கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்  
கதைப்பதிவு: January 28, 2024
பார்வையிட்டோர்: 8,012 
 
 

(1988ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம்-1

கண்விழித்த அவள் படுக்கையில் கிடந்தவாறே மெல்லத் திரும்பி, ஜன்னலினூடாகப் பார்வையைச் செலுத்தினாள். வானம் சிறிது வெளுத்துக்கிடந்தது. பொழுது புலருவ தற்கான அறிகுறிகள் தெரிந்தன. அவள் தலையைத் திருப்பி, தலைமாட்டில் கிடந்த மணிக்கூட்டைப் பார்த்தாள். மணி 5.20 ஐக் காட்டிக்கொண்டிருந்தது. சற்றுத் தள்ளியுள்ள கட்டிலில் தூக்கத்திலிருந்த சுகந்தி புரண்டு படுப்பது தெரிந்தது. வீட்டில் யாரும் எழும்புவதற்கான அறிகுறிகள் தெரிய வில்லை. அவளுக்குச் சற்று நேரம் படுக்கையிலேயே கிடக்க வேணும்போலிருந்தது. இரு கைகளையும் தலைக்குக் கீழே மடித்து வைத்தபடி முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

“பன்ரெண்டாம் திகதி..புதன்கிழமை ராம் வாறானாம்” தாயார், தந்தையிடம் முதல் நாள் கூறியது அவள் ஞாபகத்திலேயே இருந்தது. இன்று புதன் கிழமை; பன்னிரெண்டாம் திகதி! 

“ராமத்தான்.இப்ப கனடாவிலையிருந்து கொழும் புக்கு வந்திருப்பார். ‘இன்டசிற்றி’ வர பன்னிரண்டு மணியாகும்; அப்புறம்…” அவளுக்கு முகம் சிவந்தது. தனிமையின் இனிமையான நினைவுகளில் மனம் சிலிர்த்தது. 

“சாந்தி… சாந்தி.. எழும்பணை; எழும்பி தேத்தண்ணியை ஊத்து ; எனக்கு ஒரே அலுப்பாய்க் கிடக்குது ;நல்ல பிள்ளையெல்லே…. என்ன எழும்புறியே?”-சிவகாமி அடுத்த அறையிலிருந்து குரல் கொடுத்ததும் திடுக்குற்ற அவள், சிந்தனையிலிருந்து விடுபட்டவாறே படுக்கையை விட்டு எழுந்தாள் 

சத்தம் கேட்டுக் கண்விழித்த சுகந்தி, கைகளை நீட்டி மடித்து உளைவெடுத்தவாறே, அக்கா… நேரமென்னக்கா?” என்றவாறே கொட்டாவி விட்டாள். 

“அஞ்சரையாகுது”. 

அவள் முறுகியவாறே, விலகிய போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு மறுபக்கம் திரும்பிக் கண்களை மூடிக் கொண்டாள். 

‘பாவம்!ஏ.எல். ரெஸ்ற் வருகுதெண்டு இரவிரவாய் படிக்கிறாள்; ஒரே அசதியாக்கும்!’ மனதிற்குள் நினைத்தவாறே சாந்தி முகம்கழுவப் போய்விட்டாள். 

தண்ணீரைக் கொதிக்கவைத்துவிட்டு, வெளியில் கிடந்த ஆட்டுக்கல்லில் வந்து உட்கார்ந்துகொண்டவளுக்குச் சுற்றிச் சுற்றி அதே நினைவாகவே வந்தது. அவள் கைகள் கன்னங் களைத் தாங்க, சிந்தனைகள் சிறகடிக்க ஆரம்பித்தன. 

ராம் வெளிநாடு போய் ஐந்து வருடங்களாகின்றன. 

‘இப்ப நல்லா.. வளர்ந்து, இன்னும் நல்ல சிகப்பாய், நிறைய சுருள் முடியோடை, கமல் மீசையோட அழகா… அவள் .நல்ல அழகா… அவள் மனம் அவனின் பழைய உருவத்தை மெருகுபடுத்திப்பார்த்தது. 

அப்பொழுதெல்லாம்-அவளுக்குப் பதினாறு வயதிருக்கும், அவனுக்கு இருபத்திரண்டு வயதிருக்கும் – நாயும் பூனையும் மாதிரி, ராமும் சாந்தியும் சண்டை போடாத நாட்களே கிடையாது. துடுக்கான அவள் வாயைக் கிளறிவிட்டு, அவளை ‘கறுப்பி… கறுப்பி’ என்று கிண்டல் பண்ணாத நேரமும் கிடையாது. சதா நடைபெறும் அந்தக் கிண்டலும் சண்டையும் வழக்கமாகிவிட்டதனால் பெரியவர்களுக்கு அவை பெரிதாகத் தெரியவில்லை. அவர்கள் ஒரு புறம்! இவர்கள் ஒரு புறம்! 

அன்று ஒருநாள் வெள்ளிக்கிழமை. சாந்தியும் சுகந்தியுமாகக் கோயிலுக்குப் போய்விட்டு வரும்வழியில், மாமியிடம் போய், மாமிக்கும் திருநீறு, சந்தனம் கொடுக்கலாமென்றெண்ணி அவர்களது வீட்டிற்குப் போனசமயம், வெளி ‘விறாந்தா’வில் ராம் மட்டும் உட்கார்ந்திருந்தான். 

“மாமி நிக்கிறாவோ?” என்று சாந்திதான் கேட்டாள்.

”தெரியாது” ராம் அலட்சியமாகப் புன்னகையுடன் கூறியதும், அவள் உள்ளே எட்டிப் பார்த்தாள். உள்ளே யாரும் இருக்கவில்லை. 

“மாமாவும் இல்லையே?” அவள் மீண்டும் கேட்டாள்.

“தெரியாது’ 

“இப்ப வந்திடுவினமே?” 

“தெரியாதெண்டிறன்…!” 

அவளுக்கு கோபம் பொத்துக்கொண்டுவந்தது. 

“ம்… காலையில் சாப்பிட்டீங்களா?” கோபத்தை அடக்கியவாறே சற்றுக் கேலியாகக் கேட்டாள். 

“தெரியாது” 

”உங்களுக்கு மண்டையில மூளை இருக்கா? 

“தெரியாது” 

“சரியா..ன மக்கு!” சட்டென்று சினத்தோடு திரும்பிய அவள், 

“வாடி சுகந்தி, நாங்கள் போவம்.மாமியும் மாமாவும் வந்த உடனே, நீங்கள் பிள்ளையைப் பெத்தீங்களா? இல்லை… கல்லைப் பெத்தீங்களா ? எண்டு கேக்கவேணும்” கூறிவிட்டு விறுவிறுவென்று கேற்றை நோக்கி நடக்கத் தொடங்கினாள். 

“சுகந்தியம்மா…. கல்லு ஒருநாளும் கதைக்கமாட்டு தெண்டு அக்காவிட்டைச் சொல்லம்மா” ராம் சற்றே சத்தமாகக் கிண்டலாகக் கூறியதும், சட்டென்று நின்று வெட்டித் திரும்பிய சாந்தி, 

“ஓஹோ! ஐயாவுக்கு ஒண்டும் தெரியாது; ஆனால் இது மட்டும் தெரியுமாக்கும். இதுக்கு .. நோபல் பரிசு குடுக்காட்டில் உலகம் பொறுக்காதடி” அதே கிண்டலோடு கூற, சுகந்தி அடக்க முடியாமல் சிரித்தாள். 

“சுகந்தி… இவளின்ரை நெற்றியில் வைச்சிருக்கிற சந்தனம் எவ்வளவு அழகாய் பளிச்சென்று தெரியுது பாத்தியே! …கருங்கல்லிலை காகம் எச்சம்போட்டமாதிரி…!” ராம் அடங்கிப்போய்விடாமல் மீண்டும் அபிநயத்தோடு கூறியதும் ‘குபுக்’ கென்று மீண்டும் சிரிக்க ஆரம்பித்த சுகந்தியைக் கோபத்துடன் முறைத்தவள், 

“எனக்குத் தெரியும்; அண்டைக்கு நான் ஸ்கூலாலை வரேக்கை… மற்றப் பெடியங்களோடை சேர்ந்து, சித்திராவோட சேட்டை பண்ணினதுபற்றி, நான் வந்து மாமாவிட்டைச் சொல்லிப்போட்டனெண்டுதானே இவ்வளவு நக்கல் பேச்சு!… நீங்கள் என்னைப் பழிக்கப் பழிக்க… நானும் நீங்கள் கேள்ஸ் ஓட சேட்டை விடுறதைப் பற்றி மாமாவிட்டைச் சொல்லிக்கொண்டேயிருப்பன். அவருக்கு… தான் சிவப்பு எண்டதில், பெரி…ய மன்மதராஜா எண்ட நினைப்பாக்கும்! சரியா … ன லெவல்!” சாந்தி படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் சுகந்தியையையும் இழுத்துக்கொண்டு போய்விட்டாள். 

ஒரு தடவை, சாந்தி பாடசாலைக்குப் போய்விட்டுவரும் வழியில், ராமும் அவனுடைய சினேகிதர்களும் கூட்டமாக நின்றிருந்தார்கள். அந்தக் கூட்டத்தை அவள் கடக்கும் பொழுது, 

“என்னெண்டாலும் .. கறுப்பிலை ஒரு தனி அழகு இருக்கடா…” ஒரு இளைஞனின் குரல் கேட்டுத் திடுக்குற்ற அவள், திரும்பிப் பார்த்தபொழுது, ராம் அலட்சியமாக நின்றிருந்தான். கோபமும் ஆத்திரமும் பொங்க அவள் வேகமாக நடந்து கொண்டிருந்தாள். 

வீட்டிற்கு வந்த வேகத்தில், தாய் – சிவகாமியிடம் கூடச் சொல்லாமல், செல்லநாதரின் வீட்டிற்குப் போய் முறையிட்டாள். அவள் சொல்லிமுடித்தபோது ராமும் வந்திருந்தான். 

“டேய்! சந்திக்குச் சந்தி நிண்டு.. றோட்டாலை போற வாற பெட்டைகளைப் பார்த்து, சொட்டை நொட்டை சொல்லுறதுதான் வாழ்க்கை எண்டு முடிவுபண்ணிட் டியோ?” செல்லநாதர் கோபமாகவே அதட்டினார். 

“ஐயா … அது… வந்து நானில்லை ஐயா; நான் வாயே திறக்கயில்லை; வேணுமெண்டால் அவளையே கேட்டுப் பாருங்கோ” ராம் தடுமாற அவளுக்குக் கோபம் மறைந்து சிரிப்பு வந்தது. கைகளால் உதடுகளை அழுத்திக்கொண்டாள். 

“சீ! … கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் சொல்லுறியே?.. அவள் உனக்கு மச்சாளடா; ஆரோ தெரியாத ஒருத்தியை, ஆரோ தெரியாத ஒருவன் சேட்டை பண்ணினாலும் பரவாயில்லை.. உன்ரை மச்சாளை உனக்குப் பக்கத்திலேயே நிண்டு சேட்டை பண்ணிற அளவுக்கு நீ அவங்களை விட்டு வைச்சிருக்கிறியே!” செல்லநாதர் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறே அவனை முறைத்தார். 

சட்டென்று அடங்கிப்போன ராம், “ஐயா, நான் … அந்த நேரம் பேசாமல் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் …சாந்தி அங்காலை மறைஞ்சுபோனபிறகு, அவனுக்கு நல்ல ஏச்சுக்குடுத்தனான்… இனிமேல் ஒருநாளும் என்ரை ஃப்ரெண்ட்ஸ் சாந்தியோட சேட்டை விடமாட்டினம் ” தயங்கியவாறே கூறிமுடித்தான். 

“மாமா… நான் போயிட்டுவாறன்” சாந்தி பொங்கி வந்த சிரிப்பை அடக்கமுடியாமல் கஷ்டப்பட்டவாறே விடை பெற்றுக்கொண்டு போய்விட்டாள். 

அவனின் இருபத்துமூன்றாவது வயதில் அவன் வெளிநாடு போக ஆயத்தமானான். பயணம் போகும் தினத்தன்று சாந்தியின் தாய் தந்தையரிடம் விடை பெற்றுக்கொண்டு போவதற்காக அங்கு ராம் வந்திருந்தான். எல்லோரிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டவன், சாந்தியின் அருகில் வந்ததும் ‘காக்கைச் சிறகினிலே…’ பாடல் வரிகளை முணு முணுத்தவாறு வெளியேறியது அவளுக்கு இன்னமும் நன்றாக ஞாபகத்தில் இருந்தது. 

அவளையுமறியாமல் அவள் உதடுகள் விரிய, மெல்லத் தலையைக் குனிந்தாள். வலது காலப் பெருவிரல் தரையில் கோலமிட ஆரம்பித்ததும் மனக்குயில் கீதம் இசைக்க ஆரம்பித்தது. 

“சிவகாமி,சாந்தியின்ரை சாதக ஓலையைக் கொண்டு வாவன்” 

“அண்ணை, வீடு தூசி தட்டிக் கூட்டிக் கழுவேக்கை, அது எங்கேயோ இடம்மாறிப் போச்சுது; நான் பிறகு பாத்தெடுத்துத்தாறன். பொருத்தமென்ன பாக்கவேண்டியிருக்கு?..அதெல்லாம் நல்லாய்ப் பொருந்துமண்ணை; ஆனால்…இவள் கொஞ்சம் கறுப்பி; அவன் நல்ல சிவலை! அதுக்குத்தான் ராம் ஏதும் சொல்லுறானோ?” 

“சும்மா பேக்கதை கதையாதை; கண்டறியாத கறுப்பும் சிவப்பும்தான்; ஏன் உன்ரை கறுவல் மனுசனையும் கட்டப்போறனெண்டு நீ ஒற்றைக் காலிலை நிக்கேல்லையே..?” 

“சும்மா போங்கோ அண்ணை; அது… அவர் ஆம்பிளை…”  

“நான் கட்டச் சொன்னால் அவன் கட்டத்தான் வேணும். எனக்கிருக்கிறது அவன் ஒருத்தன்தான்; அவனை எப்பிடியும் உன்ரை வீட்டுக்குள்ளை.தான் மாப்பிள்ளையாக்குவன்; நீ யோசியாதை..”. 

முதல்நாள் சிவகாமியும் செல்லநாதரும் பேசிக்கொண்டவை அவள் நெஞ்சிலே கோலமிட்டன. 

ராமிற்கும் அவளுக்குமிடையிலான பழைய குறும்புத் தனமான விரோதங்களை நினைக்க, அவளுக்கு இப்பொழுது வேடிக்கையாகவே இருந்தது. 

‘அப்பவே… கறுப்பி… கறுப்பி எண்டு சொல்லிப் பழிக்கிறவர், இப்பவும் ‘கறுப்பி’ எண்டு சொல்லிக் கல்யாணம் பண்ணமாட்டார் எண்டால்?’ மனதின் ஒரு மூலையில் அடிக்கடி அந்தக் கேள்வி எழாமலும் இல்லை. 

‘கல்யாணம் செய்யமாட்டார் எண்டால்…இப்ப என்ன வந்தது?; இவரைவிட வேற ஒருத்தனுமே எனக்கில்லாமல் போய்விடுவானே? அவ்வளவு பெரிய நடப்பிருந்தால் இருக்கட்டும்; எனக்கென்ன? அப்படியெழும் கேள்விகளுக்கு இப்படியொரு பதிலை அலட்சியமாகச் சொல்லிவிட்டு அமைதி யடைந்துகொள்வதில் அவள் மனம் ஆறுதலடைந்துவிடும். 

“அக்கா! இது சரிப்பட்டுவராது; நீங்கள் அடுப்பில தண்ணி கொதிக்கவைச்சு, அரை மணித்தியாலமாகுது!” எதிரில் நின்றிருந்த சுகந்தி கிண்டலாகக் கூறியதும் திடுக்குற்ற சாந்தி, சட்டென்று சிந்தனைகளிலிருந்து விடுபட்டு, 

“ஏய் எப்ப எழும்பினனீ…?” புன்னகையுடன் தடுமாறினாள். 

”நானோ?…நான் எழும்பி, பல்லு மினுக்கி, முகம் கழுவி, திருநீறு பூசி, ரீ குடிக்கிறதுக்காக வந்து நிக்கிறன்… நீங்கள் நேரத்தைக் கணக்குப்பாருங்கோ” சுகந்தி கூறியதும் ஆச்சரியத்தோடு சட்டென்று இருக்கையை விட்டெழுந்த சாந்தி சமையலறைக்குள் ஓடினாள். 

அடுப்பிலிருந்த கேத்தில் மூடி மேலெழுந்து ‘குப் குப்’பென்று ஆவியை வெளியேவிட்டுக்கொண்டிருந்தது. 

அத்தியாயம்-2 

சாந்தி வீட்டைக் கூட்டிப் பெருக்க ஆரம்பித்திருந்தாள். வழமையை விட அக்கறையாக, அழகாக வீட்டைத் தூய்மையாக்கினாள். மேசை விரிப்புகள், கதிரைச் சீலைகளில் கவனம் செலுத்தி அழகுபடுத்தினாள். ஓட்டமும் நடையுமாகப் பூமரங்களுக்குத் தண்ணீர் ஊற்றி, அவற்றைக் குளுமைப் படுத்தினாள். கால்களும் கைகளும் பம்பரமாக அசைந்து கொண்டிருந்தன. அவளது ஒவ்வொரு செயல்களும் உற்சாகமாக, ஆர்வமாக, மிதமான எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ராம், வீட்டிற்கு வந்தால் வீடு பளிச் சென்று அழகாக இருக்கவேண்டும் என்ற ஆசை அவளுள் நிறைந்திருந்தது. 

அவள் நெற்றியில் வழிந்த வியர்வையைக் கைகளால் வாரிவிட்டுக் கொண்டாள். 

“என்ன…. இண்டைக்கு வேலையெல்லாம் தடல்புடலாய் நடக்குது !” காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வந்த சிவராசர், முகத்தைத் துடைத்தவாறே ஆச்சரியமாகக் கேட்டதும், சாந்தி பதில் கூற முடியாமல் புன்னகையோடு தலையைக் குனிந்து கொண்டாள். சுகந்தி கண்களைச் சிமிட் டிச் சிரித்தவாறே, 

“அப்பா…இண்டைக்கு ஆரோ விசிற்றேர்ஸ் இங்கை வரப்போகினம் போலை கிடக்குது” விடயம் விளங்கிவிட்டது போல் சாந்தியைப் பார்த்தாள். தனக்குள்ளே நாணிப் போன சாந்தி, மீண்டும் புன்னகை சிந்திச் சமாளித்தவாறே காரியத்தில் கண்ணாயிருந்தாள். 

பாடசாலைக்குப் புறப்பட ஆயத்தமான சுகந்தி, வேலை களை முடித்துவிட்டு ‘அப்பாடா’ என்று வந்தமர்ந்த சாந்தியிடம்,

“அக்கா, இண்டைக்குக் கொஞ்சம் வடை சுடுங்கோவன்’” என்றாள் கெஞ்சலாக. 

“ஏன்?” சாந்தி புரியாமல் வினாவினாள். 

“ஏனோ ?… ராமத்தானுக்கு வடை எண்டால் சரியான விருப்பமெண்டதை மறந்து போட்டியளே?” சுகந்தி கிண்டலாகக் கூறிவிட்டு, ஓட்டமும் நடையுமாகப் பாடசாலைக் குப் புறப்பட்டு விட்டாள். சாந்திக்கு, அவள் கூறியதிலிருந்து அவள் தன் மனநிலையைப் புரிந்து விட்டாளென்று நினைக்கும் பொழுது, வெட்கமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. 

‘சுகந்தி சொன்னமாதிரி கொஞ்சம் வடை சுட்டால் நல்லாய்த்தான் இருக்கும்’ என்று எண்ணியவள் ஓசைப்படாமல் எழுந்துசென்று, உழுத்தம் பருப்புப் பேணியைத் திறந்து பார்த்தாள். அவள் ஆசைக்கு மோசமில்லாமல் பேணியில் உழுத்தம் பருப்பு நிறைந்திருந்தது. 

“அம்மா… உழுந்து கொஞ்சம் ஊறப்போட்ட்டே?” தயங்கியவாறே தாயைக் கேட்டாள். 

“ஏன்…? என்னத்துக்கு?…” 

“வடை சுட்டுச் சாப்பிடவேணும் போலை ஆசையாய் இருக்குது; சுகந்தியும் ஆசைப்பட்டுக் கேட்டாள் உள்ளத்தில் எதையோ வைத்து, உதட்டால் எதையோ வெளி யிட்டாள். அவளது ஆசை அவளுக்கே வேடிக்கையாக இருந்தது. 

“ஏன்… மத்தியானச் சமையல் எல்லாம் முடிஞ்ச பிறகு ஊறப்போட்டால் கணக்கா இரவைக்குச் சுடலாம்; பிறகு பின்னேரம் ஆரும் வருவினம் போவினம்; அதுக்குள்ளை ஏன் கரைச்சலை?” சிவகாமி கூறியபொழுது, அதுவும் சரியென்றே அவளுக்குப் பட்டது. இருந்தாலும் அவன் பயணத்தால் வந்து, உடனே இங்கேயும் வருவானென்றால் மனதிற்குப் பிடித்தமான எதையாவது கொடுத்து வரவேற்க வேண்டுமென மனம் துடித்தது. 

மதியம் 12.00 மணி அடித்தபொழுது, அவள் குளித்துப் பொட்டுவைத்து, இரட்டைப்பின்னல் சடையுடன், அயர்ன் பண்ணிய, மடிப்புக்கலையாத அரைப்பாவாடையும் சட்டையுமாக அழகாக இருந்தாள். 

மணிக்கூடு பிற்பகல் 3.30 மணியைக் காட்டிக்கொண்டிருத்தபோது அவளுக்கு நிம்மதியில்லாமல் இருந்தது. நேரம் செல்லச் செல்ல மனம் ஏனோ துணுக்குற்றது. தற்போதைய பத்திரிகைச் செய்திகள் ஞாபகத்தில் வர, அவளுள் விதம் விதமான பய உணர்வுகள் தோன்ற ஆரம்பித்தன. 

‘ராமத்தான் கட்டாயம் இண்டைக்கு வருவன் எண்டு தானே கடிதம் எழுதியிருந்தவர் எண்டு மாமி சொன்னவ. ஒருவேளை இண்டைக்கு யாழ்ப்பாணம் வாற றெயினைக் கான்சல் பண்ணிப்போட்டாங்களோ?’ அவள் மனம் பல வாறாக எண்ணிக் குழம்பிக்கொண்டிருந்தது. கையில் அகப்பட்ட ஒரு நாவலைத் தூக்கி வைத்துக்கொண்டு புலனை அதில் செலுத்த முடியாமல் அலட்டிக் கொண்டிருந்தாள். 

வியர்த்து, வாடிப் படித்த களைப்போடு பாடசாலையால் வந்த சுகந்தி, மேசை மீது புத்தகம் கொப்பிகளைத் தொப்பென்று போட்டுவிட்டு, அருகிலிருந்த கதிரையில் அநாயாசமாக உட்கார்ந்து கொண்டாள். 

“அப்பாடா! இண்டைக்கு ஓய்வில்லாமல், நோட்ஸ் எழுதினதிலையே கைவலிக்குது” என்றவாறே விரல்களை நீவி விட்டுக் கொண்ட அவள், 

“நாளைக்கும் நாளையிண்டைக்கும் முழுநேர ஊரடங்குச் சட்டமாம் அவங்கள் நினைச்சநேரம் ஊரடங்குச் சட்டம்போட பாடெல்லாம் எங்களுக்குத்தான் …… மாஸ்ரரும் விட்டால் தானே; மூண்டு நாள் படிப்பைச் சேர்த்து, ஒரு நாளிலேயே எங்கட மூளைக்குள்ளை செருகி விட்டிட்டார்.” என்று அலுத்துக் கொண்டபொழுது, திடுக்குற்ற சாந்தி, 

”என்னது?…ஊரடங்குச் சட்டமோ?” பதற்றத்தோடு கேட்டாள். 

“பின்னையென்ன? இண்டைக்குப் பின்னேரம் அஞ்சரை மணிக்கே யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பெல்லாம் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருதாம்; நீங்கள் இங்கை றேடியோ கேக்கேல்லையே ?… ஸ்கூலிலை உதைப் பற்றித்தான் ஒரே கதை…!… அது சரி, ராமத்தான் இன்னும் வரேல்லையே?” ஆவலாகக் கேட்ட சுகந்தி, திரும்பிய பொழுது சாந்தி வானொலியை அவசரம் அவசரமாக முடுக்கியபடி நின்றிருந்தாள். 

வானொலியில் நிமிடங்களிற்கு நிமிடம், ஊரடங்குச் சட்டம் அமுல் செய்வது பற்றியே அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சாந்திக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை! அவளது மனநிலையைப் புரிந்துகொண்ட சுகந்திக்கு அவளைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. நிறைய அபிலாசைகளை மனதிலே தேக்கி வைத்துக் கொண்டு, தன் கரம் பற்ற இருக்கும் ஜீவனை எதிர்பார்த்து, ஏக்கம் நிறைந்த கண்களுடன் காத்திருக்குமந்தத் தோற்றம் அவளுள் ஒருவித பச்சாத்தாபத்தையே ஏற்படுத்தியது. அவள், அக்காவிற்கு ஆறுதல் கூற முடியாமல் சிந்தனையோடு, உடைகளை மாற்றுவதற்காக, அறைக்குள் நுழைந்துகொண்டாள் 

செல்லநாதரின் வீட்டிற்குப் போய்விட்டு வந்த சிவகாமியும் சிவராசரும் இனம் புரியாத பீதியில் நிலைகுலைந்திருப்பது தெரிந்தது. அவர்களிடம் ராம் பற்றிய ஏதாவது தகவல்களை அறிந்து கொள்ளலாமென ஆவலோடு ஓடிவந்த சாந்தியை, அவர்களது கலவரம் நிறைந்த முகங்கள் எதையுமே கேட்க வேண்டிய தேவைகளில்லாமல் மௌனமாக்கி விட்டன் 

“கொழும்பில தங்கி நிக்கிறதுக்கு வசதியாய் ஒரு இடமும் இல்லையெண்டு… எப்பிடியும் இண்டைக்கு வந்திடுவன் எண்டு ஒண்டுக்கு- ரெண்டு கடிதம் போட்டவனாம் ஆரோ சினேகிதப் பெடியனின்ரை காரில் வாறன் எண்டு ஒருத்தரையும் ஸ்ரேசன் பக்கம் வரவேண்டாமெண்டு எழுதினதால், ஒருதரும் கூட்டிக்கொண்டு வாறதுக்கும் போகயில்லை; என்னபாடோ தெரியேல்லை…” சிவகாமி கேற் வாயிலூடாக றோட்டைப் பார்த்தவாறே தனக்குத்தானே முணு முணுப்பது கேட்டதும், ‘ஆண்டவனே! அவருக்கு ஒரு ஆபத்தும் வந்திடக் கூடாது’ என்று சாந்தி கடவுளை மனதார வேண்டிக்கொண்டாள். 

“போனகிழமை, வெளி நாட்டிலையிருந்து வந்த தமிழ் பொடியங்களை கொழும்பிலை வைச்சு ‘அவங்கள்’ பிடிச்சுக் கொண்டுபோனது ஞாபகமிருக்கே?.. கொஞ்சப்பேரிட்டைச் சாமான்களைப் பறிச்சுக்கொண்டு விட்டிட்டாங்களாம்; கொஞ்சப்பேரை விடவேயில்லையாம். எனக்கு… அதுதான் யோசனையாய் இருக்குது….” சிவராசர் சாய்மனைக் கதிரையில் சரிந்தவாறே பெருமூச்சுடன் கூறிக்கொண்டார். 

சாந்திக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது. பெற்றோரின் முடிவினால், கடந்த இரண்டு நாட்களுள், நாட்களுள், அவன் மீது உருவாகிவிட்ட ஒருவித அன்பும் பாசமும் இந்தத் தவிப்பு நிறைந்த எதிர்பார்ப்பில் இன்னுமின்னும் பன் மடங்கு அதிகரித்துக் கொண்டு போவது போன்ற உணர்வு அவளுள் தோன்றியது. 

சுகந்தி நிமிடத்துக்கொரு தடவை கேற் வாசலுக்குச் சென்று பார்ப்பதும், உள்ளே வருவதுமாக இருந்தாள்.வீதி வழியாகச் சென்றுகொண்டிருக்கும் வாகனங்களின் உறுமல் ஓசைகள் ஒவ்வொரு தடவையும் அவர்கள் பொறுமையை சோதிப்பவையாக இருந்தன. 

“சாந்தி! நாலு மணியாச்சுது; அப்பாவுக்குத் தேத் தண்ணியை ஊத்திக்குடு” சிவகாமி கூறியபொழுது, சாந்திக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. 

‘இங்கை எனக்கிருக்கிற யோசனைச்குள்ளை இவைக் கொரு தேத்தண்ணி வேண்டிக்கிடக்குது!’ தனக்குள் முணுத்தவள் கொஞ்சமும் மனமில்லாமல் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள். 

கொதிக்கவைத்த நீரைத் தேயிலையுடன் கலக்கும் பொழுது கைகளில் தெறித்த கொதி நீரினால் கைவிரல்கள் ‘பகபக’ வென்று எரியத் தொடங்கியதும், அவள் வேதனையில் உதடுகளைப் பற்களால் அழுத்தியவாறே தொப்பென்று கேத்திலை வைத்துவிட்டு, உப்பு நீரில் கை விரல்களை நனைத்தாள். 

வெளியே கார் ஒன்று இவர்களின் வீட்டை வேகமாகக் கடந்து, ஓழுங்கை வளைவில் கிறீச்சிட்டு நிற்கும் ஓசை இவள் காதில் விழுந்ததும், காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டாள். ஏதோ ஒருவித நம்பிக்கையில் சட்டென்று முகம்மலர அவசர அவசரமாகத் தேனீரைக் கலக்கிக்கொண்டு வெளியில் வந்தவளுக்கு ஒரே ஆச்சரியம்! அம்மா,அப்பா,சுகந்தி.. யாரையுமே காணவில்லை. தேனீரை மேசையில் வைத்து விட்டு கேற் வாயிலுக்கு ஓடிச்சென்று எட்டிப் பார்த்தவளுக்கு ஆனந்தம் கரைபுரண்டது. கைவிரல்களில் ஏற்பட்டிருந்த எரிச்சல் சட்டென்று குறைந்து விட்டது போன்ற உணர்வு! ஒழுங்கை வளைவிலிருக்கும் மாமன் செல்லநாதர் வீட்டு வாயிலில் கார் ஒன்று நிற்பதுவும், சிவகாமி, சிவராசர், சுகந்தி உட்பட செல்லநாதர், மற்றும் சில அயல்வர்கள் காரைச் சுற்றி நிற்பதுவும் அவளுக்குத் தெரிந்தது. அவள் அந்த உருவத்தைத் தேடினாள். கண்களுக்குத் தெரியவேயில்லை! 

‘வந்திட்டார்; அவ்வளவும் போதும்’. தன் மனதைத் தேற்றிக்கொண்டவள் புதிய உற்சாகத்துடன் வீட்டிற்குள் திரும்பினாள். பாதங்கள் ஏனோ தடுமாறின. மிகையான மகிழ்ச்சியில் உதடுகள் துடித்தன. அவள் திரும்பியபோது, உள்ளே சுகந்தி கேற்றைத் திறந்துகொண்டு மூச்சிரைக்க ஓடி வருவது தெரிந்தது. 

“அக்கா…அக்கா அவர். வந்திட்டார்.” சந்தோசம் கரைபுரள ஆவலாகக் கூறினாள். 

“தெரியும்’ நாணம் கோலமிட சாந்தி தலையைக் குனிந்து கொண்டாள். 

‘என்ன மாதிரி இருக்கிறார்?’ என்று கேட்கவேணும் போல ஒரு துடிப்பு. ஏனோ அடக்கிக்கொண்டாள். 

“ஆளைப்பார்த்தால்… அடையாளமே பிடிக்கமாட்டிங்கள் அக்கா; அசல் இங்கிலீஷ்காரன் மாதிரி! கார் நிறையச் சாமான்கள்!! எல்லாம் உங்களுக்குத் தானாக்கும்!” சுகந்தி கண்களைச் சிமிட்டிப் புன்னகை செய்தவாறே அறைக்குள் நுழைந்துகொண்டாள். 

‘அசல் இங்கிலீஷ்காரன் மாதிரி. அந்த வார்த்தை கள் சாந்தியின் உள்ளத்தில் கீறல்களாக விழுந்திருந்தன. திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்தவளுக்கு, எட்டா விருட்சமொன்றில் ஏற ஆசைப்படும் ஒரு அவநிலை தன்னுள் உருவாகுவது போன்ற பிரமை! ஒரு தடவை தன்னையே கண்ணாடிக்குள் பார்த்துக் கொண்டாள். ‘கரு கரு’ வென்று சுருள் முடியும், மூக்கும் முழியுமாக முகம் அழகுதான். பரு வத்திற்கேற்ற இளமையும் குளிர்மையும் பொருந்தி நிற்கும் உடலும் அழகுதான்! ஆனால் நிறம்? சட்டிக்கறுப்பு இல்லை; இருந்தாலும்… ராமின் இயற்கையான சிவப்பு நிறத் தோலோடு சேர்ந்த வெளி நாட்டு மிளிர்வு!’ 

‘பொருந்தாது; பொருந்தவே பொருந்தாது. பார்த்தால் முகத்தைச் சுழித்து, சட்டென்று தலையை மறுபக்கம் திருப்பிக்கொண்டு, தானும் தன்பாடும் என்று..!’ 

அவளுக்கு யோசிக்க யோசிக்க ஒருவித ஏமாற்றம் மனதை அலைக்கழிப்பது போல் இருந்தது. சட்டென்று தூரத் தூர… வெகுதூரத்திற்கு விலகி, தனிமைப்படுத்தப்பட்டு விடுவது போன்ற பீதி! அவள் திரும்பி, சுகந்தியைப் பார்த்தாள், ‘அவள் சிவப்பாகக் ‘குளுகுளு’ வென்று…!. சாந்திக்குப் பகீரென்றது! 

சிவகாமியும் சிவராசரும் ஏதோ கதைத்துச் சிரித்துக் கொண்டு, வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள். 

“றெயின் லேற்றாம்… நல்லகாலம்…. ‘அவங்க’ ளிட்டை அம்பிடாமல் வந்து சேர்ந்திட்டான்!” சிவராசர் வெற்றிலையைத் துப்பிவிட்டு, வாயைத் துடைத்துக்கொண்டு விறாந்தாவில் ஏறினார். 

”ஓமப்பா; எனக்கெண்டால் அதுதான் ஒரே யோசினை யாய் இருந்தது… அவனைப் பாத்தியளே…; நல்லாய்ச் சிவத்து நல்லாய் உடம்பும் வைச்சு, ‘மைனர் செயினும் ஆளுமாய் மாப்பிள்ளை மாதிரி இருக்கிறான்” சிவகாமி ஆச்சரியமும், பெருமையுமாய்க் கூறிக்கொண்டதும், 

“மாப்பிள்ளை மாதிரியென்ன… ? ; இனிமேல் அவன் எங் கட வீட்டுக்கு மாப்பிள்ளைதானே?” சிவராசர் ஒருவித மகிழ்ச்சியோடு கூறுவது சாந்தியின் காதுகளில் விழுந்த பொழுதிலும் அவள் சலனமற்று இருந்தாள். 

– தொடரும்…

(1984/85 இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவற் போட்டியில் 2ம் பரிசு பெற்றது.)

– நிழல்கள் (சிறுகதைகளும், குறுநாவலும்), முதற் பதிப்பு: ஒகஸ்ட் 1988, உந்தன் புத்தக நிலையம், பருத்தித்துறை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *