கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 8,534 
 

“ஐயா, ஆலயத் திருப்பணி அலுவகத்திற்கு போகும் வழி எது? திருவிளக்கு பணியின் அதிகாரியை நான் சந்திக்கவேண்டும் ஐயா, உதவி செய்யுங்கள்” என்று பயந்த சுபாவத்துடன் உள்ள குட்டன் கேட்டான்.

அவன் குரல் கேட்டு ஆலயக் காவலன் திரும்பிப் பார்த்தான். தோளில் தாங்கிய கழியின் இரு நுனிகளிலும் உறி போல கூடைகள் இணைக்கப்பட்டு, அதில் இரண்டு நெய்குடங்களை சுமந்து கொண்டிருந்த சிறுவனைப் பார்த்ததும் அவனுக்கு வியப்பு ஏற்பட்டது. “தம்பி, வெண்ணையில் இருந்து நெய் எடுத்து கோயில் விளக்கு திருப்பணிக்காக கொண்டு வந்திருக்கிறாயா? இது உன் வயதுக்கு மீறிய செயலாகத் தோன்றுகிறதே? என்றான் புன்சிரிப்புடன்.

தன் ஒருகையிலிருந்த வேலை மறு கைக்கு மாற்றிக்கொண்டு நெற்றியில் துளிர்த்த வியர்வையை மறு கையினால் துடைத்துக்கொண்டான் காவலன். அன்று வெய்யில் மிகக் கடுமையாகத் தகித்துக் கொண்டிருந்தது. சிறுவன் குட்டனும் மிகவும் சோர்ந்திருந்தான். திருவையாற்றில் இருந்து கொளுத்தும் வெய்யிலில் நீண்ட பயணம் செய்து தஞ்சை பெரியகோயிலுக்கு அந்தி சாயும் நேரம் வந்து சேர்ந்திருந்தான். பசியும், தாகமும், அசதியும் அவனை வாட்டி எடுத்தது. அசதியில் உடல் சிறிது இளைப்பாறக் கெஞ்சியது. ஆனால் நெய்யை திருப்பணி அலுவலரிடம் சேர்க்கும் வரை ஓய்வு என்ற பேச்சிற்கே இடம் இல்லை. அந்த மாநகரின் கூட்டமும், கோயிலுக்கருகில் மக்களின் அவசர நடமாட்டமும் தஞ்சைக்கு புதியவனான அவனுக்கு சிறிது கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

காவலன் அவனை நோக்கி, “தம்பி, என் வேலை நேரம் முடியப்போகிறது. எனக்கு பதில் மாற்றுக் காவலாளி பணிக்கு வந்தவுடன் உன்னை நானே திருப்பணி அலவலகத்திற்கு அழைத்துப் போகிறேன், சரியா? உன்னால் காத்திருக்க முடியுமா?” என்று பரிவான குரலில் புன்னகையுடன் கேட்டான்.

குட்டனும் நிம்மதியாக தலையசைத்து புன்னகையுடன் சம்மதம் தெரிவித்தான். காவலனுக்கு பின்புறம் மண்டப நிழலில் இருந்த ஒரு கருங்கல் படியில் தன் சுமையை இறக்கி வைத்துவிட்டு, அதன் அருகில் அமர்ந்து கொண்டு கோயிலுக்கு வந்து போகும் மக்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

பலர் குட்டனின் குடுபத்தைப் போல சாதாரண கிராம வாசிகளாகத் தெரிந்தார்கள். வெண் சீருடையில் இருந்த பெரிய அதிகாரிகளும், பொன்னகை பூண்டு பட்டாடை அணிந்த மகளிரும் அக்கூட்டத்தில் காணப்பட்டனர். மேலும் வணிகர்களும், கலைஞர்களும், பெரும் செல்வந்தர்களும் சோழ சேனையில் பணியாற்றும் வாட்கள் தாங்கிய வீரர்களும் அக்கூட்டத்தில் நடமாடினார்கள்.

அப்பொழுது அரண்மனை காவலர்கள் போல உடையணிந்திருந்த இரு காவலர்கள் “வழிவிடுங்கள், வழிவிடுங்கள், ஓரமாகச் செல்லுங்கள்”, என்று கூவியவாறு ஓடி வந்தார்கள். குட்டனும் வருவது யாராக இருக்கக்கூடும் என்று முடிந்தவரை கழுத்தை வளைத்து, நீட்டி ஆவலுடன் எக்கிப் பார்த்தான். வீரர்களைத் தொடர்ந்து மல்யுத்தர்கள் போன்ற உடல்வாகு கொண்ட, தலைப்பாகையும் வரிந்து கட்டிய சிறிய அரையாடையும் அணிந்த பல்லக்கு தூக்கில் நால்வர் பல்லக்கு சுமந்து வந்தார்கள். காற்றில் படபடத்த பட்டுத் திரைச்சீலை மறைத்த அழகிய பல்லக்கு ஒன்று வந்தது. கூட்டத்தினரிடையே “இளவரசி குந்தவை வருகிறார்”, “சந்தியா காலத்து பூஜைக்கு இளவரசி வருகை புரிந்திருக்கிறார்” என்ற சல சலப்பும், பரபரப்பும் எழும்பியது. ஆலயக் காவலர்கள் விறைப்பாக நின்று ஊர்வலத்திற்கு மரியாதை செலுத்திய பின்பு, இளவரசி அருகே நெருங்கியதும் தலை பணிந்து வணங்கினர்.

குட்டனும் கூட்டத்தில் நெருக்கியடித்து, முட்டி மோதி முடிந்தவரை இளவரசியைப் பார்க்க முயன்றான். பல்லக்கு திரைச்சீலையை விலக்கிப் பிடித்த வண்ணம் மக்களின் மகிழ்ச்சி கலந்த ஆரவார வாழ்த்தினை ஏற்றுக்கொண்டு புன்னகை செய்த வண்ணம் சென்றார் இளவரசி. திரைச்சீலையைப் பிடித்திருந்த கரங்களிலும், இளவரசியின் முகத்திலும், கழுத்திலும் அவர் அணிந்திருந்த பொன் ஆபரணங்களும் அவரது பட்டாடையும் இளவரசியின் புன்னகையுடன் போட்டி போட்டுக் கொண்டு மின்னியது.

குட்டனும் இளவரசியின் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தான். இளவரசியின் முகம் சென்ற ஆண்டு திருமணம் முடித்து சென்ற அவனது தமக்கையின் சாயலில் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. மக்கள் இளவரசி மாலை வேளை பூஜைக்குப் போவதாகச் சொன்னது நினைவில் வந்தது. இளவரசி இறைவனின் கருவறைக்கு சென்று வழிபட்டு விளக்கு ஏற்றுவார் அல்லவா? என்ற சிந்தனை தொடர்ந்தது. உடனே தான் திருவிளக்கு பணிக்கு கொண்டு வந்த நெய்யும் நினைவிற்கு வந்தது. மீண்டும் நெய் பானை உறி இருந்த படியில் வந்து உட்கார்ந்துகொண்டு தான் கண்டது கனவா என்பது போல கண்ணை கசக்கிக் கொண்டிருந்தான் குட்டன்.

குட்டனின் வீட்டில் அவனுக்குப் பிடித்த பசு காமாட்சியிடம் தினமும் அவன்தான் பால் கறப்பான். அந்தப்பாலில் இருந்து கடைந்தெடுக்கப்படும் வெண்ணை தனியே ஒரு குடத்தில் சேகரிக்கப் படும். இது கோயிலின் திருவிளக்கு சேவைக்கு என்று அவன் அன்னை சொல்லி அதை வேறு எதற்கும் பயன்படுத்த மாட்டார், அடுத்தவர்களையும் அவ்வாறு செய்ய அனுமதிக்க மாட்டார். தேவையான அளவு வெண்ணை சேர்ந்ததும், அவனது அன்னை நீராடி, தூய்மையான துவைத்த சேலை உடுத்திய பின்பே பானையை அடுப்பிலேற்றி வெண்ணையை உருக்கி நெய்யாக்குவார். தெளிந்த நெய்யை புதிய, மெல்லிய துணி ஒன்றில் வடிகட்டி அவர்கள் வீட்டின் பூஜை அறையில் கோயில் விளக்கு திருப்பணிக்காக வைத்திருக்கும் இரண்டு பானைகளிலும் நிரப்புவார். பானைகள் நிரம்பியதும் அவைகளை கூடை கட்டிய உறிகளில் வைத்து குட்டனின் தந்தையிடம் கொடுத்து பெரிய கோயிலுக்கு அனுப்புவார். ஆனால் இந்த ஆண்டு குட்டனின் தந்தைக்கு உடல் நலக் குறைவால் நீண்ட நடைபயணம் செய்ய இயலாமல் போனது. எனவே, அன்னை குட்டனிடம் கொடுத்து அனுப்பினார்.

ராஜராஜ சோழ மன்னன் கட்டியிருக்கும் தஞ்சை பெரிய கோயிலைப் பற்றி அவன் தந்தை அவனுக்கு நிறைய சொல்லி இருக்கிறார். கோயிலுக்காக சோழ மன்னன் வழங்கிய பெருங்கொடைகளைப் பற்றியும் பெருமையாக சொல்லியதுண்டு. கோயிலுக்கு நடக்கும் பிரமாண்டமான திருப்பணிகளில் தாங்களும் ஒரு மிகச் சிறிய பங்கு கொண்டிருப்பதில் குட்டனின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.

“என்ன தம்பி போகலாமா?” என்ற காவலனின் குரல் கேட்டு குட்டன் நினைவுகளில் இருந்து மீண்டு வந்தான். இதற்குள் மாற்றுக் காவலன் ஒருவன் பணிக்கு வந்துவிட்டதைப் பார்த்தான். “சரி ஐயா, உங்கள் உதவிக்கு நன்றி” என்று கூறியவாறு குட்டன் காவலனைத் தொடர்ந்தான். இருவரும் வாயில் வழியே உள் நுழைந்து கோயிலின் முன் வளாகத்திற்கு வந்தனர். திறந்த வெளியில் இப்பொழுது கோயில் மிகப் பிரமாண்டமாகத் தெரியவும் குட்டன் அதன் அளவையும் கம்பீரத்தையும் கண்டு வியப்பில் மூழ்கினான். விண்ணளாவிய அதன் கோபுரத்தையும், சிறிய குன்றினைப் போன்ற அளவில் உள்ள பெரிய கோயிலையும் அவன் கனவில் கூட கண்டதில்லை. இது போன்ற ஒரு பெரிய கோயிலை மனிதர்களால் கட்ட முடியும் என்பதே அவனுக்கு பிரமிப்பைத் தந்தது.

முன் சென்ற காவலன் திரும்பிப் பார்த்து, “விரைவாக வா, தம்பி” என்றதும் தன்நிலை புரிந்து நெய்ப்பானை உறியுடன் காவலனைத் தொடர்ந்து ஓடினான் குட்டன். ஆனால் இன்னமும் அவன் பிரமிப்பு நீங்கவில்லை. காவலன் கூட்டத்தினரை விலக்கிக் கொண்டு விரைவாக நடந்தான், குட்டனும் அவனைத் தொடர்ந்தான். இருவரும் பெரிய நந்தி சிலையையும், மண்டபங்களையும், சிறிய ஆலயங்கள் சிலவற்றையும் கடந்து நடந்தனர். மலர்களின் மணமும், சந்தனம், சாம்பிராணி, அகில் புகை ஆகியவற்றின் மணமும் ஆலயம் முழுவதும் கமழ்ந்தது.

காவலன் திருப்பணி நிர்வாக அறையின் முன் வந்து நின்று அதனை சுட்டிக் காட்டினான். “தம்பி, இந்த அறையில் கணக்கர் இருப்பார், அவரிடம் நெய் குடங்களை ஒப்படைத்தால் உங்கள் இல்லத்தின் கணக்கில் வரவு வைத்துக் கொள்வார், நான் கிளம்புகிறேன், பத்திரமாகப் போய் வா” என்று கை அசைத்து விடை பெற்றுக் கொண்டான்.

குட்டன் சிறிது தயங்கி நின்ற பின்னர், அறையின் திரைச்சீலையை விலக்கிக் கொண்டு உள்ளே சென்றான். திருப்பணி நிர்வாகியும், கணக்கரும் பணியில் மூழ்கி இருந்தனர். குட்டன் அவர்களை மிகுந்த பணிவுடன் வணங்கி, “ஐயா, என் பெயர் குட்டன். நான் திருவையாறு ஆனந்தனின் மகன், கோயில் திருவிளக்கு பணிக்காக நெய் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறினான்.

ஏட்டில் குறித்துக் கொண்டிருந்த கணக்கர் சிந்தனை தடைபட்டதால் சிறிது எரிச்சலுடன் நிமிர்ந்தார், ஆனால் ஒரு சிறுவனைக் கண்டதும் சற்று சாந்தமானார். “திருவையாறு ஆனந்தனின் மகனா நீ? பானைகளை அங்கே வைத்துவிடு தம்பி,” என்று ஓரிடத்தை சுட்டிக் காட்டினார். பிறகு, “உன் தந்தை எங்கே தம்பி, நீ ஏன் கொண்டு வந்திருக்கிறாய்?” என்று அக்கறையுடன் விசாரித்தார்.

“அவருக்கு உடல் நலக் குறைவு, அவரால் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாத நிலை இப்பொழுது, அதனால் நான்..” என்று மெதுவாக இழுத்தவாறு தயங்கிப் பதில் சொன்னான் குட்டன்.

“அது சரி, தம்பி, ஆனாலும் நீ மிகவும் சிறியவனாக இருக்கிறாயே, இது உன் வயதிற்கும் மீறிய வேலையாக இருக்கிறதே. இன்று இரவு நீ இங்கேதான் தங்கி செல்ல வேண்டியிருக்கும். அங்கே இருக்கும் கோயில் ஊழியன் சிவனிடம் சென்று நான் அனுப்பியதாகச் சொல். அவன் உனக்கு உணவும், படுக்க ஏற்பாடும் செய்வான்,” என்று சிவன் பணி செய்துகொண்டிருந்த திசையச் சுட்டிக் காட்டினார். குட்டன் அவரை பணிவுடன் வணங்கி நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டு சிவனை அணுகினான்.

சிறிது நேரத்தில் இலைகளில் பொட்டலம் கட்டப்பட்ட புளியோதரை அவனுக்கு உணவாக வழங்கப் பட்டது. கோயில் மண்டபத்திற்கு சென்று அங்கு அமர்ந்து கோயிலில் நடப்பதை வேடிக்கை பார்த்தவாறு உணவை ருசித்து ஆவலுடன் உண்டான் பசியுடன் இருந்த குட்டன். நூற்றுக் கணக்கானோர் கோயிலுக்குள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். கால் சலங்கை ஒலிக்க, நாட்டியப் பெண்களின் குழு ஒன்று சென்றது. அந்த அழகிய பெண்கள் கோவிலில் செதுக்கிய சித்திரப் பாவை சிலைகள் உயிர் பெற்று வந்தது போன்று தோன்றினார்கள். சிலர் விண்ணுலகத்தில் வாழும் தேவதைகள் என்று கதைகளில் கூறப்படும் மங்கையரை ஒத்திருந்தனர். ஆனால் அவர்கள் அவனுடைய கிராமம் போன்ற இடங்களில் இருந்து வந்த நாட்டிய மங்கைகள் என்று குட்டன் அறிந்திருந்தான். சோழ மண்டலம் முழுவதும் நிறைந்துள்ள பற்பல ஆலயங்களில் இது போன்ற நாட்டிய மங்கைகள் பலர் கலை சேவை செய்து வந்தனர்.

குட்டனின் சிறுவயது விளையாட்டுத் தோழியான பாடலியும் இப்பொழுது நாட்டியம் பயின்று திருவையாறு கோயிலில் நாட்டிய மாடுகிறாள். அவளும் ஒருநாள் தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்து நாட்டியமாடினாலும் ஆடக்கூடும். குறைந்தது நானூறு நடன மங்கைகள் தஞ்சை பெரிய கோயிலில் தினமும் நடனமாடுவதாக அவன் கேள்விப் பட்டதுண்டு. அத்துடன் பல இசை அறிஞர்களும், மறை ஒதுவோர்களும் தினசரி இறை வழிபாட்டில் பங்கேற்பார்கள் என்றும், மன்னர் ராஜராஜனே தினமும் காலையில் கோயிலில் வந்து வழி படுவார் என்றும் அவன் கேள்விப் பட்டிருந்தான். பயணக் களைப்பில் இருந்த குட்டன் சிறிது நேரத்தில் அந்த மண்டபத்திலேயே படுத்து உறங்கலானான்.

அதிகாலையில் விழித்தெழுந்த குட்டன் மற்ற பக்தர்கள் செய்தது போல அருகில் உள்ள நீரோடையில் நீராடி, கோயிலில் நடைபெறும் காலை வழிபாட்டிற்கு தயாரானான். அமைதியாக இருந்த கோயிலில் நேரம் ஆக ஆக சந்தடி அதிகரித்தது. கோயில் கடை வீதிகளில் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு வியாபாரம் தொடங்குவதும், தெருவில் போகும் வண்டிகள், தேர்கள், மற்றும் குதிரைகளில் பயணிப்போரின் கூட்டமும் அதிகரிக்க ஆரம்பித்தது.

காலை வழிபாட்டிற்காக ஆலயத்தில் நுழைந்த கூட்டத்தினருடன் குட்டனும் கலந்து கொண்டான். அவனுக்கு அருகில் சென்ற முதியவர் ஒருவருக்கு நன்கு வழிவிடும் எண்ணத்தில் சிறிது ஓரமாக ஒதுங்கினான். அப்பொழுது அவன் காலில் ஏதோ தட்டுப்பட்டது. கால் விரல்களால் அதை கவ்வி எடுத்து அதனை உற்றுப் பார்த்தான். அவன் கையில் கிடைத்தது அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த தங்க மோதிரம் ஒன்று. வெண்ணிற வைரங்களும் செந்நிற மாணிக்க கற்களும் நடுவில் பதிக்கப்பட்டு மின்னிய அந்த தங்க மோதிரத்தை எங்கோ பார்த்தது போல அவனுக்குத் தோன்றியது. உடனே முதல் நாள் மாலை பல்லக்கின் திரைச்சீலையை விலக்கிப் பிடித்திருந்த இளவரசி குந்தவையின் கைவிரல்களை அலங்கரித்த மோதிரங்களில் ஒன்று அது என்ற நினவு அவனுக்கு வந்தது. இளவரசியின் மோதிரத்தை மிதித்துவிட்டோம் என்ற எண்ணம் தோன்றியதும் அவனுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. திடுக்கிட்ட அவன் துவைத்திருந்த தன் ஈர ஆடையில் அதனை மேலும் நன்கு துடைத்து சுத்தப்படுத்தினான். அதனை அவன் மிதித்ததால் சேதம் ஏது அடைந்திருக்குமோ, இளவரசியின் மோதிரத்தை மிதித்ததால் அதனை அவமதித்து விட்டோமோ என்று வருந்தினான்.

அந்நேரம் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அரச குடும்பத்தினர் வழிபாட்டிற்கு வருகின்றனர் என்று பக்தர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அரசகுடும்பத்தின் ஊர்வலம் ஆலயத்தில் நுழைய, அதனை முன்னின்று அழைத்து சென்றார் தலைமை மறை ஓதுவார். அவரைத் தொடர்ந்து மின்னும் பொன்னாலான மணிமகுடம் தரித்த பேரரசர் ராஜராஜ சோழனும், விலையுர்ந்த பட்டாடையும் தங்க நகைகளும் தரித்த பட்டத்தரசி வானவன் மாதேவியும் வந்தார். அவர்கள் பின் இளவரசியும் அவரது தோழிகளும் தொடர்ந்தனர். கூட்டத்தினை விலக்கிக் கொண்டு குட்டன் முன் வரிசைக்கு வந்தான். மாமன்னரும், பட்டத்தரசியும் கடந்த பின்னர், அவர்களுக்குப் பின் வந்த இளவரசி குந்தவையின் முன் மண்டியிட்டு பணிவுடன் வணங்கி தன் உள்ளங்கையில் ஏந்தியிருந்த மோதிரத்தை அவர் முன் நீட்டினான்.

அதனைப் பார்த்ததும் இளவரசியின் தோழியரும் அரண்மனைதாதிகளும் தங்களுக்குள் சலசலப்புடன் பேசிக்கொண்டார்கள். “இளவரசி நேற்று அணிந்திருந்த மோதிரம்,” “எங்கோ கழன்று விழுந்து காணாமல் போன மோதிரம்,” “நேற்று அவர் ஆலயத்திற்கு வழிபட வந்தபொழுது இங்கேதான் நழுவி விழுந்துவிட்டது போலும்,” என்று தங்களுக்குள் பேச ஆரம்பித்தார்கள். இளவரசி குந்தவை அவனை வியப்புடன் பார்த்தார்.

குந்தவை கருணையுடன் குட்டனைப் பார்த்து, “இது இந்தக் கோயிலில் உனக்கு கிடைத்ததா தம்பி?” என்று கனிவுடன் கேட்டார். குட்டனால் இளவரசிக்கு மறுமொழி சொல்ல வாய் வரவில்லை, அமைதியாக தலையை மட்டுமே அந்நேரத்தில் அவனால் அசைக்க முடிந்தது. அவனது கரத்தில் இருந்த மோதிரத்தை இளவரசி எடுத்துக் கொண்டபொழுது, அதே நேரத்தில் அவரது மென்மையான கரம் அவன் கையில் ஏதோ ஒன்றினை விட்டுச் சென்றது. புன்னகையுடன் இளவரசி சென்றபின்னர், அரசகுல ஊர்வலமும் சென்ற பிறகு குட்டன் மெதுவாக எழுந்தான்.

“இன்று உனக்கு மிக நல்ல நாள், நீ கொடுத்து வைத்தவன், இளவரசி கையினால் உனக்கு பரிசு கிடைத்திருக்கிறது,” என்று அவன் பின்னால் நின்றவர் சொன்னதும் குட்டன் கரங்களை விரித்துப் பார்த்தான். அவன் கரத்தில் இளவரசி பரிசளித்த தங்க நாணயம் மின்னியது. அதில் மல்லிகை மணம் கமழ்ந்தது. குட்டன் நாணயத்தைப் பத்திரமாக தன் ஆடையில் முடிந்து இடுப்பில் கட்டிகொண்டான். அந்த அதிகாலை வேலையில் அவன் திருவையாற்றில் உள்ள தன் வீட்டை நோக்கி பயணத்தைத் தொடங்கினான். கோயிலை விட்டு வெகு தூரம் சென்றபின்பும் மல்லிகை மணம் அவனைத் தொடர்வது போன்ற பிரமை அவனுக்கு ஏற்பட்டது.

குறிப்பு: இது ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட கதை. தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT – National Council Of Educational Research And Training) பரிந்துரை செய்த நடு நிலைப் பள்ளி மாணவர்களுக்கான, ஏழாம் வகுப்பு சமூகவியல் பாடத்திட்டத்தின்படி “ரத்னசாகர்” நிறுவனத்தினர் வெளியிட்ட நூலில் இருந்த கதை மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. ஆதாரம் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த நூலின் மறுபதிப்பு. மூலக் கதையினை எழுதிய ஆசிரியரின் பெயர் நூலில் குறிப்பிடப்படவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *