குவளையின் மிச்சம்

2
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 19,327 
 

உலகம் என் போர்வையில் இருந்து விழிப்படையாமல் இருந்த காலை நேரத்தில், நண்பரிடம் இருந்து அலைபேசி ஒலிப்பு வந்தது.

‘வில்லியம்ஸ் போயிட்டான்டா…’

செய்தி, சுருக்கமாகவும் திகைப்பாகவும் இருந்தது. என் உயிருள்ள உடலுக்கும் வில்லியம்ஸின் சடலத்துக்கும் இடையே 40 நினைவுகளும், 40 கி.மீ தொலைவும் இருந்தன.

தனது 54-வது வயதில் அத்தனை திடகாத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் காட்சியளித்த வில்லியம்ஸ், நேற்று இரவு இறந்துபோனார்.

வாழ்வின் தாட்சண்யமான அல்லது நிர்தாட்சண்யப் போக்குடன் அந்த ஊரில் இருந்ததில், அதன் பனியும், சில பணிகளும், சில நண்பர்களும் பரிச்சயம். 40 கி.மீ தாண்டிய துயரத் தூரத்தை நான் அடைந்தபோது, காலை

9 மணி. வில்லியம்ஸின் வீட்டுக்கு முன்னால் ஷாமியானா பந்தல். நீளமான பெஞ்ச் ஒன்றில், இன்று காலையில்தான் கொய்தாற்போல காட்சியளித்த மலர்வளையங்கள், மாலைகளுக்கு இடையில் வில்லியம்ஸின் முகம். சட்டெனச் சிரித்து விழித்து, ‘கடைக்குப் போலாமா நண்பா?’ எனக் கேட்டுவிட்டாரானால், அது ஒரு தெய்வீகமான… அதிர்ச்சிகரமான அற்புதமாகிவிடும். அவரைச் சுற்றிலும் இறைந்ததும் இருந்ததுமான பூக்கள், அவரது இறப்புக்குப் பிறகே முகை முறுக்கவிழ்ந்து நார்த்தொடுப்புக்கு வந்தவைபோல காட்சியளித்தன.

அலுவலர்களுக்கான மொத்தக் குடியிருப்பு வளாகத்தில் அவரது வீடும் அமைந்திருந்தது. வளாகத்தின் மையத்தில் மழலையருக்கான விளையாட்டு வெளி, அதனை விளிம்பு கட்டிய நடைப்பயணச் செவ்வகப் பாதை, அந்தப் பாதை மருங்குகளில் மரங்கள், தார்ப்பாதை போய்த் தொடும் வீட்டு முற்றங்கள்… என அமைந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் மொத்தக் குடியிருப்பு வளாகம்.

மழலையர் மைதானத்தைச் சுற்றிலும் உருவிப்போட்டவைபோல சிதறிக்கிடக்கும்

மஞ்சள் கொன்றைகளின் மலர்க்கோதுகள், வில்லியம்ஸுக்கும் முன்பாகவே உதிர்ந்திருக்கக் கூடும்.

குவளையின் மிச்சம்2

அவரது இழப்பால், அலுவலகத்தின் சக ஊழியர்களைவிட அதிகம் தாக்குண்ட விதத்தில் காட்சியளித்தது இளைஞர்கள் மற்றும் சிறுவர்-சிறுமியர்களின் முகங்கள்தாம். அவரோடு பேட்மின்ட்டனும் சதுரங்கமும் கேரம்போர்டும் ஆடிய பையன்கள். இதுகாறும் அவ்வப்போது ஆடிக்கொண்டிருந்த இளைஞர்கள்.

வில்லியம்ஸ் தனது பழைய காலத்தில், சூழல் உவப்பாக அமைந்திருந்தால் மாநில அளவில் கால்பந்தாட்டக்காரராக ஆகியிருக்க வேண்டியவர். இப்போது வயது 50 தாண்டியிருந்தாலும் அந்த காம்பவுண்டில் இளைஞர்கள், சிறுவர்களின் கூட்டமே வில்லியம்ஸைச் சுற்றி இருக்கும். வயதுக்கு ஏற்ற கிரிக்கெட்டும் கால்பந்தும் சினிமாவும் உரையாடத் தோதான ஒரு சீனியரும் அவர்களுக்கு உண்டு என்றால், அது வில்லியம்ஸ்தான். வளரிளம் பருவத்தினர்களுக்கும் வாலிபர்களுக்கும், மாலை நேர, விடுமுறைநாள் பொழுதுபோக்கு அவர்தான். ப்ளஸ் டூ முடித்த பின் வளாகத்தின் பையன்களும் பெண்களும் பெற்றவர்களும் முதற்கட்ட ஆலோசனைக்குப் போய் நிற்பது வில்லியம்ஸிடம்தான்.

குழந்தைகளின் மதிப்பெண்களைவிடவும் ‘இவன் இவனுக்கு இது இது வரும்’ என்பதைக் கருத்தறிந்து வைத்திருந்தவராகவும் அவர் இருந்தார். அதனாலேயே அந்தக் குடியிருப்பின் பல பையன்கள்/பெண்கள் அவரது ஆலோசனையின்படி படித்துக்கொண்டிருக்கிறார்கள். படித்து முடித்து சரியான வேலையைப் பெற்றவர்களும் இருக்கிறார்கள்.

பெரும்பான்மைச் சிறுவர்கள் சதுரங்கம் ஆடிக் கற்றது எல்லாம் இந்த மைதானத்தின் பெஞ்சுகளில்தான். சிறுவர்களுக்குச் சதுரங்கம் சொல்லித்தருவது சின்ன வேலை அல்ல. அவர்கள் ஆடிப் பழகும் காலத்தில், தெரிந்தே சில முறை தோற்கும் பக்குவமும் அதற்கு வேண்டும்.

அப்படியான வெற்றியில் செம்மாந்திருக்கும் இளம் மூளைக்காரர்களை அடுத்த ஆட்டத்தில் ஆறாவது மூவில் ‘செக்’ வைத்து, ஆட்டம் முடித்துவிட்டு அப்புறம் சொல்வார், ‘டிஃபென்ஸிவ் மெத்தேடா, ராஜா-ராணிக்கு முன்னால இருக்கிற சிப்பாய்களை முதல்லயே நகர்த்திக்கோ. இல்லைன்னா அதுமேல கவனம் வெச்சுக்கிட்டு ஆடு!’

ராஜாவில் இருந்து விலக்கிவைத்த சிப்பாயின் தூரத்திலாவது, அவர் மதுக் கோப்பைகளை வைத்திருக்காமல் அருகிலேயே வைத்துக்கொண்டதுதான் இந்தத் துர்மரணத்துக்கு இடமாக்கிவிட்டது. அதுவும் சமீபகாலங்களில் தனது கட்டத்தில் கைக்கு அருகில் வைத்துக்கொண்டது முடிவைத் துரிதமாக்கியது.

துஷ்டி கேட்க வந்திருந்த பிரான்சிஸ், கவலைகளைச் சுமந்திருந்தார். வில்லியம்ஸ் இறந்தது பெருங்கவலை என்றால், ஈமச்சடங்கு அடுத்த கவலை.

இந்த ஊருக்கு வில்லியம்ஸ் குடிவந்து

20 ஆண்டுகளுக்குமேல் ஆகியும், வழிபாட்டுக்காக ஒருநாளும் தேவாலயத்துக்குப் போனது கிடையாது. குடும்பத்தார் அவ்வப்போது ஈஸ்டர், கிறிஸ்துமஸ் நாட்களில் தேவாலயத்துக்குச் செல்வதைத் தடுத்ததும் இல்லை… ஆதரித்ததும் இல்லை.

குடும்பத்தாருக்கும் எனக்குத் தெரிய, நித்ய ஞாயிறுகளின் மன்றாட்டுகளும் கிடையாது.

‘மதம் ஓர் அபின்’ எனச் சொல்கிற கூட்டத்தில் வில்லியம்ஸ் இருந்தார். அதனாலேயே அநியாயம் கண்டால் பொங்குவதும் அதிகம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறவராக அவர் இருந்தார்.

குவளையின் மிச்சம்2

ஆனால், அவரைக் கருத்தில்கொண்டு எனது இப்போதைய முடிவு என்னவென்றால், எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தாலும்

‘மது மட்டும் அப்படிக் கிடைத்துவிடக் கூடாது’ என்பதுதான். பதின்பருவம் தொட்டு அவ்வப்போது மதுப் பழக்கம் வில்லியம்ஸுக்கு உண்டு என்றாலும், சமீபத்தில் மிதமிஞ்சிப் போய்விட்டது.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் இரவு அவருடன் நானும் மதுவுமாக இருக்க வாய்த்தது. மதுவை விட முடியாமல் போகிற அல்லது அதன் அளவு அறியாமல்போகிற அற்புதம் எதுவென நானும் அறிவேன். பாட்டிலில் ஒரு நேரம், ‘இவ்வளவு கிடக்குதே!’ எனத் தோன்றும். அதுவே அடுத்த மிடறுக்குப் பிறகு, ‘இவ்வளவுதான் இருக்கிறதா?’ எனத் தோற்றம் தரும். இந்த மயக்கத்தைக் கடக்கிற ஒருவரே மதுவில் இருந்து தப்பிப்பார்.

அந்த நாளில் மயக்கும் மாலைப்பொழுதில் நாங்கள் ஒரு பாட்டம் ஓடி அடைந்திருந்தாலும், தீராத் தாகத்துக்கு மேலும் கொஞ்சம் வாங்கும் எண்ணம் மேலோங்கியபோது, மதுக்கடை மூடுகிற நேரம் ஆகிவிட்டிருந்தது. அவசரத்திலா ஆர்வத்திலா எனச் சொல்ல முடியாதபடி பெரிய பாட்டிலாக வாங்கிவிட்டோம். கடைப் பையன்கள் கிளம்பச் சொல்லி அவசரப்படுத்தினார்கள். டம்ளர், தண்ணீர், வறுகடலை ஆகியன நாங்கள் வாங்கி முடித்தபோது கடையின் ஷட்டர் இடியோசையுடன் பிடறியில் கேட்டது.

நகரங்களின் அந்த ‘அடைப்பு நேரக் கடைகளுக்கு’ முன்னால், சின்னதாக ஒரு பீச்சின் ரம்மியமும் காணக் கிடைக்கும். பாட்டில் கிடைக்காதவர்கள் மட்டும் திருவிழாவில் தொலைந்தவர்கள்போல இருப்பார்கள். கடையின் வாசற்படிகளில் ஒரு முழங்காலை மடித்துப்போட்டும் மறு முழங்காலை பூமியில் விரிகுத்தாக வைத்த சிலரும், மேற்படியில் அமர்ந்து இரு கால்களையும் கீழ் ஊன்றியவராகச் சிலரும் அமர்ந்திருப்பார்கள். யாவர்க்கும் வலது கைகளுக்கு எட்டும் தூரத்தில் டம்ளர்கள் நிறையும். பேதமும் போதமும் மங்கும் அந்த இரவு, நள்ளிரவுக்குச் சென்று மறுநாளை நோக்கி மலை விலக்கிய பாறாங்கல்லாக உருண்டு சரியும்.

நாங்கள் வாங்கிய பாட்டில் வாக்கியத்தின் பாட்டாக மாறிக்கொண்டிருந்தது. ‘பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி. அப்பனிமலர் பறிக்க மனமும் நண்ணேன்’ என வில்லியம்ஸ் பாடிக்கொண்டிருந்தார். வில்லியம்ஸ் பேசும்போது மதப் புத்தகங்கள், வேதப் புத்தகங்கள், மாத நாவல்கள், நாளிதழ்கள், நாட்டுப்புறப் பாடல்கள்… என அனைத்தில் இருந்தும் மேற்கோள்கள் மிகுந்துவரும். சீக்கியர்களின் ஆதிகிரந்தம் மட்டும் மொழிபெயர்ப்பாகக் கிடைக்காததால் அவர் படிக்கவில்லை என நினைக்கிறேன். பெரும் புத்தகங்களை எல்லாம் படித்து முடித்தாயிற்று. இப்போதோ பிரச்னை என்னவென்றால், ‘வில்லியம்ஸ் நூலகங்களை எளிதாகக் கடந்துவிடுகிறார். ஆனால், மதுக்கடைகளை அவ்வளவு சுலபத்தில் அவரால் கடக்க முடிவது இல்லை’ என்பதுதான். நல்லவேளையாக அவரது அலுவலக வேலை நேரம் என்பது, நிச்சயமாகவே நாளின் மூன்றில் ஒன்றைக் குடியில் இருந்து காப்பாற்றி வந்தது. குடியினால் இறந்துபடப்போகும் நபரோ என எண்ணம் தோற்றுவிப்பரோடு குடிப்பது கடினம். அந்த நாளில் வில்லியம்ஸ் அப்படி இருக்கவில்லை என்றபோதும், ‘நேற்று இருந்தவன் இன்று இல்லை எனும் சிறப்புடையது இந்தப் பூமி’ எனக் குறள் சொல்லிக்கொண்டிருந்தார். பெரிய பாட்டிலில் கால்வாசி மிச்சம் இருந்தது.

தளர்ந்தும் கிளர்ந்த நிலையில் மதுக்கடையின் ஷட்டரைப் பார்த்தேன். மெத்தத் தடித்த 100 தட்டாரப்பூச்சிகளின் தனி இறக்கைகள் ஷட்டரில் ஒட்டிக்கொண்டிருந்தன. மதுக்குப்பிகளின் ஆயத்தீர்வை ரசீதுத் துணுக்குகள் எதிர்க் கம்ப மின்விளக்கு ஒளியால் விளைவித்த மாயம் அது.

மீதித் திரவத்தை பிளாஸ்டிக் டம்ளர்களில் ஏறக்குறைய பாட்டிலைக் குப்புறத் திருப்பி ஊற்றுகிறார் வில்லியம்ஸ்.

‘வில்லி… நாளைக்குக்கூடக் குடிக்கலாமேங்க’ என்றேன்.

‘இங்கே யாரும் மிச்சம் வைப்பது இல்லை’ என்றவர் டம்ளரைத் தூக்கிக் காட்டிவிட்டு ஒற்றைச் சரளத்தில் குடித்து முடித்தார். செருமலுக்குப் பின் புறங்கைகொண்டு உதட்டைத் துடைத்தார்.

‘பறவைகள் பார் தோழா! விதைப்பதும் இல்லை… சேமிப்பதும் இல்லை. உலகம் சேமிக்கத் தொடங்கிய நாளில்தான் கயமை ஆரம்பம் ஆயிற்று.’

ஆறேழு மாதங்களுக்கு முன்னால் நான் அவரைப் பார்த்தது ஒரு சம்பள நாளின் சாயங்காலம். நிச்சயமாக அன்றைக்கு நாங்கள் குடிக்கவில்லை. ஆனால், குடியைப் பற்றி பேசினோம்.

‘தொடுவதும் விடுவதும் பல விஷயங்கள்ல மனுஷ வாழ்க்கையில நடந்துக்கிட்டிருக்கு. ஆனா… மதுவையும் புகையையும் பொறுத்தமட்டுல விடுவது அல்ல, விடுபடுவது நடந்தாத்தான் உண்டு. அது குறைவான சதவிகிதம் பேருக்குத்தான் நடக்குது’ என்றார் வில்லியம்ஸ்.

‘இவ்வளவு விவரமாப் பேசுறவங்க குடியை விடுறது கஷ்டம் வில்லி’ என்றேன்.

கடந்த வருடத்தில் முதல் தேதி மட்டும் சம்பளப் பணத்தை வீட்டு அக்காவிடம் கொடுப்பது என்பது எழுதப்படாத ஏற்பாடாகி இருந்தது. ஏனென்றால், சம்பளம் வாங்கிய கையோடு கடைக்குப் போனார் என்றால், பழைய ஏற்பாடு கால அல்லது கடைச்சங்க கால மன்னராட்சி நாட்களின் வரிக்கொள்கை போல ஐந்தில் ஒரு பகுதி… ஆறில் ஒரு பகுதியைச் செலவெனச் சிரித்துவிட்டு வந்துவிடுவார். நண்பர்களின் ஏகோபித்த கோபத்துக்கு இணங்க ஒன்றாம் தேதி வீட்டுக்குப் போன பிறகுதான் வேறு எங்கும் போவது என விதிக்கப்பட்டது.

வீட்டுக்கு அழைத்த அவருடன் நடந்தேன்.

‘எதுக்கு உன்னை வீட்டுக்குக் கூட்டிப் போறேன் தெரியுமா?’

‘காபி குடிக்கத்தான்.’

‘அது கிடையாது. உன் தலையைத் திங்கப் போறேன்.’

‘என்னது?’

‘சம்பளத்துல 1,000 ரூபா குறையுது. அதை

நீ வாங்கிட்டேன்னு அக்காகிட்ட சொல்லத்தான் உன்னைக் கூட்டிப்போறேன்.’

‘ஏங்க? அப்புறம் அவங்க என்னைக் கேக்கப் போறாங்க…’

‘கவலைப்படாத, ஒண்ணாந்தேதிக்கு அப்புறம் கணக்குக் கேக்க மாட்டாங்க.’

‘என்ன ஆச்சு… இப்ப கடன் வாங்கியும் குடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா?’

வில்லியம்ஸ் மந்தகாசப் புன்னகையைத் தவழவிட்டார். அந்த நேரம், பாதையோர மரத்தில் இருந்து விழுந்த மஞ்சள் சரக்கொன்றையில், மலர் முகப்பில் மரகதம் பொதித்த உருண்டை ஒன்று எங்களுக்கு முன்பாகத் தெறித்து விழுந்தோடியது.

‘நம்ம சம்ஸ் இருக்கான்ல. அதாம்பா கிதார் வாசிச்சுக்கிட்டு உதித்நாராயண் குரல்ல பாடுவான்ல ஒரு பையன். காலேஜ் ஃபீஸ் கட்டுறதுக்குப் பத்தலைன்னான். இப்பத்தான் குடுத்துட்டு வந்தேன். இப்ப அதைச் சொன்னா புசுபுசுங்கும்… அதான்.’

குறைவாகிவிட்ட 1,000 ரூபாய் பற்றி ஒரு கேள்வியும் வரவில்லை அன்றைக்கு. அடுக்களையில் இருந்து ஆவி பறக்கும் காபி மட்டும் வந்தது. அது எனக்கு மட்டும். அப்புறம் என்னுடன் பேருந்து நிலையம் வரை வந்தார். நான் ஊருக்குப் பேருந்து ஏறிப் போனேன். இன்று பெஞ்சில் கிடக்கிறார்.

உள்ளூர் திருச்சபையில் இருந்து பாதிரியார் வந்தபோது பிரான்சிஸ் சாருக்குத் துக்கத்தையும் மீறிய மலர்ச்சி வந்துவிட்டிருந்தது. அடுத்து நடந்ததும் அற்புதம்தான். அவரது மனைவி சமீபத்தில் போய் வந்துகொண்டிருந்த ஒரு சிறிய ஆலயத்தில் இருந்து ஒரு பாதிரியாரும், சென்னையில் அவரது மகள் படித்துக்கொண்டிருந்த கல்வி நிறுவனத்தின் சார்பாக இரண்டு பாதிரியார்களும் வந்திருந்தனர். வில்லியம்ஸின், ‘கர்த்தருக்குள் நித்திரை’ இவ்வளவு ஆணித்தரமாக உறுதிப்படும் என நண்பர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

‘வில்லியம்ஸ் ஒரு பேரன்புக்காரன்’ என்றனர் நண்பர்கள். நேசத்தின் திருமீட்டெழுச்சி!

சடலமான பின் காரியங்களை எடுத்துச் செய்யவும், வெறும் உடலாக உயிர் தவித்துக் கிடக்கும்போது எடுத்து நிறுத்தவும் ஆட்கள் வேண்டப்படுகிறார்கள்.

உடலை எடுத்துக்கொண்டு ஆலயத்துக்குச் செல்லும் ஆம்புலன்ஸிலேயே சவப்பெட்டியைக் கொண்டுவந்துவிடுவது எனத் திட்டம். சவப்பெட்டி ஆயத்தமாகும் இடத்தில் ‘ரெடி பண்ணிக்கிட்டு இருக்கோம்’ எனப் பதில் வந்தது. ஆம்புலன்ஸ் வந்து பெட்டிக்காகக் காத்திருக்குமாறு ஆகிவிட வேண்டாம் என்பதற்காக, பெட்டி தயாராகும் இடத்தில் யாராவது இருந்தால் தேவலை.

‘சரி… நான் போறேன்’ என ஜானகிராமனிடம் சொன்னேன்.

‘இரு’ என்ற ஜானகிராமன், வெயில் காயும் தேநீர் டிரம்முக்கு 10 அடி தூரத்தில் அதே வெயிலே காய்ந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த இன்சமாம் உல் ஹக்கை அழைத்துச் சொன்னார்.

‘அண்ணங்கூடப் போயிடு. பெட்டி தயார் பண்ற இடத்துக்குப் போயி ஆம்புலன்ஸுல அனுப்பிச்சுட்டு அப்புறம்தான் வரணும்.’

ஆமோதிப்புக்கான எந்தச் சலனமும் காட்டாமல் பைக்கை ஸ்டார்ட் செய்தான் இன்சமாம். இரவின் தூக்கக் கெடுதியும் உபவாசமும் அசைவின் சோர்வுகளில் தெரிந்தன அவனில்.

இன்சமாமுக்கு 20 வயது. அவனும் வில்லியம்ஸும் கேரம் விளையாடும் நேரங்களில் சில முறை வேடிக்கை பார்த்திருக்கிறேன். சில நேரம் உடன் ஆடியும் இருக்கிறேன். இன்சமாமும் வில்லியம்ஸும் எதிரெதிர் அணியிலேயே இருப்பார்கள். அணிகளின் சம பலத்தைக் கருத்தில்கொண்டு அப்படியான ஒப்பந்தம். காய்கள் போர்டில் குறைவாக இருக்கும் நேரம் இன்சமாமின் ஆட்டக் கட்டையின் உள்ளங்கைக்கு அருகில், அவனது காயை யாராவது ‘தளை’கட்டி வைத்தால் அவ்வளவுதான். ஸ்ட்ரைக்கரை இடது பக்கக் கட்டையை ஒரு கோணம் வைத்துத் தாக்குவான். மூன்று பக்கக் கட்டையைத் தொட்டு நான்காவதாக ஸ்ட்ரைக்கர் அந்தக் காயினைத் தொடும். காயின் அவனது இடது கையோரம் பாக்கெட் ஆகிவிடும். அப்போது ஸ்ட்ரைக்கர் சென்ற பாதையை யாராவது அறுத்து எடுத்தால், போர்டில் இருந்து ஒரு சதுரமும் நான்கு சம அளவு முக்கோணங்களும் சத்தியமாகக் கிடைத்துவிடும்.

‘வாடா… புலிக்குட்டி’ என்றவாறு அந்த நேர்த்தியைப் பாராட்டும் வில்லியம்ஸ், அவரது ஸ்ட்ரைக்கின்போது உந்து ஊக்கியாகச் செயல்படும் ஆதாரக் காரணியைப் பெருவிரலில் இருந்து சுட்டுவிரலுக்கு மாற்றியிருப்பார்.

இரண்டரை கி.மீ தூரத்துக்கு ஒற்றை வாக்கியம் மட்டுமே பேசினான் இன்சமாம்…

‘இப்படிப் பண்ணிட்டாரேண்ணே!’

பைக்கில் போய்க்கொண்டே முன்னொரு காலம் இதே ஊரில் வாழ்ந்திருந்து இடம்பெயர்ந்து போன நண்பனுக்கு போன்செய்து சொன்னேன்… ‘நேத்துக்கூட அவர நெனச்சேன்டா’ என்றான் அவன்.

மரணத் தகவல் கூற நேராமல் வாழ்க்கையைக் கடந்துவிட முடியும் என்றால், வாழ்வின் கோணல்களுக்குத்தான் என்ன அர்த்தம் இருக்கிறது.

கடைக்கு முன்னால் பைக்கை ஸ்டாண்டு போட்டு நிறுத்திய இன்சமாம், அந்த மேனிக்கு பைக்கில் சாய்ந்தே நின்றான். அவனுக்கு சவப்பெட்டியைப் பார்க்கவும்கூட ஒப்புதல் இல்லை. ஆட்டத்தின் இடையில் மைனஸ் விழுந்துவிட்டது இன்சமாம். கயிற்று வலையில் இருந்தோ கவலைகளில் இருந்தோ மீட்டெடுத்து ஒப்புச்சொல்லி ஆட முடியாது. கதிர் சுருண்டு மறையும் கருந்துளை.

சவப்பெட்டியின் மூடியில் கறுப்பு நிறச் சிலுவை வடிவத்தை ஒட்டி முடித்திருந்தது. விளிம்பில் நீண்ட பொன்சரிகை ரிப்பனின் மேல் ஸ்டேபிளர் அடித்துக்கொண்டிருந் தார்கள். சிலுவையை நினைவூட்டுவதைபோல சில்லாணிகள் அடிப்பும் ஓய்ந்தாயிற்று. அடியும் மூடியும் ஆயத்தமாயிற்று யாத்திரைக்கு. சவப்பெட்டிக்கான காசை எடுத்து வரவும் இல்லை… வாங்கிக்கொண்டு வரவும் இல்லை என்னும் உண்மை, கடைசி ஆணியின்போது என்னில் உள்ளிறங்கியது.

அதே நேரம் ஆம்புலன்ஸ், கடைக்கு முன்னால் வந்து ரிவர்ஸ் எடுத்து நின்றது. ஜானகிராமனுக்கு அலைபேசி, பெட்டித் தச்சரிடம் உத்தரவாதம் சொல்லலாம் என்னும் உத்தேசத்தில், ‘இருங்க ஒரு போன் பண்ணிக்கிறேன்’ என போனைக் கையில் எடுத்தேன்.

‘நீங்க எடுத்துட்டுப் போங்க சார். எல்லாம் தெரிஞ்சவங்கதான். காசை அப்புறம் வாங்கிக்கலாம்.”

பெட்டியை ஏற்றும்போதும் என் முகத்தில் கவலை ரேகையுடன் கடன் ரேகையும் நெளிவதை உணர்ந்தாரேபோல, தாழ்ந்த குரலில் மேலும் சொன்னார்.

‘இங்கே யாரும் பாக்கி வைப்பது இல்லை.’

கண்கள் திடுக்கிட்டு விழித்தேன். இன்றைக்கு மழை வரும்போல இருந்து, சில தட்டாரப்பூச்சிகள் ஆம்புலன்ஸுக்கும் மேலாகப் பறந்துகொண்டிருந்தன. மலர்களுக்கு இடையில் வில்லியம்ஸின் முகத்தைப் பார்த்தபோது வராத அழுகை, சடலம் காணாத சவப்பெட்டியைத் தூக்கியேற்றும்போது வந்துவிட்டது.

‘இங்கே யாரும் மிச்சம் வைப்பது இல்லை.’

– ஏப்ரில் 2015

Print Friendly, PDF & Email

2 thoughts on “குவளையின் மிச்சம்

  1. ‘இங்கே யாரும் பாக்கி வைப்பதில்லை’ என்ற தத்துவார்த்தமான வரிகளுடன் கதையை முடித்த விதம் சிறப்பு. கதையின் தலைப்பாக குவளையின் மிச்சம் என்று வைத்தது சிறப்பினும் சிறப்பு.
    எழுத்தாளருக்குப் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *