வெளுப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 19,048 
 

குளிர்கால இரவின் நிலவொளியில், வீட்டுத் திண்ணையின் மீது உட்கார்ந்திருந்தான் பூபாலன். காலையில் நடந்தவை மசமசவென்று கண் முன்னால் தோன்றி ஆத்திரத்தையும் துக்கத்தையும் கொடுத்தன. குளிர்காற்று வீசத் துவங்க, நைந்து பழசாகியிருந்த துப்பட்டியை இழுத்து இறங்கப் போர்த்திக்கொண்டான்.

தூக்கம் வரவில்லை. ஒரு முடிவெடுக்க முடியாமல் தவித்தது மனம். அவன் எதிரில் இப்போது இரு முடிவுகள் இருந்தன. வத்சலாவைக் கூட்டிக்கொண்டு ஊரைவிட்டுப் போய்விடுவது; அல்லது பெரியபட்டிக்குப் போய்த் திருடுவது.

இந்த ஊரின் எவ்வளவு அழுக்குகளை அந்தக் கைகள் துவைத்திருக்கும்? படிப்பை விட்டு, கழுதைகளின் பின்னால் அழுக்கு மூட்டைகளைச் சுமந்து நடக்கத் தொடங்கிய காலத்திலிருந்து அவன் கால்கள் ஏறாத வீடு எது? அவன் துவைத்த ஆடையை ஒருவர் உடுத்தியிருக்கக் கண்டானா னால் பூபாலனின் மனது கிடை யாட்டுக் குட்டியைப் போல் துள்ளிக் குதிக்கும். அம்மனிதருக்கு மிக நெருக்கமாகத் தன்னை உணர்வான். இன்று காலையோடு அந்த உணர்வு கடந்துவிட்டது.

அந்த வியாழக் கிழமையும் வழக்கம்போல பூபாலன் வெளுப்புச் சாமான்களைத் தேடிக்கொண்டு இருந்தான். கை வெளுப்புக்கென்று இருப்பவற்றை அடித்து முடித்த பிறகு சாயங்காலமாகத் துணி வேகப் போட வேண்டும். நாசூக்காய் வெளுப்பதற்கென்று சில உருப்படிகள் இருக்கும். சூரியன் மாரளவு வருவதற்குள்ளாகவே வேலையில் இறங்கிவிட வேண்டும். எல்லாத் துணிகளையும் வெளுத்து முடிப்பதற்குள் பொழுது முதுகுப் பக்கம் வந்துவிடும். வெள்ளைத் துணிகள் சிலதையும், கடும் அழுக்குத் துணிகளையும் வத்சலா தனியே பிரித்து சுருணை கட்டிவைத்திருப்பாள். அவற்றைச் சோடா தண்ணீரில் ஊறப்போட்டு வாய்க் கட்ட வேண்டும். வேகவைத்ததை அப்படியே தம் விட்டு காலையில் எடுத்து அடித்துப் போட வேண்டும். உடனே பெட்டிகளோடும் வேலை தொடங்கிவிடும். வத்சலா அரிஅரியாகத் துணிகளைப் பிரித்து அடுக்கி வீடு வீடாகக் கொண்டுபோய்த் தந்துவிட்டு வருவாள். இப்படியே அடுத்த புதன் வந்துவிடும்.

பூபாலன் சோப்புத் துண்டுகளையும், சலவைத் தூளையும் மட்டத் திண்ணையில் கொண்டுவந்து வைத்துவிட்டு, ஓரமாகச் சுவரை அண்டியிருந்த கரி மூட்டையைப் போய் குலுக்கிப் பார்த்தான். ”பூபாலு! வெளுப்புக்கு பெறப்புட்டியா? உன்ன ஊர் ரெட்டி கூட்டனுப்பினாருடா. ஒரு எட்டு ஓடியாந்துப் போ.”

அவன் இருந்த நிலைக்கு உள்ளுக்குள் எரிச்சல் கிளம்பியது. ”என்னவாம்?” என்றான்.

”அதென்னாவோ தெரீலப்பா.” அதற்கு மேல் கோல்காரன் அங்கு நிற்கவில்லை. பூபாலன் அவன் பின்னாலேயே விறைப்பாகக் கடந்து போனான். அவனால் எதையும் அனுமானிக்கக்கூடவில்லை.

”வணக்கம் ரெட்டியாரே” பூபாலன் முன்னோக்கி லேசாக வளைந்தபடி நின்றான். ஊர் ரெட்டியாரின் வெற்றுடம்பில் இறுக்கிப் பிடித்திருந்த முண்டா பனியனின் மீது ஒரு கணம் பூபாலனின் கண்கள் போய் வந்தன. அவருக்குப் பக்கத்திலேயே பொன்னப்பன் உட்கார்ந்திருந்தான். அவன் ரெட்டியாரின் நெருங்கிய சொந்தம்.

”என்னடா, வெளுப்புக்குப் போயிட்டியா?”

”இல்லீங்க. இனிமேல்ட்டுதான்.”

”செரி! நம்ம பொன்னப்பன் சம்சாரம் பொடவ எதானா வெளுக் கப் போட்டுக்கீதா?”

”ஆமாங்க ரெட்டியாரே.”

”அதுல நகை எதானா பாத்தியா? முடிச்சிப்போட்டு வெச்சிருந்ததாம். வூடு முழுக்கத் தேடிடுச்சாம். பொடவையில முடிச்சிப் போட்டதாத்தான் சொல்லுது. அப்பிடி எதானா நகை கெடச்சிருந்தா குடுத்துடுடா. ஒரு பவுனில்ல, ரெண்டு பவுனில்லடா… அஞ்சு பவுனாம்டா!”

இடி இறங்கியது போலிருந்தது. மிரள மிரள அங்கிருப்பவர்களைப் பார்த்தான் பூபாலன்.

”அது வெளுப்புக்குப் போட்ட பொடவையிலதான் போயிருக்கணும். எங்க வூட்டுல அதத்தாங்க சொல்லுது!” – பொன்னப்பன் உறுதியான குரலில் சொன்னதும் மேலும் நடுங்கினான் பூபாலன்.

”ஐயையோ…. அப்பிடிச் சொல்லிடாதீங்க. ஊரு சனம் போடுற துணியில ஒரு தம்பிடி வந்துட்டுருந்தாலும் குடுத்துப்புடுவன் நான். அது உங்க எல்லாருக்குமே தெரியும். அஞ்சு பவுன் காணாம போச்சின்றீங்க… அப்பிடியே வந்திருந்தா நா சும்மாயிருப்பனா… அப்பிடி எதுவுமே வரல ரெட்டியாரே… ஐயோ! அஞ்சு பவுனு… நான் என்னா பண்ணுவன்?”

பூபாலன் புலம்பத் தொடங்கினான். திருதிருவென்று வெக்கை ஏறி, இளங்காலை வெயில் எரிக்கத் தொடங்கியது.

”டேய், பொலம்பாதடா! போயி உம் பொண்டாட்டிய இட்டா.”

ரெட்டியார் சொல்லி முடிக்கும் முன்பாகவே வீட்டைப் பார்த்து ஓடினான். சிட்டிகை நேரத்துக்கெல்லாம் இருவரும் வந்து சேர்ந்துவிட்டார்கள். வத்சலா தலைவிரி கோலமாக, மார்பில் அடித்துக்கொண்டு அழத் தொடங்கிவிட்டாள். ஊர் சனங்களில் கொஞ்சம் பேர் அங்கு வந்து வேடிக்கை பார்த்தனர்.

”ஏய்… இந்தா பொம்பள… சும்மாரு!” – ரெட்டியார் வலுவாகக் கத்தினார்.

”டேய் பூபாலு, பொன்னப்பன் சம்சாரம் முந்தாநேத்து கல்யாணத்துக்குப் போயி வந்து பொடவையெ அவுத்து நகையையும் அதுலயே முடி போட்டு வெச்சிக்கீது. நேத்து உம் பொண்டாட்டி அழுக்கு எடுக்கப் போனப்போ அப்பிடியே எடுத்துப் போட்டுடுச்சி. உன்னைப்பத்தி நல்லா தெரியும்தான்டா. அஞ்சு சவரம் சரப்பணிடா. ஆச யார விட்டது? நல்லா யோசன பண்ணிச் சொல்லு. இல்லண்ணா பஞ்சாயத்து, அபராதம், கேசுன்னு போக வேண்டியிருக்கும்.”

வீட்டுக்கு வந்த பிறகு எல்லாவற்றையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டு சாயங்காலம் வரைக்கும் உண்ணாமல்கொள்ளாமல் இருந்தாள் வத்சலா. பொழுதிறங்கத்தான் வீட்டுக்கு வந்தான் பூபாலன். நினைவின் வெம்மையும் மீறி குளிர் உறைத்தது.

”உன்னுமா முழிச்சினு கீற. வந்து படு” என்றாள் வத்சலா.

வத்சலாவின் குரலை கைப்பிடித்துப் போய் படுத்தவன், அதற்கு மேலும் தூக்கம் பிடிக்காமல் முகட்டுவளையைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

இருட்டு மேலேயே பெரியபட்டிக்குக் கிளம்பிவிட்டான் பூபாலன். எதிரில் வருபவரின் முகம் தெரியாத மையிருட்டு. இரவு முழுக்கப் பூபாலனின் கண் இரப்பைகள் சிறிது நேரம் மூடவில்லை. ஊர் ரெட்டியின் தீர்ப்பைப் பற்றி அவனுக்குத் தெரியும். பேச்சுக்குக் கட்டுப்படாத கீழத் தெரு தனபாலை கச்சேரியில் பிடித்துக் கொடுத்ததும் நடந்திருக்கிறது. தனபால் இன்னும் வேலூர் ஜெயிலில் இருக்கிறான். பூபாலன் கற்பூரத்தின் மேல் அடிப்பதாக, கோயிலில் சத்தியம் செய்வதாக சொல்லிப் பார்த்ததெல்லாம் எடுபடவில்லை. தூங்காமல் புரண்டுகொண்டு இருந்தபோது, அருகில் இருந்த வத்சலாவின் மீதுகூட ஒரு கணம் சந்தேகம் வந்துபோனது. ஊராரின் உள்ளழுக்கை வெளுக்க முடியவில்லையே என ஆதங்கம் தோன்றியது. பிறகுதான், பெரியபட்டிக்குச் சென்று இரண்டு கழுதைகளைத் திருடி, பக்கத்தூரில் எங்காவது ஓட்டிச் சென்று விற்றுவிடலாம் என்று தீர்மானித்துக்கொண்டான். கிடைக்கும் பணத்தை ரெட்டியிடம் தந்துவிட்டு, வத்சலா வைக் கூட்டிக்கொண்டு ஊரைவிட்டுப் போய்விட வேண்டும் என்றும் முடிவெடுத்துக் கொண்டான்.

பூபாலிடம் இருந்த இரண்டு கழுதைகளுள் ஒன்று பாம்பு கடித்துச் செத்தது. போன வாரம்தான் இன்னொரு கழுதைக்கு வெறி பிடித்து, ரத்தம் வடிய வடிய தன் கால்களை கடித்து இழுப்பதைப் பார்த்தான். வேறு வழியில்லையென்று ஒட்டந்தழை அரைத்து ஊற்றி அந்தக் கழுதையைக் கொன்றான் பூபாலன்.

பெரியபட்டியில் நிறையக் கழுதைகள் உலாத்துவதை ஒவ்வொரு முறை அங்கு வரும்போதும் பார்த்திருக்கிறான் பூபாலன். அந்த ஊரில் இருக்கும் வெளுப்பவர்கள் ஆளுக்கு ஐந்து கழுதைகளை வைத்திருப்பார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்வான்.

பூபாலன் பெரியபட்டிக்குள் நுழைந்தபோது காலை சாம்பல் பூத்திருந்தது. வழியில் சில கழுதைகள் இருப்பதைப் பார்த்தான். அவற்றில் சில கோவேறு கழுதைகளும் இருந்தன. கழுதைகளைப் பார்த்ததும் அவனுக்குள்ளே பரபரப்பு தொற்றிக்கொண்டது. நடையை எட்டிப் போட்டான். ராமச்சந்திரா டாக்கீஸைத் தாண்டினால் வரும் மைதானத்தில் கொஞ்சம் கழுதைகளைக் கட்டி வைத்திருப்பதாகச் சொல்லியிருந்தார்கள். அந்த ஊர்க் காரர் யாரோ ஒருவர் ஆந்திரா பக்கம் போய் 10 கழுதை களை ஒன்றரை லட்சத்துக்கு விலை கொடுத்து வாங்கி வந்திருப்பதாகவும் கேள்விப்பட்டிருந்தான். 10 கழுதை களின் விலை ஒன்றரை லட்சமா என மலைப்பாக இருந்தது அவனுக்கு.

டாக்கீஸைத் தாண்டியதும், மனசு வேகமாக அடித்துக்கொண்டது. மைதானத்தை நெருங்கும்போதே கழுதைகள் தெரிந்தன. போன வேகத்திலேயே கையில் ஒரு குச்சியைத் தேடி எடுத்துக்கொண்டு இரண்டு கழுதைகளை சேர்த்து ஓட்டத் தொடங்கினான் பூபாலன். ஆட்டிடையர்கள் மந்தையை மேய்க்கப் பயன்படுத்தும் ஒலிகள் அவனுக்கு அத்துபடி. தன் கழுதைகளை மடக்கிக் கட்டவும் மேய்க்கவும் அவன் அது போலவே தான் ஓசையெழுப்புவான். இந்தக் கழுதைகள் அவன் வாயலிக்குப் பணிந்து, கடும் மூச்சுகளை எழுப்பிக் கொண்டு முன்னால் நடந்தன. ஆம்பூர் சாலையில் கழுதைகளுடன் பூபாலன் நடந்துகொண்டு இருந்தபோது, மாதேப்பள்ளி ஆற்றருகே சிலர் அவனை மடக்கினார்கள். பூபாலன் என்ன ஏதென்று நிதானித்து பார்ப்பதற்குள், வந்தவர்கள் அவனை வளைத்துக்கொண்டு உதைக்கத் தொடங்கினார்கள்.

வாசற்படியில் அமர்ந்து பூபாலனை எதிர்நோக்கி அழுதுகொண்டு இருந்தாள் வத்சலா. காலையில் போனவனை பொழுது அமரவும் காணவில்லை என்றதும் நடுக்கம் கூடிவிட்டது. நேற்று நடந்த வயிற்றெரிச்சலில் எல்லாமே போட்டது போட்டபடிதான் இருக்கின்றன. மனசைத் தேற்றிக்கொண்டு இன்று அதிகாலமே ஆற்றுக்குப் போயிருப்பான் என்றுதான் நினைத்தாள். ஆனால், வெயில் ஏறவும் அவன் வீட்டுக்கு வரவில்லை. யாரிடமும் விசாரிக்கவும் தோன்றவில்லை. ரெட்டியார் அழைத்து விசாரித்த விஷயம் ஊர் முழுக்கவும் பரவியிருக்கும் என்று வத்சலாவுக்குத் தெரியும். குடிசைக்குள்ளாகவே கிடந்தாள். பூபாலனும் இல்லாதது அவளுக்கு மேலும் துக்கத்தை அதிகப்படுத்தியது. பெருங்குரலெடுத்து அழத் தொடங்கியவளை வயசாளிகள் சிலர் வந்து ஓயப்படுத்திப் போனார்கள்.

இருட்டுப் பொழுதுக்கு வந்து சேர்ந் தான் பூபாலன். ஆளரவமில்லாமல் மெதுவாக வந்து திண்ணையில் உட்கார்ந்தவனைப் பார்த்ததும் துள்ளத் துடிக்க எழுந்து கிட்டத்தில் போனாள் வத்சலா.

”என்னா ஏதுன்னு சொல்லாமக்கூடப் போயிடறதா?” அவன் கையைப் பிடித்துக்கொண்டு பொய்க் கோபம் காட்டியபடி அருகில் உட்கார்ந்தாள். பூபாலன் சுரத்தில்லாமல் இருந்தான். அவனை அணுகிப் பார்த்தவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவன் முகத் தில் இரண்டு மூன்று இடங்களில் கன்றிப் போயிருந்தது. கை கால்களில் சில இடங்களில் சிராய்ப்புகள் தெரிந் தன.

”என்னாய்யா இது? என்னா?”

அவளின் பதற்றமும் கேள்வியும் அவனுள்ளே அழுகையை உந்தித் தள்ளின.

”ஒண்ணுல்ல. ஒரு வேலயா பெரியபட்டி போயிட்டேன். வண்டியில வந்த ஒருத்தன் இடிச்சித் தள்ளிட்டான்.”

”வழிமேல கெவனம் வெச்சி நடக்கக் கூடாதா? நமக்குத்தான் நேரங் கெட்டுக் கெடக்குதே…”

நெஞ்சு மேல் கை வைத்தபடி புலம்பத் தொடங்கிய வத்சலாவை எப்படி அமைதிப்படுத்துவது என்று தெரியவில்லை. சாப்பிட ஏதாவது வேண்டும் என்று கேட்டு அவளைக் கிளப்பினான்.

காலையில் அவன் மீண்டதே பெரிய விஷயமாகிவிட்டது. அவனை மடக்கி அடித்தவர்கள் எல்லாருமே பெரியபட்டிக்காரர்கள்தான். மைதானத்தில் கழுதைகளுக்குக் காவல் இருந்தவன்தான் அவர்களைக் கூட்டிக்கொண்டு, அவனைத் துரத்தி வந்திருக்கிறான். அடித்தவர்களில் ஒருவனுக்கு பூபாலனை நன்றாகத் தெரிந்திருக்கவே தப்ப முடிந்தது. அந்த ஆளிடம் இவன் எல்லாவற்றையும் சொல்லி முறைப்பாடு வைக்கவே போய்த் தொலை என்று விட்டுவிட்டார்கள். கீழே விழுந்து புரண்டதில் கை கால்களில் சிராய்ப்பு. முகத்தில் விழுந்த அடிகளில் அங்கங்கே நெருப்பு பட்டது போல எரிந்தது. ஊரைவிட்டுப் போகப் போவதென்றால் பேசாமல் வத்சலாவைக் கூட்டிக்கொண்டு யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டிருக்கலாம். இப்படிச் செய்திருக்கத் தேவையில்லை. அதிர்ச்சியில் மனம் பேதலித்துவிட்டதோ என்று நினைத்தான்.

பூபாலன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது வத்சலா மனம் பொருமிக் கொண்டு அதைச் சொன்னாள். ”நீயி எதையும் போட்டுக் கொளப்பிக்கினு இப்பிடிக் கெடக்காத. தலைக்கி வந்தது தலைப்பாவோட போச்சின்டு நெனச்சுக்க. அந்த நாறமுண்ட நகையெ எங்கியோ வெச்சிட்டு நம்ம மேல சொல்லிக்கீறா. அந்த நகை ஊட்டுலயே இருந்துச்சாம். நீ வர்றதுக்கு செத்த முன்னாடிதான் கோல்காரன் வந்து சொல்லிட்டுப் போனான்.”

சாப்பிடுவதை நிறுத்திவிட்டுப் பொங்கும் சிரிப்புடன் வத்சலாவைப் பார்த்த பூபாலன், சிவுக்கென்று தன்னை உணர்ந்தான். திடீரென்று எதுவுமே நடக்காதது போலத் தோன்றியது. பொன்னப்பனின் மனைவியை நினைத்து ஆத்திரமாக ஒரு சாப்பனையை எடுத்துவிட்டான்.

”அய்யா… தூ..! பேசாமச் சாப்புடு” என்றாள் வத்சலா அடக்க மாட்டாமல் சிரித்துக்கொண்டே.

மறுநாள் காலையிலேயே துவைப்பு வேலையைத் தொடங்கிவிட்டார்கள் இருவரும். இரண்டு நாள் பிந்திவிட்டதே பல வருடங்கள் ஓடிவிட்டது போலத் தோன்றியது. ஊரைவிட்டுப் போய்விடுவதைப் பற்றியே யோசனை செய்துகொண்டு வேலையில் கிடந்தவனைக் கூப்பிட்டு அதைக் காட்டினாள் வத்சலா.

”இதுதாய்யா அந்தப் பொய்க்காரியோட பொடவ.”

ஆத்திரத்தோடு வந்து வத்சலாவின் கையிலிருந்து அதைப் பிடுங்கிச் சென்றவன், தாறுமாறாக அடித்துக் கும்மினான். அந்தப் புடவையை அடித்துப் பிழிந்தவனுக்கு ஓடைக் கரையின் ஒரு பக்கமாக வெகு தூரத் துக்குப் படர்ந்திருந்த காஞ்சொறிச் செடிகள் கண்ணில் பட்டன. அச் செடிகளின் சாம்பல் நிற இலைகளில் சொணை முட்கள் நுண்மையாக விறைத்துக்கொண்டு நின்றன. வேகமாகச் சென்று, அப்புடவையை காஞ்சொறி செடிகளின் மீது போர்த்திப் படரவிட்டான் பூபாலன்.

”உனக்கு எதானா புத்தி கித்தி கெட்டுப்போச்சா? அந்தப் பொம்பள ஒடம்பெல்லாம் சொணமுள்ளு குத்திக் கிழிச்சிப்புடுமே… நமைச்சலும் எரிச்சலும் உண்டாவுமே!” என்று ஓடி வந்த வத்சலாவை அவன் சட்டை செய்யவில்லை. புடவையை உலர்த்திவிட்டுத் திரும்பும்போது, அங்கும் இங்குமாக நெளிந்தும் வளைந்தும் சொறிந்து விட்டுக்கொண்டு, விழுந்து விழுந்து சிரித்தான். வத்சலாவும் அவனோடு சேர்ந்து சிரித்தாள். ஓடைக்கரையில் வெகு நேரத்துக்கு கேட்டபடியிருந்தது அவர்களின் சிரிப்பொலி!

– 06-05-09

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *