எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: November 23, 2023
பார்வையிட்டோர்: 5,026 
 

(1998ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம்-1 

வெள்ளிக்கிழமை மணி இரவு எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. தங்கள் தங்கள் வீடுகளில் லட்சோப லட்சம் தமிழ் மக்கள் தொலைக் காட்சியில் ஒளியும் ஒலியும் காணத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். மனத்தில் வேறொரு ஒளியும் ஒலியும் என்று சொல்லத்தக்க காட்சியை ஓட விட்டவாறே பெரம்பூரின் நீண்ட பேப்பர் மில் ரோட்டில் மிக வேகமாக நடந்து கொண்டிருந்தான், செல்வம். அவனுடைய வலது கையில் அன்றைய தமிழ்த் தினசரி ஒன்று காலண்டர் போலச் சுருண்டிருந்தது. புதையலைக் கண்டு விட்டாற் போன்ற பரவச அதிர்வு செல்வத்தின் உடம்பில் மின்னோட்டமாய் ஓடிக் கொண்டிருந்தது. எத்தனை வேகமாய் நடந்தாலும் நடையின் வேகம் அவனுக்குத் திருப்தியாக இல்லை. மனத்தால் எப்போதோ அவனின் அறையை அடைந்து விட்டிருந்த செல்வத்திற்கு உண்மையில் ஓட வேண்டும் போலத்தான் இருந்தது. ஆனால் ஓட்டம் சாலையில் போவோர் வருவோரையெல்லாம் அவனைக் கவனிக்க வைத்து விடும் என்பதால் அதிர அதிரச் செல்வம் நடக்கத்தான் வேண்டியிருந்தது. 

காந்தி சிலை அருகே திரும்பி, குறுகலான மதுரைசாமி மடம் தெருவில் செல்வம் பிரவேசித்தபோது ஓடுவதற்கு வசதியாக அந்த நீண்ட வீதி வெறிச்சோடிக் கிடந்தது.உடனே ஓட்டமும் நடையுமாய்த் தெருக் கோடியை அடைந்து அவனுடைய அறை இருக்கிற கட்ட டத்தின் இருண்ட படிகளில் இரண்டு இரண்டாகத் தாவி ஏறி, வெறுமே சாத்தி இருந்த கதவுகளைப் படார் எனத் திறந்து உள்ளே நுழைந்தான். பழைய தமிழ் மாத நாவல் ஒன்றைக் கவனமாக வாசித்துக் கொண்டிருந்த கரிகாலன் நிமிர்ந்து பார்த்தான். 

“என்ன கரிகாலா, உட்கார்ந்து கதை படிச்சிட் டிருக்கே! ஜுரமெல்லாம் விட்டுச்சா?” செல்வம் அன்புடன் நண்பனை விசாரித்தான். 

“அதெல்லாம் அப்பவே விட்ருச்சி. ஆமா-எதுக்காக இப்படி வேர்க்க விறுவிறுக்க ஓடிவரே?” 

“ஒரு நிமிஷம் இரு. உட்கார்ந்து என்னைக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கறேன்.” 

செல்வம் ஸ்டூலில் உட்கார்ந்து கைக்குட்டையால் வியர்வையைத் துடைத்துக் கொண்டான். “முதல்ல எனக்குக் கொஞ்சம் குடிக்கத் தண்ணி தா, கரிகாலா!” 

கரிகாலன் மண் கூஜாவில் இருந்து தம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து தந்தான். 

குளிர்ந்த நீரைக் குடித்ததும் செல்வத்திற்கு அப்பாடா என்றிருந்தது. 

“ரொம்ப அதிசயமான நியூஸ், கரிகாலா” செல்வம் சொன்னான்; “அதான் இப்படி வேர்க்க விறுவிறுக்க ஓடி வரேன். இன்னிக்கி தினத்தந்தியில் காணாமல்போனவன்னு ஒருத்தனோட போட்டோ போட்டிருக்கான் பார்- அசல் நீயேதான்! ஒரே அச்சு. ஒரு சின்ன வித்தியாசம் கூடப் பார்க்க முடியலை, கரிகாலா… பாரேன் நீயே…” 

கையில் சுருட்டி வைத்திருந்த செய்தித் தாளைப் படபடப்புடன் செல்வம் பிரித்துக் காட்டினான். ஒரு பத்திரிகையைப் பார்க்கிற சாதாரணத் தோரணையில் கரிகாலன் செல்வம் காட்டிய அந்தக் குறிப்பிட்ட பகுதியைக் கண்டான்.உடனே அவனுடைய கெட்டியான புருவங்கள் நெரிந்தன. 

ஆச்சர்யத்துடன் செல்வத்தை நிமிர்ந்து பார்த்தான். “எப்படி இருக்கான், உன்னை மாதிரியே இருக்கானா இல்லையா?” செல்வம் கேட்டான். 

“உரிச்சு வைத்த மாதிரி அப்படியே இருக்கான் யார் செல்வம் இவன்?” 

“அந்தப் போட்டோவுக்குக் கீழேயே விபரமா போட்டிருக்குது பார்”

புகைப்படத்தின் கீழ்ப் பிரசுரிக்கப்பட்டிருந்த விளம்பர வரிகளைக் குனிந்து வேகமாக வாசித்துப் பார்த்தான் கரிகாலன். 

புகைப்படத்தில் இருந்த இளைஞனின் பெயர் கிருஷ்ணகுமார், 26 வயது. கடந்த பத்து நாட்களாக அந்த இளைஞனைக் காணவில்லை. ஏதோவொரு காரணத்தால் ஓடிப்போய் விட்டான். எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை. அவன் எங்கே இருந்தாலும் வீடு திரும்பும் படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தான். அந்த இளைஞன் இருக்கும் இடத்தை யாராவது அறிந்து தெரிவித்தால் அவர்களுக்குத் தகுந்த வெகுமதி அளிப்பதாகவும் சொல்லப் பட்டிருந்தது. எல்லா விபரங்களுக்கும் கீழே அவனுடைய தகப்பனார் பெயரும் முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தன. 

“அந்தப் பையனோட அப்பா பெயர் – சிவசிதம்பரம் போலிருக்கு-” கரிகாலன் சொன்னான். 

“இண்டியன் எக்ஸ்பிரஸ், ஹிண்டு போன்ற இங்லிஷ் பேப்பர்லேயும் இதே விளம்பரம் வந்திருக்கு, கரிகாலா.” 

“நிச்சயமா பெரிய இடத்துப் பையன்தான்.” 

“நீ போயிடிறியா கரிகாலா-அவனோட இடத்துக்கு?” கண்களில் பேரார்வம் மின்னச் செல்வம் கேட்டான். 

“ரொம்ப சுலபமா கேட்டுட்டே”. 

“படு கரெக்டா பிளான் பண்ணியாச்சுன்னா எதுவுமே சுலபம்தான். நீ சரின்னு சொல்லு, அந்தக் காணாமல் போன கிருஷ்ணகுமார் நீதான்னு சொல்லி உன்னைக் கொண்டு போய் அவனுங்க வீட்ல நிறுத்திடறேன்…” 

“அவசரப்படாதே செல்வம். போட்டோவில் பார்க்கிறதுக்கு என்னை மாதிரியே இருக்கான் என்கிற தாலேயே நான்தான் கிருஷ்ணகுமார்னு சொல்லிட்டு ஈஸியா அவனோட வீட்டுக்குள்ளே நான் போயிட முடியாது. கிருஷ்ணகுமார் என்கிற பையன் வெறும் என்னோட உருவ ஒற்றுமை மட்டுமில்லை…” 

“தெரியும் கரிகாலா… ஒரு மனுஷன் என்கிறவன் வெளியில் தெரிகிற உருவம் மட்டுமில்லை. இருந்தாலும் வெளி உருவம் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அதை மறந்திடாதே. நான் ஒண்ணும் இப்பவே தொடர்ச்சியான பிளான் எதையும் போட்டுடலை. ஆனா ஒரு ஐடியா வந்திருக்கு. அதை ஜஸ்ட் ஒரு முயற்சி செய்து பார்க்கலா மேன்னு நெனைக்கிறேன். ஏன்னா -நம்மைப் பொறுத்தவரைக்கும் எல்லாச் சாலைகளுமே குற்றங்களை நோக்கித்தான். இப்ப இங்கே; உன்னைப் போலவே உருவ ஒற்றுமை உள்ள பெரிய பணக்கார வீட்டுப்பையன் ஒருத்தன் இருக்கான். வீட்டை விட்டு ஓடிப் போயிட்டான் அந்தப் பையன். நான்தான் அந்தக் கிருஷ்ணகுமார்னு சொல்லிட்டு நீ அவனோட வீட்டுக்குப் போறே ஒரு பத்தே பத்து நாள், இல்லே ஒரு வாரம் அந்த வீட்ல தங்கியிருந்து ரொம்ப நீட்டா ஒரு பெரிய கொள்ளையை நடத்திட்டு, கண்ணும் காதும் வைத்தாப்ல சைலண்டா வந்திர முடியுமா முடியாதான்னு ஒரு ப்ளானை முதல்ல நாம் போட்டுப் பார்க்கலாமே… என்ன சொல்றே?” 

கரிகாலன் பதில் சொல்லாமல் நகத்தைக் கடித்தவாறு போட்டோவில் இருந்த கிருஷ்ணகுமார் என்ற இளைஞனையே கவனித்துப் பார்த்தான். 

“என்ன- ஒண்ணுமே சொல் மாட்டேன்கிறே?” 

‘ஒண்ணுமில்ல. எவ்வளவுதான் ப்ளான் போட்டுச் செய்தாலும் ரொம்ப ரொம்ப ரிஸ்க்கான விஷயம்…” 

“ரிஸ்க்கான விஷயம்தான். இல்லேன்னு சொல்ல லையே நான் ஆனா ஒண்ணை நீ மறந்திடாதே, கரிகாலா. நீயும் நானும் சினிமாவில் வர்ற மாதிரியான மடசாம்பிராணி வில்லன்கள் கிடையாது, மாட்டிக்கிறாப்பல ப்ளான் போடறதுக்கு. நாம் ஒரு ப்ளான் போட்டா-அது அப்படியே க்ளியரா வெண்ணெய வெட்டற மாதிரியான அப்பழுக் கில்லாத ப்ளானாத்தான் இருக்கும். அப்படி இருக்க முடியாதுன்னா ப்ளானே கிடையாது. இதுவரைக்கும் நாமும் எத்தனையோ கொள்ளை அடிச்சாச்சி. எந்தப் போலீஸ் காரனோட சின்னச் சந்தேகத்துக்கும் ஆளானது கிடையாது. எல்லாமே சூப்பர் சக்சஸ். அதனால்… இந்தக் காணாமல் போனபையன் கிருஷ்ணகுமார் விஷயத்திலேயும் ஒரு சூப்பர் ப்ளான் போட்டுப் பார்ப்போமே…” 

”சரி, என்ன ப்ளான் போட்டிருக்கே?” கரிகாலன் கேட்டான். 

”நோ நோ. இன்னும் கட் அண்ட் ரைட்டா எந்த ப்ளானையும் நான் போட்டுரலை. ஆனா தைரியமா ப்ளான் போட்டுப் பாத்திரலாம் என்கிற நம்பிக்கையை டீக்கடைக் கண்ணன் தந்திட்டான் – அவனையும் அறியாம…” 

“யாரு, நம்ம டீக்கடைக் கண்ணனா?” 

“இந்த விளம்பரத்தை நான் பார்க்கவே இல்லை, கரிகாலா. கண்ணன்தான், ‘நம்ம கரிகாலன் சார் மாதிரியே இருக்கிற ஒருத்தனோட போட்டோ இன்னைக்கி பேப்பர்ல வந்திருக்கு’ன்னு சொல்லி நான் போன உடனே பேப்பரை எடுத்துக் காட்டினான். அப்புறம் தான் நானே பார்த்தேன். பேப்பரை அப்புறம் பார்த்தா ஹிண்டுலேயும் வந்திருக்கு. எக்ஸ்ப்ரஸ்லேயும் வந்திருக்கு. ஒரே திரில்லாயிடுச்சி எனக்கு”. 

“நெஜமாவே திரில்லிங்கான விஷயம்தான்…”

“ஒரு டீக்கடைக்காரனுக்கு நீ அப்படியே கிருஷ்ணகுமார் என்கிற பையன் மாதிரியே இருக்கிறதா தெரிஞ்சுதுன்னா, ஏன் அந்தப் பையன் கிருஷ்ணகுமாரோட வீட்டுக்கார மனுசங்களுக்கும் உன்னைப் பார்த்தா நீ அவங்க வீட்டுப் பையன் போலவே இருக்கிறதா தோணக் கூடாது?”

“தாராளமா தோணும், ஆனா அப்படித் தோணுது என்கிற விசயம் மாத்திரமே போதாது நமக்கு.”

“போதாது. இல்லியா? அப்ப, நீ கிருஷ்ணகுமார் மாதிரியே இருக்கிறதா நினைக்காமே. நீதான் அந்தக் கிருஷ்ணகுமார்னு அவனோட வீட்டு ஆளுங்கெல்லாம் நினைக்கணும். அந்த அளவுக்கு இந்த உருவ ஒற்றுமை விசயத்துல நீட்டா ஒரு பிளான் போட முடியுமா முடியா தான்னு முதல்ல தெரிஞ்சிக்கணும்” 

“சிகரெட் வச்சிருக்கியா, செல்வம்?” கரிகாலன் கேட்டான். 

செல்வம் பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து நீட்டினான். 

கரிகாலன் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு கேட்டான். 

“அந்தச் சிவசிதம்பரத்தோட அட்ரஸ் என்ன போட்டிருக்கு?…” 

“ராஜா அண்ணாமலை புரத்ல ஃபோர்த் மெயின் ரோடு…” 

“ராஜா அண்ணாமலைபுரம்னா பெரிய பணக்காரன்களோட வீடாத்தான் இருக்கும்.”

“ஆனா அது வீட்டு அட்ரஸா கம்பெனி அட்ரஸானு தெரியலையே.”

“வீட்டு அட்ரஸாதான் இருக்கும். ஏன்னா-ராஜா அண்ணாமலைபுரம் ரெசிடென்ஸியல் ஏரியாதானே…” 

“அப்படிச் சொல்லிர முடியாது. இப்பல்லாம் அந்த மாதிரியான ரெசிடென்ஸியல் ஏரியாலதான் சில கம்பெனிகளைக் கொண்டு போய் வச்சிக்கிறான்.” 

“நாளைக்குக் காலையில் போய்ப் பார்த்துட்டா போகுது…” 

நண்பர்கள் இருவரும் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்கள். 

“இன்னொரு விசயம், கரிகாலா. ஆறு மாசத்துக்கு முந்தி பெட்ரோல் பங்க் காஷியர் பேங்க்ல பணம் கட்டப் போனப்ப ரொம்ப சுளுவா பதினாலாயிரம் ரூபா அடிச்சோமே -அந்தக் காஷியரை இன்னைக்கி மத்யானம் ஓட்டல்ல பார்த்தேன்…”

“அந்தக் கொள்ளையில மயிரிழையில தப்பிச்சோம், இல்லே?” 

“அந்த பாங்க் ஏரியாவுக்கான போலீஸ் ஸ்டேஷன் டி ஒன்தானே?” 

“அப்படித்தான்னு ஞாபகம்” 

“தேவ இரக்கம் அந்த ஸ்டேஷனில் இருக்கானா- ட்ரான்ஸஃபர் ஆகிப் போயிட்டானான்னு தெரியலை” 

“பாவம்-எவன் எவனையோ போட்டு உதைச்சிருக்கான்…” 

“இந்த கிருஷ்ணகுமார் என்கிற பையன் விசயத்ல பெரிய ப்ளான் போடறதுக்கான கச்சிதமான அமைப்பு கெடைச்சி லட்சக்கணக்கான தொகையை வெட்ட முடிஞ்ச துன்னு வச்சிக்க, அப்புறம் ஒரு நாள் கூட இந்த மெட்ராஸ்ல இருக்க முடியாது. அத்தனையையும் சுருட்டிக்கிட்டு கல்கத்தா பக்கம் பறந்திடணும்.” 

“ஆமாமா. பறந்துதான் ஆகணும். இங்கே இருந்தாக்க-நாற்பத்தெட்டு மணி நேரத்ல உன்னைப் பிடிச்சி மடக்கிடுவான்…” 

“அப்ப நாளைக்கிக் காலையில ராஜா அண்ணாமலை புரம் போய் ஒரு ‘சர்வே’ எடுத்திட்டு வந்திடிறியா?” கரிகாலன் கேட்டான். 

சில வினாடிகள் யோசித்த பின் செல்வம் சொன்னான். 

”நாளைக்கு எந்திரிச்சதும் முதல் வேலை அதான் எனக்கு. ஆனா கரிகாலா, நீ மட்டும் நாம் இந்தக் கிருஷ்ணகுமார் விசயத்ல கொள்ளையடிக்கப் போறோமா இல்லையான்னு தீர்மானிக்கிற வரைக்கும்- எதுக்காகவும் ரூமைவிட்டு வெளியேறிடாதே, சாப்பாடு காப்பி எல்லாம் வேளா வேளைக்கு நானே கொஞ்சம் லேட் ஆனாலும் கொண்டாந்து தந்திடறேன். நம்ம பசங்க யாராவது உன்னைக் கேட்டா ஊர்ல இல்லைன்னு சொல்லிக்கிறேன்… என்ன?” 

“அப்ப நாளையில் இருந்து கொஞ்ச நாளைக்கு நம்ம பாதை ராஜா அண்ணாமலைபுரம் நோக்கியா?” 

“இல்லே. பெரிய குற்றத்தை நோக்கி…” 

“நிச்சயமா!” 

நண்பர்கள் இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள். 

அத்தியாயம்-2 

“அப்பாடி, இந்த இடத்தைக் கண்டுபிடிக்கிறதுக் குள்ளே உயிர் போயிடுச்சி எனக்கு…” என்று சொல்லியபடி தோளில் போட்டிருந்த துண்டால் முகத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார் இளைய பெருமாள். 

“வாங்க சித்தப்பா!” என்றபடி எழுந்த கரிகாலன் இளையபெருமாள் உட்கார்ந்து கொள்ள ஸ்டூலை எடுத்துப் போட்டான். 

“இந்த வீட்டுக்கு எப்ப வந்தே?” 

“ரெண்டு மாசமாகுது. சித்தப்பா.”

“ஏன் அந்தப் புரசைவாக்கம் வீட்டைக் காலி செஞ்சே?” 

“ஹவுஸ் ஓனருக்கும் எங்களுக்கும் சரிப்பட்டு வரலை…” 

“அதென்னமோ ஆறு மாசத்துக்கு ஒரு வீடு மாத்தறே! நாலு மாசத்துக்கு ஒரு தொழில் மாத்தறே வீடு வாங்கித் தர்ற பிசினெஸ் செய்திட்டு இருந்தியே-என்ன ஆச்சி அது? செய்திட்டு இருக்கியா இல்லையா?” 

“இல்லை சித்தப்பா, நிறுத்திட்டேன்.” 

“ஏன்?” 

“பொதுவாவே ரியல் எஸ்டேட் பிசினெஸ் இப்ப பயங்கர டல்… அது இருக்கட்டும் சித்தப்பா,எப்படி இந்த ரூமைக் கண்டுபிடிச்சீங்க?” கரிகாலன் கேட்டான். 

“லோல் பட்டுத்தான் கண்டுபிடிச்சேன். அதை விடு… இப்ப நான் முக்கியமான வேலையா வந்திருக்கேன். உன் அப்பாவுக்கு உடம்புக்கு ரொம்ப முடியலை. உன் சின்னம்மாக்காரிக்கு வேற கண்ல ரெடினா ப்ராப்ளத்ல கொஞ்சம் கொஞ்சமா பார்வை குறைஞ்சிக் கிட்டே இருக்காம்.ஆபரேசன் பண்ண வேண்டி வந்தாலும் வரலாம். இந்தச் சமயத்திலாவது நீ ஏதாவது செஞ்சாத்தான் உன் அப்பா குடும்பம் கொஞ்சமாவது தைரியமா இருக்க முடியும். குறைஞ்சது ஐயாயிரம் ரூபாயாவது இப்போதைக்கு வேணும்…இதுக்குத்தான் உன்னை ஒரு வாரமாத்தேடி அப்படியொரு அலைச்சல் அலைஞ்சிருக்கேன். நீ இப்படி எங்கேயோ செம்பியம் பக்கம் வந்து கிடக்கே…”

“என்ன சித்தப்பா நீங்க! நான்தான் என்னோட அப்பாவுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாதுன்னு விடுதலைப் பத்திரமே எழுதிக் குடுத்திட்டேன். அது தெரிஞ்சும் இப்படி வந்து என்னை அவருக்குப் பணம் குடுக்கச் சொல்றீங்களே…”

“நீ விடுதலைப் பத்திரம் குடுக்கலைன்னு யாரு சொன்னது? ஏதோ வறுமையில் படாதபாடுபடறார். இதில் ஓயாமே நோய் வேற அப்பான்னு நினைக்காமே, ஏதோ கஷ்டப்படற ஒரு மனுச ஜீவன்னு நெனைச்சி உதவி செய்யேன்…” 

“பெத்த மகன்னு கூடப் பார்க்காமே பதினைஞ்சி வயசில என்னை ரெண்டாம் தாரக்காரியோட பேச்சைக் கேட்டு வீட்டை விட்டே விரட்டின ஒருத்தரை எப்படி சித்தப்பா மனுச ஜீவன்னு நெனைக்க முடியும்? நீங்களே சொல்லுங்க”. 

“தப்புத்தான் கரிகாலா! உனக்கு உன் அப்பா செஞ்ச எல்லாமே தப்புத்தான். அதை எல்லாத்தையும் இப்ப நெனைச்சி ரொம்ப வருத்தப்படறார். உன்கிட்டே மன்னிப்புக் கேட்கவும் தயாரா இருக்கார்…” 

“நான் மன்னிக்கத் தயாரில்லை. ஒரு பைசா அவருக்குக் குடுக்க இஷ்டப்படவும் இல்லை”. 

“அவருக்குத் தர இஷ்டமில்லேன்னா வேணாம். எனக்குக் குடு ஒரு நாலாயிரம் ரூபா. நாலு மாசத்ல திருப்பிக் கொண்டாந்து தந்திடறேன்.” 

“என்னை என்னமோ விரல் சூப்புற பையன் மாதிரி நெனைச்சிப் பேசறீங்க!… என் அப்பாவுக்கு மட்டுமில்லை என்னோட உறவுக்காரங்களுக்கும் நான் பத்துப் பைசா தரமாட்டேன். எங்க அப்பன் தன்னோட ரெண்டாந்தாரத்துக் காரி பேச்சைக் கேட்டு வீட்டை விட்டு என்னைத் துரத்தி விட்டப்ப நீங்க எல்லாரும் பார்த்துக்கிட்டு சும்மா தானே நின்னீங்க…” கரிகாலன் கொஞ்சம் ஆக்ரோஷத்துடன் பேசினான். இளையபெருமாள் மௌனமாகப் பெருமூச்சி விட்டார். அப்போது சாப்பாட்டுக் கேரியருடன் செல்வம் உள்ளே நுழைந்தான். 

“இதோ உன் ஃப்ரண்ட் வந்திட்டான்!” என்றார் இளையபெருமாள். 

”வாங்க சார். எப்ப வந்தீங்க?’ செல்வம் விசாரித்தான். 

“கையில் என்ன கேரியர்? சாப்பாடா?’ 

“ஆமா சார். கரிகாலனுக்கு.” 

”அப்ப நீ உங்க அப்பாவுக்கு ஹெல்ப் பண்றதா இல்லை?” இளையபெருமாள் கேட்டார். 

“இந்த ஜென்மத்ல இல்லை” 

“இப்படியே போய்ச் சொல்லிரவா?” 

“நான் சொன்னதாகவே சொல்லுங்க…” 

”சரி, அந்தப் பக்கமா வந்தா எங்க வீட்டுக்காவது வா..” 

“பாக்கிறேன், சித்தப்பா.” 

“அப்ப வரட்டுமா”

“வாங்க.” 

“வரம்பா, செல்வம்” 

“செய்ங்க சார்.” 

இளையபெருமாள் எழுந்து போய்ப் படிகளில் இறங்கித் தெருவில் நடந்தார். 

“என்ன ஆச்சு, செல்வம், அந்தப் பயல் கிருஷ்ண குமாரோட வீட்டைப் பார்த்திட்டியா…?” கரிகாலன் உடனே கேட்டான். 

“ஒரு ரவுண்ட்டே அடிச்சிப் பார்த்திட்டு வந்திட்டேன்…” 

“எப்படியிருக்கு வீடு?” 

“பழைய காலத்து மெட்ராஸ் டைப் வீடுதான்…”

”அப்பக் கொஞ்சம் பரம்பரைப் பணக்காரன்களா இருக்கலாம்.” 

“ஆனா வீட்டை ரொம்ப ஜோரா மெயிண்ட்டெய்ன் பண்ணிட்டு வர்ற மாதிரி தெரியுது…” 

“வாசல்ல கூர்க்கா கீர்க்கா?” 

“எவனுமில்லை… ஆனா உள்ளே பெரிய நாய் தெரிஞ்சுது” 

“எப்படிப் போனே?”

“மவுண்ட் ரோட்ல சின்ன வேலை இருந்தது இல்லியா? அதை முடுச்சிட்டு அஞ்சாம் நம்பர் பஸ் பிடிச்சி காளியப்பா ஆஸ்பிடல் பக்கத்து ஸ்டாப்ல இறங்கி மெதுவா நடந்தே போய்ப் பார்த்தேன்… போக்குவரத்து நெரிசல் எதுவும் ஜாஸ்தி இல்லாத ரோடு-அந்த ஃபோர்த் மெயின் ரோடு… பட்டப் பகல்ல ஏதாவது ஒரு வீட்ல கொலை நடந்தாக் கூடத் தெரியாது… அந்த மாதிரியொரு அமைப்பு.”

“அவசரம்னா பறக்கிறதுக்கு எதுவும் ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கா பக்கத்தில?” 

“வடக்கே பக்கிங்காம் கேனலை ஒட்டியே நடந்தா அபிராமபுரம் ஸ்டாண்ட்… தெற்கே ஒரு நிமிஷம் வேகமா நடந்தா காமராஜர் சாலையில் இருக்கிற ஸ்டாண்டுக்குப் போயிரலாம்… கிழக்கா பிரிட்ஜ் தாண்டி வந்தோம்னா வெங்கட கிருஷ்ண அய்யர் ரோட்ல இருக்கிற ஸ்டாண்டுக்கு வந்திரலாம்… அதெல்லாம் ப்ராப்ளம் இல்லை. ஆனா பொதுவா அந்த ஏரியாவில் இருக்கிற தெருக்கள் எல்லாத்தி லேயுமே ஜனநடமாட்டம் ரொம்பக் குறைச்சல்…”

“இருந்தா இருந்திட்டுப் போகட்டுமே…”

“இல்லை கரிகாலா, அது கொஞ்சம் மைனஸ் பாயிண்ட். அதுக்காகச் சொல்றேன். ஆனா-ஒரு முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்டும் இருக்கு. அந்தப் பயல் வீடு தெருவில் கிட்டத்தட்ட கடைசிக்கு வந்திடுது அவசரம்னா ஈஸியா மெயின் ரோட்டுப் பக்கம் திரும்பிரலாம்…” 

“ஸோ வீட்டையும் தெருவையும் பொறுத்த வரைக்கும் ஓகே?” 

“டபுள் ஓகே…” 

“அப்ப நானும் ஒரு விசிட் அடிச்சிப் பாத்திட்டு வந்திரட்டுமா?” கரிகாலன் கேட்டான். 

“நைட்ல போ… அதுவும் ஆட்டோல போ.. கீழே எங்கேயும் இறங்கிடாதே…” 

“நம்ம தம்பித்துரை ஆட்டோவைக் கேட்டு வாங்கிக்கறேனே… அப்பதான் நெனைக்கிற மாதிரிக்கு கச்சிதமா தேவையான ரவுண்ட் அடிச்சிப் பாத்திருவேன். நீ?” 

“வீட்டைப் பாத்திட்டு வந்திட்டேன். இனி வீட்டுக் குள்ளே போய்ப் பார்க்கணும்… ஆழம் எவ்வளவுன்னு கணக்குப் போடணும்…ஆழம் எவ்வளவுன்னு தெரிஞ்சி போச்சின்னா ஜோரா காலை விட்டுரலாம்…” 

“கால் போயிரக்கூடாது, செல்வம்” 

“கால்ல போட்டிருக்கிற செருப்புப் போகுமே தவிர நம்மோட ப்ளான்ல கால் மட்டும் என்னைக்கும் போயிடவே போயிடாது, கரிகாலா…” 

“என்கிட்ட கேட்டா செருப்புக் கூடப் போகக் கூடாது”. 

”சரி, நீ சாப்பாட்டை எடுத்துச் சாப்பிட்டுக்கிட்டு இரு… நான் போய் டெலிபோன் டைரக்டரியில் அந்தச் சிவசிதம்பரம் வீட்டுக்குப் போன் நம்பர் என்னன்னு பாத்து; அவருக்குப் போன் பண்ணி ரெண்டு வார்த்தை பேசிட்டு வந்திடறேன்.” 

“இப்ப என்ன பேசப்போறே செல்வம்?” 

“நீ சாப்பிடு கரிகாலா… இதோ பத்து நிமிஷத்ல வந்திடறேன்…”

செல்வம் வேகமாக எழுந்து போனான். தெருமுனையில் இருந்த லாண்டிரிக் கடையில் உரிமையுடன் நுழைந்து மேஜையில் இருந்த டெலிபோன் டைரக்டரியை எடுத்துப் புரட்டினான். சிவசிதம்பரம் என்ற பெயரில் தான் போய் வந்த ராஜா அண்ணாமலைபுரம் முகவரியைத் தேடி அதற்கான நம்பரைக் கவனித்தான். பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய பேப்பரில் போன் நம்பரைக் குறித்துக் கொண்டான். பின் கவனமாக அந்த நம்பருக்கு டயல் செய்தான். எதிர் முனையில் மணியோசைத் தொடர் கேட்டது.உஷாராகச் செல்வம் காத்திருந்தான்… ரிஸீவர் எடுக்கப்படும் அரவம் கேட்டது. 

“ஹலோ…” ஒரு பெண்ணின் “ஹலோ… அது மிஸ்டர் சிவ சிதம்பரம் வீடு தானே?” செல்வம் கேட்டான். 

“ஆமா. நீங்க யார் பேசறது?”

“என் பெயர் விக்ரமன். நான் மிஸ்டர் சிவ சிதம்பரம் கிட்டே பேசணும்.” 

“என்ன விஷயமா?”

“காணாமல் போன அவரோட ஸன் கிருஷ்ண குமார் பற்றி…” 

எதிர்முனைப் பெண் குரல் சில விநாடிகள் அதிர்வில் நிசப்தம் அடைந்து விட்டு… “ஒன் மினிட்…” 

செல்வம் ஒரு நிமிடத்திற்கும் மேலாகவே காத்திருந்தான்… 

“ஹலோ-நான் சிவசிதம்பரம் பேசறேன்-” குரல் அவசரமாகவும் சப்தமாகவும் கேட்டது. 

“குட் ஆஃப்டர் நூன் சார்…” 

“குட் ஆஃப்டர் நூன்… சொல்லுங்க…” 

“நேத்து பேப்பர்ல உங்க ஸன் கிருஷ்ணகுமாரைக் காணோம்னு நீங்க குடுத்திருந்த விளம்பரத்தைப் பார்த் தேன். நான் அவனைத் தேடிக் கண்டு பிடிக்கலாம்னு நெனைக்கிறேன். அதனால் அவனைப் பத்தின இன்னும் சில டிடெய்ல்ஸ் நீங்க குடுத்தீங்கன்னா எனக்கு உதவியா இருக்கும்…அதுக்குத்தான் போன் பண்ணினேன்… நேர்ல வரட்டுமா – பேசறதுக்கு…’ 

“உங்க பெயர்?” 

“விக்ரமன் ஸார்”. 

“எங்கே வர்க் பண்றீங்க?” 

“எங்கேயும் வர்க் பண்ணலை… ஆனா இந்த மாதிரி காணாமல் போறவங்களைக் கண்டு பிடிக்கிற ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ்வா அப்பப்ப ஈடுபடறது உண்டு… வெற்றியும் கெடைச்சது உண்டு… அதான் உங்க ஸன் விஷயத்திலேயும் முயற்சி செய்து பார்க்கலாம்னு தோணுது …”

சில விநாடிகள் மௌனமாக இருந்த பின் சிவசிதம்பரம் சொன்னார்: ”ஆனா – அதுக்காகப் பணம் எதுவும் உங்களுக்கு அட்வான்ஸா தர மாட்டேன்…” 

“ஒரு பைசாதர வேண்டாம்…” 

“கண்டுபிடிச்சி தந்தீங்கன்னா ஐ வில் பே… ஆனா ஒரு விஷயம். என் மகனைக் கண்டு பிடிச்சித் தர ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தையும் அப்ரோச் பண்ணியிருக்கேன்…”

“நோ ப்ராப்ளம்… நான் என்னோட லெவல்ல முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்… சரிதானே?” 

“உங்க பெயர் என்ன சொன்னீங்க?” 

“விக்ரமன்…”

“மிஸ்டர் விக்ரமன், உடனே புறப்பட்டு என் வீட்டுக்கு வாங்க… அட்ரஸ் தெரியும் இல்லையா?” சிவசிதம்பரம் கேட்டார். 

“அட்ரஸ் இருக்கு… இன்னும் ரெண்டு மணி நேரத்ல வந்திடறேன்.” 

“ப்ளீஸ்…சீக்கிரம் வாங்க…’ 

வருகிறேன் சிவசிதம்பரம், வருகிறேன் என மனத்துள் கூறிக்கொண்டே செல்வம் ரிசீவரை வைத்தான்.

– தொடரும்…

– எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி (நாவல்), முதற் பதிப்பு: 1998, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *