கால்படி அரிசி ஆத்மா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 5,331 
 

“ஆமாங்க, செட்டியாரே! இந்த ஆலமரத்தடிக்கிழவன் சொன்னா சொன்னதுதான்!”

“என்னங்காணும், இப்படி ஒரேயடியாய் விலையை ஒசத்திச் சொல்றீரே?”

“கட்டினாப் பாருங்க; இல்லாட்டி நடையைக் கட்டுங்க, ஐயா!” … தொண்டையைக் கனைத்துக் கொண்டார் கிழவர். குவியல் குவியலாக இருந்த கத்தரிக்காய் தக்காளிகளை பிள்ளையை வருடுகின்ற பாவனையில் மெல்ல வருடிவிட்டார்.

“தாத்தா, கருகப்பில்லை இருக்குதுங்களாங்காட்டி?’ என்று ஒரு சிறுமி கேட்டாள்.

“தாத்தாகிட்டே கிடைக்காத சாமான் சட்டு ஏதாச்சும் உண்டா, ஆத்தா ?”

“மெய்தான்.”

“எம்புட்டுக்கு வேணும்?”

“மூணு காசுக்குக் குடுப்பீங்களா?”

“ஓ!”

ஐந்து காசைக் கொடுத்த சிறுமி, கருவேப்பிலை கிடைத்த மகிழ்வில், பாக்கிச் சில்லறையைப் பற்றின ஞாபகம் இல்லாது நடந்தாள்.

கிழவர் சுருக்குப் பையிலிருந்து தடவி இரண்டு காசை எடுத்து வைத்துக் கொண்டு தலையை நிமிர்த்தினார். கைகளை முடிந்த மட்டும் ஓசைப்பட தட்டினார். “இந்தாத்தா, ரெண்டு காசு!…” என்று பொக்கை வாயை அகலத் திறந்து, ஓர் அழகான பாசச் சிரிப்பை உதிர்த்தபடி, இரண்டு காசு நாணயத்தை, அந் நாணயத்தின் நாணயம் பங்கப் படாத ரீதியில், உரியவளிடம் நீட்டினார்.

தக்காளிக்காகத் தவம் இயற்றி, ஒற்றைக்காலால் நின்று கொண்டிருந்த செட்டியார் இன்னமும் நகரவில்லை.

அறந்தாங்கி நாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் அந்த ஆவணத்தாங்கோட்டைச் சாலையை அசட்டை செய்துவிட முடியுமா, என்ன ?

கிழவர், மண்டையில் அடித்த உச்சி வெயிலைச் சட்டை செய்யாமல் இடது காதிடுக்கில் ஒளிந்திருந்த பாதி சுருட்டை வாய் ஊற எடுத்து, ஒரே தீக்குச்சியில் சமர்த்தாகப் பற்ற வைத்துப் புகையை இழுத்தார் புகையின் ரசிப்பில் வெகு சுவாரசியமாக ஈடுபட்டிருந்தார் மனிதர். ஏதோ சத்தம் கேட்டது. ஆடொன்று அவரது சோற்றுப் பானையை லாவிக் கொண்டிருந்தது. “இந்த ஊரு நாட்டிலே பணக்காரங்க வூடு அனந்தமா இருக்கே? அங்கிட்டாலே நாடிப் போவேன். இந்தக் கிழடு கதை ஒனக்குத் தெரியாது போலே. ஊருக்குப் புதுசோ?… நான் வடிக்கிறது ஒரு நாளைக்கு ஒரு கடுத்தம். இந்த லச்சணத்திலே. நீயும் வந்துதான் தீரணும்னு அடம் பிடிச்சா, நில்லு, ஒனக்கும் போடுறேன். அல்லாச் சோத்தையும் நான் தின்னுதான் என்ன கண்டேன்?… நாத்த ஒடம்பு மேலுந்தான் நாறித்தொலையுது!” என்று ஒரு பாட்டம்’ பேசிவிட்டு, தலையில் சுற்றியிருந்த ஹைதர் காலத்துவாலையை நிமிண்டிச் சொறிந்து கொண்டார். ஈரும் பேனும் மண்டையைத் தாண்டிக் கொண்டு வந்திருக்குமோ? கிழவர் இருந்திருந்தாற் போலத் தனக்குள்ளாக ஒரு சிரிப்புச் சிரித்துக் கொண்டார். ஓர் இமைப்பிலே, அச்சிரிப்பு மறைந்துவிட்டது!

கிழவர்…. கிழவர் என்றால் அவருக்கும் பெயரென்று ஒன்று இருக்குமே?

இருக்கும். இருக்கும்! ஆனால், அந்தப் பெயர் யாருக்குத் தெரியும்?

ஆலமரத்தடிக் கிழவர் என்றால், சுற்று வட்டை ‘ யில் ஏகப் பிரசித்தம். கறார்ப் பேர்வழி. எழுபத்திரண்டு வருஷம் தன் ஜீவனைக் காபந்து செய்து கொள்ளப் பழகிவிட்ட அசகாய சூரர் அல்லவா அவர்? மிஸ்டர் எமதர்மராஜனுக்கு ‘டேக்கா’ கொடுக்கப் பழகிவிட்ட படுசமர்த்தராம் கிழவர்! பேசிக்கொண்டார்கள்! அந்த ரகசியமும் அவர் வரை ஒரு மர்மம்தான்!

***

சிந்தனை வசப்பட்ட நிலையிலே, காய்கறிக் கடையை மறந்து, அந்த ஆட்டை கண் பாவாமல் பார்த்தவர், கண்மூடிக் கண் திறந்த வேளையில், அந்த ஆடு நல்லதனமாக அங்கிருந்து நகர்ந்து விட்டதைக் கண்டுகொண்டார். அவரது இமைகளில் ஈரம் பனித்தது. ‘மனுஷங்க பாஷை தெரிஞ்ச வாயில்லாச் சீவன்… பாவம்! வாயுள்ளதாலே இந்த மனுசங்களுக்கு என்ன பிரமாதமாக் கொட்டுதாம்? ம்…. எப்படியும் சாண் வயித்தைக் கழுவி மூடிக்கிடத் தெரியும். அம்புட்டுத்தானே!… ம்….. அப்பாலே, கடாசீலே, அல்லாம் பிடி சாம்பலாகப் பூடவேண்டியதுதானே?… சே! என்னா சென்மம்டாப்பா இது! பிறவா வரம் வேணும்னு , அனுபவிச்ச புண்ணியவான் யாரோ பாடினார்!….’ சுருட்டு சுட்டுவிட்டது போலும்! உதறினார். சாம்பல் தாள் பறந்தது.

“பெரியவரே! கடைசியா என்ன விலை சொல்லுறீங்க தக்காளிக்கு?” என்று மீண்டும் கேட்டார் செட்டியார்.

“ஓரே விலை! இப்ப தக்காளி வேணுமா? இல்லே… நான் பசியாறப் போவட்டுமுங்களா?”

“வேணும்… வேணும்… ஒரு அரைக் கால் வீசைதாங்க படிக்க கல்லைப் பார்த்துப் போட்டுக்குங்க…. ம்… சரி… சரி. இந்தாங்க பணம். இந்தப் படிக்கல்லுங்களை மாத்திக்கிடுங்க. இல்லாட்டி, எவனாச்சும் வந்து புடிச்சுடப்போறான், பெரியவரே!”

“அப்படிங்களா? பிடிச்சிக்கிட்டுப் போனாப் போய்த் தொலையட்டுமே!… இந்தப் பதினைஞ்சு மாசப் பொழைப்புக்கு ஏதாச்சும் ஓய்வு கெடைச்சாக்கூட தேவலாம்தான்!” என்று அழகாகச் சிரிக்கலானார் காய்கறி வியாபாரி.

திரும்பி வந்த ஆட்டுக்கு ஒரு பூவன் பழம் கிடைத்தது.

***

‘லொக்… லொக்…!’

ஆலமரத்தடிக் கிழவர் இருமினால், அதில் சுருதி பேதம் இருப்பது சகஜமேயாயினும், பேதத்தைக் கடக்கத் தெரிந்தவர்களுக்குக் கட்டாயமாக அந்த இருமலின் சுருதியைத் தெரிந்து கொள்ளக்கூடும்.

வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.

அந்தி சந்திப் பொழுதல்லவா?

உலை ஏறிவிட்டால், ‘வெஞ்ச’னத்துக்கு வழி சொல்ல வேண்டாமா?

வழிசொல்லிக் கொண்டிருந்தவர் கிழவர், வேர்வை வழிந்தது. இருந்தும், கந்தல் துவாலையை எடுத்து உதறக் கூட நினைவின்றி, அதை எண் சாண் உடம்பைச் சுற்றிப் போர்த்திக் கொண்டார். அட்டணைக் காலிட்டுக் குந்தியிருந்தவரை பைசாச் சுருட்டு தேடி வந்தது.

“தாத்தா …”

“வாப்பா, பேராண்டி!”

“மேனி ஒரே முட்டா நடுங்குதே? காயலாவா?”

“என்னமோ, அப்பிடித்தான். படுது!”

“அப்படின்னா, எல்லாத்தையும் தூக்கி ஓங்க எதாஸ்தானத்திலே போட்டுப்பிட்டு, பூந்து படுக்கறது தானே?… இவ்வளவு வயசானப்பறமும் இப்பிடிக் கஷ்டப்பட்டு யாருக்குச் சேர்த்து வைக்கப் போறீங்க? இப்பத்தான் ஒங்க கையிலே ரொம்பச் சேர்ந்திருக்கிறதா ஒரு பேச்சு சதா அடிபட்டுக்கிட்டு இருக்குதே, இந்தச் சாலை நெடுக!”

கிழவர் தனக்கே உரிய மர்மத்துடன் கடகட வென்று சிரித்துக் கொட்டினார். அள்ளத்தான் ஆள் இல்லை, பாவம்!

சிரிப்போடே சொல்கிறார் : “பேராண்டிக்கில்லே சொல்லுறேன். நான் நித்தம் உழைக்காட்டி, என்னோட சாண் வயித்தை வஞ்சனை செஞ்சிடுறதாய்த்தானே அருத்தம்? ஊர்னா, யாரும், யாரைப் பத்தியும் எப்பவும் எதுவும் பேசிக்கிடுவாங்க. இது சகஜம்தான்! பணம் காசுன்னாக்க, யாருக்குத்தான் ஆசை வராது? நானும் கேவலம் ஒரு மனுசப் படைப்புத்தானே?”

“தாத்தா பேச்சு எப்பவுமே மூடு மந்திரம் கணக்குத்தான்!”

இப்போதும் வாடிக்கையான ஒரு சிரிப்புத்தான் வெளிப்பட்டது.

செவ்வாய்ச் சந்தைக்கு வைக்கோல் வண்டிகள் சரம் தொடுத்துச் செல்ல ஆரம்பித்து விட்டன.

பேராண்டி என்ற புதிய சொந்தத்துக்குப் புதிய பாத்தியத்தை பூண்ட அவ்விளைஞன் தன்னுடைய தாத்தாவுக்கென்று ஒரு சாயா வாங்கி வந்து கொடுத்தான்.

கிழவர் அதை மறுக்க மாட்டார். ஒரு முறை காசு கொடுக்ப் போக, அவன் பிரமாதமாக் கோபித்துக்கொண்டு விட்டான். “போறப்ப யாரும் எதையும் தூக்கிட்டா போகப் போறோம்? நம்பளைத் தூக்கத்தானே நாலு பேருக்கு வேலை வைப்போம்?” என்று வேதாந்தம் படித்தான். அந்தப் பேச்சின் விதரனை, வயசை மீறய தொரு வாக்காகவே பட்டிருக்கவேண்டும்….. வயோதிகருக்கு. அதிலிருந்து, அந்தப் பிள்ளையென்றால் அவருக்கு ஒரு பிரியம். “நீங்க எந்த ஊரு? ஒங்க பேர் என்ன? ஒங்க கதை என்ன? இத்தனை வயசுக்கப்புறம் ஏன் இப்படிக் கஷ்ட ஜீவனம் நடத்த வேணும்? உங்களுக்கு பிள்ளைகுட்டி இல்லியா?” என்றெல்லாம் துளைத்தான்.

“நான் அநாதை…. அதிலேயும் நாதியத்த ஒரு புறம்போக்கு. இதுக்குப் பெரிசா என்ன கதை வேண்டிக்கிடக்கு, காரணம் வேண்டிக் கிடக்கு?…. மூச்சு ஓடுற மாட்டுக்கும் ஓடித் தொலையட்டுமே! மூச்சு நின்னுட்டாக்க, நல்ல மனுசங்கன்னு ஈவு இரக்கம் கொண்ட தலைங்க நாலா இந்த நாட்டிலே அத்துப் போயிடும்? அவங்க இந்தச் சனியனைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போகட்டுமே?’ என்று அடைத்துவிடுவார். உடனே “தாயே பராபரி… அங்களாம்மை!”…. என்று ஓர் ஆறுதுல் கொள்ளத் தவறுவதில்லை .

சாலையிலே ஓர் அப்பனும் மகனும் சண்டை போட்டுக் கொண்டார்கள்.

கிழவர் ஆத்திரத்தோடு எழுந்தார். “ஏம்ப்பா தம்பி, பெத்த அப்பனையா எதிர்த்துப் பேசி, கைநீட்டப் போறே? போப்பா, விலகி!” என்று தந்தையையும் மகனையும் விலக்கி விட்டார். “காலம் மாறிப் போச்சு… நீங்க நடங்க, சேர்வை!” என்று சமாதானம் செய்தார். சுருக்கம் படிந்து கிடந்த அவர் முகத்தில் வேதனையும் விரக்தியும் நிழலாடின.

***

ஜன நடமாட்டம் கம்மிபடத் தொடங்கியது.

இந்தாருங்காணும், இதுகளை எடுத்துக்கும்… நாளைக்கு இருந்தா, தூக்கி எறியத்தான் வேணும்!” என்று சொல்லி குணம் கணித்து, குற்றம் கண்டு ஒதுக்கிவிடத் துணிந்த காய்கறிகள் சிலவற்றை, பூவத்துக்குடி தேவருக்கு மனமுவந்து யாசகமாக நீட்டினார் அவர். கூழைக் கும்பிடு ஒன்று நியாயமான உண்மை போலக்கிடைத்தது.

ஆதாயம் என்றால், ஆதாயம் தானே?

பாவம், இவரா கருமி?…..

என்ன உலகம்?

***

“ஆலமரத்தடிக் கிழவர் போயிட்டாருங்க!”

“ஆங்…!”

கும்பல், வித்தைக்காரனைச் சுற்றிக் கூடுவது மாதிரி சிறுகச் சிறுகக் கூடத் தலைப்பட்டது.

அதோ, வித்தைக்காரன்! என்ன உறக்கம்… என்ன உறக்கம்! “ராத்தரி நல்லாயிருந்தாரே, முத்துமலை அம்பலம்?”

“நல்லாத்தான் இருந்தார். போன கிழமையாச்சும் லேசா காயலா இருந்தாரு. நேத்தைக்கு ராவு யாதொண்ணும் இல்லே. வரக் காப்பி குடுத்தான் பேராண்டி. அப்பாலே, வளமைப்படி சாமான் சட்டுகளை உள்ளாற தூக்கியாந்து சரி பார்த்து வச்சிட்டு, சுருக்குப் பையை எண்ணிக் காட்டி எங்கிட்டே ஒப்படைச்சிட்டு, இந்த வெளித் திண்ணையிலேதான் படுத்தாரு . கோழி கூப்பிட, வேம்பாவைச் சூடு பண்ண ஏந்திருச்சேன். அவரு காலை மிதிச்சுப்பிட்டேன். திரும்பிப் பார்த்தேன். ஆளுமுண்டலை, முடங்கலை. சம்சயம் தட்டிச்சு. லாந்தரைப் புடிச்சு மூஞ்சியைப் பார்த்தேன். வெறும் கட்டைதான் மிச்சம்…” முத்துமலைக் கிழவர் கண்ணீ ரை வழித்துவிட்டார்.

“ஆமா, இங்கிட்டு வந்து வெகு தொலைக்குச் சொத்து சேர்த்து வச்சாராமே? அது சங்கதி ஓமக்குத் தீரத் தெரியணுமே?” என்றார் தேவர் சன்னாசித்தேவர்.

“அந்தச் சங்கதியை அந்தக் கிழவரைக் கேட்டால் தான் தெரியுமுங்க…” குரல் நெகிழ்ந்து ஒலித்தது.

“அதெல்லாம் சொல்லித் தெரியிறதாக்கலா? என்ன இருந்தாலும், முத்துமலை அம்பலம் யோகக்காரப் புள்ளிதான்…”

“ஆமா….. ஆமா… விரிச்சுப்படுக்கறதுக்கு நிழல் குடுத்தாரில்லே?”

“வெட்டிப் பேச்சு ஏதுக்கு? … பொணத்தைத் தூக்கறதுக்கு வழி பண்ணுங்க. ஆளுங்க நாலு பேரைப் பிடிங்க, அம்பலம்…” என்றார் மணி.

“அல்லாரும் சித்தே பொறுத்திடுங்க உண்மைங்கிறது. தெய்வத்துக்குச் சமட்டி நாமள்ளாம் காளிக்கு அடிமைப் பட்டவங்க. இதை நானும் மறந்திடலே; நீங்களும் மறந்திடாதீங்க; அந்த சன்னாசித் தேவர் ஒரு தாக்கலைத் தூக்கிப் போட்டாரு , ஊர் முழுவதும் அப்படி கட்ட நினைச்சிருக்கும். இந்தாப் பாருங்க, இந்தச் சுருக்குப் பை. இதுதான் ராவு அந்தக் கிழவர் கடோசியாத் துடுத்து வச்சுது பத்தணாவுக்கு மூணு காசு கொறைச்சல் அம்புட்டுத்தான் பணம் உள்ளாற கூடையிலே இருக்கற காய்கறிங்க மிச்சம். மத்தப்படி… மத்தப்படி அவரோட காசு எங்கிட்டே இன்னிய தேதி வரைக்கும் ஒரு தம்பிடி சேர்த்ததில்லை. அவரு கணக்கு வழக்கெல்லாம் இந்த நோட்டிலேதான் … அதை வேணும்னாலும் பார்த்துடுங்க” என்று ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் போட்டார் அம்பலம்.

அப்போது அந்தக கணக்கு நோட்டிலிருந்து மக்கிப் போனதொரு பழைய செய்தித்தாள் சிதறி விழுந்தது.

மணி, சிதறி விழுந்த அந்தப் பத்திரிகையை எடுத்தார். பிசிறுகள் உதிரலாயின.

எடுத்த எடுப்பில் ஓர் அதிசயம் வெளிப்பட்டது.

மணி, வாய்விட்டு வாசிக்கலானார்.

“காணவில்லை ”

இந்தப் படத்திலுள்ள என் தந்தை தேவிபட்டினம் உயர்திரு மு. காசிநாதக் கங்காணி , என் பேரில் கொண்ட சிறு மனஸ்தாபம் காரணமாக, தம்முடைய சொத்து சுகத்தையெல்லாம் துறந்து. கடந்த இருபத்தேழு மாதமாக எங்கோ கண் காணாத இடத்தில் தலைமறைவாக வைராக்கியத்தோடு இருந்து வருகிறார். ஆட்டுக்குட்டி வளர்க்க வேண்டாமென்று நான் சொன்னேன். அவர் கேட்கவில்லை.

ஆத்திரத்தில் புத்தியில்லாமல், திட்டிவிட்டேன்! ரோஷக்காரர் அவர் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல், வீசின கையும் வெறுங் கையுமாக இரவோடு இரவாக வெளியேறிவிட்டார், என் தெய்வம்! இது வரை தேடாத இடம் இல்லை. போடாத விளம்பரம் கிடையாது. நாங்கள் குடும்பத்தில் பயித்தியம் பிடிக்கும் நிலையில் இருந்து வருகிறோம்!… ஆகவே, இந்தப் புகைப்படத்திலுள்ள பெரியவரை இனம் காணும் புண்ணியவான் யாராகயிருந்தாலும், உடனே ரகசியமாக கீழுள்ள என் விலாசத்துக்குத் தந்தி கொடுத்து உதவும்படி ரொம்பவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன். கோடிப் புண்ணியம் கிடைக்கும்!…. அவர்களுக்கு வேண்டும் பணத்தை அள்ளிக் கொடுப்பேன். அங்காளம்மை பேரில் ஆணை இது!…”

கத்தரிக் காட்டுக் கிழவர் உணர்ச்சி வசப்பட்டுச் செருமலானார்: “மனுசர் விதியோடே எப்படி எப்படியெல்லாம் விளையாடிப் பார்த்திருக்கார்?… அட கடவுளே!”

மணி முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

“மணி! இந்தாங்க, பத்து ரூபாய்த்தாள் இருக்கு. சைக்கிள் ஒண்ணு எடுத்துக்கிட்டு அறந்தாங்கிக்குப் போயி, அந்தப் பத்திரிகையிலே கண்டிருக்கிற விலாசத்துக்கு ஒரு எம்ம சன்டு ‘ தந்தி பேசிட்டு வாங்க. நம்ப கிழவனாரய்யாவோட மகனை உடனே புறப்பட்டு வரும்படி மட்டும் பேசுங்க…. போதும்! பாவம்!” முத்துமலையின் சாயத் துண்டு ஈரத்தால் கனத்தது!

ஆலமரத்தடிக் கிழவர் எத்துனை மகத்தான ரோஷத்தோடு உறங்கிக் கொண்டேயிருக்கின்றார்….

உறங்கட்டும்! உறங்கட்டும்!..

எழுப்பிவிடாதீர்கள்….!

– பூவையின் சிறுகதைகள் – முதல் பதிப்பு – டிசம்பர் 2003 – பூவை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *