்கையா வெச்சான். முனிவரோட கோபம் போயே போச்சு. ‘உன் ஆசை எனக்குப் புரியுது. ஆனா, உனக்கு இந்த யுகத்துல மோட்சம் கிடைக்காது. துவாபர யுகத்துல ஸ்வாமி குழந்தையா வந்து விளையாடுவான். மூணு மாசக் குழந்தையோட பாதம், உன் தலையில படும். உன் சிறுமை நீங்கி, மோட்சம் கிடைக்கும்’னாரு!

இப்ப… கண்ணன்கிட்ட வருவோம்! கண்ணன் திருவடி தன் மேல் படாதாங்கற தவிப்புலதான் உத்கசன், இப்ப சகடாசுரன்ங்கற பேர்ல வண்டி சட்டத்துல வந்து யார் கண்ணுலயும் படாம இருந்தான். ஸ்வாமி கண்ணன் கண் விழிச்சார்; காலை நீட்டி உதைச்சார்; உத்கசனோட ஆசை நிறைவேறிடுச்சு. வண்டி சட்டம் உடைஞ்சு ‘தடால்’னு சத்தம் கேட்டுச்சு. உத்கசனுக்கு ஸ்வாமி அனுக்கிரகம் செஞ்சுட்டார். இந்தச் சத்தத்தைக் கேட்டுதான், பதறியடிச்சி ஓடி வந்தா யசோதை. குழந்தையை அள்ளியெடுத்து நெஞ்சோடு நெஞ்சா அப்படியே அணைச்சுகிட்டா!

அடுத்ததா… கண்ணன் இப்ப நாலு மாசக் குழந்தை! இந்தக் குழந்தையக் கொல்றதுக்கு, த்ருணாவர்த்தன் அப்படீங்கற மாயாவியை அனுப்பினான் கம்சன். புயல்காத்து வடிவத்துல த்ருணாவர்த்தன் வந்து, கண்ணனைத் தூக்கிட்டு ஆகாசத்துல பறந்தான்.

இங்கே… கண்ணனைக் காணோம்னு கோபியரெல்லாம் பதறிப் போனாங்க. ‘அப்பா கண்ணா! எங்கடாப்பா போயிட்ட? நீ தெய்வக் குழந்தைன்னு சொல்றாங்க. எங்களை இப்படி வதைக்கலாமா? நீ எங்களோட கண்ணன்தானே… ஒரேயரு முறை அழு; நீ இருக்கற இடத்தைத் தேடி நாங்க ஓடி வறோம். கண்ணா… நீயில்லாம எங்களால வாழ முடியாது!’னு கதறினாங்க.

இந்தக் கதறல்… ஆகாச லோகம் வரைக்கும் கேட்டுது. தேவர்கள் எல்லாம் கூடி, ‘கண்ணா! பரப்பிரம்மமே… கோபியரின் பக்தி வீணாகக் கூடாது. அவங்களுக்கு கருணை காட்டக்கூடாதா?’ன்னு வேண்டினாங்க.

உடனே… கண்ணனைத் தூக்கிட்டு ஆகாசத்துல பறந்துட்டிருந்த த்ருணாவர்த்தனோட வேகம் தடைப்பட்டுது. ‘என்னாச்சு…’ன்னு அவன் யோசிக்கும்போதே… திடீர்னு மலையாட்டம் கனத்தான் கண்ணன். பாரம் தாங்காம த்ருணாவர்த்தன் விழி பிதுங்கி தவிச்சான். அப்ப… கண்ணனோட கை, அவனோட கழுத்துல பட்டுது. உடனே மூச்சுத் திணறி, பெரிய்…ய இடி மாதிரி சத்தம் போட்டபடியே கீழே விழுந்தான். இதையெல்லாம் பாத்துட்டிருந்த தேவர்கள், ‘ஆஹா… கோபியர்களின் பக்தியே பக்தி! எல்லாரையும் ஆட்டிப் படைக்கும் பரப்பிரம்மத்தையே, இவங்களோட பக்தி அசைச்சிருச்சே’னு வியந்து போனாங்க!

அப்புறம்… கோகுலத்துல அமைதி திரும்புச்சு! கண்ணனைப் பார்த்ததும்… போன உசுரு திரும்பி வந்தா மாதிரி எல்லாரும் சந்தோஷப்பட்டாங்க!

இதுல… த்ருணாவர்த்தன்கறது துரும்பைக் குறிக்கும். அதாவது கவலைங்கறது துரும்பு மாதிரி! நாமதான் இந்தத் துரும்பை பெருசா நினைச்சுக்கறோம். அதனாலதான் சின்னத் துரும்பான கவலை, நம்மளயே ஆட்டிப் படைக்குது! இந்தக் கவலைலேருந்து நம்மைக் காப்பாத்தறது பகவான் மட்டும்தான்!”

– கையில் ஒற்றை ஆர்மோனியத்தை வைத்துக் கொண்டு, உள்ளம் உருக கண்ணன் புகழ் பாடிய பாகவதர், அன்றைய தனது சொற்பொழிவை முடிக்கப்போனார்.

அந்த நேரத்தில், ‘ஐயோ… என் குழந்தையக் காணோமே…’ என்று ஓர் அலறல்! கூட்டத்தில் இருந்து பெண்மணி ஒருத்தி எழுந்து புலம்பினாள். உடனே பாகவதர், ”ஒண்ணுமில்லம்மா… உன் குழந்தை கிடைப்பான். கண்ணன் இருக்கான்… கவலைப்படாதே!” என்றார். தேடத் தொடங்கினார்கள்.

சற்று நேரத்தில், தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தோளில் சுமந்தபடி தந்தை வந்தார். ”கதாகாலட்சேபத்துல நாமெல்லாம் லயிச்சு நின்னுட்டோம். அப்ப… குழந்தை வெளியில போயிருச்சு. விசாரிச்சதுல… ‘பெரிய காருக்குப் பக்கத்துலதான் குழந்தை நின்னுச்சு’னு கடைக்காரர் ஒருத்தர் சொன்னார். அங்கே போய் பாத்தா, கார் பின் சீட்டுல குழந்தை ஜம்முன்னு தூங்கிட்டிருந்தது. கழுத்துல காதுல இருந்த நகையெல்லாம் அப்படியே இருக்கு. குழந்தையோட பேரு கோபாலகிருஷ்ணன். இந்தக் குழந்தையை அந்த கோபாலகிருஷ்ணன்தான் காப்பாத்திருக்கான்” என்று தழுதழுத்த குரலில் சொல்லிக் கொண்டே தன் மனைவியிடம் குழந்தையைக் கொடுத்தார்.

அந்தத் தாயாருக்கு பேச்சே வரவில்லை. ”கண்ணா! கண்ணா!” என்று அழுதபடியே குழந்தையை வருடிக் கொண்டிருந்தாள்!

– ஆகஸ்ட் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *