காற்றின் ரூபம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 23, 2020
பார்வையிட்டோர்: 26,529 
 

தொலைபேசி ஒலி எழும்ப, காவல் ஆய்வாளர் விக்ரம் ”ஹலோ யாரு பேசுறது?” “சார் நான் சுலூரிருந்து பேசுறேன். இங்க ஒரு டேட் பாடி கிடக்குது சார். நீங்க உடனே வரணும்” என தொலைபேசியின் மறுபுறத்திலிருந்து குரல். “சரி நீங்க யாரு? உங்க பேர் என்ன?” ஆய்வாளரியின் அடுத்த கேள்விக்கு, “சார் என் பேரு சரவணன். நான் ஒரு கார் மெக்கானிக்” என பதில் சொல்ல “சரி இந்த டைம்ல உங்களுக்கு அங்க என்ன வேலை” அடுத்த கேள்வியை கேட்க, “6 மணிக்கு எனக்கு ஒரு கால் வந்தது. கார் ஸ்டார்ட் ஆகல்ல. இந்த அட்ரஸ்க்கு வாங்கன்னு. ஆனா மழை ரொம்ப அதிகமாக இருந்ததால, நான் வர எட்டு மணியாச்சு” என சரவணன் பதட்ட நிறைந்த குரலுடன் மறுபுறம் அலைபேசியில் கூற, அதை கவனித்து கொண்ட விக்ரம், சரவணின் அலைபேசி என்னை குறித்து கொண்டு, மேலும் முன்று காவலருடன் விரைந்து சென்றார்.

வரும் வழியில் சரவணன் சொன்ன முகவரியை, ஒரு வயதான பெரியவரிடம் விசாரித்தார் விக்ரம். அதற்கு அவர் “அய்யா இப்படியே கொஞ்சம் தூரம் போனிங்கன்ன, வலதுபுறம் ஒரு காட்டு வழி பாதை வரும். அந்த வழியில் தொடர்ந்து போன, இந்த விடு வரும். சரி அங்க ஏன் சார் போறிங்க. அது ஒரு மாதிரியான பங்களா. ஏதோ பேய் நடமாட்டம் இருக்குன்னு பேசிக்கிறாங்க.” “சரி நன்றி பெரியவரே!! நாங்க பாத்துக்கிறோம்” வண்டியின் முன் விளக்குகள் எரிய, முன் கண்ணாடி துடைப்பான் மழை நீரை துடைக்கும் சத்தம் “சர் சர்” என கேட்க வேகமா புறப்பிட்டது அவர்களது வாகனம். வலது புறம் காட்டு வழியில் வண்டி திருப்பியது. இருபுறமும் மரங்கள் சூழ்ந்த அடர்ந்த காடு. மழை வேறு பொழிவதால், கும்மென்ற இருட்டு, விலங்குகளின் சத்தம் வேறு ஆளையே பயமுறுத்தியது. பெரியவர் கூறிய விஷயம், உடன் வந்த காவலரின் மனதில் சிறு கலக்கத்தை எற்படுத்தியது. இரவு நேரம் என்பதாலும், மழையும் அதிகமாக பொழிந்ததாலும் சேரும் நேரம் பத்து மணியை எட்டியது.

இரும்பினால் செய்யப்பட்ட ஒரு பெரிய கதவின் ஓரத்தில் சரவணன் நின்று கொண்டிருத்தான். காவலரின் வாகனத்தை பார்த்தவுடன், ஒடி வந்த சரவணன், விக்ரமை பார்த்து “வணக்கம் சார்” “பாடி எங்க இருக்கு” என விக்ரம். ‘சார் கேட்லருந்து உள்ள கொஞ்சம் தூரம் போகணும். இந்த வீடு பெரிய பங்களா. ஆனா யாரையும் நான் பார்க்கல. பாடி அந்த வீட்டு கதவின் முன்னாடி தான் இருக்கு” என சரவணன் கூற. “கேட்ட ஓபன் பண்ணுங்க. உள்ளே போய் பார்க்கலாம்” என வீட்டின் முன் சென்றனர். “போதிய வெளிச்சம் இல்லாமல் ஒரே இருட்ட இருக்கு. எல்லாரும் பார்த்து வாங்க” “நீங்க வரும் போதே லைட் இல்லையா சரவணன்?” என விக்ரம் கேட்க, “நான் வரும் பொது லைட் இருந்தது. மழை அதிகமானதால் கரண்ட் கட் ஆயிடுச்சுன்னு நினைக்கிறான் சார்” சரவணன் பதில் கூறினான்.

“பாடிய சுத்தி போட்டோ எடுங்க. மத்த எல்லா ரூம்மையும் டார்ச்சி லைட் அடிச்சி செக் பண்ணுங்க. கவனம் எதும் மிஸ் ஆயிடக்கூடாது” என உத்தரவிட்டார் விக்ரம். இவ்வளவு பெரிய வீட்டில இவர் மட்டும் தனிய இருந்திருப்பாரா? மற்றவர்கள் எங்கே? இல்ல எல்லாரும் வெளியூர் போயிருக்கலாமா? காலையில தான் எல்லாத்தையும் விசாரிக்கணும் என பல கோணத்தில் சிந்தித்து கொண்டிருந்தார் விக்ரம். “உங்க மொபைலில் எப்போ கால் வந்துச்சுன்னு சொல்ல முடியுமா. அந்த நம்பர எனக்கு கொடுங்க சரவணன்.” என விக்ரம் கேட்க “இந்த நம்பர்ல இருந்து தான் மாலை ஆறு மணிக்கு கால் வந்தது.” அந்த நம்பரை விக்ரம் தனது கைபேசியிலிருந்து அழைத்தார். அந்த அழைப்பு மணி, இறந்தவரின் சட்டைப்பையிலிருந்து ஒலித்தது. உடனே அந்த கைபேசியை எடுத்து அழைப்பை சரி பார்த்தார். சரியாக ஆறுமணிக்கு சரவணனுக்கு அவர் அழைத்து இருக்கிறார்.

இறந்தவரின் வண்டியை சோதனை செய்து பார்த்ததில் உண்மையாகவே வண்டி கோளாறாக இருந்தது தெரியவந்தது. இருப்பினும் விக்ரமிற்கு சரவணன் மீதான சந்தேகம் குறையவில்லை. “சார் கொஞ்சம் சீக்கிரம் வந்து உள்ள பாருங்க” விக்ரமும் சரவணனும் உள்ளே விரைந்தனர். இருட்டறையில் டார்ச்சி லைட் வெளிச்சத்தில் ஒரு பெண்ணின் உடல் கிடந்தது. மா நிறம், முற்பத்தைந்து வயது மதிக்கதக்க பெண் இறந்து கிடந்தாள். “உடனடியா இங்க லைட்டிங் போடனும். கான்ஸ்டபிள் உடனே ஈபீக்கு போன் பண்ணி கரண்ட் போட சொல்லுங்க”. “சார் ஏற்கெனவே போன் பண்ணியாச்சு. ஆனா மரம் விழுந்தால நாளைக்கு தான் கரண்ட் வருமுன்னு சொல்லிடாங்க”. “சரி எல்லா ரூம்மையும் தேடுங்க. கூடுதலா போலிச நான் வர சொல்லுறேன். இந்த பாடியையும் ஃபுல்லா மார்க் பண்ணிட்டு, போட்டோ எடுங்க” என பரபரப்புடன் செயல் பட்டார் விக்ரம். மணி நள்ளிரவு ஒன்னை எட்டியது. அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க பட்டு ஆம்புலன்ஸ் அனுப்பும் படி வேண்டுகோள் விடப்பட்டது. அதற்குள் பத்திரிகைகார்களுக்கும் தகவல் தெரிந்து வர ஆரம்பித்தனர்.

திடீரென மின்சாரம் வர, வீட்டின் முன் பின் என நாலாபுறமும் வெளிச்சம் வந்தது. அவ்வீடு ஜெக ஜோதியாய் மீன்னியது. அவ்வளவு அழகாக மாளிகையை, அடர்ந்த காடுக்கு நடுவில் யாரும் கண்டிருக்க முடியாது. மழையும் சற்று குறைந்தது. விக்ரமும், மற்றவர்களும் ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். அதில் ஓர் அறையில் புகைப்படம் ஒன்று விக்ரமின் கண்ணில் தென்பட்டது. அந்த புகைப்படத்தில் இரு குழந்தையுடன் இறந்த இருவரும் தம்பதியாக இருந்தனர். மேலும் சில புகைப்படங்கள் இறந்த இருவரும் தம்பதிகள் என்பதை உறுதி செய்தது. அதில் ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் இருந்தனர். அந்த புகைப்படம் வேறு ஏதோ மாநிலத்தில் எடுக்க பட்டது போல் இருந்தது. வேறு சில அறைகளையும் சோதனை செய்து பார்த்த பொது, அவர்கள் வடமாநிலத்திலிருந்து இங்கு புதிதாக வந்தது போல் தெரிந்தது.

மணி விடியற்காலை நான்கு. கூடுதல் காவல்துறை அதிகாரிகள் வந்து இறங்கினர். அவர்களுடன் மோப்ப நாய்கள், கூடுதலான காவலர்கள் வரவழைக்கபட்டிருயிருந்தனர். அவர்களை தொடர்ந்து பத்திரிகையாளர்களும், வந்து போட்டோ எடுக்க ஆரம்பித்தனர். திடீரென மோப்ப நாய்கள் வீட்டிற்கு உள்ளை வராமல் காவலர்களை வெளியே இழுத்தன. தொடர்ந்து குறைத்து கொண்டே இருந்தது. ஆனால் காவலர்கள் அதை வழுகட்டாயமாக உள்ளை இழுத்தனர். நாய்கள் சில இடங்களையும், சில அறைகளையும் பார்த்து குறைத்து கொண்டே இருந்தது. அவ்விடத்தை விட்டு நகராமல் குறைத்த வண்ணம் நின்றது. “இந்த நாய் ஏன் இப்படி பண்ணுதுன்னு தெரியலையே. வழக்கத்துக்கு மாறாக குறைச்சிகிட்டே இருக்கு” என விக்ரம் கேட்க “தெரியல சார். இங்க தான் முதல் முறையாக இப்படி பண்ணுது. உள்ள வர மறுக்குது” என நாயை பராமரிக்கும் காவலாளி கூறினார்.

“சார்ர்ர்ரர்…..” என பின் புறமாக ஒரு குரல் கேட்க, உடனே விக்ரம் பின் பக்கம் நோக்கி ஓடினார். அங்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. பனிரெண்டு வயது மதிக்க ஒரு சிறுவனின் உடல் பிணமாக கிடக்க, தன் தலையில் இருந்த தொப்பியை கழற்றினார் விக்ரம். “உடனே போட்டோ கிராப்பரை போட்டோ எடுக்க சொல்லுங்கோ, பாடியை சுத்தி மார்க் பன்னுங்க, கை ரேகை எடுங்க” அடுத்தடுத்த உத்தரவு பிறப்பிக்க பட அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது. ஏற்கெனவே பார்த்த புகைப்படத்தில் இருந்த நால்வரின் மூவர் இறந்தது உறுதியாயிற்று. ஆனால் அதில் இருந்த அந்த சிறுமி எங்கே? என்ற கேள்வி அவரின் மனதில் தோன்றியது. “கான்ஸ்டபிள் இங்க ஒரு பெண் குழந்தை இருக்கனும். தேடுங்க க்குயிக்” விக்ரமின் உத்தரவின்படி நாலா புறமும் தேடல் தொடர்ந்தது. நேரம் காலை ஆறுமணி முழுமையாக தேடியும் அந்த பெண் குழந்தை மட்டும் காணவில்லை. “சார் இது திட்டமிட்ட கொலையா? இதை யார் செஞ்சிருப்பா? யாரையாவது சந்தேக படுரின்களா? இங்க நாலு பேர் இருந்தது போல் தெரியுது. ஆனா ஒரு குழந்தை மட்டும் கானோம்? இதற்கு போலீஸ் தரப்பில் என்ன சொல்ல போறிங்க? என பத்திரிக்கையாளர்கள் கேள்வி கணைகளை தொடுத்தனர். அவரை சுற்றியிருந்த பத்திரிக்கையாளர்களுக்கு “விசாரிச்சிட்டு இருக்கோம். சீக்கிரம் உண்மை வெளிச்சத்துக்கு வரும்”. அவ்விடம் விட்டு நகர்ந்த விக்ரம் தினமும் பால், நாளிதழ், காய்கறி போடுவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வர ஒரு காவலரை அனுப்பினார். இறந்த உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஒன்றின் பின் ஒன்றாக வாகனத்தில் புறப்பிட்டு சென்றது.

காலை பத்து மணிக்கு விக்ரம் விசாரணையை துவங்க, முதலில் சரவணனை விசாரித்தார். ”சரிய மாலை ஆறுமணிக்கு கால் வந்ததாக சொல்றிங்க. அப்போ அவர் பெயர் சொல்லிருப்பார்ல”. “ஆமாம் சார் சொன்னாரு. ஆனால் ஞாபகம் இல்ல. கால் சரியாக ஆறுமணிக்கு தான் வந்தது என் மொபைல் பாருங்க” என தனது கைபேசியை நீட்டினான். கைபேசியை வாங்கி மீண்டும் ஒரு முறை சரி பார்த்து கொண்ட விக்ரம், அடுத்து பால் போடும் சண்முகத்தை விசாரித்தார். “நீ எத்தனை நாளா பால் போடுற? அவங்கள எப்படி தெரியும்?” “சார் நாலு மாசத்துக்கு முன்னாடி என் கடைக்கு அனில் சார் வந்தாரு. தினமும் ஒரு லிட்டர் பால் வீட்டுக்கு போடுன்னு, வீட்டு முகவரிய கொடுத்தார். ஆனா நான் இதுவரைக்கும் வீட்டுக்குள்ளே போனதே இல்ல. கேட்லேயே ஒரு பை தொங்கும். அதுல போட்டுடுவேன். மாசம் ஒன்னாம் தேதி கடைக்கு வந்து பணம் கொடுத்துடுவார். அவருக்கு சரிய தமிழ் பேச வராது. காலைல நேரமா பால் போடுவேன். ஆனால் அங்கு வேற யாரையும் பார்த்ததில்லை” என விகரமின் கேள்விக்கு பதில் கூறினார் சண்முகம்.

சண்முகத்தின் பதிலிலிருந்து இறந்தவரின் பெயர் அனில் என குறித்துக்கொண்டு, காய்கறி விற்கும் பொன்னம்மாளை விசாரித்தார். “அங்கு நெறைய பங்களா வீடுகளுக்கு காய்கறி நான் தான் கொண்டுபோய் கொடுப்பேன். ரொம்ப நாளா அந்த வீடு பூட்டியே தான் இருந்தது. நாலு மாசத்துக்கு முன்னாடி தான் வந்தாங்க. நான் இதுவரைக்கும் வீட்டுகுள்ள போனதில்ல. ஏன்னா, தினமும் காலைல ஒன்பது மணிக்கு, குழந்தைகள ஸ்கூல் வண்டில ஏத்திவிட வருவாங்க. அப்ப என்கிட்ட காய்கறி வாங்கிக்குவாங்க. அந்தம்மா சரிய தமிழ் பேச மாட்டங்க”. பொன்னம்மாவின் பதிலில் குறிக்கிட்ட விக்ரம் “அந்த அம்மா பெயர் என்ன? அவங்க குழந்தைங்களின் பெயரென்ன? அது எந்த ஸ்கூல் வண்டின்னு தெரியுமா?” கேள்வி எழுப்பினார்.

“அந்த அம்மா பெயர் அமலா. குழந்தைங்க பெயர் தெரியாது. ஸ்கூல் பேரும் தெரியாதுங்க சார். ஆனா மஞ்சள் கலர் வண்டி. அந்த பக்கம் உள்ள வீட்டு குழந்தைங்களும் அந்த வண்டில தான் போவாங்க.” அவர்கள் கூறிய தகவல்களை சேகரித்து கொண்ட விக்ரம், “பேப்பர் போடுர ஆள் வரல? என்ற கேள்விக்கு “சார் அந்த வீட்டுக்கு யாரும் பேப்பர் போடுரதில்ல” பதில் கூறினார் காவலர். “ஓகே உடனே அந்த குழந்தைகள் படித்த ஸ்கூல் எங்க இருக்கு விசாரிங்க” என உத்தரவிட்ட விக்ரம். “நீங்க எல்லாம் இப்போ போகலாம். ஆனால் விசாரணைக்கு தேவைப்பட்டால் வரணும்” என அனுப்பினார்.

மணி நண்பகல் பனிரெண்டை எட்டியது. குழந்தைகள் படித்த பள்ளிக்கூடத்தை கண்டுபிடித்து விசாரித்தனர். அதில் குழந்தைகளின் பெயர் பிரியன் மற்றும் பிரித்தி என தெரிய வந்தது.அவர்கள் பெற்றோரின் பெயரையும் அணில் அமலா என சரி பார்த்து கொண்டனர். குழந்தைகள் இருவரும் நேற்று வரைக்கும் பள்ளிகூடம் வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. “அனில் என்ன வேலை பார்க்கிறார்? எங்க பார்க்கிறார்? ஏதும் தெரியுமா? “ என விக்ரம் தலைமை ஆசிரியரிடம் விசாரித்தார். “அவர் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர், அவங்க ஆன்லைன்ல இன்டர்நெட் மூலமாக இந்த வீட்டிற்கு வந்ததாக சொன்னாங்க. அவங்க வட இந்தியாவிலிருந்து வந்திருந்தாங்க, தமிழ் சரியா பேச தெரியாது. கொஞ்சமா பேசுவாங்க. இது சி பி சி ஸ்கூல். இங்கு நிறைய இந்த மாதிரி நிறைய நார்த் இந்தியன்ஸ் படிக்கிறாங்க” என பதில் அளித்தார் ஆசிரியர். “அவர்களை பற்றி வேறு ஏதாவது தெரியுமா? போட்டோ கிடைக்குமா?“ விக்ரமின் அடுத்த கேள்விக்கு தன் முன் இருந்த கண்ணாடி கோப்பையில் இருந்த தண்ணிரை அருந்திவிட்டு, பதில் சொல்ல ஆரம்பித்தார் ஆசிரியர். “சமீபத்தில் ஆசிரியர் தினத்துக்கு வந்திருந்தபோது எடுத்த போட்டோ இருக்கு. தரோம், வேற எந்த விஷயம் தெரியாது. ஆபீஸ் ரூம்ல போட்டோ இருக்கு. நான் சொன்னதாக சொல்லி நீங்க வாங்கிக்கலாம்”. வாங்கிய போட்டோவுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தார் விக்ரம்.

அப்போ பெண் குழந்தை மட்டும் எங்கே? யாரும் கடத்தியிருக்க வாய்ப்பு இருக்கா? என பல கோணங்களில் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். “சார் இந்த வீட்டில் ரொம்ப வருசமா யாருமே இல்ல. இப்போ சில மாசமா தான் யாரோ இருந்தாங்க. ஆனா அவங்களை பத்தி எதுவும் தெரியாது. ஆனா அந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருக்கறதா சொல்லுவாங்க. அந்தவழியா போகும் போது சில நேரத்தில நானே சத்தம் கேட்டுருக்கேன்” என்று அதில் ஒருவர் பதில் அளித்தார். விக்ரம் தனது கைபேசியில் “கான்ஸ்டபிள் போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட் வந்துருச்சா. அதுல என்ன சொல்லிருக்காங்க“.

அதற்கு காவலர் “சார் இறந்த உடலில் யாருடைய கைரேகையும் இல்ல, வீட்டில் நடந்த சோதனையில் நான்கு பேரின் கை ரேகை பதிஞ்சிருக்கு. அதுல ஒரு கை ரேகை காணாமல் போன பெண் குழந்தையின் கை ரேகை. மொபைல்ல கூட அந்த நான்கு பேரின் கைரேகையை தவிர வேற யாருடைய கைரேகையும் இல்லை. மூணு பேருமே, மூச்சி திணறி இறந்திருக்காங்க. அதனால தற்கொலைக்கு சாத்தியமில்லை. ஆனால் கொலை செய்ததற்கான எந்த தடயமும் இல்லை. இவர்கள் மூன்று பேரும் ஒரே மாதிரி, ஒரே நேரத்தில் இறந்திருக்காங்க. அதுவும் சரியா நாலுமணிக்குன்னு ரிப்போர்ட்ல சொல்லிருக்காங்க சார்”.

இதை கேட்டவுடன் கைபேசியின் இணைப்பை துண்டித்தார். “நான்கு மணிக்கு இறந்துருக்காங்கன்னு ரிப்போர்ட் இருக்கு. ஆனா சரவணனுக்கு ஆறு மணிக்கு கால் பண்ணினது யாரு?. அதுவும் அணிலின் கைபேசிலிருந்து. ஆனால் வேற யாருடைய கை ரேகையும் இல்லாமல்?” என விக்ரமின் மனதில் கேள்விகள் பல கோணத்தில் சிந்திக்க வைத்தது. உடனே சரவணுக்கு கைபேசியில் அழைத்து “உங்களுக்கு அணில் கிட்டயிருந்து வந்த போன்ல, அவர் தமிழ் எப்படி பேசினார் சொல்ல முடியுமா?”. “சார் அவர் மிக தெள்ள தெளிவாக பேசினார்“. சரவணின் பதிலில் குறிக்கிட்ட விக்ரம் “நீங்க சொன்ன வாக்குமுலத்தில் அவருடைய பெயரை மறந்ததாக சொன்னிங்க. அப்போ எப்படி சரியாக தமிழ் பேசினாரு சொல்லுறிங்க” மறுபக்கத்தில் சரவணன் “சார் அவருடைய பெயர் சரியாக ஞாபகமில்ல. ஆனா மிக தெளிவாகத்தான் தமிழ் பேசினார். அவர் வார்த்தையில் எந்த பிழையும் இல்லை.” பதிலை கேட்டவுடன் கைபேசியின் அழைப்பை துண்டித்தார்.

விக்ரமிற்கு மீண்டும் குழப்பம். நாம விசாரித்ததில் அணிலுக்கு சரிய தமிழ் பேச வராது. ஆனால் சரவணனிடம் அவர் சரிய தமிழ் பேசினதா சொல்லுறான். பிரேத பரிசோதனையில் சரிய நான்கு மணிக்கு அணில் இறந்ததா சொல்லிருக்காங்க. அப்போ ஆறு மணிக்கு காரு ரிப்பேர்ன்னு கூப்பிட்டது யாரு? அணிலின் கைபேசியிலும் எந்த கைரேகையும் இல்லை. பெண் குழந்தையின் நிலையென்ன தெரியல? இன்னும் வேற சில ஆதாரங்களையும் சேகரிக்கணும். ரவியின் உதவியை நாட முடிவு செய்தார்.

ரவி தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்திவருகிறார். அவர் பல கொலையில் துப்பறிந்து காவல் துறைக்கு உதவியாக இருந்திருக்கிறார். அமானுஷ்யங்களை பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறார். ரவிக்கு ஆனந்தி என்ற அன்பான மனைவி, அஸ்வின் எட்டாம் வகுப்பு படிக்கும் மகன் மற்றும் அனித்தா நான்காம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையுடன் வசித்துவருகிறார்.

மறுநாள் காலையில் ரவியை சந்தித்தார் விக்ரம். நடந்தவற்றை விவரித்தார். “இந்த மாதிரி வேற எங்கயாவது, குறிப்பா அந்த சுற்றுவட்டாரத்தில் கொலை நடந்துருக்கான்னு பாருங்க.” ரவியின் யோசனையை கேட்ட விக்ரம், உடனே எல்லா காவல் நிலையத்துக்கும், மேல் அதிகாரிகளுக்கும் தெரிவித்தார். ஒரு வாரம் கடந்த பின் கடிதம் ஒன்று மேல் அதிகாரியிடமிருந்து வந்தது. அதில் இதுபோன்ற வழக்கு கலூர் காவல் நிலையத்தில் பதினைந்து வருடத்தின் முன் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், அதில் மேலும் சில குறிப்புகளும் இருந்தது. அவர் வேலை செய்யும் அதே காவல் நிலையத்திலேயே பதிவுவாகிவுள்ளது என்பதும், அவருக்கு எதிர்பார்க்காத வகையில் அதற்சியாகத்தான் இருந்தது.

விக்ரம் கடிதத்தை படித்தவுடன், ரவியை காவல் நிலையத்துக்கு வரவழைத்தார். பழைய கோப்புகளை தேட ஆரம்பித்தனர். “சார் இதுதான் நீங்க கேட்ட பைல்” என உதவியாளர் நீட்ட, அதை வாங்கி ஆர்வமாக புரட்டினர் இருவரும். அதில் அடுத்தடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. “ரவி இங்க பாருங்க. அதே அட்ரஸ் போட்டுருக்கு” அதை பார்த்த ரவி “ஆமாம் இந்த சம்பவமும் இதே வீட்டில்தான் நடந்துருக்கு. ஆனா பதினைந்து வருடத்திற்கு முன்பு. மேலும் படிச்சாதான் நடந்தது என்னனு புரியும்” இருவரும் படிக்க ஆரம்பித்தனர் அதில் நாற்பது வயது ஆண், முப்பத்தைந்து வயது பெண், பதினைந்து வயது சிறுவனும் இறந்து உள்ளனர். அதிலும் எட்டு வயது பெண் குழந்தை காணவில்லை என்றும், அவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தது.

உடனே ரவி “போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட் படிக்கலாம்” என விக்ரமிடம் கூற விக்ரம் அதை சத்தமாக படித்தார். அதில் மூவரும் மூச்சி திணறி இறந்திருப்பதாகவும், தற்கொலை இல்லை என்றும். ஆனால் கொலைக்கான எந்த ஆதாரமும் இல்லை என குறிப்பிட்டு இருந்தது.

“இந்த கொலையும், இப்போ நடந்த கொலையும் ஒரே மாதிரி இருக்கு. ஆனா பதினைந்து வருட வித்தியாசம். இது எப்படி முடியும்” அதை கேட்ட ரவி “அப்பவும் ஒரு பெண் குழந்தை கானோம். இப்போவும் ஒரு பெண் குழந்தை கானோம்.. சரி இந்த கொலையே யார் முதலில் பார்த்தா. அந்த சாட்சி யாருன்னு படிச்சு பாருங்க” அதை கேட்ட விக்ரம் படிக்க ஆரம்பித்தார்

“சரி இந்த கொலையே யார் முதலில் பார்த்தா? அந்த சாட்சி யாருன்னு படிச்சு பாருங்க”. விக்ரம் படிக்க ஆரம்பித்தார். அதில் எலக்ட்ரீசியன் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. மின் வாரியத்திற்கு, தொலைபேசியில் “வீட்டில் மின்சாரம் இல்லை” என அழைப்பு வந்ததால், தான் அங்கு சென்றதாக வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார் என படித்து முடித்தார் விக்ரம். அதை கவனித்த ரவி “அப்போ லேண்ட் போன்லயிருந்து இ.பி ஆபீசுக்கு கூப்பிட்டு இருக்காங்க. இப்போ செல் போன்லயிருந்து மெக்கானிக் கூப்பிட்டு இருக்காரு. அந்த சம்பத்துக்கும் இந்த சம்பத்துக்கும் 15 வருட இடைவெளி. அதை தவிர வேறு எந்த பெரிய வித்தியாசம் இல்ல.”

“நான் உங்கிட்ட சில விஷயம் சொல்ல விரும்புகிறேன். கொலை நடந்த அன்று மோப்ப நாய் கொண்டு வந்தாங்க. ஆனால் அந்த நாய்கள் உள்ளே வர மருத்துருச்சு. கட்டாயமாக இழுத்து வந்தாங்க. நாய்கள் போறவரைக்கும் குரைத்து கொண்டே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. நான் விசாரிக்க போகும் முன் ஒரு பெரியவரிடம் முகவரி விசாரிச்சேன். அப்போ அவர் அந்த விட்டில பேய் இருக்குன்னு சொன்னாரு. அது மட்டுமில்லாமல், நான் அக்கம் பக்கத்துல விசாரிச்சேன். அவங்களும் அதே மாதிரி சொன்னாங்க. ஆனா இந்த காலத்திலும் இப்படி எல்லாம் இருக்குமா?“ விக்ரம் வியப்புடன் கேட்டார். அதற்கு “இந்த உலகத்தில் அமானுசயம் அதிகம் இருக்கு. அதை பற்றி நான் நிறைய ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு இருக்கிறேன். இந்த சம்பவத்திலும் இது போன்ற நிறைய மர்மம் இருக்கிற மாதிரி இருக்கு” ரவி பதில் சொன்னார்.

“அப்போ அமானுஷயத்தால் செல்போன், கம்ப்யூட்டர் எல்லாத்திலும் வேலை செய்ய முடியுமா?“ என்ற விக்ரமின் கேள்விக்கு “ஏன் முடியாது? அவைகளால் வேறு ஒரு உருவத்திலோ, உடலிலோ புகுந்து அவைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்” என பதில் உரைத்தார் ரவி. “அன்று மெக்கானிக் சரவணனுக்கு செல் போன்ல கூப்பிட்டதும் அமானுசயமா இருக்குமா? அப்படினா எந்த உருவத்தில் இருக்குதோ, அந்த உருவத்தின் கை ரேகை கிடைத்திருக்கணுமே?” கேள்வியே எழுப்பினார் விக்ரம். “எடுக்க பட்ட கை ரேகையில் ஒரு பெண் குழந்தை கைரேகையும் இருந்தது. ஆனா பெண் குழந்தை கிடைக்கவில்லையே!!.” ரவி பதிலை சொல்ல,

குறிக்கிட்ட விக்ரம் “அப்போ அந்த பெண் குழந்தை அமானுஷயமான்னு சந்தேகம் உங்களுக்கு இருக்கா? அப்படினா இதற்கு முன்னாடி நடந்த கொலையிலும் ஒரு பெண் குழந்தை காணவில்லை. அதுவும் அமானுஷயம்ன்னு சொல்ல முடியுமா?” மீண்டும் கேள்வியை எழுப்பினார் விக்ரம். அதற்கு “இப்போ தானே மர்மத்தை தேட ஆரம்பிச்சிருக்கோம். கண்டிப்பாக விடை கிடைக்கும். அப்போ அது உங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக கூட இருக்கலாம்” என ரவி பதில் சொல்லிவிட்டு சிரித்தார்.

“சார் ஹெட் ஆபீஸ்லிருந்து ஒரு லெட்டர் வந்திருக்கு” ஒரு கடிதத்தை நீட்டினார் துணை காவலர். அதை வாங்கிய விக்ரம் பிரித்து படிக்க ஆரம்பித்தார். கடிதத்தில் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அதில் இதை போன்று கொலை வழக்கு வெள்ளூர் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. அதற்கான எப் ஐ அர் வெள்ளூர் காவல் நிலையத்தில் பெற்று கொல்லாம் என குறிப்பிட்டிருந்தது. படித்தயுடன் “வாங்க ரவி வெள்ளூர் போயி பார்க்கலாம். கண்டிப்பா இந்த வழக்கில் ஒரு திருப்பம் அங்கு கிடைக்கும்னு நினைக்கிறேன். இதை போல வேறு ஊரில் கொலை நடந்திருக்கும் என்றால், கண்டிப்பா அமானுஷயமாக இருக்க வாய்ப்பே இல்லை’ விக்ரம் கூறினர்

இருவரும் வெள்ளூர் காவல் நிலையத்துக்கு விரைந்தனர். வெள்ளூர் காவல் நிலைய ஆய்வாளரை சந்தித்து ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொண்டனர். கடிதத்தையும் அதிலுள்ள விசயத்தையும் கூறினார் விக்ரம். தேவையை புரிந்துகொண்ட வெள்ளூர் ஆய்வாளர் பதிவேட்டை புரட்டி பார்த்தார். அந்த வழக்கு 1985ம் ஆண்டு பதிவாகி இருந்தது. உடனே எப் ஐ அர் தேடி எடுக்க உத்தரவிட்டார்.

எப் ஐ அர் ஆர்வத்துடன் வாங்கிய விக்ரம் படிக்க ஆரம்பித்தார். அதில் முதல் பக்கத்தில் சம்பவம் நடந்த தேதி பெயர்கள் எழுதப்பட்டிருந்தது. தனபால் வயது 40, மனைவி சுமதி வயது 35, மகன் சிறுவன் ராஜ் வயது 15 மற்றும் சாரதா வயது 35 இறந்திருப்பதாகவும், ரத்னா என்ற எட்டு வயது பெண் குழந்தை காணவில்லை என குறிப்பிட்டு இருந்தது. “இந்த சம்பவத்திலும் பெண் குழந்தை காணவில்லையே!! அப்போ கண்டிப்பாக இது ஏதோ பெண் குழந்தை கடத்தல் கும்பலின் வேலையாக இருக்க வாய்ப்பிருக்கு” விக்ரம் ரவியிடம் கூறினார். அதற்கு ரவி தலையை மட்டும் அசைத்தார். ஆனால் அவரின் மனதில் வேறு ஏதோ சிந்தித்து கொண்டிருந்தார். அடுத்த பக்கத்தை படித்த விக்ரமின் கண்கள் சிவந்தன. “ஓஹ மை காட் ரவி இதை படித்து பாருங்க” அதில் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது…

அதில் இருந்த முகவரியும், தற்போது சம்பவம் நடந்த வீட்டின் முகவரியும் ஒன்றேதான். “அப்போ ஏன் இந்த வழக்கு கலூர் போலிஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யவில்லை” ரவியின் சந்தேகத்துக்கு ”இந்த வழக்கு 1985ம் வருடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சுலூரில் ஸ்டேஷன் 1990ல திறந்திருக்காங்க. இந்த வழக்கு அந்த சமயத்தில் வெள்ளூர் காவல் வட்டத்தில் இருந்திருக்கும்.” ஆய்வாளர் பதிலை புரிந்து கொண்டார் ரவி.

தனபால் என்பவர் சாரதா என்ற பெண்ணை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். கத்தியில் உள்ள அவரின் ரேகையை வைத்து உறுதி செய்திருக்காங்க. தனபால், அவரின் மனைவி மற்றும் மகன் ஒரே நேரத்தில் மூச்சி திணறி இறந்திருக்கிறார்கள். அவர்கள் தற்கொலை செய்யவில்லை, ஆனால் கொலைக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை மற்றும் அதில் பெண் குழந்தை மட்டும் காணவில்லை. தனபால் என்பவர் சிங்கப்பூரிலிருந்து வந்து இந்த வீட்டை வாங்கி இருப்பதாகவும், சாரதா என்ற பெண் வீட்டு வேலைக்காரியாக இருந்ததாகவும் எப் ஐ ஆரில் கூறிப்பிட்டு இருந்தது.

“இந்த மூன்று சம்பவத்திலும் பல விசயங்கள் ஒரே மாதிரி ஒத்து போகுது”. “எஸ் எனக்கும் அப்படித்தான் தோணுது. எனக்கு அமானுஷயத்தில் நம்பிக்கை இல்ல ரவி. ஆனால் இப்போ இதெல்லாம் பாத்தா. ஏதோ இருக்குமோன்னு தோணுது” என்றார் விக்ரம்.

“நீங்க சொன்ன பல விசயத்தில் நாய் உள்ள வராததும், பக்கத்தில் வீட்டில் சிலர் சொன்ன விஷயமும், போஸ்ட் மாட்டம் ரிபோர்ட் பார்க்கும்போதும் அந்த வீட்டில சம் திங் இஸ் ராங்ன்னு தோணுது. வாங்க விக்ரம் புறப்பிடலாம்” என இருவரும் வாகனத்தில் புறப்பிட்டனர்

“நான் அந்த வீட்டில் தங்கி, இந்த சம்பவத்தை பற்றி ஆராய்ச்சி பண்ணலாம்ன்னு நினைக்கிறேன். அதற்கு நீங்க தான் அனுமதி வாங்கி தரனும்” அனுமதி கேட்டார் ரவி. “அந்த வீட்டின் தற்போதைய உரிமையாளர் யாரென்று தெரியவில்லை. யாரும் இதுவரைக்கும் வரவுமில்லை. அதனால தாராலமா நீங்க தங்கலாம். ஆனால் 15 நாள் காத்திருக்கணும். ஏன்னா இப்போ தான் அங்க அசம்பாவிதம் நடந்துருக்கு. போர்மாளிட்டிஸ் இருக்கு. முடிஞ்சவுடன் சொல்றேன். வேற யாரும் வந்தால் நான் பேசிக்கிறேன். ஆனால் நடந்த சம்பவங்கள் பார்த்தா உங்களுக்கு பயமில்லையா? நீங்க கண்டிப்பா இந்த ரிஸ்க் எடுக்கணுமா?” என விக்ரம் கேட்க, “அங்கு அமானுஷ்ய சக்திதான் இருக்குன்னு முழுமையாக சொல்ல முடியாது. ஆனால் அப்படியும் இருக்கலாம். நான் அமானுஷயத்தை பற்றி சில ஆராய்ச்சிகளை பண்ணியிருக்கேன். இந்த சம்பவம் இதுதான் முதல்முறை. இதுல என் ஆராய்ச்சி முழுமை பெருமுன்னு நினைக்கிறேன்”. ரவியின் தைரியம் அவரின் பேச்சில் தென்பட்டது. “எப்படியோ இந்த வழக்கை கண்டுபிடித்தால் போதும். இதற்கு உங்க வீட்டில் சம்மதிப்பார்களா? விக்ரமின் கேள்விக்கு “என் மனைவியும் இது போன்ற ஆராய்ச்சியில் எனக்கு உதவியிருக்கிறாள். என்னைவிட அவள் தைரியசாலிதான்“ என சிரித்து கொண்டே பதிளுரைத்தார் ரவி.

ரவி தனது குடும்பத்துடன் சர்ச்சைக்குரிய அந்த வீட்டில் குடியேறினார். “அப்பா! இந்த வீடு ரொம்ப நல்லா இருக்கு. விளையாட நிறைய இடம் இருக்கு” அனிதாவை தொடர்ந்து “ஆமப்பா!! வீட்டை சுற்றி நிறைய இடம் இருக்கு. நாங்க கிரிக்கெட் விளையாட வசதியா இருக்கும்” அஸ்வின் கிரிக்கெட் மட்டையுடன் ரவியின் அருகில் அமர்ந்தான். “என்ன அப்பாவும் புள்ளைங்களும் என்ன பேசறிங்க?” சிரித்த முகத்துடன் கையில் தேனீர்ருடன் வந்தாள் ரவியின் மனைவி ஆனந்தி. நால்வரும் தேனீர் அருந்தினர். குறைந்த சத்தத்தில் அழுகுரல் கேட்க “என்ன அப்பா ஏதோ சத்தம் கேட்பது போல இருக்கு!”. “ஆமாங்க அஸ்வின் சொல்வது போல ஏதோ சத்தம் கேட்குது” என்றாள் ஆனந்தி. சத்தம் மெல்ல மெல்ல அதிகமானது. “வாங்க போய் பார்க்கலாம்” ரவியின் பின்னால் மூவரும் வீட்டினுள் ஓடினர். சட்டேன்று சத்தம் நின்றுவிட்டது. “இப்போ சத்தம் கேட்கவில்லை அப்பா” என்றான் அஸ்வின். எதோ உடைவதுபோல சத்தம்கேட்க சமையல் அறையை நோக்கி ஓடினர். அறையில் பாத்திரங்கள் விழுந்து கிடந்தது. ரவியின் மனதில் பதற்றம் முகத்தில் தெரிந்தது. ஆனாலும் அதை குழந்தைகளின் முன்னால் காட்டிக் கொள்ளவில்லை. “அப்பா அங்க பாருங்க ஜன்னலில் பூனை” என்றாள் அனிதா. “இந்த பூனைதான் பாத்திரகளை எல்லாம் தள்ளி விட்டிருக்கும். சத்தமும் பூனையுடையதாக தான் இருக்கும் ஆனந்தி. பாத்திரங்கள் எல்லாம் எடுத்து வைமா”. ரவி அவ்விடம் விட்டு நகர்ந்தான்..

இரவு பத்து மணி குழந்தைகள் இருவரும் உறங்கி விட்டனர். வீடே நிசப்த்தமாக இருந்தது. படுக்கையில் மேல் அமர்ந்து இருந்தார் ரவி. அறைக்குள் நுழைந்த ஆனந்தி “உங்ககிட்ட சில விஷயம் சொல்லணும். குழந்தைகள் தூங்கிறதுக்கு தான் வெயிட் பண்ணினேன்”. “சொல்லு ஆனந்தி”! “பூனை தட்டி விட்ட பாத்திரங்கள் எல்லாம் ரொம்ப நெளிஞ்சிருக்கு. சாதாரணமா கீழவிழும் பாத்திரம் இப்படி அடி படுமா? யாரோ வேகமா எடுத்து எரிந்தது போல இருக்கு. அது மட்டுமில்லாமல் அடிக்கி வைத்திருந்த பாத்திரத்தில் முன்னாடி உள்ள பாத்திரம் விழவில்லை. பின்னாடி உள்ள பாத்திரம் எப்படி விழ முடியும்? பூனை தள்ளினால் எப்படி பின்னாடி உள்ள பாத்திரம் மட்டும் தள்ள முடியும்? கொஞ்சம் குழப்பமா இருக்குங்க” ஆனந்திக்கு சொல்லும்போதே அவள் முகம் வேர்த்தது.

பூனை தள்ளினால், பின்னாடி உள்ள பாத்திரத்தை மட்டும் எப்படி தள்ள முடியும்? கொஞ்சம் குழப்பமா இருக்குங்க” ஆனந்திக்கு சொல்லும்போதே அவள் முகம் வியர்த்தது.

“பயப்படாதே!! அப்படி எதுவும் எனக்கு தோனல. பாத்திரம் வேகமா விழுந்ததில் நெளிஞ்சிருக்கும். நீ பாத்திரத்தை அடுக்கி வைக்கும் போது சரியாக வைத்திருக்க மாட்ட. பயப்படாம தூங்கு” ஆனந்திக்கு தைரியம் கூறினார் ரவி. ஆனால் அவர் மனதில் “நிச்சியமாக ஏதோ நடந்திருக்கும்” என்ற தோணல். அந்த சத்தமும் பூனையுடையதாக இருக்காது என நம்பினர்.

ரவிக்கு உறக்கம் வரவில்லை. மனதில் நடந்தவை பற்றிய யோசனையாகவே இருந்தது. இந்த வீட்டை சுற்றி முழுமையாகவே சோதிக்கணும் என்ற முடிவுடன் உறங்கினார்.

காலை ஐந்து மணி. வீடே அமைதியாக இருந்தது. ஆனந்தி படுக்கையிலிருந்து எழுந்து, முகத்தை கழுக தண்ணிர் குழாயை திறந்தாள். கழுகிவிட்டு சமையலறையில் அவளின் வேலையை துவங்கினாள். சட்டேன்று சத்தம் ஒன்று கேட்க பயந்தாள் ஆனந்தி. சத்தம் வரும் திசையை நோக்கி மெல்ல நகர்ந்தாள். குளியல் அறையிலிருந்து சத்தம் வந்தது அந்த அறையின் கதவை மெல்ல திறந்தாள். குழாயிலிருந்து தண்ணீர் வேகமாக கொட்டியது. தண்ணீரை நிறுத்திவிட்டு “தண்ணீர் சத்தம் தானா? நான் பயந்துட்டேன்” முகத்தை துடைத்துக்கொண்டு மீண்டும் சமையல் அறைக்கு சென்றாள். “முகம் கழுவிய பின் தண்ணீரை நிறுத்திவிட்டு வந்ததாக ஞாபகம். ஆனா எப்படி தண்ணீர் வந்தது. நாம்தான் தண்ணீரை நிறுத்த மறந்துட்டோமோ” என மனதில் யோசித்துக்கொண்டே வேலையை மீண்டும் துவங்கினாள். காலையில் சூரியன் எட்டி பார்க்க, வீட்டின் ஜன்னலில் வழியாக சூரியக்கதிர்கள் உள்ளே வர, சமையலறையின் ஜன்னலை திறந்ததாள். ஒரு விதமான மனத்தை நுகர்ந்தாள். “என்ன வாசம்” ஜன்னலின் வழியாக எட்டி பார்த்தாள். புகை மூட்டமாக இருந்தது.

ரவியின் படுக்கை அறையை நோக்கி ஓடினாள். “என்னங்க கிச்சன் பின்னாடி ஒரே புகையா இருக்கு!” இருவரும் புகை வரும் இடம் நோக்கி ஓடினர். கதவை திறந்து வெளியில் புகைவருவதை கண்டனர். அருகில் சென்று பார்த்த போது துணிமூட்டை எரிந்து கொண்டிருந்தது. “என்னங்க இது நம்ம துணிங்க. நேற்று தான் துவைத்து காய போட்டுருந்தேன். இதை யாரு எடுத்து எரிச்சிருப்பாங்க” என புலம்பினாள். “இது எப்படி நடந்திருக்கும்?” என்றார் ரவி. அருகிலுள்ள தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைத்தார்.

“வா ஆனந்தி வீட்டுக்குள்ளே போகலாம்” இருவரும் வீட்டின் முன்புற அறையில் அமர்ந்தனர். அவர்களின் நேர் எதிரில் மீன் தொட்டியில் மீன்கள் அங்கும் இங்குமாக நீந்திக் கொண்டிருந்தது. அவை வழக்கத்துக்கு மாறாக மிகவும் வேகமாக, பதட்டத்துடன் நீந்துவது போல ரவி உணர்ந்தார். “என்னம்மா இன்னும் டீ குடுக்கல. நான் குளிக்க போகணும்” அஸ்வின் தூக்க கலக்கத்துடன் அருகில் வந்து அமர்ந்தான். “அம்மா நைட் தங்கச்சி உங்க கூடயா வந்து படுத்திருந்தா” உடனே ஆனந்தி “இல்ல! ஏன் அப்படி கேக்குற!”. “நான் நைட் பாதில எழுந்தேன். அவ என் பக்கம் இல்ல. உங்கிட்ட தூங்க போயிட்டான்னு நினைச்சேன். ஆனா காலையில் எழுந்திருக்கும் போது, என் பக்கம் தூங்கிட்டு இருந்தா. அதான் கேட்டேன்!”, குறிக்கிட்ட ரவி “நீ தூக்கத்தில சரிய கவனித்திருக்க மாட்ட. சரி நீ போய் பிரஸ் பண்ணு”. அஸ்வின் அவ்விடம் விட்டு நகர்ந்தான். அவனை தொடர்ந்து அனிதா அருகில் வந்து அமர்ந்தாள் “என்ன மம்மி இன்னும் டீ குடுக்கல!”. “டீ தாரேன். நைட் தூக்கத்தில எங்க போன? அஸ்வின் உன்ன காணோம்ன்னு சொன்னான்!”. “நான் பாத்ரூம் போயிருப்பேன். அவன் அப்போ பாத்துருப்பான்”. “இனிமே நீங்க ரெண்டு பேரும் எங்க ரூம்லத்தான் படுத்துக்கணும். சரியா!”. “சரி மம்மி!”

அழைப்பு மணி ஒலிக்க கைபேசியின் பொத்தானை அழுத்தி “ஹெலோ சொல்லுங்க சார்”. மறுமுனையில் விக்ரம் “எப்படி இருக்கிங்க ரவி? புது வீடு எப்படி இருக்கு? அங்க ஏதும் பிரச்சனை இல்லையே!” “அப்படி ஒன்னும் பிரச்சனை இல்லை. பட் இந்த வீட்டை முழுமையா சோதனை பண்ணனும். அதுக்கு உங்க உதவி வேணும்”. “சொல்லுங்க ரவி என்ன ஹெல்ப் வேணும். நான் பண்ணுறேன்”. “இந்த வீட்டை சோதிக்க நீங்களும் வரணும். அதுவும் இன்னைக்கே வரணும். உங்களால முடியுமா?” “கண்டிப்பா வரேன்” கைபேசியின் அழைப்பை துண்டித்தார் விக்ரம்

அஸ்வின் அனிதா இருவரும் வீட்டின் பின்புறம் பந்து விளையாடி கொண்டிருந்தனர். “ஹேய் அனி! நீ பேட்டிங் பண்ணு. நான் பௌலிங் பண்றேன்”. “சரி அஸ்வின். ஆனா நான் அடிக்கிற மாதிரி, பந்த மெதுவா போடு”. “சரி போடுறேன்”. அனிதா அடித்த பந்து வேகமா அருகில் உள்ள சிறிய வீட்டி முன்பாக விழுந்தது. அஸ்வின் பந்தை தேடினான். கிடைக்கவில்லை. “அஸ்வின் இங்க பாரு! பந்த் இருக்கு”! “நான் இங்கே தான் தேடினேன். கிடைக்க வில்லை. இப்போ எப்படி வந்தது?”. “நீ சரியா பாத்துருக்க மாட்ட. வா விளையாடலாம்”. தொடர்ந்தது விளையாட்டு. இதை போல இருமுறை அஸ்வினுக்கு பந்து கிடைக்கவில்லை. ஆனா அனிதா சரியாக பந்தை எடுத்தாள். அந்த மர்மம் அஸ்வினை மனதை துளைத்தது.

“சாப்பிட வாங்க” ஆனந்தியின் குரல் கேட்க, மத்திய உணவருந்த அனிதா மட்டும் வீட்டினுள் ஓடினாள். அஸ்வின் தனியாக அந்த சிறிய வீட்டின் முன் சென்று பார்த்தான். அந்த வீட்டின் கதவு தாழிடாமல் இருந்ததை கண்டான். மெதுவாக தாழை திறந்தான். கதவை தள்ளினான். அவனால் திறக்க முடியவில்லை. அவனின் முழு திறனையும் கொடுத்து தள்ள திறந்தது கதவு. வீட்டினுள் நுழைந்தான். இருள் சூழ்ந்து பாழடைந்து இருந்தது. அவன் மனது படபடத்தது. கண்ணில் ஒரு கருப்பு பெட்டி தென்பட்டது. அருகில் சென்று பெட்டியை திறந்தான். அவனை யாரோ பின்புறமாக தாக்கினர். “அம்மா……” என்று சத்தம் கேட்க ஆனந்தி ஓடினாள்.

அஸ்வின் கண்ணில் ஒரு கருப்பு பெட்டி தென்பட்டது. அருகில் சென்று பெட்டியை திறந்தான். அவனை யாரோ பின்புறமாக இருந்து தாக்கினர். “அம்மா……” சத்தம் கேட்க ஆனந்தி ஓடினாள். அதற்கு முன்பே அனிதா அந்த வீட்டின் கதவின் அருகில் சென்று “அப்பா…அம்மா.. அஸ்வின் இங்க மயங்கி கிடக்கிறான். வாம்மா சீக்கிரம்”. அனிதாவின் சத்தம் கேட்டு ரவியும் அப்பாழடைந்த வீட்டினுள் நுழைந்து, அஸ்வினை தூக்கி வெளியே கொண்டு வந்தனர். “ஆனந்தி தண்ணீர் கொண்டு வா”. தண்ணீருடன் ஓடி வந்தாள். முகத்தில் தண்ணீரை தெளிக்க, அஸ்வின் மெதுவாக கண் திறந்தான். ஆனால் அவனால் பேச முடியவில்லை. அதே நேரத்தில் விக்ரம் போலீஸ் வாகனத்தில் வந்து இறங்கினார். “என்ன ஆச்சு ரவி” “தெரியல பையன் மயங்கி விழுந்துட்டான்”. “சரி வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்” போலீஸ் வாகனத்தில் அனைவரும் மருத்துவமனைக்கு சென்றனர். உடனடியாக அவசர பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரவி ஆனந்தியை மருத்துவர் அழைப்பதாக உதவியாளர் கூற, இருவரும் மருத்துவரின் அறைக்கு விரைந்தனர்.

”அஸ்வினின் உடம்பு எப்படி இருக்கு. நாங்க இப்போ அவனை பார்க்கலாமா“ “ஓ.. தாராலமா பார்க்கலாம். ஆனா அவனால இப்போ பேச முடியாது. நாங்க ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாம் பார்த்தோம். நல்லாத்தான் இருக்கு. ஏன் அவனால பேச முடியலன்னு தெரியல? ஏதோ பார்த்த அதிர்ச்சியில் கூட பேச முடியமா போகலாம். அவனுக்கு இப்போ நல்ல ரெஸ்ட் வேணும். இன்னும் பத்து மணி நேரத்துக்கு அப்பறம் திருப்பியும் ஒரு டெஸ்ட் பண்ணி பாக்கலாம்” மருத்துவர் பதிலை கேட்கும்போது ஆனந்தியின் கண் கலங்கியது. அஸ்வின் அறைக்கு சென்று பார்த்தனர். அவன் நன்கு உறங்கி கொண்டு இருந்தான். அவன் அருகிலேயே ஆனந்தி அமர்ந்து விட்டாள். “அனிதா எங்கே?” “விக்ரம் அவளுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பதற்காக வெளியே கூட்டி போயிருக்கார்” சிறிது நேரத்திலே விக்ரமும் அனிதாவும் வந்தனர்.

“சார் நான் உங்ககிட்ட தனியாக பேசணும்” ரவியும் விக்ரமும் மருத்துவமனைக்கு வெளியில் ஒரு மரத்தின்கீழ் அமர்ந்தனர். நடந்தவற்றை ரவி விக்ரமிடம் விவரித்தார். “பாத்திரம் வீழ்ந்தது, துணி எரிக்கபட்டது, இதை வைத்து எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்? சரி நான் உங்களுக்கு என்ன உதவி செய்யணும்? சொல்லுங்க நான் செய்யறேன்” என்றார் விக்ரம். “அந்த வீட்டை முழுமையாக சோதிக்கணும். அந்த நேரத்தில் நீங்களும் எனக்கு உதவியா இருக்கனும்”. “கண்டிப்பாக வறேன் எப்போன்னு சொல்லுங்க”. “இன்றைக்கு இரவே”. “சரி சரியாக ஏழு மணிக்கு வந்துருவேன். பையனை நல்ல பார்த்துக்கொள்ளுங்கள். எனக்கு ஸ்டேஷனில் நிறைய வேலை இருக்கு.” விடைபெற்றார் விக்ரம்.

ரவி மருத்துவமனைக்குள் நுழைந்தார். அங்கு அஸ்வின் உறங்கி கொண்டிருந்தான். அவன் அருகில் ஆனந்தியின் மடியில் அனிதா அமர்ந்திருந்தாள். “டாக்டர் வந்து பார்த்தாரா?” என்ற கேள்வியுடன் நுழைந்தார் ரவி. “ஆமாம். பார்த்தாரு. எல்லாம் நல்லாத்தான் இருக்குன்னு சொன்னாரு. இன்னும் இரண்டு நாள் இங்க பெட் ரெஸ்ட் எடுக்கணும்ன்னு சொல்லி இருக்காங்க”. “இன்று இரவு நீயும் அனிதாவும் இங்கேயே அஸ்வினுடன் இருங்க. நான் வீட்டுக்கு போறேன்”. “நீங்க இன்று இரவு தனியா அங்க தங்க போறிங்களா?” பதட்டத்துடன் ஆனந்தி கேட்டாள். “இல்ல என் கூட விக்ரம் சார் தங்க வரார்”.

“சார் ஆறு மணியாச்சி. டாக்டர் விசிட் வர நேரம். கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்”. மணி சரியாக ஆறுனு செவிலியர் ஞாபகம் படத்தினார். ரவியின் கைபேசியில் அழைப்பு மணி ஒலித்தது. அது விக்ரமின் அழைப்பு என்று உறுதிப் படுத்திகொண்டான். “ஹெலோ சொல்லுங்க சார்“. “நான் சரியாக ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்துடுறேன். நீங்களும் ஏழு மணிக்கு அங்க வந்துருங்க”. “ஓகே சார்” என அழைப்பே துண்டித்தார்.

“நான் வீட்டுக்கு போறேன். நீங்க ஹாஸ்பிட்டல் கேண்டியன்ல்ல சாப்பிட்டு விட்டு உறங்கணும். அஸ்வின் எந்த நேரத்திலும் கண் விழித்து பேசினாலும், உடனே எனக்கு போன் பண்ணு” என ஆனந்தியிடம் கூறிவிட்டு. ‘இந்த வீட்டை உடனே காலி செய்யணும். நம்ம ஆராய்ச்சியை விட நம்ம குழந்தைகளின் வாழ்க்கைதான் முக்கியம். இன்றைக்கு செய்யும் சோதனையே கடைசியாக இருக்கட்டும்’ என்று மனதில் நினைத்து கொண்டு புறப்பிட்டார். மறுபுறம் விக்ரமும் புறப்பிட்டார்.

இருவரும் ஒரே நேரத்தில் வீட்டை வந்தடைந்தனர். ஒருவரையொருவர் கைகுலுக்கி வீட்டினுள் நுழைந்தனர். “இந்த சோதனையை இன்று பகலில் பண்ணலாம்ன்னு முடிவு செய்தேன். அதான் உங்களை கூப்பிட்டேன். ஆனா என் பையன் மயங்கி விழுந்ததால், இரவில் பண்ணும் படியாச்சு. சாரி சார்”. “ஓகே ஒகே…எனக்கு எந்த வருத்தமும் இல்லை. போலீஸ் வேலை\யில் இரவு பகல் பார்க்க முடியாது. என்னை விட இந்த வழக்கில் நீங்க தான் அதிகம் ஆர்வமும், உழைப்பும் கொடுத்திருக்கிங்க. உங்களுக்கு எந்த நேரத்திலும் உதவ கடமைப்பட்டுள்ளேன்”. தேனீர் குடித்துக்கொண்டே விக்ரம் பதிலுரைத்தார்.

வீட்டில் பல அறைகள் திறக்காமலே இருந்தது. இருவரும் சோதனையை துவங்கினர். ஒரு அறை பெரிய தாழிட்டுருந்தது. தாழை திறந்து நுழைந்தார்கள். பெரிய அலமாறி தென்பட்டது. அதனுள் தூசிகள் நிரம்பிய சில கோப்புகளும், பழைய பொருள்களும் இருந்தது. கோப்புகளை எடுக்கும் போது பாஸ்ப்போட் சில விழுந்தது. எடுத்து புரட்டி பார்த்ததில் அந்த வீட்டின் உரிமையாளர்கள் சிங்கப்பூரிலிருந்து வந்தவர்கள் என தெரியவந்தது. அந்த வீட்டின் வரைபடத்தை பார்த்தனர். அதில் வீட்டின் வெளியே வேலைகாரர்களுக்காக சிறிய வீடு கட்டப்பட்டுள்ளது என வரைபடத்தில் வரையபட்டிருந்தது. அந்த வீட்டிலிருந்து, அஸ்வினை மயக்கிய நிலையில் தூக்கி வந்தனர் என்பதை மீண்டும் நினைவு கூர்ந்தார். மறுமுனையில் அஸ்வின் கண் விழித்தான். அங்கு என்ன நடந்தது? என்று சொல்ல முற்பட்டான்

“அம்மா அந்த வீட்டில்… வீட்டில்”

அஸ்வின் கண் விழித்தான். ”அம்மா.. அம்மா..” என்ற குரலை கேட்ட ஆனந்தி, அவனருகில் சென்று, “உடம்பு எப்படி இருக்கு செல்லம், சாப்பிட ஏதும் தரட்டுமா?”. “வேண்டாம். எனக்கு பயமா இருக்குமா”. “ஏன் பயப்படற? உன் அம்மா உன் கூடத்தான் இருக்கேன். ஒன்னுமில்ல. பயப்படாதே”. “அப்பா எங்கே?”. “அப்பா நம்ம வீட்டுக்கு போயிருக்காரு”. “அம்மா!! அந்த சின்ன வீட்டில்… வீட்டில் ஒரு பெட்டி இருக்குமா! அதை திறந்து பார்த்தேன். அப்போ யாரோ என்ன பின்புறமா அடிச்சாங்க மா”. “நீ பயப்படாதே! நான் அப்பாவுக்கு போன் பண்றேன். நீ கண்விழித்ததும் கூப்பிட சொன்னார்”.

மறுமுனையில் ரவியும் விக்ரமும் வீட்டின் ஒவ்வொரு பகுதியாக சோதனை செய்தனர். “இதுவரைக்கும் கிடைத்த கோப்புகளும், ஆதாரங்களும் இந்த வீட்டின் உரிமையாளர் சிங்கப்பூரிலிருந்து வந்தவர்கள் தான். முதன் முதலில் இங்கு கொலை செய்யப்பட்டிருப்பதும் இவர்கள்தான். வெள்ளூர் காவல் நிலையத்தில், நாம் படித்த எப்ஐஆரில் இருந்த பெயரும், இந்த பாஸ்போர்ட் மற்றும் வீட்டு பத்திரத்தில் உள்ள பெயரும் ஒத்து போகுது” என விக்ரம் கூற. “ஆமாம் நீங்க சொல்றது சரிதான். ஆனால் ஒரே மாதிரியாக அடுத்தடுத்த கொலைக்கான காரணம்தான் புரியல” என ரவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே திடீரென வீடே இருளானது. “என்னாச்சி ரவி” “கரண்ட் போயிருச்சு போல சார். டார்ச் லைட் எடுத்துட்டு வரேன். நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க” பேசிக் கொண்டிருக்கும் போது அவரின் கைபேசியில் அழைப்பு மணி ஒலித்தது. “ஹலோ நான் ஆனந்தி பேசுறேன். அஸ்வின் கண் விழிச்சிட்டான்”.

“இப்போ அவன் உடம்பு எப்படி இருக்கு?”. “நல்லா இருக்கான். உங்ககிட்ட பேசனுமாம். போன அவன்கிட்ட தரேன் பேசுங்க”. “அப்பா எனக்கு பயமா இருக்கு. நம்ம வீட்டிற்கு வெளிய இருக்குற அந்த சின்ன வீட்டில், ஒரு பெட்டி இருக்கு. அதை திறந்த போது, என்ன யாரோ பின்புறமாக அடிச்ச மாதிரி இருந்தது. அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியலப்பா”. “பயப்படாத. அப்பா நான் பார்த்துக்கிறேன். நாம நம்ம பழைய வீட்டிற்கே போயிடலாம். இப்போ நல்ல தூங்கி ரெஸ்ட் எடு” கைபேசியின் அழைப்பை துண்டித்த ரவி. அலைபேசியில் பேசியதை விக்ரமிடம் விவரித்தார். “அப்போ அந்த வேலைக்காரர்களுக்காக இருக்கும் அந்த சின்ன வீட்டை சோதனை செஞ்சு பார்க்கலாம்”. விக்ரமின் யோசனையை ரவியும் ஏற்றார். “கரண்ட் வரட்டும். வெளிச்சமாக இருந்தால் தான் சோதனை செய்ய வசதியாக இருக்கும்”. இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்தனர்.

மணி மூன்று என விக்ரம் கைபேசியின் அலாரச் சத்தம் உறுதிபடுத்தியது. “என்ன சார், மூணு மணிக்கு அலாரம் வச்சிருக்கிங்க”. “நான் ஒரு கேஸ் விஷயமா வெளியூர் போக வேண்டியிருக்கு அதான். இந்த சோதனை முடிச்சவுடன் நான் புறப்பிட்டு விடுவேன்”. “சரிங்க சார்” என ரவி பேசும்போது மின்சாரம் வர, வீடே வெளிச்சமானது. இருவரும் அந்த சிறிய வீட்டை நோக்கி புறப்பிட்டனர். வீட்டின் கதவு தாழிட்டு இருந்தை பார்த்ததும், “அஸ்வினை இந்த வீட்டிலிருந்து தூக்கிய பின்பு அனைவரும் மருத்துவமனைக்கு சென்றுவிட்டோம். அப்போ யார் இந்த கதவை தாழிட்டுருப்பா?” என ரவிக்கு சந்தேகம் வரவே, அதை விக்ரமிடம் பகிர்ந்து கொண்டார். “சரி எதுவானாலும் கதவை திறப்போம்” என தாழை திறந்து கதவை தள்ளினர். ஆனால் திறக்க முடியவில்லை. இருவரும் முழு பலத்தையும் கொடுத்து கதவை திறந்தனர்.

அவ்வீடே இருளாக இருக்க, மின்விளக்கை ஏற்றினர் ரவி. நேரெதிரே ஒரு புகைப்படம் தென்பட்டது. அதில் ஒரு பெண் பெரிய பொட்டுவுடன் கோபமான முகத்துடன் இருப்பது போன்று இருந்தது. “சார் இந்த படத்தை பாருங்க. இது யாராக இருக்கும்”. “தெரியல வேற எதுவும் இருக்கான்னு பாருங்க” சோதனை இருவரும் தொடர்ந்தனர் “அங்க ஏதோ ஒரு புக் இருக்கு. அதை எடுத்து பாருங்க” அந்த புத்தகத்தை புரட்டி பார்த்தார் ரவி. அதில் புகைப்படத்தில் உள்ள பெண் சாரதா என்பதற்கான சில ஆதாரங்கள் இருந்தது. அத்துடன் சில மந்திரம் மாந்திரீகம் சம்பந்தமாக எழுதப்பட்ட சில புத்தகங்களையும், தகடுகளையும் பார்த்தவுடன் இருவரின் மனதிலும் பதட்டம் ஏற்பட்டது.

அஸ்வின் கூறிய கருப்பு பெட்டியை பார்த்தார் ரவி. முகம் வியர்த்து, பயத்துடன் திறந்தார். பெட்டியினுள் சிவப்பு நிற சேலை, மஞ்சள் துணியில் சுற்றப்பட்ட மின்னும் மாலை, ரத்த கறையுடன் இருந்த கத்தி என இன்னும் சில பொருட்களை பார்த்தவுடன் “சார் இந்த பொருட்களை எல்லாம் பார்க்கும் போது, இங்கு ஏதோ மந்திர மாந்திரீக வேலை நடந்திருக்கும் போல தெரியுது”. “ஆமாம் ரவி. இந்த பொருட்கள், புத்தகங்கள் எல்லாம் பார்க்கையில், சாரதா இந்த வீட்டின் வேலைக்காரியாக மட்டும் இல்லாமல், மந்திர மாந்திரீகம் சம்மந்தமாக, ஏதோ செய்திருப்பான்னு தெரியுது”. “சார் இதை வைத்து நாம் என்ன செய்ய முடியும்?”. “இதில் உள்ள சில பொருளை மட்டும் எடுத்துக்கலாம். எனக்கு தெரிந்த ஒரு மாந்திரீகர் இருக்கார். அவரை போயி பார்த்தீர்கள் என்றால், நமக்கு ஏதும் தெரிய வாய்ப்பு இருக்கு. ஆனால் நான் உங்க கூட வர முடியாது. நான் ஏற்கனவே சொன்னது போல, வெளியூர் போக வேண்டிருக்கு. அவரோட முகவரியை தரேன். போய் பாருங்க. ஏதும் விஷயம் தெரிஞ்சா! உடனே எனக்கு கால் பண்ணுங்க”.

“சரிங்க விக்ரம் சார். இப்போவே மணி ஆறு. நான் உடனே புறப்பிடுகிறேன்” இருவரும் அங்கிருந்து புறப்பிட்டனர். மறுபுறம் அஸ்வின் பயத்துடன் இருக்க, அவன் அருகிலேயே ஆனந்தி அமர்ந்திருந்தாள். “அம்மா நாம சீக்கிரம் வீட்டிற்கு போகலாமா?” என அனிதா ஆனந்திவிடம், தொந்தரவு செய்து கொண்டே இருந்தாள். அதே நேரத்தில் ஆனந்தியின் கைபேசிக்கு அழைத்தார் ரவி “நான் ஒரு அவசர வேலையாக வெளியூர் போறேன். குழந்தைகளை பத்திரமா பார்த்துக்கோ. எக்காரணத்தை கொண்டும் நான் சொல்லும் வரைக்கும் நீ வீட்டிற்கு போக வேண்டாம்”. “சரிங்க”. “நான் வரும் முன் போன் பண்றேன்” அழைப்பை துண்டித்துவிட்டு மாந்திரிகரை காண புறப்பிட்டார்.

ஆனந்தியிடம் பத்திரமாக இருக்கும் படி கூறிவிட்டு, விக்ரம் கொடுத்த முகவரியை எடுத்துக் கொண்டு விரைந்தார் ரவி. வாகனத்தை விரைவாக செலுத்தினார். ரவி தேடி செல்லும் அந்த சாமியாரின் இருப்பிடமானது, நகர் புறத்திலிருந்து இரு நூறு மைல் தொலைவில் உள்ளது. அவர் புறப்பிட்ட நேரமோ இரவு என்பதால், வழி நெடுக்க கும்மிருட்டாக இருந்தது. சாலை ஓரங்களில் வளர்ந்த மரங்கள் தங்களில் கிளைகளை கொண்டு, மின் விளக்குகளின் ஒளியை மறைத்து கொண்டிருந்தது. அதனையெல்லாம் பொருட்படுத்தாமல், தனது வாகனத்தை மிக வேகமாக செலுத்தினார் ரவி. தான் தாமதப்படுத்தும் ஒவ்வொரு நொடியும், தன் குடும்பத்தின் மீதான பாதுகாப்பின்மையை உணர செய்து கொண்டே இருந்தது. நடுஜாமம் என்பதால், ஆள் அரவமில்லாத சாலையில் தனியாக பயணித்து கொண்டிருந்தார்.

வாகனத்தை ஓட்டிக்கொண்டே, அவ்வீட்டிக்கு குடி பெயர்ந்தப் பின் தன் குடும்பத்தில் நடந்த அசம்பாவிதங்களையும், இதற்கு முன் அவ்வீட்டில் நடந்த கொலைகளுக்கான காரணத்தையும் எண்ணி வருந்தி கொண்டே அவ்வூருக்குள் சென்றார். ஆனாலும் அம்மாந்திரீகர் இருக்கும் இடமானது, ஊருக்கு கிழக்கு பக்கமாக உள்ள மலையுச்சியில் அமைந்திருந்தது. அம்மலை உச்சியானது, அடர்ந்த காட்டுக்கு நடுவே இருப்பதால், இரவு நேரத்தில் செல்வது என்பது கடினமான காரியம். ஆனாலும் ரவிக்கு வேறு வழி இல்லாததால், வாகனத்தை ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தில் நிறுத்திவிட்டு, அக்காட்டினுள் நுழைந்தார். வேக வேகமாக ஏறினார். ஏனென்றால் அவர் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், அவருக்கே ஆபத்தாக முடியலாம்.

ஒரு வழியாக மலையுச்சியை அடைந்தார். அதிகாலை என்பதால், மாந்தீரிகர் மற்றும் அவ்வீட்டில் உள்ள அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். ரவி கதவை தட்டினார். “யாரு இந்த நேரத்துல?” என்று அரை தூக்கத்தில் கதவை திறந்தார். வாடிய முகத்துடன், கலைத்த தேகத்துடன், பதட்டமாக காணப்பட்டார் ரவி. மாந்திரீகர் ரவிக்கு தண்ணீர் பருக கொடுத்தார். பின்னர் தான் யார் என்பதையும், எதற்காக அவரை சந்திக்க வந்திருக்கிறார் என்பதையும் மாந்திரீகரிடம் விவரித்தார். “சரிப்பா.. இப்போ அதிகாலை நேரம் என்பதால், எதையும் என்னால் கூற இயலாது. விடியட்டும்” என்றார்.

“இல்லை ஐயா, நான் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், என் குடும்பத்துக்கு ரொம்ப ஆபத்து. ப்ளீஸ் எப்படியாவது, பார்த்து சொல்லுங்க. நான் திரும்பவும் வெகு தூரம் பயணம் செய்யனும்” என்று நடந்தவற்றை கூறினார். உடனே மாந்தீரிகர் ரவியிடம் கொண்டு வந்த பொருட்களை தருமாறு கூறினார். அவற்றை வாங்கி பார்த்தவுடன் மாந்திரீகருக்கு, அதிர்ச்சியாய் இருந்தது. “அந்த பெண் சாரதா, கண்டிப்பாக வேலைக்காரியாக இருக்க முடியாது. அசுர சக்தியை தன் வசப்படுத்த, அந்த வீட்டில் வேலைக்காரியாக சேர்ந்திருக்கிறாள். நிச்சயமாக இது பில்லி சூனியம் சம்பந்தமான விஷயம் தான்” என உறுதியாக கூறினார். அதை கேட்டவுடன் ரவிக்கு தூக்கி வாரி போட்டது என்றாலும், தன் குடும்பம் தற்போது மருத்துவமனையில் பாதுகாப்பாக இருப்பதை எண்ணி நிம்மதியடைந்தார்.

மாந்திரீகர் மேலும் சாரதாவை பற்றிய விசயங்களை கூற ஆரம்பித்தார். “ஒரு ஆணுக்கு பின் பிறக்கும் பெண் குழந்தையை பலி கொடுத்தால், அசுர சக்தியை தன் வசப்படுத்த முடியும் என்பதற்காக தான், தனபாலின் வீட்டிற்குள் வேலைக்காரி வேடத்தில் நுழைந்திருக்கிறாள். அங்கு சுமதியையும், அவளின் குழந்தைகளையும் மாந்திரீகத்தால், தன்வசப்படுத்தி, நிறைந்த அமாவாசையன்று, நரபலி கொடுக்க திட்டமிட்டிருந்தாள். அதன்படி தனபால் வீட்டில் இல்லாத நேரத்தில் பூஜை நடந்தது. குழந்தை ரத்னாவை பலி கொடுக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக தனபால் உள்ளே வர, குழந்தையின் கோலத்தை கண்டு ஆத்திரமடைந்து, அருகிலிருந்த கத்தியால் சாரதாவை வெட்டி கொன்றார். இறந்தவுடன் சாரதாவின் ஆவி குழந்தை ரத்னாவின் உடலுக்குள் புகுந்து, தனபால், சிறுவன் ராஜ், சுமதியையும் மூச்சி திணறடித்து கொன்றுவிட்டது. அதன் பின் ஏற்கனவே பாதி மந்திரத்தில் நரபலி நின்றுவிட்டதால், அவள் பூஜித்த அந்த அசுர சக்தியானது, கோபம் கொண்டு சாரதாவின் ஆவியுடன் சேர்ந்து ரத்னாவை தின்றுவிட்டது. இந்த அசுர சக்தி வலுவாக இருக்க, ஒவ்வொரு பதினைந்து வருடத்துக்கு ஒருமுறை, இதுபோன்று ஒரு ஆணுக்கு பின் பிறக்கும் பெண் குழந்தையை தின்றுவிடும்” இதை கேட்டவுடன் ரவியின் முகம் வியர்த்து கைகள் நடுகியது.

“இதனால் எனக்கும், என் குடும்பத்திற்கும் ஆபத்து இருக்குமா?”. “இதுவரைக்கும் இல்லை. ஆனால் இப்போ விஷயம் உனக்கு தெரிந்ததால், உன்னையும், உன் குடும்பத்தையும், கொல்ல முயற்சிக்கும். உனக்கு பெண்குழந்தை இருப்பதால், அவளையும் தின்றுவிட முயற்சிக்கும். இன்று அமாவாசை என்பதால், அதுக்கு சாதகமாக இருக்கும்”. “நான் உடனே புறப்பிடுகிறேன் சுவாமி”. “நில்லுப்பா. இந்த தகடை நீ பத்திரமாக வைத்துக்கொள். இது உன்கூட இருக்கும் வரை, அதனால் உன்னை எதுவும் செய்ய முடியாது” என்று கூறிய சாமியாருக்கு நன்றி கூறி விடைபெற்றார் ரவி.

“ஆனந்தியை வீட்டிற்கு போக வேண்டான்னு சொல்லனும்” என தொடர்ந்து கைபேசியில் அவளுக்கு முயற்சித்தார். மலைபகுதி என்பதால் அவரது கைபேசிக்கு அலை தொடர்பு கிடைக்கவில்லை. மலையிலிருந்து இறங்கியவுடன், ஆனந்திக்கு அழைத்தார் ரவி. மறுபுறம் அழைப்பு மணி சத்தம் கேட்க, ஆனந்தியும் அனிதாவும் கைபேசியை ஒரே நேரத்தில் எடுக்க முயற்சிக்க, கைபேசி தண்ணீரில் விழுந்தது. “என்ன அனிதா? உனக்கென்ன அவசரம். பாரு போன் தண்ணீரில்ல விழுந்துரிச்சு”. “சாரி…ம்மா, நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்ன்னு தான் எடுத்தேன். அது தண்ணீரில்ல விழுந்துரிச்சு”. “டிஸ் ப்ளே கூட வேலை செய்யல. யார் கூப்பிடங்கணும் வேற தெரியல. சரி நான் டாக்டரை பார்த்துட்டு வரேன்”. “அம்மா நாம சீக்கிரம் வீட்டுக்கு போகலாமா!”. “சரி” என அனிதாவின் தொந்தரவு தாங்க முடியாமல், டாக்டரை பார்க்க சென்றாள் ஆனந்தி.

“அம்மா நாம சீக்கிரம் வீட்டுக்கு போகலாமா?”.“சரி” அனிதாவின் தொந்தரவு தாங்க முடியாமல் டாக்டரை பார்க்க சென்றாள். ”வணக்கம் சார், நான் அஸ்வினின் அம்மா. என் பையன எப்போ டிஸ்சார்ஜி பண்ணுவிங்க”. “அஸ்வின் உடம்பு இப்போ நல்லா இருக்கு. நீங்க தாராலமா இன்றைக்கே கூட்டிட்டு போகலாம்”. “நன்றி சார்” அவ்விடம் விட்டு நகர்ந்தாள் ஆனந்தி.

மறுபுறம் தனது கைபேசியில் ஆனந்தியிடம் பேச முயற்சி செய்து, முடியாததால் விக்ரமிற்கு அழைத்தார். “ஹெலோ” “சார் நான் ரவி பேசுறன்” நடந்தவற்றையும், சாமியார் சொன்ன விசயத்தையும் விக்ரமிடம் விவரித்தார். “கேட்கவே பயமாக இருக்குது” “சார் நீங்க எனக்கு ஒரு உதவி செய்யனும்” “சொல்லுங்க ரவி” “நான் என் மனைவிக்கு ரொம்ப நேரமா போன்ல ட்ரை பண்றேன். பட் அவளுக்கு கால் போகல. ப்ளீஸ் நீங்க ஆஸ்பத்திரிக்குப் போய், அவங்கள வீட்டிற்கு போகாமல் தடுக்கணும். அந்த வீடு ரொம்ப ஆபத்தானது” “பட் ரவி!! உங்களுக்கே தெரியும். நான் ஒரு கேஸ் விஷயமா வெளியூருக்கு வந்துருக்கேன். இப்போ உடனே உங்களுக்காக புறப்பிடுறேன். நான் போய் சேர ரொம்ப டைம் எடுக்கும். இப்பவே ஸ்டேஷனுக்கு போன் பண்ணி, அவங்க வீட்டிற்கு போகாதபடி தடுக்கிறேன்” “ரொம்ப நன்றி சார்” ரவி வேகமாக வாகனத்தை ஓட்டினார்

விக்ரம் ஸ்டேஷனுக்கு தொலைபேசியில் அழைத்தார். “ஹலோ” “நான் விக்ரம் பேசுறேன்” “சொல்லுங்க சார். நான் முன்னா பேசுறேன்” “முன்னா நீ உடனே ரவியின் மனைவி இருக்கும் ஆஸ்பத்திரிக்கு போய், அவர்களை வீட்டிற்கு போக வேண்டாம். அங்கேயே இருக்கும் படி சொல்லு” “சரிங்க சார்” விக்ரமும் உடனடியாக புறப்பிட்டார்.

முன்னாவும் மருத்துவமனையை நோக்கி புறபிட்டார். வேகமாக வண்டியை செலுத்திய ரவிக்கு ஒரு யோசனை ஆஸ்பத்திரியின் தொலைபேசியில் அழைத்து விசயத்தை சொன்னால் என்ன!!! உடனே கைபேசியில் அழைத்தார். ஆனால் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. “ஹலோ” “நான் அஸ்வின் அப்பா பேசுறேன். என் மனைவியிடம் பேசணும். போனை கொஞ்சம் கொடுக்க முடியுமா?” “சாரி மிஸ்டர் ரவி. அவங்க இப்போ தான் போனாங்க. உங்க பொண்ணு ரொம்ப பிடிவாதம் பிடித்ததால், இப்போ தான் கிழம்பி போனாங்க” ரவியின் மனம் பதறியது. அழைப்பை துண்டித்து வீட்டை நோக்கி வேகமாக வாகனத்தை ஓட்டினார்

முன்னா ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்து, விவரத்தை விக்ரமிடம் கூறினார். விக்ரமும் வீட்டை நோக்கி வாகனத்தை வேகமாக ஓடினார்.

ரவி வீட்டின் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, வேகமாக வீட்டினுள் நுழைந்தார். அங்கு அனிதாவின் முகத்தை கண்டவுடன், ரவியின் மனம் சாந்தமானது. தன் மகள் உயிருடன் இருக்கிறாள். எங்கே அந்த அசுர சக்தி தன் மகளை தின்றுவிடுமோன்னு பயந்தேன் என மனதோடு பேசி கொண்டு, நிம்மதி பேரு மூச்சுவிட்டார். “வாங்கப்பா, உட்காருங்கள்” “அம்மா அண்ணனும் எப்படி இருக்காங்க? எங்க அவங்க?” “அவங்க ரெண்டு பேரும், சோர்வாக இருக்குன்னு சொன்னாங்க. அதான் மேல போய் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டேன்” “அப்பா இந்த ஜூஸ் குடிங்க” அனிதா கொடுத்த குளிர்பானத்தை அருந்தினார் ரவி. சிறிது நேரத்தில் மூச்சி திணறியது. அப்பொழுதுதான் அவருக்கு தெரியும். அதில் ஏதோ கலந்திருப்பது “அனிதா எனக்கு மூச்சு எடுக்கமுடியவில்லை” மறு நொடியே அசுர குரலில் அனிதாவின் பதில் “இதை குடித்து விட்டுத்தான் உன் மனைவியும், மகனும் மூச்சை விட்டாங்க. அதைத்தான் உனக்கும் கொடுத்தேன். இன்னும் சிறிது நேரம்தான். உன் மகளின் உடம்பிலிருந்து வெளியே வந்து, உன் மகள் இருந்ததற்கான அடையாளமே தெரியாத அளவுக்கு அவளையும் தின்றுவிடுவேன். நீ எனக்கு முற்று புள்ளி வைக்க பார்த்த. நான் உன் ஆராய்ச்சிக்கு முற்று புள்ளி வைச்சுட்டேன். நீ சாகரத்துக்கு முன்னாடி உனக்கு நான் நன்றி சொல்லணும். அந்த சாமியார் கொடுத்த தகடை நீ வண்டியிலயே வச்சிட்டு வந்துட்ட. இல்லன உன்ன கொல்ல நான் ரொம்ப சிரமபட்டுருக்கனும்.

வெளியே வாகனத்தை சத்தம் கேட்டது. விக்ரம் வேக வேகமாக உள்ளே நுழைந்தார். அவரை தொடர்ந்து முன்னாவுடன் சில காவலர்களும் வீட்டினுள் நுழைந்தனர். ரவி முன் அறையில் இறந்து கிடந்ததை பார்த்து, தொப்பியை கழட்டிவிட்டு கண்கலங்கினார் விக்ரம். அடுத்த அறையில் மற்ற இருவரும் பிணமாக கிடந்தனர். “போட்டோ கிராஃபர் ஆம்புலன்ஸ் எல்லாம் வர சொல்லுங்க” என்றார் முன்னா. சிறிது நேரத்தில் சட்டம் தனது கடமையையே செய்தது. விக்ரம் மட்டும் ஓர் இடத்தில் அமைதியாக அமர்ந்துவிட்டார். அவரால் நடந்தவற்றை ஏற்றுகொள்ள முடியவில்லை. விக்ரம் நல்ல மனநல ஆலோசகரை பார்க்க வேண்டும் என்ற நிலையில் இருந்தார். அனைவரும் சென்றுவிட்டனர். முன்னா மட்டும் கடைசியாக புறப்பிட்ட பொழுது, ஒரு சத்தம் கேட்க, வீட்டினுள் சென்று பார்த்தார். அங்கு உள்ள கணிணி திறந்த நிலையில், இந்த வீடு வாடகைக்கு விடப்படும். ஆண் பெண் குழந்தை உள்ளவர்களுக்கு முன்னுரிமை. விருப்பம் உள்ளவர்கள் இந்த மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும்.. என்ற விளம்பரம்…….திக்… திக்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *