தனிப்படர்மிகுதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 9,868 
 

பொம்மியக்கா கருப்பு என்றால் அப்படியொரு கருப்பு, சற்று எத்துப்பல், அடர்த்தியான நீண்ட தலைமுடியை எண்ணெய் தடவி படியப்படிய வாரி பின்னலிட்டு கலர் ரிப்பன் கட்டுவாள், சின்னதாய் ஒரு வெள்ளைக்கல் முக்குத்தி போட்டிருப்பாள், அவளின் நிறம் அந்த முக்குத்தியை எடுப்பாய் காண்பிக்கும். பொம்மியக்கா என்னை சின்னம்மணி என்று பாசமாக அழைப்பாள்.

சரி, இந்த பொம்மியக்கா யார் என்று தானே கேட்கிறீர்கள், அவள் எங்கள் வீட்டில் காலையும், மாலையும் மட்டும் வந்து வீட்டு வேலை செய்பவள். காலை ஆறு மணிக்கேல்லாம் வந்துவிடுவாள், சீக்கிரம் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, என் அம்மா கொடுப்பதை சாப்பிட்டுவிட்டு, கட்டடவேலைக்கு சென்றுவிடுவாள். மீண்டும் மாலை வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, தன் அம்மாவுக்கு சாப்பாடு எடுத்துப்போவாள். ஞாயிற்றுக்கிழமையிலும் மற்ற நாட்களை போலவே காலையும், மாலையும் மட்டுமே வருவாள். அம்மா ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை வீட்டில் வேலையிருக்கிறது என்று நாள் முழுவதும் இருக்கச்சொன்னதற்கு, இல்லீங்கம்மா என்று மறுத்துவிட்டாள். என் அப்பா, ஒரு காவல்துறை அதிகாரி ஆதலால் அவர் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட பணி நிமித்தமாக வெளியில் செல்வது உண்டு, அப்படியொரு நாள் போகும்போது திரையரங்கு உள்ள வீதியில் பொம்மியக்காவை வேறு சில பெண்களுடன் நடந்து செல்வதை பார்த்திருக்கிறார். பொம்மியக்கா, இல்லீங்கம்மா என்று ஒற்றை வரியில் மறுத்து சென்றதை அம்மா, அப்பாவிடம் கூற. அப்பா விடு சின்ன பெண் தானே, தோழிகளோடு ஏதாவது திரைப்படம் பார்க்க சென்றிருப்பாள் என்று சொன்னார். அதன் பின்னர் யாரும் அவள் ஞாயிற்றுக்கிழமைகளில் எங்கு செல்கிறாள் என்று யோசிக்கவில்லை.

ஒரு நாள் பாட்டி வீட்டுக்கு போகும்போது பொம்மியக்கா துணைக்கு வந்தாள், எங்கள் பின்னே ஒரு இளைஞன் வந்து கொண்டிருந்தான். நான் சற்று பயந்து பொம்மியக்கா கையை பிடித்துக்கொண்டேன். அவள், அவனை ஒரு முறை பார்த்தாள் பின் என்னிடம் பயப்படாதீங்க சின்னமணி, ஐயா பொண்ணு நீங்க பயப்படலாமா. சரி வாங்க நாம வெரசா போயிடுவோம் என்றாள். ஏனோ, நான் அன்று நடந்தை மறந்து போனேன்.

ஒரு நாள் காலை பொம்மியக்காவின் அம்மா இறந்துவிட்டதாக, அவளின் பக்கத்துவீட்டு பையன் வந்து சொன்னான். அப்பா அவள் வீட்டுக்கு சென்று இறுதிச்சடங்கு நடத்த பணம் தந்து உதவினார். எல்லாம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து பொம்மியக்கா வேலைக்கு வந்திருந்தாள். மீண்டும் அதே இளைஞன், வீட்டு வாசலில் நின்று எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தான்.

இம்முறை நான் அப்பாவிடம் கூறிவிட்டேன், அப்பா அவனை கூப்பிட்டு விசாரித்தார். அவன் பெயர் முத்து என்றும், பொம்மியக்காவை திருமணம் செய்ய விரும்புவதாகவும், இது அவளிடம் சொல்ல முடியாமல் தவிப்பதாகவும் கூறினான். பொம்மிக்கு சம்மதமென்றால் தானே நடத்திவைப்பதாக அப்பா கூறினார்.

பொம்மியக்காவை அழைத்தபோது, ஒரு வயதான முரட்டு ஆள் வீட்டுக்குள் நுழைந்தான், அவன் பொம்மியக்காவின் துாரத்து உறவு மாமா. அவன் தள்ளாடியபடியே, சார்….., ஞான் பொம்மிய ….கண்ணலாம் … பண்ணப்போறஞ் சார் ….. என்றான்.அப்பா, அந்த ஆளுக்கு பளார் என்று ஒன்று கொடுத்தார், அவன் ஒன்றும் சொல்லாமல் தள்ளாடியபடியே வெளியேறினான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பொம்மியக்கா, ஐயா, எனக்கு இரண்டு நாள் அவகாசம் கொடுங்க என்றாள். சரி என்று தலையாட்டி சென்றான் முத்து. ஆனால், இரண்டு நாட்கள் கழித்து பொம்மியக்காவை காணவில்லை. மூன்றாம் நாள் காவல்நிலையத்திற்க்கு, தேவாலயத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது பொம்மியக்கா கன்னியஸ்த்திரி மேரியாக மாறிவிட்டதாய். இரவு பொம்மியக்காவை பற்றி அப்பா, அம்மாவிடம் சொன்னது என் காதிலும் கேட்டது. பொம்மியக்கா எடுத்த முடிவை தெரிந்து கொண்ட முத்து, தன் வாழ்கையில் அவளை தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்று தனி மரமாக வாழத்தொடங்கினான்.

திருக்குறள்: ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது. (குறள்: 1196)

பொருள்:காதல் என்பது ஒரு பக்கமாக இருந்தால் துன்பம் மட்டுமே,
அது காவடித்தண்டின் பாரம் போல சமமாக இருவரிடமும் இருக்க வேண்டும்.
(காமத்துப்பால்-கற்பியல்-தனிப்படர்மிகுதி)———–திருவள்ளுவர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *