வேட்கையின் நிறங்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 11,686 
 

1.

அவளது விரல்களின் நீட்சியே மோகமாய் உருப்பெற்று என்னுடலை சில்லிடவைக்கிறது. கற்பனைகளில் வெண்ணிற புரவியேறி கூந்தல் காற்றிலாட அவள் என்னை நோக்கியே எப்போதும் பயணிப்பதாய் எண்ணம் தோன்றுகிறது.அவள் என் வகுப்புத்தோழி நதியா. பத்தாம் வகுப்பில்தான் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தாள். அவளைக் கண்ட நொடி முதல் என்னுலகில் வலம் வந்த ஆண்கள் அனைவரும் கரைந்து மறைந்துபோனார்கள்.

என் அருகில் அமர்ந்தபோது அவள் உடலிலிருந்து பரவிய வாசனைக்கு என் பெண்மையை தட்டி எழுப்பும் கரங்கள் இருந்ததோ என்றே எண்ணி வியந்தேன். வேதா என்கிற என் பெயரை வெறுக்க ஆரம்பித்து எப்போதும் நதியா என்றே முணுமுணுக்க துவங்கியது இதழ்கள்.யாராவது நதியா என்றழைத்தால் சட்டென்றொரு நிமிட சில்லிப்பு உடலை ஆக்கிரமித்துக்கொள்ளும். பேனா அல்லது ஏதோவொன்று வாங்க அவளது கைவிரல்கள் என்னிடம் நீள்கின்றபோதெல்லாம் புரிந்துகொள்ள இயலாத அகத்தூண்டலில் திண்டாடினேன் நான். நதியா உன்னை விரும்புகிறேன் என்று சொல்லிவிட முயன்று முயன்று நான் தோற்பதை எப்போது அறிந்துகொள்வாள் அவள்?

“என்னடி திரும்பவும் கனவுக்கு போயிட்டீயா?” நதியா என் வகுப்பில் சேர்ந்த பொழுதுகளை அசைபோட்டபடி படுக்கையில் கிடந்தவளை உசுப்பியது அந்தக் கேள்வி.படுத்துக்கொண்டே தலை திருப்பி அவளை பார்த்தேன்.நீல நிற முழுக்கை சட்டையும் கறுப்பு நிற ஜீன்ஸுமாய் நின்றிருந்தாள்.

ஓடிச்சென்று கட்டிக்கொள்ளலாம் போலிருந்தது. “ஒண்ணுமில்ல நதி…சரி ஆபீஸ் கிளம்பிட்டியா?” அந்த நீலநிற சட்டையை ரசித்துக்கொண்டே கேட்டேன்.

“ஆமாடி இன்னைக்கு சீக்கிரம் போகணும் ஒரு ப்ராஜக்ட் டெட்லைன்,சாயங்காலம் வர லேட்டாகும் கோவிச்சுக்காத செல்லம்” என் கன்னத்தில் தட்டிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டாள்.

மீண்டும் நதியா என் வாழ்க்கைக்குள் வந்த அற்புத பொழுதுகளை நினைத்தபடி படுக்கையில் விழுந்தேன்.

2.

அப்பாவின் அடிகளை அம்மாவால் மட்டுமே தாங்கிக்கொள்ள முடியும். குடித்து சீட்டாடி குடும்பத்தை சீரழித்திருந்தார் அப்பா.அம்மா ஆசிரியை என்பதால் வீட்டில் அடுப்பெரிந்தது. நான் அம்மா அப்பா இதுதான் எங்கள் குடும்பம்.அப்பா என்று அழைக்க விரும்பாததால் அவன் என்றுதான் அம்மாவிடம் பேசுவேன்.

வேலைவெட்டி ஏதுமின்றி எப்போதும் குடியில் மூழ்கியிருக்கும் அவனை அம்மா எப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டாள் என்பது புரியாத ஒன்றாகவே இருந்தது எனக்கு.

ஆண்களை காணும்போதெல்லாம் அவனுடைய சிகப்பேறிய கண்கள்தான் என்னை ஆட்கொள்ளும்.எந்தவொரு ஆணும் அவனை போலவே துர்நாற்றமெடுக்கும் உடலையும் வெறிநிறைந்த சிகப்புக்கண்களையும் கொண்டிருப்பதாக தோன்ற ஆரம்பித்தபோது எனக்கு பதினான்கு வயது முடிந்துவிட்டிருந்தது. பூத்து நின்ற நேரம் பூப்புனித நீராட்டு விழாவிற்கு வீடு நிறைத்திருந்தனர் சொந்தங்கள். அப்போதுதான் முதன் முதலாக மாதவனை பார்த்தேன். என் அத்தை மகன். அரும்பு மீசையும் பூனைமுடி தாடியுமாக திரிந்துகொண்டிருந்தவன் அவ்வப்போது ஓரக்கண்ணில் என்னை பார்த்தது உள்நெஞ்சை வருடுவது போலிருந்தது. ஆண்களே பிடிக்காத எனக்குள் மாதவன் மட்டும் வெள்ளைநிறமும் கருமைநிறமும் கொண்ட ஒளிவீசும் கண்களை கொண்டவனாக தோன்றினான். அந்தக் கண்களும் என்னை தின்றுவிடும் ஓரப்பார்வையும் ஏதேதோ புரியாத உணர்ச்சிகளை தெளித்துச்சென்றன.

மாதவன் எங்கள் வீட்டிலிருந்த ஒரு வாரமும் பல்லாயிரக் கணக்கான யுகங்களுக்கு சமமான வசீகர வாழ்க்கையை எனக்கு தந்துவிட்டதாகவே நினைத்துக்கொண்டேன். கள்ளச்சிரிப்பிலும் திருட்டுத்தனமான பார்வையிலும் மாதவன் என்னை சுற்றி வந்தான். யாருமற்ற அதிகாலையில் கால்களில் ஏதோ நெருடியபோது சட்டென்று விழித்து அதிர்ந்தேன். என் முழங்கால் நோக்கி ஊர்ந்துகொண்டிருந்தது மாதவனின் விரல்கள். வெடுக்கென்று கால்களை பாவாடைக்குள் மறைத்துக்கொண்டேன். மாதவனின் கண்கள் ரத்த சிவப்பாக மனதெங்கும் காட்சியளித்தது. என் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. மாதவன் போய்விட்டான். எங்கள் வீட்டிலிருந்தும் என்னிலிருந்தும்.

3.

மாதவனின் பிரிவுக்கு பிறகு யாரிடமும் அதிகம் பேசாத மெளனியாக இருப்பதே என் இயல்பாகிப்போனது.

ஆண்களைக் காணும்போதெல்லாம் ரத்தம் ஏறிய கண்களும் ஒருவித துர்நாற்றமும் என்னை சூழ்ந்துகொள்ளும். என் அம்மா வேலை பார்க்கும் பெண்கள் மேல்நிலை பள்ளியிலேயே படித்ததால் ஆண்களிடமிருந்து தப்பிக்க முடிந்தது.படிப்பில் மட்டுமே கவனம் திசைதிரும்பிய நேரத்தில்தான் நதியாவின் வருகை நிகழ்ந்தது.

கடைசி பெஞ்சில் என்னருகில் நதியா அமர்ந்த நாள் முதல் இருவரும் நல்ல தோழியாகி விட்டோம். ஆனால் அவளுக்கே தெரியாமல் அவளது தொடுதலை ரசித்துக்கொண்டே இருந்தேன். எதனால் நதியா என்னுள் வந்தாள்? என்ன உறவு இது? ஏதும் புரியும் நிலையில் அப்போது நானில்லை.அது பிடித்திருந்தது. அவளறியா பொழுதுகளில் அவளது பேனாக்களுக்கு முத்தம் கொடுப்பதும் அவளது வாசம் நிறைந்திருக்கும் புத்தகங்களை நுகர்வதும் விவரிக்க முடியாத பெரும் கிளர்ச்சியை எனக்குள் உருவாக்கியிருந்தது.

நதியா என்னைப்போன்றே மெளனத்தை நேசிப்பவளாக இருந்தாள்.ஆனால் தவறு செய்பவர்கள் அது ஆசிரியையாக இருந்தாலும் தயங்காமல் சுட்டிக்காண்பிப்பாள். ஒருமுறை எங்கள் பள்ளியின் வாசலருகே நடந்த விபத்தொன்றில் தவித்த பெண்ணுக்கு உடனே இரத்தம் தர முன் வந்தவள் நதியா. இவை எல்லாவற்றையும் விட என்னை அதிகம் கவர்ந்தது அவளது நீலநிற கண்கள். எப்போதும் பேசும் கண்கள்.
துயர்மிகுந்த இரவுகளில் அவளது கண்களே என்னுடன் உரையாடின. காந்தம் நிறைந்த அவளது பார்வையில் மெய்மறந்து சொல்ல வந்த வார்த்தைகள் தொலைந்து நின்ற நாட்கள் ஏராளம். நீலநிற வானத்தில் நதியாவும் நானும் மேகங்களினூடாக பயணிப்பது போல் கனவு கண்டிருக்கிறேன்.அவள் வாசம்தான் என் சுவாசப்பையை எப்போதும் நிரப்பியபடி இருந்தது.நதியாவிடம் எப்படி சொல்வது என் அக தவிப்பை?

4.

அன்றொரு நாள் பள்ளி முடிந்து எல்லோரும் வீட்டிற்கு போனபின் நானும் நதியாவும் தனித்திருந்தோம். அவள் கண்கள் நீலநிறத்தை இழந்திருந்தது அன்றுதான். இரண்டு பாடங்களில் பெயிலான வருத்தம் தாளாமல் என் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். எனக்குள் ஏதோ சடக்கென்று விழித்துக்கொண்டது.ஆறுதலாய் அணைத்துக்கொண்டு அவள் நெற்றில் முத்தமிட்டேன். மின் அதிர்வுகள் உடலெங்கும் பரவி தனித்தீவில் நானும் அவளும் மட்டுமே தனித்திருப்பதாக கற்பனை விரிந்தபோது என்னை ஏறிட்டு பார்த்தாள். மெல்ல அவளது கண்களின் நீல நிறம் அடர்த்தி பெற்று விஷ நாகத்தின் கண்களைபோல் உருண்டது. கன்னம் நனைத்த கண்ணீர்க்கோடுகளில் முத்தமிட்டேன். இறுக என்னை மார்போடு அணைத்துக்கொண்டாள். திரியின்றி எரிந்து சாம்பலாகி நாங்கள் மீண்டபோது அவள் கைகளுக்குள் நானொரு சிறுமுயலாய் கிடந்தேன்.

அடுத்த இருவருடங்கள் அருகிலிருக்கும் நகரத்தில் ஒரே பள்ளியில் சேர்ந்தோம். விடுதியில் ஒரே அறை. என் கரம் பற்றி கனவுகளை ரசிக்கும் காதலனாய் உடல்பற்றி உயிர் மீட்கும் கணவனாய் நதியா மாறியிருந்தாள்.

என் வானமெங்கும் அவளது கண்களின் நிறம் வழிந்துகொண்டிருக்கும். உடல் பொருள் அனைத்தும் நதியாவின் சொந்தமான தருணம் கல்லூரிக்குள் நுழைந்தோம்.மூன்று வருட கல்லூரி வாழ்க்கையில் நதியாவின் அடிமைப்பெண்ணாக வசிப்பது எனக்கு பிடித்தமானதாக இருந்தது. விடுதி அறைக்குள் அவள் கணவனாக நான் மனைவியாக வாழ்ந்த வாழ்க்கை எவ்வித கஷ்டங்களுமின்றி நகர்ந்தது.

மூன்றாம் வருடத்தின் கடைசி நாளில் அம்மா கல்லூரிக்கு வந்திருந்தாள். கன்னத்தில் புதியதொரு வடு தென்பட்டது.ரத்தக்காட்டேரியாக அவள் கணவன் மாறியிருக்கலாம். வந்தவள் சொன்ன செய்தி கேட்டு உடைந்து அழுதேன். மாதவனுக்கும் எனக்கும் நிச்சயம் செய்யப்போவதாக அம்மா சொன்னாள். அம்மா அப்பாவிடம் மட்டும்தான் கோழை.மற்றவர்களிடம் கல்நெஞ்சுக்காரி.நினைத்ததை முடிக்காமல் விட்டதேயில்லை. விடுதிக்கு திரும்பினேன்.நதியாவின் மடியில் முகம்புதைத்து அழுதேன். என்னை விட்டு அவள் மட்டும் எங்கே போய்விடுவாள்? அவளது நீலக்கண்ணிலும் கண்ணீர் துளிர்த்தது. இருவரும் அந்த நகரத்தை விட்டு தொலைதூரம் சென்றுவிட தீர்மானித்தோம்.

5.

கோவைக்கு ரயிலேறியதிலிருந்து அவள் மடியில் படுத்தபடியே கண்கள் மூடியிருந்தேன் நான். ஜன்னல் வழியே வெளியுலகை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் நதியா. இருவரும் கோவையில் ஒரு வீடுபிடித்து வாழ துவங்கினோம்.அவளுக்கு வெள்ளை வேஷ்டியும் கதர் சட்டையும் எடுப்பாக இருந்தது. கண்மையால் சிறிய மீசையை அவள் வரைந்தபோது அது மாதவனை நினைவூட்டியது.என் மனமறிந்து உடனே அதை அழித்துவிட்டாள்.

மஞ்சள் கயிற்றிலாடிய சிறு மஞ்சள் பார்க்க மிக அழகாய் இருந்தது. ஜன்னல் வழியே மாலை வெயில் இறங்கிக்கொண்டிருக்க என் கழுத்தில் அந்த மஞ்சள் கயிற்றை கட்டினாள். எப்போதும் என்னுடன் இருப்பதாக உறுதியளித்து அணைத்துக்கொண்டாள்.மஞ்சள் வெயிலின் இதத்தை அந்த அணைப்பில் உணர்ந்தேன்.

நதியாவுக்கு ஒரு அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது. நான்கு மாதமாக எங்கள் வாழ்க்கை இனிப்பை மட்டுமே எங்களுக்கு தந்து மகிழ்ந்தது. மொட்டை மாடியில் அவள் மடியில் படுத்துக்கொண்டு மஞ்சள் நிலவை ரசித்த பொழுதுகள் ஏராளம்.சிறுசிறு கதைகளால் என்னை வெட்க செய்வாள்.என் நெற்றியில் புரளும் முடிக்கற்றையை அவளது நீண்ட அழகிய விரல்கள் ஒதுங்கச் செய்யும். இரவுகளில் உணர்வுப்பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளமாய் நதியா என்னை மாற்றியிருந்தாள்.

கதவு தட்டபடும் ஓசை கேட்டு இயல்புக்கு திரும்பினேன். நதியாவாகத்தானிருக்கும். இன்று மல்லிகைப்பூ வாங்கி வருவதாக சொல்லி இருந்தாள். ஓடிச் சென்று கதவை திறந்தேன். அவளுடன் ஒரு வாலிபன் நின்றிருந்தான்.

தன்னுடன் வேலை பார்க்கிறானென்று அறிமுகப்படுத்தினாள். நதியாவின் தோளில் கைபோட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தான் அவன்.

அதிர்ச்சியுடன் நதியாவை பார்த்தேன்.அவளது கண்களின் நிறம் சிகப்பாக மாறிக்கொண்டிருந்தது.

– Tuesday, November 24, 2009

Print Friendly, PDF & Email

1 thought on “வேட்கையின் நிறங்கள்

  1. வித்தியாசமான மற்றும் எதிர்பார்ப்பு எதார்த்தம் நிறைந்த கதை அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *