இமைக்கா நொடிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2021
பார்வையிட்டோர்: 5,849 
 

சென்னை, மயிலாப்பூர் லஸ் கார்னர்.

இரவு இரண்டு மணியிருக்கும்.

தன்னுடைய பிரம்மாண்டமான வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜ மாணிக்கத்தை அவரது மொபைல் எழுப்பியது.

பதட்டத்துடன் எழுந்து உட்கார்ந்து லைட்டைப் போட்டு பேசினார்.

“மிஸ்டர் ராஜ மாணிக்கம்?”

“எஸ்.”

“நான் நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை பேசுகிறேன். உங்க மகன் இப்ப எங்கே இருக்கிறான்?”

“அவனோட ரூமில் தூங்கிக்கிட்டு இருக்கான் சார்..”

“மொபைலோட அங்க போங்க எனக்கு உடனே பார்த்துச் சொல்லுங்க.”

ராஜ மாணிக்கம் விரைந்து போய்ப் பார்த்தார். அங்கு அவருடைய மகன் இல்லை.. “இங்க இல்லை சார்..”

“நீங்க உடனே கிளம்பி நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷன் வாங்க.”
“இன்ஸ்பெக்டர் எனிதிங் சீரியஸ்?”

“ஆமா அதை நீங்கதான் இங்க வந்து உறுதிப் படுத்த வேண்டும்.”

ராஜ மாணிக்கத்தின் மனைவியும் எழுந்துகொண்டு ஆழ ஆரமித்துவிட்டாள்

ராஜ மாணிக்கம் உடல் பதற அவுட்ஹவுஸ் சென்று தூங்கிக் கொண்டிருந்த டிரைவரை எழுப்பி தனது வெள்ளைநிற பென்ஸ் காரில் ஏறி அமர்ந்தார்.

கார் நீலாங்கரை போலீவ் ஸ்டேஷன் நோக்கி விரைந்தது..

ராஜ மாணிக்கத்துக்கு நான்கு வருடத்திற்கு முந்தைய சம்பவம் உடனே நினைவுக்கு வந்தது.

அன்றும் அப்படித்தான் இரவு பன்னிரண்டு மணிக்கு இதே நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து போன் வந்தது. ஆனால் அது அவள் மகள் சம்பந்தப் பட்டது. இதே மாதிரி மகளை ரூமில் காணவில்லை. போலீஸ் ஸ்டேஷன் விரைந்து சென்று பார்த்தால் அவரது ஒரே செல்ல மகள் சுகன்யா பாலியல் கேசில் கைது செய்யப்பட்டு ஸ்டேஷனில் மற்ற சில பெண்களுடன் உட்கார வைக்கப் பட்டிருந்தாள்.

அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த நெடுமாறன் “உங்க மகள் என்ன செய்தான்னு அவளையே கேளுங்க..” என்றார்.

சகன்யா ஓடி வந்து அப்பாவை கட்டிக்கொண்டு அழுதாள்.

“உங்க மகள் பணக்காரப் பசங்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபட்டி ருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டாள். என்ன பண்ண கேஸ் பைல் பண்ணவா ? எப் ஐ ஆர் போட்டுறலாமா?”

ராஜ மாணிக்கம் கெஞ்சிக் கூத்தாடி, இன்ஸ்பெக்டரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து விஷயம் வெளியே தெரியாமல் அமுக்கி விட்டார்.

வீட்டுக்கு வந்த சுகன்யா “என்னை மன்னித்து விடு அப்பா..” என்று அழுது புலம்பினாள்.

சுகனயாவை மீட்டுக் கொண்டுவந்து அவளை உடனடியாக ஒரு நல்ல இடத்தில் கல்யாணமும் செய்து கொடுத்துவிட்டர். அவளுக்கு தற்போது இரண்டு ஆண் பிள்ளைகள். அடையாறில் சந்தோஷமாக இருக்கிறாள்.

இப்ப இவன் எந்த மாதிரி கேசில் மாட்டிக்கொண்டு இருக்கிறானோ என்று குழம்பியபடி ஸ்டேஷனை அடைந்தார்.

ஸ்டேஷனில் காத்திருந்த இன்ஸ்பெக்டர் துரை அவரை மார்சுவரிக்கு அழைத்துச் சென்றார். மார்சுவரி என்றதும் ராஜ மாணிக்கம் வெலவெ லத்துப் போனார் நடுங்கியபடி இன்ஸ்பெக்டரை தொடர்ந்தார்.

அங்கு வைக்கப் பட்டிருந்த பல உடல்களில், ஒரு உடலின் வெள்ளை போர்வையை விலக்கினார்.

அவரது மகனின் உடல் அடையாளம் காண முடியாதவாறு சிதறிய நிலையில் காணப்பட்டது.

ராஜ மாணிக்கம் துடி துடித்துப் போனார். மகனை இழந்து விடுவோம் என்று அவர் ஒருபோதும் நினைத்தது கிடையாது. .

“உங்க மகன் ஈஸியார் ரோடில் நண்பர்களுடன் பைக் ரேஸில் ஈடுபட்டிருந்தான். நிறைய குடித்திருப்பான் போல.. . எலக்ட்ரிக் கம்பத்தில் வேகமாக மோதி உயிரை இழக்க நேரிட்டது.. மகனின் பிதுங்கிய கண்கள் ராஜ மாணிக்கத்தைப் பார்த்து, “சாரிப்பா என்று கெஞ்சியது.

ராஜ மாணிக்கம் வெடித்து அழுதார்.

“இப்ப அழுது என்ன பிரயோஜனம்? வளர்க்கும் போது பொறுப்பான அப்பாவா இருக்கத் தவறினால் இப்படித்தான். பணத்தை சேர்க்கத் தெரிந்த உங்களுக்கு பிள்ளையை ஒழுங்கா வளர்க்கத் தெரியவில்லை.. பெரும்பாலான பணக்காரப் பிள்ளைகள் இரவு நேரங்களில் இமைக்கா நொடிகளுடன் கேளிக்கைகளை நாடி அலைகிறார்கள்.”

பிணத்தை துணியால் மூடினார். “அடுத்து ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்கள்..”

ராஜ மாணிக்கம் மனம் நொந்துபோய் வீடு திரும்பினார். இது தெரிந்தால் அவனது அம்மா எவ்வளவு வேதனைப் பாடுவாள்?

வீடு திரும்பியபோது அங்கே அம்மா மகனைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தாள்.

அதிர்ச்சியடைந்த ராஜ மாணிக்கம் ஓடிப் போய் மகனைக் கட்டிப்பிடித்து “ரூமில் இல்லாமல் எங்கடா போன?” என்றார்.

“எனக்கு ராத்திரி வயிறு சரி இல்லாமல் போய்விட்டது. . அதனால பல சமயங்களில் டாய்லெட்குள்ள இருந்தேன்.. இப்படி அவசரப் பட்டு விட்டீர்களே அப்பா..”

“பதட்டத்துல செய்கிற எந்தக் காரியமும் உருப்பட்டாதுன்னு சும்மாவா பெரியவங்க சொன்னாங்க?” பெண்டாட்டி குத்திக் காண்பித்தாள்.

ராஜ மாணிக்கம் உடனே இன்ஸ்பெக்டரை தொடர்புகொண்டு நடந்ததை விவரித்து மன்னிப்புக் கோரினார். பாவம் யார் பெற்ற பிள்ளையோ? என்று வருத்தப் பட்டார்.

அடுத்த மூன்று மாதங்களில் மகனுக்கு தடாலடியாக திருமணம் நடத்தி வைத்து மாட்டுப் பெண்ணை எப்போதும் குறிப்பாக இரவு நேரங்களில் மகனுடன் உடனிருக்கச் செய்தார்.

அந்தக் குடும்பத்தில் சந்தோஷம் பொங்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *