கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 1, 2023
பார்வையிட்டோர்: 1,416 
 

அவனைப் பற்றிச் சொல்ல ஏதுமில்லை எனப் பொதுப்படையாகச் சொல்லிவிடலாம். ஆனால் அவனைப் பற்றிச் சொல்ல அதிகமும் இருக்கவே செய்கிறது என எப்போதும் தோன்றும். அவனுக்கொன்று சில கொள்கைகள், செய்கைகள், பழக்கவழக்கங்கள் என்று தனித்து உண்டு. ஆனால் அவைகளை அவன் அதிகம் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. என்னை அவனிடமிருந்து பிரிப்பது இந்த ஒரு விஷய‌ம்தான் என அவ்வப்போது நினைத்து கொள்வேன்.

அவனை என்னிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியாதபடியான‌ அன்யோன்யம் என்றாலும் சில விஷய‌ங்களுக்காக அவன் என்னைவிட்டு விலகிச் செல்வதைத் தவிர்க்க முடிவதில்லை. எனக்குப் புரியாத பல விஷய‌ங்கள் அவனுக்குப் புரிவது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் எனக்குப் புரிந்த சில விஷய‌ங்கள் அவனுக்குப் புரியாததும், அப்படி அவன் நடிப்பதும் எப்போதும் நடந்து கொண்டேயிருக்கிறது. பார்ப்பவர்கள் அவனை என் நண்பன் என்றுதான் சொல்வார்கள், நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் ஒரு எல்லை வரை சென்றதும் அப்படி இல்லையெனத் தோன்றிவிடும்.

அவனை விட்டு எந்த ஊர் சென்றாலும், என்னை அந்த ஊரில் பொருத்திக் கொள்ள ஆகும் ஒரிரு நாட்கள் அல்லது அதற்கு மேல் இருநாட்கள்தான், உடனே அங்கு பிரசன்னமாகியிருப்பான். சிலசமயம் அவனின் இருப்பினால் எரிச்சல் பட்டு கத்தியும் இருக்கிறேன். அவைகளை அவன் ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. அவனை நோக்குகையில் நான் மிகுந்த லெளகீக விவேகங்களைக் கொண்டு வாழ்கிறேன் என்று தோன்றும் பிடித்தமானதை அப்போதே செய்யும் குணம் கொண்டவன். இந்த விஷயத்தை அப்புறம் செய்துகொளளலாம் என்ற நினைப்பே அவனுக்கு இல்லை. உதாரணமாக‌, இந்த ஊர் வந்த புதிதில் பக்கத்தில் இருந்த குன்றுகளில் ஏறி நகரத்தைக் காணவேண்டும் என்ற ஆவல் இருந்தது. இதுவரை ஒருமுறைகூட ஏற நேரமோ, மனதோ அமையவில்லை எனக்கு. ஆனால் அவனோ பலமுறை ஏறிவிட்டான். அதன் உச்சிவரை சென்று அதன் அடர்நீல வானத்தையும், கைக்கெட்டும் பஞ்சு மேகங்களையும், முடிகோதி அலையடிக்கும் காற்றையும் கண்டு வந்துவிட்டான். அதைப் ப‌ற்றி சிலாகித்தும் பல‌முறை கூறியிருக்கிறான். அவனைக் கண்டு பொறாமை கொள்வதைத் தவிர வேறு ஏதும் செய்ய முடிவதில்லை.

அவனுடைய ஆசைகள், மோகங்கள், லட்சியங்கள் எனப் பல சற்று வித்தியாசமானவைகளாகத் தோன்றும். லெளகீக வாழ்வில் இருக்கும் ஒருவனுக்கு சற்றும் இடம் தராத பல விஷய‌ங்கள் அதில் உண்டு என்பதைக் கவனித்திருக்கிறேன். அவன் திருமணமே செய்து கொள்ள‌ முடியாது என்றும் நினைத்துக்கொள்வேன். அப்படிச் சொல்வதை அவன் விரும்புவதில்லை. அவனுக்கு ஒரு காதலி உண்டு. நம் சமூக அமைப்பில் தேடிக் கண்டுணர்ந்த பேரழகி என்று அவளைக் கூறுவான். சற்று தடித்த குள்ள உருவம்தான். ஆனால் அவன் உயரத்திற்கு ஏற்றவள். சற்று பெரிய மார்பகங்களை உடையவள். இடது முலையில் கருவளையத்திற்கு அருகில் ஒரு மச்சம் உண்டு என்றும் இடது தொடைக்கு மேல் இடுப்பிற்கு கீழ் ஒரு கழுகு டாட்டூ உண்டு என்றும், அவைகள் எப்போது அவனை கிளர்ச்சியடையச் செய்கின்றன‌ என்றும் அவன் கூறியிருக்கிறான்.

அடிக்கடி காதலிகளை மாற்றுவதும், பின் புதிய காதலிகளைத் தேடி அலைவதும், பழைய லட்சியங்களை மாற்றிப் புதிய லட்சியங்களை கைக்கொள்வதும், தன்னைப் புதுமைவிரும்பியாக, புரட்சிக்காரனாக‌க் காட்டிக்கொள்வதுமாக அலைவான். கூடவே இலக்கியம், சமூகம், வரலாறு, அறிவியல் என்று பல விஷயங்கள் மற்றவர்களுக்குப் புரிவதைப் பற்றி கவலைப்படாமல் அது குறித்து நீளமாக‌ பேசிக்கொண்டிருப்பான். கொஞ்சநாள் முன்புதான் காதலியை மாற்றியிருந்தான். இருவரும் ஒரே மாதிரியாகத் தோன்றுவதாகவும், முன்னையவளைவிட பின்னையவள் சற்றேதான் மாறியவளாகத் தெரிகிறாள் என்றும் கூறியதை அவன் ரசிக்கவில்லை. அவன் லட்சியங்களை நான் கண்டுகொள்வதில்லை, ஏனெனில் எங்கள் இருவருக்குள் மேலும் மனஸ்தாபங்கள் ஏற்படாமல் இருக்கத்தான்.

என் மனைவிக்கு அவனைப் பிடிப்பதில்லை (பொதுவாக எந்த அம்மாக்களும் அப்பாக்களும் அவனைக் கண்டுகொள்வதில்லை.) அவனுக்கு என் மனைவியைப் பிடிப்பதில்லை எனவும் நினைக்கிறேன். அவன் வந்தாலே அவள் கோபமாக ஏதோ முணுமுணுத்தபடி உள்ளே சென்றுவிடுவாள். லெளகீக வாழ்வுக்குப் பயன்படாதவன் என்று அவள்தான் என்னிடம் முதலில் கூறியவள். பல காரணங்களுக்காக அவள் அவனை வெறுத்தாலும் சில சமயங்களில் அவன்மேல் கரிசனம் கொண்டு நல்வார்த்தைகளை அவனிடம் கூறியிருக்கிறாள். இப்படி நடந்து கொள்ளவேண்டும், இப்படி வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று அவள் ஒரு குழந்தைக்குக் கூறுவது மாதிரி கூறுகையில், அவன் மிகத் தெளிவாக அவளிடம் தலையாட்டிவிட்டு, என்னைப் போல் ஆவதை அவன் விரும்பவில்லை என்று தனியாக என்னிடம் வந்து கூறுவான்.

சிறுவயது முதல் என்னிடம் நட்பாக இருந்தாலும் எப்போது உணர்ச்சி வசப்படுவான் அல்லது எப்போது கோபப்படுவான் என்பதைப் புரிந்து கொள்ளமுடிவதில்லை. அவனைப் பலசமயங்களில் கொஞ்சம் அதிகமாகவே அடக்கி வைக்கவேண்டியிருக்கும். அலுவலக, உறவுகள் வட்டத்தில் நான் யாரிடமாவது கோபம் கொள்வதையோ, அல்லது சாதாரணக் காரியங்களுக்காக நட்பு கொள்வதையோ, அல்லது வேறு ஏதோ ஒன்றைச் செய்வதையோ அவன் விரும்புவதில்லை. நான் எடுக்கும் முடிவுகளுக்கு எதிரான ஒன்றைத்தான் கூறுவான். எந்த செயலை நான் செய்தாலும் அவனின் குறுக்கீடு இல்லாமல் இருக்காது. மாறாக நான் அவனின் எந்த விஷய‌ங்களிலும் தலையிட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பான். இதன் காரணமாகவே பல சமயங்களில் எங்களுக்குள் சண்டைகள் வரும். ஒவ்வொரு சமயமும் சொல்லி வைத்ததுபோல் சண்டையின் முடிவில் அவனே வெற்றி பெற்றிருப்பான். யோசித்துப் பார்க்கையில் நானே அவன் வெற்றிக்குப் பாடுபடுகிறேன் என்றுகூட‌ எண்ணத் தோன்றும்.

அவன் அழகை, அவன் நுண்ணுணர்வை, அவன் ஆளுமையின் திறனை நான் சந்தேகப்பட்டாலும் அவனுக்கு அவனின் மீதான அழகு, நுண்ணுணர்வு, ஆளுமையின் திறன் மீதான எந்த சந்தேகமும் வருவதில்லை. மிகத் தீர்க்கமாகச் செயல்படுவதாகப் பலசமயங்களில் தோன்றும். அவன் அத்தகைய தீர்க்கமானவன் இல்லை என்பதை அவன் மறைத்தாலும் நான் கண்டுபிடித்திருக்கிறேன். இவற்றிலிருந்து எனக்குப் புரிந்தது என்னவென்றால், அது அவன் கனவுகளின், ஆசைகளின் பட்டியல் அவனே மறக்குமளவிற்கு மிக நீள‌மானது என்பதுதான். எப்போதும் அது குறித்தே சிந்தித்து வருபவனாக இருப்பான். அவனுக்கு வேறுவேலைகள் இருப்பதாக எனக்குத் தோன்றியதே இல்லை. அவன் மீதான இந்த வசீகரமே தொடர்ந்து நட்பாக வைத்திருக்கிறேன் எனத் தோன்றும். அவனைக் கழட்டிவிட எண்ணும் போதெல்லாம், இந்த வசீகரம் என் எண்ணத்தை மாற்றி விடுவதாகவும் தோன்றும்.

யாருமே இல்லாத நீண்ட சாலையைப் போன்றது அவனின் இன்மை, அதே யாருமற்ற சாலையில் திடீரெனத் தோன்றும் ஒரு கனரக வாகனத்தின் உருவம் தரும் அச்சம் போல அவனின் இருப்பு துணுக்குறச் செய்வது. அதை காட்டிக் கொள்ளாததைப்போல‌ நான் நடந்துகொண்டாலும் அவன் அதைப் புரிந்தே,எதிர்பார்த்தது போலவே செயல்படுகிறான்.

அவனைப் பற்றி ஏதும் சொல்கிறேன் என்றால் அவனுக்கு அது பிடிப்பதில்லை. அவனுக்குத் தெரியாமல்தான் செய்யமுடியும் சொல்லப்போனால் அவன் இதைச் சொல்லியிருந்தால் இன்னும் வீச்சுடன், உருவாக்கத்துடன் எழுதியிருப்பான் என எண்ணத் தோன்றுகிறது. சில நேரங்களில் அவன் சொல்லி நான் எழுதுகிறேன் என்றும் தோன்றும். ஆனால் என்னை எப்போதும் அவன் பின்பற்றுவதில்லை, பெரியதாகப் பொருட்படுத்துவதில்லை என்பதை கவனித்திருக்கிறேன்.. எதுவானாலும் நான் அவனாக‌ முடியாது என்பது அத்தனை நிச்சயம், ஆனால் நிச்சயம் அவன் நானே.

– சொல்வனம், இதழ் 88, ஜூன் 23, 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *