காசும், காதலும்…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2013
பார்வையிட்டோர்: 9,030 
 

மாலையும், ஊதுபத்தி மணமும் சென்ட்டின் வாசமும் அந்த இடத்தின் நிகழ்வை தெருமுனையிலேயே கட்டியம் கூறிக் கொண்டிருந்தன.

வசந்தன் உயிரற்ற உடலாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்தான். அவன் மனைவி லதா ஓர் ஓரமாக வெறித்த பார்வையோடு இறுகி போய் உட்கார்ந்திருந்தாள் அருகில் மகன் சுரேஷும், மகள் சுபாவும் அழுதவாறு இருந்தனர். சுற்றிலும் உள்ள கூட்டத்தில் தெருவாசிகளும், நண்பர்களும், மீதம் அலுவலக சகாக்களுமாக இருந்தனர்.

காசும், காதலும்அவளைக் கட்டிக் கொண்டு அழ உறவுகள் இல்லையானாலும், பக்கத்தில் உட்கார்ந்து தேற்ற நண்பர்கள் இருந்தனர். ஷாமியானா போடுவதிலிருந்து, பாடை கட்டுவது வரை ஆளுக்கொரு ஏற்பாடாக செய்து கொண்டிருந்தனர். அவளது முதலாளி அம்மாவும் விஷயம் கேள்விப்பட்டதிலிருந்தே இவளுடன் தான் இருக்கிறாள்.

“”அய்யய்யோ இப்படி பாதியிலேயே விட்டுட்டு போவாருன்னு நாங்க யாருமே நினைக்கலியே லதா” என்று பக்கத்து வீட்டம்மாள் கதறியதை வெறித்துப் பார்த்தாள் லதா. அவளை நெருங்கி அமர்ந்து அவளது கைகளை தனக்குள் கோர்த்தவாறு, லதா “”அழுதுடும்மா.. துக்கத்தை நெஞ்சிலேயே வைச்சிருந்தீன்னா வெடிச்சிடும்”என்றாள் தோழி.

“”மகராசி எப்பவும் தான் வேலைவேலைன்னு ஓடிக்கிட்டிருந்தா புருஷனை செத்து சாத்தி வைச்சிருக்காங்க.. அழறாளா பாரு அழுத்தக்காரி” என்ற முணுமுணுப்புடன் தெருப்பெண்கள் வந்து பார்த்து நகர்ந்தவண்ணம் இருந்தனர்.

நினைவுகள் எங்கோ சிதறிக் கொண்டிருந்தது லதாவுக்கு. இந்த மொத்த வீட்டின் அளவை விட பெரியது அவளது வீட்டின் முன்னறை. அங்கு தான் அவளது அப்பா வக்கீல் தேவநாதனை பார்க்க வருகிறவர்கள் உட்கார வைக்கப்படுவார்கள்.

அங்குதான் அவள் முதன்முதலில் வசந்தனை பார்த்தாள். ஏதோ ஒரு கேஸ் விஷயமாக வசந்தனின் அப்பா, வக்கீல் தேவநாதனை பார்க்க மகனையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.

சிவந்த நிறம். ஆண்மையான முகம். அதில் தானே அவள் மயங்கி போனாள். கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை தேடும் வேலையில் இருந்தான். எப்படியோ இருவரின் விழிகளும் கலந்து, காதல் என்ற உறவில் மலர்ந்தது.

இவர்கள் காதல் மெல்ல கல்லூரிக்கும், வீட்டிற்கும் கசிய தொடங்கியது. இருவர் வீட்டிலும் பலத்த எதிர்ப்பு. அவள் படிப்பை முடிக்கவில்லை. அவன் அப்போதுதான் சின்ன வேலையில் சேர்ந்திருந்தான். இரு குடும்பமும் கைகழுவி விட தன் கையே தனக்குதவியானது இருவருக்கும்.

திருமணமான புதிது.

“”என் செல்லக்குட்டி எனக்காக எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வந்துருக்கு. உன்னை என் உள்ளங்கையில வைச்சு தாங்குவேன்டீ”

“”நீ மட்டும் என்னவாம் உங்க அப்பா உன் மேலே எவ்ளோ பிரியம் வைச்சிருந்தாரு. உனக்காக வேலைக்கு எங்கேல்லாம் சிபாரிசு தேடி அலைஞ்சாரு. அம்மா, தங்கச்சின்னு எல்லாரையும் எனக்காக தூக்கி போட்டுட்டு வந்துட்டியே எம்மேல அவ்ளோ பிரியமாடா உனக்கு” என்றாள் நெகிழ்ந்து போய் கண்ணீருடன்.

காலம் ஓடியது. சுபா, சுரேஷ் இருவரும் பிறந்தனர். குடும்பம் பெருகிய அளவுக்கு வருமானம் பெருகவில்லை. போதாததுக்கு, இரண்டு குடும்பமுமே இவர்கள் இரண்டு பேரையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

“”இரண்டு மாசமா வீட்டு வாடகை குடுக்கல வீட்டுக்காரர் காலைல வந்து கொஞ்சம் அதட்டலாப் பேசிட்டுப் போனாரு. மளிகை சாமானும் தொட்டுக்க-

தொடச்சிக்கன்னு இருக்கு. எப்படிதான் சொச்ச நாளை ஓட்டப்போறோமோன்னு இருக்கு”

வேலையிலிருந்து வீடு திரும்பியவனிடம் சொன்னாள் லதா.

“”சும்மா பொலம்பிட்டே இருக்காத மனுஷன் வீட்டுக்கு வந்தா நிம்மதியே இருக்கமாட்டேங்குது” கோபமாக சட்டையை கழற்றி வீசியெறிந்தான்.

“”உங்ககூட வேலைபார்க்கறவங்க எல்லாம் நம்மள மாதிரியா கஷ்டப்படறாங்க? சமார்த்தியமே இல்லாத ஆம்பளய கட்டிக்கிட்டேன்.. எல்லாம் என் தலையெழுத்து”

“”ஆமாண்டீ.. எனக்கு சமார்த்தியம் போதாதுதான்.

என்னால பொய் கணக்கு எழுத முடியாது. அவனுங்க மாதிரி நம்பறவங்கள கழுத்தறுக்க முடியாது. இருக்க முடிஞ்சா இரு. இல்லேன்னா போய்ட்டே இரு”

“”ஓகோ.. எனக்கு போக்கிடம் இல்லைன்னு சொல்லி காட்றீங்களாக்கும். பாழாப்போன காதல் வராமயிருந்திருந்தா நானும் இன்னைக்கு ராஜாத்தி மாதிரிதான் இருந்திருப்பேன்”

“”என்னாடீ… என்ன வாய் ரொம்ப நீளுது”

“”பின்ன நான்தான் உங்கள பார்த்து பல்ல இளிச்சேனா? பின்னாடியே தொரத்தினது நீங்கதானே? இப்ப நானுல்ல அனுபவிக்கிறேன். எங்க வீட்டு கொல்லைப்புறம் சைஸ் இருக்குமா இந்த வீடு? அதுவும் மழைப்பேஞ்சா ஒழுகுது. பெத்தவங்க பாத்து கட்டிவைச்சா இப்படி கஷ்டப்பட்டிருப்பேனா”

“”விட்டா பேசிட்டே போவ போலிருக்கு ” எழுந்து வந்து ஓங்கி அறைய, “”உங்களுக்கு மட்டும் தான் அடிக்க தெரியுமா? கேக்க நாதியில்லைன்னு அடிக்கிறீங்களா” கன்னத்தைப் பிடித்தவாறு அடிப்பட்ட வேங்கையாய் கத்த, குழந்தைகள் விழித்துக் கொண்டு அழ, நெருங்கி வந்து அவளைச் சமாதானப்படுத்தினான் வசந்தன். அது என்னவோ அவள் இல்லாமல் அவனுக்கு ஒன்றுமே செய்ய முடிவதில்லை.

அன்றைய சண்டை அத்தோடு முடிந்தது.

வசந்தனும் மாங்குமாங்கென்று தான் உழைக்கிறான். நிரந்தரமில்லாத வேலை, ஓரளவே வருமானம், பெருகிய குடும்பம், ஏறுமுகமான விலைவாசி இதையெல்லாம் அவனால் ஜெயிக்கதான் முடியவில்லை. வறுமையும், கடமையும் இருவரையும் வறுத்தெடுக்க, இப்போதெல்லாம் இருவருக்கும் அடிக்கடி வார்த்தைகள் தடிக்கின்றன.

“”சுபாவோட கிளாஸ் டீச்சர் வரச்சொன்னங்கன்னு போய் பாத்துட்டு வந்தேன். அவளை ஏதோ டான்ஸ்ல சேர்த்திருக்காங்களாம் அதுக்கு டிரஸ் தைக்கணும்னு சொன்னாங்க” – லதா.

“”சரி, விஷயத்தை சொல்லு. எவ்ளோ பணம் கட்டணுமாம்” என்றான் வெடுக்கென்று.

“”பணம்னு சொன்னாலே இப்டி கோவப்பட்டா நான் என்னதான் பண்றது? நமக்குன்னு கொடுத்து உதவ தான் யார் இருக்காங்க?” என்றாள் சுயப்பச்சாதாபத்துடன்.

“”சரி சரி நீ ஒப்பாரி வைக்காதே. எவ்ளோ வேணும்னு சொல்லு.”

“”வர வர நீங்க ரொம்ப கோபப்படுறீங்க, கேக்க ஆளில்லைன்னுதானே எனக்கு இந்த கதி. உங்கிட்ட வாழறதைவிட என் புள்ளங்கள கூட்டிக்கிட்டு எங்கேயாவது போய் சாகறேன்” என்றவாறு விசும்பினாள்.

“”எப்படியெல்லாம் காதலிச்சோம்? எவ்ளோ எதிர்ப்பு? எல்லாத்தையும் மீறி பெத்தவங்களையும், மத்தவங்களையும் விட்டுட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

இப்படி சண்டை போட்டுக்கறதுக்கு தான் ஒண்ணு சேர்ந்தோமா? நம்பள பார்த்து அவங்களல்லாம் எவ்ளோ சாபம் விட்டுருப்பாங்க. அவங்களுக்கு எதிரில் நம்ப ரெண்டுபேரும் சந்தோஷமா வாழ்ந்து காட்ட வேண்டாமா” – அவளிடம் அழுதுவிடும் தொனியில் பேசினான்.

“”எனக்கு மட்டும் இதெல்லாம் புரியாமலா இருக்கு. இதே வயசிலே நாம ரெண்டு பேரும் எப்படி சந்தோஷமா, கஷ்டம்னா என்னான்னு தெரியாம வளர்ந்தோம்.. ஆனா நம்ப குழந்தைங்க அப்படியா வளருதுங்க.. சாதாரண ஸ்கூல்ல படிச்சிக்கிட்டு, அடுத்த குழந்தைங்கள பார்த்து ஏங்கிகிட்டு. என்னால இதெல்லாம் தாங்கவே முடியலங்க”

அழுதாள் லதா.

“”தப்போ, சரியோ நம்பளோட இந்த முடிவு நம்பளோட வாரிசுகளையும் பாதிக்குது. “”அதேதான் நானும் சொல்றேன். நம்மளோட கஷ்டம் தீரணும்னா நானும் வேலைக்கு போறேங்க”

“”காலேஜ் படிப்பையும் பாதியில நிறுத்தியாச்சு. என்ன வேலைக்குன்னு நீ போவ?”

“” நம்ம தெரு கடைசி வீட்டு மாமி, ஜவ்வரிசி தயார் பண்ற ஃபேக்டரி வைச்சிருக்காங்களாம். வேலைக்கு ஆள் தேவைப்படுதாம்.. என்னால வரமுடியுமான்னு கேட்டு அனுப்பியிருந்தாங்க”

“”நீ என்ன சொன்ன?”

“”என் வீட்டுக்காரர் வந்ததும் கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன். பக்கத்து வீட்டக்கா ஸ்கூல் விட்டு வந்ததும் பிள்ளைங்கள பார்த்துக்குறேன்னு சொன்னாங்க. ஏதோ சூபர்வைஸர் வேலையாம். மாசம் அஞ்சாயிரம் சம்பளமாம் நான் போகட்டுமாங்க” அவன் தாடையைப் பிடித்துக் கெஞ்சினாள்.

“”நல்ல இடமா இந்த வேலை செட்டாகுமான்னு மட்டும் பார்த்துக்க. மத்தப்படி என் மகாராணி சொன்னா அதுக்கு அப்பீலே கிடையாது” என்றான்.

அவள் வேலைக்குப் போக ஆரம்பித்தாள். முதலில் குழந்தைகள் செட்டாகாமல் தவித்து, பின் சாயங்காலம் அம்மா வேலை முடிந்து வரும்வரை இருக்க பழகிக் கொண்டார்கள். லதாவின் வேலை நேர்த்தியை பார்த்து விட்டு, அவளுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுத்து, அவளை தனது முழுநேர செகரட்டரியாக ஆக்கிக் கொண்டார் அந்த மாமி.

வீட்டு வேலைகள் மெல்ல வசந்தனின் தலையில் விழ ஆரம்பித்தன. அலுவலக வேலை, வீட்டு வேலை, குழந்தைகள் என சுமைகள் இவன் தோளுக்கு இடம் மாறி கொண்டிருந்தன. ஆனால் நடுத்தர வர்க்க வாழ்க்கை கிடைக்க ஆரம்பித்தது.

குழந்தைகளின் தேவைகளுக்காக இதைப் பொறுத்துக் கொண்டான் வசந்தன்.

சமீப காலமாக அவளுக்கு அலுவலகம் முடிந்து வீடு திரும்ப மணி எட்டாகி விடுகிறது. வசந்தனும் சொல்லி பார்த்து விட்டான்.

“”லதா நான் சொல்லிக்கிட்டேயிருக்கேன் நீ கேட்கவே மாட்டேங்கிற, நீ செய்யறது ஒண்ணும் சரியில்ல”

“”அப்பப்பா இப்பதான் வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு வரேன். வந்தவுடனே ஆரம்பிக்காதீங்க”

“”வாயை மூடு. ஊருஉலகத்தில நீதான் அதிசயமா வேலைக்கு போறியா? வேலைக்கு போற பொம்பளங்களை போய் பாரு. குடும்பத்தையும், கவனிச்சிக்கிட்டு,வேலைக்கும் போய்ட்டும் வர்றாங்க உன்னை மாதிரி வேலை வேலைன்னு பைத்தியமாக திரியல.”

“”அப்படி பைத்தியமா திரியறதாலதான் இன்னிக்கு நாலு பேரைப் போல நாம்பளும் நல்லாயிருக்கிறோம். பசங்கள நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்க முடியுது. நல்ல துணிமணி கட்டிக்க முடியுது”

“”போதும்டீ உன் படிப்பும் துணிமணியும். முதல்ல நல்ல அம்மாவா, நல்ல பொண்டாட்டியா இருக்கப் பாரு. தெனமும் எட்டு மணிக்கு வந்து தூங்கிற பசங்கள எழுப்பி சாப்பாடு கொடுக்கிறதெல்லாம் ஒரு பொழப்பா? நம்ம புள்ளைங்க என்ன படிக்குது எப்படி படிக்குதுன்னு உனக்கு தெரியுமா? பசங்ககிட்ட பாசமா அஞ்சு நிமிஷம் உட்கார்ந்து பேச முடியலை. பசி நேரத்துக்கு சாப்பாடு கொடுக்க முடியலை. பணம் சம்பாதிக்கிறாளாம் பணம்”

அன்றும் அப்படிதான். முதலாளி அம்மாவோடு செல்லில் பேசிக் கொண்டிருந்தாள். “”அரைமணி நேரம் அப்படி என்ன பேச்சு வேண்டியிருக்கு? இப்ப தானே ஆபிஃஸ்லேர்ந்து வந்தே இப்ப சொல்ற வேலையை அங்கே இருக்கும்போது சொல்லமாட்டாங்களாம்மா உங்க முதலாளி அம்மா?” முதலாளி அம்மா என்பதை வேண்டுமென்றே அழுத்திச் சொன்னான்.

“”இந்த வேலையைபத்தி உங்களுக்கு என்ன தெரியும்?” என்றாள் கோபமாக.

“”உன்னோட வேலையைப் பத்தி எனக்கொன்னும் தெரியாது. ஆனா என் குழந்தைங்களோட பசி எனக்கு தெரியும்” என்றான் சுள்ளென்று.

“”உங்க புள்ளைங்களுக்கு பசின்னா, ஒண்ணு நீங்க எதாவது செஞ்சு கொடுங்க. இல்ல கடையில போய் டிஃபனை வாங்கிக் குடுங்க. எல்லாத்துக்கும் என்னையே எதிர்பார்த்துக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்?” என்றாள் எகத்தாளமாக.

பதிலே பேசவில்லை அவன். வேகமாக வெளியேறி சென்றவன், திரும்பும்போது கையில் டிஃபன் பார்சல். சத்தமேயில்லாமல் அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்.

அன்றிலிருந்து இருவருக்குமிடையில் பேச்சு குறைந்து விட்டது. அவளும் அதை பொருட்படுத்துவதாக தெரியவில்லை. பணம் தேடி அலையும்போதும், வசதிகளை பெருக்க ஆர்வம் கொள்ளும்போதும் உறவுகள் சுமையாகி விடுமோ?

“” நாளைக்கு எங்க கம்பெனி விஷயமாக சென்னைக்கு போறேன்.. திரும்பி வர நாலு நாளாகும். குழந்தைகளை பார்த்துக்கோ” என்றான் எங்கோ பார்த்தவாறு.

சென்னையிலிருந்து திரும்பி வந்ததிலிருந்து அவனது நடவடிக்கையில் வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. குடும்ப வாழ்க்கையை நண்பனிடம் பகிர்ந்துக் கொள்ள, அவன் மூலம் குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டது.

“”எதோ ஒரு புதுப்பழக்கம் வந்திருக்கமாதிரி இருக்கு குடிக்கிறீங்க போலருக்கு?” என்றாள் ஒருநாள்.

“”ஆமாம் குடிக்கிறேன் அப்படிதான் குடிப்பேன்” என்றான் பதிலுக்கு.

அவள் அதுகுறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாதது அவனுக்கு ஒருவித வெறுமையைக் கொடுத்தது. உள்ளபடியே இவள் அதிகப்படியாக அறிவும், ஆக்கப்பூர்வமான நிர்வாக திறமையும் கொண்டவள்தானோ. நான்தான் இவளை காதல், கல்யாணம், குழந்தைகள் என்று திசைமாற்றி விட்டேனோ இப்போது முன்பை விட அதிகமாக குடிக்க ஆரம்பித்தான். குடித்து விட்டு தள்ளாடியபடியே வீட்டுக்கு வருவதை வேண்டுமென்றே பழக்கிக் கொண்டான்.

“”இந்த பழக்கத்தை நிறுத்த மாட்டீங்களா? உங்களால அக்கம்பக்கத்திலே எல்லாம் ஒரே அசிங்கமா போவுது” என்றாள் ஆக்ரோஷமாக.

பிரச்சனைகள் சூழும்போது காலச்சக்கரம் நின்றா விடும் பிள்ளைகள் வளர்ந்து விட்டன. லதாவின் சம்பாத்தியத்தில் ஊரின் ஒதுக்குப்புறத்தில் சொந்தமாக ஒரு சிறிய வீடும் வாங்கப்பட்டது. வசந்தன் குடியும் குடித்தனமுமாக நாட்களை தள்ளிக் கொண்டிருக்க, உள்ளே சென்ற குடி இப்போது தனது வேலையை காட்ட ஆரம்பித்தது.

ஒருநாள் வசந்தன் வயிற்றை பிடித்துக் கொண்டு துடிக்க, உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். குடல் முழுவதும் புண்ணாகி விட்டது என்பதை புரியாத மருத்துவப் பெயரில் சொல்லி லதாவுக்கு புரிய வைக்க முயன்று கொண்டிருந்தார் டாக்டர்.

ஒரு வாரம் மருத்துவமனையிலேயே தங்க வேண்டியதாகி விட்டது.

காலையில் எழுந்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, காலை டிஃபன், மதிய சாப்பாடு இரண்டையும் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வருவாள் லதா. டிஃபன் சாப்பிட்டானதும், காலை பதினோரு மணிக்கு அவனது உடல்நிலை குறித்து டாக்டர் ரெகுலர் விசிட் வரும்போது அவரிடம் அக்கறையாக விசாரித்து விட்டு அலுவலகம் செல்வாள். பின்பு இரவு உணவுடன் வந்து, அவனுடன் சிறிது நேரம் இருந்து விட்டு,வீட்டுக்கு திரும்புவாள்.

“”நீங்க இனிமேயும் குடிப்பழக்கத்தை விடலேன்னா அது சுத்தமா உங்க குடலுக்கு நல்லதில்ல மிஸ்டர் வசந்தன்” என்றார் டாக்டர் எச்சரிக்கும் குரலில் டிஸ்சார்ஜ் செய்யும்போது.

“”சரி டாக்டர்” என்றான் தலையை தாழ்த்தியவாறு.

“”நல்லா சொல்லுங்க டாக்டர். எப்பபாரு குடிச்சிட்டு, தள்ளாடிக்கிட்டே வர்றது நல்லாவா இருக்கு.. வளர்ற பிள்ளைங்களை வைச்சிக்கிட்டு, பெத்தவங்க நாமளே இப்படி இருந்தோம்னா, பிள்ளைங்க எப்படி இருக்கும் உடம்பையும் கெடுத்துக்கிட்டு இந்த பழக்கம் என்னத்துக்கு?” என்றாள் லதா ஆற்றாமையாக.

“”லதா, ஒரு வாரம் லீவு போடேன் புள்ளைங்கள கூட்டிக்கிட்டு எங்கேயாவது வெளியிலே போய்ட்டு வரலாம்” என்றான் வசந்தன், மருத்துவமனையிலிருந்து வந்தததற்கு பின்.

“”இந்த வாரம் எங்க கம்பெனிக்கு ஐஎஸ்ஓ சர்டிபிகேட் கொடுக்கிறது சம்பந்தமா ஆய்வுக்கு வர்றாங்க நான் இல்லைன்னா எங்க மேடம்க்கு கையும் ஓடாது..காலும் ஓடாது” என்றாள் லதா.

“”லதா, இன்னைக்கு ஒருநாள் லீவு போடேன் குழந்தைங்க ஸ்கூல் விட்டு வர்றதுக்குள்ளே, நாம ரெண்டுபேரும் கோயிலுக்கு போய்ட்டு வருவோம்” என்றான் ஏக்கமாக ஒருநாள்.

“”என்ன விளையாடுறீங்களா.. எல்லாம் லீவுநாள்ல பார்த்துக்கலாம்”- லதா.

அலுவலகம், வீடு, குடும்பம் என இடையறாது ஓடிக்கொண்டிருப்பளிடம் தனியாக ஒருசில நிமிடங்கள் கூட அவனால் பேச முடிவதில்லை.

ஒருநாள் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய வசந்தனின் நடையில் சிறிது தள்ளாட்டம்.

“”என்னங்க.. குடிச்சீங்களா?” என்றாள் கோபமாக லதா.

“”என்ன அதிசயமா இருக்கு மேடம். ஆபிஸ்லேர்ந்து சீக்கிரம் வந்துட்டீங்க போலருக்கு” என்றான் வசந்தன் நக்கலாக.

“”பேச்சை மாத்தாதீங்க நீங்க திருந்தவே மாட்டீங்களா?”

“”ஏன்டீ திருந்தணும்? அன்பா பக்கத்தில உட்கார்ந்து பேச பொண்டாட்டி இருக்காளா?அப்பா ஏன் லேட்டுன்னு காலை கட்டுறதுக்கு சின்ன குழந்தைங்கதான் இருக்கா? அதுங்களும் வளர்ந்துடுச்சு. உனக்கும் ஆபிஸ் வேலை இருக்கு. நான் என்னத்துக்கு எல்லாத்துக்கும் பாரமா” என்று எரிச்சலாக பேசிய கணவனை அவள் சமாதானப்படுத்தவேயில்லை.

நாளாக ஆக குடிப்பழக்கம் அதிகமாக, இதோ இன்று மாலைகளுக்கு மத்தியில் படுத்துக் கிடக்கிறான் வசந்தன்.

“”வாய் விட்டு அழுதுடு லதா. அப்பதான் துக்கம் தொலையும்” அலுவலக சகாக்கள் சொன்னார்கள்.

அவளை மடியில் சாய்த்துக் கொண்டாள் முதலாளி அம்மா..

“”ஓங்கி அழுதுடு லதா. தானா குடிச்சு தானா அழிஞ்சு போனாரு. நீ என்ன செய்வே? குடிக்காதீங்கன்னு சொல்லத்தான் சொன்னே… கேட்டாரா மனுஷன் கண்ணுக்கு ஒசந்த ரெண்டு புள்ளைங்க, அழகான ஒரு பொண்டாட்டி தனக்கு இருக்காளேன்னு கொஞ்சமாவது நெனைச்சு பார்த்திருக்கலாம் குடி, குடின்னு மனுஷன் குடியை கட்டிக்கிட்டு அழுதாரே இன்னிக்கு அனுபவிக்கிறது யாரு.. நீங்க மூணு பேரும்தானே?”

ஆறுதல் சொன்ன முதலாளி அம்மாவின் மடியிலிருந்து படக்கென்று எழுந்தாள். தன் மேல் வைத்திருந்த அவளது கையை வெடுக்கென்று தட்டி விட்டாள். கணவனின் உடலைப்பார்த்து பெருங்குரலெடுத்து அழலானாள். இவ்வளவு நேரம் வெறித்திருந்த அம்மா திடீரென அழுவதை புரியாமல் பார்த்தனர் சுபாவும், சுரேஷும். “”காசு, வேலைன்னு உன்னை மறந்து போனேனே” என்ற அவளது அழுக்குரல் தூரத்தில் வந்துக்கொண்டிருந்த அவளது தாய் தந்தையர்க்கும் கேட்டது.

– ஜனவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *