வருவாள், காதல் தேவதை…

2
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 20, 2024
பார்வையிட்டோர்: 7,180 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15

அத்தியாயம்-6 

ஒரு ஆண் உலகிற்கே அரசனாக இருப்பது பெருமையல்ல. அவன் ஒரு பெண்ணின் கதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்வதே பெரிய விஷயம். -இங்கர்சால் 

“நீ எதுக்கு சுஜி இவ்ளோ டென்ஷனாறே? தர்ட் பிரைஸ்னா ஏன் மட்டமா நினைக்கற ஏதோ ஒரு பரிசு கிடைச்சிருக்கு இல்ல? அப்பறம் என்ன?” ஆகாஷ் அவளை சமாதானப்படுத்த முயன்றான். 

“இல்ல ஆகாஷ். அவங்கள்ளாம் சீட் பண்ணிட்டாங்க. முதல் இரண்டு பரிசு வாங்கின டிஸைன்களை விட என் டிஸைன் நல்லாவே இருந்துதுன்னு எனக்கே தெரிஞ்சுது. அவங்க ஜட்ஜ்மென்ட் சரியில்லதான்.” 

“அப்டியெல்லாம் சொல்லாத. அவங்க பார்வைல உன் டிஸைனை விட அந்த டிஸைன் ஏதோ ஒரு விதத்துல இன்னும் கூடுதலா அட்ராக்ட் பண்ணியிருக்கலாம். உனக்கு பரிசு கிடைக்கலங்கறதுக்காக ஜடஸ்மென்ட்டை குத்தம் சொல்றது தப்பும்மா. கோபத்தை விட்டுட்டு அந்த டிஸைன்ஸ் எதனாலமுதல் பரிசை வாங்கிச்சுன்னு யோசி. அடுத்த முறை முதல் பரிசு வாங்க இன்னும் எப்டி அழகா டிஸைன் பண்ணலாம்னு பாரு. அதை விட்டுட்டு நடந்து போன விஷயத்தையே நினைச்சுக்கிட்டு இப்டி அப்ஸெட் ஆய்ட்டா மேற்கொண்டு எதுவுமே சாதிக்க முடியாம போய்டும். ஸோ.. டென்ஷனை விட்டுட்டு கிளம்பு. நாம சிட்டி முழுக்க கார்ல சுத்தப் போறோம்.” 

“நான் தான் தோத்துட்டேனே.எப்டி உங்களோட வரமுடியும்?” 

”என்னைப் பொறுத்தவரை இது தோல்வி இல்ல. நீயும் ஒரு பரிசு வாங்கியிருக்க இல்ல? ஸோ… நாம போறோம். ஸ்பென்சர் கிட்ட வெயிட் பண்றேன். அரைமணில பளிச்சுனு வந்துசேரு. சரியா?” ஆகாஷ் போனை வைத்துவிட்டு எழுந்தான். தன் அலுவலக அறையை ஒட்டியிருந்த டாய்லட்டிற்குச் சென்று முகம் கழுவித் துடைத்து தலையை சரி செய்து கொண்டான். வாசனை பவுடரை லேசாய் முகத்தில் பூசி கர்ச்சிப்பால் துடைத்துக் கொண்டு பிரெஷ்ஷாக வெளியில் வந்தான். இன்டர்காமில் தன் பி.ஏ.வை அழைத்தான். அவசரமான சில வேலைகளை கொடுத்து முடித்து வைக்கச் சொல்லி விட்டு தன் கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். 

ஸ்பென்சரில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியவன் சற்று தூரத்தில் யாருக்காகவோ காத்திருப்பது போல் நின்றிருந்த சரண்யாவைப் பார்த்ததும் வியப்போடு அருகில் சென்றான். 

‘ஹலோ..இதான் உன் காலேஜா..?” அவன் குரல் கேட்டு திரும்பியவள் முகம் மலர சிரித்தாள். 

“இதான் உங்க ஆபீஸா?” 

”சம்பாதிக்கற வயசுல சுத்தலாம். படிக்கற வயசுலயே சுத்தினா எப்டி?” 

‘இதானே வேண்டாங்கறது! இங்க வரச் சொன்னதே நீங்கதானே! அப்பறம் என்ன அட்வைஸ்?” 

”நானா…? நா எப்பொ?” விழி பிதுங்க அவளைப் பார்த்தான். 

“நீங்களேதான் நேத்து ராத்திரி என் கனவுல.” 

“மைகாட்!” அவன் சட்டென்று சிரித்தான். 

“பயந்துட்டீங்களா?” 

“பயப்படல. பிரம்மிச்சுட்டேன். அதுசரி என்ன இங்க நிக்கற?” 

“என் பிரண்டோட வந்தேன். என்னை நிக்க வெச்சுட்டு தோவந்துடறேன்னு போனா. இன்னும் காணும். ஆமா நீங்க எங்க இங்க?” 

“நானும் ஒரு பிரண்டுக்காகத் தான் வெயிட் பண்றேன்னு வெச்சுக்கோயேன்.” 

“வீட்டுக்கு வரேன்னு சொன்னதா ஞாபகம்.” 

“கண்டிப்பா வரேன். நேரம் கிடைக்கல.” 

”நேரம் கிடைக்காது. நாமதான் ஏற்படுத்திக்கணும். எங்க வீட்டுக்கு வரது கௌரவக் குறைச்சல்னு நினைச்சா வர வேணாம்.” 

“இதுக்கு பேர்தான் தாழ்வு மனப்பான்மைங்கறது. உங்க வீட்டைப் பத்தி நீயே மட்டமா நினைக்கறேன்னு அர்த்தம்.” அவள் அடிபட்டாற்போல் அவனைப் பார்த்தாள். அவன் சொல்வது சரிதான் என்பது போலிருந்தது. தான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது என்று தோன்றியது. தன் பேச்சு தனக்கே வெட்கம் தர அவள் மௌனமாய் தலை குனிந்தாள். 

“பரவால்ல விடு. நாளைக்கு நிச்சயமா வரேன். உங்க வீட்லதான் டிபன். ஆலு சப்பாத்தி செய்யத் தெரியமா? தெரிஞ்சா பண்ணி வை. வந்து ஒரு வெட்டு வெட்டறேன். சாப்டுக்கிட்டே நிறைய பேசலாம்.. சரியா?” 

அவன் கிளம்பினான். தூரத்தில் சுஜிதா வந்து கொண்டிருந்ததைப் பார்த்து விட்டான். போகும் வழியிலேயே அவளை ஏற்றிக் கொள்ளும் எண்ணத்தோடு சரண்யாவிடம் விடை பெற்றுக் கொண்டு வேகமாக வந்து காருக்குள் அமர்ந்து அதை கிளப்பினான். 

அவன் செல்வதையே இமைக்காமல் பார்த்தாள் சரண்யா. ஆலு சப்பாத்தி எப்படி செய்வது? யாரிடம் கேட்டால் தெரியும் என்று யோசித்தாள். 

”ஏய் சரண் என்னயா யோசனை? நா வந்து அஞ்சு நிமிஷமாச்சு.”

தோழியின் குரல் கேட்க திடுக்கிட்டு மீண்டாள். ஒண்ணுல்ல வா போலாம் என்றபடி நடந்தாள். 

பிரிட்டிஷ் கவுன்சில் போய் சில புத்தகங்கள் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தவளுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அப்பா சீக்கிரமே வந்திருந்தார். சரண்யா ஆகாசத்தை நிமிர்ந்து பார்த்தாள். 

“மழையெல்லாம் வராது உள்ள வா” 

”என்னப்பா விஷயம்? உடம்புக்கொண்ணுமில்லையே”. 

“அதெல்லாம் இல்ல. மூணு மணிக்கு முதல் முதலா ஒரு ஷுட்டிங் போறேன்.” 

”அடி சக்கை! யார் படம்? யாரெல்லாம் நடிக்கிறாங்க?” சரண்யா உற்சாகமாக கேட்டாள். 

“அதெல்லாம் தெரியாது. ஏவி.எம். முக்கு வரச் சொல்லி என் பிரண்டு சொல்லியிருக்கான். என் போட்டோஸ் பார்த்து டைரக்டரும் புரொடியூசரும் ஓகேன்னு சொல்லிட்டாங் களாம். நாலஞ்சு சீன்ல தலை காட்டறாப்பல சின்ன வேஷம்தான்னு சொன்னான்.” 

“பாத்துப்பா கூட்டத்தோட கூட்டமா உன் தலைய மட்டும் காட்டிட்டு விட்ரப் போறாங்க.” 

”கிண்டலா.. பார்த்துக்கிட்டேயிரு. இன்னும் ரெண்டு வருஷத்துல நேஷனல் அவார்டு வாங்கிக் காட்டறேனா இல்லையான்னு.” 

“வாழ்த்துக்கள்ப்பா..உங்கிட்ட ஒண்ணு கேக்கணுமே.” 

”சொல்லு.” 

“ஆலு சப்பாத்தி பண்ணத் தெரியுமா உனக்கு?” 

“ஆலு சப்பாத்தி தானே? சாப்ட தெரியும். எதுக்கு கேக்கற?”

“சுத்த வேஸ்ட்டுப்பா நீ! இதெல்லாம் தெரிஞ்சுக்காம எப்டி குடித்தனம் பண்ணின நீ?” 

“அது சரி.. நாளைக்கே நா ஆலு சப்பாத்திபண்ண கத்துக்கறேன். குடித்தனம் பண்ண நீ ஒரு நல்ல பொண்ணா ஐஸ்வர்யா ராய் கணக்குல பார்.” 

“ஓஹோ.. கிழவனுக்கு இப்டி ஒரு ஆசை வேற இருக்கோ?”

“அதிருக்கட்டும். ஆலு சப்பாத்தி யாருக்கு?” 

“வேற யாருக்கு.. ஆகாஷ் வராராம் நாளைக்கு இங்க. ஆலு சப்பாத்தி, சப்ஜின்னு அவரே மெனுவும் கொடுத்துட்டார்.” 

“அப்டி போடு! இப்ப என்ன பண்ணப்போற?” 

“என்ன பண்ண சொல்லு” 

”சத்யாக்கு தெரிஞ்சிருக்கும். போய் கேட்டுக்கிட்டு வாயேன்.” 

”அய்யோடா! இதுக்கோசரம் அண்ணா நகர் வரை யார் அலையறது”. 

“அப்பொ விடு. நாளைக்கு ஆகாஷ் வந்தா அவனையே பண்ணி சாப்டச் சொல்லு. இப்பொலேர்ந்தே பிராக்டிஸ் பண்ணிண்டாதானே பின்னாடி சௌகர்யமார்க்கும்!”

“ரொம்ப மோசம்ப்பா நீ!”

“டி.வி.போட்டுப் பாரேன் பெண்ணே! ஏதாவது சானல்ல யாராலது ஆலு சப்பாத்தி பண்ணிட்டிருந்தாலும் இருக்கலாம் இல்ல?” 

“அப்பா சொல்ல சரண்யா அடுத்த நிமிடம் டி.வி.யை ஆன் செய்தாள். வரிசையாய் சானல்களை மாற்றினாள். சோதனை மாதிரி எந்த சானலிலும் யாரும் சமைக்கவில்லை. 

“இப்பொ என்னப்பா செய்யலாம்?” 

“நீ எது பண்ணினாலும் அதுதான் ஆலு சப்பாத்தி! அடிச்சு சொல்லிடு. அவனுக்கு மட்டும் தெரியவா போறது?” 

“என்ன பெரிய ஆலு சப்பாத்தி. நானே புது மாதிரியா பண்றேன். நீ போய் கோதுமை மாவும், உருளைக் கிழங்கும் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு கிளம்பு. ஒரு கை பார்த்துடறேன். அதென்ன பெரிய பிரும்ம வித்தையா? வராம போக.” 

”என்னமோ செய்! ஆனா வந்தவனை ஓட ஓட விரட்டிடாதே உன் சப்பாத்தியால…” 

”மாட்டேன். கட்டிப் போட்டுட்டுதான் சப்பாத்தியே கொடுப்பேன்”. 

“பி வேர் ஆஃப் ஆலு சப்பாத்தின்னு வாசக் கதவுல எழுதி வெச்சுடவா?” 

“கிண்டலடிக்காம போய் வாங்கிண்டு வாப்பா’ சரண்யா அப்பாவை கடைக்கு அனுப்பி விட்டு உடை மாற்றிக் கொண்டாள். பழைய மாகஸீன்களை எடுத்து புரட்டினாள். ஒரே ஒரு பத்தகத்தில் ஆலு பரோட்டா என்று போட்டிருக்க அவசரமாய் படித்தாள். பரோட்டாவுக்கு பதில் சப்பாத்தி! செய்முறை ஒரே மாதிரி தானே இருக்கும் என்று நினைத்தாள். தானே ஒரு புது செய்முறையை மனசுக்குள் ஏற்படுத்திக் கொண்டாள். கொஞ்சமாய் மாவு பிசைந்து ஒரே ஒரு உருளைக்கிழங்கு வேக வைத்து ஐந்தே ஐந்து சப்பாத்தி செய்து பார்த்தாள். டேஸ்ட் பார்த்ததில் நன்றாகவே இருப்பதாகத் தோன்றியது. டிரையல் பார்த்தாகிவிட்டது. நாளைக்கு இதைவிட நன்றாக செய்து விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. 

அப்பா வர இரவு பத்து மணியாயிற்று. 

“என்னப்பா நேஷனல் அவார்டு கிடைச்சுடுமா? உன் முதல் நாள் அனுபவம் எப்டி?” 

”நீ வேறம்மா.போனதுலேர்ந்து மேக்கப் போட்டு ஒரு பக்கமாக உக்கார்ந்ததுதான் மிச்சம். இதோ இதோன்னு சொன்னாங்களே தவிர என் ஷாட்ஸ் எடுக்கவேல்ல. ஹீரோயின் டயர்டா ஆய்ட்டாங்களாம். டைரக்டர் பேக் அப் சொல்லிட்டார். இனிமே நாலு நாள் கழிச்சுதான் இந்த காட்சியை எடுப்பாங்களாம். ஆட்டோ பிடிச்சு போனதுதான் மிச்சம். இருபத்தி அஞ்சு ரூபா வேட்டு!” 

“பரவால்ல விடு. எல்லாம் நல்லதுக்குன்னு நினைப்போம்! இந்த ஆலு சப்பாத்தி எப்டியிருக்குன்னு சொல்லு.” 

“அட… பண்ணியே ஆச்சா? இப்பவே பண்ணி வெச்சுட்டயே! நாளைக்கு ஊசிப்போய்டாது?” 

”குசும்புப்பா உனக்கு! இது டிரையல் சப்பாத்தி!”

“தைரியமா சாப்டலாமா?” 

”அறுக்காதப்பா. எப்டியிருக்குன்னு சொல்லு.”

அவர் ஒரு விள்ளல் எடுத்து சாப்பிட்டார்.

“பரவால்லயே… நல்லாவே இருக்கு!” 

அவள் முகம் மலர்ந்தது. இரவு முழுக்க தூக்கம் வரவில்லை. எப்போதுடா பொழுது விடியும் என்றிருந்தது. அவனோடு என்னவெல்லாம் பேச வேண்டும் என்று மனசுக்குள் ஒத்திகை பார்த்தாள். அதுசரி ஒத்திகை பிரகாரம் இவள் பேசலாம். அவன் எப்படி பேசுவான்? இவள் ஒத்திகை பார்ப்பது அவனுக்கு தெரியுமா என்ன? சிரிப்பு வந்தது அவளுக்கு புரண்டு புரண்டு படுத்து உறங்காமலேயே பொழுதைத் தள்ளினாள். 

“எங்க போலாம் சொல்லு” காரை மெதுவாக ஓட்டியபடி அவளிடம் கேட்டான் ஆகாஷ். 

‘எங்கயோ போங்க. உங்க இஷ்டம்” விட்டேற்றியாகச் சொன்னாள் சுஜிதா. 

”என்னடா கண்ணா இவ்ளோ விரக்தி? இன்னும் அந்த மூணாவது பரிசை மறக்கலயா? கமான் சுஜி போரடிக்காதே, வாழ்க்கைன்னா இப்டித்தான் ஜெயிச்சுக்கிட்டே இருக்கறதுல என்ன சுவாரசியம் இருக்கும்? ஒரு முறைதோக்கணும், மறுபடியும் ஜெயிக்கணும். சுத்தி சுத்தி வர ராட்டினத்தை விட மேலும் கீழும் ஏறி இறங்கி சுத்தற ஜெயன்ட் வீல்தானே த்ரில்லிங்கா இருக்கும்! அதுல சுத்தர த்ரில்லைத்தானே எல்லாரும் விரும்புவோம்! அதே மாதிரி வாழ்க்கையைக் கூட ஜெயன்ட் வீல் மாதிரிதான் நினைக்கணும். ஏற்றத்தாழ்வுகளை ஜாலியா ஏத்துக்கணும். வாழ்க்கைங்கறது சக்கரம் மாதிரி இருந்தாதான் முன்னேறி ஊர் போய்ச் சேர முடியும். 

“அட சாமியே! நீங்க எங்க வேலை செய்யறிங்க? ஆபீஸ்லயா இல்ல ஏதாவது மடத்துலயா? உபதேச மழையா கொட்றிங்க!” 

“நல்ல உபதேசம் தானே! தப்பா எதுவும் சொல்லலையே.”

“பட்ஐ டோண்ட் லைக் தீஸ் உபதேசம்ஸ். உபதேசம் பண்ற அளவுக்கு யாரும் இங்க நூத்துக்கு நூறு உத்தமர்கள் இல்ல.” 

ஆகாஷ் புருவம் சுருக்கி அவளைப் பார்த்தான். ”அப்டி சொல்லாதே சுஜி. தப்பு செய்து திருந்தறவன்தான் இந்த தப்பை செய்யாதேன்னு உண்மையா உபதேசம் பண்ண முடியும்.’ 

”அப்டியா? அப்பொ நீங்களும் நிறைய தப்பு செய்திருக்கீங்கன்னு சொல்லுங்க! என்னல்லாம் தப்பு பண்ணினீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” 

”தெரிஞ்சோ தெரியாமலோ சின்னச் சின்ன தவறுகள் செய்யாதவன்தான் யார்?யாரையும் பாதிக்காத அளவுக்கு நானும் நிறைய சின்னச் சின்ன தப்பு பண்ணியிருக்கேன். அசட்டுக் குற்றங்கள்! அதெல்லாம் எதுக்கு இப்பொ?” 

”வேணாம். செஞ்ச தப்பும் சொல்ல வேணாம். உபதேசமும் பண்ண வேண்டாம். ஆளை விடுங்க. வேற ஏதாவது பேசுங்க”. 

“நம்பளைப் பத்தி பேசலாமா?” 

“ஓ..எஸ்..” 

ஆகாஷ் வண்டி ஓட்டியபடியே தன்னைப் பற்றியும், தன் வீட்டைப் பற்றியும் நிறைய சொன்னான். 

”அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த நிலைமைக்கு எங்களைக் கொண்டு வந்தார். ஒரு ஜெனரேஷனை விட அடுத்த ஜெனரேஷன் நல்ல நிலைமைக்கு முன்னேறி வரணும்டா ஆகாஷ்னு சொல்லுவார். என் அப்பாவோட தாத்தா பீச்சுல சுண்டல் வித்துதான் என் அப்பாவோட அப்பாவை படிக்க வெச்சாராம். என் தாத்தா கவர்ன்மென்ட் ஆபீஸ்ல சாதாரண கிளார்க். அதுக்கே என் கொள்ளுத் தாத்தா சந்தோஷப்படுவாராம். தன்னைவிட தன் மகன் நல்ல நிலைக்கு வந்துட்டான்னு தாத்தா தன் அரசாங்க சம்பளத்துல என் அப்பாவை என்ஜினீயராக்கி இன்னும் உயரத்துக்கு ஏத்திப் பார்த்து சந்தோஷப்பட்டார். அப்பா அவரை விட என்னை உயரமான இடத்துக்கு கொண்டு வந்துட்டதா சொல்றார். உன் வீட்டை பத்தி சொல்லேன்.”

”எனக்குத் தெரிஞ்சு எனக்கு முந்தி எந்த தலைமுறையும் கஷ்டப்பட்டதா சரித்திரமே கிடையாது. பரம்பரை பரம்பரையா பணத்துல தான் படுத்து எழுந்திருக்கோம். ராஜ பரம்பரைன்னு கூட சொல்லிக்கலாம். இன்னும் எட்டு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு செல்வமிருக்கு”. 

“போரடிக்கல உனக்கு?” 

“ஏன் போரடிக்கணும்?” 

“ஒரேயடியா இனிப்பா சாப்ட்டா திகட்டும்னு சொல்வாங்களே!” 

“இனிப்பு பிடிக்கறவங்களுக்கு திகட்டாது.” 

ஆகாஷ் யோசித்தான். அவள் சித்தாந்தம் சரியா என்று. 

“அதுசரி ஆகாஷ்…உங்க வீட்ல நம்பளுக்கு பச்சைக் கொடி காட்டுவாங்களா.. இல்ல கத்துவாங்களா?” 

“பிரச்சனை எதுவும் வர சான்ஸ் இல்ல. உங்க வீடு எப்டி?”

“எங்க வீட்லயும் பிரச்சனை வராது. உங்க கொள்ளுத் தாத்தா சுண்டல் வித்த கதையைச் சொல்லாத வரைக்கும்!” 

அவள் சிரித்தபடி சொல்ல ஆகாஷ் முகம் சுருங்க அவளைப் பார்த்தான். 

அத்தியாயம்-7 

மனித மனம் விசித்திரமானது. ஒரு பொருளை அடைவதற்கும் ஒருவரின் அன்பை பெறுவதற்கும் எத்தகைய துன்பங்களையும் அனுபவிக்கத் தயாராகி விடுகிறது. தன் ஆசைகள் பூர்த்தியாகும்போது அதற்காகப்பட்ட துன்பத்தையும் துயரத்தையும் மனம் வெகு விரைவில் மறந்து விடுகிறது. -பிரம்மஞானம் 

சாயங்காலம் வரப்போகிற ஆகாஷுக்காக காலையிலிருந்தே வீட்டை ரெண்டு படுத்திக் கொண்டிருந்தாள் சரண்யா. வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் ஒழித்து ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி பளிச்சென்று வைத்தாள். சோபாவின் மீது பழைய காட்டன் புடவையை விரித்து ஓரங்களை மடித்து விட்டாள். வரவேற்பறை ஓரளவுக்கு திருப்தியான தோற்றத்திற்கு வந்ததும் குக்கரில் உருளைக்கிழங்கை வேகப் போட்டு விட்டு குளிக்கப் போனாள். 

மனதுக்குப் பிடித்தமானவனுடன் தனிமையில் அமர்ந்து பேசுவதைப் போல சந்தோஷமான நிமிடங்கள் வேறெதுவும் இருக்க முடியாது. எத்தனையோ பேரோடு எவ்வளவோ விஷயங்கள் தினமும் பேசுகிறாள். அப்போதெல்லாம் ஏற்படாத பரபரப்பும் படபடப்பும் இன்று ஏற்படுவதை நினைத்தால் அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவன் எத்தனை மணிக்கு வருவான் என்று தெரியவில்லை. எப்போது வேண்டுமானாலும் வந்து நிற்கலாம். என்பதால் சப்பாத்தி சப்ஜி எல்லாவற்றையும் தயார் செய்து வைத்துக் கொண்டாள். வேண்டுமானால் சூடு செய்து கொண்டால் போதும். கடிகார முள் சோதனை செய்தது. நேரம் இவ்வளவு மெதுவாக நகர்ந்து இப்போதுதான் பார்க்கிறாள். எதையாவது படித்துக் கொண்டிருந்தாலாவது அது வேகமாய் நகராதா என்ற நப்பாசையில் ஒரு புத்தகத்தை எடுத்து பிரித்து வைத்துக் கொண்டு அமர்ந்தாள். 

மனம் ஒரு நிலையில் இல்லாவிட்டால் அது எதிலும் பதிவதில்லை. புத்தகத்தில் கண்கள் வரி வரியாய் மேய்ந்தது.நாலு முழு பக்கங்களைத் திருப்பியும் மனதில் ஒன்றும் பதியவில்லை என்பதுதான் சிரிப்பான விஷயம். இதுவரை இப்படி இருந்திருக்கிறதா என்று யோசித்தாள். பொதுவாக காதல் என்ற விஷயமே அவளுக்கு நம்பிக்கையற்றதாகத்தான் இருந்தது. காதலிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஒரு இடம் பாக்கி வைக்காமல் ஜோடி ஜோடியாய் சுற்றும் இளைஞர்களைக் கண்டு கவலையும் எரிச்சலும் அடைந்திருக்கிறாள். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்கள் எதுவுமில்லாமல், காதலே தங்கள் லட்சியம் போல் பொன்னான காலத்தையும் தங்கள் வாழ்வையும் ஏன் இப்படி வீணடித்துக் கொள்கிறார்கள். இவர்கள் என்று வருத்தப்பட்டிருக்கிறாள். அப்பாவிடம் கூட இது பற்றி பேசியிருக்கிறாள். 

“ஏம்ப்பா இந்த காதலைப் பத்தி நீ என்ன நினைக்கற?” 

“திடீர்னு என்னம்மா.. அதைப்பத்தி? நீ யாரையாவது…” 

“அய்யோ..புத்தி போறதே உனக்கு! எதைப் பத்தியாவது கேட்டா உடனே நீ அதைப் பண்றயான்னு கேக்கறதை விட்டா வேற கேள்வியே கிடையாதா?” 

“பின்ன எதுக்கு கேட்ட?” 

“ஏன் அதைப்பத்தி நா தெரிஞ்சுக்கக் கூடாதா? அதுக்காக அப்டி உயிரை விடறாங்களே எல்லாரும்னு கேட்டேன். அதென்ன அவ்ளோ பெரிய விஷயமா?” 

”யார் கண்டா? சொல்றதுக்கு எனக்கு எந்த அனுபவமும் இல்ல. இனிமே ஏதாவது ஏற்பட்டா வேணா உனக்கு எக்ஸ்ப்ளெயின் பண்றேன்.” 

“ஓ..ஹோ… அந்த ஆசை வேற இருக்கோ…? நா சீரியசா கேக்கறேன். விளையாடதப்பா. ஒழுங்கா சொல்லு.” 

“இதப்பார்ரா மிரட்டறதை! சரி சொல்றேன். கேட்டுக்கோ. காதல்ங்கறது கற்சிலை மாதிரி. நீ எப்டி பார்க்கறயோ அப்டி தெரியும். கல்லைக் கண்டா நாயைக் காணும்னு சொல்வோமே அந்த மாதிரி. காதல் உன்னதமானதுன்னு உன் மனசு சொன்னாதான் அது உன்னதமா தெரியும். இல்லாட்டா ஆபாசமாதான் தோணும். காதல்ங்கறது இன்னிக்கு நேத்திக்கு இருக்கற விஷயமில்ல. யுகம்யுகமா இருக்கு. ஒவ்வொரு யுகத்துலயும் அற்புதமான காதல் சம்பவங்கள் இருந்திருக்கு. திரேதா யுகத்துல ராமன் சீதை, துவாபர யுகத்துல ராதா கிருஷ்ணன், இதெல்லாம் இதிகாசக் காதல்கள். அதே யுகத்துல எத்தனையோ மனுஷாளும் காதலிச்சிருப்பா. ஒண்ணு சேர்ந்திருப்பா, அல்லது பிரிஞ்சிருப்பா. அதுக்கெல்லாம் சாட்சியில்ல. சரித்திரமாகற காதல் சில பேரோடதுதான் அம்பிகாபதி அமராவதி, லைலா மஜ்னு, அனார்கலி சலீம்னு சொல்லலாம். இவாள்ளாம் காதலுக்காக உசிரை விட்டவங்க. உயிரை விட்டதாலயே உன்னதமான காதலர்கள்னு சொல்லப்பட்டவர்கள். ஆனா இன்றைய காதல்ங்கறது ஏதோ ஒரு எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படறதோன்னு எனக்கொரு சந்தேகம் இருக்கு. 

உன்னதமான காதல் எல்லாம் இப்பொ முப்பது பர்ஸன்ட் கூட இருக்காது. முக்கால்வாசி பேர் டைம் பாஸிங்க்காக லவ் பண்றா. பாதி பேர் ஒரு த்ரில்லுக்காக, இன்னும் பாதி பேருக்கு காதலிக்கிறது ஒரு பேஷன். சில பேர் நானும் ஒருவரால் காதலிக்கப்படறேன்னு பெருமைப்பட்டுக்கறதுக்காக காதலிக்கறாங்க. ஸோ.. இந்த அபத்தங்களுக்கு நடுல உன்னதம் எங்கேர்ந்து தெரியம்? காதல்ங்கறது நல்ல விஷயம்னு நினைக்கிறவங்க கூட இந்த அசிங்கஙகளுக்கு நடுல காதலிக்க பயப்படுவாங்கன்னு நினைக்கிறேன். எங்கே தன்னோட காதலையும் இப்டி அபத்தமா நினைச்சுடப் போறாங்களோன்னு. அந்த அளவுக்கு இன்னிக்கு இளைஞர்கள் ஜஸ்ட் லைக் தட்னு சகட்டு மேனிக்கு காதலிக்கறாங்க. இவங்களைத் தூண்டி விடறா மாதிரி திரைப்படங்கள். டி.வி. சானல்கள், பத்திரிகைகள், சலனத்தையெல்லாம் காதல்னு நினைச்சுக்க வேண்டியது. இப்டி ஒரு லுக் விட்ட உடனேயே அடுத்த சீன்ல ஆஸ்திரேலியா லண்டன்னு டூயட் பாடப் போயிடற சினிமா காதலர்களை தங்கள் ரோல் மாடலா எடுத்துக்கிட்டு தப்பான வழில போற அவசரக் காதலர்கள்தான் இப்பொ அதிகம்”. 

“கரெக்ட்ப்பா! போன வாரம் போரடிச்சுதேன்னு ஏதோ ஒரு சானல்ல ஏதோ ஒரு தமிழ்ப்படம் பாக்கறேன். அதுல அல்ட்ரா மாடர்னா ஒரு பொண்ணு ஒரு ஆளை மிரட்டிட்ருக்கா. பத்து எண்ணி முடிக்கறதுக்குள்ள நீ என்னைக் காதலிக்காட்டா நா இந்த கிளாஸ் துண்டால என் கையை அறுத்துக்குவேன். அதுவும் முக்கியமான இரத்தக் குழாயை. அப்புறம் சாவுதாங்கறா! அப்பறம் எண்ண ஆரம்பிக்றா. பத்துன்னு சொல்றதுக்குள்ள நோன்னு அவன் ஸ்லோமோஷன்ல ஓடி வந்து அவளைத் தடுத்து கட்டிக்கறான். அடுத்த பாட்டு காஷ்மீர்ல அரைகுறை டிரெஸ்ல. அடச்சேன்னு அடுத்த சேனல் திருப்பறேன். இது மாதிரி இன்னொரு அபத்தம் அங்க ஓடிட்ருக்கு!பாஷை தான் வேற!” 

“காதலனுக்காக புழு பூச்சியெல்லாம் கூட சாப்டுவாங்களே!'” 

“அதெப்டி உனக்கு தெரியும்? நீ பார்த்தாயா. பார்த்துட்டுதான் வியாக்யானமா? மோசம்ப்பா நீ?” 

”ச்சேச்சே.. யார் தியேட்டர்ல பார்த்தா, டி.வி.ல பார்த்ததுதான்.” 

“அதான் பார்த்தேன். இந்த வயசுக்கு நல்ல படமா பாருப்பா. போயும் போயும்…” 

“எல்லாத்தையும் பாத்தா தானேம்மா எது நல்லது எது கெட்டதுன்னு தெரிஞ்சுக்க முடியும்” அப்பா சமாளித்தார். 

இப்போது நினைத்தாலும் சரண்யாவுக்கு சிரிப்பு வந்தது. அப்பா சொன்னது நிஜம்தான். காதல் என்பது கற்சிலைதான். ஆபாசமாய் நினைத்தால் ஆபாசம். உன்னதமாய் நினைத்தால் உன்னதம். இரண்டும் நம் மனதைப் பொறுத்ததுதான். எது எப்படியோ காதல் என்பது எல்லாருக்குமே இப்படி ஒரு ஏக்கத்தையும் பரபரப்பையும் கொடுக்கும் என்பதை மட்டும் இப்போது அனுபவபூர்வமாக ஒத்துக் கொள்ள முடிந்தது. ஆகாஷைப் பார்க்கும் வரை தானும் ஒருவனை நேசிப்போம் என்று அவள் எண்ணியதேயில்லை. சம்பத் மாமா எப்பொழுதாவது சொல்லுவார். ஆகாஷுக்கு உன்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போறேனா இல்லையா பார் என்று. 

“அதெல்லாம் ஆளைப் பார்க்காம நா யாரையும் கட்டிக்க மாட்டேன். உங்க ஆகாஷ் என்ன பெரிய மன்மதனோ? எனக்கு பிடிக்க வேண்டாமா?” 

“நீ மட்டும் அவனைப் பார்த்த.. அடுத்த முகூர்த்தம் எப்பொ மாமான்னு நச்சரிப்ப” 

“முதல்ல காட்டுங்க உங்க பிள்ளையை. அப்பறம் சொல்றேன் ஆள் எப்டின்னு.” 

”இப்படி சொல்லி இரண்டாண்டுகள் கழித்துதான் அக்காவின் கல்யாணத்தில் ஆகாஷைப் பார்த்தாள். மாமா சொன்னது போல் ஆள் நன்றாகத்தான் இருந்தான். ஆனால் அதனால் மட்டும் அவளுக்குபிடித்துப் போய் விடவில்லை. அவனுடைய பேச்சு, கண்ணியமான தோற்றம், அலையாத பார்வை, அந்தஸ்து பார்க்காது பழகிய விதம் இதெல்லாம்தான் அவள் காதலைத் தூண்டி விட்டது. அதன் பிறகு இரண்டு மூன்று முறை அவனை சந்தித்ததில் அந்த அன்பு ஆழமாய் வேர் ஊன்றியது. அவன் தன்னை விரும்புகிறானா இல்லையா என்று நிச்சயம் தெரியாது. தன் காதலையும் அவனுக்குச் சொல்லவில்லை. இருப்பினும் உள்ளே ஒரு அழகிய காதல் விருட்சம் நாளொரு மேனியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அவனுக்கும் நிச்சயம் உள்ளூர ஒரு அன்பு தன்மீது இருக்கும் என்று அவள் உள் மனம் நம்புகிறது. 

வாசற்கதவு தட்டப்படும் சத்தம் கேட்க சட்டென்று கலைந்து எழுந்தாள். 

ஒருக்களித்து திறந்திருந்த கதவில் சாய்ந்து நின்றிருந்தான் ஆகாஷ். 

“ஹலோ வாங்க…” 

”ஆமா.. நா வந்து பத்து நிமிஷமாச்சு. கண்ணைத் திறந்துக் கிட்டே அப்டி என்ன கனவு.”

“என்னமோ யோசனை. அதுசரி பத்து நிமிஷமாச்சா வந்து? நா நம்ப மாட்டேன்.”

”நீ வேற நா உள்ள போய் நாலு ஆலு சப்பாத்தி எடுத்து சாப்ட்டுட்டு போனா என்னன்னு கூட பார்த்தேன். 

“கிண்டல்!” 

“ஆமா.. அப்டி என்ன பலமான யோசனை?” 

”என் யோசனைக்கென்ன? எப்பவும் எதையாவது யோசிச்சுட்ருக்கறதைத் தவிர எனக்கு வேறென்ன வேலை?” 

அவன் உள்ளே வந்து அமர்ந்தான். 

”சீன்ன வீடா இருந்தாலும் பளிச்சுனு இருக்கு. நீட்டா வெச்சிருக்க. ஆமா புக்ஸ் நிறைய படிப்பயோ அந்த ஷெல்ஃப் நிறைய புக்ஸா இருக்கு! பார்க்கலாமா?” 

“ஓ… நீங்க பார்த்துட்டே இருங்க. நா உங்களுக்கு டிபன் கொண்டு வரேன்.” 

”ரெண்டு பேருக்குமே கொண்டு வா. தனியா சாப்ட எனக்கு பிடிக்காது” அவன் அலமாரியிலுள்ள புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து புரட்ட ஆரம்பித்தான். 

அவள் டீபாய் மீது டிபன் பிளேட்டுகளையும் சப்ஜி பாத்திரத்தையும் கொண்டு வந்து வைத்தாள். 

”பரவால்லயே நிறைய புக்ஸ் கலெக்ட் பண்ணி வெச்சிருக்க ரொம்ப ஆர்வமோ?” 

“ஏன் உங்களுக்கும் புக்ஸ் பிடிக்கும் தானே?” 

“பிடிக்கும். எங்க போனாலும் முதல்ல நுழையற கடை புக்ஸ் ஷாப்பாதான் இருக்கும். என்னென்னமோ புக்ஸ் வாங்கி குமிச்சி வெச்சிருக்கேன். ஆனா பாரு வேலை என்னை தின்னுட்ருக்கு. படிக்கதான் நேரமில்ல மேம்போக்கா படிக்கறதெல்லாம் எனக்குபிடிக்காது. அதனால எல்லாம் பத்திரமா இருக்கு. எப்பவாவது நேரம் கிடைச்சா படிப்பேன். முந்தியெல்லாம் வெறி பிடிச்சா மாதிரி படிப்பேன்”. 

“யாரோட ரைட்டிங் உங்களுக்கு பிடிக்கும்.” 

“லேசான நகைச்சுவை கலந்ததான நடைதான் ரொம்ப பிடிக்கும். இங்கிலீஷ்ல நம்மவரான ஆர்.கே.நாராயணன் படிப்பேன். தமிழ்ல கல்கி, சோ.. இவங்க ரைட்டிங்ஸ் ரொம்ப பிடிக்கும்.” 

புத்தகங்கள் பற்றி ஆரம்பித்த பேச்சு பல விஷயங்களுக்கும் தாவி சுவாரசியமாய் நீண்டு கொண்டே போயிற்று. நேரம் போனதே தெரியவில்லை. திடீரென்று மணி பார்த்த ஆகாஷ் வியந்து போனான். 

“அடேயப்பா மணி ஆறா? நேரம் போனதே தெரியல!” அவன் வியப்போடு எழுந்தான். 

“அப்பொநாவரேன் சரண்யா. இதுவரை இப்டியாரோடயும் பேசினதில்ல. முந்தியாவது யாராவது பிரெண்ட்ஸோட பேசுவேன். இப்பொ என்னை மாதிரியே எல்லாரும் பிஸி. யாரையும் சந்திக்க முடியறதில்ல. எனி ஹவ் உனக்கு ரொம்ப நன்றி. இங்க இருந்த கொஞ்ச நேரம் உபயோகமா போச்சு. உங்கிட்ட நல்ல விஷயங்கள் பேசின சந்தோஷத்தோட கிளம்பறேன். ஆலு சப்பாத்தி பிரமாதம்! அதுக்கும் ஒரு தேங்க்ஸ். அப்பாகிட்ட கேட்டதா சொல்லு.”

அவன் புறப்பட்டுச் சென்றதும் அந்த இடமே இருண்டு வறண்டு விட்டாற் போலிருந்தது. அவனோடு பேசியதையெல்லாம் அசை போட்டபடி சற்று நேரம் அமர்ந்திருந்தாள். அவன்வந்ததும் பேசியதும் சென்றதும் ஒரு கனவு மாதிரி இருந்தது. எங்கோ மிதப்பது போலிருந்தது. கை, கால்களெல்லாம் சில்லிட்டாற் போலிருந்தது. பத்து நிமிடம் பெய்த மழை, பூமியின் சூட்டை கிளப்பி விட்டாற்போல் காதல் சூட்டில் நெஞ்சு தகித்தது. 

வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் அவள். பத்து மணிக்கு அப்பா வந்தார். 

”என்னம்மா பிரமை பிடிச்சாப்பல உட்கார்ந்துட்ட ஆகாஷ். இந்த வீட்டுக்குள்ள வந்துட்டு போன சந்தோஷமா? சப்பாத்தி எப்டியிருந்துதாம்.” 

“சூப்பர்னு சொன்னார். புக்ஸ் எல்லாம் பார்த்துட்டு ரொம்ப ஆச்சர்யப்பட்டார். என்னென்னவோ பேசிட்டிருந்தோம்”. 

“என்னென்ன?” 

“பொதுவா எல்லா விஷயத்தையும்பத்தி பேசினோம்”.

”நீ சொல்றதைப் பார்த்தா அவனுக்கும் உன்னைப் பிடிச்சிருக்குன்னுதான் தோணுது. ” 

“அய்யோ நாங்க அதெல்லாம் எதுவும் பேசலப்பா.” 

“உன் கல்யாணமும் நல்லபடி நடந்துட்டா அப்பறம் நா நிம்மதியா எப்ப வேணா காலன் வரட்டும்னு தைரியமா இருப்பேன்.” 

அப்பா சொல்ல சரண்யாவின் முகம் சுருங்கியது. “திடீர்னு என்னப்பா காலன் கீலன்னு.” 

“நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துடுமா?” 

“அதுக்காக நெருப்பு நெருப்புன்னே சொல்லிட்ருக்கணுமா? எல்லாரும் ஒருநாள் சாக வேண்டியதுதானே.” 

”உங்கிட்ட ஒண்ணு கேக்கட்டுமா சரண்யா?” 

“என்ன?”

“நாம் ஏதோ ஒரு திட்டம் போடறோம். கட சில அது ஏதோ ஒண்ணா ஆய்டலாம். எதுவுமே நம்ம கைல இல்லையே. ஒருவேளை ஆகாஷைக் கல்யாணம் பண்ணிக்க முடியாம கூட போய்டலாம். அப்பொ நீ அதை சாதாரணமா நினைச்சு தாண்டிப் போவயா இல்ல அங்கயே தவிச்சுப் போய் நின்னுடுவயா?” 

சரண்யா அப்பாவை உற்றுப் பார்த்தாள். 

“இதுக்கு நா என்ன பதில் சொல்லணும்னு நீ எதிர்பார்க்கறப்பா?” 

“சில நேரம் பயம்மார்க்கு தாயி. நானும் சம்பத்தும் சேர்ந்து ஏதோ நினைச்சு, சும்மா இருக்கற சங்கை ஊதறோமோன்னு தோணுது. இதோட நெட் ரிஸல்ட் நல்லதாயிருந்துட்டா பரவால்ல. ஒருவேளை எதிர்மறையார்ந்துட்டா….? இதோட பாதிப்பு எங்களைவிட உன்னைத் தாம்மா அதிகமா தாக்கும். ஆனா நீ திடமா இருந்தா எப்பேர்ப்பட்ட தோல்விலேர்ந்தும் மீண்டு வந்துடலாம். உலகத்துல எத்தனையோ நல்லவங்க இருப்பாங்க. நமக்கும் யாராவது கிடைப்பாங்க. நா சொல்றது புரியுதாம்மா?” 

“புரியுதுப்பா. உங்களுக்கு நா ஒண்ணு சொல்லட்டுமா?”

”சொல்லும்மா” 

“இது ஒத்தையா ரெட்டையா விளையாட்டில்லப்பா. என்னைப் பொறுத்தவரைக்கும் காதல்ங்கறதுக்கு அர்த்தம் காத்திருத்தல்! ஜெயித்தல்! நானும் காத்திருப்பேன். என்ன தடங்கல் வந்தாலும் காத்திருந்து ஜெயிப்பேன்.” 

சரண்யாவின் முகத்தில் அசாத்தியமான உறுதி தெரிந்தது. அப்பா அவளை திகைப்போடு பார்த்தார். 

அத்தியாயம்-8 

எவ்வளவு ஞானியான ஆணும் ஏதாவது ஒரு பெண்ணிடம் ஏமாந்து விடுகிறான். எவ்வளவு ஏமாளியான பெண்ணும் எந்த ஆணிடமும் எச்சரிக்கையுடனே இருப்பாள். -தியொடர் ரிங்க். 

பொறுமையின்றி மணியைப் பார்த்தாள் சுஜிதா. ஆறு மணிக்கு வருவதாகச் சொன்ன ஆகாஷை இன்னும் காணவில்லை. அத்தனை பேரும் தியேட்டருக்குள் போயாகி விட்டது. எரிச்சலோடு தியேட்டர் கேட் பக்கம் மீண்டும் பார்த்தாள். அவன் வரும் சுவடே காணவில்லை. போய்விட்டால் என்ன என்று தோன்றியது. வந்து பார்த்துவிட்டு அவனும் திரும்பி போகட்டும். ஒரு பெண்ணைக் காத்திருக்கச் சொல்லியிருக்கிறோம் என்ற நினைப்பு கொஞ்சமாவது இருந்தால் இப்படி லேட்டாக வருவானா? கடிகாரத்தையும் வாசலையும் பார்த்தபடி எவ்வளவு நேரம் நிற்பது? தனியாக நின்று கொண்டிருந்தவளை உற்று உற்று பார்த்து விட்டுப் போன ஆண்களின் பார்வை வேறு ஆத்திரத்தைக் கிளப்பி விட ஹாஸ்டலுக்கே போய்விடலாம் என்ற எண்ணத்தோடு அவள் ஒரு ஆட்டோவைக் கை காட்டி நிறுத்த, அதே நேரம் ஆகாஷின் கார் தியேட்டர் காம்ளக்ஸுக்குள் நுழைந்தது. அவள் அவனைப் பார்த்து விட்டாலும் வேண்டுமென்றே ஆட்டோவில் ஏறியமர்ந்தாள். 

“சுஜி.. நில்லு..” அவன் வேக வேகமாக கிட்டே வந்து அவளை நிறுத்தினான். 

”நா வரல. என் பொறுமையெல்லாம் போயாச்சு. நீங்க போய் தனியா உட்கார்ந்து பார்த்துக்குங்க. இல்ல இங்க யாராவது ஜோடி கிடைச்சா கூட்டிட்டு போய் என்ஜாய் பண்ணுங்க”. 

“பார்த்தயா, ஜஸ்ட் ஒரு பதினஞ்சு நிமிஷம் தானே லேட்! இதுக்கு போய் கோச்சுக்கறயே”. 

அவள் ஆட்டோவை விட்டு இறங்கினாள்.

“பதினஞ்சு நிமிஷம் தானேவா? நேரத்தோட அருமை தெரியுமா உங்களுக்கு?” 

“டிரைவர் நீ போப்பா” ஆகாஷ் ஒரு ஐந்து ரூபாயைக் கொடுத்து அவனை அனுப்பினான். 

“கமான் சுஜி. சாரிஃபார்திடிலே. வா போலாம்.” 

“போங்க ஆகாஷ்… எல்லாரும் என்னை எப்டி பார்த்தாங்க தெரியுமா.. இப்டியெல்லாம் யாருக்காகவும் காத்திருந்து எனக்கு பழக்கமில்ல.” 

”ஓகே..ஓகே..இனிமே இப்டி ஆகாது” அவன் அவளை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றான். 

“ஆமா ஏன் லேட்?” 

“எங்க ரிலேடிவ் ஒருத்தர் வீட்டுக்கு போயிருந்தேன். அங்க பேசிட்ருந்ததுல டைம் போனதே தெரியல.” 

“எந்த ரிலேடிவ்? அங்க பொண்ணு யாராவது இருக்காங்களா?” 

“சொல்லப்போனா எங்க அத்தையோட பொண்ணுகிட்டதான் பேசிட்ருந்தேன். அடேயப்பா அந்த பொண்ணு. எவ்ளோ விஷயம் தெரிஞ்சு வெச்சுட்ருக்காங்கற!” 

“என்ன வயசாகுது அவளுக்கு?” 

“என்ன ஒரு இருபது வயசிருக்கும். உன் வயசும் அதானே?”

“இருபது வயசு பொண்ணோட பேசிட்ருந்ததுல என்னை மறந்துட்டீங்க இல்ல” 

ஆகாஷ் சிரித்தான். “ஓ… நீங்க அந்த மாதிரி போறிங்களோ? அய்யோ என் சந்தேகப் பிசாசே!” 

இருட்டில் ஒருவர் இடம் காட்ட இருவரும் தட்டித் தடுமாறிச் சென்று அமர்ந்தார்கள். 

”இனிமே என்னைக் கேக்காம எந்த அத்தையின் வீட்டுக்கும் போகக் கூடாது புரிஞ்சுதா?” 

அவன் சத்தமின்றி சிரித்தான்.

இன்டர்வெல் விடும் வரை உம்மென்றிருந்தாள்.படம் வேறு போரடித்தது. சண்டையும் பாட்டுமாய் சரியான மசாலாப்படம். 

“ச்சட் என்ன படம்! வேற நல்ல படமே கிடைக்கலையா உங்களுக்கு?” இன்டர்வெல்லில் எரிச்சலோடு சொன்னாள். 

”என்ன செய்யச் சொல்ற. இதுக்குதான் டிக்கெட் கிடைச்சுது. பிடிக்காட்டி போயிடலாம் வா.”

”அதைச் செய்வோம். வாங்க போலாம்” அவள் எழுந்து நடந்தாள். 

அங்கிருந்து எங்கு செல்லிலாம் எனக் கேட்டபடி அவனும் பின்னால் நடந்தான். 

“நல்ல ஹோட்டலா போலாம். பசிக்குது”. 

காரை நியூ உட்லண்ட்ஸுக்கு ஓட்டினான். 

ஏ.சி. ஹாலின் ஒரு மூளைல டேபிளில் அமர்ந்தார்கள். டிபனுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அவளைப் பார்த்தான். 

“இந்த கோபம் தாபம் இதெல்லாம் நீ கொஞ்சம் குறைச்சுக்கணும் சுஜி. கோபம் மனுஷ முகத்தை விகாரமாக்கிடும்னுவாங்க.” 

“அது என் சுபாவம் ஆகாஷ். எனக்கு எல்லாமே நினைச்சநேரத்துல நடந்தாகணும். நா பிறந்த இடமும் வளர்ந்த விதமும் அப்டி.” 

“இனிமே நீ உன்னை மாத்திக்க முயற்சிக்கலாம் இல்லையா? என்னை எடுத்துக்கோ. நா அனாவசியமா டென்ஷன் ஆனதே இல்லை. முடிஞ்ச வரை எல்லா ஏமாற்றங்களையும், தோல்விகளையும் ஈஸியா எடுத்துக்க முயற்சிப்பேன். அதனால எப்பவுமே ஃபிரெஷ்ஷா இருக்கா மாதிரியே தோணும்”. 

“பாருங்க ஆகாஷ். ஒவ்வொருத்தர் குணமும் ஒவ்வொரு மாதிரி அப்டியே இருந்துட்டு போய்டுவோம் விட்டுடுங்க. விமர்சனமே பண்ணாதீங்க.” 

”அப்டி சொல்லாதே சுஜி. என்கிட்ட உனக்கு மைனஸ் ஏதாவது தெரிஞ்சு நீ சொன்னா நா திருத்திக்க முயற்சிப்பேன். நாம பரஸ்பரம் ஒருத்தரை ஒருத்தர் கரெக்ட் பண்ணிக்கறதுல ஒரு தப்பும் இல்லன்னு நினைக்கறேன் நான்.” 

”அப்டியா? அப்பொ உங்ககிட்ட எனக்குதெரிஞ்ச ஒரு மைனஸ் பாயிண்ட்டை சொல்லலாமா?” 

“தாராளமா.”

”உங்க உபதேசம்தான். வேறென்ன? உபதேசிக்கிறவங்களை எப்பவுமே எனக்கு பிடிக்காது.” 

ஆகாஷ் முகம் சுருங்க அவளைப் பார்த்தான். இருந்தாலும் அவள் அப்படி வெளிப்படையாக சொன்னதற்காக அவளைப் பாராட்டும் விதமாக சிரித்தான் அவன்.

”ஒருத்தரோட பேஸிக் இயல்புகளையோ குணங்களையோ உபதேசத்தால் மாத்திட முடியாது ஆகாஷ். அதான் நா அப்டி சொன்னேன். தப்பா நினைச்சுக்காதீங்க.”

”நா எதுவும் நினைச்சுக்கல அதைவிடு நம்ம விஷயத்துக்கு வருவோமா?” 

“என்ன?” 

“காதல்ங்கறது இப்டி அடிக்கடி சந்திக்கறதும் ஊர் சுத்தறதும் மட்டும் இல்ல சுஜி. நமக்குள்ள சில லட்சியங்களும் திட்டங்களும் இருக்கணும். எதிர்காலத்தை பத்தி ஒரு தீர்மானம் இருக்கணும்.”

“அதைப்பத்தி இப்பொ என்ன?” 

”சரி சொல்லு எவ்ளோ நாள் நாம காதலிக்கலாம் எப்பொ கல்யாணம் பண்ணிக்கலாம்?” 

“இன்னும் அஞ்சு வருஷத்துக்கு கல்யாணத்தைப் பத்தி நினைச்சுக் கூட பார்க்க என்னால முடியாது.” 

அவள் சொல்ல ஆகாஷ் புன்னகைத்தான். 

“என்ன சிரிக்கறீங்க?” 

“அட்லீஸ்ட் இந்த ஒரு விஷயத்துலயாவது நம்ம ரெண்டு பேர் எண்ணமும் ஒத்துப் போயிருக்கே! அதுக்குதான் சிரிச்சேன்!” 

“அப்டின்னா உங்களுக்கும் அந்த எண்ணமில்லையா? எனக்கு, படிக்கணும். நல்ல புரொபஷன்ல் செட்டிலாகணுங்கற லட்சியம். அதனால சொன்னேன் உங்களுக்கென்ன?” 

”இன்னும் கூட உயரமான இடத்துக்குப் போகணுங்கற லட்சியம் எனக்கிருக்கக் கூடாதா? அது தவிர என் தங்கையோட படிப்பு முடிஞ்சு அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்த பிறகுதான் என் கல்யாணம் பத்தி என்னால யோசிக்க முடியும். காதலை எதாலயும் கட்டுப்படுத்த முடியாதே. அதனால் காதலிக்க ஆரம்பிச்சுட்டோம். ஆனா மத்த விஷயங்களை நம்மால நம்மகட்டுப்பாட்டுக்குள்ள வெச்சுக்க முடியாதா என்ன?” 

“இப்பதான் எனக்கு நிம்மதியாச்சு ஆகாஷ்.எங்கடா,நீங்க, அடுத்தது கல்யாணம், அதுக்கடுத்தது குழந்தைகள்னு என்னை ஒரு கூண்டுக்குள்ள அடைச்சுடத் துடிப்பீங்களோன்னு நினைச்சேன்”. 

“பாத்தயா நீ என்னை புரிஞ்சுக்கவேல்ல. என் வீடு கூண்டா இருக்காது சுஜி. உனக்கு சகல சுதந்திரமும் அங்க இருக்கும். ஆனா கல்யாணம்னா விட்டுக் கொடுத்தல், புரிந்து கொள்ளல், அனுசரித்து போறது, குழந்தை பெத்துக்கறது, அதை வளர்க்கறது எல்லாம்தான். இந்த எல்லாத்துலயும் நம்ம ரெண்டு பேருக்குமே பங்குண்டுங்கறது எனக்கு தெரியும் எல்லா பொறுப்பையும் உன் தலைல கட்டிட்டு கழண்டுக்கற ஆசாமியில்ல நான். அதனால இப்பவே உன் பயத்தை விட்டுடலாம். ரெண்டு பேர் சந்தோஷமா சரிசமமா இருக்கறது தான் வாழ்க்கை. சண்டை போட்டுக் கிட்டு எதிரெதிர் திசைல திரும்பி நிக்கறதுக்கு எதுக்கு ஒண்ணு சேரணும்?” 

“சரி அஞ்சு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கப் போறோம். ஓகே. அதுவரை வீட்டுக்கு தெரியாம காதலிக்கப் போறிங்களா இல்ல. வீட்ல ஒரு வார்த்தை சொல்லிடுவீங்களா?” 

ஐஸ்க்ரீமை ருசிபார்த்தபடி கேட்டாள் அவள்.

“தேவை ஏற்பட்டா சொல்லுவேன்.” 

”உங்கம்மா எப்டிப்பட்டவங்க?”

”கொஞ்சம் அந்தஸ்து பாக்கறவங்கதான். ஆனா நல்லவங்க. பிடிச்சுட்டா தலைல தூக்கி வெச்சுப்பாங்க!” 

“என்னைப் பிடிக்குமா அவங்களுக்கு?” 

“உன்னை யாருக்காவது பிடிக்காம இருக்குமா?” 

பேரர் பில் கொண்டு வந்து வைக்க ஆகாஷ் பர்ஸ் திறந்து பணத்தை எடுத்து வைத்துவிட்டு எழுந்தான். 

இருவரும் காரில் ஏறிக் கொண்டார்கள். 

“அப்பறம் நாம எப்பொ பார்க்கலாம்.”

சுஜிதா ஆவலோடு கேட்டாள்.

“நோ சுஜி. இனிமே மாசத்துக்கு ஒரு முறைதான் நாம சந்திக்கணும். அடிக்கடி சந்திச்சா அர்த்தமில்லாம பேசுவோம். அதனால் அபூர்வமா சந்திப்போம். அறிவுப் பூர்வமா நிறைய விஷயங்கள் பேசுவோம் சரியா?” 

“மாசத்துக்கொரு முறையா?” சுஜிதாவின் முகம் சுருங்கியது. ”மாசா மாசம் கடைசி ஞாயித்திக்கிழமை சந்திப்போம்” ஆகாஷ் அவளை ஹாஸ்டலின் முன்பு இறக்கி விட்டுக் கிளம்பினான். 

காரை ஷெட்டில் விட்டு பூட்டி விட்டு பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி உள்ளே வந்தான். 

வராண்டாவில் பிரம்பு சேரில் அமர்ந்திருந்த அப்பா அவனைப் பார்த்ததும் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்தார். 

“எங்கடா போய்ட்ட.. காலேல போனவனை இன்னும் காணுமேன்னு உங்கம்மா புலம்பிட்ருக்கா.” 

“நா சின்ன குழந்தையாப்பா?” 

“அதுக்கில்லடா லீவு நாள்ள கூட இப்படி சுத்தணுமா வீட்ல இருக்கக் கூடாதான்னுதான்.” 

பேச்சுக்குரல் கேட்டு உள்ளிருந்து தங்கை வந்தாள். 

“எல்லாரும் சேர்ந்து இன்னிக்கு வெளில போலாம்னு இருந்தோம். ஜாலியா ஒரு சினிமா, அப்பறம் நல்ல ஹோட்டல்ல டிபன்னு என்ஜாய் பண்ணலாம்னு நினைச்சா இப்டி காணாம போய்ட்டயேண்ணா. உனக்கே நல்லார்க்கா?”

சங்கீதா வருத்தத்தோடு சொல்ல ஆகாஷ் அவளைப் பரிதாபமாகப் பார்த்தான். 

“சாரிடா.. நீ காலேலயே சொல்லியிருந்தா எங்கயும் போயிருக்க மாட்டேன் இல்ல”. 

“யாருக்குத் தெரியும் நீ இவ்ளோ நாழி வெளில சுத்துவன்னு! முந்தியெல்லாம் லீவு நாள்னா எங்கயும் போக மாட்ட. இப்பல்லாம் நானும் பார்க்கறேன். நீ காணாம போயிடற. அப்டி எங்கதான் சுத்துவ? புதுசா பிரண்ட்ஸ் கிடைச்சிருக்காங்களா?” 

“அதெல்லாம் இல்ல…” 

“பின்னே…?” 

“அய்யோ சங்கீதா வாசல்ல வெச்சே விசாரணை கமிஷனா? ஆளை விடு!” ஆகாஷ் கையெடுத்து கூப்பியவாறு உள்ளே ஓடினான். 

“அண்ணா எதையோ மறைக்கறாம்ப்பா. ஏதோ விஷயமிருக்கு! உன்னை விட மாட்டேண்ணா…” 

சங்கீதா அவன் பின்னால் ஓடினாள். 

டெலிபோன் அடித்தது. சம்பத் புன்சிரிப்போடு வந்து அதை எடுத்தார். 

“நா கோபால் பேசறேன்.” 

“அடடே என்ன மாப்ள.. இந்த நேரத்துல.. என்ன விஷயம்?” 

“ஒரு சந்தோஷமான விஷயம்தான். இன்னிக்கு ஆகாஷ் எங்க வீட்டுக்கு வந்திருந்தான் தெரியுமோ…?” 

“நிஜம்மாவா…?” 

“பின்னே.. ஆலு சப்பாத்தி பண்ணி வைன்னு முத நாளே எம் பொண்ணுகிட்ட டிபன் மெனு கொடுத்தாச்சு தெரியுமில்ல…? எம் பொண்ணு தரைல நடக்கணுமே! பறந்துட்ருந்தா. வீடே ரெண்டு பட்டாச்சு ஆலு சப்பாத்தி சாப்பிட்டு! ரொம்ப நாழி பேசிட்ருந்தானாம். மொத்தத்துல ரெண்டு பேரும் ஒருத்தர் கிட்ட ஒருத்தர் காலியாய்ட்டாங்க”. 

”ச்சட்.. என்ன தமிழ் இது! நேசிக்கறாங்கன்னு அழகா சொல்லக் கூடாதா?” 

“அதில்லப்பா.ஒரு சந்தோஷம்.. அதுல நா காலி!” 

“ஓஹோ.. அதான் பிள்ளையாண்டன் மூஞ்சில ஒரு மந்தஹாசமோ! சரி நீ போனை வெச்சுடு நா பார்த்துக்கறேன் அவனை”. 

“உம்பிள்ளை தயவுல ஒரு புது டிபன் கிடைச்சுது தேங்க்ஸ் சொல்லணும்ப்பா அவனைப் பார்த்தா.” 

சம்பத் போனை வைத்தார். அவர் முகம் மலர்ந்திருந்தது. அவர் உள் மனதின் ஆசை நிறைவேறப் போகும் சந்தோஷம். இதுவரை அந்த வீட்டில் சாரதா வைத்ததுதான் சட்டமாயிருந்தது. அவள் விருப்பப்படிதான் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற எதைப் பற்றியும் சம்பத் இதுவரை கவலைப்பட்டதில்லை. ஆனால் கல்யாணம் என்பது மனிதனின் மொத்த சந்தோஷத்திற்கும் வேட்டு வைக்கும் விஷயமாகி விடக்கூடாது என்பது தான் அவர் கவலை. மனைவியின் ஆளுமைகளை அவர் பெரிதாய் நினைத்த தில்லை. இருந்தாலும் சாரதாவின் சில குணங்கள் அவரை கவலைப்பட செய்திருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று வறட்டு கௌரவம். இந்த வறட்டு கௌரவத்தால் ஆகாஷின் சந்தோஷங்களுக்கு சமாதி கட்டும்விதமாக அவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து விடப் போகிறாளோ என்று அவர் வெகுவாக கவலைப்பட்டிருக்கிறார். அப்படி ஒரு பெண்ணை அவள் பார்ப்பதற்குள் சரண்யாவை அவன் பார்த்து அவனுக்கும் அவளைப் பிடித்துவிட்டால் அதன் பிறகு சாரதாவால் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்தார். அதன் முதல் படியாகத்தான் சத்யாவின் கல்யாணத்திற்கு குடும்பத்தோடு சென்றார். 

ஆகாஷ் சரண்யாவிடம் சகஜமாக பேசியது கண்டு மகிழ்ந்தார். ஆனால் சாரதாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவள் கத்த ஆரம்பித்து விட்டாள். அதையும் மீறி ஆகாஷ் சரண்யாவை அவள் வீட்டிற்கே போய் சந்தித்து பேசியிருக்கிறான் என்றால் அவருடைய ஆசை நிறைவேறப் போகிறது என்றல்லவா அர்த்தமாகிறது. அவர் மன நிறைவோடு அன்று தூங்கினார். மறுநாள் காலை நான்கு பேரும் ஒன்றாகச் சேர்ந்து டிபன் சாப்பிடும்போது அவருக்கு ஆலு சப்பாத்தி நினைவுக்கு வந்தது. மகனைச் சீண்டினால் என்ன என்று தோன்றியது. 

”ஏன் சாரதா இந்த இட்லி தோசை பொங்கல் பூரியை விட்டா உனக்கு வேற எந்த டிபனும் செய்ய வராதா?”

“ஏன் வேறென்ன சாப்டணும்னு மசக்கை உங்களுக்கு?” 

”ஒரு மாறுதலுக்கு இந்த ஆலு சப்பாத்தி இல்ல ஆலு சப்பாத்தி. அது செய்யேன் ஒருநாள்.” 

“வயசாக ஆக வாய்க்கு ருசி அதிகமாறதோ?” 

”எனக்கில்லடி.. பாவம் பசங்களுக்காகத்தான் சொன்னேன். சொல்லேண்டா ஆகாஷ்… உனக்கு பிடிக்காதா ஆலு சப்பாத்தி?” 

“ம்? பிடிக்குமே!” ஆகாஷ் அசடு வழிய சிரித்தபடி அப்பாவைப் பார்த்தான். 

”அப்டி போடு. பாருடி அவனுக்கு பிடிக்குமாம் ஆலு சப்பாத்தின்னா ரொம்ப பிடிக்குமாம்”. 

அப்பா விஷமமாக சிரிக்க சங்கீதா அப்பாவையும் அண்ணனையும் மாறி மாறிப் பார்த்தாள். 

அத்தியாயம்-9 

அடிமைத்தனம், சர்வாதிகாரம் இவை இரண்டில் ஏதேனும் ஒன்று பெண்ணிடம் வெகுகாலமாக ஒளிந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் பெண்ணுக்கு நட்பு என்பது சாத்தியமாக கருப்பதில்லை. அவளுக்கு காதல்தான் தெரியும். -நீட்சே 

“ஏன் சாரதா வீட்ல இன்னிக்கு ஏதாவது விசேஷமா என்ன?” சம்பத் அவசரமாக அடுக்களைக்கு வந்து கேட்டார்.

”உங்களுக்குத் தெரியாம என்ன விசேஷம் நடக்கும் வீட்ல?” 

“பின்ன வாசல் வராண்டால ஒரே பெண்கள் கூட்டமா இருக்கு!”

“அதுவா.. வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு கேபிள் டிவில ஒரு விளம்பரம் கொடுத்திருந்தேன். அதைப் பார்த்துட்டு வந்துர்ப்பாங்களா இருக்கும்.” 

“வீட்டு வேலைக்காக…? நா நினைச்சேன். நீ ஏதோ சினிமாதான் எடுக்கப் போற போல்ருக்குன்னு போய்ப் பார் எல்லாம் ஃபுல் மேக்கப்ல வந்துர்க்கு.” 

“ஆள் பார்க்க டீஸன்ட்டா அழகா இருக்கணும்னு சொல்லியிருந்தேன்.” 

”உனக்கேன் இந்த வேலை. வீட்டு வேலை பார்க்கப் போற பொண்ணு எப்டியிருந்தா என்ன…?” 

“அதுக்காக அழுக்குப் புடவையும் மீன் வாசனையுமா வந்தா நல்லாவா இருக்கும்? உங்களை யார் சஜஷன் கேட்டாங்க. இதெல்லாம் லேடீஸ் டிபார்ட் மென்ட். வேலைக்காரி கூட நம்ம அந்தஸ்துக்கேத்தா மாதிரி இருக்கணும்.” 

சாரதா தன் தோற்றத்தை சரி பார்த்துக் கொண்டு வந்திருக்கும் பெண்களை இண்டர்வியூ செய்யக் கிளம்பினாள். அம்மா அவர்களைத் தேர்வு செய்யும் அழகைக் காண விரும்பிய சங்கீதா அப்பாவை இழுத்துக் கொண்டு வராண்டாவுக்கு அருகிலிருந்த அறைக்குச் சென்றாள். 

“இந்த பத்து பேர்ல அம்மா யாரை செலக்ட் பண்ணுவான்னு நினைக்கறப்பா நீ?” 

“ஒவ்வொரு மூஞ்சியையும் பாரேன் சங்கீதா இதுங்கள்ளாம் வீட்டு வேலை செய்யும்னு நீ நினைக்கற? சீப் ரேட் மேக்கப்பும் டிரெஸ்ஸுமா தெருக்கூத்து ஆடறாப்பல வந்துர்க்குங்க. உங்கம்மாக்கு புத்தி எங்க போறதுன்னு தெரியலயே! இப்டியா வீட்டு வேலைக்கு ஆள் தேடுவாங்க? 

அப்டியே யாராவது தேறி வந்தாலும் உங்கம்மாகிட்ட அவ குப்பை கொட்டிடப் போறாளாக்கும்! மிஞ்சிப் போனா மூணு மாசம்! அவ இந்த வீட்டு வாசல்ல நின்னு அசிங்க அசிங்கமா திட்டிட்டு போவா. தேவையா இதெல்லாம்?” 

”உனக்கேம்ப்பா அந்த கவலை எல்லாம். நடக்கறதை எல்லாம் வேடிக்கை பார்த்து ஜாலியா சிரியேன்!” சங்கீதா அம்மாவையும் அவர்களையும் பார்த்தாள். வாயைப் பொத்திக் கொண்டு அப்பாவும் அவளும் அடிக்கடி சிரித்தார்கள். அம்மா அனைவரையும் அனுப்பி விட்டு அலுப்போடு உள்ளே வந்தாள். சங்கீதா அம்மாவுக்கு ஓடிப் போய் சுடச்சுட காபி கொண்டு வந்து கொடுத்தாள். 

”சாப்டும்மா ஒரே டயர்டா ஆய்ட்டயே!” 

”என்னாச்சு எவளாவது தேறினாளா?” சம்பத் சிரிப்பை அடக்கியபடி கேட்டார். 

“ப்ஸு.. வேலைக்காரி நல்லா அமையக்கூட கொடுத்து வெச்சிருக்கணும் போல்ருக்கு!” 

“தப்பு சாரதா..வேலைக்காரி அமையத்தான் நிறையவே கொடுத்து வெச்சிருக்கணும். நீ இப்டி சொல்ற, ஒரு வேலைக்காரிகிட்ட கேட்டா நல்ல வீடும் எஜமானியும் அமையக் கொடுத்து வெச்சிருக்கணும்னு சொல்லுவா.” 

“அப்டின்னா நா நல்ல எஜமானி இல்லன்னு சொல்றீங்களா?” 

“பாத்தயா எங்கிட்டயே இந்த பாய்ச்சல் பாயற! வேலைக்காரியெல்லாம் எம்மாத்திரம்!” 

”பின்ன.. வேலைக்காரிய நடு வீட்ல உட்கார வெச்சு உபசாரம் பண்ணணுமா?” 

”யாரு உபசாரம் பண்ணச் சொன்னா? அவளை மனுஷியா நடத்தினாதானே அவளுக்கும் இங்க வேலை செய்யற ஆசை இருக்கும்!” 

“மனுஷியா நடத்தாம பின்ன எப்டி நடத்தறேன்? உங்களுக்கென்ன தெரியும். அவளுக்கு நா எவ்ளோ எல்லாம் கொடுக்கறேன் செய்யறேன்னு! மாசம் ஒரு பழைய புடவை, தினமும் டிபன் காபி, மிச்சம் மீதி சாதம் குழம்பு, கேக்கறப்பொ எல்லாம் பணம்.. வேற எந்த வீட்ல கிடைக்கும் இப்டி..? ஏதோ ஏழை பாழைக்கு சாப்பாடு போட்டு, தானம் பண்ணின புண்ணியம் கிடைக்கட்டுமேன்னு செஞ்சா அதே மாதிரி அவளும் வேலை ஒழுங்கா செய்ய வேண்டாமா?” 

“தர்மம் பண்ணிட்டு சொல்லிக் காட்டினா ஒரு புன்யமும் இருக்காது. அப்டின்னு நா சொல்லல. பகவத் கீதை சொல்றது.” 

“யத் து ப்ரத்யுபகாரார்த்தம் ஃபலம் உத்திஷ்ய வா புன:
கீயதே ச பரிக்லிஷ்டம் தத் தானம் ராஜஸம் ஸ்ம்ருதம் 

என்ன அர்த்தம் தெரியுமா இதுக்கு? எதையாவது எதிர் பார்த்தோ, பலன் கருதியோ, விருப்பமின்றியோ கொடுக்கப்படும் தானம் ரஜோ குணத்தைச் சார்ந்ததுன்னு சொல்லியிருக்கு. எதையும் எதிர் பார்க்காம செய்யற தானம் சத்வ குண தானம், தகுதியற்ற மனிதனுக்கு கொடுக்கப்படும் தானம் தமோகுண தானம் உனக்கு புண்யம் வேணும்னுநினைச்சா கொடுத்ததை அடுத்த வினாடியே மறந்துடு. கொடுத்தோமே கொடுத்தோமே ஒரு பலனும் இல்லையேன்னு புலம்பினா அதுக்கு பேர் தானமில்ல. அதைவிட எதுவும் செய்யாமயே இருக்கலாம்.” 

“என்னடா இன்னும் உபதேசம் எதுவும் ஆரம்பிக்கலை யேன்னு நினைச்சேன். ஆரம்பிச்சாச்சா?” 

“கரெக்ட்.. தகுதியற்றவரிடத்தில் உபதேசமும் பலன் தராது” சம்பத் சிரிக்க அவள் முறைத்தாள். 

“என்னம்மா இங்க யுத்தம்?” ஆகாஷ் அப்போதுதான் கீழே வந்தவன் அம்மாவிடம் கேட்டான். 

“யுத்தம்தான்.நீயார் பக்கம் நிக்கப் போற சொல்லு”அப்பா புன்னகையோடு கேட்டார். 

“தர்மத்தின் பக்கம்ப்பா!” ஆகாஷ் வலது கையை அருள் பாலிப்பது போல் வைத்துக் கொண்டு சொன்னான். சங்கீதா வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள். 

“நீயே சொல்லுடா ஆகாஷ்.நா பொல்லாதவளா?” அம்மா ஆதங்கத்தோடு கேட்டாள். 

“யார் சொன்னாம்மா அப்டி உன்னை?” 

“வேற யார் உங்கப்பாதான். ஒரு வேலைக்காரி கூட இந்த வீட்ல நிக்காததுக்கு காரணம் என் பொல்லாத்தனம்தானாம் முழ நீளத்துக்கு உபதேசம் வேற பண்றார். நா என்ன ராட்சஸியா என்ன?” 

”நீ என்னப்பா சொல்ற?” ஆகாஷ் அப்பாவைப் பார்த்துக் கேட்டான். 

“வேலைக்காரியும் மனுஷிதான். ஓயாம வேலை கொடுத்தா எந்த வேலைக்காரி இங்க நிக்க விரும்புவா. சோறு தண்ணி கொடுத்தா ஆச்சா? அவ மூச்சு விட நேரம் கொடுக்க வேண்டாமா?” 

”நீ என்னம்மா சொல்ற இந்த குற்றச்சாட்டுக்கு?” 

“நா ஒண்ணும் யாரையும் அப்டி மூச்சுவிட முடியாம வேலை வாங்கல! இதெல்லாம் அபாண்டம். வெளில போயிடறவங்களுக்கு வீட்டுல என்ன நடக்கறதுன்னு எப்டி தெரியும்?” 

“இதுக்கு நீ என்னப்பா சொல்ற?” 

“இங்க யார் உனக்கு ஜட்ஜ் உத்யோகம் கொடுத்தா?”

“கேட்ட கேள்விக்கு பதில்” 

“கடசியா வேலையை விட்டு நின்ன அந்த தங்கமோ வைரமா.. அவளைப்பார்த்தேன். கோடி ரூபா கொட்டிக் கொடுத்தாலும் உன் வீட்ல எவளும் வேலை செய்ய மாட்டாங்கய்யா அப்டிங்கறா! அதுக்கென்ன அர்த்தம்? உங்கம்மா படுத்தற பாடு தாங்க முடியலன்னுதானே.” 

“இதுக்கு நீ என்னம்மா சொல்ற?” 

“அந்த வேலைக்காரிய இவர் எதுக்கு பார்த்தார்? அவளோட இவருக்கு என்ன பேச்சு?” 

“எதுக்கு பார்த்த? ஏன் பேசின?” 

“ஏதேச்சையா பார்த்தேன். பேசினேன்! அதுக்கென்ன இப்பொ?” 

“அதுக்கென்ன இப்பொவா…? உங்கப்பா பொய் சொல்றார்டா ஆகாஷ். இவர் ஏதோ கசமுச பண்றார்.” 

“அதென்னப்பா கசமுச..?” 

“அவ பாஷைக்கு அர்த்தம் யாருக்கு தெரியும்?”

சங்கீதா விழுந்து விழுந்து சிரித்தாள். 

”ஓ.கே.ஓ.கே…” ஆகாஷ் இருவரையும் கையமர்த்தினான். “இந்த வழக்கை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். என் தீர்ப்பு என்னன்னா இந்த வீட்டுல எந்த வேலைக்காரியும் தங்கறதில்லங்கறது அம்மாவோட வருத்தம். வேலைக் காரியை சரியா நடத்தலங்கறது அப்பாவோட வருத்தம். இவங்க ரெண்டு பேர் வருத்தமும் மறையணும்னா அதுக்கு ஒரே வழிதான் இருக்கு. ஒரு நல்ல வேலைக்காரியா பார்த்து அப்பா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது. அப்பொ அந்த வேலைக்காரிக்கு ஒரு மரியாதையும் கிடைச்சுடும். அவ இந்த வீட்ல நிரந்தரமா தங்கி அம்மாவின் வருத்தத்தையும் போக்கிடுவா.. இதான் என் தீர்ப்பு… 

“உதைடி அவனை..”அம்மா டீபாய் மீதிருந்த பூச்சாடியை எடுத்துக் கொண்டு அவனை அடிக்கப் போக ஆகாஷ் வீடு பூராவும் சுற்றி சுற்றி ஓடினான். சங்கீதாவும் அப்பாவும் அவர்களைத் துரத்தினார்கள். 

“படவா.. இந்த வயசுல சித்தி கேட்குதோ உனக்கு…? கொன்னுடுவேன் கொன்னு…” 

”நல்ல தீர்ப்பு இல்லம்மா?” சங்கீதா அம்மாவை சீண்டினாள். 

”நாளைக்கு பேப்பர் கால் பக்கத்துக்கு விளம்பரம் கொடுத்துடு சங்கீதா. ஸ்மார்ட்டா, இளமையா அழகான பெண்கள் வேலைக்குத் தேவை. பதவியின் பெயர் இரண்டாவது மனைவி.”அப்பா தன் பங்குக்கு சீண்ட அம்மா கையில் கிடைத்த சாதனங்களையெல்லாம் எடுத்து எல்லார் மீதும் எறிந்தாள். 

“ச்சீ பாவம்ப்பா..” கடைசியாக சங்கீதா ஒரு வழியாய் எல்லாரது ஓட்டத்தையும் நிறுத்தி உட்கார வைத்தாள். 

“ஆனாலும் உனக்கு ரொம்ப கொழுப்பு அண்ணா”

“சும்மா தமாஷ்தானே” 

“இதுக்கு பனிஷ்மெண்ட் என்ன தெரியுமா?” 

“என்ன…?” 

“அப்பாக்கு கல்யாணம் பண்ணச் சொன்ன உனக்குதான் கல்யாணம்.”

”அது சரி…”ஆகாஷ் தோளைக் குலுக்கியபடி எழுந்தான். 

“ஏண்டா ஆகாஷ்.ஓடற..நீ என்ன இன்னும் குழந்தையா படிப்பு முடிச்சு கை நிறைய சம்பாதிக்கற. இனிமே என்ன கல்யாணம்தானே? பண்ணிக்கிட்டா என்ன?” 

“முதல்ல சங்கீதா கல்யாணம் ஆகி இந்த வீட்டை விட்டு போகட்டும்.”

”அவளுக்கென்னடா அவசரம் இப்பொ? அவ படிப்பு முடிய இன்னும் ரெண்டு வருஷமாவது ஆகும். அதுக்கப்பறம்தான் அவளுக்கு கல்யாணம்.” 

“ஆகட்டுமே. அதுக்கப்பறமே நானும் பண்ணிக்கறேனே. என்ன அவசரம் இப்பொ.” 

”அப்டி சொல்லாதண்ணா.. ஒரு அண்ணியும் இந்த வீட்டுக்கு வந்தா நம்ம வீடு இன்னும் கலகலன்னு ஆய்டும். அண்ணியோட நானும் ஜாலியா பேசி பொழுதைப் போக்குவேன். அப்பப்பொ சின்னச் சின்ன சண்டை போடுவேன். அம்மாவைப்பாரு. பாவமால்ல? அவளே எல்லா வேலையும் செய்யறா. மருமக வந்தா அவ வேலை குறையும் இல்ல?” 

”ஓஹோ உனக்கு சண்டைபோட ஒரு ஆளும், அம்மாக்கு வேலை செய்ய ஒருஆளும் வேணும்னா நா கல்யாணம் பண்ணிக்கணுமா? நல்ல கதைதான்!” 

“த பாருண்ணா… ரொம்ப பிடிவாதம் பிடிக்காதே..அப்பறம் நா எல்லாத்தையும் போட்டு ஒடச்சுடுவேன் சொல்லிட்டேன்.” 

“என்னத்தை போட்டு உடைப்ப?” 

“நீ எங்கெங்க போற, யார் யாரை பார்த்து பேசறன்னு சொல்லிடுவேன்.” 

ஆகாஷ் திகைப்போடு அவளைப் பார்த்தான். ஒருவேளை தன்னையும் சுஜிதாவையும் எங்கேயாவது சேர்ந்து பார்த்திருப்பாளோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. 

“என்னடா இப்டி முழிக்கற… அவ எதையோ போட்டு உடைப்பேங்கறா..என்ன கசமுச பண்ணின?” 

அப்பா, அம்மாவின் பாஷையில் கிண்டலாகக் கேட்டார். ஆகாஷ் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டான். 

”நா பாவம்ப்பா.. பச்சை குழந்தை மாதிரி ஒண்ணும் தெரியாது. இந்த குட்டிப் பிசாசு வேணும்னே ஏதேதோ சொல்றது. ‘” 

“ஆமாமா.. அண்ணா பாவம்ப்பா. பச்சைக் குழந்தை!”

“வாய்ல விரல் வெச்சா கூட கடிக்கத் தெரியாது”. 

“ஆனா ஆலு சப்பாத்தி வெச்சா ஆசையா சாப்டுவான்”. 

‘ஆகாஷ் திகைப்போடு அப்பாவையும் தங்கையையும் பார்த்தான். நேற்றிலிருந்து ஆலு சப்பாத்தி ஆலு சப்பாத்தி என்று இருவரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்றால்… மை காட் சரண்யாவின் வீட்டிற்குப் போய் சப்பாத்தி சாப்பிட்டது இவர்களுக்குத் தெரிந்து விட்டதா..? அதனால் சரண்யாவை அவன் காதலிப்பதாக முடிவு செய்து விட்டார்களா? அடராமா.. சிநேகத்தோடு ஒரு பெண்ணின் அறிவு பூர்வமாக பேச விரும்பிச் சென்றால் உடனே அதற்கு காதல் முலாம் பூசி விட்டார்களா? யார் சொல்லியிருப்பார்கள் தான் அங்கு சென்றதை? 

“என்னடா ஆகாஷ், இவ என்ன சொல்றா நீ என்ன பண்ணின அப்டி?” அம்மா குழப்பத்தோடு கேட்டாள். 

“எனக்கே புரியலம்மா” 

”பொய் சொல்றான். பொய் சொல்றான்”. 

“நீதான் போட்டு உடையேண்டி!’ 

‘அண்ணா யாரையோ லவ் பண்றாம்மா.” 

“தெய்வமே… இவ என்னடா சொல்றா.” 

”கொழுப்பும்மா! உன்னைக் குழப்பறா, அப்டி எல்லாம் எதுவுமில்ல.”

“எல்லாரும் பூசணிக்காயைத் தான் சோற்றுல மறைப்பாங்க. அண்ணா பூமி உருண்டையே மறைக்கறான்.”

“ஏய்…” 

“ஆலு சப்பாத்தின்னா அவனுக்கு உயிர்…”

“என்னடா சொல்றா இவ?” 

”சரண்யான்னா அதைவிட உயிர்! பாத்தயா எப்டி உடைச்சேன் உண்மைய!” 

ஆகாஷ் ஸ்தம்பித்துப் போனான். கோபம் ஒரு பக்கம் தர்மசங்கடம் ஒரு பக்கம் என தங்கையை விழித்துப் பார்த்தான்.

சாரதா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க பிள்ளையைத்துளைப்பது பார்த்தாள். 

“யாருடா சரண்யா?” 

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா இவ ஏதோ கதை விடறா.” 

‘யாரந்த சரண்யா?” அம்மா அடிக்குரலில் கேட்டாள். “கோபாலன் மாமாவோட பொண்ணும்மா. ஆனா இவ சொல்றா மாதிரி…” 

“நிறுத்துடா.. உன்னை புத்திசாலின்னு நினைச்சேன். போயும் போயும் அவதானா கிடைச்சா உனக்கு.. உன்னைச் சொல்லி குத்தமில்லடா மகனே. இதெல்லாம் யார் வேலைன்னு எனக்குத் தெரியும். இந்த நிமிஷம் சொல்றேன் கேட்டுக்கோ. யாரும் பகல் கனவு காண வேண்டாம். அவ இந்த வீட்டுக்கு மருமகளா வர முடியாது”. 

”ஏன் சாரதா அவளுக்கென்ன குறை?” 

“எனக்கு பிடிக்கல.”

”உம் பிள்ளைக்கு பிடிச்சிருக்கே. அப்பறம் என்ன?” 

“அப்பா!” ஆகாஷ் எரிச்சலோடு குறுக்கிட்டான். 

”நா சொன்னேனாப்பா அப்டி?”

“பின்ன அவளோட ஏண்டா அடிக்கடி பேசற? அவ வீட்டுக்கு போற! அவ கையால டிபன் சாப்பிடற. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?” 

”ஷிட்! என்னப்பா நீங்க. இதெல்லாம் பண்ணினா உடனே காதல்னு நினைச்சுடறதா? சரண்யா புத்திசாலியார்ந்தா நிறைய விஷயங்கள் பேசினா. அதனால ஜஸ்ட் ஃபிரெண்லியா.. அவளோட பேசினேன். நம்ம உறவுப் பெண்தானேன்னு உரிமையோட அவங்க வீட்டுக்கு போய் டிபன் சாப்ட்டேன். அதுக்கு இவ்ளோ அபத்தமான அர்த்தம் கற்ப்பீங்கன்னு நா நினைக்கல!” 

அப்பா அவனைத் திகைப்போடு பார்த்தார்

”டேய் ஆகாஷ்..நிஜமாவாடா சொல்ற.. இல்ல அம்மாக்கு பயந்துக்கிட்டு பொய் சொல்றயா?” 

”எனக்கென்னப்பா பயம்? நா யாருக்கும் பயப்படறவன் இல்ல. சரண்யாவோட சத்தியமா எனக்கு காதல் கீதல்னு எதுவும் கிடையாது.” 

”அதானே பார்த்தேன்” அம்மா நிம்மதியாக புன்னகைத்தாள். அப்பா அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தார். 

“தேங்க்ஸ்டா கண்ணா. என் வயத்துல பாலை வார்த்த. நம்ம அந்தஸ்துக்கேத்தாப் போல உனக்கு நா பார்க்கறேன் பொண்ணு. நீ கவலைப்படாதே” அம்மா சொல்ல ஆகாஷ் அவளையும் எரிச்சலோடு பார்த்தான். 

“நீயும் கனவு காண வேணாம்மா. நா சரண்யாவைக் காதலிக்கலன்னு சொன்னது உண்மைதான். ஆனா வேற எந்த பொண்ணையுமே நா காதலிக்கலன்னு சொன்னா அது பொய்!” 

”என்னடா சொல்ற..” அம்மா விழி பிதுங்க அவனைப் பார்த்தாள். 

அத்தியாயம்-10 

மேலான மனிதன் தேடுவது அவனுக்குள்ளேயே இருக்கிறது. சாதாரண மனிதன் தேடுவது மற்றவர்களிடம் இருக்கிறது. -கன்பூஷியஸ் 

திட்டங்கள் தீட்டுவதில் மனிதன் திறம் வாய்ந்தவன். பிறப்பு முதல் இறப்பு வரை அவன் போடும் திட்டங்கள் கணக்கிலடங்காதவை. அவை நிறைவேறுமா நிறைவேறாதா என்பதைப் பற்றியெல்லாம் எவரும் யோசிப்பதில்லை. தன் திட்டங்கள் தோல்வியடைந்தாலும் அதற்காக தன் குணத்தை மாற்றிக் கொள்ளவும் முயற்சிப்பதில்லை. அடுத்த திட்டம் பற்றி அவன் யோசிக்க ஆரம்பித்து விடுகிறான். திட்டமிடுவது மனித இயல்பெனில் அதை மாற்றிக் காட்டுவதே தன் இயல்பு என்பது போல் தெய்வம் மனிதனைச் சீண்டி பார்த்து பொழுது போக்கும் போலும். சரண்யாவை அவன் சந்தித்து விட்டால் நிச்சயம் அவனுக்கு அவளை பிடித்து விடும். அவனுக்கு பிடித்து விட்டால் சாரதாவால் கூட அதைத் தடுக்க முடியாது. தன் விருப்பப்படி சரண்யாவை அவனுக்கு கட்டி வைத்து விடலாம் என்று சம்பத் போட்டிருந்த திட்டமும், தன் அந்தஸ்துக்கேற்றபடி ஒரு பெண்ணைத்தான் அவனுக்கு கட்டி வைக்க வேண்டும் என்று விரும்பிய அம்மாவின் திட்டத்தையும் காதல் என்ற மூன்றெழுத்து மந்திரத்தால் தவிடு பொடியாக்கி விட்டான் ஆகாஷ். இருந்தாலும் அவர்கள் மனம் தளரவில்லை. மனம் விட்டு தனித்தனியே அவனோடு பேச முயன்றார்கள். சாரதாவை விட சம்பத்தின் மனம்தான் அதிக கவலையில் ஆழ்ந்திருந்தது. மகன் வேறொரு பெண்ணை விரும்புகிறான் என்பதைவிட, இவன் தன்னைக் காதலிக்கிறான் என்று எண்ணி இவன் மீது காதலாகி கசிந்துருகிக் கொண்டிருக்கும் சரண்யாவை நினைத்துதான் அவர் அதிகம் கவலைப்பட்டார். 

சும்மா கிடந்த சங்கை அவர்தான் ஊதினார். அது தவறோ என்று தோன்றியது இப்போது. சரண்யாவுக்கு உண்மை தெரிந்தால் அவளால் இதைத் தாங்க முடியுமா? எல்லாவற்றிற்கும் காரணம் நீங்கள்தானே மாமா என்று அவள் அவரிடமே நியாயம் கேட்டால் என்ன செய்யப் போகிறோம் என்று குழம்பினார். எந்த முகத்தோடு இனி கோபாலனையும் சரண்யாவையும் பார்க்கப் போகிறோம் என்று புரியவில்லை. ஆகாஷ் ஒருவேளை அம்மாவுக்கு பயந்து பொய் சொல்லுகிறானோ என்ற சந்தேகம் ஏற்பட்டது அவருக்கு. எனவே அவனிடம் தனிமையில் பேசினால் அவன் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரிந்துவிடும் என்று நம்பினார். அதற்கான நேரம் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு நாலு நாள் கழித்துதான் ஒருநாள் மாலை கிடைத்தது. அதிசயமாக அன்று வீட்டிலிருந்தான் அவன். சாரதா சங்கீதாவை அழைத்துக் கொண்டு கோயிலுக்குப் போயிருந்தாள். மொட்டை மாடியில் வாக்மேனில் பாட்டு கேட்டபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ். 

“என்ன பாட்டுடா இவ்ளோ சுவாரசியமா கேக்கற?” 

ஆகாஷ் திரும்பினான். அப்பாவைப் பார்த்ததும் வாக்மேனை அணைத்துவிட்டு ஹெட் போனைக் கழற்றினான். 

”என்னப்பா?” 

“என்ன கேஸட்னு கேட்டேன்.” 

“யேசுதாசோட செமி கிளாஸிகல் மலையாளப் பாடல் கள்ப்பா. பிரெண்டு ஒருத்தன் கொடுத்தான். அவ்ளோ இனிமையா இருக்கு. நமக்கும் ரெக்கார்டு பண்ணி வெச்சுக்கணும். கேக்கறயா?” 

“இருக்கட்டும். அப்பறம் கேக்கறேன். நா உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்னு வந்தேன்.” 

“என்ன விஷயம்?” 

“அன்னிக்கு நீ சொன்னயேடா ஆகாஷ்… அது நிஜமா… இல்ல அம்மாக்கு பயந்துக்கிட்டு சரண்யாவை லவ் பண்ணலன்னு பொய் சொன்னயா?” 

ஆகாஷ் புருவம் நெறிய அப்பாவைப் பார்த்தான். 

“இப்பவும் அதையேதாம்பா சொல்றேன். சரண்யாவோட சாதாரணமாதான் பேசினேன். வீட்டுக்கு வரச் சொல்லி அவ கூப்ட்டதால போனேன். உறவுக்காரங்கன்ற உரிமைல் ஆலு சப்பாத்தி பண்ணி வெக்க சொல்லி சாப்ட்டேன். அவ்ளோதான். இதுக்கு வேற எந்த உள் நோக்கமும் இல்ல.” 

“அப்டின்னா சரண்யாவை உனக்கு பிடிக்கலையா?” 

“பிடிக்காம என்ன? அவ புத்திசாலித்தனம்,பேச்சு, சுறுசுறுப்பு, எளிமை எல்லாமே பிடிச்சதனால் தானே அவளோட பேசறேன். ஆனா உடனே அதுக்கு காதல்னு ஒரு தலைப்பு வெக்கறதைத்தான் என்னால சகிச்சுக்க முடியல.” 

”சரண்யாகிட்ட எதுவுமில்ல சரி. ஆனா வேற யாரையோ… அது உண்மையா?” 

ஆகாஷ் அப்பாவைப் பார்த்து சிரித்தான். 

“உண்மைதாம்ப்பா. ஏன் என்னைப் போய் எவ காதலிக்கறான்னு சந்தேகமா?” 

“ச்சீ அப்டியில்லடா.. உனக்கு உன் ஆபீஸ், பிஸினஸ்.. இதுக்கே நேரம் பத்தலையே. அப்பறம் எங்க இதுக்கெல்லாம் கூட நேரம் இருக்கப் போறதுன்னு நினைச்சேன். ஆனா இருக்கே. அதான் அதான் ஆச்சர்யம். அதுசரி யாரந்த பொண்ணு. இதே ஊரா இல்ல வெளியூரா..?” 

”மும்பை பொண்ணு. இப்போதைக்கு இங்கே பேஷன் டிஸைனிங் படிக்கறா?” 

“எவ்ளோ நாளா பழக்கம்?” 

“இப்பொதான் ஒரு நாலஞ்சு மாசமா”. 

“நல்ல பொண்ணா? நல்ல குடும்பம்தானா?” 

“எதையும் விசாரிக்காம இயல்பா ஏற்படறதுதாம்பா காதல். இருந்தாலும் நீ கவலைப்பட வேண்டாம். நல்ல குடும்பம்தான். நல்ல பொண்ணுதான். என்ன.. அம்மா மாதிரி கொஞ்சம் அலட்டலும் ஜபர்தஸ்ஸும் உண்டு.” 

“போச்சுடா… அதானே வம்பே..! கடசில உன் வாழ்க்கையும் என்னாட்டமாதான் ஆகணுமா?” 

ஆகாஷ் சிரித்தான். “நிறையும் குறையும் நிறைஞ்சவங்கதான் மனுஷங்கப்பா. நிறைகளை மட்டும் பார்ப்போமே! அம்மா நல்லவதான். அந்தஸ்து பார்க்கறது பெரிய குறைன்னு நினைச்சா குறைதான்.” 

“பொண்ணு பணக்காரியா?” 

“ம்… நம்பளை விடன்னே சொல்லலாம்.. ஆனா நா அதுக்காக காதலிக்கல.” 

”நா அப்டி சொல்லலையே. ஒருவேளை அவ நம்பளைவிட அந்தஸ்து குறைஞ்சவளா இருந்திருந்தா அப்பொ உங்க அம்மாவோட குணம் உனக்கு பெரிய குறையா தெரியும். உபத்திரவமில்லாத வரைக்கும் எந்த குறையும் பெரிசா தெரியாது.” 

ஆகாஷ் அடிபட்டாற்போல் அப்பாவைப் பார்த்தான். அவர் சொல்வதிலும் ஒரு நிஜமிருக்குமோ என்று தோன்றியது. இருந்தாலும் ஒருவேளை சுஜிதா ஏழையாகவே இருந்தாலும் கூட அம்மாவை எதிர்த்துக் கொண்டு கல்யாணம் செய்து கொள்ள தான் தயங்க மாட்டோம் என்று நினைத்தான் அவன். அப்பா அவன் தோளைத் தொட்டார். “இனிமே உங்கிட்ட பேசறதுக்கு எதுவுமில்லடா ஆகாஷ்.நாமஏதேதோ கணக்கு போடறோம். ஆண்டவனும் கணக்கு போடறான். அவன் கணக்கு நம்ம கணக்கும் சரியார்க்கும்போது நாம நினைக்கறது நடக்கறதா நினைக்கறோம். தப்பா போகும்போது? மேன்புரொபோஸஸ் காட் டிஸ்போஸஸ்னு வேதாந்தம் பேசுவோம்.” 

“இதை எதுக்குப்பா இப்பொ சொல்ற?” 

“உனக்கு சொல்லலடா. எனக்கு சொல்லிக்கிட்டேன். ஓகே நீ பாட்டு கேளு.. நா போறேன்” சம்பத் கீழே இறங்கிச் செல்ல ஆகாஷ் அப்பாவையே எதுவும் புரியாமல் பார்த்தான். 

அப்பா பேசியதற்குப் பிறகு நாலைந்து நாள் கழித்து அம்மா அவனிடம் அதே பேச்சை மெதுவாக ஆரம்பித்தாள்.

“ஏண்டா ஆகாஷ்.. அன்னிக்கு ஏதோ லவ்வு கிவ்வுன்னு உளறினயே.. அதெல்லாம் சும்மா தானே! வழக்கம் போல விளையாட்டுக்குதானே சொன்ன?” 

“உனக்கெப்டி தோண்றது?” 

‘சும்மா விளையாட்டுக்கு சொன்னாப்பலதான்தோண்றது.”

“சும்மால்லாம் இல்ல. நிஜமாதான் சொன்னேன்.”

அம்மா கவலையோடு அவனைப் பார்த்தாள். 

“யாருடா அந்த பொண்ணு? நம்ம அந்தஸ்துக்கு ஏத்தவதானா?” 

“அந்தஸ்துக்கு ஏத்தவளா இருந்தாதான் காதலிக்கணுங்கறயா?”  

“நிச்சயமா!” 

“அந்தஸ்துல என்னம்மா இருக்கு?” 

”எனக்கு இருக்குடா.. எல்லாமே அதுலதான் இருக்கு. இப்பொ இளமைத் திமிர்ல உங்களுக்கெல்லாம் கண்ணு மண்ணு தெரியாது. புத்தி வேலை செய்யாது. புரட்சி பண்றதா நினைச்சு அபத்தமா பேசுவீங்க.” 

ஆகாஷ் அம்மாவை அமைதியாகப் பார்த்தான்.

“அந்தஸ்துங்கறது மனுஷனுக்கு எப்டி வரதும்மா?”

அம்மா பதில் சொல்லத் தெரியாமல் விழித்தாள். 

”நீ பொறக்கும்போது இதைப்பத்தி உனக்கு தெரியுமா? யாரும் ஏழையா விரும்பி பிறக்கறதில்லையே. பணம் அந்தஸ்து எல்லாம் போகிற போக்கில் மனிதன் தானா தேடிக்கற விஷயங்கள்மா. அதுக்கு போய் நீ இவ்ளோ முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்னு தோண்றது. இருந்தாலும் இப்போதைக்கு நா உண்மையைச் சொல்லிடறேன். அந்த பொண்ணு நம்மளை விட பணக்காரி. படிச்சவ. கோடீஸ்வர குடும்பத்துல பொறந்து கஷ்டம்னா என்னன்னே தெரியாம வளர்ந்தவ. இதெல்லாம் காதலிக்க ஆரம்பிச்சப்பறம் எனக்கு தெரிஞ்ச விஷயங்கள். ஒருவேளை அவ ஏழையா இருந்திருந்தாலும் நா கவலைப்பட்ருக்க மாட்டேன். ஒருவேளை இனிமே ஏழையா ஆனாலும் வருத்தமில்ல. அவளை எனக்கு பிடிச்சிருக்குங்கறதுதான் எனக்கு முக்கியம்”. 

அவன் நிறுத்திவிட்டு அம்மாவைப் பார்த்தான். அவள் முகம் மலர்ந்து பிரகாசமாயிருந்தது. அவன் அறிவுரைகள் அவளுக்குள் ஏறியதாய்த் தெரியவில்லை. பெண் கோடீஸ்வரி என்ற விஷயத்தில் அவள் அகமகிழ்ந்து போயிருந்தாள்.அவன் கவலையும் பயமும் காணாமல் போயிருந்தன. ஒரு வேளை ஏழையாயிருந்தால் என்று அவள் யோசிக்க முற்படவேயில்லை. ஏதோ ஒரு அடைப்பு சட்டென்று நீங்கி விட்டதாய் நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டாள். ஒரு புன்னகையோடு போய் விட்டாள். ஆகாஷ் கவலையோடு அவளைப் பார்த்தான். அம்மா நல்லவள்தான். அதில் எந்த சந்தேகமும் அவனுக்கில்லை. தூய்மையான கங்கை நீரில் மாசுகள் கரைவது போல் அவளுக்குள் கலந்திருக்கும் அழுக்குகளைப் பற்றி தான் அவன் கவலைப்பட்டான். மாசு படிந்தவன்தான் மனிதன். தெளிவாயிருப்பவன் ஞானி. தெளிவதற்கு பெரும்பாலானோர் முயற்சிப்பதில்லை என்பதுதான் நிஜம்.’ 

“எப்போது வேறு வித எண்ணம் மற்றவர்களுக்கு ஏற்பட்டு விட்டதோ அதன் பிறகு சரண்யாவோடு சகஜமாய் பழகுவதற்கு யோசித்தான் ஆகாஷ். அவள் மனதில் என்ன இருக்கிறதோ தெரியாது. ஒருவேளை அவளும் எவ்வித நோக்கமுமின்றி பேசியிருந்தால், இந்த விஷயங்கள் அவள் மனதையும் காயப்படுத்தக் கூடும் என்று நினைத்தான். அல்லது அவள் மனதில் காதல் என்ற எண்ணம் இருக்குமாயின் அது ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். தான் சகஜமாகப் பேசுவது, அவளது நம்பிக்கையை வளர்த்து விடக் கூடாது. இப்படி நினைத்தவன் அதன்பிறகு சரண்யாவின் வீட்டுக்கு இனி செல்ல வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தான்.” 

”அவன் வீட்டில் நடந்தவை எதுவும் தெரியாத சரண்யா அதன்பிறகு ஏன் அவன் வரவேயில்லை என்று யோசித்தாள். ரொம்பவும் பிஸி போலிருக்கிறது என்று சமாதானம் செய்து கொண்டாள். முன் போல் வழியில் எங்காவது கூட அவனைப் பார்க்க முடியவில்லை. அவன் வராதது பற்றி கூட அவள் கவலைப்படவில்லை. மாமாவைக் கூட ஏன் காணவில்லை என்றுதான் குழம்பினாள். மாதத்தில் நாலைந்து முறையாவது இந்தப் பக்கம் எட்டிப் பார்த்து பத்து நிமிஷமாவது பேசி விட்டுப் போகிறவர் ஒரு மாசமாக ஒரு முறை கூட வராமலிருந்தது என்னவோ போலிருந்தது. பொறுக்க முடியாமல் அப்பாவிடம் கூடக் கேட்டு விட்டாள். 

”சம்பத் மாமா ஏம்ப்பா வரதேல்ல. உடம்பு கிடம்பு சரியில்லையா? உனக்கேதாவது தெரியுமா?” 

“அதானே எங்க அவரை ஆளைக் காணும்?” 

அப்பா அவளையே திருப்பிக் கேட்டார். 

”நா உன்னைக் கேட்டா நீ என்னைக் கேக்கறயே!” 

”நானும் அவரைப் பார்த்து நாளாச்சும்மா. ஒருவேளை சம்பந்தியாகப் போறோம்னு பந்தா எல்லாம் பண்ணிக்கறாரோ என்னவோ.” 

“அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. அவருக்கு எவ்ளோ வேலையோ.” 

“ஆகாஷ் கூட அப்பறம் வரல இல்ல?'” 

”வரேன்னு அவர் ஒண்ணும் சொல்லலையே. இதைவிடு. உங்க படம் எப்டி? வேலை வேகமா நடக்கறாப்பல இருக்கு!’ 

”ம்… நடந்துட்ருக்கு!” அப்பா சுரத்தில்லாமல் சொல்ல சரண்யா கேள்வியோடு அவரைப் பார்த்தாள். 

“என்னப்பா…?” 

”என்னமோ போறது. மனசுக்கு பிடிச்சா செய்யறோம்? காசுக்கு தானே?” 

“பிடிக்காட்டி ஏன் சிரமப்படணும்?” 

“உன் கல்யாணத்துக்கு நாலு காசு சேர்த்ததும் ஒதுங்கிடுவேன். பெரிய இடத்துக்கு போகப் போற. அங்க இல்லாத காசா பணமா? இருந்தாலும் நம்ம மரியாதையக் காப்பாத்திக்கணும் இல்ல?” 

“சரண்யா அப்பாவை பரிதாபத்தோடு பார்த்தாள். இரண்டு பெண்களும் திருமணமாகிபோய் விட்டால் தான் தனித்து இருக்க வேண்டி வருமே என்று அவர் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை என்றாலும் சரண்யாவுக்கு அந்த கவலை இருந்தது. இப்போது பரவாயில்லை. உடலில் வலு இருக்கிறது.எப்படியோ சமாளித்துக் கொள்வார். ஆனால் காலம் இப்படியே இருந்து விடுமா.. முதுமை படரப் படர வலு விழந்து உடல் தளரும்போது உதவிக்கு ஆளில்லாமல் என்ன செய்வார் என்ற கவலை அவளுக்குள் நிறைய இருந்தது.சில நேரம் அதை நினைத்தே தான் திருமணமே செய்து கொள்ளாமல் அப்பாவுக்குத் துணையாய் இப்படியே இருந்து விடுவது என்று கூட இருந்திருக்கிறாள். ஆகாஷைப் பார்த்த பிறகுதான் அந்த எண்ணம் மெல்ல மெல்ல வலுவிழந்திருக்கிறது.’ 

“ஒரு பக்கம் ஆகாஷ் மீது அன்பு மற்றொரு பக்கம் அப்பாவைப் பற்றிய கவலை, இரண்டுக்கும் இடையில் அவள் மனம் அல்லாடியது.பெண்களைக்கட்டிக் கொடுத்த இடத்தில் போய்காலம் கழிப்பது கௌரவக் குறைச்சல் என்று எவர் விதி எழுதி வைத்தார்களோ தெரியவில்லை. எல்லா பழக்க வழக்கங்களையும் மனிதன் தனக்குள் மிக அழுத்தமாக பதித்துவைத்துக் கொண்டிருக்கிறான். ஏன் எதற்கு என்ற கேள்வியின்றியே தலைமுறை தலைமுறையாய் அவை தொடர்கின்றன. பெண் என்றால் பொன்னும் பொருளும் கொடுத்தனுப்புவது, கல்யாணச் சீர், தலை தீபாவளிச் சீர், சீமந்தச் சீர், பிள்ளைப் பேறு சீர் என்று எல்லா செலவுமே பெண்ணைப் பெற்றவனுக்குதான். பொறுமையாயிரு, அனைவரையும் அனுசரித்துப் போ, புருஷன் மனம் கோணாமல் நடந்து கொள் என்று எல்லா உபதேசமும் பெண்ணுக்குதான். இந்த உலகம் எந்த ஆணுக்கும் உபதேசம் செய்ததாய் சரித்திரமே இல்லை. முற்காலத்தில் பெண் படிப்பறிவோ, சம்பாத்யமோ இன்றி எல்லா வகையிலும் ஆணைச் சார்ந்திருந்தாள். எனவே அத்தகைய சூழலில் அவளுக்கு உபதேசம் செய்யப்பட்டிருக்கலாம். அவள் நல்லபடி வாழ பொன்னும் பொருளும் கொடுத் தனுப்பியிருக்கலாம். அதே பழக்க வழக்கங்கள், இன்றும் தொடர்வதுதான் விந்தையாயிருக்கிறது. இன்று பெண் தன் காலில் நிற்கிறாள். கல்வியறிவோடு இருக்கிறாள். இருந்தும் திருமண விஷயத்தில் மட்டும் இன்னும் விலை பொருளாகவே இருக்கிறாள் என்பது வேதனையான உண்மை. சில பழக்க வழக்கங்களிலிருந்து மனிதன் மீளவில்லை என்பதற்கு இதுவே சான்று. இதுபற்றி யாரும் யோசிப்பதில்லையா. இல்லை யோசிக்க விரும்புவ தில்லையா?” 

கதவு தட்டப்பட அவள் சிந்தனை கலைந்தது. அப்பா போய் கதவைத் திறந்தார். வெளியில் அக்கா நின்றிருந்தாள். தனியாக! அவள் முகம் சரியில்லை. 

”என்னம்மா நீ மட்டும் வந்திருக்க? மாப்ள வரலையா உன் கூட” 

அக்கா பதில் சொல்லாமல் உள்ளே வந்தாள். அப்பாவின் முகத்தில் கவலை படர்ந்தது. 

“என்ன தாயி… ஏன் என்னமோ போல ருக்க? புருஷனோட ஏதாவது மனஸ்தாபமா…?” 

‘அக்கா பதில் சொல்லாமல் முழங்காலில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள். 

அப்பா சரண்யாவை பதற்றத்தோடு திரும்பிப் பார்த்தார். சரண்யா அக்காவிடம் வந்தமர்ந்தாள்.

“என்னக்கா நடந்தது. உன்னை அங்க சரியா நடத்தலையா? படுத்தறாங்களா? சொன்னாத்தானே என்ன ஏதுன்னு கேட்கலாம்”. 

சத்யா அழுகையை நிறுத்தவில்லை.

– தொடரும்…

– வருவாள், காதல் தேவதை… (நாவல்), முதற் பதிப்பு: 2012, தேவி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

2 thoughts on “வருவாள், காதல் தேவதை…

    1. We are publishing 5 athiyayam every other day, please subscribe to our social media to get notified. Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *