கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2023
பார்வையிட்டோர்: 4,787 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ராஜா! உனக்கு மணி ஆர்டர் வந்திருக்கிறது. இந்தா, கையெழுத்திட்டுப் பெற்றுக் கொள்!” என்று கூறிய படியே, ராஜனுடைய கரத்தில் பேனாவையும் மணி ஆர்டர் ‘பார’த்தையும் தந்தாள் லட்சுமி. ஈஸிசேரில் சாய்ந்திருந்த ராஜா, நிமிர்ந்து உட்கார்ந்தான்.

அவனுக்கு எங்கிருந்து வந்திருக்கிறது பணம்?

கூபனைப் பார்த்தான் ; வெறுமையாக இருந்தது. குழம்பிய மனத்துடன் அனுப்பிய நபரின் விலாசத்தைப் பார்த்தான். சடக்’கென்று அவன் முகம் கறுத்தது.

“அத்தை ! இதை நான் வாங்கப் போவதில்லை ! திருப்பி விட்டதாகக் கூறி போஸ்ட் மேனிடமே கொடுத்து விடு!”

“ஏண்டா ராஜா?” திகைப்புடன் வினவினாள் லட்சுமி.

“இது சுகன்யாவிடமிருந்து வந்திருக்கிறது, அத்தை! பின், திருப்பி அனுப்பாமல் என்ன செய்வது?”

“நன்றாக இருக்கிறது! திருப்பி விட்டு மேலும் அவள் மனத்தை நோகச் செய்யப் போகிறாயா? வாசலிலே போஸ்ட்மேன் நிற்கிறான்; வீணாகத் தகராறு செய்யாமல் முதலில் கையெழுத்துப் போடு. அப்புறம் மற்றதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்!”

கண்டிப்புடன் ஒலித்தது லட்சுமியின் குரல். அந்நிய மனிதனான போஸ்ட் மேனின் எதிரே, மேலும் வாதம் செய்ய ராஜா விரும்பாததால் லட்சுமியின் கட்டளையைத் தட்ட முடியாமல் கையெழுத்திட்டு, ‘பார’த்தை அவனிடம் கொடுத்தான். போஸ்ட்மேனிடம் அதைக் கொடுத்து விட்டுப் பணத்தை வாங்கி வந்தாள் அவள்.

அவள் தன்னிடம் கொடுத்த ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்களை அலட்சியமாக அப்பால் எறிந்தான் ராஜா.

“இந்தப் பணம் என்ன, அவள் எனக்குக் கொடுக்கும் ஜீவனாம்சமா அத்தை ? அவள்தான் துணிந்து அனுப்பி விட்டாள் என்றால், நீயும் வெட்கமின்றி வாங்கிக் கொள் என்கிறாயே!”

வெறுப்புடன் மொழிந்த அவனைக் கண்டு, மெல்லிய குரலில் கூறினாள் லட்சுமி.

“சரிதான் ராஜா ! ஏதோ ஒரு ஆத்திரத்தில் அவள் அப்படிச் செய்து விட்டுப் போய் விட்டாள். சிறிசுதானே ! மேலும் தாயில்லாத பெண். நாளடைவில் மனம் மாறித் தானே வருவாள்: இந்த நிலையில் இதைத் திருப்பி அனுப்பினால், அவளுடைய நெஞ்சுரம் மேலும் அதிகமாகும். என்றைக்குமே ‘ஒரு கன்னத்தில் அடித்தவருக்கு மற்றதையும் காட்டு’ என்பது போல் நம்முடைய சகிப்புத் தன்மையையும், தாழ்வு மனப்பான்மையையும் கொண்டுதான் பிறரைத் திருத்த முயல வேண்டும்!” என்று உபதேசம் செய்தாள் லட்சுமி.

“என்னவோ அத்தை! என்னை வளர்த்து ஆளாக்கினாய் என்பதற்காக என்னிடம் நீ அளவற்ற உரிமை கொண்டாடுகிறாய். என்ன முயன்றும் உன் சொல்லைத் தட்ட என்னாலும் முடிய வில்லை. எப்படியாவது போ!” என்று விரக்தியுடன் கூறிய ராஜா, “அத்தை ! அந்தப் பணத்திலிருந்து காலணாக் கூட உபயோகப் வீட்டுச் செலவிற்கு நீ படுத்த வேண்டாம். என்றைக்கு அவள் திரும்பி வந்தாலும், அவளிடமே கொடுத்து விடு. உட்கார்ந்த இடத்திலேயே இருந்து சம்பாதிக்கும் திறமை எனக்கு உண்டு” என்று உறுதியுடன் மொழிந்தான்.

கீழே சிதறிக் கிடந்த நோட்டுக்களை எடுத்துக்கொண்டு அப்பால் சென்றாள் லட்சுமி.


சின்னஞ் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட ராஜாவை, அன்பும் ஆதரவும் காட்டி வளர்த்து ஆளாக்கியது அவனுடைய அத்தை லட்சுமி தான். தன் கணவர் வைத்துச் சென்ற ஏதோ சொற்ப ஆஸ்தியைக் கொண்டு ராஜாவைப் படிக்க வைத்தாள். பி.ஏ. வரை படித்துவிட்டு, கம்பெனி ஒன்றில் உதவி மானேஜராக அமர்ந்தான் ராஜா.

ராஜாவிற்கு அத்தையிடத்தில் அதிகப் பாசம். எதற்குமே அவளுடைய சொல்லை மீற மாட்டான். தாய் தந்தையற்ற தன்னை வளர்த்துத் தனிமனிதனாக்கிய பெருமையை அவளுக்கு அளித்து, லட்சுமியைத் தெய்வம் எனப் போற்றி வந்தான்.

லட்சுமியும் அப்படித்தான். ராஜாவின் மனம் நோக அவள் சகியாள். எதிலும் அவன் விருப்பத்திற்கே முக்யத்துவம் கொடுத்து, அவன் மனப் போக்கை அனுசரித்து நடந்து வந்தாள்.

இந்நிலையில் தான், ராஜாவின் கம்பெனி மானேஜர் மகள் சுகன்யா, அவன் வாழ்வில் குறுக்கிட்டாள். காரியாலய விஷயமாக அடிக்கடி மானேஜர் வீடு செல்ல நேர்ந்த ராஜா,அங்கே சுகன்யாவைச் சந்திக்க நேரிட்டது.

அவள் அழகு அவனை அடிமை கொண்டது. அவளுக்கும் அவனை நிரம்பப் பிடித்திருந்தது. ஒரு நாள் அவளை வீட்டிற்கே அழைத்துவந்து, அத்தைக்கு அறிமுகம் செய்வித்தான் ராஜா.

சுகன்யா நல்ல அழகி. வர்ணனைக் கெட்டாத எழிலோவியமாகத் திகழ்ந்த அவளை, எடுத்த எடுப்பிலேயே லட்சுமிக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனால் தாயற் றவள் ஆதலால், தந்தை வளர்த்த விதத்தில் ஒரு வித முரட்டுப் பிடிவாத குணமும், சற்று அகந்தையும் அவளிடம் மேலோங்கி நின்றன. பி.ஏ. பாஸ் செய்திருந்தாள். ஆடம்பரத்தில் சிறிது மோகமும், அலட்சிய மனப்பான்மையும் கூட அவளுக்கு அடிமையாயிருந்தன.

சுகன்யாவை மணக்க ராஜா அனுமதி கேட்டபோது, லட்சுமி சற்று யோசிக்கத் தான் செய்தாள், ராஜாவுடன் அவள் அனுசரித்துப்போவாளா என்று. ஆனால் ராஜாவின் நோக்கம் முழுவதும் சுகன்யாவின் மீது இருக்கிறது என்று கண்டு கொண்டவுடன், அவள் தன் சம்மதத்தை அறிவித்தாள்.

வெகு விமரிசையாக ராஜா சுகன்யாவின் கரம் பற்றினான்.. ஆனால் திருமணம் முடிந்த பின்னர், சுகன்யாவின் தந்தைக்கு வேறு இடம் மாற்றலாயிற்று. தனது பதவிக்கு ராஜாவைச் சிபார்சு செய்து விட்டு வேலையை ஒப்புக் கொள்ளச் சென்றார் அவர்.

தந்தை வேற்றூர் மாற்றலாகிச் சென்றது சுகன்யாவுக்கு மிகவும் கஷ்டமா யிருந்தது. எப்போதும் தந்தையின் வீட்டிலேயே உல்லாசமாகப் பொழுதைக் கழித்துப் பழக்கப்பட்ட அவளுக்கு கணவன் வீடு மன மகிழ்வைக் கொடுக்கவில்லை.

நாளொரு சங்கமும் பொழுதொரு ‘கிளப்’புமாக, சிநேகிதிகளுடன் உல்லாசமாகத்தான் கணவன் வீட்டிலும் அவள் வாழ்ந்து வந்தாள்.

படித்தபெண், அதிலும் செல்வமாக வளர்ந்தவள். புதிதில் ஏனோ தானோ என்றிருந்தாலும் நாளடைவில் குடும்பப் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வாள் என்று எதிர்பார்த்து, சுகன்யாவின் போக்குப்படியே விட்டுக் கொடுத்து வந்தாள் லட்சுமி. அதிலும் சுகன்யா தாயற்றவள் என்பதொன்றே லட்சுமிக்கு சுகன்யாவின் மீது அளவிட முட யாத அன்பை ஏற்படுத்தியது. தன் மகளாகவே அவளைப் பாவித்து வந்தாள் லட்சுமி.

தங்கு தடையின்றிச் சென்று கொண்டிருந்த அவர்களுடைய வாழ்விலே, திடீரென ஒரு பேரிடி விழப் போகிறது என்று லட்சுமி, ஏன் – ராஜாவும் சுகன்யாவும் கூடத்தான் – கனவிலும் நினைத்திருப்பார்களா?


வீட்டிலிருந்து காரியாலயம் செல்வதற்காக ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கியிருந்தான் ராஜா. தினமும் அதிலேதான் அவன் செல்வது வழக்கம்.

வழக்கமாக மாலை ஐந்து மணிக்கே வீடு திரும்பிவிடும் ராஜா, அன்று ஏனோ குறிப்பிட்ட நேரத்துக்கு வரவில்லை. லட்சுமியின் உள்ளம் பதை பதைத்தது. காரணமற்றதொரு கலக்கம் அவளை ஏனோ வாட்டியது. சுகன்யாவும் ‘லேடீஸ் கிளப் பிற்குச் சென்றிருந்தாள்.

மாலை ஆறு மணிக்கு அந்தச் செய்தி வந்தது. ராஜாவைச் சுமந்து வந்த மோட்டார் சைக்கிளும், காய்கறிகளை ஏற்றி வந்த ஒரு லாரியும் மோதி விபத்துக்குள்ளாகி விட்டன என்று.

ராஜாவின் வலது காலிலே பலத்த அடி என்றும், அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள் என்றும், காரியாலயச் சிப்பந்தி ஒருவன் கொணர்ந்த தகவல் லட்சுமியைத் துடிதுடிக்க வைத்தது. அந்த ஆளையே ‘கிளப்’பிற்கு சுகன்யாவிடம் சொல்லும்படி அனுப்பி விட்டு, ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்தாள் லட்சுமி

தகவல் கேட்டு சுகன்யாவும் ஓடோடி வந்தாள். உடல் முழுவதும் கட்டுகளுடன் படுத்திருந்தான் ராஜா. காலிலே பலமான அடி என்றும், முழங்கால் எலும்பே முறிந்து விட்டதாயும் டாக்டர் அறிவித்தபோது, லட்சுமி ‘கோ’வென்று கதறி விட்டாள். சுகன்யாவால் எதுவும் பேச முடியவில்லை.

நாட்கள் சென்றன. ராஜா சிறிது சிறிதாகக் குணமடைந்து வந்தான். ஆனால் அவன் வலது காலை இழந்து விடுவான், கட்டையின் உதவி கொண்டு தான் நடமாட முடியும் என்று டாக்டர்கள் அபிப்பிராயப் பட்டனர்.

லட்சுமியின் இதயத்திலே என்றும் ஆறாத புண்ணாக, தீராத வடுவாக அமைந்து விட்டது இந்தச் செய்தி.

சுகன்யா உணர்ச்சியற்றவள் போல் நடமாடி வந்தாள். ராஜாவிற்குப் பூரண குணமாகி, மறுநாள் மாலை வீட்டிற்கு அழைத்து வருவதாக இருந்தது. முதல் நாள் சென்று அவனைப் பார்த்து விட்டு வந்தாள் லட்சுமி. சிநேகிதி ஒருத்தியின் வீட்டிற்குச் சென்று விட்டு அப்படியே ஆஸ்பத்திரிக்கு வருவதாக சுகன்யா கூறியிருந்தாள். சொன்னபடி அவள் வரவில்லை.

அவள் வராத காரணத்தை அறிய வேண்டும் என்ற ஆவலில், ‘சுகன்யா, சுகன்யா!” என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள் லட்சுமி. சுகன்யாவை எங்கும் காணவில்லை. ஒவ்வொரு அறையாகத் தேடிக் கொண்டே, ராஜாவின் அறைக்குள் நுழைந்தாள் அவள்.

அங்கேயும் சுகன்யாவைக் காணவில்லை. மாறாக ராஜாவின் மேஜை மீதிருந்த கடிதம் லட்சுமியின் கண்களில் தென்பட் டது. பரபரப்புடன் அதைப் பிரித்துப் படித்தாள் அவள்.

“மதிப்பிற்குரிய கணவருக்கு,

தங்களுடைய வலது கால் ஊனமாகி விட்ட செய்தி என்னைப் பெரிதும் கலக்கி விட்டது. என்னால் இந்த அதிர்ச்சியைத் தாளவே முடியவில்லை. எங்கு திரும்பினாலும் ‘உன் கணவர் ஒரு நொண்டி… ஒரு நொண்டி…’ என்று பல குரல்கள் ஏக காலத்தில் என் செவியருகே ஒலிக்கின்றன. இனி என் தோழிகளது முகத்தில் எப்படி விழிப்பேன் ? என்னுடைய மன நிலை இப்போது தங்களுடன் கூடி வாழ இடம் தரவில்லை. நான் வருகிறேன். என் மன இருளைப் போக்கி நாளடைவில் ஒளி உதயமாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தங்கள் சுகன்யா”

செயலற்று நின்றாள் லட்சுமி. ‘இப்படியும் ஒரு பெண்ணால் இருக்க முடியுமா? படித்தும் விவேகமில்லையே! இதை ராஜா அறிந்தால் எத்தனை வேதனைப்படுவான். சாதாரண நாளிலேயே தொட்டதற் கெல்லாம் கோபமடையும் அவன், இக்கடிதத்தைப் படிக்க நேர்ந்தால்…!

ஆத்திரத்தில் அறியாமல் செய்து விட்ட செயலுக்காக ஆயுள் முழுவதும் சுகன்யாவின் வாழ்வைப் பாழடித்து விடுவானே அவன்…?’

‘சுகன்ய ! எப்படியம்மா இந்தக் காரியம் செய்ய உன் மனம் துணிந்தது?’ லட்சுமி எண்ணாததெல்லாம் எண்ணித் தவித்தாள்.


மறுநாள். ராஜாவை அழைத்து வர லட்சுமி ஆஸ்பத்திரிக்குச் சென்ற போது, “சுகன்யா வரவில்லையா அத்தை?” என ஆவலுடன் வினவினான் அவன்.

“அவளுடைய அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என்று தந்தி வந்தது ராஜா ! நான்தான் அவளை அனுப்பி வைத்தேன்!”

லட்சுமியின் பதிலைக் கேட்டு முகம் சிணுங்கினான் ராஜா.

“என்னுடைய இந்த நிலையிலா பிறந்தகம் போகவேண்டும்?” என்று அவன் வாய் முணமுணத்தது.

“என்ன செய்வது ராஜா ? அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என்றால் ஒரே பெண்ணான அவள் கூடப் போக வேண்டாமா? கிரமப்படி நீங்கள் இருவருமே போகவேண்டும். உன்னால் முடியாதே என்றுதான் கட்டாயப்படுத்தி அவளை அனுப்பி வைத்தேன். உன்னைக் கவனிக்கத்தான் நான் இருக்கிறேனே!” என்று அடித்துப் பேசினாள் லட்சுமி.

ராஜா வீட்டிற்கு வந்து சேர்ந்தான். சுகன்யா இல்லாத வீடு, சூனியம் பிடித்ததுபோல் தோன்றியது அவனுக்கு. வயது காலத்தில் அத்தை லட்சுமி தனக்காகப் படும் பாட்டைக் கண்டு அவன் உள்ளம் உருகியது.

“நீ ஏன் இப்படி அவஸ்தைப்பட வேண்டும். அத்தை? உடனே அவள் அப்பாவையும் உடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டு வரும்படி சுகன்யாவுக்கு ஒரு கடிதம் போடுகிறேன ! போனவள் இதுவரை ஒரு கடிதம் கூடப் போடவில்லையே?” என்று அங்கலாய்த் தான் ராஜா.

“அதெல்லாம் வேண்டாம் ராஜா, அவளாக வருகிறபோது வரட்டும். அவள் அப்பாவிற்கு எப்படியிருக்கிறதோ?” என்று ஏதேதோ சமாதானம் கூறி அவனைத் தடுத்து வந்தாள் லட்சுமி.

ஆனால் எத்தனை நாளைக்குத்தான் இப்படி ஏமாற்றி வர முடியும்?

ஒரு நாள் ராஜாவிற்கும் விஷயம் தெரிந்து விட்டது. “நன்றாக நாடகம் போட்டாய், அத்தை! சாதாரணமாகப் பிறந்தகம் போனாள் என்றால், என் உடல் நிலையை விசாரித்து ஒரு கடிதம் கூடவா போடாமல் இருப்பாள்? சுகன்யாவுடைய கடிதத்தை நான் பார்த்து விட் டேன் அத்தை. நேற்று சமையலறையில் சாப்பிடும்போது காற்றிலே பறந்து வந்தது. தற்செயலாகப் பிரித்தேன் ; விஷயம் அறிந்தேன். இப்படிப்பட்ட மனைவி எனக்கும் தேவையில்லைதான்!” என்று நிதானமாகக் கூறிய ராஜாவைக் கண்டு, லட்சுமி அயர்ந்தே போனாள்!

“அப்படி யெல்லாம் பேசாதே ராஜா! அவளும் அறியாப் பெண் தானே! எதையும் தாங்கக் கூடிய மனோ பக்குவம் அதற்குள் அவளுக்கு எப்படி ஏற்படும்?” என அவனைச் சமாதானம் செய்தாள் அவள்.

மறு மாதமும் சுகன்யாவிடமிருந்து பணம் வந்தது. ராஜா பிடிவாதமாக அதை நிராகரித்தான். பலரிடம் சொல்லி சில ‘ட்யூஷன்’களை ஏற்படுத்திக் கொண்டு உட்கார்ந்த நிலையிலேயே மாதம் நூற்றைம்பது ரூபாய்க்கு மேல் சம்பாதித்து வந்தான்.

என்ன முயற்சித்தும் சுகன்யாவின் சுந்தரவதனத்தை அவனால் மறக்க முடியவில்லை. அவள் இப்படிச் செய்து விட்டாளே என்ற ஏக்கம், அவன் உள்ளத்தை அரித்தெடுத்துக் கொண்டுதான் இருந்தது.

அன்று…

ஈஸிசேரில் சாய்ந்த வண்ணம் மாலை ‘ட்யூஷனு’க்கான குறிப்புகளைத் தயார் செய்து கொண்டிருந்தான் ராஜா. புடவைத் தலைப்பை விரித்துப் படுத்த வண்ணம் அவன் அருகிலே கீழே அரைத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் லட்சுமி.

தன் கால்களிலே ஏதோ படுவது போன்ற உணர்வு ஏற்பட்டு, திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தான் ராஜா.

அவன் முன் மண்டியிட்டு அமர்ந்த படி, அவனுடைய கால்களைத் தொட்டுக் கண்களிலே ஒத்திக் கொண்டிருந்தாள் சுகன்யா!

“சுகன்யாவா? ஊனமுடையவனிடம் உனக்கு என்ன வேலை அம்மா?” கணவனின் கேள்வி அவள் கண்களிலே அருவி போலக் கண்ணீரை வரவழைத் தது.

“என்னை மன்னித்து விடுங்கள்! நான் …நான் மகா பாவி!” ராஜாவின் கரங்களைப் பிடித்துக் கொண்டு கதறினாள் அவள். இதற்குள் சப்தம் கேட்டுக் கண் விழித்த லட்சுமி, “சுகன்யாவா? வா, அம்மா!” என்று பரிவுடன் அவளை வரவேற்றாள்.

“அத்தை!” என்று விசும்பியபடி தன் அருகிலே வந்த சுகன்யாவை, அன்புடன் அணைத்துக் கொண்டாள் லட்சுமி.

“அத்தை! என் கண்களைத் திறந்து விட்டவள் சரளா என்ற உத்தமி! என் அகந்தையை அழித்து, என் உள்ளத்திலே அன்பு ஊற்றைத் தோண்டி வைத்து விட்டாள் அவள். இது நாள் வரை ஊனமடைந்திருந்த என் உள்ளத்தை நிமிர்த்திய பெருமை சரளாவினுடையது தான்!” என்று கூறி, சரளாவின் கதையைக் கூறத் தொடங்கினாள் சுகன்யா.

கணவனைப் பிரிந்து சென்றவுடன் பெண்கள் பள்ளி ஒன்றில் ஆசிரியை வேலை தேடிக் கொண்டாள் சுகன்யா. தனக்குக் கிடைத்த ஊதியத்தில் பாதியை ராஜாவின் ஜீவனத்துக்காக அனுப்பியும் வந்தாள்.

தாயிருந்தால் தன் மகளது செய்கை யைக் கண்டித்து, ‘கல்லானாலும் கணவன் என போதித்து, உடனுக்குடன் மகளைக் கணவன் வீட்டில் சேர்க்க முயன்றிருப்பாள். ஆனால், செல்வச் செருக்கிலே மிதந்த அவள் தந்தை அப்படிச் செய்யவில்லை. தன் மகளுடைய பொழுது போக்கிற்காகத் தானே முன்னின்று அவளுக்கு வேலை தேடிக் கொடுத்தார்.

அந்தப் பள்ளியின் தலைமை உபாத்தியாயினி சரளா, சுகன்யாவைப் பெரிதும் கவர்ந்திருந்தாள். சதா புன்சிரிப்புத் தவழும் முகமும், சாந்தமான தோற்ற மும் உடைய அவளை எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்தது. பெயருக்கேற்ப சரளமான சுபாவமுடையவளாகத் திகழ்ந்தாள் அவள்.

சுகன்யாவைத் தன் சொந்த சகோதரி போல் பாவித்து, அன்பு பாராட்டி வந்தாள் சரளா.

ஒரு நாள்…

சரளாவினுடைய அழைப்பிற்கிணங்கி அவள் வீட்டிற்குச் சென்றிருந்தாள் சுகன்யா. அன்புடன் அவளை வரவேற்று உபசரித்த சரளா, தன் கணவருக்கு சுகன்யாவை அறிமுகம் செய்வித்தாள்.

“இவர்தான் என் கணவர் ஸ்ரீதரன் பீ. ஏ.பி.டி. இவள் என் பள்ளியில் கணித ஆசிரியை சுகன்யா!” என்று இருவரையம் பரஸ்பரம் அறிமுகப் படுத்தினாள். புன் சிரிப்புடன் கரம் குவித்து அஞ்சலி செய்தார் ஸ்ரீதரன். சுகன்யாவும் பதிலுக்கு வணக்கம் செலுத்தினாள்.

உல்லாசமாகச் சுகன்யாவுடன் பேசிக் கொண்டே, காபி தயார் செய்து கொண்டிருந்தாள் சரளா. அப்போது ஏதோ சைகை காட்டி அவளை அழைத்த அவள் கணவர், தன் பக்கத்திலிருந்த கரும்பலகையில் ஏதோ எழுதிக் காட்டினார்.

“என்ன சரளா? இன்றைக்கு உங்கள் கணவர் பேச மாட்டாரா?”

“இல்லை சுகன்யா? என்றைக்குமே அவர் பேச மாட்டார்! அவர் பேசும் சக்தியை இழந்தவர்!”

தன் கேள்விக்குச் சற்றும் முகம் கோணாது புன் சிரிப்புடன் பதிலளித்த சரளாவைக் கண்டு, ஸ்தம்பித்துப்போன சுகன்யா, “என்ன?” என்று அலறினாள். மறுகணம் தன்னைச் சமாளித்துக் கொண்டு, “மன்னித்துக் கொள்ளுங்கள் சரளா! விஷயமறியாமல் உங்கள் மனத்தைப் புண்படுத்தி விட்டேன்!” என்றாள்.

“இதில் புண்படுவதற்கு எதுவுமே இல்லை சுகன்யா! எங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த அவரும் நானும் ஒருவரை யொருவர் காதலித்தோம். எங்கள் மணம் முடிவாகக் கூடிய தறுவாயில், வைசூரி கண்டு அது அவருடைய வாய்ச் சொல்லைப் பறித்து விட் டது. திருமணம் முடிந்த பின்னர், இடையிலே இது போன்ற விபரீதம் ஏற்பட்டால் அவரை நாம் ஒதுக்கி விடுவோமா? ஆகவே மனமுவந்து விரும்பியவரையே நான் மாலையிட்டேன்.

“அவருடைய உத்தியோகத்தை நான் ஏற்றுக் கொண்டு, அவரது நலத்தைப் பேணி வருகிறேன். ஆனாலும் சும்மா இருக்க விரும்பாமல், புத்தகங்கள் எழுதி வருவாய் தேடிக் கொள்கிறார் அவர்!” என்று விவரம் கூறினாள்.

அந்த ஒரு கணத்திலே இருண்டிருந்த சுகன்யாவின் அறிவு மீண்டும் சுடர் விட்டது. தன் விஷயம் பூராவும் கூறி “சரளா! என் கண்களைத் திறந்து விட்ட நீங்களே என் தெய்வம்!” என அவளை வணங்கினாள் அவள்.

“கல்யாணமான பின் ஏற்பட்ட விபத்திலே காலிழந்தவரைத் தான் வெறுத்து ஒதுக்கி விட்டு வந்து விட்டேன், பாவி!” என்று கதறினாள்.

“இவருடைய ஊனத்தை நான் ஒரு பொருட்டாகக் கருதவில்லை சுகன்யா. உடலிலே ஊனமிருந்தால் என்ன, உள்ளத்திலே கள்ளமில்லாத அன்பு கொண்ட அவருடன் வாழ்வதில் நான் மிகவும் பெருமையடைகிறேன்!” என்றாள் சரளா.

“நீ உடனே சென்று உன் கணவரது மன்னிப்பைக் கேள். நிச்சயமாக அவர் உனக்கு மீண்டும் தன் உள்ளத்திலே இடமளிப்பார். அவர் ஒத்துக் கொண்டால் நீ இந்த வேலைக்கே வந்து விடு!” என்று சுகன்யாவை அனுப்பினாள்.


தன் மனைவி கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராஜாவின் முகம் மலர்ந்தது.

“எந்த மனிதனும் எப்போது தன் தவறை உணர்ந்து, தன்னைத் தானே திருத்திக் கொள்கிறானோ, அவனுக்கு அப்போது எவருடைய மன்னிப்பும் தேவையில்லை என்று கூறப்படுகிறது. உன்னை நான் மன்னிப்பதற்கு எதுவுமில்லை. உன்னை என்னால் அரைக் கணம் கூட மறக்கவும் முடியவில்லை!” என்று ஆதரவுடன் கூறியபடி அவள் தலையை வருடினான் ராஜா.

இந்தக் காட்சியைக் கண்ட லட்சுமியின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்தது!

– 20 அக்டோபர் 1957

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *