எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 20, 2024
பார்வையிட்டோர்: 10,414 
 

(1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

4ஆம் அத்தியாயம் 

தியாகம்தான் காதற்கோட்டையின் அஸ்திவாரம் என அவன் எங்கோ படித்திருந்தான். அந்த வகையில்தான் உமாவும் செயலாற்றி வருகிறாள் என்பதை ரகு மிகவும் எளிதில் புரிந்துகொண்டான். ஒரு பெரிய இடத்துப் பெண் தான் விரும்பும் ஒருவனின் சொல்லை மதித்துத் தன் சொந்த விருப்பு வெறுப்புக்கு இடமின்றித் தன்னையே முற்றிலும் மாற்றியமைத்துக்கொண்டதை எண்ணியபோது அவளுக் காக இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் செய்ய லாம் என்ற மனப்பான்மை ஏற்பட்டது ரகுவுக்கு. 

இப்படிப் படிப்படியாக ஆரம்பித்த அவர்கள் நட்புக்: கண்டு காதலாகப் பரிணமித்தபோது அவர்கள் தனிமையை விரும்பி இரவு வெகுநேரம் கழிந்த பின் யாருக்கும் தெரி யாமல் பின்புறத் தோட்டத்தில் சந்திக்கத் தொடங்கினர். எல்லோரும் தம்மை மறந்து ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது இவர்கள் மட்டும் பின்புறம் அமைந்துள்ள கலட்டியில் பல மணிக்கணக்காக இருந்து பேசுவார்கள். ஆயினும், ஒரு போதாயினும் அவர்கள் நெறி தவறியதில்லை. 

“ரகு” என்பாள் அவள். “என்ன உமா”  என்பான் அவன் அவளை அருகில் அணைத்தபடி. “எவ்வளவு அன்பாக இணைந்திருக்கிறோம் பார்த்தீர்களா…? இனி எம்மை எவராலுமே பிரிக்கமுடியாது!” என்று குழைவாள் அவள். 

“இணைப்பு இறுக்கமாகத்தான் உள்ளது. ஆனாலும் எனக்கென்னவோ எமது உறவைப்பற்றி நினைக்கும்போது அச்சமாகத்தான் இருக்கிறது. பற்களை இழந்தவன் ஒடியல் தின்ன ஆசைப்படுவது எவ்வளவு தப்பிதமோ அது போல ஒருவித தகுதியும் அற்ற நானும் உன்னை அடைய வேண்டும் என்று நினைத்ததே தவறுதானே உமா. இது உனக்குத் தகாத உறவு மறந்துவிடு என்கிறது அறிவு. ஆனால், மறக்க முடியாமல் தவிக்கிறது மனம். உன் பெற்றோருக்கு எமது உறவு தெரிய வந்தால் அவர்கள் இதற்கு நிச்சயமாக சம்மதிக்கப்போவதில்லை. 

“ஹும் ! இன்பமான நேரத்தில் எதற்காக இப்படிப் பேசுகிறீர்கள். எம்மைக் கடவுள் எப்படியாவது ஒன்று சேர்த்து வைப்பார். அபசகுனம் போல் நீங்கள் வேண்டா த்தை எல்லாம் பேசி என்னையும் கவலைக்குள்ளாக்கா தீர்கள். இப்போ நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக் கிறோம் ரகு… . எமது வாழ்நாள் முழுவதுமே இப்படி இருந்து விட்டால். . ..? 

“உம் நிஜமாகவா உமா…? இந்த ஏழையின் மேல் உனக்கு அத்தனை கொள்ளை அன்பா . . . . என்று அந்த கூறிக்கொண்டே அவன் அவளை நெருங்குவான். அன்புச் சிறைக்குள் கைதியாகாமல் தப்பித்துக் கொண்டே தன் வெற்றிப் பெருமிதத்தை கலுக் என்று சிரித்து வெளிக்காட்டுவாள் அவள். 

“தப்பிவிட்டேன் என்ற கர்வமாக்கும்….எப்படியோ ஒரு நாள் என் அன்புப்பிடிக்குள் அகப்பட வேண்டியவள்தானே நீ….?” என்று கூறி அவனும் அவளுடன் சேர்ந்து சிரிப்பான். 

இப்படியாகக் கடந்த குறுகிய காலத்திற்குள் அவர்கள் இருவரும் இன்பமாகச் சந்தித்த சம்பவங்கள் அனேகம் ! அவற்றை எல்லாம் அவன் மறந்து விட முடியுமா….? 

உலர்ந்த வர்ணம் போல அந்த இனிய நினைவுகளும் அவன் மனதில் அழியாத ஓவியமாகிவிட்டன. நினைவு வர்ணத் தூரிகையால் எண்ணங்களைக் கொண்டு அழகுப் பிம்பமாக அவன் இதயத்தில் வரையப்பட்டுவிட்ட அந்தப் பளிங்குச் சிலையை அவனால் அழிக்கவும் முடியாது மறைக்க வும் முடியாது. ஆயினும் இன்றைய நிலையில் அவன் அவளை மறந்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு இருக்கும்போது அந்த இனிய நினைவுகளும் மாண்டு மண்ணோடு மண்ணாகப் போக வேண்டியவை தானே ! 

ஐந்து வயதில் அறியாத பருவத்தில் இருந்து அவனை எடுத்து வளர்த்து வந்த சின்னையாவின் வார்த்தை களுக்கு அவன் மதிப்பு கொடுத்துத்தான் ஆக வேண்டும். அது அவனது கடமை. ” என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு ‘, என்பது வள்ளுவர் வாக்கு. ஒரு உற்ற தந்தையின் தானத் தில் இருக்கும் சின்னையாவின் மனம் புண்படும்படி அவன் நடக்கவும் மாட்டான், நடக்கவும் கூடாது. 

அப்படித்தான் இல்லையென்று சின்னையாவின் சொல்லைத் தட்டிப் போனாற்கூட உமா அவனுக்குக் கிடைக்கக் கூடியவள்தானா என்று அவன் மனம் சிந்திக்கத் தொடங்கியது. அப்படியொரு திருமணத்தைக் கனவிற் கூடக் காணத் தகுதியற்றவன் என்ற உண்மையைப் புரிந்து கொண்டான். உமா எவ்வளவு சுலபமாக எழுதிவிட்டாள்? 

நம் திருமணத்தை இரகசியமாக முடித்துவிடுவோம் என்ற வரிகள் அவன் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தன. அவன் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான். இத் திருமணம் பகிரங்கமாக நாலு பெரியவர்கள் மத்தியில் நடக்கக்கூடிய ஒன்றல்ல என்பது உமாவே உணர்ந்து கொண்ட பின்பும் அவள் மனதில் ஒரு சபலம் ! அவன் மீண்டும் சிரித்தான். இம்முறை வாய்விட்டுப் பைத்தியக் காரத்தனமாகச் சிரித்தான். 

உமாகூடத் தன் அந்தஸ்தின் பெறுமதியை அளந்து தான் எழுதி இருக்கிறாள். அந்தஸ்தின் ஏற்றத் தாழ்வை உணர்ந்துதான் திருமணத்தை இரகசியமாக நடத்தும்படி கேட்டிருக்கிறாள்… அவன் தன்னை மறந்து பெருமூச் செறிந்தான். 

“ரகு.. தம்பி…ரகு” கிழவரின் குரல் வெளிப்புறம் இருந்து ஒலிக்கிறது. அவன் தன் கையில் இருந்த உமாவின் துண்டுக் கடிதத்தைச் சட்டைப் பைக்குள் மறைத்துவிட்டு எழுந்து சென்று கதவைத் திறக்கிறான். 

சின்னையா கலவரம் நிறைந்த விழிகளால் அவனைப் பார்க்கிறார். அவர் கண்களில் நீர் கோர்த்துள்ளது.. உன் மனதை மிகவும் நோகச் செய்து விட்டேனாக்கும் ரகு …… நான் என்ன செய்யட்டும் ? என் மனத்தில் பல மணிநேரம் நடந்த போராட்டத்தின் பின் உன் நன்மை யையும் எதிர்காலத்தையும் உத்தேசித்தே இதை உன்னிடம் கூறத் தீர்மானித்தேன். நீ பயப்படவேண்டாம் ரகு என் பிள்ளைகளுக்குக் கூட இதுபற்றித் தெரியவராது. அவர்கள் தெரிந்து கொள்ளவும் கூடாது. அந்த வகையில் நீ என்னைக் கடைசிவரை நம்பலாம். ஆயினும், உனக்கு இன்னும் ஒரு புத்திமதி கூற விரும்புகிறேன் ரகு. நீ பிடித்திருப்பது பெரிய கொப்பு. அதில் தொற்றி ஏறிக்கொள்வது மிகவும் கடினம். அதனால் அந்த முயற்சியைக் கை விட்டுவிடு. ஏற முயன்று தற்செயலாகத் தவறி விழ நேர்ந்தாலும் அந்த வீழ்ச்சியை உன்னால் தாங்கிக்கொள்ள முடியாமல் இருக்கும். அதனால் எதையும் சிந்தித்துச் செய். இப்போது நீ களைத்திருக்கிறாய். உன் மனவேதனை மாறுவதற்காக நீ எங்காவது வெளியே உலாவிவிட்டு வாப்பா….!< என்று பாசத்தோடு கூறிவிட்டு அப்பால் நகர்ந்து கொண்டார் சின்னையா. 

சின்னையா அனுபவம் மிக்கவர். கடந்த அறுபது ஆண்டுகளாக இந்த உலகத்தின் மேடு பள்ளங்களை நன் றாக அளந்து வைத்திருப்பவர். அதனால் அவர் கூறியதில் எந்தவிதமான தவறும் இருக்கமுடியாது என்பதே ரகுவின் கருத்தும். பெற்ற தந்தையைவிட மேலான பாசத்துடன் அவர் அவனுக்குப் புத்தி கூறிவிட்டார். எவ்வளவு பரந்த மனப்பான்மை. தான் பெற்ற பிள்ளைகளுக்குக்கூடக் கூறமாட்டேன் என்கிறாரே ! இந்தக் காலத்தில் இப்படி ஒருவரைக் காண்பதே அரிதுதான். அந்த மகிழ்ச்சி ஒரு கண நேரம் அவன் மனதில் இருந்த துன்பத்தையெல்லாம் மறக்கச் செய்தது. அந்தப் பெருமிதத்தில் அவன் உள்ளம் விம்மிப் பூரிப்படைய உலவுவதற்காக வெளியே சென்றான். 

தன் வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில் உள்ள சின்னப் பிள்ளையார் கோயிலடிவரை சிறிது உலவப் போகலாம் என்ற நினைவில் வெளியே இறங்கி நடந்தான். வழக்கமாக அவன் போகும் இடந்தான் அது. என்றாலும் நாளாந்தம் அவன் மனதில் இருக்கும் துடிப்பும் மகிழ்ச்சியும் அன்று இருக்கவில்லை. பல சிந்தனைகளின் மத்தியில் அவன் கோவிலடிவரை நடந்து சென்றுவிட்டுத் திரும்பிக்கொண் டிருந்த சமயம் அவன் சமீபத்தில் அவனை உராசியபடி நின்றது ஒரு மோட்டார். அந்தக் கிராமாந்தரப் பகுதியில் அப்படியொரு பெரிய காருக்குச் சொந்தமானவர் ஏகாம் பரம் மட்டுந்தான் என்பது அவன் அறிந்த உண்மை. ஆகவே, அவன் ஆச்சரியப்பட்டதில் எந்தவிதத் தவறு மில்லைதான். 

உமாதான் தனது சிறிய தம்பியோடு வழக்கமாக * ஈவினிங் ட்றைவ்’ போய்விட்டு வருகிறாளாக்கும் என்ற எண்ணத்தில் நிமிர்ந்த அவன் விழிகள் பயத்தினால் பட படத்தன. உடல் பதறியது. அங்கே ஸ்ரியறிங் வீலை அழுத்தமாகப் பிடித்தபடி அவனை ஒரு தினுசாகப் பார்த்து நின்ற ஏகாம்பரத்தைக் கண்டதும் அவனுக்கு என்ன செய் வதென்றே தெரியவில்லை. 

அவன் மௌனமாக அவ்விடத்தைவிட்டு அகன்று விட எத்தனித்தபோது ‘இப்படிக் காருக்குள் ஏறிக் கொள் தம்பி. உன்னுடன் தனிமையில் பேசுவதற்குத்தான் ஒரு சந்தர்ப்பத்தைப் பார்த்திருந்தேன். கடவுள் விட்ட மாதிரி நீயே வந்துவிட்டாய்….ம். ஏறிக்கொள் ‘ கூறி விட்டு அவர் உட்புறமாகத் திரும்பிப் பின்பக்கக் கதவைத் திறந்தார். அந்த அதிகாரக் குரலுக்குக் கட்டுப்பட்ட ரகு மறுவார்த்தையின்றி உள்ளே ஏறி அமர்ந்துகொண்டான். அதைத் தொடர்ந்து புழுதியைக் கிளப்பிக்கொண்டு பறந் தது கார். எங்கே போகிறோம்… எதற்காகப் போகி றோம்….என்று கேட்கும் துணிவற்றுச் சித்திரப் பாவை போல் காருக்குள் இருந்த ரகுவின் உள்ளம் வேதனை யால் துடித்தது. வீட்டில் இருந்து நிம்மதிக்காகப் புறப் பட்ட அவனுக்கு இப்படியொரு சோதனை காத்திருக்கவே வேண்டாம். 

திடீர்ப் பரீட்சைக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் மாணவனின் நிலையில் இருந்தான் ரகு. உமாவின் தகப்பனார் என்ன கேள்விகளைக் கேட்கப் போகி றாரோ அதற்கு நான் எப்படிப் பதில் அளிப்பது என்றெல் லாம் சிந்தித்தவனாய் அமைதியின்றி அமர்ந்திருந்தவனின் கண்கள் அந்தக் காரை ஒருமுறை நோட்டம் விட்டது. அந்தப் பெரிய காரில் அமர்ந்திருக்கவே அவன் உடல் கூசியது. அதில் இருந்து சவாரி செய்வதற்குத் தனக்கு எந்தவித அந்தஸ்தும் இல்லை என்பதைத் தீர்க்கமாக முடிவு செய்தது அவன் உள்ளம். 

அன்று அவன் மனநிலைக்கு அநுதாபந் தெரிவிப்பது போல மந்தாரமும் மப்பும் குடிகொண்டு எங்கும் ஒருவித இருள் சூழ்ந்திருந்தது. இன்னும் சில மணி நேரத்தில் அவனடையப் போகும் இன்னல்களுக்காகக் கண்ணீர் வடிக்கக் காத்திருப்பது போல வானத்தையெல்லாம் சூல்மேகங்கள் ஆக்ரமித்துக்கொண்டன. அந்தச் சூழ்நிலையே ஒரு துர்ச் சகுனம் போல அவனிடம் ஒரு பயங்கரமான மனநிலையை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. 

மோட்டார் தன் பாட்டுக்கு வேகமாக நகர்ந்து கொண் டிருந்தது. எந்த இடத்தில் அது சென்று நிற்கும் என்ற உண்மை தெரியாதவனாய் அதைக் கேட்குந் துணிவற்று ஒரு எஜமானனுக்குப் பயப்படும் தொழிலாளி போல அடங்கி ஒடுங்கியிருந்த அவன் நிலையை எண்ணிப்பார்க்க அவனுக்கே அவமானமாகவும் வேதனையாகவும் இருந்தது. மண், பெண், பொன் என்ற இந்த மூன்றும் எவ்வளவு கல்நெஞ்சம் படைத்தவர்களையும் பணியவைத்துவிடும் என்ற பேருண் மையை உணர்ந்தான். 

ஏகாம்பரம் பணம் படைத்தவராக இருக்கலாம், எஞ் சினியராக இருக்கலாம். அதற்காக அவன் எதற்காக அவருக்குப் பயப்பட வேண்டும்…? ‘ஏறிக்கொள்’ என்று கூறியபோதே ‘முடியாது’ என்று அவன் மறுத்திருக்கலாம். ஆனால், அவன் எதிர்வார்த்தையே பேசாமல் ஏறிக்கொண் டானே… அப்படி எதற்காக நடந்து கொண்டான்….? 

இந்தப் பெரிய படகுக் காரில் ஏறக்கூடிய எத்தனையோ சந்தர்ப்பங்கள் எல்லாம் அவன் காலடிவரை வந்துங்கூட அவன் அவற்றை எல்லாம் கௌரவமான முறையில் தட்டிக் கழித்திருக்கிறான். ஆமாம்! பின்னேர வேளைகளில் சில நேரம் உமா சிறிய தம்பியுடன் * ஈவினிங் ட்றைவ் ‘ போய் விட்டு வரும்போதெல்லாம் இன்று நடந்தது போலவே அவன் அருகில் உரசுவது போல மோட்டார் அவன் பக்கத் தில் கிறீச்சிட்டு நிற்கும் உம்! ஏறிக் கொள்ளுங்கள் ஒரு ‘ட்றைவ் போகலாம்’ என்பாள் அவள். அவளது குழந்தைத் தனமான
வேண்டுகோளைக் கேட்டுத் தன் முத்துப் தனமான பல் வரிசைகாட்டிச் சிரிப்பான் அவன். இப்போ எதற்காகச் சிரிக்கிறீர்களாம் என்று சிணுங்குவாள் அவள். 

சவர்க்காரத்தை நுரையாகக் கரைத்து விட்டு வைக்கோல் புரி யொன்றினால் ஊதும்போது ஆகாயத்தில் பறக்கும் வாயுக் குண்டுகளைப் பிடி பிடி என்று ஒரு பச்சைக் குழந்தைக்கு உற்சாகம் காட்டுவதுபோல் நீ எனக்குக் காட்டும் உற்சாகத்தை நினைத்துச் சிரித்தேன் என்று விளக்கங் கொடுப்பான் அவன். 

உங்கள் விளக்கமும் நீங்களும். எனக்கு நீங்கள் கூறியது ஒன்றுமே புரியவில்லை… ஆமாம்… இப்போ என்னுடன் வரப்போகிறீர்களா இல்லையா….? என்று பொய்க் கோபத்துடன் கேட்பாள் அவள். 

நான் உன்னுடன் வருவதற்கு எப்போதும் ஆயத்தந் தான் உமா. ஆனால், காரில் மட்டும் ஏறிக் கொள்ள முடியாது. உயிருடன் போராடும் எத்தனையோ பரிதாபத்திற்குரிய நோயாளிகளிற் பலர் பஸ் வண்டிக்குக்கூடப் பணம் இல்லாத காரணத்தால் வைத்தியசாலைக்கு நடந்து செல்லும் கொடிய துன்பத்தைப் பார்த்த பிறகும் கூட இந்த ‘ஈவினிங் ட்றைவ் அவசியமான ஒன்றா என்று யோசித்துப் பார்த்தால் என் பதில்கூடப் புரிந்திருக்கும். ஏனெனில் அந்தப் பாட்டாளி மக்கள் கும்பலில் ஒருவன் தான் நானும். இன்று உனது மோட்டாரில் * ஈவினிங் ட்ரைவ்’ போகும் நான் நாளைக்கு வைத்தியசாலைக்குப் போகக்கூடக் கார் இல்லாமல் அவதிப்படக்கூடிய நிலையை உணர்ந்து வாழவேண்டியவன் என்று புரிய வைப்பான் அவன். 

அப்போ நானும் இறங்கி உங்களுடன் நடந்து வரு கிறேன் என்று இறங்கிக் கொள்ளத் துடிப்பாள். அவளின் களங்கமற்ற உள்ளப்பண்பு அவனைப் பரவசப்படுத்தி விடும். ஆயினும், அவன் விட்டுக் கொடுக்காமல் < ஐயோ உமா நீ மட்டும் இறங்கிவிடாதே. அப்புறம் நான் இந்த ஊரில் நிம்மதியாகச் சீவிக்கவே முடியாது. என் நிம்மதியும் அமைதியும் குலைவதை நீ விரும்புவதாக இருந்தால் உன் விருப்பம் போல் நீ இறங்கிக்கொள் என்பான். 

அந்தச் சுலோகத்திற்கு அவள் கட்டுப்பட்டுவிடுவாள். எப்படியோ இந்த மோட்டாரில் ஒரு நாள் நீங்கள் ஏறத் தான் போகிறீர்கள். எமது கல்யாண ஊர்வலம் இதே மோட்டாரில் தான் நடக்கப் போகிறது என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படியாகக் காதோடு காதாகச் சொல்வாள் அவள். 

அவள் எண்ணத்தை நினைத்துச் சிரிக்கும் அவன் தன்னை மறந்தவனாய் இப்போதும் வாய்விட்டுச் சிரித் தான். அப்போது மோட்டார் ஒரு குலுக்குக் குலுக்கியது. முன்னால் இருந்த ஏகாம்பரம் பின் பக்கம் திரும்பி அவனை ஒரு தரம் முறைத்துப் பார்த்தார். அந்தப் பார்வை அவன் எண்ணக் குவியல்களையெல்லாம் பஸ்மீகர மாக்க சோகம் நிறைந்த விழிகளால் அவரைப் பார்த்தான் அவன். 

5ஆம் அத்தியாயம் 

பெரிய தங்க மோதிரம் அணிந்திருந்த விரல்களால் திறவுகோலைத் திருப்பி மோட்டாரை நிறுத்திவிட்டு ரகுவை ஏளனமாகப் பார்த்த ஏகாம்பரம் ம்…. சேரவேண்டிய இடம் வந்துவிட்டது. இறங்கிக்கொள் தம்பி ‘ என்றார். ரகு பின்பக்கக் கதவில் கையை அழுத்தி அதைத் திறக்க முற்படுமுன்பே ஏகாம்பரம் இறங்கி அவனுக்காக அந்தப் பின்பக்கக் கதவைத் திறந்து விட்டார். ரகு இறங்கிய போது அவன் கால்கள் கம்பளிபோன்று அழுத்தமாக வளர்ந்திருத்த புற்றரையின் மீது படிந்தன. அவன் மெது வாக இறங்கிவிட்டுச் சுற்றுப்புறமெல்லாம் பார்த்தான். அந்த இடம் பல பழமரங்கள் சூழ்ந்த ஒரு சோலைவன மாகக் காட்சியளித்தது. எதற்காக இவர் என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கின்றார் என்று சிந்திக்கத் தொடங்கினான் ரகு. 

அவன் மனநிலையைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப் படாதவர் போல் தன்பாட்டுக்கு நடந்து கொண்டிருந்த ஏகாம்பரம் ஒரு வெளியான புல் மேட்டிற்கு வந்ததும் வானத்தை அண்ணாந்து பார்த்தபடியே தன் தூய வெள் ளைக் கைக் குட்டையைச் சட்டைப் பைக்குள் இருந்து உருவி எடுத்து நிலத்தில் விரித்துவிட்டு அமர்ந்துகொண்டார். 

மழைவரும் போல் தோன்றுகின்றது’ என்று அவர் தன் பாட்டுக்குக் கூறியபோது ‘சோ’ என்ற இரைச்சலுடன் மரங்கள் அங்குமிங்கும் அசைந்து கொள்ளக் காற்று பல மாக வீசத் தொடங்கியது. இத்தனைக்கும் அவரைப் பின்தொடர்ந்து வந்த ரகு நின்றபடியே எங்கேயோ பார்த் துக்கொண்டிருந்தான். இப்படி அமர்ந்துகொள் என்று அவர் தன் முன்னிலையில் சுட்டிக்காட்ட ரகு மறு வார்த்தை யின்றி அமர்ந்துகொண்டான். 

விலை கொடுத்து வேதனையை வாங்கியது போல் சும்மா இருக்க முடியாமல் உமாவுடன் பழகப்போய் தனக்கு வந்த வேதனையை நினைத்துப் பார்த்தபோது ‘ஓ’ என்று வாய்விட்டுக் கதறி அழவேண்டும்போல இருந்தது ரகு வுக்கு. இருவரும் இருவேறு மனநிலையில் எதிரும் புதிரு மாகப் பலத்த சிந்தனையுடன் அமர்ந்திருந்தனர். அவர் களுக்கு மனநிலையில் மட்டும்தானா வித்தியாசம்….? அவர்கள் உடை, தராதரம், அந்தஸ்து எல்லாமே பல வழிகளிலும் வேறுபட்டவையாக இருந்தன. 

அவனது ஏழ்மைநிலை எஞ்சினியர் ஏகாம்பரத்தை நிமிர்ந்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு அவனை ஒரு கோழையாக்கி விட்டிருந்தது. அவரிடம் அவன் அந்தக் கேள்வியையும் கேட்க விரும்பவில்லை. கேட்கும் துணிவு அவனுக்கு இருக்கவில்லை. அவர் அவனை எதற்காக இத்தனை தூரம் சிரமப்பட்டுந் தன் சொந்தக் காரில் ஏற்றி வந்துள்ளார் என்பதையும் ஓரளவுக்கு அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் அவன் அவர் விதிக்கப் போகும் எந்தவிதக் கடுமையான சட்டத்துக்கும் அமைந்து நடக்கத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டான். சிங்கத் தின் மேல் தவறி விழுந்த சுண்டெலியின் கதையை அவன் தன் பிள்ளைப் பிராயத்திற் படித்திருந்தான். இப்போது அதே சுண்டெலியாகத் தன்னை உருவகப்படுத்திக் கொண்டான். 

ஏகாம்பரத்தின் முகத்தில் ஒரு வெற்றிப் பெருமிதம் சுடர்விட்டுப் பிரகாசித்தது. ஒரு நல்லாசிரியன் முன் கைகட்டி வாய்புதைத்து நிற்கும் ஒரு கீழ்ப்படிவுள்ள மாண வனாக ரகு அவர் கண்களுக்குத் தோற்றமளித்தான். தன் மகளினது உள்ளக்கிடக்கையை அறிந்தபோது அவர் அடைந்த ஏமாற்றம் துன்பம் எல்லாம் இப்போது ஒரு நொடிப் பொழுதிற்குள் அவர் மனதைவிட்டு அகன்றன. ரகுவைச் சந்தித்துப் பேசுவதற்கு எப்படி ஒரு சந்தர்ப் பத்தை உண்டாக்கலாம் அவனிடம் பேச்சை எப்படி ஆரம் பிப்பது…. அதற்கு அவன் என்ன பதில் சொல்வான் என் றெல்லாம் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவர் தன் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்ததற்குத் தக்க பலன் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தார். ஏதோ ஒரு பெரிய சாதனையை நிலை நாட்டப் போவதாக எண்ணி வந்தவருக்கு ரகுவைக் கண்டதும் அது வெறும் சிம்பிளாகத் தோன்றியது. இதனால் அவர் அவனை ஒருமுறை மேலி ருந்து கீழ்வரை நன்றாக உற்றுப் பார்த்துவிட்டு ஒரு புன் சிரிப்புடன் ஆரம்பித்தார். 

தம்பி நீ வயது வந்த பிள்ளை. உலக விடயங் களைப் பற்றி ஓரளவுக்கு அனுபவம் அடைந்திருக்க வேண் டும், என நினைக்கிறேன். இந்தக் காலத்துப் பிள்ளை களுக்கு அதையெல்லாம் புட்டு விரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை என்பது எனக்குத் தெரியும். அதனால், நான் உன்னை அழைத்த விடயமும் ஓரளவுக்கு உனக்குப் புரிந்திருக்கலாம், புரிந்திருக்கவேண்டும், என்று அவர் சிறிது நிறுத்தியதும் ஏற்கெனவே பயந்துபோயிருந்த ரகுவின் உடல் வெளிப்படையாகவே நடுங்கத் தொடங்கியது. தன் எண் சாண் உடம்பும் கூனிக் குறுகி அவன் முதல் தடவையாக அவரை நிமிர்ந்து பார்த்தான். அந்தப் பார்வை எனக்கு. எல்லாம் புரிகிறது என்று கூறாமல் கூறியது. 

உன்னைப் பார்க்கும்போது நான் நினைத்திருந்த அளவுக்குக் கெட்ட பிள்ளையாகத் தோன்றவில்லை. முகத்தில் நல்ல பிள்ளையின் அறிகுறிகள் தோன்றுகின்றன. நீ படித்தவன்; பண்புள்ளவன். உங்கள் குடும்பத்துக்கு ஒரு குத்து விளக்குப் போன்றவன். உன் முகத்தில் ராஜகளை தோன்றுகிறது. உன்னைப் பார்த்த பின் உனக்கு அதிகம் எடுத்துக் கூறவேண்டும் என்ற அவசியம் எனக்குத் தென்பட வில்லை. எங்கள் குடும்பக் கெளரவத்தைப் பற்றி நீ நன்கு அறிந்திருப்பாய். இளவயதில் ஆண் பெண்ணாகிய இரு பாலாருக்கும் பல சபலங்கள் வாழ்க்கையில் ஏற்படுவது சகஜந்தான் ரகு. ஆயினும் சபலங்களைச் சபலங்களாகவே நினைத்து ஒதுக்கிவிடுவதுதான் புத்திசாலித்தனம். அதை விடுத்து அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப் புகுந்தால் வாழ்க்கையே கேள்விக் குறியாக மாறிவிடும். எங்கள் குடும் பத்திற்கும் உங்கள் குடும்பத்திற்கும் இடையேயுள்ள ஏற்றத் தாழ்வுகளை நீ அறிந்திருப்பாய். என் குடும்பக் கௌர வத்தை நிலை நாட்டுவதற்கு எனக்குள்ள ஒரே பெண் உமாதான் ரகு. அவளுடைய எதிர்கால வாழ்வைப்பற்றி நான் ஆயிரமாயிரம் மனக்கோட்டைகள் கட்டி வைத்திருக்கிறேன். தயவு செய்து அவற்றை யெல்லாம் இடித்துக் கொட்டிவிடாதே அப்பா. என் மகள் உன்னைப் பற்றி அதிகமாக நினைத்துக்கொண்டிருக்கிறாள். அப்படி நினைக் கக்கூடிய அளவுக்கு நீ அவளை மாற்றி விட்டிருக்கிறாய். அவள் உள்ளத்தில் அப்படியான ஒரு சபலத்தை உண்டாக் கியது நீ செய்த மன்னிக்கமுடியாத பெரிய தவறாகும் ரகு. 

பெரிய இடத்துப் பெண் தூரத்துப் பச்சை எனப் பூரணமாக உணர்ந்திருந்தும் அவள் அன்பைப் பெற முயற் சித்தது நீ செய்த மாபெருந் துரோகமப்பா. நீ உன் குடும்ப நிலையை உத்தேசித்தாவது உன் மன ஆசைகளைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். நீ இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வாய் என்று உன்னைப் பார்த்த பின் என்னால் நம்பவே முடியவில்லை. என் மகள் சிறிது செல்லமாக வளர்க்கப்பட்டவள். அவளது ஆசை அபிலாட்சைகளுக்கு இதுவரை நாங்கள் தடை செய்தது கிடையாது. அந்த ஒரு காரணத்தைக் கொண்டு அவள் உன்மீது அன்பு செலுத்தி விட்டாள். அந்த அன்புக்கு நாங்கள் குறுக்கே நிற்க மாட்டோம் என்று நினைத்திருக்கின்றாள். ஆனால் நான் அவளது இந்த ஆசைக்குத் தடைபோட்ட பின்னர்தான் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறாள் அவள். இப்போது உன்னையே திருமணஞ் செய்து கொள்ள வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறாள். ஆனால் இது நடக்காது ரகு. நடக்க முடியாத ஒன்று. இந்த நிலையில் எங்கள் குடும் பத்தில் ஏதாவது துர்ச் சம்பவங்கள் நடக்குமாக இருந்தால் அந்தப் பழியும் பாவமும் உன்னையே சாரும். 

ஆமாம் ரகு ! ஒரு குடும்பத்தைக் கலைத்த பாவம் உன்னைச் சும்மாவிடாது. ஆகவே இப்போது உன்னிடம் நான் இரந்து கேட்பதெல்லாம் தயவு செய்து என் மகளுடைய மனதை இனிமேலும் குழப்பாதே. அவளை மறந்துவிட்டு எங்கேயாவது ஓடிவிடு. எனக்காக அல்லா விட்டாலும் என் மகள் உமாவுக்காக நீ இந்த உதவியைச் செவ்வாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நீ எந்த ஊருக் குப் போக விரும்புகிறாயோ அந்த ஊருக்கு உனது வேலை மாற்றத்தைப் பெற்றுத் தருவது என் பொறுப்பு. இந்த உதவியை மட்டும் நீ செய்தால் உன்னை என் உயிர் உள்ளளவும் நான் மறக்கமாட்டேனப்பா. அதே சமயம் நான் உன்னிடம் வேண்டிக்கொள்ளும் மற்றொன்று என்ன வென் றால் உனக்கு ஏற்படும் இந்த ஏமாற்றத்தால் என் மகளது வாழ்வுக்கு ஏதாவது மாசு கற்பித்து விடாதே. இதற்காக நீ எவ்வளவு பணங்கேட்டாலும் நான் அந்தத் தொகையைத் தர ஆயத்தமாக இருக்கிறேன் ரகு. 

ஒரு பெருமூச்சுடன் அவர் கூறி முடித்த போது ரகுவின் உள்ளம் வேதனையால் துடித்தது. அவர்கள் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்கள் அந்த இடத்திற்கு வரும்போது சற்றுப் பலமாக வீசிக்கொண்டிருந்த காற்று புயலாக மாறுவதற் குரிய அறிகுறிகள் தோன்றிக் கொண்டிருந்தன. ஏகாம்பரம் ஆகாயத்தையும் மரங்களையும் அண்ணாந்து பார்த்துக் கொண்டேயிருந்தார். மரக்கிளைகள் எல்லாம் பயங்கர மாகச் சுழன்றடிக்கத் தொடங்கின. அதைவிட வேகமாகக் குமுறியது ரகுவின் மனநிலை. புயலுக்கு முன் அமைதி தோன்றுவது போல அதுவரை அவர் கூறுவதற்கெல்லாம் தலையசைத்துக்கொண்டு மௌனமாக அமர்ந்திருந்த ரகு திடீர் என ஏதோ நினைத்துக் கொண்டவன் போல ‘ஸார்’ என்றான். 

அவன் குரலில் சினத்தின் சீற்றம் வெளிப்பட்டது. நீங்கள் குலத்திலும் பணத்திலும் உயர்ந்தவராக இருக்க லாம், அதை நான் மறக்கவுமில்லை, மறுக்கவுமில்லை. எல்லா வகையிலும் நாங்கள் உங்களுக்குத் தாழ்ந்தவர்கள் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆயினும் எங்களுக்கும் ஒரு கெளரவம் மனச்சாட்சி என்பன உண்டென்பதைத் நீங்கள் மறந்துவிடக்கூடாது. நாங்கள் ஏழைகளாக இருக்கலாம். தாழ்ந்தவராக இருக்கலாம். ஆயினும் மானம் என்பது இன்னும் எங்களைவிட்டு அகல வில்லை. அது ஒன்றுதான் நாங்கள் பெற்றிருக்கும் அருஞ் செல்வம். ஏதோ விதியின் கொடுமையால் நடக்கக் கூடாத ஒன்று நடந்துவிட்டது . . . . அதை அசம்பாவிதமாக நடந்த ஓர் துர்ச்சொப்பனமாகவே மதித்து மறந்துவிட முயற்சிக் கின்றேன். மறக்கக் கூடியவையல்ல நினைவுகள். ஆயினும் மறப்பது போல் நடிக்கிறேன். அந்த நடிப்புகூட உங்களுக்குப் பயந்தல்ல ஸார். ஆனால் ஆமாம் ! உங்கள் மகள் மீது நான் வைத்திருக்கும் மாசற்ற புனிதமான அன்புக்காகத்தான் என்பதை இவ்விடத்தில் நான் வற்பறுத்திக் கூறுவதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். உமா அடையப்போகும் நல்வாழ்வுக்குக் குறுக்கே நிற்க நான் விரும்பவில்லை. அவளை நான் உண்மையாக நேசிக்கிறேன். அதனால் அவளது நல்வாழ்வுதான் எனக்கு முக்கியமானதாகும். உங்களிடம் பணம் அளவுக்கதிகமாக இருக்கும் பட்சத்தில் அதைப் பத்திரப்படுத்தி வையுங்கள். வேறு ஏதாவது நல்ல சேவைகளுக்குப் பயன்படலாம். எனக்குப் பணம் தேவைப்படாது. ஆண்டவன் எனக்கு அளித்திருக்கும் ஐஸ்வரியமாகிய குணத்தைக் கொண்டு சொல்கிறேன். என் உடலில் உயிர் உள்ளவரை உங் களுக்கோ உங்கள் மகளுக்கோ எந்த விதத் தீங்கும் ஏற் படப்போவதில்லை. இது சத்தியம்….நான் வருகிறேன் ஸார்..’ 

கூறிவிட்டு விறிச்சென வேகமாக நடந்தான் அவன்.

‘நில்லப்பா.. ஏய் தம்பி நில் . . . . . . மழை வரப் போகிறது. காற்றுவே றடிக்கிறது. என் காரிலேயே உன்னைக் கொண்டுபோய் விடுகிறேன்’… ஏகாம்பரம் அவனைப் பின் தொடர்ந்தார். 

 ‘வேண்டாம் ஸார்… உங்களுக்கு ரொம்ப நன்றி. நீங்கள் நினைத்து வந்த காரியம் வெற்றிகரமாக ஒப்பேறி விட்டது. இனி உங்கள் மோட்டாரில் ஏறிக் கொள்ள எனக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை. நீங்கள் சந் தோஷத்துடன் சௌகரியமாகப் போய்வாருங்கள், வெடுக். கெனக் கூறிவிட்டு விறுக்கென நடந்தான் ரகு. 

அவன் நடந்து சென்ற வேகத்தில் அசைவது போல் அந்தச் சாலையின் இருமருங்கிலும் நின்ற விருட்சங்கள் சுழன்றடித்து அசைந்தன. ஆனால் சிறுகச் சிறுக அந்தக் காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியபோது அந்த மரங்கள் ஒடிந்து தன் மேல் விழுந்துவிடுமோ என்ற பயத்தில் அவன் இன்னும் விசையாக நடக்கத் தொடங்கினான். ஆனாலும் அந்தக் காற்றுக்கோ அல்லது மரங்கள் அசைந்த வேகத்தில் தனக்கு அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ என்ற பயம் அவனுக்கு அணுவளவேனும் இருக்கவில்லை. காதலில் ஏற்பட்ட தோல்வி கீழ்க்குடிப் பிறப்பு, வறுமையின் நிமித்தம் ஏற்பட்ட அந்தஸ்துக் குறைவு ஆகியவை அவனை மரமே என்மேல் முறிந்து விழுந்து என் உயிரை எடுத்து விடு’ என்று பைத்தியக்காரனைப் போலப் பேச வைத்தது. வழியில் நிறைந்திருந்த காரிருள், திடீர் என எழுந்த காற் றின் வேகம், தனிமையான சூழ்நிலை ஆதியன ஏற்கெனவே வலிகுன்றிப் போயிருந்த அவன் உடலையும் உள்ளத்தையும் வாட்டிப் பிழிந்தது. அவன் அணிந்திருந்த நூல் வேட்டி ஒருபுறம் காற்றோடு சேர்ந்து இழுபட அவன் மேனியை அலங்கரித்த டெர்லின் ஷேட் காற்றில் பறந்து படபடத்தது. தன் ஒரு கையால் வேட்டியை இழுத்துப் பிடித்துக்கொண்டு மறுகரத்தால் எதிர்புறம் தன்மேல் காற்றுக்கு அசைந்து படிந்த மரக்கொடிகளையும் செடிகளையும் அகற்றிக் கொண்டே அயர்ந்து சோர்ந்து தள்ளாடிய நிலையில் வெறுங் கையோடு இலங்கை புகுந்த இராவணனைப்போல அவனும் தனது வீட்டையடைந்தான். 

விளக்கேற்ற முன் வீடு திரும்பும் பழக்கமுடைய ரகு அன்று அதுவரை வீடு திரும்பாதது கண்டு சின்னையாவின் மனதில் ஒரு அச்சம் ஏற்பட்டது. அன்று எதிர்பாராத விதமாக அடித்துக்கொண்டிருந்த சுழல் காற்று அவர் அச் சத்தை அதிகரித்தது. போதாததற்கு அன்று அதிகாலையில் கடலுக்குச் சென்றிருந்த அவருடைய மக்கள் இருவரும் வீடு திரும்பாதது மேலும் அவர் துன்பத்தைக் கூட்டியது. ஆயினும் தன்மக்களைவிட ரகு இதுவரை வீடு திரும்பாதது தான் அவருக்கு அதிக வேதனையாக இருந்தது. இந்தக் காலத்தில் நடப்பது போல அவனும் எக்கச்சக்கமாக ஏதாவது செய்துவிட்டானோ என்றுகூட சிந்திக்கத் தோன் றியது. அவனுக்கு ஏதாவது நடக்குமாக இருந்தால் அதை அவர் தாங்கிக் கொள்ளவே மாட்டார். அவரால் தாங்கிக்கொள்ளமுடியாது. அப்படியொரு பாசம் அவரை அவனுடன் பிணைத்துவிட்டிருந்தது. அவர் மனம் வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டது. 

அவரால் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்துகொள்ள முடியவில்லை. அதனால் அவர் வாசலுக்கும் வீட்டுக்குமாக நிம்மதியற்ற மனத்துடன் நடைபயின்று கொண்டிருந்த போது தூரத்தில் யாரோ வருவது தெரிந்தது. ஆயினும் வருவது யார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள ஒத்தாசை செய்ய அவர் கண்கள் மறுத்தன. அங்கே சூழ்ந்திருந்த இருள்வேறு அவருக்குப் பாதகமாக அமைந்து விட்டது. மழை பெய்ய ஆரம்பித்த சிறிது நேரத்திற் கெல்லாம் வானம் புண்டு கொட்டுவது போல் மழை பொழிந்து கொண்டிருந்தது. அந்த மழையில் தெப்பமாக நனைந்து தண்ணீர் சொட்ட உள்ளே நுழைந்த உருவத் தைப் பார்த்த சின்னையா திடுக்கிட்டார். அதை வெளிக் காட்டிக்கொள்ள அவர் மனம் தெய்வத்தை வாழ்த்திக் கொண்டது. ரகுவைக் கண்டதில் அவருக்கு அப்படியொரு நிம்மதி ! 

6ஆம் அத்தியாயம் 

பல வருடங்கள் ரகுவை வளர்த்தபோது ஏற்படாத ஓர் நிம்மதி அன்று அவருக்கு ஏற்பட்டிருந்தது. இத்தனை நாட்களுக்கும் வெளிப்படாத ஒரு பாசம் மனதிலே பொங்கி யெழ அவர் விரைந்து சென்று அவன் ஈரமேனியைக் கட்டிக் கொண்ட போது ஏற்பட்ட அன்புப் பெருக்கால் அவருக்கு மூச்சுத் திணறியது. 

“ரகு இவ்வளவு நேரமும் நீ எங்கடா போயிருந் தாய் ? இவ்வளவு நேரங் கழித்து அதுவும் இப்படிக் கொட் டும் மழையில் வந்து உனக்குப் பழக்கமில்லையே. இவ்வளவு உரமாகக் காற்றும் மழையும் சீறிக் கொண்டிருக்கும் போது உன்னை நான் எங்கடா தேடுவது ..? இத்தனை நேரமும் நான் தவித்த தவிப்பு ….? என் குழந்தைகள் நான் பெற்றெடுத்த செல்வங்கள் காலையில் கடலுக்குப் போனவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை ரகு. அப்படி யிருந்தும் அவர்களுக்காக என் மனம் ஏங்கவில்லை ; உள்ளம் அழவில்லை ; ஆனால் நீ ஆமாம் ரகு நீ. .? உனக்கே தெரிய வேண்டும். உன் தாய் இறந்த அந்நிய நாட்களில் அவள் பிரிவைத் தாங்கமுடியாமல் நீ அழுத அழுகையும் உன்னைத் தேற்ற நான் பட்ட பாடும்….? இந்தக் கிழட்டுத் தோளில் பல இரவுகள் படுத்துறங்கியவனடா நீ. அந்தப் பாக்கியம் என் பிள்ளைகளுக்குக் கூடக் கிடைக்கவில்லை. அவர்கள் அழுதாற்கூட அவர்களை நான் ஒரு நாள் சுமந்திருக்கமாட்டேன். அதற்காக என் மனைவி என்னுடன் பலமுறை கோபித்திருக்கிறாள். அப்படி யாக என் அன்பையெல்லாம் சொரிந்து வளர்த்த உனக்கு ஒரு சிறு காயம் ஏற்பட்டாலும் என்னால் தாங்கமுடியாது ரகு. உலகமும் என்னைச் சும்மா விடாது. அதைத்தான் நீ உணர்ந்து நடக்க வேண்டும். அதுதான் நீ எனக்குச் செய்யக்கூடிய ஒரு நன்றிக்கடன்”. 

கிழவர் உணர்ச்சியோடு பேசி முடித்துவிட்டு அவனைப் பார்த்தார். அப்போது உணர்ச்சி வேகத்தில் அவர் உடல் நடுங்குவது ரகுவுக்கு நன்றாகத் தெரிந்தது. 

அவரது கபடமற்ற அன்புப்பேச்சு அவனது உள்ளத்தை நெகிழ வைத்தது. அவன் அவரையே சில நிமிட நேரம் அன்பொழுகப் பார்த்துக்கொண்டு இருந்தான். ஏற்கெனவே நொந்து போயிருந்த அவன் உள்ளம் இப்போது புண்ணாகி அதிலிருந்து பெருகிய உதிரம் அவன் இரு கண்களிலிருந்தும் நீராகப் பெருகியோடியது. உணர்ச்சி வசப்பட்ட அவன் அவரைப் பாசத்தோடு இறுகத் தழுவிக் கொண்டான். 

“மாமா என்னைப்பற்றி நீங்கள் ஒரு சிறிதுங் கவலைப் படக்கூடாது. உங்கள் மனம் நோகக்கூடியதாக இனி நான் ஒரு சிறு தவறுகூடச் செய்யமாட்டேன். என்னை நீங்கள் நம்பலாம். இதைவிட நீங்கள் என் மீது காட்டும் அளப் பரிய அன்புக்கு நான் வேறு என்ன கைமாறுதான் செய்ய முடியும்….” என்று உள்ளம் உருகக் கூறினான் ரகு. 

“உன்னை நான் நம்புகிறேன் ரகு” என்று கிழவர் அவன் உணர்ச்சியோடு தழுவிய அந்தத் தழுவலின் இறுக் கத்தைத் தாளமாட்டாமல் மூச்சுத் திணறிக் கூறிய போது தான் ரகு தன் தவற்றையுணர்ந்து தன் பிடியைச் சற்றுத் .தளர்த்தினான். 

வெளியே வீசிக்கொண்டிருந்த பேய்க்காற்று மழைச் சாரலுடன் சாளரத்தினூடாக வந்து திண்ணையைத் தெப்ப மாக நனைத்தது. காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்ே யிருந்தது. திடீர் எனச் சின்னையா ஏதோ நினைத்துக் கொண்டவராய் அவன் பிடியினின்றும் தன்னை விடுவித்துக் கொண்டு இயற்கையின் கோரத்தன்மையை நோக்கிப் பெரு மூச்செறிந்தார். அண்ணன்மார் இன்னும் கடலில் இருந்து திரும்பவில்லையா மாமா..? என்று அவன் கேட்டபோது வளவுக்குள் ஏதோ படபட என்று முறியும் பெரிய சத்தங் கேட்டு வீட்டுக்குள்ளே சென்று பின் முற்றத்தைப் .பார்த்தபோது, அங்கே அந்தக் கொடிய காற்றின் வேகத் தைத் தாங்கமாட்டாமல் கட்டாந்தரையில், கிளைகள் நிறைந்த பிஞ்சும் பூவுமாக, பெரிய இராட்சதனை வெட்டி விழுத்தியதைப் போல மல்லாந்து கிடந்தது, அவர்கள் வேலிக்கு எல்லையாகவும் சற்றுமுன் முறிந்து போன அவர் கள் உறவுக்குத் தூண்டுகோலாகவும் நின்ற அந்தப் பெரிய கொய்யா மரம். அதையே கண் இமைக்காமல் பார்த்து நின்ற ரகுவின் கண்கள் பனித்தன. 

அவனது காதலுக்கு உரமிட்டுத் தந்த மரமே அவ னுடைய காதற் கதையின் சோக முடிவை அறிந்து அந்தத் துன்பத்தைத் தாங்க முடியாமல் தன் உயிரையே மாய்த்துக் கொண்டு விட்டது போன்றதோர் பிரமையில் ரகு கற் சிலைபோல நின்றபோது அவன் உடலை உராசியது போல் இன்னும் பலமான சத்தத்துடன் முறிந்து விழுந்தது எதிர்ப் புறமிருந்த முருங்கை மரம். எங்கும் அந்தக் கோரப் புயலின் உத்வேகம் பரவித் தாண்டவமாடியபோது சின்னையா மனங் குழம்பினார். காலையில் கடலுக்குப் போனவர்களல்லவா….? வீட்டுக்குள்ளேயே காற்று இவ்வளவு’ அட்டகாசம் புரிந்தால் பரந்து திறந்த கடலில் அதன் கொடுமை எப்படியிருக்குமோ எனப் பயந்தார். அவரும் மனிதன்தானே ! அதிலும் ஒரு தந்தை. பெற்ற பாசம் அவரைச் சும்மா விடவில்லை. மக்களை நினைத்தபோது அவரால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை. 

“ரகு என் மக்களுக்கு என்ன நடந்ததோ தெரியாது. இதுவரை திரும்பியிருக்க வேண்டும். இன்னும் காண வில்லை. என் பெற்ற மனம் கிடந்து துடிக்கின்றதடா ரகு..! என்று வாய்விட்டுக் குழந்தையைப் போற் கதறிய அவரை ஆசுவாசப்படுத்திச் சாய்வு நாற்காலியில் கொண்டு படுக்கவிட்ட ரகு தன் வேட்டியை மேலே இழுத்து மடித்துக் கட்டிக்கொண்டு வெளியே ஓடத் தொடங்கினான். 

“நீ எங்கடா போகிறாய்….? இந்த அகால வேளை யில் இப்படிப் புயலடிக்கும்போது நீ எங்கும் போகாதடா ரகு….? நீ போகாதடா” கிழவர் அவன் சொல்வதைத் தடுக்கக் கூக்குரலிட்டார். ஆனால் அதைக் கேட்டும். கேட்காதவன் போல் ரகு ஓடிக்கொண்டேயிருந்தான். 

அவன் கால்கள் கடற்கரை மணலைத் தொட்டதும் சில நிமிடநேரம் கொட்டும் மழையில் அவன் அப்படியே நின்றான். வானத்தில் இருந்து பூமிக்கிறங்கிய ஒரு கோடி மழைத்துளிகளைப் போல அவன் உள்ளத்திலும் ஒரு கோடி எண்ணங்கள் உதயமாயின. கடலுக்கும் தரைக்கும் ஆகா யத்துக்கும் பூமிக்கும் வித்தியாசங் கண்டுபிடிக்க முடியாத காரிருள். இடையிடையே வானத்தில் கண் இமைக்கும் நேரத்தில் பளிச்சிட்டு மின்னி மறைந்த மின்னற் கோட்டின் ஒளிதான் அவனுக்கு வழிகாட்டியாக அமைந்திருந்தது. 

கடலலைகள் ஒரு தென்னை உயரத்திற்கு வானளாவப் பாய்ந்து வீசியதை அந்த மின்னல் ஒளியில் அவன் காணக் கூடியதாக இருந்தது. அப்போது சின்னையாவின் பிள்ளை கள் என்ன ஆனார்களோ என்ற சிந்தனைதான் அவன் உள்ளம் நிறைந்திருந்தது. தற்செயலாக அவர்களில் ஒருவருக்காவது ஏதாவது நடந்தால் அதன் பின்னர் சின்னையாவை அவன் நிச்சயமாகக் காணமுடியாது. 

கடலில் எட்டிய தூரம் வரை மின்னல் ஒளியில் எந்த வொரு வள்ளத்தின் சாயலையும் அவனால் காண முடிய வில்லை. அவன் பார்த்ததை அப்படியே சென்று கிழவரிடம் கூறமுடியுமா? பிள்ளைகளைக் காணவில்லையென் றால் ஒரு வேளை கிழவரே அவர்களைத் தேடிப் புறப்பட்டு விடக்கூடும் என்பதும் அவனுக்குத் தெரியும். அதனால் அதற்கு மேலும் அவ்விடத்தில் நின்று சிந்திப்பதில் எதுவித பயனுமில்லை என்பதை உணர்ந்த ரகு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போற் செயற்படத் தொடங்கினான். 

அடுத்த சில நிமிடங்களில் ஏறியமர்ந்த படகு ஓங்கி யெழுந்த அலைகளின் அசுரத்தாண்டவத்தில் அங்குமிங்கும் நீரின் மட்டத்தோடு அசைந்தாடியபடி எதிர் நீச்சலிட்டுச் சென்றது. அவனுக்கு எதிர்ப்புறமிருந்து வந்த கொடிய காற்றில் துடுப்பு வலிப்பதே மிகவும் கடினமாக இருந்தது. ஆயினும் அவன் அதைப் பொருட்படுத்தாமல் மிகுந்த பிரயாசப்பட்டுப் படகைச் செலுத்தத் தொடங்கினான். 

நடுக்கடலில் அவன் படகு சென்று கொண்டிருந்த போது காற்று சுழன்றடிக்கத் தொடங்கியது. அந்தக் காற்றில் இருந்து தன்னையும் படகையும் காப்பாற்றுவது பகீரதப் பிரயத்தனம் என்பதை அவன் உணரத் தொடங் கினான். ஆயினும் அவன் இருந்த மனநிலையில் அவன் உள்ளப் புயலைவிட அங்கு வீசிய சுழல்காற்று ஒன்றும் பிரமாதமாகத் தோன்றாத நிலையில் அவன் துடுப்பை வேகமாக வலித்தான். 

அந்த நேரத்தில் அவன் மரணத்தை ஒரு வரப்பிரசாத மாகக் கருதினான். மரணத்தைத் தழுவிக் கொள்ள அவன் உடலும் உள்ளமும் துடித்துக் கொண்டிருந்தன. ஆயினும் சின்னையாவின் மக்களைத் தேடிப்பிடித்து விடவேண்டும் என்ற குறிக்கோளில் அவன் மரணத்துடன் போராடத் தொடங்கினான். 

தன் படகைச் சூழ்ந்து குமுறிக்கொண்டிருந்த கடலை யும் சுழன்றடித்துக் கொண்டிருந்த காற்றையும் பார்த்த போது அவனுக்குச் சிரிப்பு வந்தது. அவன் அந்த நடுக் கடலில் அகோரமாக ஒரு பைத்தியக்காரனைப் போல் வாய் விட்டுச் சிரித்தான். 

சுழல் காற்றின் வேகம் வரவரக் குறைந்த பாடாக இல்லை. துடுப்பு வலித்துக் களைத்த அவன் கரங்கள் வலியெடுத்தன. இனிமேல் துடுப்பு வலிப்பதில் எந்தப் பயனுமில்லையென்பதை நன்றாக உணர்ந்த அவன், கையில் இருந்த துடுப்பை வெறுப்புடனும் விரக்தியுடனும் கடலுக்குள் வீசியெறிந்துவிட்டு உமா நான் உன்னை விட்டு வெகுதூரம் போகிறேன். உன் அப்பாவின் விருப் பப்படி நான் அவருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்று வதற்காக இனித் திரும்பிவர முடியாத இடத்துக்குச் செல்கிறேன். எங்கிருந்தாலும் நீ நிம்மதியாகவும் சந்தோஷ மாகவும் வாழ் உமா என்று கூக்குரலிட்டுக் கூறிக் கொண்டே அந்தப் படகுக்குள் நன்றாக நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டான். 

அடுத்த சில நிமிடங்களில் எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு’ என்ற இனியகீதம் காற்றுடன் கலந்து மங்கிக் கொண்டே சென்றது. 

ஒரு சில மணிநேரம் அடித்த புயலுக்கு அந்த ஊரே பலியாகியது. பல வள்ளங்களும் மீனவர்களும் காணாமற் போயினர். வல்வெட்டித்துறைக் கடற்கரையோரமெங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருந்தது. மக்களைப் பலி கொடுத்த பெற்றோரும் கணவன்மாரைக் காணாத மங்கை யரும் சேர்ந்து தலையில் அடித்து அலறிய சத்தத்தைக் கேட்டு அந்தக் கடலலைகள் சற்றுத் தம் உக்ரத்தைக் குறைத்து அவர்களுக்கு அநுதாபம் காட்டுவது போல் அமைதியாக அலைமோதின. அந்த ஊரே அல்லோல கல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில், தான் பெற்ற செல்வங்களையும் வளர்த்த செல்வத்தையும் ஒருமித்துப் பறி கொடுத்த சோக நிலையில் துடித்துக் கொண்டிருந்த சின்னையா அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாதவராய் வேரறுந்த மரம் போல மூர்ச் சித்துத் தரையில் விழுந்தார். 

அவரைக் கண்காணிக்கவோ அல்லது அவரது நிலை கண்டு பரிதவிக்கவோ அவர் பக்கத்தில் ஒரு ஜீவன்கூட இருக்கவில்லை. வெளியே புயற்காற்றின் கோரத் தாண்ட வம் அடங்கி மக்கள் ஆரவாரம் ஆரம்பித்திருந்த அந்த வேளையில் சின்னையாவின் வீடு மட்டும் உறங்கிக் கிடந்தது. அங்கே மரண அமைதி நிலவியது. 

அந்த வேளையில் ஓர் கட்டாந்தரைமேல் கண்ணயர்ந் திருந்த ரகு கண் விழிக்கிறான். அவனுக்கு எல்லாமே ஒரு புதிராக இருக்கிறது. அவன் விழிகள் அக்கம் பக்கம் பார்க் அங்கே அவனைச்சுற்றி ஒரு கூட்டம் நிற்கிறது. 

அந்த முகங்களையெல்லாம் அவன் கூர்ந்து பார்க்கிறான். அவையெல்லாம் அவனுக்குப் புதுமுகங்களாகக் காட்சியளிக்கின்றன. 

அவன் தன் இரு கைகளையும் ஊன்றியபடியே எழுந் திருக்க முயற்சிக்கின்றான். ஆனால் அடித்துப்போட்டது போல் அவன் கைகளும் கால்களும் வலிக்கின்றன. அவன் பரிதாபத்தோடு அங்கே கூடி நின்றவர்களைப் பார்க் கின்றான். நான் எழும்புவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்பது போல் இருக்கிறது அந்தப் பார்வை. பார்வையைப் புரிந்து கொண்டது போல அந்தக் கூட்டத்தில் நின்ற ஓரிருவர் அவன் எழுந்து உற்காருவதற்கு. உதவுகின்றனர். 

“தம்பி நீ மறுபிறப்பு எடுத்திருக்கிறாய் அப்பா. ஆமாம்! நீ தப்பியது உன் பெற்றோர் செய்த புண்ணிய மாக இருக்க வேண்டும். நாங்கள் மட்டும் தற்செயலாகக் கடலுக்கு வந்திருக்காவிட்டால் இந்நேரம் நீ பிணமாக இருக்கவேண்டியவனப்பா. ஏதோ உன்னைக் காப்பாற்றிய தெய்வத்திற்கு நன்றி செலுத்து. உன் படகு புயலில் சிக்கித் தவிப்பதைத் தூரத்தில் இருந்து கண்டதால் விரை வில் வந்து உன்னைக் காப்பாற்றக்கூடியதாக இருந்தது. நாங்கள் மட்டும் கொஞ்சம் பிந்தியிருந்தால் உன்னை உயிருடன் கரைசேர்த்திருக்க முடியாதப்பா. உன்னைக் காப்பாற்றிய ஒரு சில நிமிடங்களுக்குள் உன் படகு சுக்கு. நூறாவதைக் கண்கூடாகக் கண்டோம். ஏதோ உன்விதி.. நல்ல தலையெழுத்து தப்பிவிட்டாய். ஆமாம்! நீ எந்த ஊர்….? இந்தப் புயல்காற்றில் தனியாக ஒரு படகில் வர எப்படி உன் பெற்றோர் அனுமதித்தனர்!” என்று நடந்ததை விளக்கி வினாவுடன் முடித்தார் அங்கே நின்ற. ஒரு பெரியவர். 

ரகு அவரை நன்றிப் பெருக்குடன் பார்த்தான். “மிக்க நன்றி ஐயா. நான் ஒரு அநாதை’ யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘ என்ற கொள்கையுடன் வாழ்பவன் நான். என்னைக் காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி. பாவம் உங்களையெல்லாம் ரொம்பச் சிரமப்படுத்திவிட்டேன். அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். அதைவிட நன்றி செலுத்துவதற்கு என்னிடம் வேறு எதுவுமே இல்லை. இனி நான் என் வழியைப் பார்த்துக்கொள்வேன். நீங்கள் சுகமாகச் சென்று வாருங்கள்” என்று அன்புடன் கூறினான் அவன். 

“ஏதோ உன்னைக் காப்பாற்றியதில் எங்களுக்கும் பெருமகிழ்ச்சி தம்பி. இந்தா உன் கைச் செலவுக்கு இந்தப் பணத்தை வைத்துக் கொள். எங்களுக்கு நேரமாகிறது நாங்கள் போய் வருகிறோம்” என்று கூறி அவன் கையில் ஒரு இரண்டு ரூபா நோட்டைத் திணித்துவிட்டு அந்தப் பெரியவரும் கூட்டமும் அவ்விடத்தை விட்டு நழுவினர். 

அவர்கள் செல்வதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த ரகு மெதுவாக எழுந்து தனது வேட்டியில் படிந்திருந்த மணலைத் தட்டிவிட்டு சுற்றுப்புறமாகத் திரும்பி ஒரு நோட்டம் விட்டான். அவன் எதிரே பரந்த கடல் அலைமோதிக் கொண்டிருந்தது. அந்தக் கடலை ஒட்டினாற் போல் சென்ற தார்ப்பாதையின் மறுபக்கத்தில் பல கட்டடங் கள் தென்பட்டன. கடல் இருந்த சூழ்நிலையில் அந்த இடம் அவனுக்கு வல்வையை நினைவூட்டிய போதும் எதிர்ப் புறமிருந்த கட்டடங்கள் அது வேறோர் ஊர் என்பதை அவனுக்குத் தெளிவுபடுத்தியது. 

அந்தப் பாதை வழியே சிலர் போவதும் வருவதுமாக இருந்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட அவனுக்கு அறிமுகமானவர்களாகத் தெரியவில்லை. அவர்களிடம் ஏதாவது கேட்டறியலாம் என்றால் அவர்களுக்குத் தான் அந்த ஊருக்குப் புதியவன் என்ற செய்தி தெரியக்கூடாது’ என்பது அவன் விருப்பம். ஆகவே அவன் மெதுவாக நடந் தான். இரண்டு மூன்றடி நடந்த பின் எதிர்ப்புறத்தில் தெரிந்த பச்சைக்கட்டடம் அவன் கவனத்தை ஈர்த்தது. அவன் சற்று அண்மையில் சென்று அந்தக் கட்டடத்தின் முன்னால் பொருத்தப்பட்டிருந்த பெயர்ப்பலகையைப் படித் தான். எலிபென்ற் ஹவுஸ் ‘ திருக்கோணமலை என்றி ருந்த அந்த எழுத்துக்கள் அவனுக்குப் புத்துயிர் அளித்தன.

– தொடரும்…

– எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு… (நாவல்), முதற் பதிப்பு: 1993, காந்தளகம், மறவன் புலவு, சாவகச்சேரி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *