வெற்றிக்குப் பின்னால்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கோகுலம்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 14, 2023
பார்வையிட்டோர்: 3,476 
 

(2004 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மன்னர் விக்கிரமன் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தார். காரணம், அவர் படையெடுத்துச் சென்ற நாடுகளை எல்லாம் ஜெயித்து, அந்த நாட்டில் உள்ள கஜானாவிலிருந்த விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் கவர்ந்து, தன் நாட்டின் கருவூலத்தை வழிய வழிய நிரப்பிவிட்டார்.

திடீரென்று மன்னருக்கு அந்த எண்ணம் தோன்றியது. தன்னைப் பற்றி தன்னுடைய வெற்றியைப் பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொண்டால் என்ன?

அவர் வயதானவர் போன்று மாறு வேடம் பூண்டார். யாரிடமும் சொல்லாமல் நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்.

வேகமாக புரவியை ஓட்டி நகரத்தின் எல்லைப் பகுதியை அடைந்தார். மறை விடத்தில் தன் குதிரையைக் கட்டி வைத்து விட்டு. கால் நடையாக நடக்க ஆரம்பித்தார். சிறிது தூரம் சென்றதும் ஒரு சிறிய வீட்டின் வாசல் திண்ணையில் நடுத்தர வயதைத் தாண்டிக் கொண்டி ருக்கும் ஒருவர். தனக்குத் தானே ஏதோ புலம்பிக் கொண்டிருப்பது நிலவு ஒளியில் தெரிந்தது. மன்னர் மெதுவாக அந்த வீட்டிற்குச் சென்று எதிர்த் திண்ணையில் அமர்ந்து கொண்டார்.

“உனக்கு என்ன கவலை? நீ ஏன் அழுது புலம்புகிறாய்?” பரிவோடு கேட்டார் மன்னர்.

“ஐயா பெரியவரே! என்னோட கவலைக்கான காரணத்தைச் சொன்னால் உங்களால் என்ன செய்ய முடியும்? என் தலையெழுத்து அனுபவிக்கிறேன்” என்றார் விரக்தியோடு.

“அப்படி சொல்லாதேப்பா! வியாதி என்னதுன்னு தெரியாம மருந்து கொடுக்க முடியுமா? அதேபோல உன்னோட கவலைக்கான காரணத்தை அறியாமல் என்னால் உதவி செய்ய முடியுமா?” என்றார் மன்னர்.

“பெரியவரே! இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கும் தாங்கள் யார்?”.

ஒரு நொடி சிந்தித்த மன்னர், “என் பெயர் கனகவேல். என் உறவினர் வீட்டிற்கு வந்தேன். இரவு சாப்பாடு ஆனதும் வாசல் கட்டிலில் படுத்துக் கொண்டேன். புது இடமா… தூக்கம் வரவில்லை. அதனால் சற்றுக் காலார நடந்து வரலாம் என்று நடந்து வந்தபோதுதான் நீ புலம்புவதைக் கேட்டு உள் வீட்டிற்கு வந்தேன்” என்று நம்பும்படி சாமர்த்தியமாக பதில் சொன்னார்.

“ஐயா! என் பெயர் ராஜலிங்கம். பெரியவராகிய உங்ககிட்டே என்னோட கவலையைச் சொல்கிறேன். எனக்கு கல்யாண வயதிலே ஒரு மகள் இருக்கிறாள்.

அவளுக்கு நல்ல இடத்திலே மாப்பிள்ளை கிடைத்தது. முப்பது பவுன் நகை போடும்படி மாப் பிள்ளை வீட்டுக்காரங்க கேட் டனர். என்னோட விவசாய நிலத்தை அடமானம் வைத்து எப்படியோ கஷ்டப்பட்டு மாப்பிள்ளை வீட்டார் கேட்ட சீர்வரிசைகளைத் தயார் செய்தேன். பக்கத்து கிராமத்தில் கல்யாணம். கல்யாணத்திற்கு முதல் நாள் பெண்ணை அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டிற்கு மாட்டு வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது, வழியில் திருடன் நகைகள் உட்பட அத்தனை சாமான்களையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்றுவிட்டான். சொன்னபடி சீர்வரிசை செய்தால்தான் என் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று பையனின் பெற்றோர் கூறிவிட்டனர். நகைகள் இல்லா மல் என் பெண்ணை யார் சுல்யாணம் செய்து கொள்வார்கள்? தற்சமயம் நான் சம்பாதிப்பது என் குடும்பத்தினர் வயிறார சாப்பிடத்தான் சரியாக இருக்கிறது. என் அருமை மகளோட எதிர்காலத்தை நினைத் தால் மனதிற்கு மிகவும் கவலையாக இருக் கிறது. அதனால்தான் அழுது புலம்பிக் கொண்டிருக்கேன்.”

பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்த மன்னர் திடுக்கிட்டார். ‘தன் நாட்டில் திருட்டா?’

“ஏம்பா ராஜலிங்கம்! நீ மன்னர்கிட்டே போய் முறையிட வேண்டியது தானே?”

“பெரியவரே! நம் நாட்டு மன்னரைப் பற்றி நான் சொல்லப்போவதைக் கேட்டு தயவு செய்து நீங்க என்னைத் தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள். அவர் பெரிய கொள்ளைக்காரர்; பேராசைக்காரர். அவர் பெயர் விக்கிரமன் இல்லை. அக்கிரமன்” என்றார் அழுத்தம் திருத்தமாக.

இதைக்கேட்ட மன்னருக்குக் கோபம் கொப்பளித்தது. கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு கேட்டார்.

“எப்படி… எப்படி. நீ சொல்றே?”

“பெரியவரே! நம் மன்னர் பேராசை பிடித்து அண்டை அயல் நாடுகளோடு படையெடுத்து, அவங்க கஜானாவிலிருந்து விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் கவர்ந்து கொண்டு வந்திருக்கிறார். ஒரு வகையிலே பார்த்தால் மன்னர் கொள்ளை அடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.”

”ராஜலிங்கம்! சண்டைபோடுவது. படையெடுப்பது இதெல்லாம் மன்னரின் செயல்தானே?”

“பொதுவாக மற்றவங்க நமக்கு அக்கிரமமோ அநியாயமோ செய்தால் நாமும் சண்டைக்குப் போவோம். அப்படிப்பட்ட சண்டையிலே ஜெயிப்பவன் தான் வீரன். நம்ம மன்னர் தன்கிட்டேதான் படைபலம் இருக்கிறது என்ற ஆணவத்திலே, பொருள் சேர்க்கும் பேராசையிலே, எந்தத் தவறும் செய்யாத ஏன் நம் நாட்டு வழிக்கே வராத அண்டை அயல் நாடுகளுடன் வலுச்சண்டைக்குப் போய் ஜெயித்து விட்டு வந்திருக்கிறார். புலி பூனையோட சண்டை போடலாமா?”

திடுக்கிட்டார் மன்னர். ராஜலிங்கத்தின் பேச்சு உள்ளத்திலே சாட்டை அடி மாதிரி வலித்தது. தான் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் வெற்றிக்குப் பின்னால் இப்படிப்பட்ட தீமைகள் இருக்கிறதா?

“பெரியவரே! திருடர்கள் நடமாட்டம் இல்லாமல் நம் மன்னரால் செய்ய முடியுமா? நான் பேசியதிலே ஏதாவது தவறு இருக்கிறதா?”

“ராஜலிங்கம்! நீ உண்மையைத்தான் சொல்லியிருக்கிறாய். என் நண்பனோட மகன் அரண்மனையிலே காவல்துறையிலே உயர் பதவியில் இருக்கிறான். அவனிடம் உன் விஷயத்தைச் சொல்லப் போகிறேன். திருடு போன நகைகளை நிச்சயம் கண்டுபிடித்துக் கொடுத்துவிடுவான். உன் மகள் கல்யாணமும் கட்டாயம் நடைபெறும். கவலைப்படாதே. இந்தச் செய்தியை அவன் ராஜாவிடம் சொல்வான். நம் மன்னரும் நம் நாட்டின் நலத்தில் கட்டாயம் கவனம் செலுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. வரட்டுமா?” என்று கூறி விடைபெற்றுச் சென்றார்.

– கோகுலம், மே 2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *