கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 8, 2024
பார்வையிட்டோர்: 259 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் அந்தக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தபோது, எல்லாமே நீல நிறமாக இருந்தது. ஓ! இன்னிக்கு ப்ளூ டேயா? மனதில் எண்ணம் ஓடியது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் நூறு வருடங்களைக் கடந்ததில், பூமி வெகுவாக மாற்றங்களைப் பெற்றிருந்தது. அதில் ஒன்று தான் நிறம்மாறும் நாட்கள். பூமியின் அதிபர், பல விஞ்ஞானிகளை, சாஸ்த்திர வல்லுநர்களைக் கொண்டு வரையறுத்த நிறக் கோட்பாடுதான், இன்று பூமி முழுவதும் நிலவுகிறது. கணினியின் உதவிகொண்டு, பல நிறச்சேர்க்கைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அடிப்படை ஏழு வர்ணங்கள் அபூர்வமாக எப்போதாவதுதான் கண்ணில் படும். அதில் ஒன்றுதான் இன்று கண்ணில் பட்டிருக்கிறது. அவன் வெளியே வந்தவுடன் அந்தப் பெரும்கதவு சாற்றிக்கொண்டது. அவனுக்கு இன்று விடுமுறை. அதனால் அவன் ஏதோ அலுவலகம் போகிறவன் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். அலுவலகங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டுவிட்டன. இப்போதெல்லாம் இருக்கும் இடம் அலுவலகம் எல்லாம் ஒன்றே. விடுமுறை என்றால் அவனுக்கு இன்று வேலை எதுவம் கொடுக்கமாட்டார்கள் என்று பொருள். அவன் நீலநிற உடை அணிந்திருந்தான். நாட்களின் நிறத்திற்கேற்ப உடைகளின் நிறங்களும் தாமாகவே மாறிக்கொள்ளும்.

ஓஸோன் தடுப்புச் சுவர் பலமிழந்த காலம் இது. அதீத சூரிய வெப்பத்தைத் தாங்க முடியாத பூமி, முழுவதுமாக ஒரு மழைக்கோட்டை அணிந்து கொண்டிருந்தது. சூரிய ஒளியிலிருந்தே சக்தியைச் சேமித்து தட்ப வெப்ப சூழலை உருவாக்கியிருந்தார்கள்.

நீல நிறத்தைப் பார்த்ததும் அவனுக்கு நீச்சலடிக்க வேண்டும் போலிருந்தது. பத்தடி தூரத்தில் ஒரு குளம் திடீரென்று தோன்றியது. இப்போது பூமியில் எல்லாமே வெர்ச்சுவல் பிம்பங்கள் தான்! எண்ணங்களுக்கு ஏற்ப தட்ப வெட்ப சூழல்கள் மாறிக்கொள்ளூம். வனம் வேண்டுமா? உடனே வரும். வேட்டையாட மிருகங்கள் வேண்டுமா? கிடைக்கும். கணிப்பொறி விளையாட்டுகளில் அலுப்பு ஏற்பட்டு மனிதன் அடுத்த கட்டத்துக்குப் போய்விட்டான். அவனுக்கு எல்லாமே நிச உருவத்தில் வேண்டியதாக இருந்தது. பாதி பேர் நிலவில் வசிக்கப் போய் விட்டார்கள். அவர்கள் பூமிக்கு வரும் சொற்ப நேரங்களில் என்ன கனம்? உடலை தூக்கிக் கொண்டு நடக்கவே முடியவில்லையே என்று அங்கலாய்த்தார்கள். நிலவின் எடை குறைவு. ஆனால் அங்கிருக்கும் மனிதர்களுக்கு தலை கனம் அதிகம்.

நீலக்குளம். நிலத்தண்ணீர். துள்ளிய மீன்களும் நீலம். உடைகளை அவிழ்க்க அவன் யோசித்தான். தன் உடலும் நீல நிறமாக மாறியிருக்குமோ என்று ஒரு அச்சம் அவன் மனதில் தோன்றியது. சே!சே! அப்படியெல்லாம் ஆகாது என்று மனதிற்குள் ஒரு சமாதானம் செய்து கொண்டான்.

உடையை அவிழ்த்து குளக்கரை ஓரம் வைத்தான். உடலோடு ஒட்டியிருந்த ஐ டி கார்டை பிய்த்து அருகில் வைத்தான். ஐ டி கார்ட் மிக முக்கியமான ஒன்று இன்றைய பூமியில். அதுவே அவன் அடையாளம். ஜாதகம். இன்ன பிற. நீரில் பாயப்போனவனை ஒரு குரல் தடுத்தது.

அப்பா! கேன் ஐ ஸ்விம்?

மூன்று வயது மழலையின் குரல். அவனது பக்கத்து வீட்டுக்காரன். அவனுடைய ஒரே மகன். இப்போது பூமியில் எல்லோருக்கும் ஒரே மகன் அல்லது மகள்தான். வந்தவன் இவனுடைய ஐ டி கார்டைக் குனிந்து பார்த்துவிட்டு சிரித்தான். கை குலுக்கினான். தன் உடைகளையும் மகனது உடைகளையும் கழற்றி வைத்தான். கூடவே இரு ஐடி கார்டுகளையும் பிய்த்து பக்கத்தில் வைத்தான்.

ஐ டி கார்டுகள் ஒன்று போலவே இருந்தன. இம்மாதிரி சந்தர்ப்பங்களில் அரசாங்க விதி முறைகள் தெளிவாக இருக்கின்றன. அவன் தனது ஐ டி கார்டை எடுத்து நீலக் கோட்டின் உள்பகுதியில் வைத்தான். அவர்கள் வரும்வரை காத்திருந்தான்.

அவர்கள் ஆனந்தமாகக் குளித்துக்கொண்டிருந்தார்கள். வெகுநேரம் அவர்கள் குளத்தில் இருந்தார்கள். ஒரு வழியாக அவர்கள் குளித்து வெளியே வந்தார்கள். இவன் குளத்தில் இறங்கினான். சரியாக பத்து நிமிடங்கள் குளித்துவிட்டு கரையேறினான். நீலக்கோட்டை எடுத்து அணிந்து கொண்டான். உள்பகுதியில் துழாவினான். ஐ டி கார்டு காணவில்லை. பதற்றம் அவனைத் தொற்றிக்கொண்டது. எங்கே போயிற்று?

சற்று தள்ளி ஐ டி கார்டு விழுந்திருந்தது. கோட்டை எடுக்கும்போது விழுந்திருக்கவேண்டும். அவசரமாக அதை எடுத்துக்கொண்டு அவன் குடியிருப்பை நோக்கி நடந்தான். பக்கத்து குடியிருப்புக்காரனையும் அவன் மகனையும் காணவில்லை. வேறு எங்காவது போயிருப்பார்கள்.

ஆயிரம் குடியிருப்புகள் கொண்ட அந்தக் காம்பவுண்டில் எல்லாமே ஐ டி கார்டுமூலமாகத்தான் நடைபெறும்.

அந்த கார்டுகள் வித்தியாசமானவை! சட்டென்று பார்த்தால் அட்டை முழுவதும் புள்ளிகளாகத்தான் இருக்கும். நடுவில் சில கோடுகளும். எலெக்ட்ரானிக் சிப் பதிக்கப்பட்ட அட்டை. அவனது விவரங்கள் அதனுள்ளே இருக்கும். அதை அவன் கூட பார்க்க முடியாது. ஏதாவது வில்லங்கத் தகவல் இருக்கிறதா என்று அவனுக்குத் தெரியாது. காவல் துறை ஊழியர்கள் என்றாவது வந்து அவன் கதவைத் தட்டும்போதுதான் அவனுக்கே அந்த விவரம் புரியும். நேற்றுதான் பக்கத்து வீட்டுக்காரனை இழுத்துப் போனார்கள். காரணம் பிறகு வீட்டு சுவற்றில் ஒளிபரப்பாகியது. இங்கே எல்லாமே தெள்ளத் தெளிவு. மறைவு என்பதே கிடையாது. ரகசியமே இல்லை. பரசியம் தான்.

ப.வி. ஒரு ஹுயூமனாய்ட் பெண்ணை காதலித்திருக்கிறான். அப்படியெல்லாம் சட்டென்று பூமியின் மனிதன் காதலித்து விட முடியாது. யாரை காதலிக்க வேண்டும் என்று அரசு சொல்லும். நகர்ந்து வரும் வரிசையில் யாருக்கு நேராக யார் வருகிறார்களோ அவர்களே இணை. ஆணுக்கும் பெண்ணுக்குமான தனி வரிசை. சூப்பர் கணிப்பொறியில் அது நகர்ந்து கொண்டே இருக்கும். திருமண ஒப்புதல் கொடுக்கும் ஆணும் பெண்ணும் வரிசையில் பெயர்களாக நிற்பார்கள்.

ப.வி. இவனாகவே வேலையில் சந்தித்த ஒரு பெண்ணை பார்த்து மையலாகி காதலைச் சொல்லியிருக்கீறான். அதற்கு இவன் நோக்கம் புரியவில்லை. காதல் அதற்கு கற்றுத் தரப்படவில்லை. அதனால் அது அரசுக்குப் போட்டு கொடுத்து விட்டது.

குழந்தைகள் கூட அரசின் தீர்மானம் தான். சட்டென்று பெற்றுக் கொள்ள முடியாது. பிறந்தாலும் அது அவர்களிடையே வளராது. அதற்கும் வரிசை உண்டு. எந்த அப்பா, அம்மா என்று அரசே தீர்மானிக்கும். முதலில் அந்த குழந்தையின் மரபணு, ஆற்றல், சக்தி, சிந்திக்கும் திறன் எல்லாம் ஒரு 30 வருடங்களுக்கு முன்கூட்டியே தீர்மானிக்கப்படும். பிறகு அதற்கு தோதான அம்மா, அப்பாக்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொரு உயிரையும் செதுக்குவதில் அரசுக்கு பெரும் பங்கு உண்டு.

குளத்தில் குளிக்க வந்த சிறுவன் கூட அந்த ஆளின் மகனில்லை. அவனுக்கு அதில் பெரிய சுவாரஸ்யம் இல்லை. தேவை ஒரு மகன். கிடைத்ததை பேணி வளர்க்கிறான்.

உள்நுழைவதற்கும், லிப்டிற்கும், வீட்டின் கதவைத் திறப்பதற்கும், கணினியைத் திறப்பதற்கும் ஒரே ஐ டி கார்டுதான்.

கேட்டின் இடுக்கில் ஐ டி கார்டுக்கான இடம் இருந்தது. அவன் ஐ டி கார்டை அதில் நுழைத்தபோது அடி வயிற்றில் ஒரு பந்து உருண்டது. கேட்டிலிருக்கும் ஸ்கேனர் அவனை அலசிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தான். கேட்டின் முகப்பில் ஒரு திரை தோன்றியது. அதில் அவன் முகமல்லாத முகம். அந்தப் பக்கத்துக் குடியிருப்புக்காரனின் முகம். நீ போலி என்ற வாசகம் பளிச்சிட்டது. அவன் சுதாரித்துக்கொள்ளும்முன், அவன் காலடியில் ஒரு சுரங்கக்கதவு திறக்கப்பட்டு அவன் அதில் விழுந்தான். நினைவு தப்புவதற்குள் அந்த பக்கத்து குடியிருப்புக்காரனும் சுரங்கத்தில் விழுவதுபோல் ஒரு காட்சி தெரிந்தது.

– மே 2015

– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *