துரையின் யோசனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 6, 2023
பார்வையிட்டோர்: 1,908 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று ஞாயிற்றுக் கிழமை. ஆபீஸ் அறையில் அரைத் தூக்கமும் விழிப்புமாக நாற்காலியில் சாய்ந்திருந்த துரைசாமியின் காதில் ‘போஸ்ட்!’ என்ற குரல் விழுந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் சீதா கைவளையல்கள் குலுங்க, சர சரவென்று வாசற் பக்கம் போவதும் கேட்டது. கடிதம் அவனுக்கு வந்திருந்தால், சீதா விலாசத்தைப் பார்த்துவிட்டு அவனிடம் கொடுத்துவிட்டிருப்பாள். சிறிது நேரம் அவளுக்காகக் காத்திருந்து அவள் வராமல் போகவே, துரைசாமி மறுபடியும் தூக்கத்தில் ஆழ்ந்தான்.

சீதா, தபாலில் வந்திருந்த அந்தக் கடிதத்தைப் பல தடவைகள் படித்தாள். ஒவ்வொரு தரமும் அவள் அதைப் படித்தபோது அளவுக்கு மீறிய சந்தோஷத்தை அடைந்தாள். அதில் நேரமாகிவிட்டதை உணர்ந்து, பரக்கப் பாக்க அடுப்பை மூட்டிக் காபி போட்டாள். அதையும், கடிதத்தையும் எடுத்துக்கொண்டு ஆபீஸ் அறைக்குள் சென்று காபியை மேஜைமேல் வைத்துவிட்டுத் துரைசாமியை ஒரு புன்சிரிப்புடன் அணுகினாள்.

“இன்றைக்கு என்ன காபி இவ்வளவு லேட்?” என்றன் துரைசாமி ஒரு மாதிரியாக. அவள் வெட்கம் கலந்த சிரிப்புடன், “லேட்தான் ஆகிவிட்டது. காரணம் இந்தக் கடிதந்தான்” என்று சொல்லிக் கடிதத்தை அவனிடம் நீட்டினாள்.

“அன்புள்ள சீதாவுக்கு,

உன்னிடமிருந்து கடிதம் வந்து ரொம்ப நாள் ஆகிறது. ஒரு வேளை உன் கணவருடன் புதுக் குடித்தனம் ஆரம்பித்தபிறகு சினேகிதியை மறந்திருப்பாய்! எனக்கு இந்தப் பள்ளிக்கூட உபாத்தியாயினி வேலை அலுத்து, ஒரு மாதம் லீவு எடுத்துக் கொண்டேன். பதினைந்து நாட்கள் இங்கேயே ஆகிவிட்டன. மீதிப்பதினைந்து தினங்களையும் உன்னுடன் கழிக்கலாம் என்று தீர்மானம் பண்ணி, நாளை இரவு மெயிலில் புறப்படுகிறேன்.

உன் அன்பை மறவாத,
ரோஸ் மேரி”.

“ஓஹோ! இதனால்தான் காபி லேட்டோ?” என்றான் துரைசாமி.

“ஆமாம்.”

“ஆமாமாவது, ஆமாம்! நீயும் உன் ரோஸ் மேரியும்! தலை தீபாவளிக்கு, நானும் அம்மாவும் வந்திருந்த போது இவளோடு சதா குலாவிக்கொண்டு என்னை நீ அவமதித்தது போதாதா? இங்கே வேறு வருகிறாளோ அவள்!”

சீதா கடிதத்தை ரோசத்துடன் எடுத்துக்கொண்டாள். அங்கிருந்து பதில் பேசாமல் பின்கட்டுக்குப் போய்விட்டாள்.


நேற்றுத்தான் நடந்ததுபோல் இருக்கிறது. புதுச் சேரியில் ரோஸ் மேரியின் வீட்டாரும், சீதாவின் பிறந்தகத்தாரும் பக்கத்து வீடுகளில் குடியிருந்தார்கள். சீதாவுக்கும், ரோஸ் மேரிக்கும் அநேகமாக ஒரே வயது தான் இருக்கும். இருவரும் கத்தோலிக்க ‘கான்வென்ட்’ ஒன்றில படித்துவந்தார்கள், தூங்குகிற சமயம் தவிர இருவரும் இணைபிரிவதில்லை. சீதாவின் பாட்டி இரண்டொரு தரம், “என்னடி உனக்கு அந்தப் பெண்ணோடு இழைசல் வேண்டியிருக்கு?” என்று பேத்தியைக் கண்டித்தாள். சீதா அதைக் காதில் போட்டுக்கொள்ள வில்லை. இருவர் மனத்திலும் நட்பின் விதை ஆழமாக ஊன்றிவிட்டது. அதை யாராலும் அகற்ற முடியவில்லை. ரோஸ் மேரி பன்னிரண்டு வயதாக இருக்கும்போது அவள் தாயார் இறந்து போனாள். தகப்பனார் மறு விவாகம் செய்துகொண்டார். இளைய தாயார், மேரி படித்தது போதும் என்று வீட்டு வேலைகளைச் செய்ய நிறுத்திக் கொண்டு கேட்பவர்களிடம், “எங்களுக்குப் படிக்க வைக்கப் பணம் இல்லை” என்று சொல்லிவந்தாள்.

சீதாவுக்கு ரோஸ் மேரி இல்லாமல் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. அவள் தன் அப்பாவிடம் கெஞ்சி அழுது, ரோஸ் மேரிக்கு மாதம் மாதம் சம்பளம் கட்ட ஏற்பாடு செய்தாள். இதனால் ரோஸ் மேரிக்குச் சீதாவிடம் அன்பு அதிகமாயிற்று. சீதாவின் தாயாரிடம், “அம்மா! நீங்கள் தான் எனக்குத் தாயார்!” என்று சொல்லி, இறந்து போன தன் தாயாரை நினைத்துக் கண்ணீர் வடிப்பாள், அவள். அந்தப் பெண்ணின் நல்ல குணத்தினால். ஏதாவின் குடும்பத்தாருக்கு அவளிடம் மதிப்பு உண்டாயிற்று.

“ரோஸ் மேரி! நாங்கள் வேறு எங்கேயாவது போனாலும் நீ படிப்பை நிறுத்தாதே. சீதாவின் அப்பா உனக்கு ரூபாய் அனுப்புவார். கவலைப்படாதே, அம்மா” என்று சீதாவின் தாயார் அவளைத் தேற்றுவாள்.

சீதாவின் படிப்பு முடியக் காரணம் ஒன்று ஏற்பட்டது. பெரிய இடத்துப் பிள்ளை ஒருவன் சீதாவின் அழகுக்காகவே அவளைக் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டான். கல்யாணத்தை வியாஜமாக வைத்துக்கொண்டு கிதாவைக் ‘கான்வென்’டிலிருந்து நிறுத்திவிட்டார்கள்.

“கல்யாணமாகி நீ உன் புருஷனுடன் போய்விட்டால் என்னை மறந்துவிடுவாயோ சீதா?” என்று கேட்பாள் ரோஸ் மேரி.

“இங்கே பாட்டிக்குப் பயப்படுகிற மாதிரி ஆத்துக்காரருக்கு நான் ஒன்றும் பயப்படமாட்டேன். எனக்கு அவரிடத்தில் செல்வாக்கு உண்டு, தெரியுமா?” என்பாள் சீதா பெருமையாக.

சீதாவுக்கும் துரைசாமிக்கும் அந்த வருஷம் கல்யாணம் நடந்தது. ரோஸ் மேரி தன் தோழிக்கு அழகிய பேனா ஒன்றைப் பரிசாக அளித்தாள். தலை தீபாவளிக்குத் தான் வரப் போவதாகவும், அவளுக்கு என்ன மாதிரிப் புடைவை வேண்டும் என்றும் துரைசாமி சீதாவை எழுதிக் கேட்டிருந்தான். “பார்த்தாயா, ரோஸ்? என் கணவர் என்னிடம் எவ்வளவு சலுகை காட்டுகிறார்! நீ என்னவோ சொன்னாயே?” என்று சொல்லிச் சந்தோஷப்பட்டாள் சீதா.

தீபாவளிக்குத் துரைசாமியும் அவன் தாயாரும் வந்தார்கள். நாட்டுப் பெண்ணுக்கு வேளைக்கு ஒரு டிரஸ் செய்து பார்க்கவேண்டுமென்று மாமியார் ஆசைப்பட்டாள். அந்தச் சமயங்களில், “இருங்கள் அம்மா, என் சிநேகிதிக்கு இந்தப் புடைவையைக் காட்டிவிட்டு வந்து விடுகிறேன்” என்று புடைவையை எடுத்துக்கொண்டு ஓடுவாள் சீதா. அங்கே போனால் இருவரும் பேச்சில் லயித்து விடுவார்கள்.

இந்த விஷயம் சீதாவின் மாமியாருக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை. மாமியார் விஷயமாவது வேறு. துரைசாமி எப்பொழுதும் சீதா தன்னுடனேயே பேச வேண்டும். தன் எதிரிலேயே இருக்கவேண்டும் என்று விரும்பினான். “ஓடி ஓடிப் போய்விடுகிறாயே? கொஞ்சம் தான் என் பக்கத்தில் உட்காரேன்” என்று சீதாவைப் பார்த்துச் சொல்வான் துரைசாமி.

“எங்கேயும் ஓடிப் போகவில்லை. என்னுடைய சிநேகிதி ரோஸ் மேரியுடன்தான் பேசிக்கொண்டிருந்தேன். உங்களுடன் வந்துவிட்டால் அவளுடன் தினம் தினம் பேச முடியுமா?” என்று கேட்டாள் சீதா.

இவ்விதவாக, துரைசாமிக்கு ரோஸ் மேரியிடம் ஒரு மாதிரியான கோபமும் வெறுப்பும் ஏற்பட்டிருந்தன. அவள் வரப்போகிறாள் என்று கேட்டதும், அவை இன்னும் அதிகமாயின.


மறு தினம் காலையில் ரோஸ்மேரி வந்து சேர்ந்தாள். சிநேகிதிகள் இருவரும் சந்தோஷம் தாங்காமல் ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்கள். சீதாவை ரோஸ் மேரி அன்புடன் அணைத்து, ‘சீதா! ரொம்பவும் மாறிவிட்டாயே; கொஞ்சம் பெருத்துக்கூட இருக்கிறாயே! உன் குறும்புத்தனம் எப்படிப் போயிற்று?” என்று சொல்லிச் சொல்லி ஆனந்தப்பட்டாள்.

“நீதான் இளைத்திருக்கிறாய்! காலத்தில் உனக்குக் கல்யாணம் பண்ணிக்கொள்வதற்கு என்னவாம்?” என்றாள் சீதா.

இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது துரைசாமி அங்கே வந்தான்.

ரோஸ்மேரி எழுந்து நின்று கை கூப்பி நமஸ்கரித்தாள்.

“சௌக்கியமாக இருக்கிறீர்களா?” என்று விசாரித்தாள்.

“ஹும்” என்று ஒரே வார்த்தையில் நமஸ்காரத்துக்கும் கேள்விக்கும் பதில் சொல்லிவிட்டுப் போய்விட்டான் அவன்.

அன்று மாலை சீதாவும் ரோஸ்மேரியும் சேர்ந்து வெளியே உலாவப்போனார்கள்; படித்தார்கள்; பழைய நினைவுகளைக் குறித்துப் பேசினார்கள். இவர்களைப் பார்த்துத் துரைசாமிக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. ‘இந்தச் சீதாவை நாம் நன்றாக மட்டந் தட்டவேண்டும்” என்று தீவிரமாக யோசித்தான்.

‘இவளுக்குச் சிநேகிதி இருக்கிற மாதிரி நமக்கும் சிநேகிதன் இருக்கிறான் என்று சீதாவுக்குக் காண்பிக்க வேண்டும்’ என்று யோசித்து மண்டையைக் குழப்பிக் கொண்டதில், அவனுடன் காலேஜில் படித்த நண்பன் ஜோஸப் பின் நினைவு வந்தது. உடனே அவனை ஒரு வாரம் லீவில் வரும்படி கடிதம் எழுதிப் போட்டுவிட்டான்.

“உன்னைப்போன்ற ஒரு நண்பனோடு கொஞ்சகாலம் இருந்தால்தான் எனக்கு வந்திருக்கும் வியாதி தீரும் என்று டாக்டர் சொல்லுகிறார். மனோ வியாதிக்கு மருந்து வேறு என்னப்பா இருக்கிறது? ஒரு வாரமாவது நீ வந்து இங்கே தங்கிவிட்டுத்தான் போகவேண்டும்” என்று கடிதத்தில் பயமுறுத்தி இருந்தான்.

ஜோஸப், கடிதத்தைப் படித்துவிட்டு நண்பனைப் பற்றிப் பயந்துகொண்டே மறுநாள் வந்துசேர்ந்தான். அவனைக் கண்டதுமே சீதாவுக்குத் திடுக்கிட்டது.

“இவர் வரப்போகிறார் என்று எனக்குச் சொல்லவே இல்லையே நீங்கள்!” என்று கேட்டாள்.

“ஆமாம், அதற்கென்ன இப்போது? குஷியாகக் கொஞ்ச நாள் இருக்கவேண்டும் என்று வரவழைத்தேன்” என்றான் துரைசாமி ஒரு மாதிரியாக.

துரைசாமியும் ஜோஸப்பும் பேசினார்கள்; ஊர் சுற்றினார்கள்.

“ஏண்டா துரை! வீட்டில் யாரோ ஒரு பெண் வந்திருக்கிறாளே, அவள் யார்? அவளுக்கும் என்னுடைய மதந்தான்போல் இருக்கிறதே?” என்று ஜோஸப் மெள்ளக் கேட்டான்.

“யாரோ என் மனைவியின் சிநேகிதியாம்!” என்றான் துரைசாமி பிடிகொடாமல்.

ரோஸ் மேரியும் சீதாவிடம் ஜோஸப்பைப் பற்றிக் கேட்டாள்.

“இருக்கட்டுமே! இவர் சிநேகிதனுடன் பேசுவதால் எனக்கு என்ன குறைந்துவிட்டதாம்?” என்று எண்ணினாள் சீதா.

ரோஸ் மேரியும் ஜோஸப்பும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானார்கள். ரோஸ் மேரியுடன் ஜோஸப் பேசுவதைப் பார்த்ததும் துரைசாமிக்குப் பொறாமை உண்டாயிற்று.

“ஏண்டா! ஊரிலிருந்து என்னுடன் பேச வந்தாயா? அவளுடன் குலாவ வந்தாயா? அவள் எதிரிலேயே எப்போதும் இளித்துக்கொண்டு நிற்கிறாயே!” என்றான்.

“இதற்குக்கூடவா பொறாமை உனக்கு? அவள் அப்படி ஒன்றும் கெட்டவளில்லை, தெரியுமா?”

‘ஹோ! இவ்வளவு தூரம் வந்துவிட்டதா?ஹும்!’ என்று பெருமூச்சுவிட்டான் துரைசாமி.


ஒரு வாரம் சென்றது.

ஒரு நாள் துரைசாமி சீதாவைப் பார்த்து, “உன் சிநேகிதியைக் காணோமே, எங்கே?” என்று கேட்டான்.

“உங்கள் சிநேகிதர் எங்கே? அவரைக்கூடக் காணோமே? குடும்ப விஷயமாகக்கூட உங்களுடன் என்னைப் பேசவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தாரே?”

“உன் சிநேகிதிமட்டும் என்ன? பத்து நாட்களாக உன்னுடனேயே சுற்றிக்கொண்டு இருந்தாளே, ஏதடா வீட்டில் ஒரு மனுஷன் இருக்கிறானே என்றுகூட இல்லாமல்!”

“அது எப்படியாவது போகட்டும். இருவருக்கும் கல்யாணத்தை நடத்திவிடுவதுதான் உசிதம் என்று எனக்குப் படுகிறது.”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.


ஜோஸப்புக்கும், ரோஸ் மேரிக்கும் அந்த லீவு முடிவதற்குள் விவாகம் நடந்தது. இருவரும் துரைசாமி தம்பதிகளுககுப் பேசுவதற்கு நிறைய அவகாசம் அளித்துவிட்டு, ‘தேன்மதி’யைக் கழிக்க, பங்களூருக்குப் புறப்பட்டுப் போனார்கள்.

– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *