கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2023
பார்வையிட்டோர்: 1,940 
 

சாப்பிட்டு கொண்டிருந்த ராகவன் தட்டை தூக்கி எறிந்தான். தட்டு குழம்பு வைத்திருந்த பாத்திரம் மேல் பட்டு கீழே விழுந்தது. தட்டிலிருந்த சாதம் தரையெங்கும் சிதறியது.

நித்யா ஓடி வந்து குழம்பு பாத்திரத்தை எடுத்தாள். அதற்குள் முழுதும் கொட்டி விட்டது.

“மனுஷன் நிம்மதியா சாப்பிட முடியலே. சாப்பிடும் போது தான் எல்லா பிரச்னையும் பேசணுமா?” பெருங்குரலில் கத்தினான். நித்யா ஏதும் பேசாமல் தரையை சுத்தம் செய்யும் வேலையில் இருந்தாள்.

“இது இல்லை .. அது இல்லை.. எல்லாம் இப்ப தான் பேசணுமா?”

“இல்லைன்னா இல்லைன்னு தானேங்க சொல்ல முடியும்?”

“அதுக்கு இதான் நேரமா? வந்ததும் வராததுமா சொல்ல வேண்டியது; இல்லாட்டி சாப்பிடும் போது பேச வேண்டியது. .. ச்சே! “

முகுந்த் சத்தமில்லாமல் சாப்பிட்டு கொண்டிருந்தான். பத்தாம் வகுப்பு படிக்கும் அவனுக்கு நாளைக்கு அரையாண்டு பரீட்சை. ” ஆரம்பிச்சிட்டாங்களா? இன்னைக்கு படிச்சா மாதிரி தான்”

முகுந்த் சாப்பிட்டு முடித்து விட்டு அந்த வீட்டில் இருந்த ஒரே தனி அறையினுள் நுழைந்தான். வெளியில் சத்தம் இன்னும் குறைந்த பாடில்லை.

“நான் என்ன உங்க அப்பன் மாதிரி தினம் பணம் பாக்கிறவனா? இருபது தேதிக்கு மேல் முழி பிதுங்குது. ரெண்டு பஸ் விட்டுட்டு ஆர்டினரி பஸ் பிடிச்சு வர்ரேன்”

“வீட்டுக்கு வேண்டிய பொருள் எல்லாம் மாச ஆரம்பத்திலயே வாங்கினா தான் என்ன? “

இந்த கேள்விக்கு ராகவனிடம் பதில் இல்லை. உள்ளே சென்று சட்டையை எடுத்து மாட்டி கொண்டு கிளம்பினான். முகுந்த், அப்பா கை கூட கழுவாமல் சட்டை மாட்டி கொண்டு கிளம்புவது பார்த்து தடுக்க முயன்றான்.

“அப்பா.. போகாதீங்கப்பா.. நாளைக்கு எனக்கு பரீட்சை”

“அதாண்டா கிளம்பறேன். இருந்தா சண்டை வந்துட்டே இருக்கும்”

சில வினாடி நின்று மொபைலை எடுத்து கொள்ளாலாமா என யோசித்தான் . பின் வேண்டாமென எடுக்காமல் கிளம்பினான்.

“அம்மா. ஏன் அவரை தடுக்கலை”

“விடுறா. துர்கா பவன் போய் சாப்பிட்டுட்டு வருவாரு. வேற எங்கே போவாரு? “

“உனக்கு சாப்பாடு? “

“எங்கே? இருந்த குழம்பை கொட்டிட்டாரு..வெறும் சாதத்தை எப்படி சாப்பிடறது? “


சற்று நேரம் தெருவினுள் நடந்த பின் தோன்றியது. “எங்கே போவது? ” மனதினுள் இன்னும் கோபம் குறைய வில்லை. “வைக்கிற இடத்தில இவளை வச்சிருக்கணும்; ரொம்ப இடம் குடுத்திட்டேன் “

“மத்தவனுங்க மாதிரி நான் தம் அடிக்கிறேனா.. தண்ணி அடிக்கிறேனா? என்னோட அருமை இவளுக்கு தெரியவே இல்லை” மனதிற்குள் சுய இரக்கம் பெருகியது.

“சுந்தர் ரூமுக்கு போகலாமா? இருப்பானா? போன் வேற எடுக்காம வந்துட்டோம்”

போன் இல்லாத போது தான் நிறைய பேருக்கு பேசணும்னு தோணும். பணம் கம்மியா எடுத்துட்டு வரும் போது நிறைய வாங்கனும்னு தோணுவது போல்…

கால்கள் சுந்தர் ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தது.


“வாடா என்ன இது லுங்கியோட? “

“ப்ச்.. ஒன்னும் கேக்காதே மாப்ளே”

“வீட்லே சண்டையா”

“ம்”

“உக்காரு. துணி துவைச்சிட்டு இருக்கேன். வந்துடுறேன்”

அருகிலிருந்த புத்தகத்தை எடுத்து படிக்க முற்பட்டான். மனசு பதிய வில்லை.

சுந்தர் தனிக்கட்டை. 40 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்ய வில்லை. “குடுத்து வச்சவன்” என அடிக்கடி சொல்லுவான் ராகவன்.

அடுத்த அரை மணியில் சுந்தர் வந்து சேர்ந்தான்.

என்னடா .. சாப்டியா?

என்ன பதில் சொல்வது இதற்கு? பாதி சாப்பாட்டில் தூக்கி எறிந்தாயிற்று. “ம்” என்று சொல்லி வைத்தான்.

“என்னடா அப்படி சண்டை? “

“சாப்பிடும் போது இது இல்லை அது இல்லைன்னு குறை சொல்றாடா. மனுஷன் நிம்மதியா சாப்பிட முடியலை; தட்டை தூக்கி எறிஞ்சுட்டு வந்துட்டேன் “

“அட பாவி.. சமையல் பண்ணும் போது எவ்ளோ எரிச்சல் வரும் தெரியுமா? முன்ன பின்ன சமைச்சு பாத்திருக்கியா? சமைக்கும் போது பொருள் இல்லன்னா என்ன தான் பண்றது சொல்லு”

ராகவன் அமைதியாய் இருந்தான். ” உன் பையனுக்கு எக்ஸ்சாம்ன்னு சொல்லிட்டிருந்தே”

“…”

“டேய். சின்ன வயசில் என் அம்மா, அப்பா இப்படி தான் சண்டை போட்டுப்பாங்க அது என் மனசை எவ்ளோ பாதிச்சுது தெரியுமா? இப்போ பார். அம்மா, அப்பா போன பிறகு என்னை பாத்துக்க ஆள் இல்லாம தனியா கிடக்கிறேன். உன்னை பாத்து குடுத்து வச்சவன்னு நினைச்சிட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா …”

“அட போடா. இக்கரைக்கு அக்கரை பச்சை. நான் உன்னை தான் அப்படி சொல்லுவேன்”

“டேய். நம்ம வாழ்க்கையே ஒரு சினிமா மாதிரி தான். எல்லாம் தான் இருக்கும் இதில். சண்டை, கோபம், அழுகை, இப்படி எல்லாம் தான் இருக்கும் . வெறும் ஜாலி மட்டும் குடும்பத்திலே எதிர் பார்த்தா எப்படி? என் வாழ்க்கையை பாரு. அதில ஒன்னுமே இல்லடா. டாகுமெண்டரி படம் மாதிரி வெறுமையா கிடக்கு”

ராகவன் யோசிக்க ஆரம்பித்தான்.

“வெறுப்புக்கு பதில் வெறுப்பு இல்லடா. அன்பு தான் அதுக்கு சரியான பதிலா இருக்க முடியும். நீ தட்டை தூக்கி எரிஞ்சியே.. உன் வீட்டுக்கார அம்மா அப்போ என்ன பண்ணாங்க? “

ராகவன் யோசித்தான். நித்யா ஏதும் செய்ய வில்லை. தரையை தான் கூட்டினாள் என்பது நினைவில் வந்தது.

“கோபமா சொல்லும் போது நீ சொல்றது நல்ல விஷயமா இருந்தா கூட மெசேஜ் போய் சேர்ரதில்லை.. அதை புரிஞ்சிக்கோ..எதையும் பொறுமையா மெதுவா தான் சொல்லணும் ..இப்போ நான் சொல்ற மாதிரி”


“என்னம்மா அப்பாவை இன்னும் காணும்? ஹோட்டல் போயிட்டு வந்திடுவாருன்னே”

“தெரியலேயேடா.. எங்க போனாரோ? ” நித்யாவிற்கு பயம் வந்தது “ஒன்னு கிடக்க ஒன்னு செஞ்சிட போறார். ச்சே நான் தான் தப்பு பண்ணிட்டேன். சாப்பிட்டு முடிச்சோன சொல்லிருக்கணும்”

கேட் திறக்கும் சத்தம் கேட்டது. நித்யா எட்டி பார்த்தாள். ராகவன், துர்கா பவன் சாப்பாட்டு பார்சலுடன் உள்ளே வந்து கொண்டிருந்தான் .


உரத்த சிந்தனை நடத்தும் குடும்ப உறவுகள் குறித்த சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

– நவம்பர் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *