எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 4,939 
 

(1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

1ஆம் அத்தியாயம்

டாங், டாங் டிங், டிங் இன்னிசையாக எழுந்த கடி. காரத்தின் ரீங்கார நாதம் கேட்டதும் அத்தனை நேரமும் பைல்களைப் புரட்டித் தலையை உடைத்துக் கொண்டிருந்த ரகுவின் உலர்ந்து போயிருந்த உதடுகளில் ஒரு புன்னகை மிளிர்ந்தது. அப்பாடா, என்று அவனையும் அறியாமல் நிம்மதி பெருமூச்சாக வெளிவர அவசர அவசரமாக எழுந்து தனது மேசை ட்றாயரைத் திறந்து அலுவலகப் பைல்களை இறுக்கிப் பூட்டிவிட்டுக் காற்சட்டைப் பைக்குள் கைவிட்டுக் கைக்குட்டையை இழுத்து முகத்தில் அரும்பி நின்ற வியர் வையை ஒற்றித் துடைத்துவிட்டுக் கொண்டான். 

அடுத்த சில நிமிடங்களுக்கு எல்லாம் ‘டக்டக்’ எனப் ‘பூட்ஸ் ‘ ஒலிக்க அவன் அலுவலகக் கேட்டைத் தாண்டிச் சாலையில் நடந்து கொண்டிருந்தான். நாள் முழுவதும் அலுவலகத்துள் அடங்கிக் கிடந்தபோது அவனி டம் இல்லாத ஒரு துடிப்பும் வேகமும், படபடப்பும் இப் போது அவனிடம் காணப்பட்டன. எவ்வளவு சீக்கிரமாக வீட்டையடைய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடைந்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் துரித நடை போட்டான் அவன். 

கால்கள் பழக்கத்தினால் அசைந்து கொண்டிருக்க அவன் மனமெல்லாம் எங்கோ லயித்திருந்தது. அந்த உள்ளத் தாமரையில் துருதுருக்கும் கருவண்டு போன்ற இரண்டு கயல்விழிகளைத் தவிர, வேறு எதுவுமே தெரிய வில்லை. இந்நேரம் அந்த இருவிழிகளும் அவன் வரவை எதிர்பார்த்துப் பார்த்து அலுத்து ஓய்ந்து போயிருக்கும் என்று நினைத்தபோதே அவனுக்குச் சிரிக்கத் தோன்றியது. நாள்தோறும் அதாவது கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் இது. ஆயினும், நாள் தோறும் அந்த நிகழ்ச்சியில் ஒரு புதிய இன்பம், ஒரு புதிய அனுபவம் கலந்திருப்பது போன்ற உணர்ச்சியில் அவன் தன்னையே மறந்து விடுகிறான். நாள்தோறும் பார்த்துப் பழகும் விழிகள்தான். ஆயினும் அவற்றைச் சந்திக்கும் போது அவன் மனதில் எழும் துடிப்பு.. ? அதை வர்ணிக்க அவன் ஒரு கவிஞனாகவோ கதாசிரியனாகவோ பிறக்கவில்லையே… தினந்தினம் நடைபெறும் ஒரு செயல் அவனுக்குச் சிறிதாவது கசக்க வேண்டுமே…? ஊஹும் அது கசக்குமா…? இன்பம்..இன்பம் எல்லையில்லாத இன்பமது. 

இப்படியான ஒரு ஆர்வம் சார்ந்த மனநிலை அவனுக்குத் தன் அலுவல்களில் மட்டும் வரக்காணோம். ஏதோ ஒருவித கடமைக்காக வேண்டா வெறுப்புடன் காலையில் சென்று மாலையில் திரும்பும் அவனுக்குத் தன் வேலையில் மட்டும் ஒரு பிடிப்போ பிரியமோ என்றுமே ஏற்பட்ட தில்லை. ஏற்படும் என்ற நம்பிக்கையும் அவனை விட்டு அகன்றுவிட்டது. சிந்தனையின் நடுவில் நடந்துகொண்டு இருந்தவன் வீட்டையடைந்ததும் அவசரமாகத் தன் உடை களைக் களைந்துவிட்டு மாற்றுடை அணிந்து கொல்லைப் புறத்தில் இருந்த மாட்டுக் கொட்டிலை நோக்கி விரைந்தான். 

அவனைத் தூரத்திற் கண்ட ஆவினம் குதூகலத்தில் அம்மா…… என்று வாய்விட்டுக் கதறி அவனை வரவேற்றன. அவன் மாட்டுக் கொட்டிலை அடைந்ததும் அவற்றைத் தடவிப் பரண்மேல் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கற்றை ஒன்று, இழுத்துப் பிரித்து உலுக்கி உணவு போடும் பெட்டிக்குள் போட்டு அந்தப் பசுக்களை உச்சியில் தடவிக்கொண்டான். அப்போது அவன் விழிகள் புதிதாக அவர்கள் கொல்லைப் யுற வேலி ஓரமாக எழுந்திருந்த இரண்டடுக்கு மாளிகையின் படுக்கையறை யன்னலிற் பதிந்து நின்றது. 

வழக்கமாகச் சந்திரன் வரவு கண்டு கொந்தளிக்கும் சமுத்திரம் போன்ற அவன் இதயக்கடல் அன்று மிகவும் அமைதியாக இருந்தது. அதனால், முகத்திலும் பிரகாச மில்லை. கண்களில் எதையோ பறிகொடுத்த சோக உணர்ச்சி. இதற்கெல்லாம் காரணம் வழக்கமாக அவன் வரவு கண்டு மலரும் அந்த அல்லி விழிகள் இரண்டையும் இன்று காணாததாகவும் இருக்கலாம். ஒருவேளை அவனை ஏமாற்றி வேடிக்கை பார்க்கவேண்டும் என்ற நோக் கத்துடன் அவள் எங்காவது மறைந்து கொண்டிருப் பாளோ. ..? இந்த எண்ணத்தின் எதிரொலி அவர்கள் வேலிக்கு எல்லையாக நின்ற கொய்யா மரத்தின் கீழ் அவனைக் கொண்டு நிறுத்துயது. இலை தெரியாமல் காய்த்துக் கனிந்திருந்த கொய்யாப் பழங்களைப் பறிப்பது போல் அடுத்த வீட்டுப் பக்கம் தன் பார்வையைச் செலுத்து கிறான் அவன். மிஞ்சியது ஏமாற்றமே. 

ஏமாற்றம் ஒரு புறம் வேதனை மறுபுறமாக வாட்ட மீண்டும் மாட்டுக் கொட்டிலை நோக்கி நடக்கிறான். அங்கே நின்று கொண்டே ஆசையை அடக்க முடியாதவனாய் மீண்டும் தன் பார்வையை அந்தப் படுக்கையறைப் பக்கம் செலுத்துகிறான். அவனால் அவன் கண்களை நம்ப முடியாமல் இருக்கிறது. ஒரு சிறந்த ஓவியனின் அற்புத சிருஷ்டியோ என்று ஐயுறும் வண்ணம் மார்பகத்தில் இருந்து உச்சிவரை யன்னல் ஊடாகத் தெரிய ஓர் அழகுப் பிம்ப மாகக் காட்சியளித்தாள் அவள். ஆனால், இயற்கை யாக இருக்கும் குறும்பும் மலர்ச்சியும் அன்று மட்டும் அவள் கண்களில் காணப்படவில்லை. சோகந் ததும்பிய அந்தக் கயல்விழிகளைக் கண்ட அவன் விழிகளிலும் ஓர் சோர்வு.. ஒரு நெகிழ்ச்சி காணப்படுகிறது. இருவிழிகளும் இரு ஊமைகளைப் போலத் தமக்குப் புரியக் கூடியதாகப் பேசிக் கொள்கின்றன. 

சில நிமிடத்தில் அவள் இரு கரமும் யன்னற் கம்பி’ களைப் பிடித்துக் கொள்ள அவள் உருவம் படிப் படியாக மேல் எழுகிறது. அவள் விழிகள் அச்சத்தோடு அங்கு. மிங்கும் பார்த்ததில் இருந்து அங்கு வேறு யாராவது இருக் கிறார்களோ என்று அவள் சந்தேகப்படுவது போல் தோன்றியது. அவள் எண்ண அலைகளை ஆகர்ஷிக்கக் கூடிய வல்லமை படைத்த அவன் அவளைப் புரிந்து கொண்டவன்போல் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு யாரு மில்லை என்பது போல தன்கைகளை அகலவிரித்து செய்கை. மூலம் காண்பிக்கிறான். 

அதைப்புரிந்து கொண்டு அவளும் தன் வீட்டுப்பக்கம் விழிகளைச் சுழலவிட்டுப் பார்க்கிறாள். அடுத்த நிமிடம் இமைக்கும் பொழுதுக்குள் தன் மடிக்குள் இருந்து எதையோ பத்திரமாக எடுத்து அவனை நோக்கி வீசி எறிகிறாள் அவள். அவன் குனிந்து தன் காலடியில் விழுந்து கிடந்த அதை எடுத்துக் கொள்கிறான். 

ஒரு கல்லிற் சுற்றி எறியப்பட்ட காகிதத் துண்டுதான் அது. நிமிர்ந்ததும் அவன் பார்வை யன்னலண்டை செல் கிறது. அங்கே சூனியம் நிலவ அவள் நின்ற யன்னல் வெறிச்சோடிக் கிடக்கிறது. அதற்குமேல் அவன் அங்கு நிற்கவில்லை. அவனால் நிற்கமுடியவில்லை. தன் கையில் பத்திரமாக இருந்த காகிதத்தை மட்டும் காற்சட்டைப் பைக்குள் திணித்துவிட்டு கல்லை மாட்டுத் தொழுவப் பக்கம் வீசியெறிகிறான். அவன் கால்கள் கிணற்றடிக்கு அவனை இட்டுச் செல்கின்றன. 

அவன் மனதில் ஏதோ குழப்பங்கள் உருவாகின்றன. அவனால் எதையுமே புரிந்து கொள்ளமுடியவில்லை. நேற்று வரை பார்வையாலும் இடையிடையே இரகசியமாகக் கலந் துரையாடிய குறும்புப் பேச்சுக்களாலும் சந்தித்து வந்த அவளுக்கு இன்று என்ன வந்துவிட்டதோ. . . . ? தன் தாயைக் கண்டதும் கை கால்களை அடித்து மகிழும் பச்சைக் குழந்தை போல் அவனைக் கண்டதும் துள்ளி மகிழும் அவள் இன்று முகம் சோர்ந்து மனம் வாடி எல்லாவற்றையும் பறிகொடுத்த நிலையில் காட்சியளித்ததன் காரணம் எது வாக இருக்கும் . . ? அவனுக்கு எதுவும் விளங்கவில்லை. காற்சட்டைப் பைக்குள் இருந்த காகிதத்தை எடுத்து விரிக்க முயற்சிக்கிறான். ஆனால், அவன் கையும் காலும் நடுங்கிக் கொள்கின்றன. அவன் அதைப் பிரிக்கமுடியாமல் மீண்டும் காற்சட்டைப் பைக்குள்ளேயே திணித்துவிட்டு, கைகால் அலம்பத் தொடங்குகிறான். ஆயினும், பைக்குள் இருந்த காகிதம் அவனுக்குச் சுமையாகத் தெரிகிறது. 

திடீர் எனப் பக்கத்து வீட்டுக்காரர் ‘பூம்பூம் ‘ எனப் பேயாக அலறத் தொடங்குகிறது. அந்தச் சத்தத்தைக் கேட்க விரும்பாதவன் போல் கிணற்றில் இருந்து நீரை வாளி நிரம்ப இறைத்துவிட்டுத் தன் முகத்தைக் கழுவ ஆரம்பிக்கிறான் அவன். ‘ரகு. டேய் ரகு…’ அவனை வளர்த்து ஆளாக்கிய பெரியவர்-முதியவருங் கூட -அவனுக்கு மாமா முறையானவர், அவனை அழைத்துக் கொண்டே அவன் அருகில் வருகிறார். 

‘என்ன மாமா என்ன விஷயம் எதற்காக நீங்கள் இவ்வளவு தூரம் வரவேண்டும். . . ஒரு குரல் கொடுத் திருந்தால் நானே அங்கு ஓடி வந்திருக்கமாட்டேனா என்ன….? இருங்கள் இதோ ஒரு நொடியில் முகத்தைக் கழுவிவிட்டு வந்துவிடுகிறேன்…. கூறிக்கொண்டே சள சள எனத் தண்ணீரை ஊற்றி முகத்தைக் கழுவிக் கொள்கிறான் அவன். * என்னப்பா கந்தோரால் வரும் போது உன்னைக் கண்டேன். அதற்குப்பின் உன்னை அந்தப் பக்கமே காணவில்லை. இவ்வளவு நேரமாக என்ன செய்கிறாய் என்று பார்க்கத்தான் நானே எழுந்து வந்தேன். ம் ம். எவ்வளவு நேரமாகத்தான் இந்த முகத்தைக் கழுவுறாய். அவ்வளவு அழுக்காடா உன்ர முகம்..? ஆண் பிள்ளைகள் சட்புட் என்று ஒரு காரியத்தைச் செய்யப் பழகிக்கொள்ள வேண்டும். சீக்கிரம் கழுவிப்போட்டு வா..’ கிழவரின் குரலில் அலுப்புத் தட்டியது. 

கிழவர்தான் இதுவரை பேசினாரா என்று ரகுவால் நம்பமுடியவில்லை. அவனுக்கு இது வேறு ஆச்சரியமாக. இருந்தது. அவனைச் சிறுவயதில் இருந்து ஆளாக்கி இது நாள்வரை எங்கே போனாய், என்ன செய்தாய்….? என்று ஒரு கேள்விகூடக் கேட்டுப் பழக்கமில்லாத சின்னையா இவ்வளவு தூரம் அவனைத் தேடி வந்து கேள்வி கேட்கும் —அளவுக்கு அப்படி என்னதான் நேர்ந்துவிட்டது . . ? அவர் கேள்வி அவனுக்குச் சிறிது கோபத்தை உண்டு பண்ணியது: என்று கூடக் கூறலாம். 

‘என்ன மாமா. இன்றைக்குத்தான் ஏதோ புதிதாகக் காரியம் நடைபெறுவதுபோல் கேள்வி கேட் கிறீர்கள். நான் உத்தியோகம் பார்க்கத் தொடங்கிய நாளில் இருந்து என்ன செய்துவருகிறேனோ அதைத்தான் இப்போதும் செய்தேன். மாடுகளுக்குத் தீனி போட்டுத். தண்ணீர் காட்டி, மாட்டடி துப்புரவாக்கி…இதை யெல்லாம் இத்தனை நாளும் வேலையில் இருந்து வீடு திரும்பியதும் நான்தானே செய்து வருகிறேன். இது தெரிந்திருந்தும் இன்று ஏன் ஒரு புதுக் கேள்வி மாமா . . ? மனதில் உதித்த கோபத்தையெல்லாம் வார்த்தைகளாகக் கொட்டிவிட்டுக் குழம்பிய மனத்துடன் பெரியவரைத் தொடர்ந்து வீட்டினுள் நுழைந்தான் அவன். 

அவனுக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த அனுமதியும் பெரிய வரின் செய்கையால் முற்றாக அற்றுப்போய்விட்டது. போதாதற்கு உமாவின் கடிதம் அவன் உள்ளத்தைச் சுமை யாக அழுத்திக்கொண்டிருந்தது. எப்படியாவது ஒரு தனிமையான இடத்துக்குச் சென்று உமாவின் கடிதத்தைப் படித்து அவள் என்ன எழுதியிருக்கிறாள் என்பதை அறிந்து விட அவள் மனந் துடியாய்த் துடித்தது. ஏதாவது அவசியம் ஏற்படாமல் அவள் எழுதியிருக்கவே மாட்டாள் என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது. ஒருவேளை எமக்குள் ஏற்பட்ட உறவு பற்றி அவள் அப்பாவுக்குத் தெரிந்து விட்டதோ..? அப்படியிருக்கும் பட்சத்தில் அதனால் என்ன விபரீதம் நிகழக் கூடும் . . ? இன்று மாமா எதற்காக என்னை உளவறியும் சி.ஐ.டி போல் பின் தொடர்ந்தார்? அவரது பேச்சு புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. இவற்றையெல்லாம் தொடர்பு படுத்திப் பார்த்த போது ஏதோ நடக்க முடியாத அசம்பாவிதம் ஒன்று நடந்து விட்டதென அவன் முடிவுகட்டினான். 

அவன் மனதில் என்றுமில்லாத ஒரு பயம் குடிகொண் டிருந்தது. நிம்மதியற்ற மனதுடன் தலை சீவிக்கொண் டிருந்த அவனை ரகு . . தம்பி டேய் . . ரகு..’ என்று சின்னையா மீண்டும் அழைக்கவே அவன் திடுக்கிட்டான். இருந்தும் தன் பயத்தை வெளிக்காட்டாமல் தலையைச் சீவிக் கொண்டே வெளியே வந்தான். சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டே பத்திரிகை ஒன்றினால் விசிறிக் கொண்டு இருந்த சின்னையா அவனைப் பார்த்த பார்வை யைச் சகித்துக்கொள்ள முடியாதவனாய் என்ன மாமா என்று கேட்டுவிட்டுத் தன் பார்வையை வேறுபுறந்திருப்பிக் கொண்டான். 

அவனை மேலுங் கீழுமாக அன்பொழுகப் பார்த்த சின்னையா தன் பக்கத்தில் வெறுமையாகக் கிடந்த நாற் காலியைச் சுட்டிக் காட்டி ‘இப்படி உட்கார் அப்பா, உன்னுடன் தனிமையில் நான் இரண்டொரு வார்த்தைகள் பேச ஆசைப்படுகிறேன்’ என்று கூறியபோது ரகுவுக்குப் பூமியே பிளந்து தன்னை விழுங்கி விடுவது போன்றதோர் உணர்ச்சி ஏற்பட்டது. 

அவன் மறுவார்த்தை பேச மனமின்றி மகுடிக்குக் கட்டுண்ட நாகம் போல மெளனமாக அந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். இருட்டறையொன்றில் பூட்டப் பட்டவன் நிலையில் இருந்தான். ஆனால், அவன் மனமோ பரீட்சைப் பேற்றை எதிர்பார்க்கும் ஒரு மாணவன் நிலை யில் இருந்தது. 

‘தம்பி’ என்று அவர் தொடர்ந்தபோது அவன் உடல் சிறிது நடுங்கியது. அந்த அழைப்பின் தொனி அவ்வளவு இதமாகப் படவில்லை அவனுக்கு. ஆகவே, படபடக்கும் நெஞ் சுடன் அவர் ஒப்புவிக்கப்போகும் பாடத்தைக் கேட்க அவன் தன்னைச் சிறுகச் சிறுகத் தயார்படுத்திக் கொண்டான். ‘தம்பீ ‘ என்று ஆரம்பித்தவர் தொடர்ந்தார். ‘உனக்குத் தெரியவேண்டும் உன்னை நான் எத்தனை வயதில் எடுத்து வளர்க்கத் தொடங்கினேன் என்று. நீ பிறந்த வேளை ஒரு மாதப் பிள்ளையாக இருக்கும் போதே உன் அப்பா ஏதோ விபத்துக்குள்ளாகி அகால மரணமடைந்தார். அதன் பின்பு என் பெரிய தாயாரின் மகளும் எனக்குத் தங்கை முறையுமாகிய மரகதம் உன்னைப்பாடுபட்டு வளர்த் தாள். திரும்பவும் துரதிஷ்டம் உன்னைத் தொடர்ந்தது. உனக்கு ஐந்து வயது நடக்கும்போது உன் தாயாரும் நெருப்புக் காய்ச்சலுக்குள்ளாகி உன்னை என் கையில் ஒப்புவித்து விட்டுக் கண்ணை மூடிக் கொண்டாள். அவளுக்கு என்மேல் அத்தனை நம்பிக்கை ! என்று கூறிய போது அவர் குரல் தளதளத்தது. அவர் தன் பேச்சைச் சிறிது நிறுத்திக் கொண்ட போது ரகு அவரை அன்பொழுகப் பார்த்தான். அடுத்து என்ன கூறப்போகிறாரோ என் அவன் மனம் அடித்துக் கொண்டது. 

2ஆம் அத்தியாயம் 

எவ்வளவுதான் அன்னியோன்யமாகப் பழகினாலும் இரத்த உறவுக்கு ஒரு தனி மகிமை உண்டு என்பதை அன்று தான் சின்னையா உணர்ந்துகொண்டார். ஐந்து வயதில் இருந்து அருமையாகப் பெற்ற பிள்ளையைவிடக் கூடிய பாசத்துடன் அவனை வளர்த்து வந்துள்ளார் அவர். ஆயினும், இன்று இப்படியான ஒரு நுட்பமான விடயத் தைப்பற்றி அவனுடன் பேச்சை ஆரம்பிக்கு முன்பு அவர் எவ்வளவு தூரம் சிந்திக்கவேண்டியுள்ளது..? ஆயினும் அவர் பேச நினைத்ததைப் பேசித்தான் ஆகவேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டபோது அவர் அதற்கு மேலும் தாமதிக்க விரும்பாமல் தொடர்ந்தார். 

உன் அம்மா என்மேல் வைத்த நம்பிக்கை வீண் போகாமல் நானும் உன்னை என் மக்கள் இருவருடனும் சேர்த்து மூன்றாவது மகனாக வளர்த்து வந்தேன். இன்று நீ பெரிய மனிதன் அப்பா ….உன்னை இந்த நிலையில் பார்க்கும்போது ஏதோ ஒரு பெரிய கடமையை நிறைவேற்றி விட்ட திருப்திதான் என் மனதில் நிறைந்துள்ளது. என் உதிரத்தில் உதித்த என் மக்கள் இருவரும் படிப்பைக் குழப்பிக் கொண்டு எங்கள் குலத்தொழிலாகிய கடல் தொழிலைச் செய்யும்போது நீ மட்டும் காற்சட்டை மேற்சட்டை போட் டுக்கொண்டு அலுவலகத்திற்குப் போய் வருவதைப் பார்க்கும்போது நான் அடையும் பெருமையை வேறு எந்தத் தந்தையும் அடைந்திருக்க முடியாதப்பா! 

நீயும் என் சொல்லைத் தட்டாமல் வளர்ந்து படித்து’ முன்னேறிவிட்டாய். இதுவரை என் மனம் நோகக்கூடிய விதமாகவோ என் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடிய முறையிலோ நீ நடந்துகொண்டதேயில்லை. அப்படி நீ நடந்து கொள்வாய் என்று நானும் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. உன்மேல் எனக்கு அப்படியொரு நல் லெண்ணம் ! ஒரு நம்பிக்கை !! 

ஆனால்… 

ஆமாம் ரகு. ஆனால், இன்று நான் கேள்விப்படுவது உண்மையாக இருக்குமானால் அந்த அவமானத்தை என்னால் பொறுக்கமுடியாதப்பா. இன்று காலை நீ அலுவலகத்திற்குப் புறப்பட்டுப் போன ஒரு சில மணி நேரத்தின் பின் எனது மண் குடிசையை நாடி எங்கள் பக்கத்து மாடிவீட்டுச் சொந்தக்காரரான எஞ்சினியர் ஐயா ஏகாம்பரம் வந்திருந்தார். பங்களாக் கட்டிக்கொண்டு குடிவந்த ஈராண்டுக் காலத்துக்கும் எங்கள் வீட்டுப் படிக் கட்டையே மிதித்திராத ஒருவர் இந்த ஏழையின் குடிசைக்கு வருவதாக இருந்தால் அதிலும் ஏதாவது விசேடம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். வேறு எதைத்தான் நான் நினைப்பது.. ..? 

நாங்கள் மீனவர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் இன்றுகூட நீ உட்பட நாங்கள் அனைவரும் எங்கள் குலத் தொழிலை ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் செய்து வரு கிறோம் என்பதும் ஊரறிந்த விடயம். அதனால் இதை எல்லாம் நான் எடுத்துக்கூறி நீ அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதைவிடப் பிரதானமான விடயம் எங்கள் பக்கத்து வீட்டு எஞ்சினியர் ஐயா பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர் என்பதையும் நீ அறிந்து வைத்திருப்பாய் என்றுதான் இதுவரை நம்பியிருந்தேன். 

சின்னையா அவ்வளவையுங் கூறி முடித்ததும் ரகுவின் உடல் பதறத் தொடங்கியது. தன்னையும் அடுத்த வீட்டுப் பெண்ணையும் பற்றித்தான் அவர் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள அவன் சிரமப்படவில்லை. அவனை அறியா மல் ஒரு பயம் மனதில் புகுந்து கொள்ள அதன் பிரதிபலிப்பு வியர்வை முத்துக்களாக அவன் முகத்தில் அரும்பி நின்றன. கிழவர் தொடர்ந்து என்ன பேசுகிறாரோ என்ற அச்சத் தோடு நிலம் நோக்கி நின்றான் அவன். 

அவர்கள் தங்கள் படகு போன்ற மோட்டாரை நிறுத்தி வைத்திருக்கும் ‘ கரேஜ்’ கூட எங்கள் குடிசையை விட உயர்ந்ததப்பா. நமக்கும், அவர்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் படித்த நீ, பகுத்தறிவுள்ள நீ உணர்ந்து நடப்பாய் என்றுதான் உன் அண்ணன்மார் இருவருக்கும் பக்கத்துப் பங்களாவுக்கு எஞ்சினியர் குடியும் குடித்தனமுமாய் வந்தபோதே எச்சரித்தது போல் உன்னையும் எச்சரிக்காமல் விட்டேன். அது எத்தனை பெரிய தவறு என்பதை இப்போது உணர்கிறேன் ரகு. எவ்வளவுதான் படித்திருந்தாலும் இளம் இரத்தம் இருக் கிறதே அது மிகவும் பொல்லாதது. இத்தனை வருட அனுபவம்கூட என்னை ஏமாற்றிவிட்டது பார் . . . . ! 

என்சினியர் ஐயாவின் மூத்த பெண்தான் உமாவாம் ! அந்தப் பெண்ணுடைய பெயரைக்கூட இன்று அவர் சொன்ன பின்புதான் நான் அறிந்துகொண்டேன். அந்தப் பெண்ணை ஆமாம் ! அந்த உமாவை நீ அடிக்கடி பார்த்தும் பேசியும் பழகி அவள் மனதைக் குழப்பித் தங்கள் குடும் பத்துக்கே அவமானத்தைத் தேடித் தந்து விட்டதாக அந்த ஐயா உன்மீது குற்றப்பத்திரிகை வாசித்திருக்கிறார். தன் மகளுக்குத் தான் கூற வேண்டிய புத்திமதியையெல்லாம் கூறிவிட்டதாகவும் அவள் அதைக் கேட்டு நடப்பதற்கு எங்கள் ஒத்துழைப்பையும் வேண்டியிருப்பதால்தானே நேரில் வந்து எச்சரித்துவிட்டுப் போவதாகக் கூறினார். 

அவர் கூறியதை என்னால் நம்பமுடியவில்லை. அவருடன் நான் உனக்காக எவ்வளவோ வாதாடிப் பார்த் தேன். நீ அப்படி நடக்கக்கூடியவன் அல்ல என அடித்துக் கூறினேன். அவர் நம்ப மறுத்துவிட்டார். உங்கள் பிள்ளையை உங்களுக்கு அடக்க முடியாவிட்டால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும் என்று மிடுக்காகக் கூறிவிட்டுத் திமிராக அவர் நடந்து சென்ற போது “என் கிழட்டு இதயம் வேதனையாற் சாம்பிவிட்ட தப்பா. அதனால்தான் இன்று அலுவலகத்தில் இருந்து நீ வந்த நேரந் தொடக்கமாக நானும் உன்னையே அவ தானித்து வந்தேன். அதன் பின்புதான் அவர் கூறியதில் தவறேதும் இல்லை என்பதை உணர்ந்து உன்னை அழைக்க நேரடியாகவே கிணற்றடிக்கு வந்தேன். இதற்கு மேலும் உனக்கு நான் எதுவுங் கூற விரும்பவில்லை. ஏதோ இனி யாவது புத்தியாக நடந்து இதுவரை என் நற்பெயரை எப்படிக் காப்பாற்றினாயோ அப்படியே காப்பாற்றிவிடு.. உம்.. இனி நீ போய் உன் வேலையைக் கவனி’ என்று கிழவர் கூறி முடித்ததும் அவர் குரல் கம்மியதை ரகு நன்றாக உணர்ந்து கொண்டான். அவனுக்கு இப்போது அவர் முகத்தைப் பார்க்கவே வெட்கமாக இருந்தது. 

சின்னையா இவ்வளவு திறமை படைத்தவர் என்பதை இப்போதுதான் அவன் உணர்ந்து கொண்டான். கையும் மெய்யுமாக அவரிடம் பிடிபட்ட பின் அவன் அவருடன் வீண் வாதஞ் செய்துகொள்ள விரும்பவில்லை. அதனால் தன் எண்சாண் உடம்பும் ஒரு சாணாகக் கூனிக்குறுக அவன் அவர் பாதங்களைத் தொட்டு இதுவரை உங்கள் நற் பெயருக்கு களங்கம் ஏற்படாதவாறு எப்படி நடந்துகொண் டேனோ அப்படியே நடப்பேன் என்று கூறிவிட்டு எழுந்து அவர் பதிலுக்குக் காத்திராமலே கதவைப் படார்’ என அடித்துச் சாத்தி உள்ளே தாழிட்டுவிட்டு சில நிமிடநேரம் ஏதோ சிந்தித்து முகட்டை அண்ணாந்து பார்த்தபடி நின்றான். 

அந்த முகட்டுக்கும் நிலத்துக்கும் இடையில் உள்ள தூரத்தை அவன் மனம் எடைபோட்டுப் பார்த்தது. சுவர் என்ற ஒன்றை அவற்றின் நடுவே எழுப்பி இருக்காவிட்டால் அந்த முகட்டுக்கும் நிலத்துக்கும் எதுவிதமான தொடர்பும் இருக்கமுடியாதுதான். அப்படியானால் அந்தஸ்து என்ற ஒன்றுதான் அவனுக்கும் உமாவுக்கும் உள்ள இடைவெளியை நிரப்ப உதவும். 

கல்லையும் மண்ணையும் சீமேந்தையும் குழைத்தே சுவரைக் கட்டி யெழுப்பி விடலாம்.. ஆனால், அந்தஸ்து…? வாழ்க்கையில் மனிதன் தனக்குத் தானே படைத்துக்கொண்ட ஏற்றத்தாழ்வுகளை எண்ணிப் பார்த்த போது உயிரையே மாய்த்துவிடலாம் போல் தோன்றியது அவனுக்கு. எத்தனையோ தத்துவங்களை அலசி ஆராயும் மனிதர்கள் தங்கள் வாழ்க்கையைப் பொறுத்தவரையில் இந்தத் தத்துவங்களைக் கடைப்பிடிக்காமல் விடுவதும் ஏனோ…? 

இரண்டு வாரங்களுக்கு முன்புகூட அங்கே காந்தி விழா கொண்டாடப் பட்டபோது அந்த விழாவுக்கு என் அப்பாதான் தலைமை வகிக்கிறார் என்று உமா அவனிடம் பெருமையாகக் கூறினாள். உலகம் போற்றும் ஒரு மகாத்மாவின் விழாவிற்குத் தலைமை வகிக்கும் பொறுப்பை ஏற்றிருப்பவர் நிச்சயமாக அந்த மகாத்மாவின் அடிச்சுவட்டைப் பின் பற்றுபவராகத்தான் இருப்பார் என்ற எண் ணத்தில் அவன் கூடத்தான் விழாவிற்குப் போயிருந்தான். 

தூய தமிழில் அவர் பல விடயங்களை எடுத்துக் கையாண்ட விதம் அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. சிறப்பாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் ‘கீழ்ச் சாதி’ என்ற பெயரில் ஆலயத்தில் பிரவேசிக்கத் தடை செய்யப்பட்ட ஒரு வகுப்பாருக்காக அவர் பரிந்து பேசிய விதம் அவன் மனதை மிகவும் கவர்ந்திருந்தது. 

ஒரு தாயின் குழந்தைகளில் ஒன்று அதிர்ஷ்ட வசத்தால் மாட மாளிகையிலும் சில காலஞ் சென்று அடுத்த குழந்தை மண் குடிசையிலும் பிறக்க நேரிட்டால் முதற் குழந்தைக்கு வழங்கப்படும் சலுகைகள் அத்தனையும் அடுத்த குழந்தைக்கு மறுக்கப்படுதல் எந்த வகையில் முறையாகும்…? ஒரு தாய்க்கு நொண்டிக் குழந்தையும் ஊமைக் குழந்தையும் புத்திசாலியான அழகிய குழந்தையும் எப்படிச் சமனோ அதே மாதிரிதான் இறைவன் சந்நிதானத்தில் மக்கள் எல்லோரும் சமம் என்று எண்ணவேண்டும். மகாத்மா கூட இதைத்தான் போதித்தார் என்றெல்லாம் அடித்துப் பேசிய ஏகாம்பரந்தானா இன்று அன்பு காட்டுவதற்கு அந்தஸ்துப் பற்றிப் பேசினார் என்று நினைத்துப் பார்க் கவே அவனுக்கு வெட்கமாக இருந்தது. 

சினிமாவுக்குச் சென்று படம் பார்த்துவிட்டு வரு யவர்கள் அந்தப் படத்தில் வந்த தொழிலாளிகள், பாட் டாளிகள் படும் கஷ்டங்களைப் பற்றி எல்லாம் தெரு வெங்கும் அலசி ஆராய்ந்து பரிதாபப்பட்டுக்கொண்டு செல் வார்கள். ஆனால், அதே தெருவின் இருமருங்கிலும் வாழ வழியற்றுப் படுத்துறங்கும் பாட்டாளி மக்களின் நினைவு மட்டும் அவர்களுக்கு வருவதே இல்லை. 

உயிரைத் துச்சமாக மதித்து நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த மாடிவீடு கட்டும் தொழிலாளி அதன் நிழலில் கட்டாந் தரையில் படுத்துறங்கும்போது கைகட்டி அண்ணாந்து பார்த்து அதன் அழகை ரசிக்கும் முதலாளி ஜோராக உள்ளே படுத்துத் தூங்குவார். எல்லாமே பேச்சளவிற்றான் என்றெல்லாம் தர்க்கஞ் செய்தது அவன் உள்ளம். 

உமா கடிதம் எறிந்ததையெல்லாம் சின்னையா எங்காவது மறைந்து நின்று பார்த்துத்தான் இருப்பார். அல்லது அவர் அப்படிப் பேசியிருக்கவே மாட்டார். ஆயினும் தான் கண்டதைக் கூறி அதற்காக அவனை நாலு அடி அடித்திருந்தால் அவன் அதைப் பொறுத்திருப்பான் அவன் மனதிற்கும் அது சாந்தி அளித்திருக்கும். ஆனால் பெரியவர் அதுபற்றி எதுவுமே பிரஸ்தாபிக்கவில்லையே. அது வேறு ஊமைக் காயமாக அவனை வாட்டிற்று. அவனை வாயில் வந்தபடிக்குத் திட்டி நாலைந்து அடி அடிக்கும் உரிமை அவருக்கு இருக்கும்போது இப்படி எதற்காக அவர் அவனை மாற்றான் போல் நடத்திவிட்டார். ஒருவேளை இதை விடப் பெரிய தண்டனை அவரால் கொடுக்க முடியாமல் போய்விட்டதோ..? 

இப்போது ரகுவினுடைய ஆத்திரம் எல்லாம் பணம் படைத்தவர்கள் மேல் திரும்பியது. சகடக்கால்போல் உருண்டுவரும் நிலையற்ற செல்வத்தை நம்பி எத்தனை பூப்போன்ற மென்மையான ஏழை இதயங்களைச் சிலர் கசக்கிப் பிழிந்து விடுகிறார்கள். அந்த ரகத்தைச் சேர்ந்தவர் தான் இந்த எஞ்சினியர் ஏகாம்பரமும் என்று நினைக்கவே அவன் வேதனைப்பட்டான். 

இவ்வளவு கொடிய கல்நெஞ்சம் படைத்த ஒருவருக்குப் பால்போன்ற இதயம் படைத்த ஒரு பெண்ணா ? உண்மை யில் உமா கள்ளம் கபடமற்ற பச்சைக் குழந்தை போன்றவள் என்பதுதான் அவன் எண்ணம். சிப்பியில் முத்து, மண்ணுக்குள் மாணிக்கம் இவற்றைப் போன்றவள் தான் உமாவும். 

அதற்குமேல் அவனால் சிந்திக்க முடியவில்லை. அவனுக்கு மூளையெல்லாம் ஏதோ செய்தது. அவன் காற் சட்டைப்பைக்குள் பக்குவமாக இருந்த கடிதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தான். கடிதத் தைப் படித்துவிட அவன் உள்ளம் துடியாய்த் துடித்தது. ஆயினும், அதைப் பிரிக்க அவன் பயப்பட்டான், ஏற்கெனவே வெந்து சாம்பிப்போயிருக்கும் அவனது உள்ளத்திற்கு மேலும் புதிய சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கும் சக்தி இருக்கவில்லை. அதனால், அதில் என்ன செய்தி எழுதப்பட்டிருக்குமோ என அவன் சிந்தித்தான். 

இப்படியான சூழ்நிலையில் எந்த முட்டாளும் மகிழ்ச்சி யான செய்தியை எதிர்பார்க்க முடியாதென்பதை அவன் உணர்ந்தான். ஆனாலும், மனப்பயம் மட்டும் அவனை விட்டு அகல்வதாக இல்லை. ஈற்றில் தன் மனதைக் கட்டுப் படுத்திக்கொண்டு வருவது வரட்டும் என்ற எண்ணத்தில் அந்தக் காகிதத்தைப் பிரித்து அதில் தனது விழிகளைப் பதித்தான். அந்தக் கடிதத்தைப் பலமுறை திருப்பித் திருப்பிப் படித்த அவன் தலை சுற்றியது. கடிதத்தைக் கையிற் பிடித்தபடியே படுக்கையில் குப்புற விழுந்தான். அந்தக் கடிதம் காற்றில் படபடத்த சத்தத்தைத் தவிர அங்கே சூனியம் நிலவியது. 

3ஆம் அத்தியாயம் 

அழகான பெரிய கப்பலில் பிரயாணஞ் செய்கிறோம் என்ற பூரிப்புடன் இருக்கும்போது திடீர் என அந்தக் கப்பலுக் குள் தண்ணீர் புகுந்து அது மூழ்கத் தொடங்கினால் அந்தப் பிரயாணிகள் எவ்வளவு அவஸ்தைப் படுவார்களோ அவ்வளவு துன்பப்பட்டான் ரகு. உமாவின் கடிதம் அவன் உள்ளத்தை எரிமலையாகக் குமுறவைத்துவிட்டது. அன்று ஏனோ வானம்கூட மப்பாக மழைக்கோலம் பூண்டிருந்தது. அந்த இருளோடு போட்டி போடுவது போல் ரகுவின் உள்ளமும் இருள் அடைந்து சோகமே உருவாகியது. தன் துயரை யெல்லாம் மனம்விட்டுக் கூறி ஆற யாருமற்ற நிலையில் அவன் உமாவின் கடிதத்தை மீண்டும் வாய்விட்டுப் படிக்க ஆரம்பித்தான். 

அன்பான ரகு, 

இக்கடிதம் எழுதுவதற்காக முதலில் என்னை மன்னித்துவிடுங்கள். ஒரு பெண் என்ற முறையில் இக்கடிதத்தை எழுதுவது தவறு எனப்பட்டால், எனது நிலையில் இதை எழுதுவது தவறல்ல என்பதே என் முடிவு. ரகு, நம் உறவு பற்றி அப்பாவுக்கு எப்படியோ தெரிய வந்துவிட்டது. நீங்கள் ஆரம்பத் தில் பயந்தபடியே காரியங்கள் நடைபெற்றுள்ளன. 

இந்தப் பிரச்சனையைச் சுமூகமாகத் தீர்ப்பதற்கு.. எனக்கு உடனடியாகத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு அப்பா வந்துவிட்டார். இதற்கான பேச்சுக்களும் நடைபெறுகின்றன. அத னால் தற்போது எனக்குக் கட்டுக் காவல்களும் அதிகமாய்விட்டன. உங்களைப் பிரிந்து என்னால் வாழமுடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆகவே தயவு செய்து நம் திருமணத்தை இரகசியமாக நடத்து வதற்கு வேண்டிய ஒழுங்குகளை யாருடனாவது கலந்து செய்யுங்கள். அல்லது இருவரும் யாருக்குமே தெரி யாமல் எங்காவது ஓடி மறைந்துவிடுவோம். இனிமேல் அப்பாவின் கண்ணுக்குத் தப்பி உங்களைச் சந்திக்க லாம் என்ற நம்பிக்கை எனக்குக் கிஞ்சித்தும் கிடை யாது. காலம் கடந்த பின் காரியங்கள் என் விருப் பத்திற்கு விரோதமாக நடைபெற்றால் தயவு செய்து என்னைத் துரோகி என்று ஏசவேண்டாம். உங்கள் நல்ல பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும், 

உங்கள் உமா. 

இது கடிதமாகவே படவில்லை ரகுவுக்கு. உமாதான் அவன் முன் நின்று பேசுவது போன்றதோர் பிரமை ஏற் பட்டு அவனைச் சித்திரவதைப் படுத்தியது. அவனால் இதற்கு என்ன தீர்வு காணமுடியும் ….? இப்படியான சமூகச் சீர்கேடுகளைத் தீர்ப்பதற்கென்றே எழுதப்படும் பல நூல்களைப் படிக்கிறார்கள். இந்நூல்கள் படமாக்கப்படும் போது அவற்றைப் பார்த்து இழைக்கப்படும் அநியாயங்களுக் காக ஆத்திரப்படுகிறார்கள். கண்ணீர் வடிக்கிறார்கள். எல்லாம் தியேட்டருக்குள் இருக்கும் வரையும், புத்த கத்தில் மூழ்கி இருக்கும் வரையும்தான். அப்புறம் மணல் மீது அமர்ந்துவிட்டு எழும்பும்போது அந்த மணலைத் தட்டி விட்டு எழும்பிக்கொள்வது போல் அவர்கள் மனதில் இருந். தும் இவை மறைந்துவிடுகின்றன. 

இதைச் சுடலை ஞானம் என்று கூறினால்கூடப் பொருந்தும். ஒருவர் இறந்து அவரைச் சுடலைக்கு இட்டுச் சென்று எரிக்கும்வரை வாழ்க்கையில் இறப்பு ஒன்று தான் நிச்சயமானது. ஆகையால், தவறு செய்யாமல் செவ்வனே வாழப் பழகிக்கொள்ளவேண்டும் என்று மனிதன் கருதுகிறான். சுடலையைவிட்டு வெளியேறியதும் பழைய படி அவன் மனதில் பொறாமையும் அசூசையுங் கலந்து கொள்கின்றன. இந்த நிலையில் மீனவ குடும்பத்தைச் சேர்ந்த அவனால் எதைத்தான் சாதித்துவிட முடியும்..? அதிலும் அவன் ஏழைக் குமாஸ்தா. உயர்ந்த குடியிற் பிறந்து செல்வச் செழிப்புடன் வாழும் உமா போன்ற ஒரு பெண் ணை மணந்துகொள்ள அவனுக்குச் சின்னையா கேட்டது போல என்ன தகுதி இருக்கிறது? அவன் கனவுகூட காணமுடியாத உயர்ந்த அந்தஸ்தில் இருக் கிறாள் உமா. இதை அவன் அறிவு ஆரம்பத்திலேயே எடுத்து உணர்த்தவே செய்தது. ஆயினும், அவனுடைய குரங்குமனம் அவனை விட்டு வைக்கவில்லை. தங்கள் அந்தஸ்தைப் பற்றி அவன் உணர்ந்திருக்கவில்லை என்றால், அது தப்பு. அவனும் அந்த ஏற்றத்தாழ்வை உணர்ந் திருந்தபடியாற்றான் உமாவுக்கு இது அந்தஸ்து மீறிய நட்பு என்று அடிக்கடி கூறி நினைவூட்டியிருக்கிறாள். ஆயினும், ஏனோ தன் மனதை அவனால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. 

கடந்த இரண்டாண்டுகளாகத்தான் எஞ்சினியர் குடும் பம் வல்வெட்டித்துறைக்கு வந்து வாடிபோட்டுள்ளது. திரு மணமாகிய புதிதில் உத்தியோக வேட்கை அந்தஸ்து நாகரிகம் என்ற போலியான போர்வைகளில் பிறந்த மண்ணை மறந்து கொழும்புப் பட்டணத்திற்கு அடிபெயர்ந்து சென்ற வர் வயது வந்து ஓய்வு பெற்றதும் தன் பிற்கால வாழ்வைப் பிறந்த மண்ணில் ஹாயாகக் கழிக்க விரும்பித் தன் சொந்த ஊர் திரும்பிப் பெரிய பங்களாவும் கட்டிக் குடும்ப மாகவே வந்து சேர்ந்துவிட்டார். அவருக்கு அப்படியொரு நாட்டுப்பற்று.. ! சில அரசியல் தலைவர்கள் தமது சொந்த விருப்பு வெறுப்புக்கு ஏற்ற வகையில் தேசியப் பற்றைக் கூறு செய்வது போல ஏகாம்பரமும் இனக்கலவரம் ஏற்பட்ட நாளில் இருந்து போட்ட திட்டத்தின் பயன்தான் இது. 

ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு ரகுவுக்குக்கூட எஞ்சினி யர் ஏகாம்பரத்தைப் பற்றியோ அவர் குடும்பத்தைப் பற்றியோ ஒன்றுமே தெரிந்து இருக்கவில்லை. அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள அவன் ஆசைப்பட்டதுமில்லை. பங்களா, ஏவலாட்கள், மோட்டார் இவற்றுடன் கூடிய ஒரு பணக்காரக் குடும்பம் நம் பக்கத்து வீடு. பாட்டாளி மக்களின் இரத்தத்தைக் குடித்து முன்னேறிய முதலாளி வர்க்கம் என்ற அளவோடு அவர்கள் அறிமுகத்தை நிறுத்தி வைத்திருந்தான். அது சில மாதங்களுக்கு முன்வரை தான். 

ரகு படிக்கும்போதே சோசலிசம் ‘ பற்றி நிறைய அறிந்து வைத்திருந்தான். நாட்டில் பணக்காரர், ஏழைகள் என்ற வேற்றுமை இருக்கக்கூடாது என்று விரும்பி அதற் காகப் போராடியவன். படிக்கும்போதே பல கூட்டங்களில் பணக்கார வர்க்கத்தைப் பழித்து மேடையில் விளாசி இருக்கிறான். புத்தகப் படிப்பால் ஒருவிதப் பயனும் ஏற்பட மாட்டாது. மக்கள் அன்றாட வாழ்க்கையை அனுபவித்துப் பாட்டாளிகளின் பரிதாப நிலையை உணர்ந்து கற்கும் அனுபவப் பாடம்தான் சமூக சேவைக்கு உகந்த பாடம் என்ற உண்மையை உணர்ந்து அப்படி வாழப் பழகிக்கொண் டவன்—பணக்காரர்களின் காற்றே தன் மீது படக்கூடாது என்று வெறுத்து வாழ்ந்தவன்—இன்று ஒரு பணக்காரப்” பெண்ணின் இதயச் சிறையின் கைதி ஆகிவிட்டானா.. ? அவர்கள் தொடர்பு ஆரம்பித்ததே ஒரு பெரிய கதை. தான். 

ரகு ஒரு கலா ரசிகன். ஓவியம், சிற்பம், சங்கீதம்,. எழுத்து என்பவைதாம் அவன் உண்மையான நண்பர்கள். அவன் வரைந்த ஓவியங்களும் மண்ணில் வடித்தெடுத்த அழகிய சிலைகளும் ஓய்வு கிடைக்கும்போது படைத்த பத்திரிகைக் கதைகளும் தனிமையில் தன்னை மறந்து இசைக் கும் இன்னிசைக் கீதங்களும் அவனுக்கு அளித்த இன்பத்தில் ஒரு பங்கைக்கூட அவன் மனிதனிடம் இருந்து பெற்றதில்லை. 

இப்படித்தான் ஒருநாள் அவன் தனிமையாக மாட்டுத் தொழுவத்தில் அலுவலாக இருந்தபோது தன்னை மறந்து” ” எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு” என்று தனக்கு மிகவும் பிடித்த சினிமாப் பாடலை இசைத்துக் கொண்டிருந்தான். அப்போது எங்கோ அவன் பாட்டிற்கு ஏற்றாற் போல் ஓர் குயில் இசைப்பது போன்ற குரல் கேட்டுத் திரும்பினான். அவன் சிறிதும் எதிர்பார்க்காத நிலையில் ‘இப்படிக் கொஞ்சம் வருகிறீர்களா ‘ என்ற குரல் அவனைத் திகைக்க வைக்கிறது. அவன் திரும்பு கிறான். அங்கே அழகு தேவதையாக மேல் நாட்டுப் பாணி யில் உடையணிந்த இளநங்கை ஒருத்தி அவனையே பார்த்த படி நிற்கிறாள். பொதுவாக அவன் மேல்நாட்டு நாகரி கத்தின் முதல் எதிரி என்று கூறினால் அது நூற்றுக்கு நூறு உண்மையாகும். மினிஸ்கேட், ரையிட்ஸ்கேட், மங்கி கட், டொங்கிகட் என்ற நாகரிகப் பெயர்களால் பெண் மையை அலங்கோலம் செய்யும் எந்த அலங்காரத்தையும் வன்மையாகக் கண்டிக்கும் அவன் அன்று மட்டும் அந்த மினிஸ்கேட் மங்கையை மையலுடன் பார்த்தது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. 

அவள் வார்த்தைக்கு எதிர்வார்த்தை பேச முடியாத வனாய் முடிக்கிவிட்ட பம்பரம்போல் அவன் அவள் முன் சென்று அவள் அழகுக்கு அடிமை யாகிவிட்டவன் போல் நின்றான். அந்த மான் விழிகளின் மருட்சியில் மனதைப் பறிகொடுத்தவனுக்கு உதடுகளும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும். ஏன் என்னைக் *கூப்பிட்டாய்’ என்று கேட்டுவிட நினைத்தான். அது தானே ஆண்மையும் கூட ! ஆனால், அவன் உதடுகள் பிரிந்து கொடுக்க மறுத்தன. 

அவள் எப்படியும் கொழும்புப் பெண்ணல்லவா ? அவன் பேசும்வரை பார்த்திராமல் அவன் அருகில் சென்று, ‘நான் ஒரு கொய்யாப்பழம் பறித்தேன். அது தற் செயலாகத் தவறி உங்கள் கூரைக்கு மேல் விழுந்துவிட்டது. தயவு செய்து அதை எடுத்துத் தர முடியுமா ..?’ என்றாள். 

அவள் குரல் கெஞ்சியது. மறுக்கமுடியுமா அவ னால்..? அவள் வாய்மூடினாளோ இல்லையோ. அடுத்த நிமிடம் அவன் அந்த மாட்டுக் கொட்டில் கூரைக்கு மேல் நின்றான். அவளுடைய பழத்துடன் சேர்த்து இன்னும் சில பழங்களையும் பறித்தெடுத்துக் கொண்டு கீழே இறங்கி அவற்றை அவடளிம் நீட்டினான். 

அப்போது அவன் மனதில் எந்த நினைவும் இருக்க வில்லை. இயற்கையாகவே கொடைவள்ளல் ஆகிய அவன் கள்ளங்கபடமற்ற மனத்துடன் பட்டணத்துப் பெண்ணுக்கு நாட்டுப் பழங்களில் உள்ள ஆசையை முற்றதாகத் தீர்க்க அப்படிச் செய்தான். 

‘ரொம்ப தாங்ஸ்’ அவள் உதடுகள் பின்னிப் பிணைந்து கொண்டன. அவனுக்கு மிகவும் வெட்கமாய்ப் போய்விட்டது. வாழ்க்கையில் முதன் முறையாக இப்படி யான ஒரு சூழ்நிலையில் ஒரு பெண் அன்று கூறியது அவனுக்குப் புதிய அனுபவமாகவே இருந்தது. அதனால் அவன் மிகுந்த நாணத்துடன் ‘ பரவாயில்லை’ என்று கூறிவிட்டு மிகவும் விரைவாகச் சென்றுவிடத் திரும்பினான். அவள் அணிந்திருந்த இறுகிய மேற்சட்டை அவனை என்னவோ செய்தது. அதனால் அவ்விடத்தில் இருந்து தப்பிவிட எத்தனித்தான் அவன். 

உங்க ஸோங் எனக்கு மிகவும் பிடித்தது. உங்க ஸோங்ஸ் எல்லாவற்றையும் வீட்டில் இருந்தபடியே கேட்டு ரசிப்பேன். அதிலும் நீங்க இப்ப கொஞ்சம் முதல்ல பாடினீங்களே ‘எங்கே நீயோ, அங்கே நானும் உன்னோடு அந்தப் பாடல் என்றால் எனக்கு உயிர்’ அவள் வார்த்தைகள் அவனைத் தடை செய்கின்றன. அவன் திரும்பு கிறான். அவள் பேசிமுடித்துவிட்டு அவனையே கண் கொட்டாமல் பார்க்கிறாள். 

தன்னை ஏதோ ஒரு பிரபல பின்னணிப் பாடகராக மதித்துத் தனக்கு நற்சான்று வழங்கிய அவளை நன்றியுடன் பார்த்துவிட்டு மறுவார்த்தை இன்றியே அப்பாற் சென்றான் ரகு. அவன் உள்ளத்தில் இனங்கண்டு கொள்ள முடியாத இன்பக் கிளுகிளுப்பு. அதற்கு எந்தவித அர்த்தமும் புரிந்து கொள்ளமுடியாத அப்பாவியாக அவன் தன் பசுக்களிடம் மீண்டும் சென்றுவிட்டான். அவனைச் சிறிது நேரம் பார்த்து நின்ற உமா தன் வீட்டை நோக்கி நடந்தாள் . 

அடுத்த நாள் அதே நேரம் முதல்நாள் நிகழ்ச்சியை மறந்தவனாய்ப் பழக்கத்திற்கு அடிமைப்பட்ட உதடுகள் ஏதோ சினிமாப்பாட்டை முணு முணுக்க தன் வேலையில் கண்ணுங் கருத்துமாக இருந்தான் ரகு. ‘உங்களைத்தான்’ அன்றும் அதே குயில்தான் கூவியது. இம்முறை அந்த அழைப்பு ரகுவைச் சிந்திக்கத் தூண்டியது. 

நேற்றைய நிகழ்ச்சி தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்குமென்று நினைத்து அதை அறவே மறக்க முயற்சித்த அவனுக்கு இன்றைய நிகழ்ச்சி தனது தவற்றை எடுத்து உணர்த்தக் கூடியதாக அமைந்தது. அந்தக் குரல் அவன் உள்ளத்தில் எழுந்த ஓராயிரம் உணர்ச்சிக் கொந்தளிப்பு களுக்குத் தூபமிட்டது. அதன் பிரதிபலிப்புத் தன் இரு விழிகளிலும் பரிமளிக்க அவன் இப்போது அங்கு நின்ற படியே அவளைத் திரும்பிப் பார்த்தான். உங்களுக்கு இன்னும் கொய்யாக் கனி வேண்டுமா….? என்று கேட்பது போல் இருந்தது அந்தப் பார்வை. 

இப்படிக்கொஞ்சம் வருவீர்களா . . . .? அவள் தான் குழைவாக அழைத்தாள். அந்த அழைப்பில் ஒரு கொஞ்சல் இழையோடியது. இன்றும் அவள் அதே விதமான புதிய உடையுடன் காட்சியளித்தாள். அதனால் சிறிது தயங்கி னான். இன்று மட்டும் சிறிது மனம்விட்டுப் பேச முடிந்தால் இனிமேல் அவளை இந்த உடையில் காண விருப்பமில்லை என்று கூறிவிடவேண்டும் என்று எண்ணியபடியே அவள் முன் சென்று நின்றான். 

அதோ..அந்தக் கொப்பில் ஒரு நல்ல பழம் இருக்கிறது. பறிச்சுக் கொடுப்பீர்களா….?’ அவள் பேசிய கொச்சைத் தமிழிலும் ஒரு இனிமை இருப்பதை அவன் உணர்ந்துகொண்டான். அந்தக் குரலில் உரிமை தொனித்தது. அதனால் மௌனமாக ஒரு புன்முறுவலுடன் அதைப் பறித்து அவளிடம் நீட்டினான் அவன். 

அவள் அதைப் பெற்றுக்கொண்டு ‘தாங்ஸ்’ என்றாள். அவன் சிரிப்புடன் அதை ஏற்றுக்கொண்டான். நீங்கள் நேற்றுப் பாடினீர்களே அந்தப் பாட்டு அதை இன்னுமொருமுறை கேட்க வேண்டும் போல இருக்கிறது. ஐ சிம்பிளி லவ் இற்…!’ அவள் குழந்தை போலப் பேசியது அவனுக்கு மிகவும் பிடித்தது. அவன் அந்தக் குழந்தையைச் சிரித்து சமாளிக்கும் ஒரு அன்புத் தாயைப் போலப் பார்த்துச் சிரித்துவிட்டு உள்ளே சென்றான். அடுத்த சில நிமிடங்களில் ஒளிபரப்பியில் இருந்து எழுவது போல ஒலித்தது அவன் குரல். 

பாட்டு முடிந்தது. அவன் வேண்டுமென்றே எழுந்து கொல்லைப்புறம் சென்றான். அவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. ஆமாம்; அங்கே வேலி ஓரமாகக் கொய்யாப் பழம் பறிக்கும் சாட்டில் அவள் நின்றாள். அவனைக் கண்டதும் கருமுகிலில் இருந்து வெளிப்படும் பூரணச் சந் திரனைப் போல அவளது அழகிய முகமும் அந்த எல்லைப் ரொம்ப காட்சியளித்தது. புற வேலிக்கு மேலாகக் தாங்ஸ் இன்று உங்கள் ஸோங் எக்சலண்ட் கூறிக் கொண்டே அவள் ஓடி மறைந்துவிட்டாள். அவன் பதிலுக் குச் சிரித்துக்கொண்டான். அந்தச் சிரிப்பு அவன் மனநிறைவைக் காட்டியது. 

இப்படியாக ஆரம்பித்ததுதான் அவர்கள் நட்பு. அந்த நட்பின் ஆழத்தால் உமா இப்போதெல்லாம் மேல் நாட்டுப் பாணியில் உடை அணிவதே இல்லை. ரகுவுக்குப் பிடித்தமான முறையில் கைவைத்து, முழங்கால்வரை மூடக் கூடிய சட்டை அணிந்து, தலையை ஒழுங்காகச் சீவிப் பொட்டுமிட்டுக்கொள்வாள், தமிழ் கூடச் செந்தமிழாக. மாறியதைக் கண்டு ரகுவே பூரித்துப் போனான்.

– தொடரும்…

– எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு… (நாவல்), முதற் பதிப்பு: 1993, காந்தளகம், மறவன் புலவு, சாவகச்சேரி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *