கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2021
பார்வையிட்டோர்: 6,122 
 

அந்த சின்னஞ் சிறிய சந்துக்குள்தான் இவர்கள் பந்தடிக்கின்றார்கள்.

இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று வாழைச்சீப்புப் போல் வரி வரியாக வீடுகள்.

வீட்டுக்கு முன்னால் வேலியேதும் இல்லாத திறந்த வெளிகள், செடி வளர்த்து மறைப்புக்கள், முட்கம்பி வேலிகள், மூங்கில் பிளாச் சடிப்புகள், காம்பவுண்ட் சுவரும் கேட்டுகளுமாக தரத்திற்கேற்ப பாதுகாப்புகள்.

எல்லா வீட்டுக்காரர்களுமே அந்தச் சந்துக்குள்ளாகத்தான் நடக்க வேண்டும். வெளியே றோட்டுக்குப் போவதென்றாலும்… உள்ளே வீட்டுக்கு வருவதென்றாலும்!

சந்தடிமிக்கதான அந்தச் சந்துக்குள்தான் இவர்கள் பந்தடிக்கின்றார்கள்.

தாங்கள் ஏதோ அர்ஜுனா ரணதுங்க…. சனத் ஜெயசூரிய போல வும் இந்தச் சந்து என்னவோ ஈடன் கார்டன் போலவும்…. அப்படி ஒரு நினைப்பு!

“ஆட்களைப் பார்… போதை மாத்திரைகள் போட்டவர்கள் மாதிரி… தறுதலைகள் இதுகளுக்கு கிரிக்கட் ஒரு கேடு…”

இப்படி முணு முணுத்துக் கொள்ளாமல் யாரும் அந்தச் சந்துக்குள் நடப்பதில்லை .

இந்த முணு முணுப்புக்களை அவர்களும் சட்டை செய்ததில்லை. வேக வேகமாகப் பந்தெறிவார்கள். வீசி வீசி அடிப்பார்கள். விரட்டிக் கொண்டோடிப்போய் பிடிப்பார்கள். சந்துக்குள் நடப்பவர்கள் பாடு தர்ம சங்கடம்தான் ! போலீசில் புகார் செய்தாவது இதை நிற்பாட்டி யாக வேண்டும் என்று கருவிக் கொள்வார்கள்.

திடீரென்று கள்ளச்சாராயம் பிடிக்க ஓடிவரும் போலீஸ்காரர்களே இவர்களுக்கு பந்தெடுத்துக் கொடுத்து விட்டுப் போகும் சங்கதிகள் எல்லாம் இவர்களுக்கெங்கே தெரியப் போகிறது.

இவர்களில் ஒருவன் நாளைக்கே களுவித்தாறனயாகவோ, சனத்தாகவோ வந்து விடலாம் என்னும் தேசிய எதிர்பார்ப்பு அவர் களுக்கு.

யார் கண்டார்கள்?

வீசிய பந்தை விளாசுகிறான் ஒருவன்.

தண்டவளாத்தில் ரயில் ஓடுவதுபோல் சந்துக்குள் மட்டும் நேராகவா பந்தோடும். எதிர் வீடு பக்கத்து வீடு, மூலை வீடு என்று எல்லா வேலிகளுக்குள்ளும் தான் பாய்ந்தோடும். கதவைத் தட்டும். ஜன்னல்களை ஆட்டும் டமடம்’ வென்று கூரைத்தகரத்தில் கூத்தாடும். ஹாலுக்குள் நுழைந்து சோபாக்களில் பதுங்கிக் கொள்ளும்!

முள்கம்பிகளை நெம்பித்தூக்கிக் கொண்டு நுழைவார்கள். செடி களை நீவி நெரித்துக் கொண்டு பாய்வார்கள். மூங்கில் பிளாச்சின் இடுக்கு வழியே இறங்குவார்கள். சுவரேறிக் குதிப்பார்கள்.

பந்தைத் தேடித்தான்!

உள்ளே இருந்து கத்திக் கொண்டு ஓடிவருவார்கள் வீட்டுப் பெண் கள். இவர்கள் உள்ளே நுழையுமுன் பந்தை தூக்கி வெளியே வீசி விட்டு ஏசித் துரத்துவார்கள்.

உள்ளே நுழைந்துவிட்டால் பந்து மட்டுமா தேடுவார்கள்? கொய்யா மரத்தில் காய் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். குடாப்புக்களில் கோழி கள் நிற்கின்றதை கவனிப்பார்கள். பாத்திரம் பண்டங்கள் வெளியே கிடக்கின்றதை நோட்டம் இடுவார்கள். ஆகவே கூடுமான வரைக்கும் இவர்களை உள்ளே விடாமல் இருக்கவே வீட்டுக்காரர்கள் விரும்பி செயல்படுவர்.

கேம் “எங்காவது கிரவுண்டுல போய் அடிங்களேன். பொழுது விடிஞ்சா உங்க எழவே பெரிய எழவாப் போயிறுது” என்று குமுறுவார்கள்.

இது என்ன அதிசயம்! இவர்கள் பந்தடிக்கும் இந்தச் சின்ன சந்துக்குள் மனித நடமாட்டம் மட்டுமே இருக்கிறது. கார், பஸ், லொறி, என்றோடும் மெயின்றோட்டுச் சந்திகளிலும் பந்தடிக்கின்றார்களே? யார் என்ன செய்தார்கள் எந்தக்காராவது எந்த லொறியாவது எந்த பஸ்ஸாவது இவர்களில் ஒருவனை ஏறி நசித்துக்கொண் டோடியது… அல்லது கொன்றது என்று எங்காவது கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

சடன் பிறேக்கடித்து வெட்டித் திருப்பி, ஒடித்து மடக்கிக் கொண்டு தான் அவர்களும் ஓடுகின்றார்கள். இவர்களும் ஆடுகின்றார்கள்.

இப்போது இது ஒரு தேசிய வியாதியாகிவிட்டது!

அதுவும் உலகக் கோப்பை இங்கே வந்து விட்ட பிறகு சந்துக்குள் பந்தடிப்பவர்களைக் கூட யாரும் ஒன்றும் சொல்லிவிட முடியாது.

பந்தாடி விடுவார்கள்… சொல்பவர்களை!

ஆபீசுக்குப் போகவென்று வெளியே வந்த அவன் கேட்டடியில் நின்று சந்தை எட்டிப் பார்த்தான்.

அளவாக வெட்டப்பட்ட மூன்று தும்புக்கட்டைக் கம்புகள், அவர்கள் வீட்டுக் கேட்டுக்கு முன்னால் ஊன்றி இருக்கின்றது.

“அங்கிட்டெல்லாம் ஊணிக்கிட்டா என்னவாம்? எங்க வீட்டுக்கு முன்னுக்குத் தானா ஊணணும்? ஊருக்கு எளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டிங்கிறது மாதிரி இந்த ஊருக்கு எளைச்சவங்க நாங்க தானே..! தமிழன்னா, தமிழ் வீடுன்னா ஒரு எளக்காரம்..!

எரிச்சல் அவனுக்குள் புகை புகையாய் மண்டிக் கிளம்பியது. சிக்ஸ் என்று கத்தினான் ஒருவன். வீசியவனை வக்கார் யூனிசா கவும் அடித்தவனை சனத்தாகவும் கற்பனை பண்ணிக் கொண்டிருந் திருப்பான் அவன்.

“நாங்களும் ஒரு வகையில் இந்தப் பந்தைப் போலத்தான்! விக்கட்டைக் காப்பாற்றிக் கொள்ளவென்று, ஆட வரும் ஒவ்வொருவருமே ஆள் மாற்றி ஆள் என்று எங்களைத்தான் அடிப்பார்கள்.

ஓடவிடவும் மாட்டார்கள்… எல்லையைத் தாண்டவும் விட மாட்டார்கள்… விரட்டி விரட்டி பிடித்து அமுக்கிக் கொள்வார்கள்…. பிறகு அடிப்பார்கள்…!

கேட்டிடம் நின்றவன் தனக்குள் குமுறினான்…. எக்கச்சக்கமாக மேலே எழுந்த பந்து எதிர் வீட்டுக் கூரையில் போய் விழுந்தது.

“கண்ட்றோல் கறலா காப்பாங்கோ! உம்பம் கணிங்” என்று அலுத்தபடி சுவரோரத்தில் அமர்ந்துக் கொண்டான் பந்து வீசியவன்.

அது சிங்கள வீட்டுக்கூரை. ஆகவே கொஞ்சமாகத் தயக்கம் காட்டுகின்றனர்.

வீட்டுக்குள்ளிருந்து ஆக்ரோஷமான சத்தமோ கறேபுறே’ என்று கத்திக் கொண்டு பெண்கள் கூட்டமோ இன்னும் வெளியே ஓடிவர வில்லை. ஆட்களும் யாரும் இல்லை போல் இருக்கிறதே என்று யோசித்து முடிப்பதற்குள் “நாசமாய்ப் போக மாட்டீங்களா” என்று கத்திக் கொண்டு ஓடி வருகிறது வீட்டுக்காரக் கிழவி.

கிழவிக்கு ஐம்பது வயது என்று யாரால் கூற முடியும்..! செக்கச் செவேல் என்று கையில்லாத கிமோனாவும் தானுமாக..!

வேலியோரம் வந்து நின்று கேலியாக அவர்களை முறைத்து விட்டு கையைத் தூக்கி ஆட்டிக் கத்துகையில் கெண்டைச் சதைகள் அழகாக ஆடிக் குலுங்குகின்றன.

“ஓடெல்லாம் நகர்கிறது… உடைகிறது… மழை பெய்தால் வீடெல் லாம் ஒழுகிறது…” என்று கிழவி கத்திக் கொண்டிருப்பதை இவர்கள் யாரும் சட்டை செய்ததாகத் தெரியவில்லை.

மற்ற மற்ற வீடுகளின் வேலிச் சந்து…. சுவர் இடுக்கு இத்தியா திகளில் எட்டி எட்டிப் பார்த்து, பந்து ஏதோ அங்குதான் விழுந்துவிட்டதைப் போன்ற பாவனையில் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

கிழவியைத் தொடர்ந்து அழகழனாக முகங்களுடனும் உடல்களு டனும் மகள்கள், மருமகள்கள் என்று வரிசையாக வந்து வேலியிடம் நின்று சத்தமிடுகின்றனர்.

அவர்களின் அணிவகுப்பைப் போலவே அவர்களுடைய கோபக் குரல்களும் அழகாக இருக்கின்றன.

சிங்கள மொழிக்கொரு செழுமை இருக்கிறதுதான். ஒருசில வார்த்தை வீச்சுக்கள் இந்த மொழியிலன்றி வேறு எந்த மொழியிலும் இப்படி ஒரு ஜீவனுடன் கிளம்புவதில்லை…வீறுடன் ஒலிப்பதில்லை ..!

கத்தி முடித்து அவர்கள் உள்ளே போய்விட்ட மறுவினாடி, சுவரில் ஏறித் தொத்தி மடமடவென்று வேலியோரப் பலாமரத்தில் ஏறி கிளை வழியே வழித்திறங்கி மெதுவாகக் கூரையில் காலூன்றி பந்து தேடுகின்றான் ஒருவன்.

பழம்தேடிக் கிளைதாவும் அணிலை ஞாபகப்படுத்துகிறது அவனது லாவகமான மரமேற்றம்.

ஆபீஸ் செல்லவென்று கிளம்பி கேட்டடியில் நின்று வெளியே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவன் ஏக்கத்துடன் உள்ளே வந்தான்.

அவனை வழியனுப்ப வந்த மனைவியும் மகளும் “என்ன உள்ளே திரும்பி வருகின்றீர்கள்” என்பது போல் ஏறிட்டுப் பார்த்தனர்.

“காலம்பெறவே தொடங்கிட்டாணுக….கவனமாக இருங்க…உள்ளே ஏதும் பந்து விழுச்சுண்ணா பேசாமத் தூங்கி வெளியே வீசிட்டு கப்சிப்புன்னு இருந்துறுங்க… அவனுக்கிட்ட வாய்கீய் குடுத்துடாதீங்க….. அதுகளே அந்த பாடுபடுதுக. நாம எந்த மூலை….பந்துல தொடங்கி வேறு எதுல போய் முடியும்ணு சொல்லேலாது….ஏன்னு கேக்க ஒரு நாதி இருக்காது…”

“நீங்க பயமில்லாமப் போங்க.. நாங்க பாத்துகிடறோம்…. எந்த நாளுந்தான் அடிக்குறானுக… நாங்க சமாளிக்கலே…”

மனைவியும் மகளும் கையாட்டி விடைதர அரை மனதுடன் அவனும் வெளியேறி நடக்கின்றான்.

வெளியே போகும் ஆண்கள் விக்கினமேதுமின்றி திரும்பி வரும் வரை வீட்டிலிருக்கும் பெண்களும், வீட்டிலிருக்கும் பெண்கள் வில் லங்கம் ஏதுமின்றி இருக்க வேண்டுமே என்று வெளியே போகும் ஆண்களும் ‘ஏங்கி…ஏங்கி’ மனம் ‘குமுறி… குமுறி’

இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த சீ’பட்ட வாழ்வு.

அரசும் புலிகளும் மறுபடியும் அடித்துக்கொள்ளத் தொடங்கிய பிறகு…

“வடக்கின் பெரும் பகுதியை நாங்கள் பிடித்துவிட்டோம் கொடி ஏற்றி விட்டோம் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் பலமாக விளம் பரப்படுத்தி பெரும்பான்மை மக்களை உளரீதியாக உற்சாகப் படுத்தத் தொடங்கி விட்டதன் பிறகு…

கொழும்பு, மலையகம் போன்ற மற்றப் பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களின் பாடுகூட பெரும் சங்கடத்துக்குள்ளாகித்தான் போய் விட்டது.

பஸ்ஸில், பாதையில், கடைத் தெருவில் என்று தமிழர்களை ஒரு ஏளனத்துடன் தான் பார்க்கின்றார்கள்… பேசுகின்றார்கள்… என்ன செய்வது. இத்தனைக்கும் மத்தியில் இவர்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

அந்தம்மாள் சொன்னது போல் ஒவ்வொரு நாளும் சமாளித்துக் கொண்டு.

வேறு என்னதான் செய்யமுடியும்? தமிழ்நாட்டுக்கா ஓடிவிட முடியும்?

இந்திய வம்சாவளித் தமிழர்கள் புகுந்த வீட்டுக் கொடுமைகள் தாங்காது பிறந்த வீடென்று எண்ணி அங்கே ஓடிப்போய் பட்ட அவஸ்த்தைகளையும், கூறும் கதைகளையும் கேட்டால்… அப்பப்பா…. அம்மா கொடுமைகளை விட மாமியார் கொடுமையே பரவாயில்லை போலிருக்கிறது.

பந்தடிக்கும் சத்தம் சந்துக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறது.

சமையலைக் கவனிக்க குசினிக்குள் நுழைகின்றார்கள் அம்மா “நீ போய் குளிச்சிறு… வெய்யிலும் உசாராய் இல்லை … ஒனக்கோ ஓவியக் கூந்தல் ஒரு மணிநேரமாவது வேணும்… உலர்த்த! நீ வெய்யில்ல நிற்கயில் நான் குளிச்சிறலாம்…” என்று மகளை பாத்ரூமுக்கு விரட்டுகின்றார்.

சமையலறைக்குள்தான் எத்தனை வேலைகள்!

பைலும் கையுமாக ஆபீஸ் போய் அமர்ந்திருக்கும் ஆண்கள் செய்வதைப்போல் ஒரு வேலையா இரு வேலையா. சமையலறை இருப்பது வீட்டின் மூலையில் தான் என்றாலும் முழு வீட்டின் ஜீவனுமே அதற்குள்தான்.

ஒன்றொன்றாய் ஒன்றொன்றாய் வேலையில் ஒன்றிவிட்ட அம்மாவை “அய்யய்யோ அம்மா!” என்று மகள் போட்டக் கூச்சல் பிடரியைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு போய் குளயலறையில் நிறுத்துகிறது.

அம்மா பதறித்தான் போய் விட்டார்கள்.

“மேலே கூரையைப் பார்க்கப்படி, பேயைக் கண்டவள் போல் நடுங்கிக் கொண்டு. பாதிக்குளித்த உடலுடன் மகள் நிற்கும் கோலம்…கூரையில் ஓடு நகர்ந்து மூடிக் கொள்கிறது ஓட்டுக்கு மேல் நாலைந்து கால்கள் நடமாடி மறைகின்றன.

“கவுத உட” என்று கத்தியபடி வெளியே ஓடியவள் பேயென எழுந்து நின்றாள்.

கூரைமேல் நாலைந்து பையன்கள் நிற்கின்றனர்.

கேட் மூடியபடியே இருக்கிறது. கேட்திறப்பட்டால், அல்லது ஆடினால், சிணுங்கினால்கூட குசுனியில் இருக்கும் அம்மாவுக்குத் தெரிந்துவிடும். ஆகவே இவன்கள் சுவரேறித்தான் குதித்திருக்க வேண்டும்.

அம்மாவால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

மகளின் அலறலும் அவள் நின்ற கோலமும், குளியலறைக் கூரையில் ஓடு நகர்ந்த விதமும், சூழலை மறக்கடித்து விட்டன.

“எறங்கு கீழே எல்லாரும்…” என்று கத்தினாள் சிங்களத்தில்.

அவளை சட்டை செய்யாமல் ஓட்டுமேல் நடந்த அவர்கள் பந்து தேட இவள் குரலுயர்த்திக் கத்த… அவர்கள் ஏதோ பதில் சொல்ல…

கேட்டைத் திறந்து கொண்டு வாட்டசாட்டமான ஒருவன் எட்டிப் பார்த்தான்…பிறகு உள்ளே நுழைந்தான்….கையில் பேட்டுடன்!

ஏளனமாக அவளை ஒருமுறை ஏறிட்டுப்பார்த்து விட்டு ”அகப்பட்டதா” என்று மேலே நிற்பவர்களிடம் கேட்கின்றான்.

“பந்து தேடிக்கிளிச்சது போதும் எறங்கு” என்று அவர்களுக்கும் “நீ வெளியே போ” என்று இவனுக்குமாக சுத்தமான சிங்களத்தில் கத்தினாள் அவள்.

இது தமிழர்களின் வீடு என்பது தெரியும் அவர்களுக்கு. அது தான் அத்தனை தைரியமாக உள்ளே நுழைகின்றனர்.

கைகளை பிசைந்தபடி ஒரு மூலையில் நின்று கொண்டு எட்டி எட்டிப் பார்த்து விழித்துக் கொண்டிருப்பார்கள் அம்மாவும் பெண்ணும் என்பது தான் அவனின் கணிப்பு.

ஆனால் இந்தம்மாள் இப்படி, இத்தனை சரளமாகச் சிங்களத்தில் கத்துவார்கள் என்பதை அவன் எதிர்ப்பாக்கவில்லை.

சற்றே திடுக்கிட்டாலும் தன்னுடைய திகைப்பைக் காட்டிக் கொள்ளாமல் “சும்மா கத்த வேண்டாம்…நாங்கள் வேறு எதற்கும் உள்ளே வரவில்லை பந்து தேடத்தான்…” என்றான்.

“நீ எதுக்கு வந்தாலும் எனக்குத் தேவயில்லை..! மொதல்ல வெளியே போ…என்னைக் கத்த வேண்டாம் என்று சொல்ல நீ யார்…” என்று மறுபடியும் சத்தம் போட்டபடி மேலே பார்த்தாள்.

கூரையில் ஒருவரையும் காணவில்லை. பந்தைத் தூக்கி மெதுவாக சந்துக்குள் எறிந்துவிட்டு சுவரோடு நடந்து கொண்டிருக்கின்றனர், வெளியே குதித்துக் கொள்ள.

“நான் ஏன் வெளியே போவணும்….? நாங்கள் எங்கே வேண்ணாலும் நிப்போம், உட்காருவோம்…பந்தடிப்போம்…இது எங்கள் நாடு…நீங்கள்ளாம் எங்களுக்கு அடங்கித்தான் இருக்கணும்…” என்றான் அவன்.

அடிமட்டத்தினர் வரையிலும் கூட இந்த பெரும்பான்மை அரசியல் நினைவுகள் எத்தனை ஆழமாகப் பதியப்படுகின்றன, பதிந்திருக்கின்றன.

“நாடு உன்னுதா இருக்கலாம். இந்த வீடு என்னுது. அதுனால மரியாதையா வெளியே போயிடு….என்று பொரிந்து தள்ளினாள் அவள். எல்லாரும் வெளியே போய் விட்டதையும் கவனித்துக் கொண்ட அவன் மெதுவாக கேட்டைத் தாண்டி வெளியேறினான். வெளியேறும் போதும் “பந்தடிச்சா உள்ளே விழும் தான்..எடுக்க வருவோம்தான்” என்றான்.

“இன்னொரு தரம் பந்து விழட்டும் உள்ளே அப்பப்பார்” என்றாள் அவள்.

“விழுந்தா…” என்றபடி வெளியேறினான் அவன் “விழட்டுமே…” என்றபடி கேட்டை மூடினாள் அவள்.

இந்தச் சத்தம் கேட்டு எல்லா வீட்டுப் பெண்களும் வெளியே வந்து நின்று எட்டிப்பார்த்தார்கள்.

“துணிந்து யாராவது இப்படிக் கொடுத்தால்தான் சரிப்பட்டு வருவார்கள்” என்று மகிழ்ந்து கொண்டார்கள்.

“இனி பந்து விழுந்தா உள்ளே நான் போக மாட்டேன்” என்றான் ஒருவன்.

“மட்டத் பே” என்றான் இன்னொருவன்.

“ஏண்டா பயந்து சாகின்றீர்கள்” என்றான் இன்னொருவன்.

”நீ தைரியசாலி மாதிரி பேசிட்டு வெளியே நின்னுறுவே இவர்களோ தமிழர்கள…யாருக்குத் தெரியும்..? ஏதாவது வச்சிருந்தா…” என்றான் இன்னொருவன்.

இதொன்றையும் கவனிக்காமல் உள்ளே ஓடி வந்த அம்மா ”ஊறா தேம்மா…சட்டுப்புட்டுன்னு குளிச்சிட்டு வந்துறு…” என்றவாறு கூரையைப் பார்த்தாள்.

ஓடு சரியாகவே இருந்தது.

வெளியே பந்தடிக்கும் சத்தம் வெகுநேரமாய் நின்றுபோய் இருப்பதை அம்மா கவனிக்கவில்லை. சமையலறைக்குள் நுழைகின்றார்கள்.

– மல்லிகை – 1997 – தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2014, பாக்யா பதிப்பகம், ஹட்டன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *