காணாது போகுமோ காதல்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 4, 2022
பார்வையிட்டோர்: 4,350 
 

பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9

அன்று காலையில் பங்களாவில் ஒரே ஆரவாரமாக இருந்தது. ஆபீஸிற்கு கிளம்பி ஃபைனலாக கண்ணாடியில் தன் கம்பீர அழகை ஒருமுறை சரிபார்த்து விட்டு தன் அறையை விட்டு வெளியே வந்த போது ஹாலில் சில உறவினர்கள். ஒன்றும் புரியாமலே அவர்களை வரவேற்றான் தீபக்.

“என்ன தீபக் வெளிநாடு எல்லாம் போயிட்டு வந்துட்டே போலிருக்கு.”

“ஆமா “

“வெளிநாட்டிலிருந்து பொண்ணோடு வருவேன்னு நினைச்சோம். நல்லவேளை குடும்பத்து பேரை காப்பாத்திட்டே.”

சட்டென்று தீபக்கிற்கு நைனிகா நினைவு வந்து போனது. முகம் மாறியது.

“முறைப் பொண்ணையும் கோட்டை விட்டுட்டீங்களே மாப்ளே.” தீபக் புரியாமல் சிரித்துவிட்டு டைனிங் டேபிளுக்கு வந்தான். வேதவல்லி வேகமாக வந்து தீபக் அருகில் சேரில் அமர்ந்தாள். “நீங்க சாப்பிட்டீங்களா அம்மா?” தீபக்

வேதவல்லி “உனக்காகத் தான் காத்திருந்தேன்.”

தீபக் “எத்தனை தடவை சொல்லிருக்கேன். எனக்காக காத்திருக்க வேண்டாம். சாப்பிடுடுங்கன்னு.”

வேதவல்லி “உனக்காக காத்திருப்பதில் சங்கடம் ஏதுமில்லேப்பா. பத்து மாசம் உனக்காக காத்திருந்தேனே அதே சந்தோஷத்தோடு தான் இப்பவும் காத்திருக்கேன்.”

தீபக் கண் கலங்கியது. சமாளித்துக் கொண்டு “வீட்ல என்ன ஃபங்ஷன்? சொந்தக்காரங்க வந்திருக்காங்க. முறைப் பொண்ணையும் கோட்டை விட்டுட்டீங்களே என்று சொல்றாங்க எனக்கு ஒண்ணும் புரியலை.”

காசி “அத நான் சொல்றேன் தீபக்.” என சொல்லியபடி வர அவர் பின்னால் ஷாம் தெனாவெட்டாக வந்து டைனிங் சேரில் இருவரும் அமர்ந்தனர்.

தீபக் விநோதமாக “என்னது தீபக்கா? மூச்சுக்கு மூச்சு மாப்ளே மாப்ளேனு கூப்பிடுவீங்க.!!? இப்ப என்னாச்சு?”

காசி “அதான் சொந்தம் இல்லேன்னு ஆயிடுச்சே?”

வேதவல்லி கலக்கமாய் “டேய் காசி அப்படி சொல்ல உனக்கு எப்படி மனசு வருது?”

காசி “எனக்கு மனசு வரலை உன் மகனுக்குத் தான் எங்க உறவு பிடிக்கலை.”

தீபக் “உங்க பேச்சே சரியில்லையே”

காசி “பிடிக்காதவங்க எது செய்தாலும் குத்தமாத்தான் படும்.”

ஷாம் “வளவளன்னு பேசாம விஷயத்துக்கு வாப்பா.”

காசி “என் மக ரேணுவுக்கு பெரிய இடத்து சம்பந்தம் வந்திருக்கு. யாருன்னு தெரியாதுல்லே?”

ஷாம் பெருமிதத்தோடு நின்றான். தீபக் அமைதியாய் சாப்பிட்டபடி நிமிர்ந்து பார்த்தான்.

காசி “சில்வர் ஸ்டோன் எஸ்டேட் ஓனரின் ஒரே மகன்தான் மாப்பிள்ளை.”

“சில்வர் ஸ்டோன்” எஸ்டேட் வளர்ந்து வரும் ஒரு டீ எஸ்டேட். குன்னூர் டீ பிஸினெஸில் சில்வர் ஸ்டோன் எஸ்டேடும் முக்கிய பணக்காரர்.

ஷாம் நக்கலாக “என்ன யோசிக்கிறே தீபக்? இவங்களுக்கு எப்படி பெரிய இடத்து சம்மந்தம்னு நினைக்கிறே. நாங்க சம்மந்தம் கேட்டு போகலை. என் தங்கை ரேணுவை அந்த பையன் கோவிலில் பார்த்து விட்டு கட்டினா இவளைத் தான் கட்டுவேன்னு சொல்லிட்டான். சரின்னு ரேணு சொல்லிட்டா. எங்களுக்கும் பூரண சம்மதம் நாங்களும் எத்தனை நாள்தான் வேலைக்காரங்களாகவே இருக்கிறது?”

காசி “அப்படி இருந்தும் நல்ல பேரு இல்லையடா.”

வேதவல்லி “ஏண்டா இப்படி பேசறே?”

காசி “தீபக் உன்கிட்டே பேசினதை நான் கேட்டேன்.”

தீபக் கை கழுவிய படி “ஸோ ஒட்டு கேட்டிருக்கீங்க. என்னமோ சொல்வாங்களே..ஆங்..உண்ட வீட்டுக்கு …என்ன வேர்டிங்ஸ்மா அது?”

வேதவல்லி “தீபக்..”

தீபக் “சொல்லுங்கம்மா என்ன வேர்டு?”

வேதவல்லி “ரெண்டகம் நினைக்கப்படாது”

தீபக் புன்னகையுடன் “ஆங்..உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கப்படாதுன்னு சொல்வாங்க. ஆனா நீங்க..? அதையும் நாங்க பொருட்படுத்தலை. ஏன் தெரியுமா நீங்க என் அம்மாவுக்கு தம்பி என்பதால்.”

காசி நக்கலாக “பொய் சொல்லாதே தீபக். தாய்மாமன்கிற உணர்வு இருந்தா பாக்ட்ரி ஒர்க்கர்ஸிற்கு கல்யாணத்திற்கு பணம் கொடுத்து உதவி செய்ற மாதிரி ரேணுவுக்கு கல்யாணத்தை நடத்தி வைப்போம்னு சொல்வியா?”

தீபக் “உங்க மேல ஷாம் மேல எனக்கு நல்ல அபிப்பிராயம் வர்ற மாதிரி நீங்க நடந்துக்கவில்லை. ரேணு மேல் எனக்கு எந்த கோபமும் கிடையாது. ஆனா அவளை என் மனைவியா நினைச்சுப் பார்க்க முடியலை. என் படிப்பு ஸ்டேட்டஸ் எதுவுமே ரேணுவுக்கு மேட்ச் ஆகலை. ஆனா இப்ப அவ போற இடம் பெரிய இடங்கிறதுல எனக்கு மகிழ்ச்சிதான்.”

ஷாம் கோபமாக “உன் மகிழ்ச்சியைத் தூக்கி குப்பையில் போடு. எங்களைப் பொறுத்தவரை நீ வேண்டாதவன்தான்.”

தீபக் கூலாக “வேண்டாதவன் வீட்டில் ஏன் இருக்கணும்?”

காசி கோபத்தை அடக்கிக் கொண்டு “நாங்க எப்பவோ புறப்பட்டாச்சு. அக்கா சொன்னாங்கிறதுக்காக ரேணு நிச்சயதார்த்தத்தை இங்கே வச்சேன். “

வேதவல்லி “ஆமாப்பா. நான் தான் சொன்னேன். இவ்வளவு நாள் பொறுமையாக இருந்த நீ இப்ப ஏன் உறவு முறியற மாதிரி பேசறே?” கெஞ்சலாகக் கேட்டாள்.

ஷாம் “உறவு முறிஞ்சாச்சு. பங்ஷனை சீக்கிரம் முடிச்சுட்டு கிளம்புவோம். வாப்பா.” இருவரும் போனார்கள். வேதவல்லி கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டாள். தீபக் எழுந்து வந்து உட்கார்ந்திருக்கும் தன் அம்மாவின் தலையை தன் மீது சாய்த்து “இனிமேல் அவங்க இங்கிருந்தால் அது ரேணுவுக்குத்தாம்மா அசிங்கம். அதான் அப்படி பேசினேன். ஸாரிம்மா உங்க மனசை புண்படுத்திட்டேன்.”

வேதவல்லி புன்னகைத்து “என்னைப் பொறுத்தவரை உனக்குப் பிறகு தான் மற்ற எல்லாரும் எனக்கு.”

தீபக் தன் அறைக்கு வந்தான். ஜன்னல் வழியாக தோட்டத்து மா‌ மரத்தை பார்த்து அதில் காக்கா கட்டியிருக்கும் கூட்டை பார்த்தான்.‌ ‘எவ்வளவு கச்சிதமாக கூடு கட்டியிருக்கிறது! பறவை கூட தன் பிள்ளைகளை பாதுகாப்பாக வைக்க நினைக்கிறது. மரத்தடியில் போய் நிற்கும் எவரையும் அந்த காக்கா தலையில் கொத்தி விரட்டுகிறது. தன் உடமையைக் காக்க எப்படி போராடுகிறது! தீபக்கிற்கு பாக்ட்ரியில் நடந்த திருட்டும் ஆதிராவும் நினைவுக்கு வந்தனர். ‘ இனி இந்த விஷயத்தில் கடுமையாக இருக்க வேண்டும்.’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டபோது அறைக் கதவு தட்டி விட்டு திறக்கும் சத்தம் கேட்டது. தீபக் திரும்பிப் பார்த்தான். ரேணு மணப் பெண் கோலத்தில் வந்தாள்.

தீபக் ஆச்சர்யமாக “என்ன ரேணு உனக்கு நிச்சயதார்த்த நாள் இல்லே? நீ…ஏ…ன்..ஏது..ஏதும் பேசணுமா?”

ரேணு “என்னை நீங்க வேண்டாம்னு சொல்றதுக்கு பல காரணம் இருக்கலாம்.”

தீபக் இடமறித்து “இல்லே ரேணு. எனக்கு….”

ரேணு “ப்ளீஸ் டயமாச்சு நான் போகணும். அதுக்கு முன்னால நான் சொல்ல வந்ததை சொல்லிட்டுப் போயிடுறேன். குறுக்கே பேசாதீங்க.”

தீபக் “சொல்லு.”

ரேணு “உங்க மேல ரொம்ப ஆசைப்பட்டேன். உங்..களை..உங்களைத்தான் மாரேஜ் பண்ணணும்னு ஆசைப்பட்டேன்.” கண் கலங்கியது. புறங்கையால் கண்ணை ஒற்றிக் கொண்டாள்.

“அந்த உரிமையில்தான் வெட்கத்தை விட்டு..உ..ங்க..உங்களை கட்டிபிடிச்சேன். ஆனா அப்பவும் நீங்க…”

தீபக் குனிந்தான்.

ரேணு “அதுவும் நல்லதாப் போச்சு. எந்த ஆணுக்கும் ஒரு கிளர்ச்சி வரும். ஆனா உங்களிடம் எந்த உணர்ச்சியும் இல்லை. ஒரு ஆண்மையில்லாதவரைக் கட்டிக்க நான் விரும்பலை. நான் உங்களை வேண்டாம்னு சொல்றதுக்கு இந்த ஒரு காரணம்தான்.” என அவள் முடித்ததும் கண்கள் சிவக்க வெறியோடு அவள் கழுத்தை பிடித்தான். அவன் கண்ணில் நைனிகா தெரிந்தாள். “ஏய் யாருக்கு ஆண்மை இல்லேன்னே‌? ஏன் …ஏன் பொம்பளைங்க எல்லாம் இப்படி அலையறீங்க. ச்ச்சீ” என்று அவளைத் தள்ளினான். தடுமாறி விழுந்தவள் எழுந்து நகையை சரிபண்ணிக் கொண்டு வெளியே போனாள். தீபக் கோபமாய் முகம் பார்க்கும் கண்ணாடியில் கைகளால் குத்தினான். சிலீரென உடைந்து கையில் ரத்தம் கொட்டியது. வேலைக்காரன் ஓடி வந்தான். “ஐயா கையில் ரத்தம் கொட்டுது.” என்று அதிர்ந்து நின்றான். தீபக் “உஷ் சத்தம் போடாதே. அம்மா வந்திடப் போறாங்க. சீக்கிரம் சுத்தம் பண்ணு. இந்தா பணம். இதே மாதிரி ஒரு கண்ணாடியை வாங்கி மாட்டிடு.” என்று கூறியதும் வேலைக்காரன் தலையாட்டி “ஐயா டாக்டரைப் பாருங்க. ரத்தம் வடியுது.” என்றான். தீபக் எஸ்டேட் வரும் வழியில் ஃபேமிலி டாக்டரைப் பார்த்து கையில் கட்டுடன் ஃபாக்ட்ரி வந்தான்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *