எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 1, 2024
பார்வையிட்டோர்: 7,268 
 
 

(1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-25

22ஆம் அத்தியாயம் 

பூஜை வேளையில் கரடி புகுந்தது போல ஜெகநாதன் அங்கு நுழைந்ததைக் கண்ட இருவரும் அதிர்ச்சியுற்றனர். சுலபமாகத் தான் வந்த காரியம் முடியப் போவதை எண்ணி ரகுவுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலுங் கூட அச் சந்திப்பு பிழை யான சந்தர்ப்பத்தில் ஏற்பட்டதால் அவன் வருந்தினான். ஏற்கெனவே துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் உமாவுக் குத் தன்னால் இப்படியொரு நிலை உண்டாகியதை எண் ணத்தான் அவன் துன்பமும் அதிகரித்தது. 

‘என்ன உமா உன்ர காதலன் கடைசியில உன்னை அழைத்துப்போக வந்துவிட்டானா ….பரவாயில்லையே . . இருந்தாலும் அவன் நல்லவன்தான் உன்னை மறக்காமல் இத்தனை காலத்துக்குப் பின்னர் கூட உன்னை அழைத்துப் போக வந்துவிட்டானல்லவா. போ…ம்… போ உமா காதலனோடு நீ போ.’ கூறிவிட்டுக் குடிவெறியில் ஜெகநாதன் ஒரு பெண்ணைப் போல் கதறியழுதபோது ரகு. மட்டுமல்லாமல் அவனுடன் இத்தனை வருடமும் பழகிய உமாவே திடுக்கிட்டாள். உலகப் பிரளயமொன்றே நடக்கப் போகிறதென எதிர்பார்த்த உமாவுக்கு அவன் செயலும் பேச்சும் புதுமையாக மட்டுமல்லாமல் ஆச்சரியமாகவும் இருந்தது. 

‘ச்….ச்சு……ச் நீங்கள் இப்படி அழக்கூடாது. ஆண் பிள்ளைகள் அழுவது அழகல்ல. நீங்கள் என்னென் னவோ எல்லாம் வீணாகக் கற்பனை செய்துகொண்டு மனதை அலட்டிக் கொள்கிறீர்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி வைக்கவிரும்புகிறேன். அதாவது உமா உங்கள் மனைவியன்றோ அவள் இங்குதான் இருக்கிறாள் என்றோ சில நிமிடங்களுக்கு முன்வரை எனக்குத் தெரியாது. நான் வந்த காரணமே வேறு. ஆயினும் ஒரு உண்மையை மட்டும் உங்களிடம் இருந்தும் நான் மறுக்கவோ மறைக்கவோ விரும்பவில்லை. உண்மை எப்போதுமே கசப்பானதுதான் என்றாலும் அந்தக்கசப்பி னாற் கூட குணமுன்டென்று ஒரேயொரு காரணத்திற்காக நான் அதை உங்களுக்குக் கூறி வைக்க விரும்புகிறேன். 

ஆமாம் நீங்கள் கூறியது போல உமாவும் நானும் காதலித்தது என்னவோ உண்மைதான். உலகத்தில் இப்படி எத்தனையோ தவறுகளும் இதைவிடப் பாரதூரமான தவறு களுங்கூட நடந்து விடுகின்றன. அவற்றில் சில எப்படியோ உலகத்தின் கண்களுக்குப் புலப்பட்டுவிட இன்னும் சில இரண்டாம் பேருக்குத் தெரியாமலே மாண்டு மடிந்துவிடுகின்றன. அதை அவரவர்கள் அதிர்ஷ்டம் என்று வேண்டு மானாலும் அழைக்கலாம். அல்லது விவேகம் என்று வேண்டுமானாலுங் கூறலாம். இந்த ஒரு தவற்றைவிட நாங்கள் இருவரும் வேறெந்தக் குற்றமும் செய்யவில்லை. உமாவுக்குத் திருமணமாகிவிட்டது என்பதை அறிந்த பின் நான் அவளை மறப்பதற்காக எவ்வளவோ முயற்சித்தேன். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு சில சந்தர்ப்பங்களை மறப்பது சிரமம். ஏன் மறக்க முடியாது என்று கூடக் கூறலாம். நானும் மறக்க முயற்சித்தேனே தவிர என்னால் மறக்க முடியவில்லை. அதனால் உமாவைப்பற்றிய நினைவு எழும்போதெல்லாம் அதை வலோத்காரமாக என் மனதைவிட்டு அகற்ற முயன்றேன். 

என் முயற்சிக்குச் சாதகமாக என் வாழ்க்கையிலும் ஒரு சில திருப்பங்கள் ஏற்பட்டன. அத்திருப்பங்களின் மூலம் சில புதிய உறவுகளைத் தேடிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கேற்பட்டது. அந்த உறவின் மூலம் எனக்குக் கிடைத்த உடன் பிறவாத தங்கையொருத்திக்கு வாழ்வு தேடி வந்தவன் தான். நான் வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக உமாவை யும் சந்திக்க நேர்ந்து விட்டது. இவ்வளவுதான் நடந்தது. இதுதான் உண்மையுங் கூட என்று ஜெகநாதனை ஆசுவாசப் படுத்த முயன்றான் ரகு. 

குடிபோதையின் மத்தியிலும் ரகு கூறியவற்றையெல் லாம் இடை மறிக்காமல் அமைதியாகக் கேட்ட ஜெகநாதன் அகோரமாகச் சிரித்தான். சிரித்து ஓய்ந்ததும் “நீ நல்ல கெட்டிக்காரன் இல்லையா…. நல்லாக் கதையளக்கப் பழகி. யிருக்கிறாய். நான் பேயன் . . . . குடிவெறியில் என்னால் எதையும் புரிந்து கொள்ள முடியாது என்று நினைக்கிறா யாக்கும்… என்று சொல்லிவிட்டு அவன் மீண்டும் பலமாகச் சிரிக்க முற்பட்டபோது அது வாந்தியாகத்தான் வெளிவந்தது. 

அதற்கு மேல் எதைச் சொல்லியும் அவனைச் சமா தானப்படுத்த முடியாது என நினைத்த ரகு அன்று அவ்வள வோடு அந்த இடத்தை விட்டுப் போவதுதான் நல்லது என எண்ணியவனாய்த் திரும்பிச் செல்ல எத்தனித்த போது ‘டேய் ‘ என்று ஜெகநாதன் அவனைத் தடுத்து நிறுத்தி னான். நீ தனியாகப் போகாதே…உன் காதலியை யும் அழைத்துக் கொண்டு போ…ம்… அவளையுங் கூட்டிச் செல்’ என்று சத்தம் போட்டபடி உமாவின் கையைப் பிடித்துக் கொற கொற என இழுத்து அவன் அருகில் தள்ளிவிட்டான். அவன் தள்ளிய வேகத்தில் அவனது உடம்போடு உராசியபடி மோதுண்ட அவளை ரகு கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டான். பல வருடங் களுக்குப் பின் அவளைப் பற்றியதில் அவன் உணர்ச்சி சிலிர்த்தெழுந்தபோது அது அவன் உடலெங்கும் நடுக்கமாகப் பிரவாக மெடுத்தது. 

அவன் பிடியினின்றுந் தன்னை விடுவித்துக் கொண்ட உமா எதுவுமே நடக்காதவள் போல் விலகிச் சென்று நின்றாள்…என்னடி… அவனோடு போக விருப்பமில்லையா…? கள்ளமாகச் சந்தித்துப் பேச இருந்த துணிவு இப்போது எங்கே போய்விட்டது….? உன் காதலனைத் தேடி அவனிடம் உன்னை ஒப்படைப்பதற்காகத் தான் நானும் எவ்வளவோ முயற்சி எடுத்தேன். கடைசியில் இன்றுதான் என்னால் அதைச் செய்ய முடிந்தது. அவனோடேயே போய்விடு. 

தான் காதலித்த ஒருவன் முன்னிலையில் தன் கண வனாலேயே அவமானப்படுத்தப்படுவது உமாவுக்குத் துக்க மாகவும் வெட்கமாகவும் இருந்தது. திருமணமாகிய நாளில் இருந்தே அவள் கேட்டுக் கேட்டுப் புளிச்சுப்போன பேச்சுத் தான் என்றாலும் ரகுவின் முன்னிலையில் அது அவளுக்கு மிகவும் வேதனையா இருந்தது. 

இவ்வளவு நாளுந்தான் பொறுத்தேன், இன்றாவது இரண்டொரு வார்த்தைகள் சுடச் சுடச் சொல்வோம் என எண்ணியவளாய் ‘ நீங்கள் கூறி வந்ததையும் எனக்கு இழைத்த அநீதிகளையும் இதுவரை மௌனமாகத்தான் பொறுத்தேன். ஆனால், எதற்கும் ஒரு எல்லையுண்டு. மனிதன் குடிக்கலாம். ஆனால் அதற்காக நிதானத்தை இழக்கக் கூடாது. ரகுவை நான் காதலித்தது உண்மை. 

எவரும் திருமணமாவதற்கு முன்பு இப்படியான பல தவறு களை இழைக்கத்தான் செய்கிறார்கள். நான் இழைத்த. தவற்றையும் உங்களிடம் கூறி மன்னிப்புக் கேட்கத்தான் இருந்தேன். ஆனால் திருமணமாகிய முதலிரவின் போதே. உங்கள் பேச்சைக் கேட்ட பின் எனது விளக்கத்திற்கு அவசிய மில்லை என்று தான் இத்தனை நாளும் மௌனமாக. இருந்தேன். ஆனால் இப்போது எங்கள் இருவர் மீதும் நீங்கள் சுமத்திய அபாண்டமான பழியைப் பொறுக்க முடி யாமல் தான் இத்தனை காலமாக மூடியிருந்த எனது வாயைத் திறக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

‘ரகு. கூறியது அத்தனையும் இறைவன் சாட்சியமாக உண்மையானவைதான். நீங்கள் கூறியபடி இவருடன் நான் செல்வதாக இருந்திருந்தால் இன்று நேற்றல்ல உங்களைத் திருமணஞ் செய்து கொள்வதற்கு முன்பாகவே சென்றிருப்பேன். உண்மையான களங்கமற்ற அன்புக்கு. உடல் ஒரு பொருட்டல்ல என்பதை நான் அறிவேன். 

இறைவனது ரூபங்கூட எப்படியானது என்று அறி யாமல் இறைபக்தி கொள்ளவில்லையா நாம்? அப்படி ஒரு காலங் கடந்த புனிதமான அன்பு என்ற நினைவோடு நான் ரகுவை மறந்தேன். உங்களைத் திருமணஞ் செய்து நான் பட்ட அடிக்கும் உதைக்கும் பின்னர் கூட ரகுவைப் பற்றி நான் நினைக்கவில்லை. நினைக்க விரும்பவுமில்லை. ஆனால் நீங்கள் ஏதோ எல்லாம் வீணாகக் கற்பனை பண்ணிக்கொண்டு எல்லோரது நிம்மதியையும் கெடுத்து விட்டீர்கள். அதிகம் எதற்கு இன்று கூட ரகுவும் நானும். நினைத்திருந்தால் உங்களை அறியாமல் போயிருக்கலாம். ஆனால் நாங்கள் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்ற. மனப்பான்மையுடையவர்கள் அல்லர். வாழ்க்கையிலும் சில ஒழுங்குகள் கட்டுப்பாடுகள் இருந்தால்தான் வாழ்விலும் ஒரு மணம் வீசும் என்ற உயர்ந்த பண்போடு வாழ் பவர்கள். அதனால் என்னை இல்லை. எங்களை மன்னித்துவிடுங்கள்…’ என்று ஒரு குட்டிப் பிரசங்கமே செய்து முடித்தாள். 

அவளது பேச்சைக் கேட்டு ரகு அப்படியே அதிர்ந்து போனான். பணத்திற்புரண்டு துன்பம் என்பதே இன்னதென அறியாது வளர்ந்த ஒரு பெண்ணுடைய உள்ளரங்கமான வார்த்தைகளா இவை என்று தீர்மானிக்கச் சில நிமிடம் பிடித்தது அவனுக்கு. உலகில் உள்ள பெண்கள் எல் லோருமே இவ்வளவு உயர்ந்த கொள்கையோடு வாழமுடிந் தால் உலகத்தில் அநீதியே இருக்கமுடியாது என எண்ணிப் பெருமைப் பட்டான். தன்னை மறந்த நிலையில் ரகு சிந்தித்துக்கொண்டு இருந்த வேளையில் பளார் என யாரையோ அறையுஞ் சத்தங்கேட்டுத் திரும்பினான். அங்கே உமாவை ஜெகநாதன் பளார் பளார் என அறைந்து கொண்டிருந்தான். 

ஓடிச்சென்று ஜெகநாதனைத் தடுப்பதற்கு இரண்டடி எடுத்து வைத்தவனை ‘வேண்டாம் ரகு… எனக்கு இது பழக்கமாய்விட்டது…’ என்று கூறிய உமாவைப் பார்த்துத் தன் கண்களில் சுரந்த நீரைத் துடைத்துக் கொண்டான். தன் அசுரத்தனத்திற்கு ஒரு முடிவு ஏற்படும் வரை அவளைக் கொன்றுவிடுவது போலறைந்த ஜெகநாதன் மீண்டும் அவளை ரகுவின் பக்கந் தள்ளிவிட்டு அவனுடன் போகும்படி வற்புறுத்தியபோது அவனை எந்த விதமாகவும் சாந்தப் படுத்த முடியாதென்பதை உணர்ந்த உமா ரகுவின் அருகில் மிக நெருங்கி வாருங்கள் ரகு நாம் போகலாம் ‘ என்று அந்தத் துஷ்ட மனித மிருகத்திடம் இருந்து உமாவைக் காப்பதற்காக ரகு முன்னே நடந்து சென்ற அவளைப் பின் தொடர்ந்தான். 

சிறிது நேரம் இருவரும் தெருவில் இறங்கி எங்கோ மறைந்து நின்றுவிட்டு ஜெகநாதனின் சத்தம் அடங்கிய பின் மெதுவாக வளவுக்குள் வந்து செடிமறைவில் நின்று வீட்டுக் குள் அவதானித்துப் பார்த்தபோது ஜெகநாதன் குரட்டை. விடுஞ் சத்தங் கேட்டது. அதன் பின் இருவரும் வீட்டுக்குட் சென்று கதவுகளை எல்லாம் அடைத்து மூடிவிட்டு மின்சார விசையையும் அமுக்கிய போது அந்தவீடு திரும்பவும் இருள் வெள்ளத்தில் மிதந்தது. ஜெகநாதன் உறங்கிக் கொள்ளும் விதத்திலிருந்து இனி விடியும்வரை அவன் எழுந்து கொள்ள மாட்டான் என நிச்சயப்படுத்திக் கொண்ட ரகு உமாவை அறையைப் பூட்டிப்படுத்துக் கொள்ளும்படி கூறிவிட்டுத் தன் வீடு நோக்கிப் புறப்பட்டான். 

அவன் வீட்டு வாயிலை அடையும் போதே குழந்தை: உமாவின் குரல் அவனைத் திகைக்கவைத்தது.. அவன் அழுதுகொண்ட விதத்தில் இருந்து இந்த அழுகை நீண்ட நேரமாகத் தொடர்ந்து நடைபெற்றுள்ளது என்பது அவனுக்குப் புலனாகவே அவன் ஓட்டமும் நடையுமாக, வீட்டுக்குள் நுழைந்து கதவைப் பலமாகத் தட்டினான். கையில் அழும் குழந்தையோடு கதவைத் திறந்த பவானி’ என்னண்ணா வந்து விட்டீர்களா…? ஒருவேளை எங்கேயாவது தங்கிவிட்டீர்களோ என்று யோசித்தேன்.. ஆமாம் படம் எப்படியண்ணா…நீங்கள் போன நேரந். தொடக்கம் இந்தப் பயல் என்னை என்ன பாடு படுத்தி விட்டான் என்று நினைக்கிறீர்கள்…? அப்பப்பா ஒரே அழுகை மாமா…மாமா…என்று என் உயிரையே வாங்கிக்கொள்கிறான்.. இனிமேலாவது இவனது அழுகை ஓய்கின்றதா என்று பார்ப்பம் இந்தாடா உன் மாமா வந்திட்டார்’. என்று பேசிக்கொண்டே குழந்தையை அவனிடம் நீட்ட குழந்தை தாயைக் கண்ட பசுக்கன்று போல அவனிடம் விரைவாகத் தாவிக் கொண்டான்.. 

‘என்ட உமாக்கண்ணு…நீ ஏண்ட அழுதாய்… உன்னைவிட்டுப்போட்டு நான் போவதனாடா….? அழாதடா.. அழாத. ஒரு நீண்ட பெருமூச்சுடன் குழந்தை தன் அழுகையை நிறுத்திவிட்டு ரகுவின் கழுத்தைத். தன் இரண்டு கைகளாலும் கட்டிக்கொண்டு எக்காளமிட்டுச் சிரிக்கத் தொடங்கினான். ‘போக்கிரிப் பயல் இத்தனை நேரமா என்னை என்ன பாடுபடுத்தினான்… ஆமாம்.. நாளைக்கு இந்த மாமா திருமணஞ் செய்து கொண்டு போனப்புறம் இந்தச் சுட்டிப்பயல் என்ன செய்யப் போறான்..? ஆமாம்! படம் எப்படியண்ணா பிடிச்சுதா?’ என்று பவானியே பேச்சைத் தொடர்ந்தாள். 

பதிலுக்கு ரகு சிரித்தான். ‘படமாம்மா.. ரொம்ப நல்லா இருந்தது என் சீவியத்தில் இப்படி ஒரு படத்தை நான் இனிப் பார்க்கவே முடியாது. அவ்வளவு நவரசம் நிறைந்த படம். அதனால்தான் நான் இரண்டாங் காட்சியையும் பார்த்திட்டுப் போகலாம் என்று நினைத்துச் சிறிது தாமதித்தன். இடையில் இந்தச் சுட்டிப் பயலின் நினைவு வந்ததும் நேரா ஓடிவந்திட்டன். நாளைக்கு வசதிப்பட்டா உன்னையும், இந்தச் சுட்டிப்பயலையும் நிச்சயமாகக் கொண்டு போய்க் காட்டிறனம்மா…. நீ பார்த்தால் ரொம்ப மகிழ்ச்சியடைவாய்’. 

‘போங்கண்ணா, இந்தப் பயல் எங்கண்ணா என்னைப் படம் பார்க்க விடப்பேறான் ? அதோட எனக்குக்கூட படம் பார்க்கணும் என்கிற ஆசை ஒரு துளி கூட இல்லை. எல்லாம் இவன் வளர்ந்த பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம்’. 

அதற்குமேல் பேச்சை நீடிக்க விரும்பாத ரகு பவானி யைச் சென்று தூங்கும்படி பணித்தான். அவள் எவ்வளவோ வேண்டியும் அவன் சாப்பிட மறுத்துவிட்டான். அவனால் சாப்பிட முடியவில்லை. குழந்தை உமாவைத் தன் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தபடியே அவன் உலாவிக் கொண் டிருக்கையில் ‘அண்ணா உங்களிடம் ஒன்று சொல்ல மறந்து விட்டேன் உங்களைத் தேடி நிர்மலா வந்திச்சு. நம்ம டாக்டரின் தம்பி அமெரிக்காவில் அவங்க அம்மா பேரில் ஒரு மருத்துவவிடுதி திறந்திருக்காராம். அதில் தாதி வேலை செய்ய இலங்கையில் இருந்து நம்ம டாக்டரை யாரையோ தெரிந்து சிபார்சு பண்ணி அனுப்பும்படி எழுதியிருக்காராம். டாக்டர் நிர்மலா அக்காவைப் போகும்படி கேட்டாராம். அக்காவுக்குப் போகக் கொள்ளை ஆசையாம். ஆனால் அதிட அப்பா அம்மா மறுத்திட்டாங்களாம். நம்ம டாக்டர் ஐயா கூட சில நேரம் அங்கேயே போகலாமாம்’ என்றாள். 

அவள் பேசிய தோரணையில் இருந்து அவள் ஏதோ ஓர் அடிப்படை ஆசையை மனதில் வைத்துக்கொண்டு பேசு வது போலத் தோன்றியது. அதனால் அவள் உள்ளக் கிடக்கையை அறிந்து கொள்ளவேண்டும். என்ற நோக்கத்துடன் “அவளுக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் போல இருக்கு ” என்றான் ரகு. 

‘அண்ணா உங்களிடம் ஒன்று கூறட்டுமா டாக்டர் ஐயாவிடம் கூறி அங்கு எனக்கொரு வேலை வாங்கித் தந்தால் நல்லதல்லவா? என்றாள் பவானி. அவள் பேச்சு ரகுவைச் சிரிக்கத் தூண்டியது. ஆயினும் தன் மனதில் உள்ளதை அவளிடம் மறைத்து அதற்கென்னம்மா டாக் டரிடம் கேட்டால் போயிற்று ! ஏற்கெனவே நான் இங்கு உனக்கொரு நல்லவேலை ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறேன். அதன் முடிவு நாளைக்கு விடிந்தால் தெரியும். அந்த முடிவைப் பார்த்து டாக்டரிடம் சென்று கேட்கிறேனம்மா.. இப்போ நீ போய் நிம்மதியாய்த் தூங்கு’ என்றான் ரகு. 

பவானியின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தை ஒவ் வொன்றும் அவனுக்குப் புத்துயிர் அளிப்பதாக இருந்தன. நிர்மலாவை அவன் வாயார வாழ்த்திக் கொண்டான். அவள் வந்திராவிட்டால் இப்படியான ஒரு மகிழ்ச்சிச் செய் தியை அவன் கடைசிவரை அறிந்திருக்க முடியாதல்லவா? ஜெகநாதனின் வீட்டில் இருந்து வந்த நேரந் தொடக்கம் அவன் மனதில் எழுந்துகொண்டிருந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு ஏற்பட்டதாக நினைந்து ஆறுதலடைந்தான். விடிந் ததும் பவானியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு ஜெகநாதன் வீட்டுக்குப் போவதாக அவன் தீர்மானித் திருந்தான். அந்தத் தீர்மானம் நிறைவேறும் பட்சத்தில் திரும்பவும் உமா அவனுக்கொரு பிரச்சனையாக இருப்பாள் என்பதே அவன் எண்ணமாக இருந்தது. ஜெகநாதன் கூறியது போல அவர்கள் திருமணஞ் செய்து கொள்வது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்பதும் அவனுக்குத் தெரியும். 

அந்த எண்ணத்தை முதலாவதாக அவன் விரும்ப வில்லை. உமா கூட அதை விரும்பமாட்டாள் என்பதை அவன் நிச்சயமாக நம்பினான். உமாவையிட்டு அவன் கவலைப்படுவதற்கு இனி ஒன்றுமில்லை. அவள் வளர்ந்த பெண். படித்தவள். சொத்து சுதந்திரமுடையவள். எப்படியாவது தன் வாழ்நாளைக் கழித்துக் கொள்வாள் என்பதை அவன் உணர்ந்திருந்தான். ஆயின் தன்னால் அவளது வாழ்வு அஸ்தமித்து விடக்கூடாது என்பதே அவன் ஏக்கமாக இருந்தது. பஞ்சும் நெருப்பும் ஒன்றாக இருப் தை எவரும் அனுமதிக்கமாட்டார்கள். அதே நிலையைத் தான் அவனும் கடைப்பிடிக்க முனைந்தான். அவன் எண்ணத்திற்கு இப்போது நிர்மலா கடவுள் போல வந்து கைகொடுத்தாள். திடீர் என எழுந்த ஓர் இன்பக் கிளு. கிளுப்பில் குழந்தையை விரித்திருந்த படுக்கையில் வளர்த்தி விட்டுப் பக்கத்தில் படுத்துக் கொண்டான் ரகு. 

23ஆம் அத்தியாயம் 

மனிதனுக்கு அளவு கடந்த துக்கத்திலும் நித்திரை வராது என்று கூறுவார்கள். ஆயினும் ரகு அன்றிரவே . நன்றாகத் தூங்கினான் என்றுதான் கூற வேண்டும். துக்கத்திற்கும் மகிழ்ச்சிக்கும் அப்பாற்பட்ட ஒரு மன நிம் மதி அவனுக்கு ஏற்பட்டிருந்தது. அதற்குக் காரணம் என்று கூறலாம். பவானியின் இருண்ட வாழ்வில் ஒளியேற்றப் போகிறோம் என்ற எண்ணந்தான் அவனுக்குப் பெரிய நிம் மதியாக இருந்தது. அதே நேரத்தில் உமாவின் வாழ்வைப் பற்றியும் அவன் நினைத்துப் பார்க்காமல் இல்லை. ஆனால் அவளது வாழ்க்கை இனி ஒளிபெறமுடியாதென்ற முடிவிற்கு அவன் வந்திருந்தான். ஜெகநாதன் என்னும் சிறிய மெழுகு வர்த்தியின் ஒளியில் அவளுடைய வாழ்வு ஒளிபெற முடி யாது என்பது அவனுக்குப் புரிந்தது. ஜெகநாதன் உமா இவர்கள் வாழ்க்கையில் பவானியைச் சேர்த்தாலும் சரி, சேர்க்காவிட்டாலும் சரி அவர்களிடையே ஏற்பட்டிருக்கும் விரிசலை எந்த வகையிலும் அடைக்கமுடியாதென்ற துணிவால்தான் அவன் இப்படியொரு முடிவுக்கு வந்தான். 

அடுத்த நாள் விடிந்ததும் விடியாததுமாக அவன் எழுந்திருந்தபோது குழந்தை உமா அவன் பக்கத்தில் எழுந் திருந்து விளையாடிக்கொண்டிருந்தான். ரகு எழுந்ததைக் கண்டதும் குழந்தை கெக்காளமிட்டுச் சிரிக்கத் தொடங்கியது.  அவனை அப்படியே வாரித் தூக்கிய ரகு அவன் முகத்தில் முத்தமாரி பொழிந்தான். டேய் போக்கிரிப் பயலே உன்னைப் பெற்றவனைப் பார்க்கப் போகிறேன் என்றா இவ்வளவு சிரிப்பு ? இன்றோடு என் கடமை முடிந்துவிடும் அப்புறம் நீயாச்சு உன்ர அப்பனாச்சு. ஆனால் ஒன்றடா கண்ணா. உன்ர அப்பன் என்ர உமாவை மறக்க முயற்சித்தாலும் மறக்க முடியாத படிக்கு அவன் பக்கத்தில் நீ இருந்து கொண்டே இருப்பாய். உமா உமா என்று உன்னை அழைக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் உமாவை நீ அவனுக்கு நினைவு படுத்திக்கொண்டே இருப்பாய். நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைப்பதாகக் கூறுவார்கள். அது நம் விடயத்தில் எவ்வளவு தூரம் உண்மையாய் விட்டது பார்த்தாயா? உமாவை உன் மூலம் பார்ப்பதற்காக அவள் பெயரை உனக்குச் சூட்டி என் அன்பெல்லாம் ஒன்றுதிரளச் சேர்த்தழைத்தேன் நான். கடைசியாக அந்த உறவு எங்கே போய் முடியப் போகிறது என்று நினைக்கவே எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. கடவுள் பெரியவரடா…? 

ரகு தன் பாட்டுக்குக் குழந்தையுடன் பேசிக்கொண் டிருந்த போது பவானி அங்கு வந்தாள். வந்தவளிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டுப் பவானி நீ சீக்கிரம் வெளிக் கிட்டுக் கொண்டு குழந்தைக்கும் அலங்காரம் செய். புது மணப் பெண்ணைப்போல இருக்க வேண்டும் உன் அழகு. நாங்கள் இன்று ஒரு புகைப் படம் எடுத்துவிட்டு அப்படியே நான் இரவு கூறிய சினிமாவையும் பார்த்துவிட்டு வருவம் சீக்கிரம் புறப்படு.’ என்று பரபரப்புடன் கூறினான் ரகு. 

பவானிக்குச் சிரிப்புத் தோன்றியது. ‘என்னண்ணா இது …விடிந்ததும் விடியாததுமாக இன்று உங்களுக்கு என்ன வந்துவிட்டதாம். … திடீர் எனப் புறப்படு என்றால்- நாம் என்ன சும்மா இருப்பவர்களா ? வேலை செய்யு மிடத்தில் கூறிக் கொள்ளாமல் போவது அழகில்லையே…! அவர்கள் காத்திருப்பார்கள்’ என்றிழுத்தாள் பவானி. 

‘அதெல்லாம் பிரமாதம் இல்லை பவானி. நீ புறப் படுவதற்கு முன் நானே போய் அவர்களிடம் கூறிவிட்டு நானும் வேலைக்கு வரமுடியாது என்று டாக்டரிடமும் கூறி விட்டு இதோ ஒரு நொடிக்குள் வாறேன். நீ அதற்குள் ரெடியாக இரு. வந்ததும் ஒரு டாக்ஸி அமர்த்திப் போகலாம்…!

ரகு போவதையே பார்த்திருந்த பவானியின் மனதில் பல எண்ணக் குவியல்கள் தோன்றி மறைந்தன. வழக்கமாக அவசரத் தேவைகளுக்கே டாக்ஸி பிடிப்பதனால் ஒவ்வொரு சதமாகக் கணக்குப் பார்க்கும் ரகு படம் எடுக்க டாக்ஸி யில் செல்லப் போவதாகக் கூறியது அவள் சிந்தனையைத் தூண்டியது. ஏதாவது சுவீப்பில் பணம் கிடைத்திருக்குமோ என்று கூடச் சந்தேகப்படத் தொடங்கினாள். ரகு விடம் பழகத் தொடங்கிய இந்தக் குறுகிய காலத்திற்குள் அவனது ஒவ்வொரு சிறு மனக் கருத்துக்களையும் நன்றாக அறிந்து வைத்திருந்தாள் பவானி. உடை நடைக்கே ஒரு சிறிது மதிப்புக் கொடுக்க விரும்பாத அவன் இன்றுமட்டும் அவளை ஒரு புதுமணப்பெண் போல உடுத்து வரும்படி எதற்காகக் கூற வேண்டும். ஒருவேளை குழந்தையையும் தன்னையும் தவிக்கவிட்டுப் போகப் போகிறானோ என்று எண்ணியபோது அவள் உடல் நடுங்கியது. 

டாக்டரின் பங்களாவை வியர்க்க விறுவிறுக்க ரகு. அடைந்தபோது நிர்மலாவைத் தான் அவன் முதல் முதற் சந்தித்தான். விடிந்ததும் விடியாததுமாக ஏது இந்தப் பக்கம் ? குழந்தைக்கு ஏதாவது சுகயீனமா ?. . . . என்று நிர்மலா அவனை வினவியபோது அந்தக் குரலில் இருந்த பிடிப்பை அவனால் அறிந்துகொள்ள முடிந்தது. ஆயினும் அதைத் தான் உணர்ந்து கொண்டதுபோற் காட்டிக் கொள் ளாமல் அப்படி ஒன்றும் இல்லை நிர்மலா நான் வேறு விடயமாக டாக்டரைப் பார்க்க வந்தன். அவர் டிஸ்பென்சரியில் இருக்கிறாரா….? என்று கேட்க அவர் இருக்கிறார் என்பதற்கு அறிகுறியாகத் தன் தலைை மட்டும் அசைத்தாள் நிர்மலா. வந்த காரணத்தைத் தன்னிடம் கூற அவன் விரும்பவில்லை என்பதை அவள் புரிந்து கொண் டாள். அதற்காக அவள் மனம் வேதனைப்பட்ட போதும் வலோற்கார மூலம் அன்பைப் பெறவோ உறவை வளர்த்துக் கொள்ளவோ அவள் விரும்பவில்லை. 

அவனைப்பற்றிய கவலை அற்றவனாக ரகு டாக்டரின் அறையை நோக்கி நடந்தான். குட்மோனிங் டாக்டர் அவனது குரல் மிகவும் பணிவாக ஒலித்த போது டாக்டர் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு குட்மோனிங் ரகு…. என்ன இன்றைக்கு நேரத்தோடே வேலைக்கு வந்துவிட்டாய்…… என்ன விடயம்… ? என்று கேலியாகக் கூற இன்று நான் வேலைக்கு வரமுடியாது என்பதை அறி விக்கத்தான் வந்தான் டாக்டர். இன்று ஒரு நாள் எனக்கு லீவு வேண்டும் என்ற ரகுவைப் பார்த்த டாக்டர் வழக்கம் போல ஒரு புன்னகையை உதிர்த்தார். என்ன வருத்தம்? மருந்து ஏதாவது தரட்டுமா என்று தொடர்ந்து அவர் கேட்டதற்கு ‘ இல்லை டாக்டர் என் தங்கச்சியையும் குழந்தையையும் இன்று கோயிலுக்குக் கூட்டிப் போவதாக வாக்களித்துவிட்டன். அதுதான் என்றிழுத்தான் ரகு. 

தாராளமாகப் போய் வாப்பா …. அது ஒன்றுதான் இன்று மனிதனை மனிதனாக வைத்துள்ளது. தெய்வ நம்பிக்கையும் அற்றுவிட்டால் மனிதன் மனிதனாக வாழவே முடியாது. அதனால் நீ உண்மையாகக் கோயிலுக்குப் போவதாக இருந்தால் இன்னும் இரண்டு நாள் லீவு தர முடியும் என்று கூறிவிட்டுச் சிரித்தார் டாக்டர். 

இத்தனை பெரிய தூய உள்ளம் படைத்த ஒரு டாக் டரை ஏமாற்றுகிறோமே என்ற வருத்தம் ஏற்பட்ட போதும் ஆபத்துக்குப் பாவமில்லை என்னும் பழமொழியைத் தனக் குச் சாதகமாக்கிக் கொண்டு டாக்டரிடம் அமெரிக்காவில் ஆரம்பிக்க இருக்கும் மருத்துவவிடுதி பற்றிப் பிரஸ்தாபித் துச் சுற்றி வழைக்காமலே அங்குத் தனக்கும் ஒரு வேலை சிபார்சு பண்ணித்தரும்படி வெளிப்படையாகவே பேசினான். ரகு.. தனது வேண்டுகோளுக்கு டாக்டரிடம் இருந்து எப்படியான பதில் வரப்போகிறதோ எனத் துடித்துக்கொண்டது அவன் உள்ளம். 

அவன் பேச்சைக் கேட்டுச் சிரித்தார் டாக்டர். .நீ மனதாரத்தான் இதைக் கேட்கிறாயா…. ரகு.. .. என்று சிரிப்பினிடையே அவர் கேட்ட போது ரகு வியப்புடன் -அவரைப் பார்த்தான். ஏன் என் பேச்சில் நம்பிக்கை இல்லையா டாக்டர் என்பது போல் இருந்தது அவன் பார்வை. என்னப்பா அப்படிப் பார்க்கிறாய்….? தங்கச் சியை விட்டு அரை நிமிடங்கூடப் பிரியமுடியாத உன்னால் எப்படி அவளைப் பிரிந்து இத்தனை மைல் தூரம் போக முடியும் என்று சிந்தித்தேன். ஒரு வேளை உன் தங்கச் சிக்கும் அவள் குழந்தைக்குங் கூட அங்கு வேலை தேடச் சொல்வாயோ என்று ஒரு சந்தேகம் எழுந்தது. அதுதான் சிரித்தேன். 

டாக்டரின் விகடமான பேச்சு ரகுவையும் சிரிக்க வைத் அவன் சிரித்துவிட்டு அப்படியெல்லாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை டாக்டர். இம்முறை: நான் தங்கச்சியை விட்டுப் பிரிவதாகவே முடிவு செய்து விட்டேன். அவளை அவளது கணவரிடம் ஒப்புவிக்கலாம் என்ற நல்ல முடிவுக்கு வந்துவிட்டேன். அதனால் எப்படியாவது தங்கள் சிபார்சினால் எனக்கு ஒரு வேலைக்கு ஒழுங்கு செய்யுங்கள் எனக்குச் செய்த ஏனைய உதவிகளுடன் இந்த உதவியையும் கடைசிமுறையாகச் செய்து விடுங்கள் என்று கெஞ்சிய ரகு. வைக் கவனிப்பதாகக் கூறினார் டாக்டர். 

டாக்டரிடம் விடை பெற்ற ரகு நேராக வீட்டுக்குச் சென்று வாடகைக் கார் ஒன்று அமர்த்தி அதில் பவானியை யும் குழந்தையையும் ஏற்றிக்கொண்டு ஜெகநாதன் இருந்த வீட்டுக்குச் சமீபமாக டாக்ஸியை நிறுத்தி இறங்கிக் கொண் டான். ஏதோ படத்திற்கு அழைத்துப் போவதாகக் கூறி நடுத்தெருவில் தன்னை டாக்ஸியை விட்டு இறக்குவித்ததன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளமுடியாமல் படமாளிகை. எங்கு இருக்கண்ணா என்று நினைத்ததைக் கேட்டேவிட் டாள் பவானி. 

அதுவரை தன் நினைவற்றுப் பவானியையும் குழந்தை. யையும் எப்படி ஜெகநாதனிடம் ஒப்புவிப்பது என்று சிந்தித் துக்கொண்டிருந்த ரகு திடுக்கிட்டான். ஆயினும் தன் தடுமாற்றத்தை வெளிக்காட்டாமல் நான் பார்த்த படம் இந்தப் பங்களாவில் தான் காட்டப்பட்டது. இது பிரத்தி யேகமான இடம். நீ வருவது அவர்களுக்குத் தெரியாது. உன்னை உள்ளே அழைத்துப்போவதற்கு அவர்களிடம் நான் உத்தரவு எடுக்கவேண்டும் தங்கச்சி—அதனால் நீ உமாவை வைத்துக் கொண்டு மரநிழலில் நின்றுகொள்—நான் வந்து விடுவேன் எனக் கூறி அவளைச் சமாளித்துவிட்டு ஜெக நாதனின் பங்களா அமைந்திருந்த வளைவுக்குள் நுழைந்தான் ரகு. கடந்த இரவு பார்த்த வீட்டின் நிலைக்கும். அப்போதிருந்த வீட்டின் நிலைக்கும் எவ்வளவோ வித்தி யாசந் தோன்றியது அவனுக்கு. 

ஒழுங்கற்ற முறையில் தளபாடங்கள் வைக்கப்பட்டு இருள் சூழ்ந்த நிலையில் ஒரு துர்நாற்றத்தோடு காட்சி யளித்த வீட்டை இப்போது கதிரவன் தன் கதிர்களால் ஒளியேற்றிக் கொண்டிருந்தான். தளபாடங்கள்கூட ஒழுங் காக அமைக்கப்பட்டிருந்தன. வீட்டில் ஏதோ ஒரு பொலிவு காணப்பட்டது, ரகு மெதுவாக வீட்டுத் திண்ணையில் காலடி எடுத்து வைத்த போது உமாதான் சாம்பராணி தூபத் தோடு முன்னுக்கு வந்துகொண்டிருந்தாள். குளித்துவிட்டு விரித்து விடப்பட்டு இருந்த கூந்தல் அலை அலையாகத் தோளில் புரண்டு கொண்டிருக்கக் குங்குமப் பொட்டுடன் காட்சி அளித்தாள். உடல்தான் மெலிந்து பொலிவிழந் திருந்ததே தவிர அவளது முகத்தில் இருந்த களை அப்படியேதானிருந்தது. 

‘ரகுவா. வாருங்கள் இப்படி அமர்ந்து கொள் ளுங்கள். அவர் இப்போதுதான் எழுந்து குளிக்கச் சென்றுள்ளார். வருவதற்கு ஒருமணி நேரமாவது செல்லும்..’ உமாவின் வார்த்தைகளைக் கேட்ட ரகு ஆச்சரியப்பட் டான். உண்மையாக இது அவன் இரவு கண்ட உமா தானா ? அல்லது இருவரும் இருவேறு உருவங்களா என்று எண்ணத் தோன்றியது. அவள் பேசிய விதம் அவளை அப்படிச் சிந்திக்க வைத்தது. இரவு முழுவதும் கணவனால் இம்சைக்குள்ளாகிய ஒரு பெண்ணா இவள். . . . இவளால் இப்படி ஒன்றுமே நடக்காததுபோல எப்படித்தான் சமாளிக்க முடிகிறது . . . . இது பெண்களுக்கே உரித்தான ஒரு சாகசமா அல்லது பெருந்தன்மையா என்ற ஆராய்ச்சி யில் இறங்கியபடி அவள் சுட்டிக்காட்டிய நாற்காலியில் அமர்ந்தான். 

இரவு வெகுநேரங் கழித்துத்தான் தூங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி இருந்தும் இவ்வளவு அதி காலையில் உங்களால் எப்படி வர முடிந்தது ஆமாம்! என்னைப் பார்க்கத்தான் வந்தீர்களா? அல்லது அவரிடம் விடயமா? என்று கேட்டு அங்கே நிலவிய ஏதாவது மௌனத்தைக் கலைத்தாள் அவள். அதுதான் தக்க சமயம் என நினைத்துக்கொண்ட ரகு அவரைத்தான் முக்கிய மாகப் பார்க்க வந்தேன். ஆயினும் அதற்கு முன் உன்னைப் பார்த்துப் பேசவேண்டும் என்ற நினைவுடன் தான் வந்தேன். அவர் குளிக்கப்போனது நல்லதாய்ப் போய் விட்டது. உன்னுடன் நான் நிறையப் பேசவேண்டி உள்ளது. நேற்று நான் இங்கு வரும்போது ஜெகநாதனுக்கு நீதான் மனைவியாக இருப்பாய் என்று சிறிதுகூட நினைக்கவில்லை. நான் வந்த விடயமே வேறு. ஆனால் இந்த வீட்டின் எஜமானியாக உன்னைப் பார்த்தபின் என் எண்ணமே மாறிவிட்டது. உனக்குக் கிடைத்திருக்கும் வாழ்வைப்பற்றித்தான் என்னால் சிந்திக்க முடிந்தது. உன் கணவன் ஏற்கெனவே ஒரு குழந்தைக்குத் தந்தையானவன் என்பதை நீ அறிந்தாயோ என்னவோ. அந்தக் குழந்தையும் தாயும் தற்போது என்னுடன் தான் இருக்கிறார்கள் என்பதை நீ அறிந்துதான் ஆகவேண்டும் உமா. உண்மை கசப்பாக இருந்தாலும்கூட அதை அறிந்து வைப்பது மேலானது. அத்துடன் இன்னுமொன்றையும் கூறி வைக்கிறேன். அதாவது அவர்கள் அந்தத் தாயும் குழந்தையும் தற்டோது என் ஆதரவில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் உன் கணவனைத் தேடி வந்தேன். ஆனால் உன்னைக் கண்டபின்பு என் திட்டமே தவிடுபொடியாகி விட்டது என்று கூறிவிட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். 

அவன் பேச்சைக் கேட்டு அடக்கமாகச் சிரித்த உமா இங்குத்தான் நீங்கள் தவறிவிட்டீர்கள். நன்றாக அலசி ஆராய்ந்து நீதியின் வழியில் எது சரியென்று தீர்மானித்து அதைச் செயலாற்ற வந்த பின் சொந்த விருப்பு வெறுப்பு களுக்கு ஒருபோதும் நீங்கள் மதிப்பளித்திருக்கக் கூடாது. இன்று என்னிடத்தில் வேறு பெண்ணொருத்தி இருந்திருந் தால் நிச்சயமாக நீங்கள் நினைத்ததைச் சாதித்திருப் பீர்கள். அதனால் இப்போதுகூட ஒன்றுங் குடிமுழுகிப் போய்விடவில்லை. நீங்கள் ஆதரவளித்திருப்பதாகக் கூறும் பெண் சொல்வது அப்பழுக்கற்ற உண்மையாக இருந்து அதை என் கணவரும் ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அவர்கள் இருவருக்கும் குறுக்கே நிற்க நான் ஒருபோதும் விரும்பமாட்டேன். பொருத்தமற்ற வண்டியையும் மாட்டையும் பூட்டிக் கொண்டு பயணத்தைக் கரடுமுரடான பாதையில் இழுத்துக்கொண்டு செல்வதைவிடப் பொருத்த மான இரண்டையும் ஒன்று சேர்ப்பதுதான் முறையானது என்பதே என் முடிவு. இதையிட்டு நான் கவலைப்படுவேன் என்றோ அல்லது என் வாழ்க்கை பாழாகிவிடும் என்றோ நீங்கள் பயப்படவேண்டிய அவசியமில்லை. ஏற்கெனவே பாழாகிவிட்ட என் வாழ்க்கை இனிப் பாழாகிப் போகிறது என்று பயப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. 

‘கடந்த இரவு நடந்த சம்பவங்களில் இருந்து என் வாழ்க்கையைப் பற்றி ஓரளவுக்கு அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக இதே தான். இதில் இருந்து விடுதலை பெறுவதாக இருந்தால் நானாகவே விலகிக் கொள்ள வேண்டும். அப்படியான ஒன்றைச் செய்து என் குடும்பத்திற்கு ஈனத்தைத் தேடித்தர நான் விரும்பவில்லை. என் குடும்ப கௌரவத்தையாவது காப்பாற்றிக் கொடுப்போம் என்றுதான் இதுவரை பொறுத்திருந்தேன். கடவுள் மிக நல்லவர். என்னை அதிக நாள்கள் துன்பப்பட வைக்காமல் மிக விரைவிலேயே உங்கள் மூலமாக விமோசனம் அளித்துவிட்டார். அதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இனிமேலாவது அவர் இந்தக் கெட்ட குடிப்பழக்கத்தை மறந்து மனதுக்கிசைந்த. வளுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தட்டும். நீங்கள் இப்போதே உடனடியாகச் சென்று அந்தப் பெண்ணையும் குழந்தையையும் அழைத்து வாருங்கள். அவர் மாலையில் மாற்றுருவந் தரிப்பதற்கு முன் அவர்களை அவரிடம் ஒப் படைத்துவிடுவோம் என்று நீண்ட பேச்சுக்குப் பின் நிறுத்திக் கொண்டாள். 

அவள் பேச்சு ரகுவுக்குப் புரிந்தும் புரியாமலும் இருக் கவே அவன் சில நிமிடநேரம் யோசித்துவிட்டு ” அவர் களை அழைத்து வர நான் போகவேண்டிய அவசியமே இல்லை உமா. அவர்களை நான் வரும்போதே அழைத்துத் தான் வந்தேன். உன் உத்தரவின்றி உள்ளே கூட்டிவரப் பயந்து தெருவிலே நிற்கும்படி பணித்தேன். உனக்கு ஆட்சேபணை இல்லையென்றால் இப்போது சென்று அவர் களை அழைத்து வருகிறேன். அதற்கு முன் ஒன்று உன் னிடம் கேட்க விரும்புகிறேன் உமா. அந்தப் பெண்ணை யும், குழந்தையையும் ஜெகநாதன் ஏற்றுக்கொள்வதாகவே வைத்துக்கொள்வோம் அதன் பின் உன்கெதி என்னாவது? உன் எதிர்கால வாழ்க்கையைப்பற்றிச் சிந்தித்து ஒரு முடி வுக்கு வந்து விட்டாயா…? 

‘தன் வாழ்க்கையைப் பற்றி எவராலும் எந்த முடிவுக்கும் வருவது மிகவும் சிரமம்  ரகு. வாழ்க்கை எங்கே தொடங்கும் அது எங்கே முடியும் என்று யாராலுமே கண்டுபிடிக்க முடியாது.  என் வாழ்க்கையின் ஆரம்பத்தை அனுபவித்துவிட்டேன் முடிவு. ? அது என் கையில் இல்லை. ஆயினும் அதை ஒரு நல்ல முடிவாக்க வேண்டுமென்பதே எம் ஆசையுங்கூட. அவ்வளவு தான் இப்போதைக்கு என்னால் கூற முடியும். நீங்கள் தயவு செய்து அவர்களைச் சென்று அழைத்து வாருங்கள். என் கணவரின் வாழ்வை ஒளிபெறச் செய்யப்போகும் அந்தப் பெண்ணைக் காண நான் துடிக்கிறேன் போங்கள் ரகு. 

அவள் அன்புக் கட்டளையை மீறப் பயந்தவனாய் ரகு வந்த வழியே திரும்பிச் செல்கிறான். ஒரு சில விநாடிக்குள் ஏதோ ஒரு பெரிய முடிவுக்கு வந்தவள் போல உமாவும் உட்பக்கஞ் செல்கிறாள். அந்த வீட்டில் பழையபடி அமைதி குடிகொள்கிறது. 

24ஆம் அத்தியாயம் 

ஒரு சிலர் வாழ்க்கையை அனுபவிப்பதற்கென்றே பிறக். கிறார்கள். இன்னும் ஒரு சாரார் துன்பப்படுவதற்கென்றே. பிறவி எடுக்கிறார்கள். இது அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. வேதாந்திகளிடம் கேட்டால் முன்வினைப் பயன் என்பார்கள். ரகுவைப் பொறுத்தவரையில் அது தான் தன்விதி என்ற முடிவுக்குத்தான் அவனால் வர முடிந்தது. தன்னைப் பற்றியோ தான் துன்பப்படுவதைப் பற்றியோ அவன் கவலைப்படவில்லை. தன்னால் பிறி தொருவர் கஷ்டப்படுவதை அவனால் பொறுக்கமுடிய வில்லை. உமாவைத் துன்புறுத்துவதற்கென்றே தான் பிறந்திருப்பதாக நினைத்து நினைத்துக் கவலைப்பட்டான். உமா மட்டும் ஜெகநாதனுடன் இன்பமாக வாழ்க்கை நடத் திக் கொண்டிருந்தால் பவானியை அவன் நிச்சயம் அங்குக் கூட்டி வந்திருக்கவே மாட்டான். பவானியையும் ஜெக நாதனையும் இணைப்பதால் உமாவுக்கு விடுதலை கிடைக்கு மென அவன் நிச்சயமாக நம்பினான். ஆயினும் அவளது எதிர்காலத்தை நினைத்தபோது அவனால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. அவளுக்கு ஏதாவது வழி வகுத்துக் கொடுப்பது இனி தன் பொறுப்பு என்பதை உணர்ந்தான்• யாருடைய நலனுக்காக அவன் தன் பிறந்த இடத்தை விட் டுப் புறப்பட்டானோ அவளுக்காகவே இனித் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கப் போகிறோம் என்று நினைத்தபோது அவன் மெய்சிலிர்த்தது. 

உமாவுடன் பேசிக்கொண்டிருந்த போது கடந்த இரவு அவளைவிட்டு அவன் பிரிந்து சென்ற பின் ஏதாவது அசம்பா விதங்கள் நடைபெற்றதா என்று அவன் கேட்டதற்கு அவள் கொடுத்த பதில் அவளது உயர்ந்த பண்பையும் பொறு மையையும் எடுத்துக் காட்டியது. மதுவாடை அவருடலில் இருக்கும்வரை தான் அவர் மிருகமாக இருப்பார். அந்த நெடி அவர் உடலைவிட்டு அகன்றதும் அவர் திரும்பவும் மனிதனாகிவிடுவார். அதன் பின் எங்களுக்குள் எதுவித மான சச்சரவிற்கும் இடமிருக்கவில்லை. கணவன் மனைவி என்ற உறவற்று ஏதோ சந்தர்ப்பவசத்தால் இணைக்கப் பட்ட ஜோடிகள் என்ற அளவோடு பழகிக்கொள்வோம். பேசிக் கொள்வதற்குத்தான் சந்தர்ப்பமும் இடம் கொடுப்ப தில்லையே. அவர் குளித்துச் சாப்பிட்டதும் அலுவலகம் புறப்பட்டால் திரும்பவும் வீடு வரும்போது மிருகமாகத் தான் வருவார். அவரிடம் அப்படியொரு பலவீனம். தன் மேல் நம்பிக்கையற்ற ஒரு தாபம் ஏதோ ஊருக்கும் உலகத் திற்கு நாங்களும் கணவன் மனைவியாக வாழ்க்கை நடத்துகிறோம். 

உமாவினது இந்தப் பேச்சில் இருந்து அவள் வாழ்ந்து வந்த நரக வாழ்க்கையை அவன் பூரணமாக உணர்ந்து கொண்டான். பவானியை ஜெகநாதனிடம் ஒப்புவித்த அடுத்த நிமிடத்தில் இருந்து உமாவின் பொறுப்பு தன் னுடையது எனத் தீர்மானித்துக் கொண்டான். அந்த நினைவோடு அவன் பவானியையும், குழந்தையையும் அழைத்துக்கொண்டு வந்தான். அவன் கையில் இருந்த குழந்தை உமாவைக் கண்டதும் கெக்காளமிட்டுச் சிரிக்கத் தொடங்கியது. வா தங்கச்சி.. இப்படி உட்கார்…நீ வந்திருப்பதாக ரகு கூறவே இல்லை. உன்னை அழைத்து வரும்படி கூறியதன் பின்னர்தான் நீ வெளியில் காத்து நிற்பதாகக் கூறினார். அதுதான் உன்னை உடனடியாக அழைத்துக்கொள்ள முடியவில்லை. என்னை மன்னித்துவிடு என்று உமா சம்பந்தமில்லாமல் பேசியபோது பவானிக்கு எதுவுமே புரியவில்லை. ஏதோ படத்திற்கு அழைத்துப் போவதாகக் கூறி ஒரு வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந் ததுமல்லாமல் ஏதோ சம்பந்தமில்லாத பேச்சுக்களையும் ஒரு பெண் மூலம் கேட்கவேண்டி வந்துவிட்டதே எனச் சிந்திக்கத் தொடங்கினாள். அவள் மனப் போராட்டத்தை அவள் முகம் பிரதிபலித்துக் காட்டியபோது அப்படி உட் கார்ந்துகொள் தங்கச்சி என்று ரகு பணித்தான். எங் கண்ணா கூட்டி வந்திருக்கிறீர்கள் எனப் பவானி தன் ஆசையை அடக்க முடியாமல் கேட்டதற்கு நாம் வரவேண் டிய இடத்திற்குத்தான் வந்திருக்கிறோம் அம்மா. இனித்தான் படம் ஆரம்பமாகும் என்று கூறிவிட்டுத் தனக் குள்ளாகவே சிரித்துக்கொண்டான். 

என்ன படம். ? யாருடைய படம் ரகு. என்று உமா எழுப்பிய வினாவுக்கு இரவு நான் படம் பார்த்துவிட்டுப் போகும்போது நன்றாகத் தாமதமாகி விட்டேன். எப்படியண்ணா படம் என்று கேட்டாய். அருமையான படம் தங்கச்சி கண்டிப்பாக நீயும் பார்க்க வேண்டிய ஒன்று. நாளைக் காலை விடிந்ததும் உன்னை அழைத்துக்கொண்டு போய்க் காட்டுகிறேன் என்று வாக்கு கொடுத்தபடியே அழைத்தும் வந்துவிட்டேன். அதுதான் தங்கச்சிக்குச் சிறிது சந்தேகமாக இருக்கிறது. என்று கூறி விட்டுக் கண்ணைச் சிமிட்டினான் ரகு. அப்போ உங்கள் தங்கைக்குப் படத்தின் கதையே தெரியாது போல இருக்கு என்று அவன் சிமிட்டலைப் புரிந்து கொண்டு உமா கேட் டதற்குக் கதைமட்டுமல்ல உமா கதையில் வரும் பாத்திரங்களே அவளுக்குத் தெரியாது என்று மிகுதியையும் கூறி முடித்தான் ரகு. 

ரகுவிடம் இருந்த குழந்தையை வாங்கிக்கொண்ட உமா அவனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள். அந்தக் குழந்தை அப்படியே ஜெகநாதனை உரித்து வைத்திருந்தது. குழந்தை அவன் அப்பாவையே உரித்து வைத்திருக்கிறான் என்று உமா கூற பவானி ஆச்சரியத்தோடு அவளைப் பார்த்தாள். குழந்தையின் அப்பாவா….? அப்படி யானால் இது படமாளிகையில்லையா….? என் குழந்தை யின் அப்பாவுக்கும் இந்தப் பெண்ணுக்கும் என்ன தொடர்போ…? ராமு அண்ணா எதையோ என்னிடம் இருந்து மறைக்கப் பார்க்கிறார். இவர்களிடையே ஏதோ மர்மம் சூழ்ந்துள்ளது. அது என்னவாக இருக்கும் எனப் பவானியின் உள்ளம் ஆராயத் தொடங்கியது. சற்று முன்பு ரகு அந்தப் பெண்ணை உமா என அழைத்த போதே அவள் சந்தேகப்படவே செய்தாள். ஆரம்பத்தில் அவன் குழந்தை யைத்தான் அழைக்கிறான் என்று எண்ணியவளுக்கு மிகுதிப் பேச்சும் முடிந்த பின்னர்தான் அவன் அந்தப் பெண்ணைத் தான் அழைத்தான். அந்தப் பெண்ணுக்கும் பெயர் உமா என்பதும் தெரியவந்தது. 

அதற்குள் உள்ளே ஜெகநாதன் குளித்துவிட்டு வரும் காலடி அரவம் கேட்டு உமா எழுந்து உள்ளே சென்றாள். அவள் போகும்போது குழந்தையைப் பவானியிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள். அவள் உள்ளே செல்லும் போது ரகுவைப் பார்த்துச் சென்ற பார்வையில் ரகுவும் ஏதோ புரிந்து கொண்டவன் போல் எழுந்து கடைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுத் தெருப்பக்கம் நடந்து சென்றான். புதிய இடம், புதிய சூழல், புதிய மனிதர் என்ற நிலையில் பவானி சிந்தித்துக்கொண்டிருந்தபோது” உள்ளே இருந்து யாரோ இருமும் குரல் கேட்டது. அந்தக். குரல் ஒரு ஆணுடையதாக இருக்கவே அது யாராக இருக்கும் என்று எண்ணியபடி பவானி குழந்தையோடு கொஞ்சிக் கொண்டிருந்தாள். குழந்தை இடையிடையே அழுவதும் சிரிப்பதுமாக விளையாடிக்கொண்டிருந்தபோது காலடியர வங் கேட்டுப் பவானி திரும்பினாள். அங்கு வந்த நபரைக் கண்டதும் அவள் கண்கள் விழித்தன. விழித்தபடியே இருந்தன. அதில் ஆச்சரியங் கலந்திருந்ததா அல்லது” அதிர்ச்சி நிறைந்திருந்ததா என்று எவராலுமே கூறமுடி யாது. சப்தநாடியும் ஒடுங்கியவளாய்ப் பேசுந் திராணியற்றுப் பவானி குழந்தையைக்கூட மறந்து அமர்ந்திருந்தாள். அவள் மடியில் இருந்த குழந்தை கீழே இறங்கத் தெண் டித்துத் தவறிக் கீழே விழுந்து வீர்…. எனக் கதறி யழத் தொடங்கியது. பவானி தன் நினைவு பெற்றுக் குழந்தையை வாரி எடுக்க முயற்சித்தபோது குழந்தை ஏற்கெனவே அங்கு வந்த நபரின் கையில் இருப்பதைக் கண்ணுற்று வெட்கித் தலை குனிந்து அவரையே பார்த்தபடி நின்றாள். ‘நீ எப்படி இங்கு வந்தாய் பவானி….? இது ….. இது.. நம் … நம் ….? ஜெகநாதன் பேசமுடியாமல் தத்தளித்த போது. ஆமாம். இது நம்ம குழந்தை தான். பெயர் உமா உமா. டேய் கண்ணு உமா…இதுதான் உன் அப்பாடா…. உன் அப்பா என்று உணர்ச்சிப் பெருக்கால் வார்த்தை தடைப்படக் கூறிவிட்டு அவனையே மேல் இருந்து கீழ்வரை பார்க்கத் தொடங்கிளாள். அவளது பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாதவனாய் அவளைத் தன்னுடன் இறுகப் பற்றி அணைத்துக் கொண்டான் அவன். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியபடி தம்மை மறந்து நின்றபோது’ அந்தப் பிணைப்பின் இறுக்கத்தைத் தாங்க முடியாமல் குழந்தை கதறி அழத் தொடங்கியது. அந்தக் குழந்தை மூலம் தங்கள் நிலையை உணர்ந்து கொண்டவர்களாய் விலகிக் கொண்டனர் இருவரும். 

பவானி தன் கண்ணில் இருந்து நீர் ஆறாகப் பாய விக்கி விக்கி அழத் தொடங்கினாள். அவள் அழுவதைக் கண்ட குழந்தையும் ஒன்றும் புரியாமல் கதறத் தொடங்கியது. அவர்கள் இருவரையும் ஆற்றுவதே ஜெகநாதனுக் குப் பெரும்பாடாகிவிட்டது. குழந்தையைத் தன் தோளில் போட்டுத் தட்டியபடி அவன் பவானியை ஆற்றினான். நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள் உங்களை நம்பி என் பெண்மையைப் பறிகொடுத்து விட்டு நான் பட்டபாடு என ஆரம்பித்து ரகுவைச் சந்தித்ததுமுதல் யாவற்றையும் ஒரு கதை போலக் கூறிவிட்டு இப்போது எங்களுக்கு என்ன முடிவு சொல்லப் போகிறீர்கள் என்பது போல் ஜெகநாத னைப் பார்த்தாள் பவானி. 

அவள் கூறியவற்றை எல்லாம் பொறுமையுடன் கேட்ட ஜெகநாதன் யோசிக்கத் தொடங்கினான். இனிமேல் பவானியைக் கைவிடுவது அழகல்ல என்பதை அவன் உணர்ந்தான். அத்துடன் அவளைப் பிரிந்து தன்னால் வாழமுடி யாது என்பதும் அவனுக்குப் புரிந்தது. அதனால் அவன் அவளைப் பார்த்து அழாதே பவானி. சந்தர்ப்பவசத்தால் உன்னைப் பிரியவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதே தவிர உன்னை நான் நினைக்காத நேரமோ நாளோ கிடையாது. என் பெற்றோரின் அபிலாசையை நிறைவேற்றுவதற்காக நான் வேறு திருமணஞ் செய்து கொள்ள வேண்டி ஏற் பட்டது. என் கரம் பற்றியவள் என்னைக் கணவனாய்ப் பெற்றதில் அடைந்த இன்பத்தைவிடத் துன்பந்தான் அதிகமாக இருக்கும். ஆமாம்! பவானி அவளை நான் மிகவுங் கொடுமைப்படுத்திவிட்டேன். அவள் நான் இழைத்த அத்தனை தீங்குகளையும், அநீதிகளையும் பெரிய மனத்தோடு பொறுத்துக் கொண்டாள். நான் இழைத்த மிருகத்தனங்களை எல்லாம்கூடப் பொறுத்திருக்க மாட் டாய் அத்தனை கொடூரமாக நான் நடந்து கொண்டேன். மிருகத்தைவிடக் கேவலமாக நடமாடினேன். என்னை மனிதனாகப் பார்க்க விரும்புபவர்கள் காலையில் இருந்து மாலை வீடு திரும்பும்வரை தான் அப்படியான ஒரு தன் மையை என்னிடம் எதிர் பார்க்கலாம். வீடு திரும்பும் போதே நான் மதுப்புட்டிகளிடம் என்னை ஒப்படைத்து விடுவேன். உமாவைக் கைப்பிடித்த நாள் முதலாக இதே வழக்கந்தான். அவளிடம் என் பலவீனத்தை வெளிப்படுத்தி விடுவேனோ என்ற பயந்தான் என்னை இவ்வளவு கேவ மாக மாற வைத்தது. உமா ஒரு தெய்வம் போன்றவள். அவள் காட்டிய அன்புக்கு நான் அடிமைப்பட்டால் எங்கே உன்னை மறந்துவிடுவேனோ என்ற எண்ணம் அச்சுறுத்தியது. உனக்கு நான் இழைத்த துரோகம் என்னை நாளாந்தம் அணுவணுவாகச் சித்திரவதை செய்தது. 

அந்த வதைப்பில் இருந்து என்னை மீட்டுக்கொள்ள முடியாமல் நான் ஒரு குடிகாரனாக மாறினேன். உன்னைப் பற்றி அறிந்து கொள்வதற்கு எவ்வளவோ முயற்சிகள் எடுத் தேன். எதுவித பலனும் அளிக்கவில்லை. கடைசியாக என் பெற்றோரைத் திருப்திப்படுத்தும் ஒரே நோக்கத்தை வைத்துத் தற்போதைய என் மனைவியான உமாவைக் கைப் பிடித்தேன். எனக்கு மாலையிடுவதற்கு முன் அவளும் யாரோ ஒருவனைக் காதலித்ததாகவும் அவளது பெற்றோர் அதை எதிர்க்கவே அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக என்னை மணந்துகொண்டதாகவும் திருமணத்திற்கு, முன்பே அறிந்து கொண்டேன். அது எனக்கு ஒரு நல்ல -ஆயுதமாக அமைந்தது. என் குற்றத்தை அவளிடம் ஒப்புக் கொடுக்கும் திராணியற்று அவள் இழைத்த அந்தச் சின்னத் தவற்றை எனக்குச் சாதகமாக்கிக் கொண்டேன். அதனால்- அவள் வாழ்ந்தாள். நானும் வாழ்ந்தேன். இப்போது என் நிலை மிகவும் தர்மசங்கடமாகிவிட்டது. நான் யாரை ஏற்பது யாரைத் துறப்பது என்று புரியாமல் தத்தளிக் கிறேன். பைத்தியம் பிடித்துவிடுமோ என்று கூடப் பயமாக இருக்கிறது. இரத்த வேகத்தில் உணர்ச்சிக்கு அடிமைப் பட்டு நாம் செய்த தவறு இந்தப் பச்சிளம் பாலகனை எங்கே பாதித்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. இதற்கு ஒரேயொரு நல்லவழி உங்கள் இருவரையும் விட்டு நிரந்தரமாக நான் எங்கேயாவது கண்காணாத தேசத்திற்குப் போவதுதான். அது ஒன்றுதான் எங்கள் பிரச்சனைக்கு ஓர் தீர்வு காணமுடியும். 

‘வேண்டாம்… அப்படியெல்லாம் நீங்கள் ஒன்றுஞ் செய்துவிடாதீர்கள் …. உங்களைப் பார்த்ததே எனக்குப் போதும். என் குழந்தையின் அப்பா எங்காவது சுகமாக சீவிக்கிறார் என அறிந்தால் அதுவே எனக்கு ஒரு மகிழ்ச்சி. அதனால் குழந்தை உமாவை நீங்களே வைத்துக் கொள் ளுங்கள். நான் உங்கள் பாதையில் இருந்து விலகிவிடு கிறேன். எந்தப் பொருளை எங்கே சேர்க்கவேண்டுமோ அங்கே சேர்த்துவிட்டேன். இத்துடன் என் கடமையும் முடிந்துவிட்டது. நான் வருகிறேன்’. ஜெகநாதனுக்கு தன் உணர்ச்சியெல்லாம் சேர்த்துப் பதிலளித்துவிட்டுப் போகத் திரும்பிய பவானியை….

‘நில் பவானி’ என்ற அதிகாரக் குரல் நிறுத்தி வைத்தது. அவள் அதிர்ச்சியோடு எதிர்ப்பக்கந் திரும்பிய போது அங்கே கையில் ஒரு சிறிய தோற் பெட்டியுடன் அவர்கள் முன்னே உமா நின்றுகொண்டிருந்தாள். உங்கள் சம்பாஷணை முழுவதையும் நான் உட்புறமிருந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். ஒட்டுக் கேட்பது அழகல்ல என்பது தெரிந்தும் அப்படியொரு இழிசெயலைச் செய்த தற்காக என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் இருவரும் உங்கள் பங்கைப் பேசி முடித்துவிட்டீர்கள். அதே நேரத்தில் உங்கள் இருவருடனும் சம்பந்தப்பட்ட இன்னுமொருவள் இருக்கிறாள் அவளது அபிப்பிராயத்திற்கும் ஒரு சிறிது மதிப்புக் கொடுப்போம் என இருவருமே எண்ணவில்லையே. போகட்டும் இப்போது நான் என் வாதத்தை உங்கள் இருவர் முன்னிலையிலும் எடுத்துரைக்க முன்வந்துள்ளேன். ஆகவே தயவுசெய்து என் பேச்சைச் சிறிது செவி சாயுங்கள். 

பவானி உன் கணவருக்கு நான் சட்டப்படி மனைவி யாகியது என்னவோ உண்மைதான். ஆனால் உள்ளத் தைப் பொறுத்தவரை அவர் உனக்கே சொந்தமாக இருந் திருக்கிறார். அந்த வகையில் அவரை நீ காதலனாக அடைந்ததை யிட்டுப் பெருமைப்படவேண்டும். மனதாற் கூட உனக்கவர் துரோகஞ் செய்ய விரும்பவில்லை. அதை நான் மெச்சுகிறேன். அதை நிலைநாட்ட அவர் கைப் பிடித்த வழியைத்தான் நான் வெறுக்கிறேன். மது என்ற ஒரு பொருளை எம் சமூகத்தில் அறிமுகஞ் செய்திருக்கா விட்டால் இவர் என்ன செய்திருப்பாரோ….? அது சர்ச் சைக்குரிய விடயமாகவே இருக்கட்டும். நான் இந்த இடத் தில் இதை ஏன் கூறவந்தேன் என்றால் பெண்களைவிட ஆண்கள் மிகவும் பலவீனமானவர்கள் என்பதைச் சுட்டிக் காண்பிப்பதற்காகவே. 

உன் காதலர் குடித்திருக்கவேண்டிய அவசியமே யில்லை. பவானி அவர் மட்டுந் தனது சுயசரிதையை என்னிடம் மனம்விட்டுப் பேசித் தீர்த்திருந்தால் நானாகவே உன்னைத் தேடி அவரிடம் ஒப்படைத்திருப்பேன். குடி போதையில் வரும் போதெல்லாம் இவர் என்னைப்பற்றி எத்தனையோ பழிச்சொற்கள் கூறுவார். ஏன் இரவு கூடத்தான் உன் அண்ணாவையும் என்னையும் இணைத்து மிகவும் கேவலமாகப் பேசினார். உன் அண்ணாவை நான் காதலித்தது என்னவோ உண்மைதான். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் திருமணமாவதற்கு முன் ஒருவள் காதலித்தாள் என்பதற்காக அவளைப் பற்றி வாயில் வந்த படியெல்லாம் பேசலாமா…? ஆயினும் நான் எல்லாவற் றையும் பொறுத்தேன். எதற்காக…. என்னைத் தொட்டுத் தாலி கட்டிய கணவன் என்ற ஒரு குற்றத்திற்காகத்தான். அதுதான் தமிழ்ப் பெண்களிடையே உள்ள சிறப்பு. இந்த மாங்கல்யம் இருக்கிறதே இது மிகவும் பவித்திரமான ஒரு பொருள். அதன் சக்தி மகத்தானது. விஞ்ஞானம் சாதிக்க முடியாததை எல்லாம் இந்த மஞ்சள் கயிற்றில் இணைக்கப் பட்டிருக்கும் மாங்கல்யம் சாதிக்க வல்லது பவானி. அந்த ஒரேயொரு உண்மையை மட்டும் பெண்கள் உணர்ந்து நடந்தால் பெண்மை எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும். இதைவிட்டு நான் அதிகம் பேச விரும்பவில்லை. 

இன்றுவரை உன் காதலரைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று முதல் அந்த மாபெரும் பொறுப்பை உன்னிடமும் உன் குழந்தையிடமும் ஒப்படைக்கிறேன் பவானி. இதோ உன் வீட்டுச்சாவி… ம் .. பிடி..ம். … பிடி……பிடி பவானி. என்னைச் சுற்றியுள்ள இந்தப் பரந்த உலகில் எனக்காக எத்தனையோ சேவைகள் காத்துக் கிடக்கின்றன. இனிமேல் அதுதான் என் மூச்சாக இருக்கும்….’ என்று வீரப்பிர சங்கம் செய்த உமா ஜெகநாதன் பக்கந் திரும்பி “உங்களுக்கு நான் ஒரு நல்ல மனைவியாக இருக்க முடியவில்லை. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். என் தங்கை பவானியும் குழந்தையும் என்னால் வெறுமையாக்கப் பட்டு சூன்யமாகத் திகழ்ந்த அந்த இடத்தை நிறைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நான் போவதற்கு எனக்கு விடை தாருங்கள். அதற்கு முன் என்னையும் உங்களையும் எதுவித உறவுமின்றிப் பின்னிப் பிணைந் திருந்த இந்தப் புனிதமான மாங்கல்யத்தையும், மஞ்சட் கயிற்றையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன். இனி இது யாருக்குச் சொந்தமோ அவளின் கழுத்தில் இதை அணிவியுங் கள். இதுவரை உள்ளங்களால் மட்டும் பிணைக்கப்பட் டிருந்த உங்கள் புனிதமான உறவு இந்த மஞ்சட் கயிற்றால் இன்னும் பலப்படட்டும். என்னை மறக்காமல் இருக்க என் வாரிசாக இதோ குழந்தை உமா இருக்கிறான் எல்லாமே இறைவன் செயல்…நான் வருகிறேன்’. விறுக்கென நடந்து செல்லும் உமாவைப் பார்த்தபடியே ஜெகநாதன் நிற்கிறான். 

தன் கண்களில் இருந்து வடிந்த இருசொட்டுக் கண்ணீரையும் தன் சுண்டுவிரலால் தெளித்து எறிந்த பவானி அவன் பக்கந் திரும்பி….’ என்னங்க அக்கா போய்க் கொண்டே இருக்கிறா நீங்கள் பேசாமல் இருக்கிறீர்கள். அவளைக் கூப்பிடுங்கள்… தயவு செய்து கூப்பிடுங்கள்’ எனப் பதட்டப்பட்டாள். 

என்னைக் கைப்பிடித்த இந்த மூன்று வருட காலத் துள்ளும் தலை நிமிர்ந்து என்னுடன் உமா பேசியது இது தான் முதல்தடவை பவானி. அவளை அடித்திருப்பேன் . . சித்திரவதைப்படுத்தியிருப்பேன். ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசியிருக்கமாட்டாள். கடந்த சில நிமிடத்திற்கு முன் வரை அவள் என் மனைவியாக இருந்தாள். அந்த உறவை அவள் துண்டித்துக்கொண்டாள். இனி மேல் எந்தவித உரிமையும் கிடையாது. இனி மேலாவது அவள் சந்தோஷமாக வாழட்டும். அவள் புனிதமானவள். அவள் என்னை மன்னித்தால் அது ஒன்றே எனக்குப் போதுமானது. நான் செய்த பாவங்களுக்கெல்லாம் அதுதான் பிராயச் சித்த மளிக்கும்..உமா.. நீ உத்தமி. உமா உமா.. அவன் வாய்விட்டுக் கதறியபோது குழந்தை உமா அவனை இறுகப் பற்றிக் கொண்டான். 

25ஆம் அத்தியாயம் 

எவ்விதமான உணர்ச்சிக்கும் இடங்கொடுக்காமல் தெருவாயில் வரை நடந்து சென்ற உமா சற்றுத் தாமதித் துத் திரும்பிப் பார்த்தாள். குழந்தை உமா அவன் காலைக் கட்டிக் கொள்வதையும் ஜெகநாதன் குழந்தையை வாரி எடுப்பதையும் கவனித்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சுடன் ஏதோ சாதிக்க முடியாத ஒன்றைச் சாதித்துவிட்ட வெற்றிப் பெருமிதத்துடன் அவள் திருப்பித் தன் நடையைத் தொடர அவள் எதிரே வந்து கொண்டிருந்தான் ரகு. 

‘உமா….நீயா?’ என்று வினவ அவன் அவளை ஆச்சரியத்தோடு பார்த்தபோது உமாவின் கலங்காத மன மும் கலங்கவே செய்தது. அவளுக்குச் சிறிது அழுது கொட்ட வேண்டும் போல இருந்தது. ஆயினும் மிகுந்த சிரமத் தோடு தன் உணர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இனி மேல் நான் எங்கே போக வேண்டுமோ… அங்கே போய்க் கொண்டிருக்கிறேன் ரகு ‘ என்று கூறிவிட்டுத் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். 

பவானியின் பொறுப்பு முடிந்ததும் உமாவைச் சந்தித்து அவளது எதிர்காலத் திட்டங்களைப் பற்றியெல்லாம் கலந் துரையாடி அவள் வாழ வழி வகுக்க வேண்டுமெனக் காத் திருந்த ரகுவுக்கு அவள் பதில் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. அதிலும் அவள் அவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்றது அவன் இதயத்தைத் தாக்கக்கூடிய பெரும் வேதனையாகவும் இருந்தது. அவளை இப்படியே தன் போக்குக்கு விட்டால் நிலமை மோசமாகிவிடும் என அஞ்சி எங்கே நீயோ நானும் அங்கே தான் இருக்க ஆசைப்படுகிறேன் உமா தயவு செய்து நான் கூறுவதைக் கேள். நீ இனி எங்கும் போகக் கூடாது உனக்காக இந்த ரகு எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதைத் தயவு செய்து மறந்துவிடாதே. நீ மட்டும் மனம் விரும் யினால் உன்னைச் சட்டப்படி திருமணம் செய்து உன்னுடன் வாழ நான் காத்திருக்கிறேன். உன்னால் சூனியமான என் வாழ்வு உன்னாலேயே நிரம்பட்டும். வேண்டுமானால் ஜெகநாதன் முன்னிலையிலே உன்னை நான் என் மனைவி யாக ஏற்றுக்கொள்கிறேன் என்று கெஞ்சிய போது உமா மௌனமாகச் சிரித்தாள். 

உங்கள் உயர்ந்த அன்புக்கு நான் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன் ரகு. நீங்கள் மிகவும் நல்லவர். உங்களிடம் உயர்ந்த பண்பு உண்டு என்பதும் அறிவேன். ஆயினும் நான் ஒரு பெண் என்பது என்னைப் பொறுத்தவரை இன் னும் மறந்து விடவில்லை. என் பெண்மை என்னை அறி வுறுத்துகிறது. ஆகவே எனக்கு மட்டும் ஆசையில்லை, அன்பில்லை, மனிதாபிமானம் இல்லை என்பது அர்த்த மல்ல. அவற்றையெல்லாம் அடக்கிக் கற்புநெறியில் நடப் பதுதான் பெண்களுக்கு அழகு. 

‘காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டோட எப்போதும் ஆயத்தமாகத்தான் இருக்கும். ஆனால் அதைத் தேக்கி அணைக்கட்டுக்குள் அடக்க வேண்டியபோது வெளியே பாய்ச்சுவதுதான் அந்த வெள்ளத்திற்கே பெருமை தருவது. என்னை நிச்சயமாக நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு. அதனால் தயவு செய்து என்னை மன்னித்து மறந்து விடுங்கள். உங்கள் உதவி எனக்குத் தேவை என்று உணர்ந்தால் இந்த உமாவுக்காக ஒரு ரகு இந்த உலகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதை மறவாமல் உங்களி டம் வருவேன். தயவு செய்து இப்போது என்னைத் தடுக்காமல் எனக்கு வழிவிடுங்கள் என்று கூறியபோது ரகு மறுவார்த்தை பேச முடியாமல் அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான். 

ரகுவின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பு போன் றிருந்தது. உமாவைப் பின் தொடர அவன் உள்ளந் துடித்தபோதும் பவானியிடம் சொல்லிக்கொள்ளாமல் அவளுக்கு வரவேற்பு எப்படியிருந்தது என்பதை அறியாமல் செல்வதற்கு அவன் மனம் சிறிதும் ஒப்பவில்லை. உமாவை யும். பவானியையும் அவன் மனம் எடை போட்டபோது உமாவைவிடப் பவானியைப் பற்றித்தான் அவன் அதிகமாகக் கவலைப்பட்டது. உமா தைரியமானவள். எதையும் தாங்கக்கூடிய இதயம் படைத்தவள் என்பதை அவன் கடந்த இரவு அநுபவத்தில் இருந்து உணர்ந்து கொண்டான். 

ஆனால் பவானி ஆமாம் ! பவானி அவளால் துன் பத்தின் சாயலையே தாங்கமுடியாது என்பதை அவள் தற் கொலை செய்துகொள்ள வந்ததிலிருந்து அவன் அறிந்து கொண்டான். உமா எங்கேயாவது பாதுகாப்பான இடத் திற்குத்தான் போவாளென்ற எண்ணம் மனதில் நிலைத் ததும் அவன் ஜெகநாதனின் வீட்டுக்குள் நடந்து சென்றான். பவானியும் குழந்தை உமாவும் ஜெகநாதனுடன் சேர்ந்து ஓர் அழகிய குடும்பமாக நின்றதைக் கண்ட அவன் கண்கள் ஆனந்தக் கண்ணீரைச் சொரிந்தன. 

வாருங்கள், அண்ணா…. என்னை உரியவரிடத்தில் சேர்த்ததும் தொலைந்தது சனியன் என்று கூறிக்கொள்ளா மற் போய்விட்டீர்களோ என்று பயந்திருந்தேன். எப்படியோ வந்துவிட்டீர்கள். ஆமாம் ! பார்த்தீர்களா அண்ணா உங்கள் மருமகனை. அப்பாவைக் கண்டதும் என்னை மட்டும்தான் மறந்துவிட்டான் …. இல்லையா அண்ணா ..? என்று கூறி பவானி அவனை வரவேற்ற போது அவள் உள்ளத்தின் பூரிப்பையும் பெண்மையின் பெருமையையும் அவனால் தெளிவாகக் கண்டு கொள்ள முடிந்தது. இத்தனை நாளும் பட்ட கஷ்டத்தின் பலனை அனுபவித்துவிட்ட திருப்தியில் அவன் அவர்கள் இருவரையும் தன் மனமார ஆசீர்வதித்துவிட்டு நீரைவிட இரத்தம் தடிப்பானது என்று ஆங்கிலத்தில் பழமொழி கூறுவார்கள் அல்லவா அது இதனால்தான் தங்கச்சி என்று சொல்லிச் சிரித்தான். குழந்தை உமா ஜெகநாதனின் தோள்மீது இருந்து கொண்டே அவளைப் பார்த்துக் ‘கலகல’ எனச் சிரித்தான். 

கடந்த இரவு முழுவதும் அவ்வளவு அட்டகாசம் புரிந்த ஜகநாதன் தானா இப்படிப்பட்ட குடும்பப் பொறுப்புள்ள ஆண்பிள்ளையாக இங்கே நிற்பது என்பதே அவனுக்குச் சந்தேகமாயிருந்தது. 

‘குழந்தை உங்களோடு ஒட்டிக்கொண்டு விட்டான். இனி உங்கள் விருப்பப்படி நீங்கள் எங்கும் செல்ல முடியாது. அதற்கு அவன் அனுமதியளிக்கவும் மாட்டான்.” என்று ரகு அவனைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தபோது ஜெகநாதனின் முகத்தில் அசடு வழிந்தது. 

‘ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. அவற்றை யெல்லாம் கனவு போல நினைத்து மறந்து விடுவதுதான் புத்திசாலித்தனம். கடந்த இரவு நிகழ்ச்சிக்காக நான் மிகவும் மனம் வருந்துகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். பவானியைக் கண்டதும் என் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி நிச்சயமாக ஏற்படும் என்று நினைத்தேன்.- ஆனால் உமா ஒரு பிரச்சனையாக இருப்பாள் என்று நான் எண்ணியதற்கு எதிர்மாறாக அவளாகவே என் பாதை யிலிருந்து முற்றாக விலகிக்கொண்டாள். அவளது பெருந் தன்மையை நான் போற்றும் அதே நேரத்தில் அவள் எதிர் காலத்தைப் பற்றி என்னால், கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. அவளுக்குப் பெருந் துரோகஞ் செய்துவிட் டேனோ என்ற வினா உள்ளத்தில் பெரிய இராட்சதன் போல் என்னை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது. ரகு உங்களிடம் நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்வதெல்லாம், உங்கள் தங்கை நிம்மதியாக வாழவேண்டுமென நீங்கள் விரும்பினால் இதுவரை எனக்குப் பெயரளவில் மனைவியாக இருந்து விட்டு நான் செய்த கொடுமைகளை எல்லாம். மறந்து மன்னித்துத் தன்னைப்போன்றதோர் பெண்பிறவுக்கு என்னைக் கணவராக்கிவிட்டுப் பெண்மையின் பெருமை பொங்கப் பூரித்து நடந்து செல்கிறாளே உத்தமி உமா அவளை வாழ வையுங்கள். அப்போதுதான் நானும் நிம்மதி யாக வாழமுடியும். எனக்காக அல்லா விட்டாலும் உங்கள் பவானியின் நல்வாழ்வின் பொருட்டாவது இதை நீங்கள் கண்டிப்பாகச் செய்தே ஆகவேண்டும் என்று ஜெகநாதன் உள்ளம் உருகப் பேசியபோது ரகுவால் எதுவுமே பேச முடியவில்லை. 

சரி …. இந்த உதவியை நான் எப்படியும் செய்து’ முடிப்பேன். என் தங்கை பவானியையும், குழந்தை உமாவை யும் கண்கலங்காமல் காப்பது இனி உங்கள் கடமை. வருகிறேன்…. பவானி. நான் நான் சென்று வருகிறேன் அம்மா . . . . . . கண்ணில் திரையிட்ட நீர் விழிக் கோணத்தினூடாக வழிவதற்கு முன் ரகு தன் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான்.. 

உமாவைத் தேட ரகு எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகிய நிலையில் அவன் டாக்டர் ராஜன் வீட்டுக்குள் காலடியெடித்து வைத்தான். அதே நேரம் நர்ஸ் நிர்மலா டியூட்டி முடிந்து வீட்டுக்குச் செல்ல வந்துகொண்டிருந்தாள். ‘குட்மோனிங் நிர்மலா’ ரகு அவளுக்குக் காலை வணக்கம் கூறியபோது அவளும் பதில் வணக்கம் கூறிவிட்டு அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள். ‘டாக்டர் உங்களை அவசரமாகத் தேடிக்கொண்டிருந்தார். கப்பல் இன்னும் இரண்டு நாளில் புறப்பட இருப்பதாகவும் வெளிநாடு செல்ல உங்கள் முடிவை அறியவேண்டும் எனவும் கூறினார். நீங்கள் நிச்சயமாகவே போக முடிவு செய்துவிட்டீர்களா….? என்று ரகுவைப் பார்த்துக் கேட்டபோது அவள் குரல் கம்மிற்று. 

‘யெஸ் நிர்மலா …. என்னைப் பொறுத்தவரையில் நான் எதையும் ஒருமுறைதான் வாழ்க்கையில் முடிவு செய்வ துண்டு. சில வாரங்கட்கு முன்பு நான் செய்து கொண்ட நல்ல முடிவை இனி எவரும் எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது. என் நாட்டுக்கு நான் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடித்துவிட்டேன். தற்போது என் நிம்மதிக்காக நான் அந்நியநாட்டை நாடிச் செல்கிறேன். நிர்மலா நீ எனக்குச் செய்த உதவிகளுக்கெல்லாம் நன்றி கூறக் காத்திருந்தேன். என் உள்ளங் கனிந்த நன்றி யைத் தெரிவிப்பதோடு இப்போதே பிரியாவிடையும் கூறி விடுகிறேன். சந்தர்ப்பம் வந்தால் மீண்டும் சந்திப்போம். நான் ஒரு காலத்தில் திரும்பி வரும்போது உன்னைக் குடியும் குடித்தனமுமாகப் பார்க்க ஆசைப்படுகிறேன். சரி நான் வருகிறேன். நிர்மலா…

‘ஹல்லோ ரகு நானே உனக்கு அவசரமாக ஆள் அனுப்ப எண்ணி இருந்தேன் …. நீயே வந்துவிட்டாய் ஆமாம் நான் குறிப்பிட்ட கப்பல் நாளை நின்று பின்னேரம் புறப்பட இருக்கிறது. வேண்டியவர்களிடம் உன்னைப்பற்றி எல்லாம் கூறிவிட்டேன். இனி உன் இஷ்டந்தான் தேவை. உன் அனுமதி கிடைத்தால்தான் நான் தரும் சிபார்சுக் கடிதத்துடன் நீ கப்பல் ஏறலாம் ‘ என்று கூறிவிட்டுக் கேள்விக்குறியுடன் பேனாவும் கையுமாக அவனைப் பார்த்தார் டாக்டர் 

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது என்று கூறுவார்கள். நான் எதை மனதில் வைத்துக்கொண்டு உங்களைக் காண வந்தேனோ அதை நீங்களே கூறிவிட் டீர்கள். என் பூரண சம்மதத்தைத் தருகிறேன் டாக்டர். என் வாழ்க்கையில் நீங்கள் ஒரு தெய்வம். உண்மையான பக்தர்களுக்குத் தெய்வம் மனித வடிவில் வந்துதான் உதவும் என்று நான் சமய பாடத்தில் படித்திருக்கின்றேன். அப்படி மனித உருவில் வந்த தெய்வம்தான் நீங்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. எது எப்படியிருந்தாலும் நீங்கள் என் உள்ளக்கோயிலில் நிலைபெற்றுவிட்ட தெய்வம் டாக்டர் என்று ஆனந்தக் கண்ணீர் மல்க அவன் முழந் தாளிட்டு டாக்டரின் கால்களைக் கட்டிக் கொண்டபோது டாக்டரே ஒருகணம் திடுக்கிட்டார். 

அவனை உணர்ச்சியோடு பிடித்து நிறுத்திய அவர் தான் முன்கூட்டியே எழுதி வைத்திருந்த சிபார்சுக் கடிதத்தை அவனிடம் நீட்டிவிட்டு ரகு நீ நல்லவன். உன் மனம் அப்பழுக்கற்ற பத்தரைமாற்றுத் தங்கம். அதுதான் நீ நினைப்பது போல இறைவன் அருள்கிறார். நீ சுகமாகச் சென்று கீர்த்தியுடன் திரும்பி வாப்பா. திரும்பி வந்து உன் பிறந்த நாட்டுக்குப் புகழ் தேடித் தருவாய் என்ற நம்பிக்கை உண்டு. இந்தா கடிதம். கீர்த்தியோடும் புகழோடும் திரும்பி வா… 

டாக்டர் கூறி முடித்ததும் அவரிடம் கடிதத்தைப் பெற் றுக் கண்ணில் ஒற்றியபடியே பிரிய மனமில்லாமற் பிரிந்து சென்றான் ரகு. எவ்வித சிரமமுமில்லாமல் தன் இலட்சியம் ஒப்பேறிய மகிழ்ச்சியில் அவன் நடந்து சென்றபோதும் வெளியிட முடியாத ஒரு ஊமை வேதனை அவன் உள் ளத்தை உறுத்திக் கொண்டேயிருந்தது. அது உமா வைப் பற்றியதே. ஜெகநாதனுக்கு அவன் கொடுத்த வாக் குறுதி ஒரு புறமிருக்க அவளையிட்டு அவனுக்கிருந்த சொந் தக் கவலை அதிகமாக இருந்தது. தான் புறப்படுமுன் அவளை எப்படியாவது கண்டு அவளது எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ள அவன் மனம் துடித்தது. அவளைக் கண்டு பேசிக்கொள்ளாமல் போவதால் அவனுக்கு நிம்மதி யேற்படமாட்டாது என்பதையும் அவன் உணர்ந்திருந்தான். ஆகவே புறப்படுவதற்கு முன் உமாவை எப்படியாவது கண்டு பிடிப்பதே அவன் நோக்கமாகயிருந்தது. 

இரண்டு நாள்கள் கொழும்புப் பட்டணம் முழுவதும் அலைந்தும் அவனால் உமாவைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. அந்தப் பெரிய பட்டணத்தில் உமாவைக் கண்டு பிடிப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. இரண்டு நாட்போதும் எப்படியோ ஓடி மறைந்து அந்திப்பொழுது அவன் முன்னே அபயந் தந்தது. விடிந்தால் ஈழத்தில் அழ கிய கரையைவிட்டே அகன்றுவிடுவான். ஆனால் இழந்த நிம்மதியை அந்தப் பயணத்தினாற் பெறமுடியுமோ என்பது அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. உமாவை மட்டும் ஒருமுறை ஒரே யொருமுறை கண்டு கதைத்துவிட்டால் அவன் கவலைப்படுவதற்கு இனி இந்த உலகத்தில் எதுவுமே இருக்க முடியாது. நம்பிக்கை இழந்த நிலையில் அவன் இராப்பொழுதைக் கழித்தான். ஆயினும் கடவுள் மேல் இருந்த நம்பிக்கை அவன் உள்ளத்திற்குச் சாந்தியளித்தது. இதுகாலவரை எல்லாவற்றையும் நன்மையாக முடித்துவந்த தெய்வம் இனிமேலும் தன்னைக் கைவிடாது என்ற நம் பிக்கையில் அவன் தூங்கச் சென்றான். 

அன்றையப் பொழுதும் அவன் விருப்பமின்றியே புலர்ந்தது. அவன் அவசர அவசரமாக எழுந்து தன் காலைக் கடன்களை முடித்தான். இப்போது அவன் உள்ளத்தில் ஒரே போராட்டம். அன்று புறப்படும் கப்பலில் செல்வதா இல்லையா என்பதே போராட்டத்திற்குரிய பிரச் சனையாக அமைந்தது. உமாவைக் காணாமல் அவள் எதிர் காலத்தைப் பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமல் போவதை அவன் விரும்பவில்லைதான். ஆயின் அவள் தன் எதிர் காலத்தை நிர்ணயித்துக் கொண்டிருந்தால் அவன் என்ன செய்யமுடியும். அவன் வாழ்க்கையில் திரும்பவும் ஒரு புதிய அத்தியாயந் தொடங்கிப் பழைய கதையைப்போலத் தொடர்கதையாகியே விட்டால்……? 

அப்படியான ஒரு நிகழ்ச்சிக்கு இனிமேல் என் வாழ்க்கை யில் நான் இடங்கொடுக்க விரும்பவில்லை. எதுவும் விதிப் பிரகாரம் நடக்கட்டும். நான் இன்று புறப்பட்டேயாக வேண்டும் என்ற திட சித்தத்தோடு டாக்டர் ராஜன் கொடுத்த இரண்டொரு மேல் நாட்டுடைகளுடனும் அவன் செல்வதற்காயத்தமானான். அதற்கு முன் தங்களுக்கு ஆதரவு காட்டி இருப்பிடம் கொடுத்த இலட்சுமியிடம் விடைபெற்றுக் கொண்டான். இரண்டு நாள்களுக்கு முன் உமாவைத் தேடிச் சென்றபோது புனிதத்திடமும் நடந்த வற்றையெல்லாம் கூறி தான் போவது பற்றியும் பிரஸ்தாபித்திருந்ததால் அந்தக் கவலையும் அவனை விட்டு நீங்கியது. 

குறிப்பிட்ட நேரம் வந்ததும் கடவுளை மனதாரப் பிரார்த்தித்து விட்டு துறைமுகத்துக்குச் சென்றான். அங்கு டாக்டர்தான் அவனை முதலில் வரவேற்றார். அவர் அவனைக் கட்டித்தழுவி ஆசீர்வதித்துக் கப்பலுக்கு அழைத் துச் சென்று குறிப்பிட்டவர்களிடம் அவனை அறிமுகப் படுத்தினார். நீர் நிறைந்த கண்களுடன் அவரிடம் இருந்து அவன் பிரியாவிடை பெற்றான். பிறந்த மண்ணைவிட்டுப் பிரியும் கவலை பெரிதாக இருந்தபோதும் பிறந்த மண்ணில் தனக்கு இடமில்லை என்ற உணர்ச்சி அவனுக்குத் துணி வைக் கொடுத்தது. கப்பலில் இரண்டாந் தளத்தில் நின்று அவன் தன்னைச் சுற்றியிருந்த பரந்த கடலைப் பார்த்தான். தன்மானத்தைப் பறித்த கடல். தன் உயிரைக் காத்த கடல். இப்போ தனக்கு மீண்டும் வாழ்வளிக்க ஆரவாரித்து நிற்பது போன்றதோர் பிரமையில் அவன் தன்னை மறந்து நின்றான். 

கப்பல் புறப்படுவதற்குரிய எச்சரிக்கை கொடுபட்டதும் பிரயாணிகளை வழியனுப்ப வந்தவர்கள் இயந்திரப் படகு களில் ஏறிக் கரை திரும்பிக்கொண்டிருந்தனர். கப்பலை விட்டுப் பிரிந்து சென்ற படகுகள் அன்னப் புள்களைப் போல் எழிலாக மிதந்து சென்றன. அவற்றில் ஒன்றினுள் இருந்து யாரோ இருகரங்களையும் அசைத்து அவனுக்குப் பிரியா விடை கூறுவது போலிருந்தது. அவன் உற்றுப் பார்த்தான் அது சாட்சாத் டாக்டர் ராஜனேதான். சென்று வருகிறேன் டாக்டர் என அவன் பைத்தியக்காரனைப் போலப் பலமாகக் கத்தினான். 

அவன் குரல் எதிரொலிப்பது போன்றதோர் பிரமை. ஆனால் நிச்சயமாக அது அவன் குரல் இல்லை என்பதைப் புரிய அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அந்தக் குரல் ஒரு பெண்ணுக்குரியதாக இருந்தது. அதுவும் அவனுக்குப் பழக்கமாகிய குரல். அந்த இனிய ஓசை வந்த திசையை நோக்கி அவன் ஓடினான். மேல் தளத்தில் இருந்துதான் அது வந்தது என்பதைப் புரிந்து கொண்டு அதிகாரிகள் தடுத்ததையும் மதிக்காமல் மேல்தளத்தை அடைந்தான். அவன் கண்கள் மலர்ந்தன. உடலெல்லாம் ஒரே ஆனந்தப் பூரிப்பு. உமா..உமா நீயும் என் கூடவா வருகிறாய்…. என்று தன்னை மறந்தே கத்தி விட்டான். 

அதிர்ச்சிக்குள்ளாகிய உமா அவனைப் பார்த்து நீங்கள் என்றாள்…’எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு’ என்ற பாடல் அவன் உதடுகளிலிருந்து பதிலாக வந்தது. 

தனக்கு ஆதரவளித்த டாக்டர் ராஜன்தான் ரகுவுக்கும் தாங்கள் இன்னார் என்பதைப் புரியாமலே ஆதரவளித்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்ட உமா விதியின் விளையாட்டை நினைத்துச் சிரித்தாள். கப்பல் தன் பாட்டுக்குப் புறப்படத் தொடங்கியது.

(முற்றும்)

– எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு… (நாவல்), முதற் பதிப்பு: 1993, காந்தளகம், மறவன் புலவு, சாவகச்சேரி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *