கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 6,160 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10

அத்தியாயம்-1

காதல் பெண்களை உயர்த்தி வைக்கிறது 
அவர்களுக்கு சக்தி அளிக்கிறது 
ஆனால் ஆண்களை பலவீனப்படுத்தி விடுகிறது. -டால்ஸ்டாய் 

மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. முதல் வகுப்பு பெட்டியில் வேகமாக வந்து ஏறினான் ஆகாஷ், இன்னும் ஐந்து நிமிடம் லேட்டாக வந்திருந்தால் வண்டி கிளம்பிப் போயிருக்கும். சென்னையில் வாகன நெரிசல் அதிகரித்து விட்டது. சீக்கிரமே கிளம்பியும் கூட டிராபிக் ஜாமிலும், சிக்னலிலும் மாட்டிக் கொண்ட ஆட்டோ கட்டை வண்டிபோல்தான் ஊர்ந்தது. நல்ல காலம் வண்டி புறப்படுவதற்குள்ளாக வந்து சேர்ந்துவிட்டான். 

ஆகாஷ் தன் பிரிஃப்கேஸை பாதுகாப்பாக வைத்துவிட்டு ஜன்னலோரம் இருந்த சீட்டில் அமர்ந்தான். மூன்றாவது விசில் ஊதப்பட வண்டி மெல்லக் கிளம்பியது. 

யாரோ திபுதிபுவென்று ஓடி வந்தார்கள். ஆகாஷ் ஜன்னல் வழியே பார்த்தான். ஜீன்ஸும் டீ-ஷர்ட்டும் அணிந்த இளம் பெண் ஒருத்தி காற்றில் கேசம் பறக்க ஓடி வந்து பெட்டியில் ஏற முயன்றாள். கூட்டம் அவளை பதற்றத்தோடு பார்த்தது. ஆகாஷ் சட்டென்று எழுந்து கதவருகில் வந்து நின்று ஒரு கை கொடுத்து அவளை லாவகமாய் உள்ளே இழுத்துக் கொண்டான். தேங்க்யூ என்றவளை முறைத்துப் பார்த்தான். 

“அறிவிருக்கா உனக்கு? ஓடற டிரெயின்ல ஏறப் பார்க்கறயே…! ஏதாவது ஆயிருந்தா…? பத்து நிமிஷம் முன்னாடி வர வேண்டியது தானே?” 

”ஒரு மணி நேரம் முன்னாடியே கிளம்பியாச்சு. நா என்ன செய்ய மேம்பாலம் கட்டறோம்னு அங்கங்க ரோடை நோண்டி வெச்சிருக்காங்க. ஒரே டிராஃபிக் ஜாம்… பொறுமை எல்லாம் போய் ஒரு வழியா வந்து சேர்ந்தா மூணாவது விசில் ஊதறாங்க. நல்ல காலம் நீங்க ஒரு கை கொடுக்காட்டி என் பிரயாணம் தடைப்பட்டிருக்கும்?” அவள் வியர்வையைத் துடைத்துக் கொண்டு தன் சீட் நம்பரைத் தேடிப் பிடித்து அமர்ந்தாள். அவனுக்கு எதிர் வரிசையில் கதவோரம் இருந்தது அவள் சீட். 

தனக்கேற்பட்ட அதே சோதனைதான் அவளுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்றறிந்ததும் அவளைப் பரிவோடு பார்த்தான். 

வண்டி வேகமெடுத்திருந்தது. நாலு பேர் அமரக்கூடிய அந்த அறையில் அவர்களைத் தவிர கேரளத்தை சேர்ந்த நடுத்தர வயதான தம்பதிகளும் பிரயாணம் செய்தனர். வண்டி புறப்பட்ட சற்று நேரத்தில் அவர்கள் இருவரும் மேல் பர்த்தில் ஏறி நிம்மதியாகப் படுத்துவிட அந்த இளம் பெண் காற்றுக்காக ஜன்னலருகில் வந்து ஆகாஷின் எதிரில் அமர்ந்தாள். அவள் கையில் ஒரு கிரீம் பிஸ்கட் பாக்கெட். 

“எடுத்துக்கோங்க.”அவனிடம் நீட்டினாள். 

“நோ தேங்க்ஸ். டிரெயின்ல யார் எது கொடுத்தாலும் வாங்கி சாப்பிடறதில்ல.” 

”ஓ மயக்க மருந்து கலந்து கொடுத்து கொள்ளையடிக்கற கும்பலோன்னு சந்தேகப்படறீங்களா…?” 

“அப்டின்னு இல்ல… எப்பவுமே அப்டிதான்.” 

“எனி ஹவ். நல்ல பழக்கம்தான். உங்க பேர்?” 

“ஆகாஷ்! உங்க பேர் எனக்கு தெரியும். சுஜிதா! கரெக்டா?”

“மை காட்… எப்டி…?” 

“ரொம்ப சிம்பிள். ரிஸர்வேஷன் சார்ட்ல இருக்கே!” அவள் சிரித்தாள். “நீங்க மும்பைக்காரரா இல்ல சென்னை வாசியா?” 

“மும்பைக்கு பிரயாணம் செய்யற சென்னைவாசி”. 

”நா மும்பைவாசிதான். ஆனா இப்போதைக்கு சென்னை வாசி! ஃபேஷன் டிஸைன் படிப்புக்காக ஹாஸ்டல் வாசம். வெக்கேஷனுக்காக போறேன்.” 

“தமிழ் நல்லா பேசறீங்க!” 

“மும்பைல செட்டிலான தமிழ்க் குடும்பம்தான் எங்க குடும்பம். நா பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்கதான். வீட்ல தமிழ். வெளில ஹிந்தி, இங்கிலீஷ். ஸோ.. மூணு மொழி சரளமா தெரியும். ஊர் விட்டு ஊர் போய் செட்டிலாறதுல இது ஒரு வசதி இல்லையா?” 

”டெஃபனட்டா! இப்ப பாருங்க. நானும் தமிழ்நாட்டுக் காரன்தான். ஆனா ஹிந்தி தெரியாதே. இங்கயே வளர்ந்ததன் பலன்!” 

“ஒரு வாரம் மும்பைல இருங்க. நூறு வார்த்தையாவது கத்துப்பீங்க. ஆமா என்ன வேலையா மும்பை வரிங்க?” 

“ஆபீஸ் வேலை தவிர வேறென்ன?” 

“எங்க வேலை பார்க்கறீங்க?” 

“ஒரு விளம்பரக் கம்பெனில முக்கிய பொறுப்புல இருக்கேன். விளம்பரப்படம் சம்பந்தமாதான் மும்பை போயிட்ருக்கேன்.” 

”உங்களுக்கொரு விஷயம் சொல்லியே ஆகணும்!” 

“என்ன சொல்லுங்க” 

“நான் கூட ஒரு மாடல்தான் தெரியுமா?” 

“இஸ் இட்…!” ஆகாஷ் வியப்போடு அவளைப் பார்த்தான். சட்டுனு நினைவுக்கு வரல. “என்ன பொருட்களுக்கு மாடலிங் பண்ணிட்ருக்கீங்க?” 

“இதோ இந்த பிஸ்கட்டுக்கு தான்.” அவள் சலங்கை குலுங்கினாற் போல் சிரித்தாள். “இப்ப நா ஓடற வண்டில ஸ்டைலா உட்கார்ந்து பிஸ்கட் சாப்டறதை படம் எடுத்தா நானும் மாடல் தானே அதுவும் விளம்பரம்தானே!” 

“இவ்ளோதானா…? நா நிஜமாவே மாடலாக்கும்னு நினைச்சேன். பரவால்ல. நல்லாவே பேசறிங்க. நிஜமாவே மாடலிங் பண்ணலாமே நீங்க…?” 

“ஆசைதான். ஆனா வீட்ல ஒத்துக்க மாட்டாங்களே. மும்பைல எங்கப்பா பெரிய பணக்காரர். கோடிகளில் புரள்றவர். இப்பக்கூட நா பிளைட்ல வராம டிரெயின்ல வரது தெரிஞ்சா கத்து கத்துன்னு கத்துவார். அவர் மானம் மரியாதையே போய்ட்டாப்பல அலறுவார்.” 

“அப்புறம் ஏன் டிரெயின் பிரயாணம்?” 

“சும்மா ஒரு த்ரில்லுக்காகத் தான். அதுலயும் ஒரு நல்லது இருக்கு பாருங்க. நா பிளைட்ல போயிருந்தா உங்களை சந்திச்சிருக்க முடியுமா?” 

அவள் சொல்ல அவன் சட்டென்று ஒருவித குளிர்ச்சியை உணர்ந்தான் அந்த வார்த்தைகளில். 

”உங்களுக்கு கல்யாண மாய்டுச்சா?” சில நிமிட டைவெளிக்குப் பிறகு அவள் கேட்டாள். 

“ம்… ஆய்டுச்சே… எதுக்கு கேக்கறீங்க?”

“இஸ்… இட்…! பார்த்தா தெரியலையே…” 

”என்னைப் பார்த்தா எப்டிங்க தெரியும்? பெண்டாட்டியைப் பார்த்தா இல்ல தெரியும்! ஏழு மாசம். மூணாவது குழந்தை!” 

”நம்பவே முடியல.” 

”எனக்கே நம்பத்தான் முடியல. காலேஜ் படிச்சுட்ருக்கும் போதே இழுத்துப் பிடிச்சு கட்றா தாலியன்னாங்க. லவ்வு கிவ்வுன்னு கெட்டுப் போய்டுவேனாம்! அதான் கால்கட்டாம். வீட்டுக்கு பயந்தவனாச்சே. கட்டிட்டேன்.” 

“சரி தாலி கட்டிட்டீங்க. அட்லிஸ்ட் குழந்தைங்க விஷயத்துலயாவது ஜாக்கிரதையா இருந்திருக்கலாமே. இந்தக் காலத்துல மூணாவது குழந்தையா… வெரி பேட்…! அது சரி..எனக்கென்ன? நீங்க யாரு நான் யாரு. இதையெல்லாம் சொல்ல!” அவள் அதற்கு மேல் பேச விரும்பாதவள் போல் தன் லெதர் பேகிலிருந்து ஒரு தடித்த ஆங்கில நாவலை எடுத்து பிரித்து படிக்க ஆரம்பித்தாள். 

“சிட்னி ஷெல்டன்னா பிடிக்குமா உங்களுக்கு? எனக்குக் கூட பிடிக்கும் ஜெஃப்ரி ஆர்ச்சர் படிச்சிருக்கீங்களா? எனக்கு அதுவும் பிடிக்கும்.” 

“நா கேட்டேனா உங்களை? என்னைப் படிக்க விடுங்களேன்.”

அவன் சிரிப்போடு ஜன்னல் பக்கம் திரும்பி வேடிக்கை பார்த்தான். சற்றுபொறுத்து மீண்டும் அவளைப் பார்த்தான். 

“நைட் தூங்கும்போது எனக்காக ஒரு பிரார்த்தனை செய்வீங்களா சுஜிதா?” 

அவள் நிமிர்ந்தாள். “என்ன பிரார்த்தனை?” 

”மூணாவது குழந்தையாவது என்னை மாதிரி ஸ்மார்ட்டா ஆண் குழந்தையா பிறக்கணும் எனக்குன்னு வேண்டிக்கோங்களேன். கூட்டுப் பிரார்த்தனைக்கு வலு அதிகமே. அதான் பார்க்கறவங்க எல்லார் கிட்டயும் சொல்லி வேண்டிக்கச் சொல்றேன்.”

அவள் எரிச்சலோடு அவனை ஒரு வினாடி பார்த்து விட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தாள். 

“என் ஒய்ஃப் பேரு என்னன்னு கேக்கலையே நீங்க. ஸ்வேதா நல்ல பேர் இல்ல? குலோப்ஜாமூன் மாதிரி இருப்பா. அவ்ளோ அழகு! நீயெல்லாம் என்ன கலர்? கலர்னா அவதான். பூ விழுந்தா கூடகன்னிச்சி வந்துடும்னா பார்த்துக்கோங்க! அவ அழகுக்கு உதாரணமே கிடையாது. இன்ஃபாக்ட் அந்த அழகைப் பார்த்து மயங்கிப் போய்தான் படிக்கற வயசுல நா கல்யாணத்துக்கே சம்மதிச்சேன். அவ்ளோ லவ்! மூணு என்னங்க அவகிட்ட முப்பது கூட..” 

“எக்ஸ்கியூஸ்மி.. கேட்டேனா இதையெல்லாம்? உங்க பெண்டாட்டிய நீங்க ஜொள்ளு விட்ட கதையெல்லாம் எனக்கெதுக்கு சார்… போரடிச்சா நீங்களும் ஏதாவது படிங்க இல்ல படுத்து தூங்குங்க. என்னைப் போட்டு அறுக்காதீங்க” அவள் சிடுசிடுத்து விட்டு மீண்டும் புத்தகத்தில் மூழ்கினாள். 

அவன் மீண்டும் மௌனமானான். பிறகு வெகு நேரம் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்தபடி வந்தான். இடையில் சுடச்சுட வந்த டிபன் வகையறாக்களில், கப் நூடுல்ஸ் ஒன்று வாங்கி சாப்பிட்டு விட்டு ஒருகிளாஸ்பாலும் குடித்தான். அவள் இட்லி பாக்கெட் வாங்கி சாப்பிட்டு விட்டு மீண்டும் சிட்னி ஷெல்டனில் மூழ்கினாள். ரயிலின் தடக் தடக் சப்தத்தை தவிர வேறு எவ்வித சப்தமும் இல்லை. 

ஒன்பது மணிக்கு மேல் அவள் கொட்டாவி விட்டபடி புஸ்தகத்தை மூடினாள். தன் பையைத் திறந்து புத்தகத்தை பத்திரப்படுத்தி விட்டு, ஏர் பில்லோ எடுத்து ஊதி பருமனாக்கினாள். பெட்ஷீட் ஒன்றை எடுத்து உதறி போர்த்திக் கொண்டு படுத்தாள். 

“எனக்காக இன்னும் ஒரே ஒரு பிராத்தனை செய்யுங்களேன். அதுக்கப்பறம் தூங்குங்க” 

அவள் மௌனமாய் முறைத்தாள். 

”நா சொன்ன பழைய பிரார்த்தனை இல்லை. இது வேற! அது வேண்டாம்! இதுமட்டும் வேண்டிக்கிட்டா போதும். ப்ளீஸ்…” 

அவள் என்ன என்பது போல் பார்த்தாள். 

”சீக்கிரமே கல்யாணமாய்டுச்சா. அதனால இந்த காதல் கீதல்னு எந்த த்ரில்லுமே எனக்கு கிடைக்கல. அதனால பஸ்ட் கிளாஸா, கல்கத்தா ரஸகுல்லா மாதிரி ஒரு காதலி எனக்கு கிடைக்கணும்னு வேண்டிக்கோங்களேன்.”

“ஷட்.. அப்.. என்னை என்ன மிஸ்டர் நினைச்சீங்க நீங்க…? உங்க சீப்பான ஆசையெல்லாம் நிறைவேற நா பிரார்த்தனை செய்யணுமா…? இனிமே நீங்க வாயத் திறந்தீங்க… நா பொல்லாதவளாய்டுவேன். ஏதோ கையப் பிடிச்சு வண்டில ஏற உதவினிங்களேன்னு மதிச்சு ரெண்டு வார்த்தை பேசினா… மட்டமா பிஹேவ் பண்றீங்களே!” 

”ஓ.கே… ஓகே…இனிமே பேசல.. கோச்சுக்காதீங்க. அதென்னமோ தெரியல… ஜெனரலா நா லேடீஸ் கிட்டல்லாம் பேசவே மாட்டேன். உங்க கிட்டதான் இப்டி.. ரொம்ப ஜென்மமா பழகினாப்போல பேசறேன். எனக்கே ஆச்சர்யமார்க்கு.” 

“இதுல ஆச்சர்யம் என்ன? இதான் ஆம்பளை புத்தி. அலையற புத்தி!” 

“இது ஆம்பளை புத்தின்னா, பொம்பளை புத்தி எதுன்னு நா சொல்லவா.. ஒரு ஆம்பளைக்கு கல்யாணமாய்டுச்சுன்னு தெரிஞ்சா உடனே பேச்சை நிறுத்திக்கறது பொம்பளை புத்தி, நா சொல்றது சரியா…?” 

“நீங்க அதிகம் பேசறீங்க…” 

“சரி இனிமே பேசல. நிம்மதியா தூங்குங்க மிச்சத்தை நாளைக்கு பேசிப்போம்.” 

அவன் திரும்பிப் படுத்தான். 

ரயில் இரவைக் கடந்து விரைந்து கொண்டிருந்தது. 

வண்டியின் மெல்லிய அசைவில் அரைத் தூக்கம்தான் தூங்க முடிந்தது. ஐந்து மணிக்கு அவனுக்கு விழிப்பு வரும்போது அவள் இழுத்துப் போர்த்திக் கொண்டு நல்ல உறக்கத்தில் இருந்தாள். மலையாளத் தம்பதிகள் சூடாக டீ குடித்துக் கொண்டிருந்தனர். மயக்க மருந்து கொள்ளைக்காரர்களின் பயத்தால் இப்போதெல்லாம் ரயில் சிநேகம் வெகுவாக குறைந்துவிட்டது. மனிதனைக் கண்டு மனிதன் பயப்படுவது எவ்வளவு கேவலம்! அன்பென்ற பிரபஞ்ச வட்டத்திற்குள் வராமல் பயமென்ற எலிப்பொறிக்குள் மனிதர்கள் முடங்கிப் போய்விட்ட கொடுமை எதனால்…? பயத்தினால் பாதுகாப்பு உணர்வு கூடுகிறது. ஒன்றுமில்லாதவன் எதைப் பாதுகாக்க வேண்டும்? எதற்கு பயப்பட வேண்டும்? மனிதரில் ஒரு சிலர் மனிதத்தை இழந்து ஐந்தறிவு மிருகங்களாய் மாறும்போது மற்றவர்களுக்கு பயம் ஏற்படத்தான் செய்யுமோ? மனிதனிடமிருந்து மனிதன் தன்னை பாதுகாத்துக் கொள்ள தன்னைச் சுற்றி சந்தேக வலை விரித்து, பேச்சடக்கி, புன்சிரிப்படக்கி, நட்படக்கி, அன்பையடக்கி… சின்னச் சின்ன வளையங்களுக்குள் வெறுமையாய் முடங்கி… எங்கே போகிறது உலகம்? 

ஆகாஷ் பெருமூச்சு விட்டான். அவனால் இப்படி முடங்க முடியாது. சளசளவென்று பேசிக் கொண்டேயிருக்க வேண்டும் அவனுக்கு. எதிரில் யாருமில்லாவிட்டாலும் கவலையில்லை. மனிதனைத் தவிர எத்தனை ஜீவராசிகள் இருக்கின்றன! அவற்றோடு பேசுவான். தூரத்து மலைகள், நதிகள், முகத்தில் மோதும் காற்று, மேகத்தில் ஓடும் நிலவு, பரந்து விரிந்த ஆகாயம், கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் என்று எல்லாவற்றோடும் பேசுவான். பேச்சுக்கு சப்தம் அவசியமில்லை. விழிகளும், எண்ணங்களும் போதும். மௌனமாய் எவற்றோடும் பேச முடியும். அப்படித்தான் எதிரில் உறங்கிக் கொண்டிருந்த சுஜிதாவோடும் பேச ஆரம்பித்தான். 

நீ யார் பெண்ணே… எங்கே பிறந்தாய்? யாருக்கு பெண்ணாகப் பிறந்தாய். எதற்காக வளர்ந்தாய்? இன்று ஏன் என்னோடு பிரயாணம் செய்கிறாய்…? நாம் இன்று சேர்ந்து பிரயாணம் செய்ய வேண்டும் என்ற விதிக்குப் பின்னால் இருக்கும் சூட்சுமம்தான் என்ன…? உன்னை ஏன் எனக்கு பிடித்திருக்கிறது? உன்னைச் சீண்டிப் பார்க்க ஏன் எனக்கு ஆசை வந்தது? கல்யாணமாகி மூன்றாவது குழந்தை பிறக்கப் போகிறது என்று ஏன் உன்னிடம் பொய் சொல்லி விளையாடத் தோன்றியது? என் கேள்விகளுக்கெல்லாம் உனக்கு விடை தெரியுமா…? தெரிந்தால் சொல்வாயா? உன் கையைப் பிடித்து வண்டியில் ஏற்றியபோது உள்ளங்கை வழியே எதுவோ பாய்ந்து என் அடி வேர் வரை சென்றதே அதன் பெயர் என்ன? உனக்கும் அப்படி இருந்ததா? எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ரயில் பிரயாணம், வாழ்க்கைப் பயணமாக தொடர வேண்டும் என்று எனக்குள் ஒரு ஆசை முளைக்கிறதே, உனக்குப் புரிகிறதா… ஏன் என்று…? அவன் அவளையே பார்த்துக் கொண்டு வந்தான். சற்று நேரத்தில் அவள் போர்வை மெல்ல நகர்ந்து, கிரகணம் விட்ட நிலவு மாதிரி அவள் எழுந்தமர்ந்து தன் உருவம் காட்டினாள். அவனைப் பார்த்து விட்டு மெளனமாய் எழுந்து கொண்டாள். 

“குட் மார்னிங்’ அவன் சொல்ல வேறு வழியின்றி அவளும் பதிலுக்கு சொல்லிவிட்டு பாத்ரூம் பக்கம் சென்றாள். பதினைந்து நிமிடத்திற்குப் பிறகு பளிச்சென்று திரும்பி வந்தாள். 

“நல்லா தூங்கினீங்களா?” 

”ம்” 

“எனக்கு அரைத் தூக்கம்தான்.” 

“ஓஹோ…” 

“காபி சொல்லவா?” 

“நோ தேங்க்ஸ்…” 

“மயக்க மருந்து பயமா?” 

அவள் பதில் சொல்லாமல் குனிந்து சிட்னி ஷெல்டனை எடுத்தாள். 

உள்ளே ஒரு துண்டுச் சீட்டு இருக்க புருவம் சுருக்கியபடி அதைப் பிரித்தாள். 

எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்து கொண்டதற்கு நன்றி. உங்கள் பிரார்த்தனை வீண் போகவில்லை. எனக்கொரு காதலி கிடைத்து விட்டாள். 

இப்படிக்கு 

கல்யாணமாகிவிட்டது என்று பொய் சொன்ன கட்டை பிரம்மச்சாரி ஆகாஷ். 

அவள் சட்டென்று நிமிர்ந்து பார்க்க, அவன் விஷமச் சிரிப்போடு முகத்தைத் திருப்பிக் கொண்டான். 

சற்று நேரத்தில் மீண்டும் சலங்கை மணிகள் சிதறியது. முகம் சிவக்க சிரித்தாள் அவள். 

“ஆனாலும் ரொம்ப மோசம் நீங்க.. “

”நானா…? நீங்கதான் மோசம்.. ஏங்க கல்யாணமான ஆம்பளைன்னா அவ்ளோ கேவலமா?” 

“அதெல்லாம் இல்ல, மனைவி மூணாவது கர்ப்பம்னு சொன்னிங்க பாருங்க. அப்பொதான் எரிச்சல் வந்தது. ஏன் இப்டி பொய் சொன்னீங்க?” 

“மாடல்னு நீங்க சின்ன பொய் சொன்னதுக்கு பழிக்குப் பழி!” 

”அது சரி பிரார்த்தனை நிறைவேறிடுச்சு. நன்றின்னு ஏதோ எழுதியிருக்கீங்க…? எப்பொ சார் உங்களுக்கு காதலி கிடைச்சா.. கேண்டீன்லேர்ந்து கொண்டு வந்து கொடுத்தாங்களா…?” 

“அப்டித்தான் வெச்சுக்கறது!” 

”சொல்லமாட்டீங்களாக்கும்.” 

”சொல்லுவேன் இப்பொ இல்ல. இறங்கும்போது ஆளைக் காட்டி இவதான்னு சொல்லுவேன்”. 

”அவள் புதிருக்கு விடை தெரியாமல் அவனையே பார்த்தாள்.” 

அத்தியாயம்-2

உன் மகனுக்கு நல்ல மனைவி கிடைத்தால்
உனக்கொரு மகள் கிடைப்பாள், இல்லையென்றால் 
உன் மகனை நீ கழப்பாய். – பெர்னாட்ஷா. 

சம்பத் கடிகாரத்தையும், மூடியிருந்த அந்த அறைக் கதவையும் மாறி மாறிப் பார்த்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த ஆகாஷ் பிஸினஸ் இண்டியாவின் கடைசி பக்கத்திற்கு வந்திருந்தாள். 

“ஏண்டா ஆகாஷ்… உள்ள என்னதான் பண்றாங்க அம்மாவும் பெண்ணும், மூடின கதவை சொர்க்க வாசல். 

“என்னப்பா நீ, லேடீஸ் டிரெஸ்ஸிங்னா சும்மாவா? பீரோல் இருக்கற அத்தனை புடவையையும் இழுத்து போட்டு பரப்பி வெச்சுக்கிட்டு எதை உடுத்திக்கறதுன்னு தீர்மானம் பண்ண ஒரு மணி நேரம். அத்தனை புடவை இருந்தும் ச்சே ஒரு புடவை கூட ஒழுங்கால்லன்னு ஒரு முணுமுணுப்போட ஒருபுடவையை எடுத்து கட்டிக்க அரைமணி அப்பறம் நகைப் பெட்டியை காலி பண்ணி உடம்புல சார்த்திக்க முக்கா மணி அப்புறம்,பவுடர், பொட்டு, தலை வாரல் பூச்சுடல் இத்யாதி இத்யாதி…எவ்ளோ இருக்கு! 

அதுக்குள்ள அங்க கல்யாண முகூர்த்தம் போய் சீமந்த முகூர்த்தமே வந்துடும். 

“நீ வேற! குழந்தைக்கு ஆயுஷ் ஹோமமே வந்துடும்னு சொல்லு” ஆகாஷ் சிரித்தான். 

சம்பத் எழுந்து சென்று அறைக்கதவைத் தட்டினார். “ஆச்சா சாரதா. மணியாறதே!” 

‘இதோ வந்துட்டோம்.. அடடாடா… நிம்மதியா டிரெஸ் பண்ணிக்க விட மாட்டீங்களே!” 

முகூர்த்தத்துக்கு போய்ட்டு வந்தப்பறம் நாள் முழுக்க வேணா டிரெஸ் பண்ணிக்கயேன் யார் கேக்கப் போறாங்க?” 

மேலும் கால் மணி நேரம் கடந்த பின்பே கதவு திறந்தது. முழு அகலத்திற்கு ஜரிகையோடு கூடிய பட்டுப் புடவையும், தங்க வைர ஆபரணங்களுமாய் வெளியில் வந்த மனைவியைக் கண்டதும் கண் கூசுவது போல் பாவனை செய்தார் சம்பத். 

“என்னடி இது… வீதி உலா புறப்பட்ட அம்மன் சிலையாட்டம்?” 

”உங்க சொந்தக்காரங்க வீட்டு கல்யாணமாச்சே அதான் இப்டி வரேன். அப்பதான் உங்களுக்கு மரியாதை!” 

”சரிதான்… உம்பொண்ணு எங்க…?” 

“நா ரெடிப்பா” சங்கீதா குரல் கொடுத்தபடி வெளியில் வந்தாள். 

ரோஜா நிறத்தில் சுரிதாரும், அதே நிறத்தில் துப்பட்டாவும், ஹேர் கிளிப்பில் அடக்கிய தலைமுடியும், நெற்றியில் சின்ன கறுப்பு பொட்டுமாக எளிமையான அழகோடு வந்து நின்ற பெண்ணை வியப்போடு பார்த்தார். 

”என்னம்மா… நீ பட்டுப்புடவை கட்டிக்கலையா? இந்த டிரஸ் பண்ணிக்கவா இவ்ளோ நேரம் ஆக்கின?” 

‘நா அஞ்சு நிமிஷத்துல ரெடியாய்ட்டேம்ப்பா அம்மாக்கு ஹெல்ப் பண்ணிட்ருந்தேன். ” 

‘சம்பத் மனைவியை கிண்டலாகப் பார்த்தார்.” 

‘சரி கிளம்பலாமா… இல்ல இன்னும் ஏதாவது அலங்காரம் பாக்கியிருக்கா…?” 

“கிளம்பலாம்…” 

“அப்பாடா.. பிழைச்சேன். ஆகாஷ் சட்டுனு புறப்படுடா. காரைஸ்டார்ட் பண்ணி ரெடியா வெச்சுக்கோ.. இவ ஏறினதும் உடனே கிளம்பிடணும்.” 

“இந்த கிண்டலுக்கு ஒண்ணும் குறைச்சலில்ல.”

‘பின்ன என்னம்மா.. மணி என்ன ஆறது பார். முகூர்த்தம் முடிஞ்சு சாப்பாடு கூட முடிஞ்சிருக்கும்”. 

”அதுவும் தீர்ந்திருக்கும்டா. மிச்சம் மீதி காய்கறில் ஒரு சாலட் பண்ணித் தந்து சாப்டுன்னு சொல்லப் போறாங்க பார்.”

”போறும்பா ரொம்பத்தான் வாராதிங்க. கிளம்புங்க.. “

சங்கீதா ஓடிப்போய் காரில் ஏறிக் கொண்டாள். ஒரு வழியாக அனைவரும் கல்யாணத்திற்கு புறப்பட்டார்கள். ஆகாஷ் காரை ஓட்டினான். 

சம்பத்தின் ஒன்றுவிட்ட தங்கையின் பெண்ணுக்குத்தான் கல்யாணம். தங்கை இறந்து விட்டாள். தகப்பனின் நிழலில் வளர்ந்த இரு பெண்களில் மூத்தவள் சத்யாவுக்குத்தான் திருமணம். இந்த திருமணத்திற்காக சம்பத் மனைவிக்குத் தெரியாமல் இருபதாயிரம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார். சம்பத்தின் உறவுகளோடு சாரதா நெருங்கிப் பழகுவதில்லை. தன் ஜபர்தஸ்ஸைக் காட்டிக் கொள்வதற்கு மட்டுமே விரும்புவாள். இருப்பினும் சம்பத் அவளுக்கும் தெரியாமல் தன் உறவுகளின் வீடுகளுக்கு சுமூகமாக போய் வருவார். சின்னச் சின்ன உதவிகள் செய்வார். 

முக்கியமாக தாயின்றி வளர்ந்த சத்யா, சரண்யா இருவரின் மீதும் அவருக்கு தனி அன்பு உண்டு. இன்னும் சொல்லப் போனால் சத்யாவின் தங்கை சரண்யாவைத் தன் மகன் ஆகாஷுக்கு கட்டி வைத்து மருமகளாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவர் உள் மனதில் ஒளிந்து கொண்டிருந்தது. இந்த ஆசை நிச்சயம் நிறைவேறாது என்பது அவருக்குத் தெரியும். அவருடைய உறவு என்றாலே சாரதாவுக்கு இளப்பம். அதிலும் தங்களை விட அந்தஸ்தில் பல மடங்கு கீழே உள்ள கோபாலனின் பெண்ணையாவது அவள் மருமகளாய் ஏற்றுக் கொள்வதாவது! இருந்தாலும் சம்பத்தின் உள் மனசுக்குள் அப்படி ஒரு ஆசை ஏற்பட்டிருந்தது. 

ஆகாஷ் இதுவரை சரண்யாவைப் பார்த்ததில்லை. பொதுவாய் அவன் எந்த இடத்திற்கும் வரமாட்டான். இப்போது கூட அப்பா மிகவும் வற்பறுத்தியதால் தான் அரை மனதோடு கிளம்பியிருந்தான். ஒரே ஒரு முறை அவன் சரண்யாவைப் பார்த்து விட்டால் போதும் நிச்சயம் அவனுக்கு அவளைப் பிடித்து விடும். பிறகு தன் விருப்பம் நிறைவேறுவது சுலபமாகி விடும் என்று நினைத்தார் சம்பத். சரண்யாவைப் பார்ப்பதற்கு இந்த கல்யாணம் ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. குடும்பத்தோடு வந்து விடுவதாக கோபாலனுக்குக் கொடுத்த வாக்கையும் காப்பாற்ற வேண்டுமே..! 

“இந்த கல்யாணத்துல நாம தான் சீஃப் கெஸ்ட்டாம். நீதான் உன் திருக்கையால் தாலியை ஆசீர்வாதம் பண்ணி எடுத்துக் கொடுக்கணும்னு கோபாலன் ஆசைப்படறார். அவர் இவ்ளோ மரியாதை கொடுக்கும் போது நாமளும் காப்பாத்திக்க வேண்டாமா? 

குடும்பத்தோட போகணும். நம்ம கௌரவத்தைக் காப்பாத்திக்கணும் சரியா…?” மனைவியை வார்த்தை வலைகளால் பிடித்தார். 

“போய்ட்டா போச்சு… 

மனைவி சம்மதித்தாளே என்று சந்தோஷப்பட்டால் மகன் சிணுங்கினான். 

“அவங்களை எல்லாம் எனக்கு பழக்கமே இல்லப்பா. நா எதுக்கு? நீங்க மட்டும் போனா போறாதா?” 

”என்னடா இப்டி சொல்ற… பழக்கமே இல்லன்னா எப்டி…? பழகினாதானே பழக்கம் ஏற்படும்? நம்ம உறவுகளை எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டாமா.. நாளைக்கு நம்ம நல்லது கெட்டதுக்கு நாலு பேர் வர வேண்டாமா? நீ இன்னும் சின்னப்பையனில்ல நாளைக்கு எனக்கப்பறம் நீதான் இந்த குடும்பத் தலைவன் எல்லாரையும் தெரிஞ்சுக்கணும் நீ. கிளம்பி வா நான் சொல்றேன்.” 

அவர் வற்புறுத்த அரை மனதோடு அவனும் கிளம்பி விட்டான். சங்கீதாவைப் பற்றி பிரச்சனை இல்லை. அவள் அப்பா பெண். அவர் எது சொன்னாலும் அவளுக்கு வேதவாக்கு. 

எப்படியோ வெற்றிகரமாக அவரும் குடும்பத்தோடு புறப்பட்டு விட்டார். இதுவே நல்ல சகுனம்தான். அவர் மனசு சந்தோஷமாய் இருந்தது. 

முகூர்த்தத்திற்கு இன்னும் அரை மணியே இருந்தது. கோபாலன் சத்திரத்து வாசலுக்கு வந்து வீதியைப் பார்த்தார். குடும்பத்தோடு சீக்கிரமே வந்து விடுவதாகச் சொன்ன சம்பத்தை இன்னும் காணவில்லை. அவர்களுடைய ஆசிர்வாதத்திற்காக தாலி காத்திருக்கிறது. இது சம்பத்தின் வேண்டுகோள். எம் பொண்டாட்டி வரணும்னா அவளுக்கு கிலோ கிலோவா ஐஸ் வெச்சு உபசாரம் பண்ணனும் அப்பதான் வருவா… “நீதான் தாலியை ஆசிர்வாதம் பண்ணிக் கொடுக்கணுமாம்னு சொல்லி கூட்டிட்டு வரேன், மறந்துடாம அவகிட்ட தாலியைக் கொடுத்து வாங்கிடு இல்லாட்டி நா அவ்ளோதான் சரியா…?” 6 என்று முன்பே அவர் சொல்லியிருந்தார். 

சம்பத் நல்லவர். இந்த கல்யாணத்திற்கு இடது கைக்குக் கூடத் தெரியாமல் இருபதாயிரம் கொடுத்திருக்கிறார். இது தவிர, கோகிலா இறந்ததற்குப் பிறகு இன்று வரை எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார். எவ்வளவு நேரமானாலும் சரி அவரும் அவர் மனைவியும் தொட்டு ஆசிர்வதித்த பிறகுதான் இந்த கல்யாணம் நடக்கும். 

கோபாலன் உள்ளுக்கும் வாசலுக்கும் நடந்தார். 

”என்னப்பா..இன்னுமா சம்பத் மாமா வரல…?” பின்னால் சரண்யாவின் குரல் கேட்க திரும்பினார். 

‘இன்னும் காணலையே.. ஒருவேளை உங்க மாமி வரமாட்டேன்னு சொல்லிட்டாங்களா…?” 

“அப்டியெல்லாம் இருக்காது. வழில கார் ஏதாவது ரிப்பேராகியிருக்கும். எப்டியும் வந்துடுவாங்க. நீ உள்ள வாப்பா… அய்யர் உன்னைக் கூப்பிடறார்.. 

கோபாலன் உட்புறம் செல்ல திரும்பியபோது சற்று தூரத்தில் ஹாரன் ஒலி கேட்டது. 

”சம்பத்தான் வந்தாச்சு…நீ போய் பூவும் சர்க்கரையும் கொண்டா பன்னீர் சொம்பும் கொண்டா..” 

சரண்யா உள்ளே ஓடினாள். அடுத்த வினாடி டிரே நிறைய பூவும் சந்தனமும், கல்கண்டுமாய் ஒரு கையில் பன்னீர் சொம்போடு திரும்பி வந்தாள். 

கார் நின்றது. சம்பத் மாமா முதலில் இறங்கினார். அவருக்குப் பின்னால் ஜெக ஜோதியாய் மாமி, அவளையடுத்து மலர்ந்த ரோஜாவாய் சங்கீதா. மூவரும் இறங்கியதும் ஆகாஷ் காரை ஒரு ஓரமாக ஒட்டிச் சென்று நிறுத்தினான். 

“வாங்க வாங்க” 

கோபாலன் கை கூப்பி பணிவோடு வரவேற்றார். 

சரண்யா பன்னீர் தெளித்து டிரேயை நீட்டினாள். 

“இது யாரு தெரியுதா? சரண்யா. கோகிலாவோட ரெண்டாவது பொண்ணு. கம்ப்யூட்டர் சையின்ஸ் படிச்சுட்ருக்கா. நல்லா பாடுவா. சங்கீதம் கத்துக்கறா. கோபாலனுக்கு வலது கை இவதான். புத்திசாலி, பொறுமைசாலி.. பக்குவம்…” 

சாரதா அவரை திரும்பிப் பார்க்க அதோடு நிறுத்திக் கொண்டார். 

“ஐ ஆம் சங்கீதா. பேர்லதான் சங்கீதம் இருக்கு. பாட எல்லாம் தெரியாது” சங்கீதா முகம் நிறைய சிரிப்போடு தன்னைத்தானே அறிமுகம் செய்து கொண்டாள். கொஞ்சம் சந்தனம் எடுத்து கழுத்தில் பூசிக் கொண்டு சரண்யாவுக்கும் பூசிவிட்டாள். சட்டென்று நட்பு கொள்ள அவளால் மட்டும்தான் முடியும் என்பது போல் சரண்யாவின் கைகளைக் கோர்த்துக் கொண்டு உள்ளே போனாள். சம்பத் அவர்கள் போவதை சற்று ஏமாற்றத்தோடு பார்த்தார். காரை பார்க் பண்ணப் போன ஆகாஷை இன்னும் காணவில்லை. அவனை சரண்யா வாசலிலேயே சந்திக்க வேண்டும் என்று நினைத்தார் அவர். அதற்குள் இவர்கள் உள்ளே போய்விட்டார்கள். அவர், பிள்ளைக்காக காத்திருந்தார். 

“என்னடா இவ்ளோ நேரம்…?” 

“சட்டுனு ரிவர்ஸ் எடுக்கறா மாதிரி இடமா பார்த்து விட்டுட்டு வந்தேன்.” 

“சரி வா,உங்கம்மாக்கு உபசாரமோ உபசாரம். பன்னீரால குளிப்பாட்டியாச்சு. நீயும் இருந்திருந்தா உனக்கும் வரவேற்பு நடந்திருக்கும்.” 

“ப்ஸு… ஆகாஷ் அலுத்து கொண்டு, அவரோடு நடந்தான். யாரோடும் அதிக பழக்கமில்லை என்பதால் ஒரு ஓரமாக சேரில் அமர்ந்து விட்டான். மணமேடையில் அம்மா கம்பீரமாக தாலியை ஆசிர்வதித்து கொடுத்துக் கொண்டிருக்க முகூர்த்த நேர பரபரப்பும் நாயன சத்தமும் சத்திரத்தை நிரப்பியது. 

“ஏம்மா சரண்யா… என் பிள்ளைக்கு கல்கண்டு கொடுத்தாயா நீ..? அவன் வரதுக்குள்ள உள்ள ஓடிட்டயே.. அவன் கோச்சுக்கிட்டு ஒரு ஓரமா உக்காந்துட்டான் பாரு யாருமே தன்னை வரவேற்கலன்னு..” 

முகூர்த்தம் முடிந்த பின் எல்லோருக்கும் கல்கண்டும், குங்குமமும் சந்தனமும் கொடுத்துக் கொண்டிருந்த சரண்யாவை அருகில் அழைத்துச் சொல்லி ஆகாஷை அவளுக்கு சுட்டிக் காடடினார். 

”சாரி அங்கிள்.. நா கவனிக்கல.. இதோ இப்ப குடுத்துடறேன் சரியா?” 

சரண்யா கல்கண்டு தட்டோடு ஆகாஷை நோக்கி நடந்தாள். ”அப்பா நீ இங்க இருக்கயா.. அம்மா தேடறா பார் உன்னை” சங்கீதா அவரிடம் வந்தாள். 

“எதுக்காம்?” 

“தெரியாது, கல்யாணப் பரிசு கொடுக்கவா இருக்கும். அம்மாவைப் பார்த்தயா.. ஒரே பூரிப்புதான். பணக்கார கல்யாணம்னா அவளை யார் சட்டை பண்றதுக்கிருக்காங்க. இங்க ஒரே உபசார மயம். அவ புடவையையும் நகைகளையும் பாராட்டோ பாராட்டு பாலாபிஷேகம் பண்ணின விக்ரகம் மாதிரி குளிர்ந்து போய் நிக்கறா” 

“இரு இரு.. உங்கம்மாவை கிண்டலா பண்ற… அவகிட்ட சொல்லி உன்னை…” 

பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவர் பார்வை ஆகாஷிடமே இருந்தது. 

“அங்க யாரைப்பா பார்க்கற…?” சங்கீதா அவர் பார்வை சென்ற திசையில் திரும்பிப் பார்த்தாள். தூரத்தில் சரண்யா ஆகாஷிடம் கல்கண்டு தட்டை நீட்டி ஏதோ பேசிக் கொண்டிருக்க சங்கீதா அப்பாவைத் திரும்பிப் பார்த்தாள். 

“இந்த சரண்யா எவ்ளோ அழகார்க்காப்பா. ரொம்ப நல்ல சுபாவமும் கூட..! இதுக்கு முன்னாடி நீ இவங்களை எல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தினதே இல்லையே ஏன்…?” 

அவர் புன்னகைத்தார். “எல்லாத்துக்கும் ஒரு நேரம் வர வேண்டாமா? அதான் நீ சொல்லு சங்கீதா ஆகாஷையும் அவளையும் சேர்த்து பார்த்தா நல்லால்ல…?” 

“அ..ப்..பா…” சங்கீதா விழியகல அவரைப் பார்த்தாள். “இதான் உன்பிளானா..? அப்டிப் போடு.. இதுக்குதான் எல்லாரையும் இழுத்துக்கிட்டு வந்தயா…? என்னடா.. இப்டி கெஞ்சறயேன்னு பார்த்தேன். இப்பதானே புரியுது.” 

“நா கேட்டதுக்கு பதில் சொல்லேன்.” 

“பஸ்ட் கிளாஸ் ஜோடிப்பா. அதுல சந்தேகமே இல்ல. ஆனா மேல் இருக்கறவன் முடிச்சு போட்டு வெச்சிருக்கணுமே!” 

“மேல இருக்கறவன் போட்டுட்டா போதாதுடி நான் போடணும்.” 

பின்னால் அம்மாவின் குரல் கேட்க சங்கீதா திடுக்கிட்டு திரும்பினாள். அப்பாவை பயத்தோடு பார்த்தாள். 

”சோழியன் குடுமி என்னடா இப்டி ஆடுதேன்னு பார்த்தேன். இப்பதானே புரியுது! இந்த ஆசையை இங்கயே விட்டுவிட்டு கிளம்பற வழியப் பாருங்க. சாப்பாட்டுக்காகக் கூட நிக்க வேணாம். உடனே புறப்படுங்க.” 

சாரதா கோபத்தில் ஜ்வலித்த முகத்தோடு விறுவிறுவென்று வாசலை நோக்கி நடந்தாள். 

அத்தியாயம்-3

காதல் எனும் உணர்வுபாதரசம் போல்
கனமாக இருந்தாலும்கைகளில்அகப்படாதது
(வாய்க்கால் மீன்களில் இறையன்புவின் வரிகள்) 

நேஷனல் ஜியாக்ரபி சானலில் ராஜஸ்தான் பற்றிய டாக்குமென்டரி ஓடிக் கொண்டிருந்தது. அந்த மக்களின் கலையும் கலாச்சாரமும், வாழ்க்கையும், ரோஜா நிற கட்டிடங்களும், கண்ணாடிகள் பதித்த ஆடைகளும், வர்ணமயமான ஆபரணங்களும் அற்புதமாக படமாக்கப் பட்டிருந்தது. பிரம்மிப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் சரண்யா. சத்யா இருந்தால் இதெல்லாம்பார்க்க விட மாட்டாள். அவளுக்கு எல்லா தமிழ் சீரியலையும் பார்த்தாக வேண்டும். அது எவ்வளவு மட்டமாக இருந்தாலும் மாய்ந்து மாய்ந்து பார்ப்பாள். கனமான மேக்கப் போட்டுக் கொண்டு கிளிசரின் உதவியோடு கண் மை கலையாமல் அழும் பெண்களையும் உப்பு சப்பில்லாத ஜவ்வு மிட்டாய்க் கதைகளையும் எப்படித்தான் அவளால் பார்க்க முடிகிறதோ என்று புரியாமல் தலையைப் பிடித்துக் கொள்வாள் சரண்யா. 

மாத்தி மாத்தி எவளாவது மேக்கப் போட்டுக்கிட்டு அசிங்கமா அழறா. எப்டிடி சத்யா உக்கார்ந்து பார்க்கற? ஒரு முறை கேட்டே விட்டாள். 

”உனக்கு பிடிக்காட்டா யார் பார்க்கச் சொல்றாங்க?” சத்யா டி.வி.யிலிருந்து கண் எடுக்காமல் சொல்லுவாள். 

“இந்த மாதிரி டி.வி. சீரியல்லாம் பார்த்தா இருக்கற அறிவும் மழுங்கிப் போய்டும் சத்யா. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.. நீ தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் எவ்ளவோ இருக்கு. உலகத்தின் பல அதிசயங்களையும், உண்மை களையும், மருத்துவ வளர்ச்சியையும் புதிய கண்டுபிடிப்புக்களையும் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கற ஆசையே இல்லையா உனக்கு. இப்டி உப்பு சப்பில்லாத தொடர்களைப் பார்த்து உன் நேரத்தை வீணடிக்கறதைப் பார்த்தா எனக்கு கஷ்டமார்க்கு.” 

“அப்டின்னா’பொழுது போக்கு தப்புங்கறயா?” 

“இல்ல, அதுவே உன் வாழ்க்கையாய்டக் கூடாதுன்னு சொல்றேன். வாழ்க்கைன்னா என்னன்னு உனக்கு புரிய வெக்கற நல்ல தொடர் ஒண்ணு ரெண்டு பாரு போதும்ங்கறேன்.” 

”இதோ பார் சரண்யா, போகிற போக்குல நா வாழ்க்கையைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு போறேன். என் அறிவுக்கும் எந்த குறைச்சலும் இல்ல. இப்போதைக்கு என் சந்தோஷம் எதுவோ அதைத்தான் நா அனுபவிக்கறேன். அட்வைஸ்ங்கற பேர்ல என்னை அறுக்காதயேன்.” 

“அய்யோ அக்கா.. உன் சந்தோஷம் எனக்கு சங்கடமார்க்கே! அதுக்கென்ன செய்யலாம்? வீட்ல ஒரு டி.வி.தானே இருக்கு. நீ இப்டி பேய், பூதம் ரத்தக்காட்டேரின்னு உக்காந்துட்டா, எனக்கு பிடிச்சதை நா எப்பொதான் பார்க்கறது?” 

“நா இல்லாதப்போ பாரு. நீ மட்டும் பெரிசா என்ன பார்த்துடப் போற, டிஸ்கவரில ஒரு பெங்குவின் மனுஷன் மாதிரி நடந்து வரும். இல்ல ஒரு புலி மானைத் துரத்தியடிச்சு கொன்னு கிழிச்சு சாப்ட்டுட்ருக்கும். ஒருபாம்பு எலியைத் துரத்தும். இதுல என்ன பெரிய அறிவு கிடைச்சுடுமாம்?” 

‘இயற்கையைப் பத்தி, மிருகங்களைப் பத்தி துருவங்களைப் பத்தி எவ்ளோ விஷயம் அதுல சொல்றாங்கன்னு தெரியுமா உனக்கு?” 

“போதுமே சரண்யா. நா முட்டாளாவே இருந்துட்டு போறேன் விடு!” 

தர்க்கம் பண்ணவோ சண்டை போடவோ சத்யா இப்போது இல்லை. தனக்கு பிடித்த விஷயத்தை நிம்மதியாய் உட்கார்ந்து பார்க்க முடிந்தாலும் கூட அக்கா இல்லாத வீடு ஒரு மாதிரிதான் இருந்தது. 

டிஸ்கவரியில் மற்றொரு டாக்குமென்டரியைப் பார்க்க ஆரம்பித்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அப்பாவை இன்னும் காணவில்லை. வழக்கமாக அவர் வரும் நேரம்தான். 

சரண்யா உள்ளே போய் சாம்பாரையும் ரசத்தையும் பொரியலையும் சூடு பண்ணினாள். அக்கா இருந்தவரை அடுக்களை வேலை முழுக்க அவள்தான் செய்தாள். சரண்யா உதவி செய்யப் போனாலும் விடமாட்டாள். எனக்கு எல்லாமே நானே செய்தால்தான் திருப்தி என்பாள். இப்போது எல்லா வேலையும் இவள் தலையில் இருப்பது இரண்டே பேர்தான் என்பதால் சமையல் வேலை பிரமாதமில்லை. அப்பாவுக்கும் சரி அவளுக்கும் சரி சாப்பாடு ஒரு பெரிய விஷயமும் இல்லை. நிறைய சாப்பிடறவனாலயும்,நிறைய தூங்கறவனாலயும் எதுவும் சாதிக்க முடியாது என்பார். அடிக்கடி சத்யாவுக்கும் சரண்யாவுக்கும் அவர் அப்பா மட்டும் இல்லை. நல்ல வழிகாட்டியும் கூட, அறுவை ஜோக்ஸ் முதல் கார்ல்மார்க்ஸ் வரை அவரோடு பகிர்ந்து கொள்ளலாம். ‘சரண்யா அடுப்புக்கு முன்னாடி நின்னுக்கிட்டு என்ன யோசனை? பொரியல் கரியலாய்டுச்சு பார்!” 

அப்பாவின் குரல் கேட்க சரண்யா திடுக்கிட்டு திரும்பினாள். அவசரமாய் அடுப்பை அணைத்தாள். 

‘என்ன யோசனைம்மா, ஆகாஷ் ஞாபகமா? அடுப்பை கோட்டை விட்டுட்டு நிக்கற?” 

“ச்சீ நிஜமா இல்லப்பா…”

“நீங்க இல்லன்னு சொன்னா நாங்க நம்பிடுவோமாக்கும். நானும் பார்த்துக்கிட்டுதானே இருக்கேன். சத்யா கல்யாணத்துக்கு ஆகாஷ் வந்ததுலேர்ந்து நீ பூமிலயே இல்ல.” 

”சரி அப்டியே வெச்சுக்கோ. அதுக்கென்ன இப்பொ?” 

“அதுக்கொண்ணுமில்ல. பொரியலுக்குதான் நேரம் சரியில்ல.” 

அப்பா சிரிக்க சரண்யாவின் முகம் சிவந்தது. 

சாரிப்பா… 

“போனாப் போகட்டும். கொஞ்சம் சிரிப்பா” 

“ஓ கேப்பா…!” சரண்யா பளிச்சென்று சிரித்தாள். ”போய் கை கழுவிட்டு வாங்க. இருக்கறதை சாப்டுவோம்.” 

சரண்யா தனக்கும் அப்பாவுக்கும் தட்டு வைத்தாள். 

”எனக்கொரு சந்தேகம்ப்பா” சாம்பார் சாதத்தை பிசைந்தபடி கேட்டாள். 

“என்ன சந்தேகம்?” 

“இதெல்லாம் நடக்கும்னு நம்பறீங்களா?” 

“எதெல்லாம்?” 

“சம்பத் மாமாவோட ஆசையைச் சொல்றேன்.” 

“திடீர்னு என்ன சந்தேகம் அதுல?”

”இல்ல.. மாமியப் பார்த்தா அவங்க கிட்டக்கூட நாம நெருங்க முடியாதுன்னு தோணுது. அவ்ளோ பந்தா. அவங்க இதுக்கு ஒத்துப்பாங்களா? அவங்க ஆசைக்கெல்லாம் உங்களால தீனி போட முடியுமா?” 

”எனக்கும் இந்த கவலை இல்லாம இல்லம்மா. இது சம்பத்தோட விருப்பம். உனக்கு ஆகாஷைப் பிடிக்கணுமேங்கற கவலை இத்தனை நாள் இருந்தது. சத்யா கல்யாணத்துல நீயும் அவனும் பேசிக்கிட்டதைப் பார்த்ததும் அந்த கவலை போய்டுச்சு. அவனுக்கும் உன்னைப் பிடிச்சிருக்கும்னுதான் தோணுது. நா கொடுத்துதான் அந்த வீடு நிறையணும்னு இல்ல. இருந்தாலும் உன் கௌரவத்துக்கு எந்த குறையும் ஏற்படாம என்னால முடிஞ்சதை செய்துடணும்னு இருக்கேன். அதுக்கேத்தா மாதிரி எனக்கு ஒரு வழியும் கிடைச்சிருக்கு. ” 

“என்ன வழிப்பா?’ 

கூடுதல் வருமானத்துக்கு ஒரு வழி. சினிமால சின்னச் சின்ன வேஷங்கள் செய்ய கூப்பிடறாங்க. சின்ன வேஷத்துக்கு கூட சினிமால கணிசமா காசு பார்க்கலாம். தெரிஞ்சவங்க ரெண்டு மூணு பேர் உதவறேன்னு சொல்லியிருக்காங்க.” 

“எதுக்குப்பா…” 

“இதுல என்ன தாயி தப்பு..? ஹீரோ வேஷமா போடப் போறேன்?” 

“அந்த ஆசை வேற இருக்கா?” 

”நீ வேற என்னை விட ரெண்டு வயசு கூடுதலா இருக்கறவங்க கூட விக்கும் அரும்பு மீசையும் வெச்சுக்கிட்டு ஆடிப்பாடறாங்க. தெரியுமா? அதுக்கெல்லாம் மச்சம் வேணும்.” 

“நா வேணா ஒரு மச்சம் வெச்சு விடவா மையால?” 

”நமக்கு வேணாம்மா. எனக்கு சின்ன வேஷம் போதும். ஒரு சீன்ல வந்து ஊசி குத்திட்டு போற டாக்டரா, இந்த பக்கமும் அந்த பக்கமும் திரும்பி திரும்பி பார்த்துக்கிட்டு பொம்மை உட்கார்ந்துக்கிட்டு கட சீல தீர்ப்பெழுதி வாசிக்கற நீதிபதியா, ரெண்டு சீன்ல வந்துட்டு குத்துப்பட்டு சாகற ஹீரோவோட அப்பாவா, படம் முடியறப்ப வந்து வில்லன்கள் கையில் விலங்கு மாட்டற இன்ஸ்பெக்டரா, இது போதும் நமக்கு.”

அப்பா சொல்லச் சொல்ல சிரிப்பு வந்தது அவளுக்கு. 

”என்னமோ செய்ப்பா. நீ எப்டி நடிச்சா என்ன. நா எந்த தமிழ் சினிமாவும் பாக்கறதில்ல. அப்பறம் என்ன? ஒண்ணு மட்டும் நிஜம்மா. எனக்கு தெரிஞ்சு சில பேர் நடிக்க வந்தப்ப ஒரு ஹீரோயினோட நடிச்சாங்க. பத்து பதினஞ்சு வருஷம் கழிச்சு அந்த ஹீரோயினோட பொண்ணோட நடிச்சாங்க. இப்ப ரீஸன்டா அந்த ஹீரோயினோட பேத்தியோட நடிக்கறாங்க. மேக்கப் போட்ட மார்க்கண்டேயர்கள் ஜனங்களும் ரசிக்க பாக்கறாங்களே அதை சொல்லுங்க!” 

”அதுசரி உன்னை மாதிரி எல்லாரும் இருந்துட்டா சினிமாவை நம்பியிருக்கற லட்சக்கணக்கான வங்கள்ளாம் பட்னி கிடக்க வேண்டியதுதான். அதை விடு, அன்னிக்கு அப்டி என்னம்மா பேசின அந்த ஆகாஷோட? சிரிச்சு சிரிச்சு பேசிட்ருந்தீங்க!” 

சிரிச்சு பேசினோமா.. சரிதான். உனக்கு அப்டியா தெரிஞ்சுது? சாதாரணமாதான் பேசிட்ருந்தோம். ஆனா அதை உங்கிட்ட சொல்றதால்ல.” 

“ரகசியமா?” 

”ரகசியம் எல்லாம் இல்ல. மறந்து போச்சு அதான் உண்மை!”நா இதை நம்பணுமா…?” 

“அது உன் இஷ்டம். சரண்யா சாப்பிட்டு முடித்து எழுந்தாள். காலி பாத்திரங்களை சிங்க்கில் போட்டு நீர் ஊற்றினாள். அப்பா எழுந்ததும் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து துடைத்தாள். 

மறுநாள் கல்லூரியில் ஒரு டெஸ்ட் இருந்தது. அதற்குரிய புத்தகத்தோடு படிக்க உட்கார்ந்தாள். அப்பா பத்து மணி செய்திகள் பார்க்க ஆரம்பித்தார். 

சரண்யாவுக்கு பாடத்தில் கவனம் செல்லவில்லை. மறந்து விட்டது என்று அப்பாவிடம் சொல்லியது பொய். நன்றாகவே நினைவிருந்தது அவளுக்கு. என் பிள்ளைக்கு கல்கண்டு கொடுத்தாயா என்று சம்பத் மாமா கேட்ட பிறகு கல்கண்டு டிரேயோடு ஆகாஷை நோக்கிச் சென்றாள். 

”குட்மார்னிங் ஆகாஷ். நா சரண்யா. கல்யாணப் பெண்ணோட தங்கை.” 

”ஓ…” 

“கல்கண்டு எடுத்துக்குங்க.” 

அவன் இரண்டே இரண்டு டைமன் கல்கண்டை நாசூக்காக எடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தான். 

”நீ என்ன பண்ணிட்ருக்க?” 

‘படிச்சுட்ருக்கேன். பி.எஸ்சி. கம்யூட்டர் சையின்ஸ் பைனல் இயர் இது.”

”வெரிகுட். மேல என்ன செய்யப் போற?” 

“வேலைக்கு போகலாம். இல்ல தொடர்ந்து எம்.சி.ஏ.வோ,எம்.எஸ்ஸோ கூட பண்ணலாம். கடவுள் என் தலையில என்ன எழுதியிருக்கான்னு தெரியலையே.” 

“நாம முயற்சி பண்ணினாதானே எந்த வெற்றியும் கிடைக்கும். சும்மா கடவுள் மேல பழியைப் போட்டா எப்டி?” 

“அப்டி சொல்லுங்க ஆகாஷ்.அப்புறம் ஏன், மனிதன் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்னு பழமொழி வந்துது?” 

“வாழ்க்கைல தோற்றுப் போனவங்க யாராவது அப்டி சொல்லியிருப்பாங்க.” 

“வாழ்க்கைல தோக்கறவங்க அதிகமா ஜெயிக்கறவங்க அதிகமா?” 

“உங்க வீட்டு கல்யாணத்துல இப்டி ஒரு இண்டர்வியூ உண்டுன்னு அப்பா சொல்லவேல்லயே சொல்லியிருந்தா முன்ஜாக்ரதையா நிறைய புக்ஸ் ரெஃபர் பண்ணிட்டு வந்திருப்பேன்” ஆகாஷ் சிரித்தான். 

“இந்த கேள்விக்கு நானே பதில் சொல்லவா?” 

“தாராளமா..’ 

“ஜெயிக்கறவங்கதான் அதிகம். ஆனா நா சொல்றது குறுக்கு வழில ஜெயிக்கறவங்களைப் பத்தி.” 

”அப்பொ நேர்மை ஜெயிக்காதுங்கறயா?” 

“இன்னிக்கு நாட்டுல நடக்கற விஷயங்களை எல்லாம் பார்த்தா அப்டிதான் தெரியுது.” 

“ஆகாஷ் அவளை வியப்போடு உற்றுப் பார்த்தான். 

“பரவால்லயே அப்பாவோட சொந்தத்துல இப்டி பேசறவங்க கூட இருக்காங்கன்னா ஆச்சர்யமார்க்கு!” 

“ஏன் உங்கப்பாவோட சொந்தக்காரங்கன்னா கேவலமா உங்களுக்கு?” 

“ச்சேச்சே அப்டி சொல்லலை. பொதுவா அப்பாவோட சொந்தக்காரங்ககிட்ட எங்களுக்கு பழக்கமே கிடையாது.” 

“யாராவது பழக வேண்டாம்னாங்களா?” 

”வாய்ப்பு கிடைச்சதில்ல. அதான் உண்மை.”

“அப்பொ இனிமே பழகுவீங்களா?” 

”ஓ ஷ்யூர். உங்கூட பேசிட்ருந்தா சுவாரசியமாதான் இருக்கு. நிறைய விவாதம் பண்ணலாம்னு தோணுது. நேரம் கிடைக்கும்போது வீட்டுக்கு வாயேன்.” 

“நீங்களும் வரலாமே எங்க வீட்டுக்கு?” 

“வந்தா போச்சு?” 

“எப்பொ?” 

”இன்னும் பத்து நாள் நா ஊர்ல இருக்க மாட்டேன். அதுக்கப்பறம் வரேன்.” 

“ரொம்ப நன்றி!” அவள் எழுந்து சென்றாள். அம்மாவைப் போல் பந்தாவோ பணத்திமிரோ இல்லாமல் அவன் சகஜமாய் வெகுநாள் பழகினாற்போல் பேசிய விதம் அவளுக்கு பிடித்திருந்தது. அவன் சுலபத்தில் அவள் மனசை உடைத்துக் கொண்டு உள்ளே போவதை அவளால் உணர முடிந்தது. 

அதற்குப் பிறகு இரண்டு மூன்று முறை எதிர்பாராத இடங்களில் அவனை சந்திக்க நேர்ந்தது. முதல் முறை பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரி வாசலில் அவனைப் பார்த்தாள். 

“ஹலோ… நீ எங்க இங்க…?” 

“ஏன் நா வரக்கூடாத இடமா இது?” 

“இங்கயும் ஆர்க்யுமென்ட்டா? நா வரலப்பா இந்த விளையாட்டுக்கு” ஆகாஷ் சிரித்தான். 

“ஆமா நீங்க எங்க இங்க?” 

“ஹேர் கட் பண்ண வந்தேன்.” 

“பண்ணிக்கிட்டாச்சா?” 

“நீதான் நல்லா பண்ணுவயாம்! உள்ள சொன்னாங்க. அதான் வெயிட் பண்ணிட்ருக்கேன்.” 

”அதுக்கென்ன சரச்சுட்டா போச்சு. ஆமா ஃபுல்லா? பாதியா? 

”அப்டின்னா?’ 

“ஃபுல்லுன்னா மொட்டை. பாதின்னா சம்மர் கட்.” 

“சரியான ஆள்தான் நீ! உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது போல்ருக்கு!” 

“அப்டியா சொல்றிங்க?’ 

“பட் ஐ லைக் இட். இந்த மாதிரி கலகலன்னு பேசறவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.” 

“தேங்கஸ்” 

“நீ எங்க போணும் சொல்லு. நா டிராப் பண்ணிடறேன்” “காலேஜுக்குதான் வேறெங்க!'” 

“அப்பொ சரி வா…” 

அவன் அவளை கல்லூரி வாசலில் இறக்கி விட்டுச் சென்றான். 

அதன்பிறகு இரண்டாவது முறையாக பீச் ரோடில் கார் திடீரென்று ரிப்பேர் ஆகியதால் வேறு வழியின்றி அந்த பக்கம் வந்த பஸ்சில் ஏறியவனை, ஏற்கனவே அந்த பஸ்சுக்குள் அமர்ந்திருந்தவள் வியப்போடு பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்து விட்டான். 

“ஆச்சர்யமார்க்கு! நீங்க பஸ்ஸுலயா?” 

”ஏன் என்ன ஆச்சர்யம் இதுல? அவன் அவளருகில் காலியாயிருந்த இடத்தில் அமர்ந்தான். 

“இது பணக்காரங்க வாகனமில்லையே அதான் ஆச்சர்யம்.”

”பணக்காரங்கன்னா என்ன கொம்பா? பணக்கார னார்ந்தாலும் ஏழையார்ந்தாலும், ராஜாவா இருந்தாலும், சேவகனா இருந்தாலும் கடைசில போறது பச்சை ஓலை கட்டின பாடைல தானே அப்புறம் எதுக்கு பந்தாவும் தேவையில்லாத இளக்காரமும்?” 

அவள் அவனை வியப்போடு பார்த்தாள். 

“அப்புறம்? உங்கக்கா எப்டியிருக்கா? மாமியார் மருமக சண்டை கிண்டை உண்டாமா?” 

“இதுவரை இல்லை. அப்டியே வந்தாலும் எங்கக்கா சமாளிச்சுப்பா. எங்க வீட்டுக்கு வரதா சொன்னிங்க! வரவேல்லயே?” 

“வரேன்! மாத்தி மாத்தி ஏதாவது வேலை.” 

அடையாறில் அவன் இறங்கிக் கொண்டான். 

கடைசியாக அவனை சந்தித்தது ஒரு ரத்த தான முகாமில். பல சமூக நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த முகாமில் மாணவர்களோடு பல துறையைச் சார்ந்தவர்களும் ரத்த தானம் செய்தார்கள். சரண்யா தன் முறை வந்து உள்ளே போகும்போது ஆகாஷ் வெளியில் வந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் வியப்போடு பார்த்துக் கொண்டார்கள். 

சரண்யா உள்ளே போனாள். அவள் திரும்பி வரும் வரையில் அவன் தன் காருக்குள் காத்திருந்ததைக் கண்டதும் இன்னும் வியந்தாள். 

“நீங்க கிளம்ப வேண்டியது தானே…? எனக்காகவா வெயிட் பண்றீங்க?” 

‘நீ டயர்டா வருவயே. டிராப் பண்ணிட்டே போலாமேன்னு வெயிட் பண்ணினேன், ஏறு”. 

அவள் ஏறிக் கொள்ள கார் கிளம்பியது. தெருமுனையில் இறக்கி விட்டான் அவன். 

“வீட்டுக்கு வரலையா?” 

”இன்னொரு நாள் வரேனே… வெறுங்கையோட எப்டி வரது?” அவன் காரைக் கிளப்பினான். 

அவனுடைய அக்கறையும் பரிவும், பழகிய விதமும் அவளுக்கு இனம் புரியாத சந்தோஷத்தைத் தந்தன. அவனும் தன்னை விரும்புகிறான் என்று தீர்மானித்துக் கொண்டது அவள் உள்ளம். 

அத்தியாயம்-4

பெண்கள் பெரும்பாலும் காதலுக்கு சம்மதிப்பது
ஒரு ஆடவன் தங்களை காதலிப்பது
மகிழ்ச்சியாயிருப்பதால்தான். அந்த மகிழ்ச்சியே
அவர்களின் காதல். – அல்ஃபான்ஸெகா. 

புதிய உடைக்கான புது டிஸைனை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தாள் சுஜிதா. சுற்றிலும் வர்ணப் பேனாக்கள் இறைந்து கிடக்க நடுவில் மைக்கேல் ஜாக்ஸனின் பாடல ஒன்றை முணுமுணுத்தபடி வெள்ளைத்தாளில் டிஸைன்களை வரைவதும், திருப்தியின்றி கசக்கிப் போடுவதுமாக இருந்தாள். இன்னும் பத்து நாட்களுக்குள் இந்த டிஸைன் முடிக்கப்பட்டு உடை தயாராக வேண்டும். பத்து நாள் கழித்து மாணவர்கள் டிஸைன் செய்த பேஷன் உடைகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது. அதில் முதல் பரிசு வாங்கியே ஆகவேண்டும். அவள் தயாரிக்கப் போகும் ஆடைக்கு அவளே மாடலாக இருந்து ஒய்யாரமாக நடந்து வரப் போகிறாள். பார்க்கிறவர்கள் ஆடையில் மயங்குவதா அவள் அழகில் மயங்குவதா என்று தெரியாமல் விழி விரியத் திணற வேண்டும். அவளோடு உடன் படிக்கும் மாணவிகள் சாதாரணமானவர்கள் அல்ல. கற்பனைத் திறமையில் இவளுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல. 

போட்டி மிகக் கடுமையாகவே இருக்கும். எப்படியும் ஜெயித்து விட வேண்டும். சுஜிதா தன் கற்பனைத் திறத்தோடு யுத்தம் புரிந்தாள். பலவித டிஸைன்களையும் காகிதத்தில் கிடுகிடுவென வரைந்தாள். முப்பது விதமான உடைகளை டிஸைன் செய்ததில் இருபதை ஒதுக்கிவிட்டு பத்தை தேர்ந்தெடுத்து அவற்றில் சிற்சில மாற்றங்கள் செய்ததில் ஐந்து ஓரளவுக்கு திருப்தியா வர அவற்றையும் இன்னும் நவீனமாக்கி, 

வர்ணங்களை மாற்றி, மேலும் மெருகேற்றியதில் ஒரு டிஸைன் அற்புதமாக வந்து முழு திருப்தியைத் தர, சுஜிதா உய் என்று சந்தோஷமாய் சத்தம் எழுப்பியபடி குதித்தாள். உடம்பை வளைத்து கைகளைத் தூக்கி கால்களால் தாளமிட்டு டான்ஸ் ஆடினாள். 

போட்டியில் ஜெயித்து விட்டால் அவளைத் தன் காரில் ஏற்றிக் கொண்டு ஒருநாள் முழுக்க ஊர் சுற்றுவதாக வாக்களித்திருக்கிறான் ஆகாஷ், ஒருநாள் முழுக்க அவனது அருகாமையில் இருப்பதற்காகவாவது ஜெயிக்க வேண்டும். வந்திருக்கும் டிஸைனைப் பார்த்தால் கண்டிப்பாக ஜெயித்து விடுவாள் என்றுதான் தோன்றியது. 

ஆகாஷின் நினைவு வந்ததும் முதன் முதலில் அவனை ரயிலில் சந்தித்ததிலிருந்து ரயிலை விட்டு இறங்கியது வரை நடந்தவைகள் அவள் மனசுக்குள் மறுபடியும் ஓடியது. 

தன் காதலி யாரென்பதை ரயிலை விட்டு இறங்கும்போது சொல்லுவதாக அவன் கூறியதும் அவளுக்கு ஆர்வம் கூடியது. அதை மறைத்துக் கொண்டு 

அவனை எரிச்சலோடு பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டு வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். ரயில் மும்பையை அடையும் வரை அவனிடம் எதுவும் பேசவில்லை. பேசா விட்டாலும் உள் மனதால் அவனையேதான் கவனித்துக் கொண்டிருந்தாள். 

ரயில் மும்பையில் நின்றது. அவன் காதலி யாரென்பதை அறியும் ஆவல் இல்லாதவள் போல தன் சாமான்களை தோளில் ஒன்றும் கையில் ஒன்றுமாய் எடுத்துக் கொண்டு இறங்கத் தயாரானாள் அவள். 

“கிளம்பியாச்சா…?” 

“யெஸ்” 

“என் காதலியைப் பத்தி தெரிஞ்சுக்க வேண்டாமா?” 

“எதுக்கு தெரிஞ்சுக்கணும் ? ஏதோ ஒரே ரயில்ல பிரயாணம் பண்ணினோம். அவ்ளோதான். இதுவரை பேசிட்டு வந்ததுக்கு நன்றி.'” 

“ஒரு நிமிஷம் நீங்க கேட்டாலும் கேட்காட்டாலும் சொல்றேன்னு நா சொன்ன வார்த்தையை நா காப்பாத்திடறேன். வாங்க என் காதலியைக்காட்டிடறேன்.” அவன், அவள் கையைப் பிடித்துக் கொண்டு வாஷ்பேசின் இருந்த இடத்துக்குச் சென்றான். கண்ணாடியில் தெரிந்த அவளை ஒரு வினாடி உற்றுப் பார்த்தான். 

“என்ன பாக்கற? உன் பிரார்த்தனைப்படி எனக்கு கிடைச்ச காதலி இவதான் நல்லார்க்காளா?” 

அருகில் நின்றவளைச் சுட்டிக் காட்டி, கண்ணாடியில் தெரிந்த உருவத்திடம் கேட்டான். அவள் ஒரு வினாடி திகைப்போடு அவனைப் பார்த்தாள். பிறகு சட்டென்று அவன்கையை உதறிவிட்டு, திரும்பி நடந்தாள். அவன் சன்னமாய் சிரித்தான். அவளைப் பின் தொடர்ந்து வந்து கீழே இறங்கினான். 

“இந்த கோவம் சும்மா தானே?” 

“மிஸ்டர் ஆகாஷ், ஒண்ற நாள் உங்களோட பிரயாணம் பண்ணிட்டா உடனே காதலா? அபத்தமாருக்கு. கிளம்புங்க. ஐவிஷ்யூ ஆல் தி பெஸ்ட். நீங்க மறுபடி சென்னைக்கு இதே ரயில்ல போவீங்க இல்ல. அப்ப உங்களுக்கு என்னைவிட பெட்டரா இன்னொரு காதலி கிடைப்பா. நா வரட்டுமா?” 

”அவள் கிண்டலாகச் சொல்ல அவன் சிரித்தான்.”

“என்ன சிரிக்கறீங்க?” 

”உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு காலத்துக்கும் எனக்கு வேணும்னு எனக்காக இன்னொரு பிரார்த்தனை பண்ணுங்களேன் ப்ளீஸ். இது என் கெஸ்ட் ஹவுஸ் அட்ரஸ். டைம் கிடைச்சா வாங்க. அட்லீஸ்ட் போனாவது பண்ணு” 

அவன், அவள் கையில் ஒரு கார்டைத் திணித்துவிட்டு தன் ப்ரீஃப்கேஸோடு வேகமாக நடந்து சென்று கும்பலில் மறைந்தான். அவள் சில விநாடிகள் அப்படியே நின்றாள். பிறகு ஒரு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்தாள். 

அவள் தலையைக் கண்டதும் வேலைக்காரர்கள் பரபரப்பானார்கள். 

அம்மா வேகமாக கீழே வந்தாள். 

“ஏண்டி ரயில்லயா வந்த…?’ 

“ஆமா…” 

”உங்கப்பாவுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியுமா?” 

“சும்மா ஒரு த்ரில்லுக்காகத்தான் வந்தேன். இதுக்கு போய் ஏன் இப்டி பதர்ற…?” 

அவள் நாலு கால் பாய்ச்சலில் மாடியிலிருந்த தன் அறைக்கு வந்தாள். ஏஸியை ஓடவிட்டு, கட்டிலில் மல்லாந்து விழுந்தாள். 

”சாப்ட என்ன அனுப்பட்டும்?” அம்மா இன்டர்காமில் கேட்டாள். 

“ஆப்பிள் ஜூஸ், போர்ன்விடா, ஐஸ்கிரீம், வறுத்த முந்திரி, சாம்பார் சாதம், தொட்டுக்க ஜாங்கிரி எல்லாம் அனுப்பு.” 

“என்னடி ஆச்சு உனக்கு… இதுக்குத்தான் ரயில்ல வரக்கூடாதுங்கறது!” 

சுஜிதா சிரித்தாள். ஏனோ தெரியவில்லை. உடம்பு லேசாகி பறப்பது போலிருந்தது. பட்டாம்பூச்சியாய் பறந்து சுற்றி வர வேண்டும் போலிருந்தது. இதற்கு காரணம் கேட்டால் சொல்லத் தெரியாது. 

அம்மா ஆப்பிள் ஜூஸ் அனுப்பினாள். 

“மத்ததெல்லாம் எங்கே?” 

“தெரியாதும்மா அம்மா இதான் தரச் சொன்னாங்க. குளிச்சுட்டு கீழ வரச் சொன்னாங்க டிபன் சாப்ட..” 

ஆப்பிள் ஜூஸை வைத்துவிட்டு அவன் போனதும் சுஜிதா எழுந்தாள். தன் கைப்பையை திறந்து அவன் கொடுத்த விலாச அட்டையை எடுத்து அந்த எண்ணிற்கு போன் செய்தாள். மறுமுனையில் ரிங் போக ஒருவித படபடப்போடு காத்திருந்தாள். 

“யெஸ்…”

“மிஸ்டர் ஆகாஷ் ப்ளீஸ்…” 

“ஜஸ்ட் எ மினிட்…” என்ற குரலைத் தொடர்ந்து ஆகாஷின் அறையிலிருந்த டெலிபோன் அடிக்கும் சத்தம் கேட்க, படபடப்பு இன்னும் அதிகமாயிற்று. 

“ஹலோ… ஆகாஷ் ஹியர்…” 

சட்டென்று போனை வைத்தாள். ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் போன் பண்ணினாள். அவன் குரல் கேட்டதும் போனை வைத்தாள். இப்படியே ஐந்தாறு முறை செய்தவளுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. பித்தம் தலைக்கேறுகிறது என்று இதைத்தான் சொல்கிறார்களா? அவன் தவித்துக் கொண்டிருப்பான் யார் போன் செய்தார்கள் என்று. தவிக்கட்டும். நன்றாகத் தவிக்கட்டும். 

அவள் குளிக்கப் போனாள். ஏதோ பாடலை ஹம்பண்ணியபடி வெகு நேரம்குளித்தாள். உடை மாற்றி டிரஸ் பண்ணிக் கொண்டு கீழே வந்தாள். டைனிங் டேபிளில் மொத்த குடும்பமும் ஒன்றாய் அமர்ந்து டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்பா, சித்தப்பாக்கள், அவர்கள் குழந்தைகள், அம்மா, சித்திகள் என்று எல்லோரும் ஒரு சேர அமர்ந்திருந்தார்கள். 

”ஹாய் சுஜி… சென்னை லைஃப் எப்டி இருக்கு? இப்டி வந்து உட்கார்”. 

“சித்தி பெண் தன் அருகிலிருந்த சேரைக் காட்டினாள்.”

“உன் படிப்பெல்லாம் எப்படியிருக்கு?” 

”இதுவரை எவ்ளோ துணியைக் கிழிச்சிருப்ப?” 

“கிண்டலா..?” 

”எவ்ளோ நாள் லீவு…?” 

“ஒரு வாரத்துல கிளம்பிடுவேன்..”

”என்னடி இவ்ளோ சீக்கிரம்..?” ‘

‘போய் நிறைய ஓர்க் இருக்கு?” 

“ஊரை விட்டு ஊர் போய் தனியா இருந்து இப்டி படிக்கணுமா? இங்க இல்லாத படிப்பா?” 

“இங்க இருந்தா ஹாஸ்டல்ல இருக்க விடுவீங்களா?” 

“ஹாஸ்டல் லைஃப் அவ்ளோ நல்லாருக்கா இந்த வீட்டை விட..”

“அது ஒரு ஜாலிதானே! அதைவிடு. இங்க என்ன விசேஷம்?” 

”என்ன பெரிய விசேஷம். வழக்கம்போல வண்டி ஓடுது. ஒரு த்ரில்லும் இல்ல’ சித்தி பெண் இவளுக்கு மட்டும் கேட்கும்படி சலித்துக் கொண்டாள். அப்பா, சித்தப்பாக்கள் எல்லாரும் ரத்னச் சுருக்கமாக இரண்டொரு கேள்விகள் கேட்டுவிட்டு தங்கள் டிபனை முடித்துக் கொண்டு எழுந்து சென்றார்கள். அவர்கள் அப்படித்தான். தேவையின்றி ஒரு நிமிடம் யாரிடமாவது பேசினால் ஒரு கோடி நஷ்டமாகி விடும் என்று நினைப்பவர்கள். சதாசர்வ காலமும், வியாபாரம், பணம், பிஸினஸ் போட்டிகளை சமாளிப்பது பற்றிய சிந்தனை… இதைத்தவிர வேறு எது பற்றியும் நினைக்க அவர்களுக்கு நேரமில்லை. அவர்களது கௌரவங்களை எல்லாம் தங்கள் தலையில் சுமந்து கட்டிக் காப்பதே தங்கள் முழு நேரப்பணி என்பது போல் இருபத்தி நாலுமணி நேரமும் அலங்கார பூஷிதைகளாக அவர்களது மனைவிகள். 

சுஜிதாவுக்கு தன் வீடும் அதன் அலங்காரமும் பணமும் பதவிசும், சுத்தமும் பிடிக்கும். அவள் படித்த பள்ளியில் அம்மாவோ அப்பாவோ ஏதாவது நிழ்ச்சிக்கு வரும்போது, ஆசிரியர்களும் மற்றவர்களும் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையிலும் காட்டும் பவ்யத்திலும் பிரம்மித்துப் போவாள்.இன்னார் வீட்டுப் பெண் என்று சொன்னால் எந்த இடத்திலும் தனக்கு கிடைத்த மரியாதையிலும் உபசரிப்பிலும் குளிர்ந்து போவாள். ஒரு விதத்தில் பெருமையாக இருந்தது பிடித்துமிருந்தது. எங்கு போனாலும் வி.ஐ.பி. உபசாரம் எல்லாருக்கும் கிடைத்து விடுமா என்ன? அதே நேரம் தங்களை விட அந்தஸ்து குறைந்த இடம் என்றால் உபசரிப்பு இன்னும் அதிகமாகவே கிடைக்கும் என்பதையும் உணர்ந்திருந்தாள் அவள். கிராமத்து மனிதர்களுக்கு ஒரு சாதாரண பட்டணத்து மனிதன் என்றால் உசத்திதான். பிரம்மிப்பு தான். பட்டணத்தில் ஈ எறும்பு கூட மதிக்காதவனுக்கு அந்த உபசாரமும் மரியாதையும் போதையேற்றும். 

அதே போல் சென்னை வாசிகளுக்கு மும்பைக்காரர்கள் என்றால் கொஞ்சம் உயரத்திலிருப்பவர்களாகத் தோன்றும். மும்பை கல்லூரிகளில் இவளுக்கு சமமான பணக்காரக் கூட்டம் அதிகமிருந்தது. இவள் ஜம்பம் அங்கே எடுபடவில்லை. என்னை விட நீ என்ன உசத்தி என்ற பாவனை எல்லாரிடமும் இருந்தது. சுஜிதாவுக்கு இது பிடிக்கவில்லை. அவளுக்கு உபசாரமும் மரியாதையும் வேண்டும். சின்ன வயதிலிருந்து இது பழகிவிட்டது. இது ஒருவித போதையாய் மனதில் படிந்து விட்டது. எனவேதான் கல்லூரிப் படிப்பை மும்பையில் தொடராமல் சென்னையில் இடம் பெற்று தொடர்ந்தாள் சென்னை பெண்களுக்கு இவள் நாகரீகம் நாலு மடங்கு அதிகம்தான். இவளிடம் பேசக்கூட பயந்தார்கள். அப்படி பேசியவர்களும் மரியாதையாய் குழைந்து பேசினார்கள். எல்லாவற்றுக்கும் அவளை முன்னிறுத்தினார்கள். தலையில் கிரீடம் வைத்து தலைவியாய் ஏற்றுக் கொண்டார்கள். இதுதான் சுஜிதா எதிர்பார்த்ததும், இப்போது அவள் அங்கு முடிசூடா ராணி. அந்த மகுடத்தை இறக்கி வைத்துவிட்டு அவளாவது இங்கு வருவதாவது. 

டிபன் சாப்பிட்டு விட்டு மாடிக்கு வந்தவள் மறுபடியும் ஆகாஷின் கெஸ்ட் ஹவுசுக்கு போன் பண்ணினாள். அவள் வெளியில் போய் விட்டதாகச் சொன்னார்கள். 

அடுத்த இரண்டு நாளும் அவனை போனில் பிடிக்க முடியவில்லை. ச்சே என்றாயிற்று? போரடித்தது. எதற்காக அவனுக்குத் தான் திரும்பத் திரும்ப போன்செய்கிறோம் என்று ஆச்சர்யமாக இருந்தது. ரயில் சிநேகம் என்று வீராப்பாய் பேசிவிட்டு வந்தாயிற்று. அதோடு விட்டு விட வேண்டியது தானே? எதற்கு அவனை நினைத்துக் கொண்டு, போன் செய்து…? நீதான் என் காதலி என்று அவன் சொல்லி விட்டதால் இந்த புளகாங்கிதமா? எப்படியோ.. ஆக மொத்தம் அவளுக்கு அவனைப் பிடித்து விட்டது. அவன் ஞாபகமாகவே இருந்தது. இந்த பரந்து விரிந்த மும்பையில் அவன் எங்கே சுத்திக் கொண்டிருக்கிறானோ? 

“சுஜி ஷாப்பிங் வரயா?” சித்தப்பா பெண் லாவண்யா அறைக்குள் எட்டிப் பார்த்து கேட்டாள். 

“என்ன வாங்கப் போற?’ 

“பர்ட்டிகுலரா எதுவுமில்ல. போற போக்குல பிடிச்சதை வாங்கலாம்னு. ஷாப்பிங்கா முக்கியம்? சுத்தறதுதானே எங்க பிளான். 

“சுத்தறது எதுக்கு. சைட் அடிக்கவா? இல்ல ஆள் பிடிக்கவா?” 

“பல்லை உடைப்பேன். சைட் அடிக்கன்னே வெச்சுக்கோயேன். அவங்க நம்பள அடிக்கல? அத மாதிரிதான்?’ 

சுஜிதா சிரித்தபடி எழுந்து உடை மாற்றிக் கொண்டு கிளம்பினாள். ஒன்றுவிட்ட சகோதரிகளோடு சத்தமாய் பேசி சிரித்தபடி காரில் ஏறிச் சென்றாள். 

ஒவ்வொரு இடமாய் காரை நிறுத்தி கண்களை சுண்டியிழுக்கும் இளமையும் அழகும் கொண்டு அவர்கள் நடக்க, பல பேர் திரும்பிப் பார்த்தார்கள். கடைசியாக கடற்கரையில் பொழுதைப் போக்க வந்தார்கள். காரை பார்க் பண்ணிவிட்டு கடற்கரை சாலையில் காற்றில் கூந்தல் பறக்க நடந்தார்கள். சுஜிதாவின் விழிகள் நாலாபக்கமும் சுழன்றது. ஒரு இடத்தில் நிலைத்தது. ஆகாஷா..அது? ஆம்.. அவனேதான். கையில் ஏதோ பார்சலோடு ஒரு காரின் அருகில் சென்று பார்சலை உள்ளே வைத்து விட்டு காரில் ஏறப் போனான். 

சுஜிதா தன் சகோதரிகளிடமிருந்து நைசாக நழுவினாள். அவனை நோக்கி வேகமாக நடந்தாள். ஆகாஷ் காரைக் கிளப்பினான். 

“ஆகாஷ்…” 

குயிலாய் அவள் அழைத்தது கடலின் இரைச்சலில் கரைந்தது. 

அவள் இன்னும் வேகமாய் ஓடி அவன் காரை நெருங்க, கார் சர்ரென்று கிளம்பிச் சென்றது. 

”ச்சட்… அவளைப் பார்த்தானா பார்க்கவில்லையா? பார்த்துவிட்டு வேண்டுமென்றுதான் சென்று விட்டானா? அவ்வளவு கத்தி அழைத்தது காதில் விழாமலா இருந்திருக்கும்! 

சுஜிதா எரிச்சலோடும் ஏமாற்றத்தோடும் திரும்பி நடந்தாள். 

பத்தடி நடந்திருப்பாள். 

”ஹலோ…” 

“பின்னால் குரல் கேட்க சட்டென்று நின்றாள். விஷமச் சிரிப்போடு நின்றிருந்தான் ஆகாஷ்.

குப்பென்று முகம் மலர்ந்தது. 

“பார்த்துட்டுதானே பார்க்காத மாதிரி போனீங்க…?” 

“யெஸ்” 

“ஏன் அப்டி…போனீங்க…” 

“ரயில் சிநேகம் எல்லாம் என்ன பார்வை? எதுக்கு நிக்கணும்?” 

“அப்புறம் இப்ப எதுக்கு கூப்ட்டீங்க? அப்டியே போய்த் தொலைய வேண்டியதுதானே?” 

”ஒரு விஷயம் சொல்லிட்டு போலாம்னுதான்.” 

“என்ன?” 

”பேசறதுக்கு தில் இல்லாதவங்க எதுக்கு டெலிபோன் பண்ணனும்.” 

”யாரைச் சொல்றீங்க..?” 

“வேற யாரை, உன்னைத்தான். என் டெலிபோன் நம்பர் ப்போதைக்கு உன்னைத் தவிர வேற யாருக்கும் தெரியாது.”

“நா பண்ணல”. 

“பொய்.” 

“இருந்துட்டு போகட்டும்.” 

“இருந்தாலும் தேங்க்ஸ் சொல்லிட்டு நா கிளம்பறேன்.” 

“எதுக்கு தேங்க்ஸ்?” 

“என்னை நீயும் விரும்பறயே அதுக்கு!” 

”நா சொன்னேனா அப்டி?’ 

”சில விஷயங்கள் சொல்லித் தெரியவதில்லைன்னு தெரியாதா உனக்கு?” 

”கனவு காண்றீங்க.” 

“திங்கட்கிழமை நா ஊருக்கு திரும்பறேன். உனக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணியாச்சு. மறுபடியும் ரயில்ல சந்திப்போம் ஓகேயா…” 

”எனக்கு டிக்கெட் புக் பண்ண நீங்க யாரு? நா வரமாட்டேன்”. 

”வருவ!’ அவன் புன்சிரிப்போடு கிளம்பிச் செல்ல அவள் சிலையாக நின்றுவிட்டாள். 

அத்தியாயம்-5

ஒரு தாய் இருபது வருடங்களுக்கு மேலாக பாடுபட்டு தன் மகனை நல்லதொரு ஆண்மகனாக உருவாக்குகிறாள் காதலி என்ற பெயரில் மற்றொரு பெண் கரண்டே நாளில் அவனை அடிமையாக்கி விடுகிறாள். – எடிசன் 

திங்கட்கிழமை ரயில் புறப்படும் வரை அவளை எதிர்நோக்கி கதவருகிலேயே தவமிருந்தான் ஆகாஷ். கூட்டத்தில் விழிகளை செலுத்தி அவளைத் தேடினான். ரயில் புறப்படும் வரை அவளைக் காணவில்லை. கண்கள் வலித்ததுதான் மிச்சம். ரயில் புறப்பட்டு மெதுவாக நகரத் தொடங்கியது. அப்போதும் நம்பிக்கையிழக்கவில்லை அவன். அவள் நிச்சயம் வருவாள் என்ற நம்பிக்கையோடு கதவருகிலேயே நின்றபடி கூட்டத்தில் அவள் வருகிறாளா என்று பரிதாபமாக பார்த்துக் கொண்டு வந்தான். ரயில் வேகமெடுத்து ஸ்டேஷனை விட்டு முழுவதுமாக வெளியேறி விரைந்தது. ஒரு பெருமூச்சோடு கதவை விட்டு நகர்ந்து உள்ளே வந்து தன் இருக்கையில் அமர்ந்தவன் மனம் கனத்தது. 

அப்படியானால்அவள் மனதில் எதுவுமில்லையா? இது வெறும் ரயில் சிநேகம் தானா? 

அவன் தன் சூட்கேஸை பத்திரப்படுத்தி விட்டு பேண்ட்டிலிருந்து லுங்கிக்கு மாறினான். இருக்கையில் அமர்ந்து அன்றைய நாளிதழில் தன் ஏமாற்றத்தை கரைத்துக் கொள்ள முயன்றான். சற்று நேரத்தில் டி.டி.ஆர். வந்து டிக்கெட் செக்கிங் செய்ய ஆரம்பித்தார். 

எதிர்பக்க மேல் பர்த்தில் படுத்திருந்த உருவத்தை தட்டி எழுப்பினார். யாரது… டிக்கெட் எடுங்க ப்ளீஸ்.. ஹிந்தியில் குரல் கொடுத்தார். அந்த உருவம் பதிலுக்கு ஹிந்தியில் ஏதோ பதிலுரைத்தபடி ஆகாஷை நோக்கி கைகாட்டிவிட்டு திரும்பி படுத்துக் கொண்டது. 

”ஏன் சார் அவங்க டிக்கெட் உங்ககிட்ட இருக்கா?” டி.டி.ஆர். அவனைப் பார்த்து கேட்டார். 

“ஐ டோண்ட் நோ ஹிந்தி… இங்கிலிஷ்ல சொல்லுங்க. “

“அவங்க டிக்கெட் காட்டுங்க” 

“எங்கிட்ட கேட்டா?” 

“உங்ககிட்டதான் இருக்குன்னு சொல்றாங்க!'” 

”சாரி.. பொய் சொல்றாங்க. என் கூட யாரும் வரல” 

“ஹலோ.. டி.டி.ஆர்.” மறுபடியும் அவளை எழுப்ப, கீழே இறங்கிய உருவத்தைப் பார்த்ததும் ஆகாஷ் திகைத்தான். “நீயா?” என்றான் பிரம்மிப்போடு. 

“எனக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணினதா சொன்னதெல்லாம் பொய்தானா…?” அவள் லேசான சிணுங்கலோடு கேட்க அவன் அசடு வழிய டி.டி.ஆ.ரைப் பார்த்தான். பர்ஸ் திறந்து டிக்கெட்டைக் காட்டினான். டி.டி.ஆர். ஒரு மாதிரி அவர்களைப் பார்த்தபடி நகர்ந்தார். 

“நீ எப்பொ வந்த…?” 

“ம்… கதவருகில் இப்படியா தேவுடு காப்பாங்க! எப்பவும் லேட்டாதான் வருவாங்களா? முன்னாடியே வந்து உள்ள உக்கார மாட்டோமா?” 

“ம்… நா தேவுடு காக்கறதை நீ பார்த்துட்ருந்தயாக்கும். வந்து கூப்ட வேண்டியதுதானே?” 

“அதெப்டி…அப்புறம் என்ன சுவாரசியம் இருக்கும் அதுல? பாவம் நா வரலன்னதும் முகம் தொங்கிப் போனதைப் பார்க்கணுமே.” 

“இருந்தாலும் உனக்கு இவ்ளோ அழுத்தம் ஆகாது. என் அவதியை ரசிச்சு பார்த்தயாக்கும்!” 

“இந்த மாதிரி காட்சி இனிமே கிடைக்குமா?” 

”அப்டியா? என்னை அலைக்கழிச்சதுக்கு உனக்கு தண்டனை உண்டு. 

“என்ன தண்டனை?” 

“சென்ட்ரல்ல இறங்கும் வரை உன்னோட ஒரு வார்த்தை பேசப் போறதில்ல..” 

”பார்க்கலாமா? உங்களால முடியாது தோத்துடுவீங்க”

”நிச்சயமா பேசமாட்டேன்”. 

”பார்ப்போம்” அவள் தன்லெதர்பேக் திறந்து ஒரு ஆங்கில நாவலை எடுத்து வைத்து படிக்க ஆரம்பிக்க அவன் தன்கையிலிருந்த நாளிதழால் அவளை மறைத்துக் கொண்டு வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். 

மறுநாள் மதியம், உடன் பயணித்த இருவர் நடுவில் ஒரு ஸ்டேஷனில் இறங்கிக் கொள்ள ஆகாஷும் அவளும் தனித்து விடப்பட்டார்கள். அவன் அவள் பக்கம் கூட திரும்பவில்லை. அவளும் அதை சட்டை செய்யாதது போல் தன்பையிலிருந்து ஒரு பிஸ்கட் பொட்டலத்தை எடுத்து பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள். பத்து நிமிடம் கூட ஆகியிராது. பிஸ்கட் பொட்டலம் நழுவி கீழே விழ அவள் ஒரு பக்கமாய் மயங்கிச் சரிந்தாள். ஆகாஷ் பதறிப்போய் அவளைப் பார்த்தான். 

“என்னாச்சு சுஜி…?” சட்டென்று எழுந்து வந்து அவளைத் தூக்கி மடியில் போட்டுக் கொண்டான். 

”என்னாச்சு…அவளைத் தட்டி எழுப்ப முயன்றான்.. அவள் துளியும் அசையவில்லை. தன் வாட்டர் பாட்டில் திறந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் அடித்தான். 

“சுஜி.. என்னாச்சு.. நா பேசறது கேக்கறதா?” பதறியபடி கேட்டான். 

அவள் முனகியபடி லேசாக கண்ணைத் திறந்து அவனைப் பார்த்து விட்டு மீண்டும் மூடிக் கொண்டாள்.”தண்ணி வேணும்..” ஈனஸ்வரத்தில் முனகினாள். 

“என்ன செய்யுது..?” அவன் கொஞ்சம் தண்ணீர் எடுத்து அவள் வாயில் ஊற்றினான். 

”என்னமோ செய்யுது ஆகாஷ்! தொண்டை எல்லாம் எரியுது..” 

“என்ன பிஸ்கட் அது.. எங்க வாங்கின?” 

“நல்ல கடைலதான். பிஸ்கட்ல மிஸ்டேக் இல்ல” 

”அப்பறம்?” 

“தெரியல.. வாந்தி வராப்பல இருக்கு..” 

“எழுந்தரு.. நா கூட்டிட்டு போறேன்” 

அவள் எழுந்திருக்க முயன்று, முடியாமல் மறுபடியும் மயங்கிஅவன் தோளில் சாய அவன் பதறிப் போனான். அவளை சரியாக படுக்க வைத்து விட்டு என்ன செய்வதென்று புரியாமல் திகைத்துப் போய் பார்த்தான். அவளிடமிருந்து எந்த சத்தமும் அசைவும் இல்லை. ஆகாஷ் அவளை கவலையோடு பார்த்தான். ஓடும் ரயில் என்ன செய்வது? அவளுக்கு ஒன்றுமில்லாமல் இருக்க வேண்டுமே என்று வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. 

ஒரு மணி நேரம் கழித்து அவள் மீண்டும் மெல்ல கண்திறக்க அவன் பரபரப்போடு அவளருகில் அமர்ந்தான். 

‘சுஜி.. இப்பொ எப்டியிருக்கு?” 

‘குளுருது ஆகாஷ்..” 

“என்ன செய்யுது.. ஜூர மடிக்குதா?” அவன் அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். லேசாய் சுட்டது. தன் பெட்ஷீட் எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டான். 

”ஒண்ணுமே சாப்டலையே..ஏதாவது சாப்பிடறியா?” “என்ன இருக்கு?” 

”பிரெட்..?” 

“வெறும் பிரட்டா?” 

“பால் கிடைக்குதான்னு பாக்கறேன்” அவன் எழுந்திருக்க அவள் வேண்டாம் என்றபடி அவன் கையைப் பற்றி உட்காரச் சொன்னாள். 

“திடீர்னு என்னாச்சு..” 

“புறப்படும் போதே உடம்புசரியில்லதான். வராட்டி நீங்க வருத்தப்படுவீங்களேன்னுதான் வந்தேன்.” 

அவன் இரக்கத்தோடு அவளைப் பார்த்தான். கனிவோடு அவள் கேசத்தை ஒதுக்கி விட்டான். 

சென்ட்ரல் வந்து சேரும் வரை நிமிடத்திற்கு ஒரு முறை எப்டியிருக்கு ஏதாவது வேணுமா என்று கேட்டுக்கொண்டே வந்தான். அவளுக்கு சோர்வு தெரியாமலிருக்க சின்னச் சின்ன நகைச்சுவை சம்பவங்களை சுவாரசியமாய் சொல்லிக் கொண்டு வந்தான். சென்ட்ரல் வரும் வரை அவள் தண்ணீர் தவிர வேறு எதுவும் சாப்பிடவில்லை. 

”பசிக்கலையா உனக்கு?” கவலையோடு கேட்டான். 

”பசிக்குது. ஆனா சாப்ட பயம்மார்க்கு. மறுபடியும் வாந்தி மயக்கம்னு வந்துட்டா உங்களுக்கு தானே கஷ்டம்?” 

ஒரு வழியாய் சென்ட்ரலில் வண்டி நுழைய அவன் அப்பாடா என்றான். 

“நல்ல காலம் நல்ல படியா வந்து சேர்ந்துட்டோம். எழுந்திரு ஜூஸ் ஏதாவது வாங்கித்தரேன். நடக்க முடியுமா இல்ல தூக்கிட்டு போகணுமா?” 

அவன் இருவரது லக்கேஜையும் எடுத்து தயாராய் வைத்துவிட்டு எழுந்தான். 

“ரொம்ப தேங்க்ஸ்..” அவள் எழுந்து தன் லக்கேஸை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள். 

“அப்டி என்ன பண்ணிட்டேன்னு தேங்க்ஸ்?” 

“சென்ட்ரல் வரைக்கும் சுவாரசியமா சளசளன்னு பேசிக்கிட்டே வந்தீங்களே அதுக்குதான்.” 

அவள் கண்ணடித்து சிரித்தபடி அலட்சியமாய் நடக்க அவன் பேந்த பேந்த விழித்தபடி நின்றான். கிலோ கிலோவாய் முகத்தில் அசடு வழிந்தது. 

“முகத்தை துடைச்சுகிட்டு வாங்க சார்” அவள் கீழே இறங்கி ஜன்னல் வழியே குரல்கொடுத்தாள். 

சுதாரித்துக் கொண்டு அசட்டு சிரிப்போடு அவன் கீழே இறங்கினான். 

“எப்டி நம்ம நடிப்பு…? பேச மாட்டேன்னு சவால் எல்லாம் விட்டீங்க…!” 

”உன்னை அப்புறம் கவனிச்சுக்கறேன். குறுக்கு வழில என்னை ஏமாத்திட்டு பெருமை பீத்திக்க வேண்டாம்.”

“சரி பீத்திக்கல. நாம மறுபடியும் எப்பொ பார்க்கறது?”

“எதுக்கு பார்க்கணும்?” 

”சரிதான். கோவமாக்கும். அப்படின்னா இனிமே பாக்கவே மாட்டீங்களா என்னை?” 

”வேணாம் ஆகாஷ், சவால் மட்டும் விடாதிங்க. நா விதவிதமா உங்களைத் தோற்கடிப்பேன்.” 

“வேணாம் தாயே. நீ கெட்டிக்காரிதான் ஒத்துக்கறேன்?”

“அப்டி வாங்க வழிக்கு. மறுபடியும்நாம் எப்பொ சந்திக்கலாம்?” 

“உன் ஹாஸ்டல் போன் நம்பர் கொடு. நான் போன் பண்றேன். நாம நிறைய பேசணும் மனசு விட்டு..” 

“என்ன பேசணும்?” 

”நீ என்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும். என் வீட்டை பத்தி, அம்மா பத்தி அப்பா பத்தி தங்கை பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கணும். அதே மாதிரி நான் உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும். நா அடுத்த வாரம் போன் பண்ணுவேன்.” 

“அடுத்த வாரம் எனக்கு ஒரு காம்படிஷன் இருக்கு டிஸைனிங் காம்படிஷன். பஸ்ட் பிரைஸ் வாங்கிடணும்னு இருக்கேன்.’ 

”வாங்கு.பஸ்ட் பிரைஸ் வாங்கிட்டா ஒருநாள் முழுக்க என் கார்ல உன்னை ஏத்திக்கிட்டு பெட்ரோல் காலியாகற வரை சுத்தறேன்”. 

“ஒரே ஒரு லிட்டர் போட்டுக்கிட்டு வந்து ஒரு நிமிஷம் ஓட்டிட்டு இறக்கி விட்ருவீங்க..” 

”ச்சேச்சே.. புல் டேங்க் போட்ருவேன். நா ஒண்ணும் உன்னை மாதிரி ஏமாத்த மாட்டேன். ரொம்ப நல்ல பையன்!” 

இப்போது நினைத்தாலும் சிரிப்பு வந்தது சுஜிதாவுக்கு. ரயில் சிநேகம் இப்படி காதலாய் மாறும் என்று அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்து பணத்திலும் படாடோபத்திலும் வளர்ந்து விட்டதாலோ என்னமோ எந்த ஆணைப் பார்த்தாலும் அலட்சியம்தான். அவன் பணக்காரனாக இருந்தாலும் சரி, சாதாரண மனிதனாய் இருந்தாலும் சரி, துச்சமாய்த்தான் பார்ப்பாள். சக வயது தோழிகள் எல்லாம் சாருக்கானையும் சல்மான்கானையும் நினைத்து உருக, இவள் ப்பூ.. என்ன பெரிய ஆளுன்னுஇப்படி உருகறிங்க என்பாள் அலட்சியமாக. ஹீரோக்களின் புளோ அப்களை அறைச்சுவர்களிலும் கதவுகளிலும் ஒட்டி வைத்துக் கொண்டு பூஜிக்கும் தோழிகளை கேலியாய்ப் பார்த்து சிரிப்பாள். 

”உனக்கு திமிருடி.. பெரிய இவள்னு நினைப்பு! ஆம்பளைன்னா என்ன பெரிய கொம்பான்னு அலட்சியம்.. நாங்கள்ளாம் சராசரி லேடீஸ்மா. எங்களை விட்ரு. நாங்க இப்படித்தான் இருப்போம்”. 

தோழிகள் தங்கள் பக்கத்து நியாயத்தைச் சொல்லுவார்கள். 

இப்போது எல்லாமே மாறிவிட்டது. அவளையும் ஒரு ஆண் கவர்ந்து விட்டான் என்பது அவளுக்கே வியப்பாக இருந்தது. இதனால்தான் காதலை சக்தி வாய்ந்த தென்கிறார்களா? கதை, சினிமா என்று எல்லாம் காதலை மையமாய் வைத்து பின்னப்படுகிறதா? இந்த விஷயம் தெரிந்தால் தோழிகள் என்ன சொல்வார்கள்? யூ டூ சுஜிதா என்று வியப்பார்களா? 

அவளுக்கு சிரிப்பு வந்தது.ஒரு வழியாக அவள் டிஸைன் செய்த உடை ரெடியாயிற்று. தானே அதை அணிந்து கண்ணாடி முன் நின்றவள் வாவ்… என்று வியப்போடு மகிழ்ந்தாள். பிரமாதமாக வந்திருப்பதாகத் தோன்றியது. நிச்சயம் ஆகாஷ் அவளை காரிலேற்றிக் கொண்டு ஊர் சுற்றுவான். 

சுஜிதா புது உடைகளை கழட்டி பத்திரப்படுத்தி விட்டு நைட்டி அணிந்து கொண்டு படுத்தாள். 

அதற்கடுத்த வாரம் ஆடைகளின் அணிவகுப்பு நடந்தது. பெரிய பெரிய மனிதர்களும், சினிமா நட்சத்திரங்களும்,மில் அதிபர்களும் வந்திருந்தனர். 

சுஜிதா வரும்போது ஹாலில் கைத் தட்டல் ஒலி சீராக கேட்டது. நான்கைந்து வித உடைகளில் மாறி மாறி வந்து போனாள் அவள். 

அணிவகுப்பு முடிந்து நீதிபதிகள் தங்களுக்குள் கலந்தாலோசித்துக் கொண்டிருக்க தோழிகள் சுஜிதாவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். சந்தோஷத்தில் அவள் முகம் மலர்ந்தது. 

முடிவுகளை அறிவிக்க ஒருவர் மேடையேறினார். அவை நிசப்தமாயிற்று. 

மிஸ் சுஜிதா.. 

”அவர் பெயர் சொல்லி அழைக்க கரகோஷம் எழும்பியது.”

“மூன்றாவது பரிசு.” 

‘சுஜிதாவின் முகம் சுருங்கியது. அத்தனை சந்தோஷமும் வடிந்து அவமானத்தில் முகம் சிவந்தது.’ 

“பரவால்ல விடு சுஜி மூணாவதாவது கிடைச்சுதேன்னு சந்தோஷப்படு” தோழி ஒருத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள். 

பரிசை வாங்கி கொண்டு யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசாமல் வேகமாக வெளியில் வந்து ஒரு ஆட்டோ பிடித்து ஹாஸ்டலுக்கு வந்தாள். தான் டிஸைன் செய்து அன்று அணிந்த அத்தனை உடைகளையும் டார் டாராகக் கிழித்து நாலா பக்கமும் எறிந்தாள். பரிசுப் பொருளை சுவற்றில் விட்டெறிந்து உடைத்தாள். 

– தொடரும்…

– வருவாள், காதல் தேவதை… (நாவல்), முதற் பதிப்பு: 2012, தேவி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *