கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 25, 2023
பார்வையிட்டோர்: 1,999 
 
Vettai

‘கொக்கரக்கோ!’

சேவல் கூவியது.

படுக்கையில் படுத்திருந்த சிறுவன் துள்ளி எழுந்தான். ‘அம்மா! அம்மா !’ என்று அழைத்துக் கொண்டே அம்மாவின் அருகிலே ஒடினான்.

“என்னடா, என் கண்னே?” என்று அன்பாகக் கேட்டாள் அம்மா.

“அம்மா. மாமாவின் ஊருக்குப் போகப் போகிறேன். போகட்டுமா, அம்மா?”

இந்தக் கேள்வியைக் கேட்டதும் அம்மா புன்சிரிப்புடன், “என்ன, மாமா ஊருக்கா அடேயப்பா அது சமீபத்திலா இருக்கிறது? குறைந்தது நூறு மைலாவது இருக்குமே!” என்றாள்.

“இருக்கட்டுமே!…… அம்மா, எனக்கு மாமாவைப் பார்க்க வேண்டுமென்று ஆசையாய் இருக்கிறது. மாமாவின் பிள்ளைகளைப் பற்றி அந்த வியாபாரித் தாத்தா சொன்னாரே, கேட்டாயா? அவர்களெல்லாம் ‘ஹாக்கி’ விளையாடுவதில் மிகவும் கெட்டிக்காரர்களாம். அற்புதமாக விளையாடுகிறார்களாம். எனக்கும்தான் ஹாக்கி விளையாடத் தெரியுமே! நானும் அங்கே போய் அவர்களுடன் சேர்ந்து விளையாடலாம் அல்லவா? எனக்கு விடை கொடுத்து அனுப்பு, அம்மா.”

“என்ன! விடை கொடுத்து அனுப்புவதா ! நீயோ சிறு பையன். இவ்வளவு தூரத்தில் உள்ள

மாமாவையும், அவருடைய குழந்தைகளையும் நீ போய்ப் பார்ப்பது என்பது சுலபமான காரியமா? வழியில் எத்தனையோ காடுகள்; மலைகள்; ஆறுகள்! அவ்வளவையும் நீ கடந்து செல்ல வேண்டும். சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறாயே!”

“என்னம்மா நீ இப்படிச் சொல்கிறாய்! நான் என்ன, கோழையா? அல்லது, கோழையான ஒரு குடும்பத்திலே பிறந்தவனா? என் அப்பாவைப் போல் நானும் ஒரு பெரிய வீரனாக வேண்டாமா?”

இதைக் கேட்டதும், அம்மாவின் கண்கள் கலங்கின. அதே சமயத்தில், மகனின் வீர வார்த்தைகள் அவளுக்கு இன்பத்தைக் கொடுத்தன.

“ஆமாம், நீ போகிறேன் என்கிறாயே! நீ மட்டும் தனியாகவா போகப்போகிறாய்? துணை வேண்டாமா?”

“துணையா! எதற்கு அம்மா? யாருமே என்னுடன் வரவேண்டாம். நான் மட்டுமே செல்லப் போகிறேன். என் அப்பாவைப்போல் நானும் வீரணாக வேண்டாமா? அதற்கு நல்ல அனுபவம் வேண்டாமா? எந்தத் திசையில் போகவேண்டும் என்பதை மட்டும் சொல்லிவிடு, நான் இன்றே புறப்பட்டுப் போகிறேன்.”

“என்ன! இன்றே புறப்படப் போகிறாயா? அவசரப்படாதே! அந்த வியாபாரித் தாத்தா சொன்னது முழுவதையும் கேட்டாயா? உன் மாமா கூடிய சீக்கிரத்தில் இங்கு வரப் போகிறாராம். அவர் வரும்போது அவருடன் கூட நீயும் போகலாம்……”

“ஆமாம், அந்தத் தாத்தா அதுமட்டுமா சொன்னார்? யுத்தத்தில் ஈடுபட்டிருந்ததால், ஐந்தாறு வருஷங்களாக உள்நாட்டு விஷயங்களை மாமா கவனிக்க முடியாமலை போய்விட்டதாம், இப்போதுதான அவர் அவற்றையெல்லாம் கவனிக்கிறாராம். அதனால் வேலை அதிகமாக இருக்கிறதாம். வேலை அதிகமாக இருக்கும் போது, மாமா எப்படிச் சீக்கிரத்தில் இங்கு வர முடியும்? நான் போய், அவரை அழைத்து வருகிறேன். விடை கொடு, அம்மா!”

அம்மா எவ்வளவோ கூறிப் பார்த்தாள். ஆனால் அந்தச் சிறுவன் விடவில்லை. அம்மாவைச் சமாதானப்படுத்தி, ஒருவழியாக அவளுடைய அனுமதியைப் பெற்றுவிட்டான்!

***

ஸெதாந்தா– இதுதான் அந்தப் பையனின் பெயர். அவனுக்கு வயது இன்னும் ஒன்பது கூடப் பூர்த்தியாகவில்லை. அந்த வயதிலேயே அவன் மிகவும் தைரியசாலியாக இருந்தான்.

ஸெதாந்தாவின் மாமாதான் அந்த நாட்டு அரசர். அந்த நாட்டுக்கும், அடுத்த நாட்டுக்கும் ஐந்தாறு ஆண்டுகளாகக் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது.

போர் ஆரம்பமாவதற்கு முன்பு, தலைநகரிலிருந்து நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள ஒரு மண்டலத்தில், ஒரு பெரிய படையின் தலைவராக இருந்தார், ஸெதாந்தாவின் அப்பா. போர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டிருந்த போது, உடனே ஒரு பெரிய படையுடன் புறப்பட்டு வரவும், என்று ஸெதாந்தாவின் அப்பாவுக்கு அரசரிடமிருந்து உத்தரவு வந்தது. மனைவியையும், மகனையும் அங்கேயே விட்டுவிட்டு, ஒரு பெரிய படையுடன் புறப்பட்டார், அப்பா.

எதிரிகளை மிகவும் கடுமையாக எதிர்த்துப் போரிட்டார்கள். வெற்றியோ தோல்வியோ யாருக்கும் கிடைக்கவில்லை. எதிரிகளை இவர்கள் தாக்குவதும், இவர்களை எதிரிகள் தாக்குவதுமாகப் போர் நடந்துகொண்டே இருந்தது.

Vettai2

ஒரு நாள் ஸெதாந்தாவின் அப்பா எதிரிகளை எப்படியும் முறியடித்து விடுவது என்று தீர்மானித்துத் தம்முடைய படையுடன் முன் நோக்கிச் சென்றார்; வீரமாகப் போரிட்டார். ஆனால் , அவர் உயிருடன் திரும்பவில்லை; போர்க் களத்திலே இறந்துவிட்டார்! வீரசொர்க்கம் அடைந்தார்.

அவர் இறந்த செய்தியைக் கேட்டதும் ஸெதாந்தாவும், அவன் அம்மாவும் அடைந்த துயருக்கு அளவே இல்லை. வாடினார்; வருந்தினார்; கண்ணிர் விட்டனார்; கதறி அழுதனார்.

ஆனால், இது நடந்து இப்போது இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. போரில் எதிரிகள் முறியடிக்கப்பட்டனார். ஸெதாந்தாவின் மாமா வெற்றிமாலை சூடி வீடு திரும்பினார்.

போர் நடந்த காலத்தில் நாட்டு மக்களின் நலத்தை அவரால் கவனிக்க முடியாமல் போய்

விட்டது. ஐந்தாறு ஆண்டுகளாகக் கவனிக்காமல் விடுபட்டுப்போன வேலைகளை இப்போது தான் அவசர அவசரமாகக் கவனித்து வருகிறார், அரசர். “நம் தங்கையையும் தங்கை மகனையும் காணவேண்டும். அவர்களுக்கு ஆறுதல் கூறி நம்முடன் இங்கு அழைத்துவர வேண்டும்” என்று அரசர் நினைத்தார். ஆனால், வேலை மிகுதியால் நினைத்தபடி உடனே போக முடியவில்லை. குறைந்தது ஒன்றிரண்டு மாதங்கள் சென்றுதான் போக முடியும் போல் தோன்றியது.

அவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவனுக்கு வயது 14; அடுத்தவனுக்கு வயது 11; மூன்றாவது பையனுக்கு வயது 9. மூவரும் ஹாக்கி விளையாடுவதில் நிபுணர்கள்! தினந்தோறும் காலையிலும் மாலையிலும் அரண்மனைக்கு அருகேயுள்ள மைதானத்தில், மற்ற பிரபுக்களின் குழந்தைகளுடன் ஹாக்கி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

அரசரைப் பற்றியும், அவருடைய குழந்தைகளைப் பற்றியும் ஒரளவு தெரிந்து வைத்திருந்தார், ஒரு வயோதிக வியாபாரி. அவர் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் ஸெதாந்தா இருக்கும் ஊருக்கு வியாபார விஷயமாக வருவார். அப்படி வரும்போதெல்லாம் அவர் ஸெதாந்தாவையும் அவன் அம்மாவையும் பார்க்காமல் திரும்ப மாட்டார். பார்க்கும்போது, அரசரைப் பற்றியும், அவருடைய குழந்தைகளைப் பற்றியும் தமக்குத் தெரிந்தவற்றை யெல்லாம் கூறுவார். ஸெதாந்தாவும் அவன் அம்மாவும் ஆவலோடு கேட்பார்கள். அன்று இரவு அங்த வியாபாரி ஸெதாந்தாவின் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் கூறியதைக் கேட்டதிலிருந்துதான் ஸெதாந்தாவுக்கு மாமாவின் ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

***

ஸெதாந்தா காடுகளைக் கண்டு கலங்கிவிடவில்லை, மலைகளைக் கண்டு மலைத்துவிடவில்லை; ஆறுகளைக் கண்டு அயர்ந்துவிடவில்லை. தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் எல்லாவற்றையும் எளிதிலே கடந்து தலைநகருக்கு வந்து விட்டான்!

தலைநகரை அடைந்ததும், அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ‘ஆ! நாம் தலை நகரை அடைந்துவிட்டோம்! நம் மாமாவை இன்னும் சிறிது நேரத்தில் காணப் போகிறோம்; மாமாவின் பிள்ளைகளுடன் அளவளாவி மகிழப் போகிறோம்’ என்றெல்லாம் நினைத்துக்கொண்டே அரண்மனையை நோக்கி நடந்தான்.

அரண்மனையை அவன் நெருங்கும் சமயம். அப்போது, அங்கிருந்த மைதானத்தில் சில சிறுவர்கள் ஹாக்கி விளையாடிக் கொண்டிருப்பதை அவன் கண்டான். உடனே, அவர்கள் விளையாடும் இடத்திற்கு அருகே சென்றான்; கூர்ந்து பார்த்துக்கொண்டே நின்றான்.

அங்கே விளையாடுபவர்களில் மூன்று சிறுவர்கள் ஒரே மாதிரி உடை அணிந்திருந்தனர். ஆடம்பரமாகவும், அழகாகவும் அவர்களுடைய உடைகள் இருப்பதைக் கண்டதும், இவர்கள் தான் நம்முடைய மாமாவின் பிள்ளைகளாக இருக்கவேண்டும். கூட விளையாடுபவர்கள் பிரபுக்களின் குழந்தைகளாக இருக்கலாம் என்று நினைத்தான், ஸெதாந்தா.

அசையாமல் நின்ற இடத்திலேயே நின்று ஆட்டத்தைக் கவனித்தான். ஆட்டம் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. ஆட்டத்தைப் பார்க்கப் பார்க்கத் தானும் அவர்களுடன் சேர்ந்து பந்தாட வேண்டுமென்று துடி துடித்தான்.

Vettai3

அப்போது, ஒருவன் தன் கையிலிருந்த மட்டையால் (Hockey stick) ஓங்கிப் பந்தை அடித்தான். பந்து தரையில் வேகமாக உருண்டோடிக் கொண்டிருந்தது. அப்போது, எதிரில் நின்ற இன்னொரு சிறுவன் அதை எதிர்த்து அடிக்க முயன்றான். ஆனால், அவனது குறி தவறி விட்டது. பந்து அவனையும் தாண்டி வேகமாக வந்துகொண்டிருந்தது. அந்தப் பந்தைக் கண்டதும், ஸெதாந்தாவினால் சும்மா இருக்க முடியவில்லை. குபீரென்று விளையாட்டு எல்லைக்குள் பாய்ந்தான். தன்னுடன் கொண்டுவந்திருந்த பந்தடிக்கும் மட்டையால் அந்தப் பந்தை எதிர்த்துப் பலமாக அடித்தான். அடித்ததோடு நிற்கவில்லை; அதைத் தொடர்ந்து ஒடவும் ஆரம்பித்தான்.

பூசை வேளையில் கரடி புகுந்தது போல், எவனோ ஒர் அன்னியன் திடீரென்று ஆட்டத்தில் வங்து புகுந்ததைக் கண்டதும், அந்தச் சிறுவர்கள் எல்லோரும் கூச்சல் போட ஆரம்பித்தனர். சிலர் அவனைப் பிடித்து இழுத்து நிறுத்த முயன்றனர்; முடியவில்லை. அவன் எல்லோரையும் தள்ளிக் கொண்டு பந்தைத் தொடர்ந்து ஓடினான். கோபம் கொண்ட சிலர் அவனைப் பிடித்து அடிக்க ஓடினர்.

கூச்சல் பலமாகக் கேட்கவே அரண்மனைக் குள்ளிருந்த அரசர் உப்பரிகை வழியாக எட்டிப் பார்த்தார். எவனோ ஒரு சிறுவன் அங்கு வந்து ஆட்டத்தைக் கலைப்பதாக அறிந்தார். உடனே, சேவகர்களை அனுப்பி அவனைப் பிடித்து வர உத்தரவிட்டார்.

சேவகர்கள் ஸெதந்தாவைப் பிடித்து வந்தனர்; அரசர் முன் நிறுத்தினர்.

அரசர் அவனைப் பார்த்து, “ஏ பையா, நீ யார்?” என்று கோபமாகக் கேட்டார்.

“அரசே, நான் யாரென்பது தெரிந்தால் தாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள்!” என்று தலைநிமிர்ந்து கூறினான், ஸெதாந்தா.

“என்ன!… அப்படியா !”

“ஆம் அரசே! இந்த நாட்டுக்காகத் தம் முடைய உயிரையே கொடுத்த மாபெரும் வீரனின் மகன்தான் நான்!”

இதைக் கேட்டதும், அரசருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும், அவருக்கு அவன் யார் என்பது சரியாகத் தெரியவில்லை.

“என்ன! உன் தந்தை இந்த நாட்டுக்காக உயிரைக் கொடுத்தாரா?”

“ஆம், என் தந்தை நாட்டுக்காக உயிரைக் கொடுத்தார். என் தாய் இந்த நாட்டு அரசரின் கூடப் பிறந்தாள்…”

“என்ன! நீ சொல்வது ஒன்றும் விளங்க வில்லையே!”

“இன்னும் கொஞ்ச நேரம் சென்றால், தானாக விளங்கிவிடும்!”

அரசர் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தார். பிறகு, “அப்படியானல், உன் பெயர்…?”

“என் பெயர் ஸெதாந்தா!”

“என்ன! என் தங்கை மகன் ஸெதாந்தவா!’ என்று ஆச்சரியத்துடன் கூறிக்கொண்டே அவன் அருகே ஓடினார்; அவனை அப்படியே கட்டி அணைத்து முத்தமிட்டார்.

“ஸெதாந்தா, அம்மா சுகமாயிருக்கிறாளா? நீ எப்படி இங்கு வந்தாய்? நீ மட்டும்தான் வந்தாயா? அல்லது, அம்மாவும் வந்திருக்கிறாளா?” என்று படபடப்புடன் கேட்டார், அரசர்.

“நான் மட்டுமே வந்தேன். அம்மா ஊரில் இருக்கிறாள். உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் காணவே இவ்வளவு தூரம் நடந்து வந்தேன். ஆணால், நானாக வந்து உங்களைக் காண்பதற்குள் உங்களுக்கு அவசரம்! சேவகர்களை அனுப்பி என்னை அழைத்துவரச் செய்துவிட்டீர்கள்!’ என்று சிரித்துக் கொண்டே கூறினான், ஸெதாந்தா.

இதைக் கேட்டதும், அரசருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. சேவகர்கள் ஆச்சரியத்துடன் ஸெதாந்தாவையும் அரசரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே நின்றனர்.

உடனே அரசர், ஆவலாகத் தம்முடைய பிள்ளைகளை அழைத்தார். “இதோ பாருங்கள், இவன்தான் உங்கள் அத்தை மகன் ஸெதாந்தா . கெட்டிக்காரப் பையன்” என்று கூறி அவனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

உடனே அரசரின் மூன்று பிள்ளைகளும் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒருவன், ஸெதாந்தாவின் தோளிலே கை போட்டான்; மற்றொருவன் அவன் கையைப் பிடித்துக் குலுக்கினான். கடைக் குட்டிப் பையன் அவன் வயிற்றிலே வேடிக்கையாக ஒரு குத்துக் குத்தி, “அடே, நீ பந்தாடுவதில் பெரிய சூரனா இருப்பாய் போலிருக்கிறதே!” என்றான்.

பிறகு அரசர் ஸெதாந்தாவிடம், “போர் முடிந்ததுமே அம்மாவையும் உன்னையும் காணவேண்டும் என்று நினைத்தேன். அங்கு வந்து திரும்புவதற்குக் குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். அவகாசமே கிடைக்கவில்லை. எப்படியும் இன்னும் ஒரு மாதத்திற்குள் வருவதென்றுதான் இருந்தேன்…சரி, வா, அப்புறம் சாவதானமாகப் பேசிக் கொள்ளலாம். முதலில் குளித்துச் சாப்பிடு. பசியுடன் இருப்பாய்” என்று அவனை அழைத்துச் சென்றார்,

ஸெதாந்தா குளித்து முடித்தான். அவனுக்கு அழகான உடை, அறுசுவை உணவு எல்லாம் கொடுக்கப்பட்டன.

அன்றைய தினமே, ‘ஸெதாந்தா சுகமாக வந்து சேர்ந்துவிட்டான்’ என்று அவனுடைய அம்மாவுக்கு அரசர் ஆள் மூலம் சொல்லி அனுப்பினார். அத்துடன் ‘இன்னும் ஒரு மாதத்துக்குள் ஸெதாந்தாவுடன் அங்கு வருகிறேன்’ என்றும் கூறி அனுப்பினார். அன்று முதல் ஸெதாந்தா அவனுடைய மாமாவின் பிள்ளைகளுடன் காலையிலும் மாலையிலும், ஹாக்கி விளையாட ஆரம்பித்தான். ஒரு வாரத்துக்குள், அவன் ஹாக்கி விளையாடுவதில் பெரிய நிபுணனாகி விட்டான்! அவன் ஆட்டத்தைப் பார்த்தவர்களெல்லாம் அவனை வாயார வாழ்த்தினார்கள்; மனமாரப் போற்றினர்கள்.

***

அன்று மாலை நேரம். அரண்மனை வாயிலில் அழகான இரு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு வண்டி நின்று கொண்டிருந்தது. அரண்மனைக்குள்ளிருந்து, அந்த வண்டியை நோக்கி அரசரும், அவருடன் கூட ஒரு பிரபுவும் வந்தார்கள்.

வண்டியை நெருங்கியதும் “அரசே, தாங்கள் முதலில் ஏறி அமருங்கள்” என்று பணிவுடன் கூறினார் பிரபு.

அரசர் வண்டியில் ஏறினார். பிறகு பிரபுவும் ஏறிக் கொண்டார். வண்டி புறப்பட்டது.

அரசரின் பக்கத்திலே இருந்த பிரபு, ஒரு சாதாரணப் பிரபு அல்ல; அந்தத் தலைநகரிலே அவர் தான் மிகவும் பெரிய பிரபு. அவருடைய பங்களாவில் அரசருக்காக ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அந்த விருந்துக்காகத் தான் அரசரை அவர் அழைத்துக்கொண்டு போனார்.

வண்டி சிறிது தூரம் சென்றிருக்கும். அப்போது பக்கத்து மைதானத்தில் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் கூட்டத்தைக் கண்டார், அரசர், அந்தக் கூட்டத்தில் ஸெதாந்தா சுறு சுறுப்பாகவும், உற்சாகத்துடனும் ஆடுவதைப் பார்த்தார். உடனே, அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

பக்கத்திலிருந்த பிரபுவிடம், அதோ பாரும், “அந்தப் பையன் யார் தெரியுமா?” என்று கேட்டார்.

பிரபு சிறிது நேரம் அவனைப் பார்த்துவிட்டு, “ஆம் அரசே, அவன் யார்? புதுப் பையனாக இருக்கிறானே!” என்று கேட்டார்.

“உமக்குப் புதியவன்; ஆனால், எனக்கு அவன் உறவினன். என் தங்கை மகன்தான் அவன்.”

இதைக் கேட்டதும் பிரபு மிகவும் ஆச்சரியத்துடன், “நான் நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது. பையனைப் பார்த்ததுமே, இவன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருப்பானோ!” என்று சந்தேகப்பட்டேன். நான் நினைத்ததில் தவறே இல்லை. தங்கை மகன் வருங்காலத்தில் பெரிய வீரனாக வருவான். சந்தேகமே இல்லை… “அது சரி… அரசே, விருந்துக்கு அந்தப் பையனையும் அழைத்துச் செல்ல நான் விரும்புகிறேன். அழைத்துச் செல்லலாமா?” என்று கேட்டார்.

“உமது விருப்பம்போல் செய்யலாம்” என்றார், அரசர்.

உடனே பிரபு, வண்டியை நிறுத்தச் சொன்னார் வண்டி நின்றது. “ஸெதாந்தா! ஸெதாந்தா!”

என்று அரசர் அழைத்தார். ஸெதாந்தாவின் காதுகளில் அரசரின் குரல் விழவில்லை; அவன் தான் மும்முரமாக ஹாக்கி விளையாயாடிக் கொண்டிருக்கிறானே!

“ஸெதாந்தா உன்னை அரசர் அழைக்கிறார். அதோ பார்!” என்று மற்றவர்கள் கூறியபோது தான் ஸெதாந்தாவுக்கு அரசர் தன்னை அழைக்கிறார் என்பது தெரிந்தது. உடனே, ஆட்டத்தை நிறுத்திவிட்டு அந்தக் குதிரை வண்டியை நோக்கி அவன் ஓடி வந்தான்.

“ஸெதாந்தா இதோ இருக்கிறாரே, இந்தப்பிரபு வீட்டில் இன்று ஆறு மணிக்கு ஒரு விருந்து நடக்கப் போகிறது. அதற்கு நீயும் வரவேண்டுமாம். வா, வண்டியில் ஏறிக்கொள்” என்றார் அரசர்.

“மாமா, இன்னும் ஆட்டம் முடியவில்லை. நான் இப்போது நடு ஆட்டத்தில் வந்தால் மற்றவர்களுக்குச் சங்கடமாக இருக்கும்.

ஆகையால், இந்த ஆட்டம் முடிந்த பிறகு நான் வருகிறேன். நீங்கள் முன்னால் செல்லுங்கள். நான் வந்து விடுகிறேன். விலாசத்தை மட்டும் கூறி விட்டுச் செல்லுங்கள்” என்றான்.

“தம்பி, என் பங்களா சுமார் இரண்டு மைல் தூரத்தில் இருக்கிறது. நீ மட்டும் தனியாகவா வரப்போகிறாய்?” என்று கேட்டார், பிரபு,

“கவலைப்படாதீர்கள். நான் வந்து விடுவேன். ஊரிலிருந்தே நான் தனியாகத்தானே நடந்து வந்தேன்!” என்றான் ஸெதாந்தா.

“சரி, சீக்கிரம் வந்துவிடு” என்று கூறி, பிரபுவின் வீட்டு விலாசத்தைக் கொடுத்துவிட்டு அரசர் வண்டியை விடும்படி கூறினார். வண்டி நகர்ந்தது.

***

பிரபுவின் வீட்டில் ஒரே தடபுடலாக இருந்தது. பிரபுக்களும், அரசாங்க அதிகாரிகளும் வரிசை வரிசையாக வந்து கொண்டிருந்தனர். பிரபு எல்லோரையும் வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தார்.

அரசர், அங்கிருந்த மிகவும் அழகான ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். வந்தவர்கள் ஒவ்வொருவராய் அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு அவரவர் இடத்தில் போய் அமர்ந்தனர்.

மணி ஆறு அடித்தது.

பிரபு அரசரின் அருகே வந்தார். “அரசே, எல்லோரும் வந்துவிட்டார்கள். விருந்தை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். தங்கள் அபிப்பிராயம்…” என்று இழுத்தார்.

அப்பொழுது அரசருக்கோ அல்லது அந்தப் பிரபுவுக்கோ ஸெதாங்தாவைப் பற்றிய நினைவே இல்லை. விருந்தினரை உபசரிக்கும் வேலையில் பிரபு அவனை மறந்துவிட்டார். அரசரும் வந்திருந்த சில பிரபுக்களுடன் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்ததால், அவனைப் பற்றியே நினைக்கவில்லை.

“ஒ! தாராளமாக ஆரம்பிக்கலாம்” என்றார், அரசர்.

‘சரி, கதவுகளை யெல்லாம் தாழிடும்படி சொல்லி விட்டேன். எதிரிகள் எவரும் வராமல் வெளியில் காவலும் வைத்துவிட்டேன்.’

“யார், உம்முடைய ஆட்களே காவல் இருக்கிறார்களா? அல்லது அரண்மனை ஆட்களா?”

“ஆட்கள் எதற்கு? என்னுடைய வேட்டை நாய்தான் காவலாக இருக்கிறது! அது மிகவும் பொல்லாத நாய். அதைக் கண்டாலே எதிரிகளுக்குப் பயம்தான்! ஒரு தடவை முப்பது நாற்பது பேர் இங்கே கொள்ளையடிக்க வந்தார்கள். அவர்களையெல்லாம் மூலைக்கு ஒருவராக ஓடும்படி அது விரட்டியது இருக்கிறதே. அடேயப்பா: அதைப் பற்றிச் சாவதானமாகச் சொல்ல வேண்டும்” என்றார் பிரபு.

பிறகு, விருந்து ஆரம்பமானது. எல்லோரும் தட்டுகளைக் காலி செய்யும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டனர்.

***

ஸெதாந்தா ஆட்டத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டான். புறப்படும்போதே மணி ஆறாகி விட்டது. பந்தைத் தெருவில் போட்டு, மட்டையால் அடித்துக்கொண்டே சென்றான். விளையாட்டாகச் சென்றதால், வெகு சீக்கிரத்தில் பிரபுவின் பங்களாவை நெருங்கிவிட்டான்.

பங்களாவை நோக்கி அவன் வருவதைக் கண்டதும், அங்கு காவல் காத்துக் கொண்டிருந்த வேட்டை நாய் குரைக்க ஆரம்பித்தது. அதன் பெரிய உடலையும், கனத்த குரலையும், கத்தி போன்ற பற்களையும் யாராவது பார்த்தால், உடனே பயந்து விடுவார்கள். ஆனால், ஸெதாந்தாவா அதற்கெல்லாம் பயப்படுகிறவன்? பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு, நாய் நிற்கும் இடத்தை நோக்கி நடந்தான்.

பயப்படாமல் அவன் அருகே வருவதைக் கண்டதும், நாயின் கோபம் அதிகமாகிவிட்டது. வாயை ‘ஆ’ என்று பிளந்துகொண்டு, அவனை நோக்கிப் பாய முயன்றது. அதற்குள், ஸெதாந்தா தன் கையிலிருந்த பந்தை மேலே தூக்கினான்.. திறந்திருந்த நாயின் வாய்க்குள் ‘லபக்’ கென்று போட்டுவிட்டான்! போட்டதோடு நிற்கவில்லை; கையிலிருந்த மட்டையால் அந்தப் பந்தைத் தொண்டைக்குள் நன்றாகக் குத்தித் தள்ளி விட்டான்!

பாவம், அந்த வேட்டை நாயால் பந்தை வெளியே கக்கவும் முடியவில்லை; உள்ளே விழுங்கவும் முடியவில்லை. திணறித் திண்டாடிக்கொண்டிருந்தது. இதுதான் சமயம் என்று நினைத்த ஸெதாந்தா மட்டையால் அதன் தலையிலே பலமாக ஐந்தாறு அடிகள் வைத்தான். அவ்வளவு தான்! அந்த நாய் அங்கேயே சுருண்டு விழுந்து விட்டது. ஸெதாந்தா திரும்பவும் நாலைந்து அடிகள் கொடுத்தான். பிறகு வாலைப் பிடித்துப் ‘பரபர’ என்று இழுத்தான். அப்புறமும் அந்த நாய் பிழைத்திருக்குமா, என்ன? அதன் மூச்சு நின்று விட்டது!

“ஆயுள் முடிந்தது!” என்று குதூகலத்துடன் உரக்கக் கத்தினான் ஸெதாந்தா. அந்தச் சப்தம் உள்ளே விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் காதுகளில் அரைகுறையாக விழுந்தது. உடனே அரசருக்கு ஸெதாந்தாவைப் பற்றிய நினைவு வந்தது. “ஐயோ! என் தங்கை மகன் வருவதாகச் சொன்னானே! ஒரு வேளை அவனைத்தான் வேட்டை நாய் கடித்து விட்டதோ!” என்று கூறிக்கொண்டே வாயிலை நோக்கி ஓடினார். அவரைத் தொடர்ந்து பிரபுவும், மற்றும் சிலரும் ஓடினார்கள்.

வெளியே வந்ததும், வெற்றி முழக்கத்துடன் நிற்கும் ஸெதாந்தாவை அவர் கண்டார்; அவன் பக்கத்திலே செத்துக் கிடக்கும் வேட்டை நாயையும் கண்டார். உடனே அவர் ஒடிப்போய் ஸெதாந்தாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, “நல்லவேளை; நீ பிழைத்தாய்” என்றார்.

“இல்லை. கெட்ட வேளை; என் நாய் செத்து விட்டது!” என்று வருத்தத்துடன் கூறிக் கொண்டே நாயின் அருகே ஓடினார், பிரபு. அது மூச்சின்றிக் கிடப்பதைக் கண்டார்; பெருந்துயர் அடைந்தார்.

பிரபுவின் வருத்தத்தை உணர்ந்தான் ஸெதாந்தா. உடனே அவர் அருகிலே ஓடினான்.

“பிரபுவே, என்னை மன்னிக்க வேண்டும். உங்களுடைய நாயை நான் வேண்டுமென்று கொல்லவில்லை. இப்போது அது இறந்து கிடக்கிறது. நான் உயிருடன் இருக்கிறேன். இல்லாவிடில், நான் இறந்திருப்பேன். அது உயிரோடு இருந்திருக்கும். நடந்ததை நினைத்து வருந்துகிறேன். தயவு செய்து என்னை மன்னிக்கவேண்டுகிறேன்” என்று அவரைப் பார்த்துக் கெஞ்சிக் கேட்டான் ஸெதாந்தா.

அதற்குள் அரசர் பிரபுவைப் பார்த்து, “ஏதோ எதிர்பாராத விதமாக நடந்துவிட்டது. என்ன செய்வது? வருத்தப்படாதீர்கள். இதே ஜாதியில் வேறு ஒரு வேட்டை நாய் வாங்கிக் கொள்ளலாம்” என்றார்.

ஆனல், பிரபு அரசரைப் பார்த்து, “அரசே, நான் இதைச் சிறு குட்டியிலிருந்து வளர்த்து வந்தேன். மிகவும் நன்றியுடன் இன்றுவரை எங்கள் குடும்பம், சொத்து, சுகம், எல்லாவற்றையும் பத்திரமாகவும், வீரத்துடனும் இது பாதுகாத்து வந்திருக்கிறது. இனி, எதிரிகளுக்குக் கொண்டாட்டம்தான்! சிறு வயது முதல் இங்கே வளர்ந்ததால்தான் இது இவ்வளவு நன்றியறிதலுடன் இருந்து வந்தது. பெரிய நாயை வாங்கி எவ்வளவுதான் அன்பாக ரொட்டியும், கறியும் ஊட்டி ஊட்டி வளர்த்தாலும் இதற்கு ஈடாகுமா?” என்று கண் கலங்கக் கூறினர், பிரபு.

ஸெதாந்தாவுக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. “நம்மால்தானே இந்தக் கஷ்டம் ஏற்பட்டது” என்று அவன் நினைத்தான். உடனே யோசனையில் ஆழ்ந்தான். ஒரு முடிவுக்கு வந்தான். பிரபுவைப் பார்த்து, “ஐயா, நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். இதே ஜாதியில் ஒரு நாய்க் குட்டியை வாங்கி நாம் வளர்ப்போம். அது நன்றாக வளர்ந்து, உங்கள் குடும்பத்தையும், உங்கள் சொத்து சுகங்களையும் நன்றாகக் காவல் காக்கும் வரை உங்களுக்கு வேறு வேட்டை நாயே தேவையில்லை. இதோ இறந்து கிடக்கும் வேட்டை நாய்க்குப் பதில், நானே உங்கள் விட்டில் வேட்டை நாய்போல் இருந்து, காவல் காத்துவரப் போகிறேன். ஆம், தீர்மானித்து விட்டேன். இது நிச்சயம். இது சத்தியம், இனி உங்கள் வேட்டை நாய் நான்தான்; நானேதான்!” என்று வீரமாகக் கூறினான்.

அவன் வார்த்தையைக் கேட்டு அரசர் திகைத்தார்; பிரபு மலைத்தார்; கூடியிருந்தவர்கள் வியந்தனர்.

‘வேட்டை நாயாக இருப்பேன்’ என்று சொன்னதோடு ஸெதாந்தா நின்று விடவில்லை. அன்று முதல் பல வருஷங்கள் வேட்டை நாய் போலவே இருந்து, அந்தப் பிரபுவின் வீட்டைக் காத்துவந்தான். எல்லோரும் அன்று முதல் அவனை ‘சுலைன்’ என்று அழைக்க ஆரம்பித்தனர். சுலைன் என்றால் அந்த நாட்டில் ‘வேட்டை நாய்’ என்று பொருள்.

ஸெதாந்தா பெரியவனான பிறகு, சாதாரண ஒரு மனிதனாக அவன் இருக்கவில்லை. ஒரு பெரிய போர் வீரனாகவே விளங்கினான்; போர் வீரனாகவே வாழ்ந்தான்; போர் வீரனாகவே இறந்தான். ‘ஸெதாந்தா’ என்ற பெயர் அயர்லாந்தில் அநேகமாக எல்லோருக்குமே தெரிந்தபெயராகிவிட்டது! போர்க்களத்தில் அவனைக் கண்டாலே எதிரிகளுக்கு நடுக்கம்தான்! ‘டேய், சுலேன்’ (வேட்டை நாய்) வருகிறது! ஒடிவாருங்கள்; ஒடிவாருங்கள்!” என்று கூவிக்கொண்டே எதிரிகள் புற முதுகு காட்டி ஓட ஆரம்பித்து விடுவார்கள்: அவ்வளவு பயம்!

– அயர்லாந்துக் கதை – வேட்டை நாய், முதற்பதிப்பு: ஜனவரி 1987, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *