நில் மறதி கவனி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 1, 2023
பார்வையிட்டோர்: 1,946 
 

நான் இன்னும் அரை மணியில் என் அப்பாவின் நண்பர் டாக்டர் மதிவாணன் வீட்டில் இருக்கவேண்டும். எதற்காக என்று கேட்கிறீர்களா?. முதலில் அவரிடம் என் பிரச்சனையை பகிர்ந்து விட்டு உங்களிடம் வருகிறேன். ஒன்பதரைக்கு அவர் வீட்டில் உள்ள மதி மனநல கிளினிக்கில் வந்து விட்டேன்.

அவர் தன் தனிப்பட்ட அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். “என்னப்பா மதன், எதுக்கு திடிரென்று என்னைப் பாக்கணும்னு அப்பா கிட்ட சொன்னயாமே?. அட்வைஸ் ஏதாவது? இல்ல எனி ப்ராபளம் ?. கண், காது , ஹார்ட்ன்னு டாக்டர்கிட்டே போக ஜனங்களுக்கு தயக்கமில்ல. ஆனா, இந்த மாறி க்ளினிக் வர ரொம்ப யோசிப்பாங்க. ஆன்லைன் கேம்-ன்னு அடிக்டாகி வர பசங்க ஜாஸ்தி. நீ இப்போ இன்ஜினீரிங் ரெண்டாவது வருஷமில்லையா?. என்ன பிரச்சினை?

என்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்துக் கொண்டு சொன்னேன் ” எனக்கு, ஆரம்பகால அல்சைமர் (முதுமறதி) இல்லே டிமென்ஷியா இருக்குமான்னுத் தோணுது”. சொல்லிவிட்டு, அவர் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தேன். அவரிடம் கொஞ்ச நேரம் எந்த எதிர்வினையும் காணவில்லை.

எதனாலே நீ இந்த முடிவுக்கு வர்ரே?

ஒரு பதினேழு வயசு சைனீஸ் பையனுக்கு அல்சைமர் நிச்சயமுன்னு இன்டர்நெட்லே படிச்சிருக்கேன். அப்புறம் என் தாத்தாவுக்கு அல்சைமர் இருந்திருக்கு. அப்போயிருந்து ஒரு டௌட். ஒரு சம்பவம் சொல்றேன். கேளுங்கோ.

ரெண்டு நாள் முன்னே அம்மா அழுக்கு துணியெல்லாம் வாசிங்மெஷினில் போட்டு விட்டு, என்கிட்டே அதை ஓட்டிடு . ஒன் அவர் கழிச்சி காயப் போடச் சொல்லிட்டு , கடைக்குக் கிளம்பினா . நானும் சுவிட்ச் போர்டு மெயின் ஆன் பண்ணிட்டு , ஒன் அவர் முடிஞ்சு துணியெல்லாம் எடுத்து காயப் போடறப்போ அம்மா வந்துட்டாங்க. தானே பார்த்திக்கிரேன்னு சொல்லிட்டு என்னைப் போகச் சொல்லிட்டாங்க .கொஞ்ச நேரத்தில் அம்மா பயங்கரமா

கத்திக் கூப்பிட, நான் பயந்து போய் வேகமா என் ரூமிலிருந்து ஓடி வந்தேன். ‘ என்னடா, மெஷினை ரன் பண்ணியா ?. கொஞ்சம் கூட ஈரமே காணோம்?’. உடனே, மெஷினில் சோப் டிரே பார்த்தால் அதில் சோப் அப்படியே இருக்கு!. நான் தான் மறதியா மெஷின்-சுவிட்ச் ஆனே பண்ணாம, ஒரு மணி கழிச்சி துணியெல்லாம் வெளியே எடுத்திட்டேன். முன்னே ஒரு தரம் இதே மாதிரி சோப்பே போடாம மெஷின் சும்மாவே ஒட்டியிருக்கேன்.

“கடைக்கு நாலு சாமான் வாங்க அனுப்பிச்சா, எனக்கு ரெண்டு சாமான் தான் நினைவு இருக்கும் . கடைக்குப் போயிட்டு, அங்கிருந்து போன் பண்ணிக் கேட்டுக்குவேன். பக்கத்து வீட்டுக்காரர் பேர் கூட சட்டென்னு மண்டையில் வராது. அவர் பேர கொண்டுவர ரொம்ப கஷ்டப் படுவேன். சில சமயம் அப்படியே உட்டுடுவேன்.”

ஒரு சூப்பரான இன்ஸிடண்ட் ஒன்னு. “அன்னிக்கி, காத்தலே அப்பா அம்மா ரெண்டு பெரும் கோயிலுக்கு போயிட்டு சாயங்காலம் தான் வருவாங்க. எனக்கு காலேஜ் அரை நாள். மெயின் டோர் ஆட்டோ-லாக் சிஸ்டம் கொண்டது. பத்திரமா சாவியை கையில் வைத்துக்கொண்டு தான் வெளியே போவனம். அம்மா குறைந்தது ரெண்டு தரமாவது சொல்லியிருப்பாங்க சாவியைப் பத்தி. அப்படியும், நான் சாவியை உள்ளாற விட்டுட்டு கதவை மூடி விட்டேன். அப்புறம் அதைத் திறக்க கார்பெண்டர் கூப்ட்டு சரி பண்ணாலும், பண நஷ்டம், கதவும் கொஞ்சம் டேமேஜ். எல்லோருக்கும் டென்ஷன் வேற”.

எண்ணிப்பாத்தா, சின்ன வயசிலே நடந்த நிறெய சம்பவம் எதுவும் மனசிலே இல்ல. என் பிரெண்ட்ஸ் அவங்க சின்ன வயசுலே இடியாப்பம் சாப்பிட்டதா சொன்னா எனக்கு ஆச்சர்யமா இருக்கும். ஸ்கூல் டிபனுக்கு என்ன எடித்திட்டு போனோம்னு ஒன்னு கூட நினைவிலே இல்ல. பிரைமரி கிளாஸ் டீச்சர் பேரு சுத்தமா மறந்திட்டேன். வீட்டிலுயோ இல்ல ஸ்கூலேயோ ஏதாவது சேஷ்டத்தனம் பண்ண மாதிரி ஒன்னும் வரமாட்டேங்குது. அம்மா சொல்வாங்க ‘நீ சரியா சாப்பிடரத இல்ல. ஒட்டடைக்குச்சி மாதிரி இருக்க. இப்போ என் உடம்பை பார்த்து அசந்திடாதிங்கா சார். நான் காலேஜில் வெய்ட் லிப்ட்டிங் மெடல் வாங்கியிருக்கேன்.

ஸ்கூல் போற வழியிலே ஒரு தரைப்பாலம் வரும். ஒரு தரம் பயங்கர மழையிலே பாலத்துக்கு மேலே 15 அடி உயரத்துக்கு தண்ணி ஒடிசி. இது 15 வருஷம் முன்னாடி. ஆனா, கண்ணுலே இது மாத்திரம் படமா ஓடுது. ஒருவாட்டி காத்தாலே டிபன் சாப்பிடாம ஸ்கூல் கிளம்பிட்டேன். நடுவிலே பிள்ளையார் கோயில் ஒன்னு வரும். அங்கே தோப்புக்கரணம் போட்டுட்டு சகிகொள் கிளம்புவோம். அன்னிக்கி, அங்கே மயக்கம் போட்டு உழுந்திட்டேன். அப்புறம் அன்னிக்கி ஸ்கூல் போவல”.

டாக்டர் என்னைப் பார்த்து கேட்டார். “உன்னோட பழைய ஸ்கூல் பிரண்ட் , உன்கிட்ட தொடர்பில இல்லாம இருக்கணும். அந்த மாதிரி இருந்தா அவன் பேர் ஒன்னு சொல்லு? “

காலேஜ் படிப்புக்கு நான் வெளியூர் வந்திட்டேன். பழைய பிரண்ட்ஸ் கூட காண்டாக்ட் ரொம்ப குறைஞ்சு போச்சு. அவங்கயெல்லாம் ஊரிலேயே காலேஜ் பண்றாங்க. “ஸ்கூல் பிரண்ட் கீரன். அவன் எட்டு வரை தான் என் கூடப் படிச்சான். படிப்பு வரல. சொந்த தொழிலுக்குப் போயிட்டான்னு கேள்விப்பட்டேன்.

அப்புறம் நேத்து டிபன் என்ன சாப்பிட்டே?

நேத்து காத்தலே சாம்பார் சாதம், தயிர் சாதம், சவ்-சவ் கூட்டு, அப்பளம்.”.

“என்ன, காத்தாலே டிபன் சாதமா ?”

“ஆமா டாக்டர், எங்க வீட்டில அப்படி தான். கொஞ்சம் உல்ட்டா . ராத்திரி தான் டிபன். வேணுமுன்னா வீட்ல கேளுங்க.”

“ஓகே.. நீ நிறைய இன்டர்நெட் அலசிட்டு வந்திருப்பே. உடம்புக்கு எதாவதுன்னா நெறைய பேருக்கு கூகிள் தான் ரெண்டு-மூணு நாளுக்கு டாக்டர். அதுக்கப்புறம் தான் நிஜ டாக்டர்கிட்ட போவாங்க. அல்சைமர் ஒருத்தருக்கு வந்திருக்குன்னு கண்டுபிடிக்கறவங்க பொதுவா அவங்க க்ளோஸ் காண்டாக்ட் இல்ல உறவினர் தான் . இந்த மாதிரி வயசில வர்றது ரொம்ப அபூர்வம். பத்து கோடியில் ஒரு கேஸ் இருக்கலாம். உனக்கு இருக்கிறது தொடக்க நிலை அல்சைமர்-ம் இல்ல. உனக்கு இருக்கிறது கவனச்சிதறல் தான்.

யாராவது உன்கிட்ட எதாவது சொன்னா முழுமையா உள் வாங்கிக்கிறது இல்ல. அதுக்கு காரணமும் இருக்கும். உனக்குப் பிடிக்காத தகவல் அல்லது வேலையா இருக்கலாம். உங்க காலேஜில் உனக்கு பிடிச்சப் பாடத்தில் ரொம்ப கவனமா இருக்கிறதில்லையா, அது போலத் தான் , உன் நடவடிக்கையும். உன் ரூம்ல லைட்டோ இல்ல பேனோ ஆஃப் செய்யாம அப்படியே உட்டுட்டு ஓடிப்போற . அப்புறம் வீட்டிலத் திட்டு வாங்கற “.

“நம்ம மைண்டுலே ரெண்டு மெமோரி இருக்கு. கம்ப்யூட்டரிலே ரோம், ராம் ஏன்னு ரெண்டு மெமரி இருக்குயில்லையா , அந்த மாதிரி. ஒன்னு டெம்பரரி , இன்னொன்னு பர்மனண்ட். நம்ம சின்ன வயசு சம்பவம் நெறய டெம்பரரி மெமரி.

உனக்கு சின்ன வயசிலே திருப்பதி இல்ல பழநியிலே மொட்டே அடிச்சிருப்பாங்க. உனக்கு ஞாபகம் இருக்காது. உங்க அப்பாவுக்கு இருக்கும். ஆனா, உங்க அப்பாவுக்கு தன்னோட முதல் மொட்டையைப் பத்தி ஒன்னும் தெரியாது. அப்போ ஏதாவது போட்டோ எடுத்து வச்சிருந்தா கூட நம்ப முடியமா தான் அதைப் பாப்போம். சில சமயம், உன் தம்பி இல்ல அண்ணா உன்னை தள்ளி உட்டு நீ கீழே விழுந்து உன் பல் உடைந்திருந்தன்னா, அப்படியே அது படமா மண்டையில பர்மனெண்டா பதிஞ்சிடும்.

நீ வேணுமின்னா வல்லாரை ஆயுர்வேதிக் மாத்திரை டெய்லி ஒன்னு சாப்பிடு. தொந்தரவு ஒண்ணுமில்ல. லாங் டெர்ம் மெமரி வளர்ச்சி அடைய உதவும்”.

அந்த சமயம், ஒரு பொண்ணு (டாக்டரின் மகளா இருக்கும்) உள்ளே வந்து “பேஷண்ட்ங்க வெய்ட் பண்றாங்க” என்று சொல்லி வந்தாள் .

” மதன், இது என் பொண்ணு மதிவிழி . பிளஸ் 2. நீ வேணுமின்னா வர்ற 29ந் தேதி வா. நாம திரும்பப் பேசலாம், ஒரு நண்பரா, பேஷண்ட்டாக அல்ல”. டாக்டர் கிளம்பி விட்டார்.

நான் மதிவிழியிடம் ‘நான் இந்த மாசம் பிப்ரவரி 28 நாள் தான் இருக்கு. அவர் 29ந் தேதி வரச் சொல்றாரே” என்றேன்.

“உங்களுக்கு நல்ல அறிவு தான். 29ன் தேதி இந்த மாசம் விட்டா வேற மாசத்தில இல்லையா? அவர் கரெக்டாத் தான் சொல்லியிருக்கார். நாங்க ஒரு மாசம் டூர் போறோம்.”.

மதிவிழி ரொம்ப ஷார்ப்பா தான் இருக்கான்னு நினைத்துக்கொண்டே, “சரி, நாம அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

கதை எழுதத் தூண்டிய இணையச்செய்தி:
https://www.psychiatrist.com/news/a-19-year-old-is-youngest-ever-to-be-diagnosed-with-alzheimers/#:~:text=A%2019%2Dyear%2Dold%20man,at%20the%20age%20of%2017

– திண்ணை 21-மே-2023 மின்னிதழில் பிரசுரமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *