அவள்

 

கதை ஆசிரியர்: சா.கந்தசாமி.

‘வா, கல்யாணி. ‘

‘செளக்கியமா, அக்கா ? ‘

‘செளக்கியந்தான்… ‘

கல்யாணிக்குப் பேச ஆசை. ஆனால், என்ன பேசுவதென்று தெரியவில்லை.

‘என்ன, கல்யாணி– ‘

‘உங்களைத்தான் பாக்க வந்தேங்க்கா. ‘

அவள் சிரித்துக்கொண்டே, ‘என்னையா ? ‘ என்று கேட்டாள். அப்புறம், ‘சொல்லு, ‘ என்றாள்.

‘அவுங்க படுற பாட்டைப் பாத்தா, ரொம்பக் கஷ்டமா இருக்கு, அக்கா. அதுனால ஊரோட போகலான்னு பாக்கறேன். ‘

சாரதா தலையசைத்தாள்.

‘ஆஸ்பத்திரியில் என்ன சொல்றாங்க ? ‘

‘பயப்பட வேண்டாம், ஒன்னுமில்ல என்று சொல்லுறாங்க. ஆனா இவுங்களுக்கு வலி கொஞ்சம் கூட நிக்கல, அக்கா. ‘

சாரதா கண்களை இடுக்கிக் கொண்டு அவளைப் பார்த்தாள்.

‘எங்க ஊரிலே ஒரு வைத்தியர் இருக்கார். கை ராசிக்காரர். அவுங்க கைபட்டா எந்த நோயும் பறந்து போயிடும். அவுங்க பாத்தா இவுங்களுக்கும் சரியா போயிடுமுன்னு படுதுக்கா. ‘

‘அப்படியா ? ‘

‘எனக்குக்கூடச் சின்ன வயசிலே ஒரு வாட்டி வயத்து வலி வந்துச்சாம். அவுங்க கிட்ட போனாங்களாம். ரெண்டு வாட்டி மருந்து கொடுத்தாராம். சரியா ஆயிடுச்சாம். ‘

‘நாட்டு வைத்தியத்துக்கு அடங்காத சீக்கு உண்டா ? எங்க அம்மாவுக்கு ஒருக்கட்ட தலைவலி. எங்கெங்கேயோ பாத்தாங்க. ஒண்ணுத்திலியும் நிக்கல. கடைசியா ஒரு நாட்டு வைத்தியர் கிட்டப் போனாங்க. ஒரு மாசத்திலே ஒருக்கட்ட தலைவலி பறந்து போயிடுச்சு. ‘

‘அதுக்குத் தாங்க்கா உங்ககிட்ட வந்தேன். அவுங்க வேலைக்குப் போய் ரெண்டு மாசத்துக்கு மேலே ஆகுது. கையில் இருந்ததெல்லாம் ஆஸ்பத்திரிக்கும் மருந்துக்கும் பஸ்ஸ்உக்குமென்னு ஆயிடுச்சு. இப்ப கையில் ஒரு காசு கூட இல்ல– ‘

‘ஆகாதா என்ன ? ஒரு காசு வருமானம் இல்லாம நோயாளியை வீட்டிலே வச்சுக்கிட்டு–நோவு பாத்துகிட்டு–குடும்பத்தை ஓட்டறது சாதாரண காரியமா ? அடே அப்பா, ஒரு தடவ எங்க வீட்டிலே ரெண்டு வாரம் படுத்துட்டாங்க. நான் தவியா தவிச்சுப் போயிட்டேன். ‘

‘ஒன்னு ஒன்னா எல்லாம் போயிடுச்சு. தோடு, மூக்குத்தி ரெண்டு பட்டம், ஒரு செயினு–எல்லாத்தியும் வித்துட்டேன். அதெல்லாம் போயிடுச்சேன்னு வருத்தமில்ல. இவுங்க நல்லா ஆனா போதுங்க, அக்கா. ‘

‘அவுங்களுக்கு மிஞ்சி நமக்கு என்ன இருக்கு, சொல்லு. உன்னை மாதிரிதான் நானும். ஒரு தடவ எல்லாத்தையும் வித்து சீக்குப் பாத்தேன். ‘

‘இப்ப ஒரு அண்டாதான் இருக்கு. அப்பா வரிசை வச்சது. நீங்க பாத்திருப்பீங்களே, அதாங்க்கா, அந்தப் பெரிய அண்டா. அதை வச்சுகிட்டு நாப்பது ரூபா கொடுங்க, அக்கா. ‘

சாரதா தலையசைத்தாள்.

‘ஏங்கிட்ட ஏது பணம் ? ‘

கல்யாணி அவளைக் குத்திட்டுப் பார்த்தாள்.

‘யாருகிட்டவாது கொஞ்சம் கேட்டு வாங்கிக் கொடுங்க அக்கா. உங்கள விட்டா இங்க எனக்கு யாரு இருக்கா ? ‘

‘போன மாசம் கையிலே பணம் இருந்துச்சு. ‘

‘எங்க பாட்டி சீர் கொண்டாந்த அண்டா. இப்ப நூறு ரூபா தாராளமா போகும். பொழச்சு வந்தா மூட்டுக்கிறேன். இல்லாட்டா– ‘

‘சீச்சீ ‘ கண்டபடி பேசாதே. உனக்கு ஒரு குறையும் வராது. நல்லபடியா திரும்பி வருவே. ‘

கல்யாணி மெளனமாக இருந்தாள்.

‘டிரைவர் முனுசாமி வீட்டிலே பணம் தராங்க. ஆனா, வட்டி கொஞ்சம்கூட. பத்துப் பைசா. அதுவும் எடுத்துக் கிட்டுத்தான் கொடுப்பாங்க. ‘

‘அதுக்கென்ன, வழக்கப்படிதானே ? ‘

‘அதுக்கில்ல. ஏங்கிட்ட பணமிருந்தா, மகராசியா போய்வான்னு கொடுப்பேன். ‘

‘நான் கொடுத்து வச்சிருக்க வேணாங்களா, அக்கா. ‘

சாரதா விசித்திரமாகப் பார்த்தாள்.

‘எப்ப ஊருக்குப் போறே ? ‘

‘இப்ப பணம் கிடைச்சா, ராவு வண்டிக்குப் போகலாம். அதுல போனா பொலபொலன்னு பொழுது விடியறதுக்குள்ள வூட்டுக்குப் போயிடலாம். ‘

‘அதுவும் நல்லதுதான். நான் பாக்கறேன். நீ ரெடியா இரு. அநேகமா அந்த வண்டிக்கே போயிடலாம். ‘

‘அப��
�ப நான் போய் அண்டாவை எடுத்தாரேன். ‘

‘இங்க கொண்டாந்துடுறீயா, சரி சரி, அப்புறமா நான் எடுத்துக்கிட்டுப் போவணும். ‘

‘அப்ப, நானே அங்க எடுத்தாந்துடுறேன் அக்கா. உங்களுக்கு எதுக்குச் சிரமம் ? ‘

‘இதுல என்ன சிரமம். நீ கொண்டாந்து இங்க வச்சுடு. அப்புறமா நான் அவுங்க வூட்டுல கொண்டு போய் வச்சுடுறேன். ‘

‘உங்களுக்குக் கஷ்டந்தான்… ‘

சாரதா புன்னகை பூத்தாள்.

‘போயிட்டு சுருக்கா வா ‘

‘தோ–அக்கா. ‘

கல்யாணி அண்டாவுடன் வந்தாள்.

‘மெல்ல, மெல்ல. ‘

அவள் அண்டாவைக் கீழே இறக்கி வைத்தாள்.

‘ரொம்ப கணக்குதா, கல்யாணி ? ‘

அவள் முறுவல் செய்தாள்.

‘அந்தக் காலத்து அண்டா இல்லையா, அக்கா. ‘

‘அந்தக் காலத்துச் சாமானெல்லாம் அப்படித்தான். எங்க வூட்டுலே ஒரு சொம்பு இருந்துச்சு. எம்மாங்காலத்துச் சொம்பு, கல்லு குண்டு கணக்கா– ‘

‘போன காரியம் என்ன ஆச்சு ? ‘

‘நான் போனாக்கூட வெறும் கையோட வருவேனா ? ‘

‘அதுக்குத்தானே அக்கா உங்ககிட்ட வந்துச்சு. ‘

நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, இவளை உற்று நோக்கினாள் சாரதா,

‘இந்தா, ஒரு பத்து–இன்னொரு பத்து, மூனு அஞ்சி, ஒரு ஒன்னு…வட்டிக்கு நாலு ரூபா எடுத்துக்கிட்டா. சரியா இருக்கா எண்ணிப் பாத்துக்கோ, கல்யாணி. ‘

‘நீங்க தரச்ச சரியா இல்லாம இருக்குமா அக்கா. ‘

‘அப்படியா ? ‘ அவள் பெரிதாக–வீடு நிறையும் படியாகச் சிரித்தாள். அப்புறம் சொன்னாள் ‘என்னைக்கு வட்டியும் மொதலையும் கொண்டாந்து கொடுக்கிறீயோ, அன்னக்கி அண்டாவை மூட்டாந்து தரேன். ‘

‘பொளச்சி மறுபடியும் வந்தா பாக்கலாம் ‘

‘தத்துப் பித்துன்னு இப்படியெல்லாம் பேசாதே. உனக்கு ஒரு குறையும் வராது, மகராசியா திரும்பி வருவே. ‘

கதவுக்கு மேலே இருந்து ஒரு பல்லி கத்தியது.

‘பல்லி சொல்லுது. அது சொல்லிப் பலிக்காமப் போனதே இல்ல. ராஜாத்தியா திரும்பி வருவே. உன் புருஷன் நோவு, நொடியில பறந்துடும். வந்ததும் அண்டாவை மூட்டுடு. அவ கிட்ட விட்டுடாதே. ‘

‘மலையாட்டம் அதைத்தான் அக்கா நம்பி இருக்கேன். ‘

‘நீ சுமங்கலியா இருப்ப. ‘

சாரதா அவள் நெற்றியில் குங்குமம் இட்டாள்.

கல்யாணி எழுந்து நின்றாள்.

‘வரேன் அக்கா. ‘

‘உன் உடம்பையும் பத்தரமா பாத்துக்கோ. ‘

அவள் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அவள் பார்வையிலிருந்து மறைந்ததும், சாரதா அண்டாவை எடுத்துக் கொண்டு போய் உள்ளே வைத்தாள். புளியும் செங்கல் பொடியும் போட்டுக் கை சிவக்கக் சிவக்கக் கரகரவென்று தேய்த்தாள். கசியும் பழைய டிரம் இருந்த இடத்தில் அண்டாவைத் தூக்கி வைத்தாள்.

கிணற்றிலிருந்து குடம் குடமாய்த் தண்ணீர் மொண்டு வந்து அண்டாவை நிரப்பிக் கொண்டிருந்த போது, அவள் கணவன் ராமானுஜம் வந்தான்.

‘அப்படி என்ன பாக்கிறீங்க. ‘

‘அண்டா. ‘

‘நம்ப அண்டாதான். ‘

‘நம்ப அண்டாவா ‘

‘உங்க ஆபீசிலே பியூனா இருந்தானே குத்தாலம் அண்ணாமல–அதாங்க வயித்துக்காரன். அவன் பொண்டாட்டி வந்து ஊருக்குப் போகணும். இதெ வச்சிக்கிட்டு ஐம்பது ரூபா கொடுங்க அக்கான்னு கெஞ்சு கெஞ்சுன்னு கெஞ்சினா. ரொம்பப் பாவமா இருந்துச்சு. மனசு கேட்கலே. அப்படியே உருகிப் போச்சு. ‘

‘உனக்குப் பணமேது ? ‘

சாரதா அவன் பக்கம் திரும்பினாள். கண்களும் இதழும் துடித்தன.

‘பணத்துக்கு ஒரு வழி பண்ணினேன். பாத்தீங்களா எவ்வளவு பெரிய அண்டா. இப்ப வாங்கறதா இருந்தா இருநூறு ரூபாய்க்குக் கூடக் கிடைக்காது. என்ன கனம் கல்லுக் கணக்கா. நமக்கு நாப்பது ரூபாய்க்கே வந்துடுச்சி. ‘

‘ஏன், போனவ திரும்ப மாட்டாளா ?

தலையசைத்துக் கொண்டு புன்னகை பூத்தாள்.

‘நீங்க ஒண்ணு. இப்பப் போவுதோ செத்த பொறுத்துப் போவுதோன்னு இருக்கறவனை அழைச்சுக்கிட்டு ப�
��றவ திரும்பி வரப் போறாளாம்– ‘

ராமானுஜம் அவளைக் குத்திட்டுப் பார்த்தான். ‘தோட்டை வச்சுட்டியா ? ‘

அவன் மார்பில் சாய்ந்து கொண்டு, ‘வண்டியில போனாலும் போயிருக்கும், ‘ என்றாள்.

‘உனக்கு ரொம்ப ஆசைதான். ‘

‘நீங்க ஒண்ணும் பழிக்க வேணாம்– ‘ அவள் சிணுங்கினாள்.

அடுத்த மாதமும் அதற்கு அடுத்த மாதமும் அவர்களால் தோட்டை மீட்க முடியவில்லை. சைக்கிளுக்கு ரிம் வாங்கிப் பொருத்தினான். பணம் அதில் போய் விட்டது.

‘போனஸ் வந்ததும் தோட்ட மீட்டுடலாம். ‘

‘தோடு இல்லாம எங்கவும் போக முடியல. ‘

‘நானா வைக்கச் சொன்னேன் ? ‘

‘இருநூறு ரூபா அண்டா வந்திருக்கே ? ‘

அவன் பெரிதாகச் சிரித்தான்.

‘பாரு, யாரோ கூப்பிடுறாப் போல இருக்கு. ‘

சாரதா வெளியே வந்தாள். கல்யாணி நின்றுகொண்டிருந்தாள்.

‘வா, வா கல்யாணி. உன் புருஷனுக்குத் தேவலாமா ? ‘

‘உங்க புண்ணியத்திலே அங்க போன பத்து நாளிலே சரியாயிடுச்சிங்க அக்கா. ‘

‘உனக்கு நல்ல மனசு; தெய்வம் துணை இருக்கு. ‘

‘நீங்கதான் எனக்குத் தெய்வம். நீங்க பணம் வாங்கித் தராட்டா எங்க மண்ண மிதிச்சிருக்க முடியுமா அக்கா ? ‘

‘அதென்ன, எல்லாரும் செய்யற காரியந்தானே ? ‘

‘அப்படிச் சொன்னா அது சரி ஆகிடுமா. ‘

‘அது கிடக்கட்டும். என்னமோ பொளச்சு வந்துட்ட, அதுவே போதும் ‘

‘எனக்கும் அதுதானக்கா. ‘

‘எப்ப அண்டாவை மூட்டுக்கப் பொற ? ‘

‘எங்கப்பா பணம் கொடுத்து விட்டிருக்காங்க, அக்கா. ‘

கல்யாணி பணத்தை எண்ணி வைத்தாள்.

‘டிரைவர் வூட்டுலதான் அண்டா இருக்கு. நான் எடுத்தாந்து வைக்கிறேன். நீ அப்புறமா வாயேன். ‘

‘நீங்க மெல்ல எடுத்தாந்து கொடுங்க, அக்கா. இப்ப ஒண்ணும் அவசரமில்லை. ‘

‘சேச்சே, அதெல்லாம் சரியா. அவுங்க வூட்டுல நம்ப பொருளு எதுக்கு இருக்கணும் ? நீ சாயந்திரமா வந்துடு. ‘

‘அதுக்கில்ல அக்கா, சமயத்துல உதவி பண்ணினாங்க. அதான் பெரிசு. ஒரு நாளு ரெண்டு நாளு கூடக் கொறச்ச போனா என்ன ? ‘

‘நமக்கொன்னும் சும்மா உதவி பண்ணுல. வட்டிக்குத்தான் பணம் கொடுத்தாங்க. சாயந்திரம் நீ வந்துடு. கல்யாணி. நான் உன் அண்டாவை எடுத்தாந்து வச்சுடுறேன். ‘

‘ஆகட்டுங்க, அக்கா. ‘

உள்ளே போனதும் சாரதா ராமானுஜம் மார்பில் சாய்ந்து கொண்டு விக்கி விக்கி அழுதாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
ஆறுமுகசாமி புங்கமரத்துக் கிளையைத் தாவிப் பிடித்து வளைத்து ஒரு சின்ன கிளையை முறித்தான். ஆனால் கிளை முறியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு கிளையை திருகி முறுக்கினான். முறுக்க முறுக்க கிளை மெதுவாக முறிந்து கையோடு வந்தது இடது கையால் தழைகளை உருவி ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: சா.கந்தசாமி. அது சித்திரை மாதம். என்றும் இல்லாதது போல வெய்யில் காய்ந்து கொண்டிருந்தது. பெரியசாமி வாயால் மூச்சு விட்டுக் கொண்டு ஆற்றில் வேகமாக அக்கரையை நோக்கி ஓடினார். ஆனால் முடியவில்லை. மணல் நெருப்பாகத் தகதகத்தது. வரும்போது செருப்பை மாட்டிக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: சா.கந்தசாமி. வீடுகள் குன்றின் மேலும் குன்றிலும் அதன் சரிவிலும் இருந்தன. மேலே மேலே என்று உயர்ந்துகொண்டே போகும் சாலைகளில் ஏறித்தான் வீடுகளை அடைய வேண்டும். அவனுக்கு அப்படி ஏறுவது பழக்கமின்மையால் சிரமமாக இருந்தது. வாயால் மூச்சு விட்டுக் கொண்டான். அவன் பிறந்து ...
மேலும் கதையை படிக்க...
மாணிக்கம் பெரிய விசிறி வலையைப் பரக்க விரித்துப் போட்டபடி ராமுவைக் கூப்பிட்டார். ஒருமுறைக்கு இன்னொரு முறை அவருடைய குரல் உயர்ந்து கொண்டே இருந்தது. நான்காம் தடவையாக, “எலே ராமு” என்று அவர் குரல் பலமாகக் கேட்டபோது, “இப்பத்தான்வெளியே போனான்” என்று அவர் மனைவி ...
மேலும் கதையை படிக்க...
சின்ன கருப்பு ராஜவாய்க்கால் மதகின் மேலே உட்கார்ந்து கால்களை ஆட்டிக்கொண்டிருந்தார். கால்களுக்குக் கீழே பழைய செருப்பு. காது அறுந்த பழைய செருப்பைச் சற்றே முன்னே சாய்ந்து வலக்காலால் நகர்த்திப் போட்டுவிட்டு - பெல்ட்டில் இருந்து பொடி டப்பாவை எடுத்து இரண்டு மூக்கிலும் ...
மேலும் கதையை படிக்க...
மென்மையான மேகங்கள் மேற்கிலிருந்து கிழக்காகக் குவிந்து கொண்டிருந்தன. பக்கிரி தலையைக் கொஞ்சம்போல் திருப்பிப் பார்த்தார். ஆற்றோரத்துத் தென்னை மரங்கள் ஆடுவது நன்றாகத் தெரிந்தது. மறுபடியும் ஒருமுறை பெரும் காற்று வீசப் போகிறது என்று தனக்குத் தானே தீர்மானம் பண்ணிக் கொண்டார். விட்டு ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: சா.கந்தசாமி. ரங்கராஜன் பேனாவை மூடிக் கொண்டு எழுந்தான். அவன் பார்வை ஆபீஸ் முழுவதும் சென்றது. ஆர்.கே.ராவ் தலை குனிந்தபடியே எழுதிக் கொண்டிருந்தான். எப்போதும் அவன் அப்படித்தான். பொடி போட மட்டும் தான் தலை நிமிருவான். அப்புறம் சுகுமாரி. அவள் கண்களை ...
மேலும் கதையை படிக்க...
ஒரு கையில் இடுப்பிலிருந்து நழுவும் கால் சட்டையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் சிலேட்டை விலாவோடு அணைத்தவாறு வகுப்பிற்குள் நுழைந்தான் ராஜா. நான்காம் வகுப்பு இன்னும் நிறையவில்லை. இரண்டொரு மாணவர்கள் அவசர அவசரமாக வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்தார்கள். இந்த அவசரம் ராஜாவுக்கில்லை. ...
மேலும் கதையை படிக்க...
(1972 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆற்றில் தண்ணீர் வற்றி மணல் நிறைந்திருந்தது. இருபக்கங்களிலும் சற்றே உயர்ந்த மணல் பரப்பு நடுவில் குறுகி பொடி மணல் நிறைந்திருந்தது. வண்டிகள் குறுக் காகச் சென்றதன் தடம் மணல் ...
மேலும் கதையை படிக்க...
ஆறுமுகசாமியின் ஆடுகள்
காவல்
மலையூர்
தக்கையின் மீது நான்கு கண்கள்
இரணிய வதம்
வாள்
தேவை
ஒரு வருடம் சென்றது
நிழல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)