பொன்மகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 4,832 
 

எனக்கு ஏழு வயசில் சஹானா என்று ஒரு அழகான மகள். பயங்கரச் சுட்டி. அவளைச் சுற்றி நடப்பதைத் தெரிந்து கொள்ளவும், அவள் வாழ்க்கையைப் பத்தி தெரிஞ்சிக்கவும் அவளுக்கு ஆர்வம் அதிகம்.

மற்ற குழந்தைகள் மாதிரி மகிழ்ச்சியான, கவலையில்லாத, எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் இருக்கிற இயல்பான ஒரு சின்னப் பொண்ணுதான் சஹானா.

ஆனா, அவ என்கிட்ட அடிக்கடி கேட்கிற கேள்வி, “அம்மா, எனக்கு ஏன் அப்பா இல்லை?” என்பதுதான்.

“நான் எப்பவும் தனியா வாழணும்னு முடிவு பண்ணிட்டேன். எனக்கு இன்னமும் கல்யாணம் ஆகல சஹானா… அதனாலதான் உனக்கு அப்பா இல்லை…” என்று அவளிடம் நேர்மையாக உண்மையான பதிலைத்தான் தைரியமாகச் சொல்வேன்.

இந்தப் பதில் அவளை முழுமையாகத் திருப்திப் படுத்தலைன்னு நான் நினைக்கிறேன்.

தத்தெடுக்கப்பட்ட என்னோட பொன்மகள், அம்மா மட்டும் இருக்குற, அப்பா இல்லாத குடும்பத்துக்குள்ள வாழ வந்திருக்கா. ஒருவேளை அவளுடைய பிஞ்சு மனசு இதனால குழம்பிப் போயிருக்கலாம்.

“அம்மா, ஒரு பொண்ணும் பையனும் வளர்ந்துட்டாங்கன்னா அவங்களுக்கு கல்யாணம் ஆகும். அதுக்குப் பிறகு குழந்தை பிறக்கும்னு நீங்கதானே சொன்னீங்க… அப்படீன்னா என் அம்மாவுக்கும் கல்யாணம் ஆகியிருக்கும். என்னப் பெத்த அம்மா யாருன்னு எனக்குத் தெரியாததுபோல, என் அப்பா யாருன்னு என்பதும் எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு அப்பா இல்லைன்னு மட்டும் சொல்லாதீங்க…” அப்படீன்னு ஒருநாள் எங்கிட்ட அவ சொன்னா. அப்போ அவளுக்கு அஞ்சு வயசிருக்கும்.

அதக் கேட்டதும் என் கண்ணுல இருந்து தாரை தாரையா கண்ணீர் வந்திச்சு. ஒவ்வொருவாட்டியும் அவ கேக்கிற கேள்விக்கு நான் சொல்ற பதில் அவளுக்கு எப்படிப்பட்ட உணர்வைத் தந்திருக்கும்னு அன்னைக்குத்தான் எனக்குப் புரிஞ்சுது.

அவளுக்கு இது ஒரு சின்ன லாஜிக்தான். அந்த அஞ்சு வயசுப் பொண்ணு அவளோட கேள்விக்கு அவளே பதில் கண்டு பிடிச்சுட்டா.

ஆனா, என்னோட அந்தப் பதில் அவளுக்குப் போதுமானதா இல்லை. ஒரு தாயாகவும், ஒரு மனிதப் பிறவியாகவும் இந்தச் சம்பவம் அவள் மனசுல எப்படிப்பட்ட உணர்வை ஏற்படுத்திச்சுன்னு எனக்குப் புரிய வைத்தது.

“அம்மா, சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ” என்று அவ அடிக்கடி என்கிட்ட சொல்லுவா. “நான் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு நினைக்கல சஹானா. என்னிக்காவது ஒருநாள் அதுக்கு வாய்ப்பிருக்கு. என்னையும் உன்னையும் நல்லா புரிஞ்சுக்கிற ஆண்மகன் கிடைச்சா கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்.”

அவள் வளர்ந்து பெரியவளாகி இதே கேள்வியை திரும்பவும் என்கிட்ட கேட்டாலும் பதில் இதுவாகத்தான் இருக்கும். கல்யாணம் பண்ணிக்காம தனியாய் இருக்கிறது எந்த வகையிலும் எனக்கு வலியைக் கொடுக்கல. கல்யாணம் ஆகாம ஒரு ஆணின் துணையும் இல்லாம ஒரு குழந்தைக்குத் தாயா வாழும் இந்த வாழ்க்கைப் பயணம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு.

நான் ஆண்களை வெறுக்கலை. அவங்களை ரொம்பவே மதிக்கிறேன். என் மகளும் என்கிட்டே இருந்து இதையேதான் கத்துக்குறா. நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கல, ஏன் தனியா இருக்கவே விரும்புகிறேன் என்பதற்கு ஒரு காரணம் மட்டும் இல்ல. பல காரணங்கள்.

இருபது வருஷத்துக்கு முன்னாடி எனக்கு கல்யாண வயசு இருக்கிறப்போ எங்க கமூகத்துல பெரும்பாலானவங்க பிஸ்னஸ் செஞ்சாங்க. அதனால் ஆண்கள் அதிகமா படிக்கல. படிச்சவங்கன்னு இந்த சமூகத்துல சொல்லப்படுற இளம் ஆண்கள் வெளித் தோற்றத்திற்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுத்தாங்க.

நல்லா படிச்ச, நல்ல பழக்க வழக்கங்கள் கொண்ட என் வெளித் தோற்றத்தை மட்டும் பாக்காம என் அழகான மனசைப் புரிஞ்சுக்கிற ஆண்தான் எனக்கு வேணும்னு நினைச்சேன். இந்தத் தேடலும் எண்ணப் பத்தி நானே தெரிஞ்சுக்க உதவும் ஒரு பயணமா அமஞ்சுது.

தமிழ்நாட்ல இருக்கிற ஒரு கிராமப் பகுதியில நடுத்தர குடும்பத்துலதான் நான் பொறந்தேன். மற்ற இந்தியப் பெண்களை மாதிரியேதான் என்னையும் எங்க வீட்ல நடத்துனாங்க. என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அங்கு எப்போதும் மதிப்பில்லை.

எங்க சமூகத்துல மிகவும் அரிய விஷயமான மேல் படிப்பை என் அப்பா என்னப் படிக்க வெச்சாரு. நல்ல சம்பளத்தோட எனக்கு ஒரு நல்ல வேலையும் கிடைச்சுது. நான் தன்னம்பிக்கை நெறஞ்ச ஒரு பெண்ணா தனியா வாழ ஆரம்பித்தேன்.

வாழ்க்கை செல்லச் செல்ல ஒரு சுதந்திரமான வாழ்க்கையோட மதிப்பு எனக்குப் புரிய ஆரம்பித்தது. என் வாழ்க்கையில வேற எந்தத் துணையும் எனக்கு வேண்டாம்னு எனக்கு தோணிச்சு.

ஒருத்தரோட வாழ்க்கையில மிக முக்கியமான முடிவு யாரைத் திருமணம் செஞ்சுக்கப் போறோம் என்பதுதான். ஆனா அது என்னோட முடிவா மட்டும்தான் இருக்கணும். என் வாழ்க்கையை மத்தவங்க எப்படித் தீர்மானிக்க முடியும்?

ஒரு ஆணோ இல்லை கணவனோ என் வாழ்க்கைத் துணையா வேணும்னு எனக்குத் தோணலை. அதனால நான் தனியாகவே இருக்கேன். ஒரு வழியா இந்த என்னோட முடிவுக்கு என் பெற்றோர்கள் சமாதானம் ஆகிட்டாங்க.

நான் வேலை பார்க்கும் நிறுவனத்தோட ஒரு பகுதியா சமூகப் பொறுப்புணர்வு (social responsibility) திட்டத்தின் சார்பா அனாதைக் குழந்தைகளோடு என் நேரத்தை நான் செலவழிக்க தொடங்கலைன்னா என் வாழ்க்கைல எதுவுமே மாறியிருக்காது.

பாடம் எடுப்பது; விளையாடுவது; குழந்தைகளோடேயே எல்லா நேரத்தையும் செலவிடுவது இவைகள் எல்லாமே எனக்கு அளவிட முடியாத சந்தோஷத்தைக் கொடுத்தது. இதுக்காக நான் ரொம்பவுமே ஏங்கினேன்.

இருந்தாலும் என்னுடைய வேலையில் குழந்தைகளுக்கு நான் என்ன செய்யணும், என்ன செய்யக் கூடாதுன்னு ஒரு வரைமுறை இருந்திச்சு. இந்த எல்லைக்கோடு எனக்கு மிகுந்த வலியைக் கொடுத்திச்சு.

அப்போதுதான் ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம் என்கிற எண்ணம் எனக்குள் வந்துச்சு. ஆனா நான் எடுத்த இந்த முடிவினால பல கேள்விகள் என்னுள் தோன்றின.

நான் தத்தெடுக்கும் குழந்தை எப்படி எங்க குடும்பத்தோட தன்னை இணைத்துக் கொள்ளும்? அந்தக் குழந்தைக்கு ஒரு நல்ல தாயா என்னால இருக்க முடியுமா? அந்தக் குழந்தையை என்னால தனியாவே வளர்க்க முடியுமா? இது எல்லாமே எனக்கு நானே ஒரு வருஷமா கேட்டுக்கிட்ட கேள்விகள்.

ஒரு பெண் குழந்தையை தத்து எடுக்கலாம் என்று முடிவு செஞ்ச பிறகும் இந்த கேள்விகளுக்கெல்லாம் எனக்கு உறுதியான பதில் கிடைக்கவில்லை.

என் தோழிகளிடம் நிறைய பேசினேன். பெருமூச்சு விட்டேன். என் மனசுல உறுத்திய விஷயங்கள் என்னென்ன என்று ஒரு வெள்ளைத் தாளில் எழுதினேன்.

அதில் இடம்பெற்ற முக்கியமான விஷயம் தனியான தாய் என்ற பொறுப்பு பத்திதான். என் பெற்றோர் மற்றும் நண்பர்களோட ஆதரவு இதுல எந்த அளவுக்கு முக்கியம் என்பதை நான் உணர்ந்தேன்.

அழகு நிரம்பிய ஆறு மாதமேயான மகிழ்ச்சியின் குவியல்… அதாவது என் பொன்மகள் எங்க வீட்டுக்கு வந்தப்போ ஒரு திருவிழா மாதிரி இருந்திச்சு. அந்த தத்தெடுப்பு மையத்துல முதலாவதா தத்தெடுக்கப்பட்ட என் மகளை வழியனுப்ப ஐம்பது பேர் அவளைச் சுத்தி நின்னாங்க.

அவள் எங்க வீட்டுக்கு வந்ததும் என்னுடைய எல்லா சந்தேகங்களும் மறஞ்சு போச்சு. அவள் அனைவராலும் விரும்பப்பட்ட பொன்மகளா மாறிட்டா.

யார் துணையும் இல்லாம தனியான தாயா என் குழந்தையை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திடுச்சு. கடைசியா என் பெற்றோர் வீட்டிலிருந்து வெளியே வந்து தனியா சுதந்திரமா என் பொன்மகளுடன் வாழ ஆரம்பிச்சேன். எனக்கும் என் மகளுக்கும் இடையே பிணைப்பு இன்னமும் வலுவாச்சு.

நான் அவளோட உண்மையான தாய் இல்லை என்கிற நினைப்பு எனக்கு வந்ததே இல்லை. அவளோட அப்பா எங்கே என்று மத்தவங்க கேட்கிற கேள்விகளுக்கெல்லாம், நான்தான் உலகிலேயே மிகச்சிறந்த அம்மாவும் அப்பாவும் என்று அவள் சொல்லும்போது எனக்கு பெருமையாக இருக்கும்.

நான் வேலை செய்யும்போது அவள் என்னைப் பார்த்தா, இப்போ நீங்கதான் என்னோட அப்பா என்று சொல்லுவா! இப்படி அவள் சொல்வது எனக்கு விலை மதிக்க முடியாதது…

தத்தெடுக்கப்பட்ட ஒரு குழந்தையோட வாழ்க்கை அவ்வளவு எளிமையானது அல்ல.

எங்ககிட்ட இந்தச் சமூகம் கேட்கும் பல கேள்விகளுக்கு எப்படி பதில் அளிக்கணும்னு நாங்க தெளிவா இருக்கோம். என் மகளோட கடந்தகால வாழ்க்கை பற்றி நிறையப்பேர் கேட்பாங்க. ஆனா கடந்துபோன வாழ்க்கையைப்பற்றி மத்தவங்க ஏன் தெரிசுக்கணும்?

இப்படிப்பட்ட சிக்கல்களுக்கு மத்தியிலும் எங்களோட வாழ்க்கையில சின்னச் சின்ன சந்தோஷங்களும், அன்பான தருணங்களும் ஏராளமா நிறைஞ்சிருக்கு. இதுக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்லணும்னா என் தங்கை எங்களைப் பார்த்து ஈர்க்கப்பட்டு இப்போ அவளும் ஒரு பெண் குழந்தையை கல்யாணத்துக்கு முன்னாலேயே தத்தேடுத்திருக்கா.

தத்தெடுப்பு என் வாழ்க்கையின் முக்கியமான பகுதியா மாறிடிச்சு. குழந்தைகளை தத்தெடுக்கும் வழிமுறைகளைப் பற்றி இப்போது நான் மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுக்கிறேன்.

என் பொன்மகள் அவள் முடிவுகளை அவளே எடுக்கணும்னு நான் விரும்பறேன். ஏனென்றால் இது என்னோட வாழ்க்கையின் முற்பகுதியில் எனக்குக் கிடைக்கல.

இந்தச் சுய அடையாளம்தான் என்னை மாதிரியே அவள் அவளாக வளர அவளுக்குத் துணை செய்யும். எனக்குத் தனியா இருக்கிறதுதான் பிடிச்சிருக்கு. ஆனா என் மகளோட நான் இருக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *