பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால்…

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 22, 2024
பார்வையிட்டோர்: 11,044 
 

அந்தக் காலையின் அமைதியைக் கிழித்தவாறு மொபைல் அலறியது. “சே! எத்தனை தடவை சொன்னாலும் இந்த சுஜாவுக்கு ஏன் புரியவே மாட்டேன் என்கிறது? சண்டே காலையில் மனுஷன் கொஞ்சம் தூங்க வேண்டாமா? சவுண்டு கம்மியா வச்சாத்தான் என்ன?” என்ற என் எண்ணவோட்டத்தை தடுப்பது போல சுஜா வேகமாக பெட்ரூமுக்குள் வந்தாள்.

“என்னங்க! நம்ம கீதா ஃபோன்ல இருக்கா. உங்ககூட பேசணுமாம். இந்தாங்க” என்று நான் எந்தவித ரியாக்ஷனும் காட்டுவதற்க்கு முன்னால் மொபைலை என் கையில் திணித்தாள்.

என் கோபம் தலைக்கேறியது. கீதாவா? அவ ஃபோனை என்கிட்ட ஏன் கொடுத்தாய் என்று கண்ணாலேயே அவளை எரித்தேன். ப்ளீஸ் பேசுங்க என்று அவளும் கண்ணாலேயே கெஞ்சினாள்.

“ஹலோ”

“சித்தப்பா! நான் கீதா! எப்படி இருக்கீங்க?”

“எனக்கென்ன கேடு? என்ன விஷயமா ஃபோன் பண்ண?”

“சித்தப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்க எல்லாரும் உங்க வீட்டுக்கு வர்றோம். நாங்கன்னா நான், அவர், அப்பா அம்மா எல்லாரும். சர்ப்ரைஸ்! சித்திகிட்ட பேசிட்டேன். மார்னிங் டிஃபன் சாப்பிடற மாதிரி வரச்சொன்னா. ஸோ, இன் அனதர் டூ அவர்ஸ் வீ வில் பி தேர்” என்று படபடவென்று பேசினாள் கீதா.

நான் எதுவும் சொல்வதற்கு முன் ” நேர்ல பேசலாம் சித்தப்பா” என்று கால் கட் செய்து விட்டாள் .

என் குறைத் தூக்கமும் விட்டது. கோவத்தில் படுக்கையை விட்டு எழுந்தேன். என் வேகத்தைப் பார்த்த சுஜா சற்று பின்வாங்கினாள்.

“எதுக்குடி அவ கால் அட்டென்ட் செஞ்ச? அவன்னு தெரிஞ்ச பின்னால கட் செய்ய வேண்டியதுதானே? என்ன பாசமலர் சீன்?” என்றேன்.

“இல்லங்க. ஏதோ ரொம்ப முக்கியமா உங்க கிட்ட பேசணும்னு சொன்னா.. எப்படி மறுத்துச் சொல்றது? அப்புறம் அந்தப் பொண்ணு என்ன தப்புங்க செஞ்சுது? செஞ்சது எல்லாம் உங்க அண்ணாவும் மாப்பிள்ளையும் தான். அவ அவங்கள எதிர்த்துகிட்டு எப்படி நம்மளோட பழக முடியும்? பாவம் இல்லியா அவ? நீங்க எடுத்து வளர்த்த குழந்தை இல்லையா?” என்ற சுஜாவின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. கீதா என்ன செய்வாள்? அவள் பெண்.. பிறந்த வீட்டையும் புகுந்த வீட்டையும் அனுசரித்துத்தான் போக வேண்டும். அதனால் அவளைக் குறை சொல்லி புண்ணியம் இல்லை. ஆனால் என் அண்ணனுக்கு ( அவனை அண்ணன் என்று சொல்லவே மனம் கூசியது) புத்தி எங்கே போச்சு? கூடப்பிறந்த தம்பின்னு கூட பார்க்காம என்ன பேச்சு பேசி விட்டான்! அப்புறம் அவன் மாப்பிள்ளை கண்ணன். அவனும் தான் பங்குக்கு என்ன பேச்சு பேசிவிட்டான். அவனை அடித்தே விட்டிருப்பேன். ஆனால் சுஜா தடுத்ததனால் தப்பித்தான்.

எனக்குத் தலை வலித்தது. நெற்றியைத் தடவிவிட்டுக்கொண்டேன். அதைப் பார்த்துவிட்டு ” பிரஷ் செஞ்சுட்டு வாங்க.. காஃபி கொண்டு வரேன்” என்றாள் சுஜா.

சரியென்று வேண்டா வெறுப்பாக காலைக்கடன்களை முடித்தேன். சுஜா தந்த காஃபியை வாங்கிக்கொண்டு மொட்டைமாடிக்குச் சென்றேன். ஒரு வில்ஸ் ஃபில்டர் எடுத்து பற்ற வைத்து புகையை உள்ளிழுத்தேன். என் நினைவுகளும் பின்னோக்கி சென்றன.

நான் வெங்கடேஷ். வெங்கட் என்று அழைப்பார்கள். எனக்கு ஒரு அண்ணா. அவரது ஒரே பெண்தான் கீதா. அவள் தான் எங்கள் வீட்டின் செல்லக் குழந்தை. அவளது எட்டு வயதின் போதுதான் என் கல்யாணமே நடந்தது. எங்களுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இருந்தாலும் எங்கள் இருவருக்குமே கீதாதான் முதல் குழந்தை. நீலமும் (நீலம் என் பெண்) கீதாவிடம் ரொம்ப ஆசையாக இருந்தாள்.

இப்படி feel good திரைப்படம் போலத்தான் எங்கள் வாழ்க்கையும் சென்றது. கீதாவும் நீலமும் நன்றாக படித்தார்கள். காலேஜ் முடித்த கீதாவுக்கு அண்ணா பெண் பார்க்க ஆரம்பித்தான். கீதாவுக்கு மேலே படிக்க வேலைக்குப் போக ஆசை. ஆனால் அண்ணா பிடிவாதக்காரன். கடைசியில் அவன் பிடிவாதம்தான் வென்றது.

கீதாவுக்கும் திருமணம் ஆனது. கண்ணன் தான் மாப்பிள்ளை. பாலக்காடு பக்கம். ஆனால் எனக்கென்னவோ ஆரம்பத்தில் இருந்தே அவனைப் பிடிக்கவில்லை. சுஜாவிடமும் சொல்வேன். அவள்தான் என்னை அடக்குவாள். மாப்பிள்ளை பற்றி இப்படி நினைக்கக்கூடாது என்று. கீதா காதுக்கு எட்டினால் என்ன நினைப்பாள் என்று.

இப்படி இருக்கையில் தான் ஒருநாள் பூகம்பம் வெடித்தது.

கண்ணன் சோழிங்கநல்லூர் அருகே ஒரு ஃப்ளாட் பார்த்தான். சுமார் 60 லட்சம் விலையில். பாங்க் லோன் அது இது என்று புரட்டியும் ஒரு ஐந்து லட்சம் துண்டு விழுந்தது. கீதா தன் அப்பாவிடம் இதுபற்றி பிரஸ்தாவிக்க என் அண்ணனும் தருகிறேன் என்று சொல்லிவிட்டான் . அப்புறம் ஒரு நாள் எனக்கு ஃபோன் செய்து ” டேய் வெங்கட்! எங்க ஃப்ளாட்ல ஒரு டெத். நான் இன்னைக்கு நகர முடியாது. நீ ஒரு வேலை பண்ணு. இங்க வந்து பணத்தை வாங்கிக்கிட்டு மாப்பிள்ளை வீட்டுல குடுத்துடுடா” என்றான்.

சனி என்னுடன் நடப்பதை அறியாமல் நானும் அவன் சொன்னபடியே சென்று பணத்தை வாங்கிக்கொண்டு கண்ணன் வீட்டுக்குச் சென்றேன். அங்கே கண்ணனும் கீதாவும் இல்லை. அவன் அப்பா மட்டும்தான் இருந்தார். நான் அவரிடம் விஷ்யத்தைச் சொல்லி பணத்தை குடுத்துவிட்டு வந்துவிட்டேன்.

சாயந்திரம் கீதாவிடம் இருந்து ஃபோன். “சித்தப்பா! நீங்க காலைல எத்தனை பணம் கொடுத்தீங்க?” என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டாள். எனக்குள்ளே ஏதோ பொறிதட்டியது.

“ஐந்து லட்சம்” என்றேன்.

“பார்த்தீங்களா! சித்தப்பா அஞ்சுதான் தந்திருக்கார். அப்பா கொடுத்து அனுப்பினத. மாமா கொஞ்சம் நல்லா யோசிச்சுப் பாருங்களேன்” என்றாள்.

“என்னடி எங்க அப்பாவ திருடன்னு சொல்றியா” என்ற கண்ணனின் ஆங்காரக் குரல் ஃபோனில் கேட்டதும் என் சந்தேகம் உறுதியானது. நிச்சயம் ஏதோ நடந்திருக்கிறது.

பின்னர் நடந்தது ரொம்பவே துக்ககரமானது. இந்தப் பிரச்சனை பெரிதாகி என் அண்ணன் வரை போய் அவன் என் வீட்டுக்கு வந்து என்னைக் கேட்டதும், நான் கோபம் கொண்டதும், அண்ணியும் சுஜாவும் கீதாவும் திகைத்து நின்றதும் என் நெஞ்சில் நீங்கா ரணங்கள் ஆனது.

என் கோபத்தின் உச்சியில் நான் வீட்டில் வேறு ஒரு அவசரத்துக்கு வைத்திருந்த பணத்தில் இருந்து இரண்டு லட்சங்களை எடுத்து என் அண்ணன் மீது விட்டெறிந்தேன். உறைந்து போன அவன் அதை எடுத்துக்கொண்டு போனதுதான். ஒரு வருஷம் ஆச்சு. எங்கள் தொடர்பே அறுந்தது.

அதற்கு அப்புறம் இதோ இன்னைக்குத்தான் கீதாவிடமிருந்து ஃபோன்.

“என்னங்க! என்ன பண்ணிட்டு இருக்கீங்க மாடில? கீழ வாங்களேன் யாரு வந்திருக்காங்கன்னு பாருங்க” என்ற சுஜாவின் குரல் கேட்டதும்தான் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கடந்ததை உணர்ந்தேன்.

மரத்துப்போன மனதோடு கீழே இறங்கினேன். கீழே ஹாலில் அண்ணா, அண்ணி, கண்ணன் உட்கார்ந்திருந்தார்கள். கீதா சுஜாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.

என்னைப் பார்த்ததும் அங்கே ஒரு அமைதி பிறந்தது.

“என்னடி விஷயம்” என்றேன் சுஜாவிடம்.

ஆனால் கீதாதான் பேசினாள். கண்ணில் நீர் வழியப் பேசினாள். மடைதிறந்த வெள்ளம் போல பேசினாள். கண்ணன் புது வீட்டுக்கு ஒரு வாரம் முன்னர்தான் ஷிப்ட் செய்து போனானாம். அப்போ புது வீட்டில் சாமான்கள் செட் செய்துகொண்டிருந்த போது அவன் அப்பாவின் புத்தக மூட்டைகள் இடையே ஒரு இரண்டாயிரம் ரூபாய் கட்டு இருந்ததைப் பார்த்தானாம். சந்தேகம் கொண்டு அப்பாவை விசாரித்ததில் அது அந்த ஐந்து லட்சத்தில் இருந்து அவர் எடுத்து வைத்த பணமாம். ஏதோ கொஞ்சம் கடன் இருந்ததால் அப்படிபட்ட தவறை செய்து விட்டாராம். அது இவ்வளவு பிரச்சனையை உருவாக்கியதும் உண்மை சொல்லவேண்டும் என்று நினைத்தாலும் பயந்து போய் சொல்லாமலே இருந்து விட்டாராம். அவர் செய்த தவறுக்கு என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாராம். ஆனால் கூசிப்போய் இருப்பதால் வரவில்லையாம்.

கீதாவின் பேச்சில் நான் மட்டுமல்ல சுஜாவும் உறைந்தாள். அவள் கண்ணில் நீர்.

சொல்லி வைத்தாற்போல கண்ணனும் என் அண்ணனும் எழுந்து என் அருகில் வந்தார்கள்.

“அங்கிள் என்ன மன்னிச்சிடுங்க” என்றான் கண்ணன்.

“டேய்! நான் செஞ்ச தப்புக்கு என்ன மன்னிக்கவே முடியாது. இருந்தாலும் முடிஞ்சா என்ன மன்னிச்சூடுடா” என்றவாறே என் அண்ணா என் கால்களில் விழப்போனார். பதறிபோன நான் அவரை தடுத்து எழுப்பி அணைத்துக்கொண்டேன்.

“இந்தாடா உன்னோட பணம்” என்று ஒரு பையை அருகில் இருந்த காஃபி டேபிள் மீது வைத்தார்.

“சுஜா! நீயும் என்ன மன்னிச்சுடுமா” என்று சுஜாவைப் பார்த்து கைகூப்பினார்.

மனம் நிறைய சந்தோஷமும் கண் நிறைய கண்ணீருமாய் நான் சுஜாவைப் பார்த்தேன்.

சுஜாவின் முகத்தில் ஒரு விதமான இருட்டு படர்ந்திருந்தது. முகமெல்லாம் வியர்வை. துடித்துக் கொண்டிருந்த உதடுகள் திடீரென்று அசைந்தன.

“வெளியே போங்க எல்லாரும்” என்று உறுமலோடு உச்ச ஸ்தாயியில் வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தன.

Print Friendly, PDF & Email

1 thought on “பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால்…

  1. நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *