மன்மதப் பாண்டியன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: January 28, 2024
பார்வையிட்டோர்: 2,152 
 
 

(1998ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35

அத்தியாயம்-26 

வீரபாளையக்காரர் அந்த மாளிகை நோக்கி அவ்வளவு கோபப் பிழம்பாக வந்தார். 

அவர் வருவதை சேடி உள்ளே போய் திருமங்கையிடம் கூறிவிட்டாள். 

திருமங்கை மனதைத் திடப்படுத்தி, வாசல் வழியைப் பார்த்திருந்தாள். 

பாளையக்காரர் புயல் வீச்சமாக உள்ளே வந்து தம்ம் என்ற முத்தாய்ப்பு போல் திருமங்கை முன்பாக நின்றார். 

“இளவரசி! என்ன காரியம் செய்து விட்டீர்கள்?” என்றார். 

ஒன்றும் தெரியாதது போல் புருவ வளைவை மட்டும் மேலே தூக்கி, “ஏன், என்ன நடந்தது?” என்று மெல்லிதாகக் கேட்டாள், திருமங்கை. 

“உங்களால் அந்தப் பாண்டியன் ஓடிவிட்டான்” என்றார் அவர். மார்பு குளக்கரை அலை போல் மேலே எழும்பி லபக்கென்று விழுந்தது. 

“பாண்டியனா? யார் அது? என்னாலா?” என்று அங்கலாய்ப்பாய் கேட்டாள் அவள். 

“ஆமாம்! என் மாளிகைக் கிடங்கில் பாண்டியனைப் போட்டிருந்தேன்.” 

“எந்தப் பாண்டியன்? 

“தென்காசிப் பாண்டியன்தான்! நமக்கு அடித்த மகா அதிர்ஷ்டம் அது என்று நினைத்திருந்தேன். தப்பிவிட்டான்! தப்பிவிட்டான்!” 

பட படவென்று வார்த்தைகள் அடிப்பது போல் விழுந்தன. 

”அப்படியா? அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்று சற்று தூக்கலாகக் கேட்டாள் திருமங்கை! 

”நீங்கள் அங்கே போனீர்களாமே!” என்றார் பாளையக்காரர் குற்றக் குரலில். 

கிடங்கைப் பார்த்ததில்லை. காட்டச் “ஆமாம்! சொன்னேன். கிடங்கின் கதவைக் கூட நான் தொடவில்லை! தங்கள் சேடி ஒருத்தியும் வந்திருந்தாளே!” என்றாள் மங்கை “இரவில் திரும்ப அங்கே போனீர்களா?”

”இல்லை.” 

“அப்படியானால் அவன் எப்படித் தப்பினான்?”

“அது எனக்கு எப்படித் தெரியும்?”

“இளவரசி! இது ஒரு ராஜரீக விஷயம்! நாளை தங்கள் தந்தைக்கு இது தெரிந்தால் துடித்துப் போவார்”

“மாட்டார்! தாங்கள் பாதுகாப்புத் திறன் அவ்வளவு குறைவு என்று நகையாடுவார்!”

பாளையக்காரர் கண்ணில் ஒரு நெருப்புத் துளி உட்கார்ந்தது. 

“என் பாதுகாப்புக் குறைவா? ஏதாவது தந்திரம் செய்தாலன்றி அந்தப் பாண்டியன் என் கிடங்கை விட்டுப் போயிருக்க முடியாது!” 

“அப்போது தந்திரத்திற்கு எளிதாகத் தங்கள் பாதுகாப்பு உடைந்துவிடுமோ?”

“தந்திரத்திற்கு அல்ல! நயவஞ்சகத்திற்கு!” 

“இந்தாருங்கள் பாளையராஜாவே! வார்த்தைகளை அடக்கிப் பேசுங்கள். என்னை உங்கள் அடிமை என்று நினைக்க வேண்டாம். நானாவது! அந்தப் பாண்டியன் தப்பித்துப் போக வழிவகுப்பதாவது! எனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?”

திருமங்கை கண்கள் மின்னல் சுழியாக ஒளிர வார்த்தைகள் கன சூடாக வெளியே வந்தன. 

பாளையக்காரர் சில கணங்கள் பேச்சிழந்து நின்றார். அவர் முகத்தில் ஆத்திரம் இன்னும் வடியாமல் அதிகமாவது தெரிந்தது. 

திருமங்கை முகத்தை ஒரு திருப்புத் திருப்பினாள். 

சேடியைப் பார்த்தாள். 

“இந்தா மதனா! இனிமேல் என் உத்தரவின்றி யாரையும் உள்ளே விடாதே” என்றாள் சீற்றமாக.

அடுத்த விநாடி அந்தப் பயங்கரச் சிரிப்பு அவளை அதிர வைத்தது. 

திரும்பினாள். 

பாளையக்காரர் பல்லெல்லாம் தெரிய பெரிய சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தார். 

“இந்தாருங்கள்! உண்மையில் நீங்கள் யார்? இளவரசி என்று பொய்தானே சொல்கிறீர்கள்? நீங்கள் உண்மையில் பாண்டிய உடந்தை தானே?” 

“சீ! என்ன பேச்சுப் பேசுகிறீர் பாளையக்காரரே! வேண்டுமானால் ராஜமோதிரத்தைப் பாருங்கள்! ராஜ முத்திரையைப் பாருங்கள்! இதுபோல என்னை அவமதிக்காதீர்கள்!” என்று சொல்லி, அதே வேகத்தில் ‘மதனா” என்றாள். 

மதனா துள்ளி ஓடி வந்தாள். 

“அந்த மனிதருக்கு நமது ராஜ சின்னங்களைக் காட்டு! மனிதர் சந்தேகப்படுகிறார்” என்று சொல்லிவிட்டு, 

“நல்ல பாளையாக்காரர்கள்! சொந்த நிழலையே சந்தேகப்படுவார்கள் போலும்! இவர்களை நம்பி தந்தை பெரிய காரியத்தில் இறங்குகிறாரே! அந்த மீனாட்சிதான் காப்பாற்ற வேண்டும்” என்று சொன்னவாறு ஆசனத்திற்குச் சென்று அமர்ந்துகொண்டாள். 

மதனா உள்ளே துள்ளிப் போய், ஒரு சின்னப் பேழையைத் தூக்கி வந்தாள். 

நிறந்து மோதிரங்களாக எடுத்துக் காண்பித்தாள். 

அவநம்பிக்கையுடன் அவைகளைக் கையில் வாங்கிப் பார்த்தார் பாளையக்காரர். 

திருமங்கை அவரை விழியால் அழுத்திப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

பேழை அனைத்தையும் பார்த்தபிறகு, பாளையக்காரர் எதுவும் சொல்ல முடியாத நிலையில் நிமிர்ந்தார். 

“நல்லது! இளவரசி! தங்கள் தந்தை தங்களை என் பாதுகாப்பில்தான் அனுப்பி இருக்கிறார். எனவே இனி தாங்கள் தஞ்சாவூர் செல்லும்வரை என் பாதுகாப்பிலேயே இருப்பீர்கள்” 

“தங்கள் பாதுகாப்பா?…..” என்று சொல்லிச் சிரித்தாள் திருமங்கை. பிறகு ஏளனமாக மேலே தொடர்ந்தாள். “அது தான் பாண்டிய நாட்டின் குறுக்காகவே வாருங்கள். பாது காக்கிறேன் என்று சொல்லி தவிக்க வைத்தீர்கள்!” என்றாள். 

“ஏன் என்ன நடந்தது?” 

“தென்காசிப் பாண்டியரின் பூமி வழியாக என் மகள் போகலாமா என் கேட்டதற்குப் போகலாம். அன்னியரின் பூமி ஆனாலும் நான் பாதுகாப்பு அளிப்பேன் என்று கூறினர்கள்! உங்களால் எங்கே முடிந்தது?” என்று கோபமாகக் கேட்டாள். 

“ஏன்! உங்களுக்கு என்ன நடந்துவிட்டது! பாதுகாப்பில்தானே வந்தீர்கள்?” என்று மிடுக்காகக் கேட்டார் பாளையக்காரர். 

“ஓகோகோ….. மனதில் அந்தப் பிரமை வேறு வைத்திருக்கிறீர்களா? வழியில் சங்கரநயினார் கோயிலிலேயே உங்கள் பாதுகாப்பு ஆட்கள் பறந்து போய் விட்டார்கள்! அதை நான் இன்னும் உங்களிடம் சொல்லவில்லை!” என்றாள். 

“என் ஆட்கள்! ஏன் பறக்கிறார்கள்?”

“சரிதான்! மதுரைவரை என்னை அழைத்து வந்தது தங்கள் ஆட்கள் அல்ல! அவர்கள் என்னோடு வந்திருந்தால் தான் உங்களைக காண வந்திருப்பார்களே?” 

மறந்த ஏதோ விஷயத்தை திடீரென்று நினைவுக்குக் கொண்டு வந்தவர்போல், 

“ஏன்? அவர்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார். ஆத்திரமாகக் கேட்டார் அவர். 

“நீலத் தலைப்பாகைக்காரர்கள் விரட்டி விட்டார்கள், தெரியுமா?” 

“நீலத் தலைப்பாகைக்காரர்களா?” 

”ஆமாம். அவர்களிடம் உங்கள் ஆட்கன் ஆட்டம் பலிக்காமல் சிதறிப் போய்விட்டார்கள்.” 

பாளையக்காரர் வாயடைத்து நின்றார். திருமங்கை தொடர்ந்தாள். 

“ஒருமுறை அல்ல! இருமுறை அவர்கள் எங்களை வழி மறித்தார்கள்! எங்களைக் காப்பாற்றியவர்கள் பாண்டிய வீரர்கள்தான்!” என்றாள் திருமங்கை 

பாளையக்காரர் வாய் திறக்கவில்லை. 

“நிச்சயம் பாண்டிய வீரர்கள் சாமர்த்தியக்காரர்கள் தான்! நீலத் தலைப்பாகையைப் பற்றி எவ்வளவு கேள்விப் பட்டிருக்கிறோம். அவர்களையே இவர்கள் முறியடித்துவிட்டார்களே! நீங்களானால் என்னவோ அந்தந் தென்காசிப் பாண்டியரின் ஆட்கள் புழுப் போலவும் பூச்சி போலவும் பேசுகிறீர்கள்? அந்தப் புழுப் பூச்சிகள்தான் எங்களைக் காப்பாற்றினார்கள். உங்களுக்குத் தெரியுமா, நாங்கள் பிற்பாடு குதிரைகளில்தான் பயணம் செய்து வந்தோம். பல்லக்கில் அல்ல எல்லாம் போய்விட்டது” என்றாள். 

நடந்தவை அடுக்கடுக்காக வர். பாளையக்காரரின் வாய்ச் சொல் இறுகிவிட்டது. 

“அப்படி சாமர்த்தியமுள்ள வீரர்களின் தலைவனாக இருந்தால், அவர் மாபெரும் சாமர்த்தியசாலியாகத்தானே இருப்பார்! தங்கள் கிடங்கை விட்டு அவர் தப்பி ஓடியதில் என்ன வியப்பு இருக்கிறது!” என்றாள். 

பாளையக்காரர் சுடுகடு என்று பல்லை அரைப்பது தெரிந்தது. 

பாண்டியப் புகழ்ச்சியை அவர் விரும்பவில்லை போலும். 

“போதும்! இளவரசி! எதிரிகளைப் புகழ்வதை நிறுத்துங்கள்! இன்று மாலை நீங்கள் தஞ்சாவூருக்குப் புறப்படுகிறீர்கள் அதற்கான பாதுகாப்பு எவ்லாவற்றையும் நானே கவனிக்கிறேன்” என்றார் கோபமாக. 

“நிறுத்துங்கள் பாளைய ராஜாவே! நான் தஞ்சாவூர் போக விரும்பவில்லை” 

“ஏன்?” 

“என் விருப்பம்!” 

“நீங்கள் இன்று மாலை போய்த்தான் ஆக வேண்டும். ஆமாம்!” என்று கூறி மிடுக்காகக் கிளம்பினார் அவர். 

வெளியே போனவர், “யாரங்கே?” என்று சொல்லி உத்தரவுகளாக வழங்குவது கேட்டது. 

திருமங்கைக்குக் கோபம் பொத்து வந்தது.

ஆத்திரமாக எழுந்து வாயில் பக்கம் ஓடினாள் 

அத்தியாயம்-27

வீரபாளையக்காரர் கோபமாகப் போய் விட்டார். திருமங்கைக்கு இரத்தம் கொதித்தது. 

ஏற்கெனவே தஞ்சை மன்னனின் ஓவிய உருவம் கண்டு வெளுறியவன் அவள். 

இப்போது மனதில் அந்த முறிவு வந்துவிட்டது. எப்படி அந்தத் தஞ்சை நாயக்கரை நினைத்துக் கோட்டை கட்டினோம். என்று நினைத்தாள். 

அந்த நாயக்கர் நல்ல பலசாலி. அவர் மதுரையை எளிதில் பிடிப்பார். 

தெற்கு முழுதையும் சாம்ராஜ்ஜியமாகத் திரட்டுவார். அவள், அதில் மகாராணியாக வீற்றிருக்கலாம்! 

இவ்விதத்தில் தந்தையும் நினைத்தார். அவளும் நினைத்துவிட்டாள். 

அந்த ஆசையில்தானே அப்பா கேட்டுக் கொண்ட போது, தஞ்சை மன்னரை மணக்கச் சம்மதித்தோம்! அச்சுதப்பன! 

அச்சுறுத்தும் அப்பனதான், அவன். 

ஓவியத்தைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

சேடி மதனாவை அழைத்தாள். 

“அவர் சொன்னதைக் கேட்டாயாடி?” என்றாள். “கேட்டேன் அம்மா! மலையாள பூமியில் கொல்லம் ராஜாவின் மகள் தாங்கள் என்ற சிந்தனையே இல்லாமல், ஏதோ அடிமை போல் பேசினாரே?” என்றாள். 

“இப்போது என்ன செய்யச் சொல்லுகிறாய்! நாளை தஞ்சாவூர் புறப்படவேண்டும் என்கிறாரே!” 

“தாங்கள் விருப்பம் என்ன?” 

“ஏன்?” 

“அந்த மன்னரை மணக்க நான் மணக்க நான் விருப்பப்படவில்லை” 

“அப்படியா” என்று வாய் புதைத்து மதனா நின்றாள், 

“ஏன்! மதனா, என்ன?” 

“இளவரசி! நாம் புறப்படும்முன் தங்கள் தந்தை கூறியதை மனதில் நினைத்துப் பாருங்கள்!” 

“பார்த்தேன் மதனா! அப்போது அவர் சொன்னது சொர்க்கமாகப்பட்டடது”. 

“தாங்களைத் தஞ்சாவூர் மன்னருக்குக் கொடுப்பது மூலம் மலையாள பூமியிலே தமது கை ஓங்கும் என்று நினைத்தார். பாண்டிய நாட்டைப் போலவே, மலையாளம் இப்போது துண்டங்களாகப் பிரிந்திருக்கிறது. தங்கள் தந்தையார்தான் முழுபூமியையும் அரசாள உரிமை பெற்றவர். ஆனால், சந்தர்ப்பவசத்தால் கொல்லம் பகுதிக்கு மட்டும் ராஜாவாக இருக்கிறார். மீண்டும் அவர் எல்லா பூமியையும் கைப்பற்ற வேண்டுமானால், அவருக்குத் துணைபலம் வேண்டும்.” 

இங்கே குறுக்கிட்டாள், திருமங்கை. 

“தெரியும் மதனா! அந்தத் துணைபலத்தை தஞ்சாவூர் நாயக்கர் தருகிறேன் என்றார். என் தந்தையும் அவரும் ரசிய உடன்படிக்கை செய்து கொண்டார்!” என்றாள், அவள், 

“ஆமாம்! அதன்படி தஞ்சாவூருக்கு முதலில் தங்கள் தந்தையார் உதவவேண்டும். அந்த உதவியையும், பெற்று தஞ்சாவூர் மன்னர் மதுரை மீது படையெடுப்பார். அதைத் தம் கைவசம் கொள்வார். அதன்மூலம் பாண்டியபூமி முழுவதும் அவர் கையில் போகும்! அப்படி ஒரு பரந்த சாம்ராஜ்ஜியத்தைப் பெற்ற பிறகு, அந்த நாயக்கர் தங்கள் தந்தைக்கு உதவுவார்! மலையாளத்து மற்ற ராஜாக்களை வெற்றி கொண்டு தங்கள் தந்தை கையில் முழு மலையாள நாட்டையும் கொடுப்பார்! இவ்வளவுதானே உடன்படிக்கை!” என்றாள் சேடி.. 

“ஆமாம். இதைத்தான் ரகசியமாகச் செய்து முடித்தார்”

“இந்த உடன்படிக்கையால் ஏற்பட்ட நட்பின் சின்னமாகத்தான தங்களை தஞ்சாவூர் மன்னருக்கு மணம் செய்விக்க நினைத்திருந்தார்!” 

”ஆமாம்! இந்த விஷயத்தை என்னிடம் எடுத்துச் சொன்னவுடனே நானும் அதற்குச் சம்மதித்தேன். தந்தை வயதானவர்! அவருக்கு என் மூலம் ஒரு நிம்மதி கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்! தவிரவும் எனக்கு நிறையத் தமிழ்ப்பரிச்சயம் இருந்ததில்லையா? அதனால் தமிழ் பூமியோடு என் வாழ்க்கையை  இணைத்துக்கொள்ள நினைத்தேன்!” 

“ஆமாம் இளவரசி! தங்களது தந்தையின் கஷ்டமான வாழ்க்கையில், பல ஆண்டுகள் தென்பாண்டிச் சீமையில் உங்கள் குடும்பமே மறைந்து வாழவேண்டிவந்தது. அப்போது தங்களுக்குப் பிடித்துக்கொண்டது இந்தத் தமிழ்க் காதல்! ஆர்வத்தோடு அதைக் கற்று உணர்ந்து, சுவிதை எழுதும் அளவுக்குத் திறன் பெற்றீர்கள்! தஞ்சாவூர் ராணி ஆனால், தமிழ் கவிதையிலும், பாட்டிலுமே ஈடுபட்டு இன்பமாகக் கழிக்கலாம் என்று நினைத்தீர்கள்?” 

“அதனால்தான் மதனா! தஞ்சாவூர் மன்னரை நான் மணக்கத் துணிந்தது! அதன்மூலம் இரண்டு பலன்களை அடைய விரும்பினேன்! ஒன்று, என் தந்தையை முழு மலையாள பூமிக்கும் அரசராக்குவது! இரண்டாவது-என் தமிழ்ச்சுவையில் நான் வாழ்நாள் முழுவதும் இன்பம் காண்பது!” 

“இளவரசி! இப்போது இந்த இரண்டையுமா புறக்கணிக்கத் துணிந்தீர்கள்?”

மதனா கேட்டக் கேள்வி, துடித்துக் கொண்டு ஒழு அசுர உருவம்போல் திருமங்கை முன்னில் நின்றது.

“அப்பாவை நினையுங்கள் இளவரசி! தள்ளாத காலத்தில் இருக்கிறார். அவர் மனம் நோகக்கூடாது! தீர்க்க ஆலோசித்து முடிவு எடுங்கள்!” 

மதனா ஒரு நல்ல தோழிபோல் உபதேசம் செய்தாள். 

“அப்பாவுக்கு ஆசையாக உறுதிமொழி கொடுத்தீர்கள்! நீங்கள் பூரணமாக ஒத்துக்கொண்டதன் பேரில்தான் அவர் இந்தத் திருமணத்தை உடனே நடத்த முன்வந்தார். ஆனால், பல காரணங்களுக்காக அதை ரகசியமாக நடத்தத் தீர்மானித் தார். தங்களை முன்னாடியே தஞ்சாவூருக்கு அனுப்பிவிட்டு, தாங்கள் போய்ச் சேர்ந்த விவரம் தெரிந்ததும், அவர் புறப் பட்டு வருவதாக ஏற்பாடு செய்து உள்ளார்! தன் ஒரே மகளின் திருமணத்தைப் பார்க்க அவர் எவ்வளவு ஆசை யோடு இருப்பார்ட அதுவும் அதன்மூலம், தனக்கும், தன் குடும்பத்துக்கும், தன் ராஜ்ஜியத்துக்கும். நன்மையும் அபிவிருந்தியும் ஏற்படப் போவது என்று தெரிவதால் எவ்வளவு ஆர்வத்தோடு இருப்பார்!” 

மதனா சின்னவள்தான். 

எனினும் னும் அவளது அறிவு. கூர்மைக்காகவே அவளை திருமங்கையின் அத்தியந்த தோழியாகச் சேர்த்து வைத்திருந்தார் கொல்லம் அரசர் ஜனார்த்தனவர்மா 

திருமங்கையின் கண்கள் எங்கேயோ பறந்து போயினர் ஆலோசனையில் இருக்கிறாள் என்று நன்கு தெரிந்தது. கனமான நிசப்தம் அங்கே சூழ்ந்தது. 

மதனா இதற்குமேல் பேசவேண்டாம் என்று நினைத்துவிட்டாள். 

அந்தச் சமயத்தில் திருமங்கையைத் தனியாக விடுவது நல்லது என்று அவளுக்குத் தோன்றவே.

அங்கிருந்து வெளிவாசலுக்கு வந்தாள். 

பளிங்குக். கற்களால் பளபளக்க வைத்து கட்டிய மாளிகை அது! 

ஒரு சின்ன நகைக் கொத்து போல் சுய ஒளியாகவே அது இருந்தது. 

வாயில் உள்ள தாழ்வாரத்தில் நின்று வெளியே பார்க்கும்போது, 

ஆட்கள் ஒவ்வொருத்தராக அந்த மாளிகை வாயிலுக்கு வந்து சேருவது தெரிந்தது. 

ஏதோ சந்தேகம் தோன்ற, படிகளில் இறங்கிப்போய். தன் கண்ணில் பட்டவரை நோக்சி, 

“யாரையா நீ” என்று கேட்டாள். 

“அம்மா” என்று விநயமாகச் சொல்வி அவன் உள்ளே வந்தான். 

பிறகு அக்கம் பக்கம் பார்த்து. தனிந்த குரலில், “வீரபாளையம் ஆளுங்க பாதுகாப்புக்காக அய்யா அனுப்பியிருக்கிறார்!” என்று கூறினான். 

“ஏன்? இதுவரை இல்லாத பாதுகாப்பு இப்போ ஏன்?” என்றாள், மதனா. 

“நாளைக்கு ஊருக்குப் புறப்படணுமாமே!” என்றான், காவல்காரன். 

புறப்படலுக்கு அந்தப் பாதுகாப்பு தேவை என்றாலும்,

அந்த நேரத்தில் அந்தச் சூழ்நிலையில் அந்த ஆட்கள் வந்தது அவளுக்கு ஏனோ பிடிக்கவில்லை. 

அதுவும், வீரபாளையக்காரர் தனது எஜமானியிட அப்படி தர்க்கம் செய்துவிட்டுப் போன பிறகு. 

“இந்தாருங்கள். வீரரே! உங்கள் தலைவர் யார்?” என்று பாதி அதட்டலுடன் கேட்டாள். 

“பராக்கிரம பூபதி அய்யாவுங்க! பின்னாடி அவர் வந்துக்கிட்டு இருக்கிறார்!” 

“வரட்டும்!” என்று சொல்லி மனதில் சிறிது கறுவிக் கொண்டு, மதனா வாசலிலேயே நின்றாள். 

வீரபாளையக்காரரின் அந்தக்காரியம் அவளுக்குப் பிடிக்கவில்லை. 

உள்ளே திருமங்கைக்குத் தெரிந்தால், அவள் அதி வருத்தப்படுவாள் என்று வாசலிலேயே காத்திருந்தாள். 

சற்று நாழிகை பொறுத்துதான் பராக்கிரமபூபதி, எந்த வித விமரிசையும் காட்டாமல் சாதாரண மனிதர்போல நடந்து வந்தார். 

வாயில் முற்றத்தில் ஏறியதுதான் தாமதம். 

“இந்தாருங்கள் பூபதியாரே!” என்றாள், மதனா. அவர் வினயத்தோடு வர, “உடனே உங்கள் ஆட்களை அழைத்துப் போங்கள்!” என்று கூறினாள். 

”’ஏன் அம்மா?” என்று தாழ்மையாக அவர் கேட்டார். 

“பாதுகாப்புக்கு வந்திருக்கிறீர்களா? சிறைப்படுத்த வந்திருக்கிறீர்களா?” என்று மதனா கொதித்துக் கொண்டு கேட்டாள். 

பூபதியின் கண்கள் மாறின!

“இல்லை அம்மணி! பாளைய ராஜா அனுப்பி வைத்தார்! பாதுகாப்பு கொடுக்கும்படி! அதற்காக வந்திருக்கிறோம்!” என்றார், அவர் . 

“பாதுகாப்பு இப்போது தேவையில்லை. நாளை புறப்படும்போது வந்தால் போதுமானது” என்று அவள் சொல்ல, 

அதைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது.

மதனா விட்டுக்கொடுக்காமல் கோபமாகவே பேசினாள். 

“சரி! நான் அய்யாவிடம் கேட்டுவருகிறேன்!” என்று அவர் கிளம்பினார்.

மதனா படபடக்கும் மனதுடன் உள்ளே போனாள். அங்கே கூடத்தில் அந்தக் காட்சியைப் பார்த்ததும், திடுக்கிட்டு –

“இளவரசி! இளவரசி” என்று கத்திக்கொண்டு ஓடினாள்.

அத்தியாயம்-28 

உள்ளே மதனா கண்டகாட்சி குடலைக் கலைப்பதாக இருந்தது. 

திருமங்கை தரித்திருக்கும் நகை ஒன்றில் சின்னதாக பதக்கம் ஒன்று உண்டு! 

அது கெட்டியான தங்கம்போல கனமாக இருக்கும். திருகினால் எடுத்துவிடலாம். 

அதற்குள் சக்தி வாய்ந்த விஷப்பொடி இருந்தது. ஆபத்து வேளையில் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டி. இந்த விஷப்பொடி வைக்கப்பட்டிருந்தது. 

கற்புக்குப் பங்கமோ, சித்ரவதையோ, அன்னியர் சிறையோ இவைகளில் ஏதாவது ஒன்று நேர்ந்தால், பொடியை உபயோகித்து மாய்த்துக் கொள்ளலாம்! இது. ராஜ குடும்பப் பழக்கம். 

திருமங்கை, தனது பதக்கத்திலிருந்து, அந்தப் பொடியைத் தன் கையில் அவசரமாகச் சிந்திக் கொண்டிருந்தாள். 

அதைத்தான் மதனா கண்டுவிட்டாள். 

உடனே உள்ளே தாவினாள். இமைக்கும் நேரத்தில், திருமங்கையை அடைந்து, அவளது உள்ளங்கையைத் தட்டி விட்டாள். 

பொடி எங்கணும் சிதறியது. 

“இது என்ன பைத்தியக்காரத்தனம், அம்மா! ஏன் இப்படி?” என்று சொல்லியவாறே, தனது முந்தானையை இழுத்து, மங்கையின் உள்ளங்கைகளை விடுவிடென்று துடைத்தாள் 

சில கணங்களுக்குள் இது நடந்துவிட்டது. 

மங்கை படபடவென்று கண்களைக் கொட்டினாள். மதனாவைப் பார்த்தாள். 

அழுகையும் விக்கலுமாக வந்தது. மஞ்சத்தின் கைப் பிடியில் முகத்தை வைத்து விசித்து குலுங்க ஆரம்பித்தாள். இதற்குள், அவள் எழுதிவைத்திருந்த ஓலையை மதனா படித்தாள். 

“எனது பிரியமுள்ள மதனா, நீ பேசியதைக் கேட்டதிலிருந்து என் மனம் தத்தளித்துவிட்டது. எனது அருமைத் தந்தைக்குத் துரோகம் செய்ய எனக்கு விருப்பமில்லை. அதே நேரம். அந்த தஞ்சைக்காரரை மணக்கவும் மனம் இல்லை. அதனால் என்னையே நான் முடித்துக்கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறேன்! 

எனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய். நமது மாளிகை பின்னாலிருக்கும் அம்மனுக்குப் பூசை போடு.”

படித்ததும் மதனாவிடமிருந்து பெருமூச்சு வந்தது. ஓலையை எடுத்து தன் இடுப்புப் பையில் சொறுகினாள். 

திருமங்கையின் அருகில் அமர்ந்து அவளுக்கு விசிறத் தொடங்கினாள், 

வெகுநேரம் திருமங்கை விசித்துக்கொண்டிருந்தாள். பிறகு ஆசுவாசமாகி மெல்லத் தலைதூக்கினாள்.

முகத்தைத் துடைத்துக் கொண்டாள், 

கண்கள் புதிய ஒளியோடு விரிந்தன. 

“இளவரசி!” என்று கனிவுடன் அழைத்தாள். மதனா. ”இதென்ன தவறான காரியம்! தாங்கள் இப்படிச் செய்யலாமா?- நான் தங்கள் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதி என்னாவது? தங்களுக்கு மனதில் ஏதாவது தோன்றி இருந்தால் அதை அதை என்னிடம் சொல்ல வேண்டாமா?” என்று நயந்து கூறினாள், அவள். 

“மதனா!” என்று கையைப் பிடித்தாள், மங்கை! “என்னை மன்னித்து விடு என் மனம் பெரிதும் குழம்பி விட்டது! என் தந்தைக்குத் துரோகம் செய்கிறேனோ என்று நினைத்தேன்” என்று சொல்ல, 

குறுக்கிட்டுப் பேசினாள், மதனா, 

“தங்கள் உயிரை எடுத்துக் கொண்டால்தான் துரோகம்! வேறு எதுவும் துரோகம் ஆகாது! தாங்கள் மட்டும் இசைசந்திராவிட்டால் தங்களை இப்படி அனுப்பியிருப்பாரா?” என்று கேட்டாள் அவள். 

“அதுதான் எனக்குப் பெரிய மனக்கவலையை கொடுத்துவிட்டது. மதனா. அப்போதிருந்த மனநிலையில் வாக்குக் கொடுத்துவிட்டேன். இப்போது என் மனம் ஏன் கொடுத்தோம் என்று சொல்கிறது. எனக்கு இந்தத் தஞ்சாவூர் சம்மந்தம் பிடிக்கவே இல்லை! ஓவியத்தை வேறு யார்த்து விட்டேனா! மனம் கசக்கிறது” என்றாள், மங்கை. 

“இவ்வளவுதானா? என்று கேட்டாள்; மதனா அவள் கண்கள் விசேஷமாக, மங்கையைக் கவனித்தன. 

திருமங்கை பேசவில்லை. 

மதனா “உம்?” என்று மீண்டும் கேள்வியாக இருந்தாள். 

அந்த “உம்” பழைய கேள்வி முழுதும் தொற்றி நின்றது. 

 நீண்ட பெருமூச்சு ஒனறு மங்கையின் நெஞ்சத்திலிருந்து அவிழ்ந்தது “மதனா!” என்றாள் மிருதுவாகவும் இனிமையாகவும் அதை உச்சரித்தாள். 

“என்ன?”. 

“நீ ஏன் அப்படிக் கேட்கிறாய்?”

“மனதில் உள்ளதை தெரிந்துகொள்ளத்தான்!”

“இருக்கிறதா?” 

“எனக்கு என்ன தெரியும்?” 

“உனக்கு என்ன தோன்றுகிறது?” 

மதனா புன்னகை ஒன்றை அரும்ப வைத்தாள். அவள் கண்கள் மிருதுவாகின. அவளுக்கு நெஞ்சம் குழைந்து விட்டது. 

“புதிது புகுந்து, பழையதைத் தள்ளிவிட்டது போல் தோன்றுகிறது”. 

சட்டென்று மங்கையின் முகம் மலர, உணர்ச்சி தாளாமல் “மதனா!” -என்று வீசி அழைத்து, அவளைக் கட்டிக்கொண்டாள். 

“அதுதான் மதனா! அதுதான்! என்னை அறியாமல் என் உள்ளத்தில் ஏதோ ஒன்று வளர்ந்து வந்திருக்கிறது!”

”உங்களுக்குத் தெரியாதா?” 

‘”தெரியாது, மதனா! தானாக வளர்ந்திருக்கிறது. இப்போது கணத்துக்குக் கணம் கண் முன்னாலேயே வளர்கிறது!” 

மீண்டும் ஒரு பெருமூச்சு வந்து, சர்ப்பமாக நெளிந்தது.

“சரி, இளவரசி…” 

“மதனா… இளவரசி என்கிற வார்த்தையை மற என்று முன்பே சொல்லிவிட்டேன். இன்னும் நாம் தலை மறைவாகத்தான் இருக்கிறோம்……. நமது உண்மை அடையாளத்தை வெளியில் காட்டவில்லை!” என்றாள், மங்கை 

”நல்லது! எஜமானி! சரிதானா?”

“சரி” 

“எஜமானி! வழிப் பிரயாணத்திற்குப் பிறகு அவரை வேறு எங்கேயாவது சந்தித்தீர்களா?” என்றாள், மதனா.

”யாரை?” 

“என்னிடமே புதிரா?” 

“புதிர் இல்லை! உனக்கு ‘யார்’ என்று தோன்றியது என்பதை அறியத்தான்!!” 

“அந்தத் தென்காசி மனிதர்தானே!” 

மறுமொழி இல்லை இளவரசியிடம்! 

“அவர்தானே!” கண்கள் மட்டும் மேலெழுந்து பார்த்து, சிரிப்பதை மதனா புரிந்து கொண்டாள். 

“அவரை திரும்பவும் சந்தித்தீர்களா?” என்று மதனா கேட்க, 

“ஆமாம். அதுதான் என் மனதை முழுதுமாசுக் கலைந்துவிட்டது” 

“ஓ! எங்கே எப்போது பார்த்தீர்கள்?” 

மதனா இந்தக் கேள்வியைக் கேட்டதும், வீரபாளையக்காரர் வீடு போய் வந்ததை எல்லாம் விவரித்துக் கூறினாள். திருமங்கை. 

இரவுக்குள் மாளிகையை சுற்றி பலத்த காவல் விழுந்து விட்டது. 

யாத்திரியர்கள் போல் மாளிகை வாசலிலும் ஒரங்களிலும் நின்றுவிட்டார்கள்.

ஒரு நாழிகை போனபின், வீரபாளையக்காரர் மிடுக்குடன் வந்தார்.

“இளவரசி எங்கே” என்று மதனாவிடம் கேட்டனர்.

“உள்ளே சயனித்திருக்கிறார்!” என்றாள். மதனா.

”சீக்கிரம் எழுப்புங்கள்! உடனே புறப்பட வேண்டும்!” என்று கூறினார். அவர்.

மதனா தனது வில்புருவத்தைத் தூக்கி அவரைப் பார்த்தாள். 

அவரது தோரணை மொழி அவளுக்குப் பிடிக்கவில்லை. 

அவரது அவசரத்தை மதிக்காதவள்போல மெதுவாக நடந்து உள்ளே போனாள். 

பிறகு நிதானமாகத் திரும்பி வந்து, “அரசிக்கு உடம்பு சரியில்லை. இன்று புறப்படவேண்டாம் என்கிறார்கள்”. 

வீரபாளையக்காரர் முகம் சிணுங்கியது. “அய்யோ! இன்றுதான் சரியான தருணம்! நாளை கோட்டைக் கதவை மூடப் போகிறார்கள். பிறகு வெளியில் போவது கடினம்!” எனறார். 

திரும்பவும் இளவரசியிடம் போய் வந்தாள், மதனா.

“இளவரசியின் உடல் நன்றாகக் காய்கிறது. இன்று நிச்சயம் போகமுடியாது” என்றாள். 

வீரபாளையக்காரர் முகம் மேலும் சிவந்தது. 

“இன்று எப்படியாவது போகவேண்டும். கோட்டைக்கு வெளியே வேறு ஏதாவது ஊரில் போய்த் தங்கிக் கொள்ளலாம்” என்று கூறினார், அவர். 

மதனர் மறுத்தாள். இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. முடிவில் வீரபாளையக்காரருக்குக் கோபம் அதிகரித்தது. 

“அப்படியே! இங்கேயே இருந்துகொள்ளுங்கள்! தூன் கொல்லம் அரசருக்கு எழுதிவிடுகிறேன். அவரது சூழ்ச்சி என்ன என்பதை இங்கே மதுரை நாயக்கருக்கும். தக்க ஆள் மூலம் சொல்லி அனுப்பிவிடுகிறேன். இது கேட்டால், நாயக்கர் என்ன செய்வார் தெரியுமா? உங்கள் இளவரசியை அப்படியே கழுவேற்றிவிடுவார்!” என்று கூறி சினமாக வெளியே போனார். 

அடுத்த ஒரு நாழிகையில், அவரால் அத்தனை பணிப் பெண்களை எப்படி அழைத்துவர முடிந்தது என்று தெரியாது. 

திமுதிமு என்று அவர்கள் உள்ளே புகுந்து திருமங்கையையும், மதனாவையும் பிடித்துக் கொண்டார்கள். மதனாவைத் தனியாக அழைத்துப் போனார்கள். 

பிறகு அந்த மாளிகைக்குள் சுறுசுறுப்பாக நடவடிக்கைகள் நடந்தன. 

மதனா திகைத்துப் போய் மாடி அறையிலேயே அமர்ந்திருந்தாள், 

அவளது அறை வாயிலில் காவல் இருந்தது. 

அந்தப் பணிப்பெண்கள் பேசிக்கொண்டதில் ‘மருந்து மாயம்’ என்ற வார்த்தை எல்லாம் அடிபட்டது. 

என்ன செய்யப் போகிறார்களோ, என்று அவள் கவலைகொண்டிருந்தான். 

இரண்டு நாழிகைகளுக்குப் பிறகு, வீட்டுக்குள் ஒரு நிசப்தம் தோன்ற- 

வெளியேவந்து எட்டிப் பார்த்தாள். யாருமில்லை!

அவசரமாக மாடிப் படி இறங்கி கீழே வந்ததும், வாயிலில் ஏதோ நடப்பது தெரிந்தது. 

மெல்ல அடி வைத்து வாசல் முகம் வந்து எட்டிப் பார்த்தாள், 

ஒரு மூடு பல்லக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தது. அதற்கு முன்னும் பின்னும் வேலையாட்கள் நின்று கொண்டிருந்தார்கள். 

திடுக்கிட்டாள். மதனா. 

இளவரசியை ஏற்றிவிட்டார்களா? 

பல்லக்கு புறப்பட்டது. 

பல்லக்கின் திரையை உற்றுப் பார்த்தால் அவள். அவள் கை தானாக எழ, ‘போய் வாருங்கள்’ என்பது போல கையைக் காட்டினாள். 

கண்களில் நீர் திரண்டு வந்தது. 

அத்தியாயம்-29 

பாமரர் வேடம் தாங்கி வீரபாளையக்காரரின் ஆ கள். திருமங்கையின் மாளிகையைச் சுற்றி இருந்தார்கள். இந்தச் செய்தி உள்ளே போனதிலிருந்து திருமங்கைக்கு யோசனை ஏற்பட்டது. 

அவளை விடாப்பிடியாக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல இந்த ஏற்பாடோ என்று நினைத்தாள். 

அல்லது அவளைப் பயமுறுத்துவதற்காக இந்த வேலைகள் நடக்கின்றனவோ! 

அவர்கள் தலைவனைக் கூப்பிட்டு விசாரி! என்றாள்.

மதனா வெளியே போய் கைட்டி தலைவரைக் கண்டு பிடித்து விசாரித்துவிட்டு வந்தாள். 

வேறு எதுவும் தெரியாது என்றார். 

அந்த மாளிகையைக் காவல் காக்க வேண்டும். தவிர வேறு எதுவும் தெரியாது என்றார்.

“ஓகோ! தந்திரம் செய்கிறார்களா! மதனா நீ என்ன செய்யச் சொல்கிறாய்?” என்றாள் திருமங்கை 

“அம்மா! இப்போது இருக்கும் நிலையில் இவர்களை நமமால் எதுவும் செய்ய முடியாது. மாளிகையையே சூழந்து இருக்கிறார்கள். வெளியே நம்மால் போக முடியாது” என்றாள். 

“அப்படியானால்…” என்று சொல்லி திருமங்கை ஆலோசித்தாள். 

மதனா தம் கண்களை மேலே உயர்த்தி யோசனையில் ஆழ்ந்தாள். 

திடீரென்று ஏதோ தோன்றியவள் போல், 

“ஏன் மதனா! இந்த நேரத்தில் நமக்கு யாராவது உதவி செய்ய வருவார்களா?” என்றாள். 

“யார் வருவார்கள்? நமக்கு இங்கே யாரைத் தெரியும், அதிவீரனைத் தவிர!” என்றாள். 

“ஆ! அவருக்கே ரகசியமாகத் தூது விடலாமா?” என்றாள் திருமங்கை.. 

“முதலில் அதிவீரன் இருக்கும் இடம் தெரிய வேண்டும்! அது லேசில் நடக்கக்கூடிய காரியம் அல்ல!” என்றாள் மதனா. 

“ஏன்?” 

“அவர் என்ன காரணத்துக்கோ மாறு வேடம் பூண்டு தான் மதுரைக்கு வந்திருக்கிறார். எதேச்சையாய் நாம் கண்டு பிடித்தோமே அன்றி, இனி அவரைத் தேடுவது அரிது.”

“ஓ மறைந்திருப்பாரோ” என்றாள் மங்கை. 

“ஆமாம் அதுவும் அவரை எதிரிகள் பிடித்துச் சிறை செய்யச் சித்தமாக இருக்கிறார்கள் என்று தெரியும்போது, இன்னும் அதிக கவனமாகவே இருப்பார். தவிர இன்னொரு சிக்கல் அம்மா!”

“என்ன?” 

“இந்த மாளிகையை விட்டு யாரும் சுலபமாக வெளியில் போய்விடமுடியாது!”

“ஏன்? அவ்வளவு பாதுகாப்பு உள்ளதோ?”

“ஆமாம்!” 

“அப்படியானால்…”

“இரு இளவரசி… யோசிப்போம்”. 

“இந்தா மதனா, இளவரசி என்ற வார்த்தையை நிறுத்து! இங்கே யாருக்காவது காதில் விழப்போகிறது.” நிறுத்திவிட்டேன் அம்மா! 

இருவரும் பிறகு யோசனையில் இருந்தார்கள். திருமங்கை முதலில் பேசினாள். ஏன் மதனா, மாறு வேடம் பூண்டு நழுவி விடுவோமா?” என்றாள். 

“நல்ல யோசனைதான்! ஆனால், இப்போது யார் போனாலும் சோதிக்கிறார்கள்!” 

“ஓ! அப்போ அது உதவாது.”

திரும்பவும் யோசனை. 

திருமங்கை மீண்டும் பேசினாள். “அதிவீரருக்குச் செய்தி அனுப்பித்தால் போதும். அவர் காப்பாற்றிவிடுவார். இல்லையா?”

மதனா பளிச்சென்று திரும்பினாள். 

“அதைத்தான அம்மா நானும் நினைத்து கொண்டிருக்கிறேன்.” 

“ஓ!… அதுக்கு வழி என்ன மதனா?”

“ஒரு வழி! அது சுற்று வழி!” 

”சொல்லு!” 

“இங்கே தயிர்க்காரி மட்டும்தான் இனி வருவதற்கு இருக்கிறது!” 

“சரி!” 

“அவளிடம் ஓலை எழுதிக் கொடுக்க வேண்டும்.”

“கொடுத்து…” 

“அதை அதிவீரனிடம் அவளைக் கொடுக்கச் சொல்ல வேண்டும்.” 

‘”அவள் எப்படி செய்வாள்?” 

“இந்தத் தயிர்க்காரி சற்று சாமர்த்தியக்காரியாக எனக்குத் தோன்றினாள். அதனால் கொடுத்துவிடுவோம்.”

“வேற யாரும் இல்லையா?” 

“யாரும் இல்லை! அதனால்தான்…” 

திருமங்கை யோசித்தாள். “சரி! சரி! சீக்கிரம் ஏற்பாடு பண்ணு” 

“நீங்கள் லிகிதம் எழுதுங்கள், அம்மா!” 

திருமங்கை எழுத ஆரம்பித்தாள். 

மகாராஜ ராஜ தென்பாண்டியச் சக்கரவர்த்தி திரு. அதிவீரனுக்கு, 

கொல்லம் ராஜ்யத்தைச் சேர்ந்த திருமங்கை என்பவள் எழுதிக்கொண்டது. 

இப்பவும் எங்கள் விருப்பத்திற்கு எதிராக எங்களைத் தஞ்சாவூருக்குக் கொண்டுபோய் கொண்டிருக்கிறார். எங்களுக்கு அங்கே பலவந்த திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. தயவுசெய்து தாங்கள் இந்த விஷயத்தில் வலிய எங்களைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொள் கிறேன். நமஸ்காரம் பண்ணி விண்ணப்பம் செய்வது, திருமங்கை.

“இது சரிதானா?” என்று மதனாவிடம் காண்பிக்க,

“ரொம்ப, சரி” என்று கூறினாள். மதனா. 

பிறகு, “நான் இதைக் கவனித்துக்கொள்கிறேன்! நீங்கள் கவலைப்பட வேண்டாம்! என்று கூறினாள், அவள். 

பாளையக்காரர். மறுநாள் காலை மாளிகைக்குள் வந்தார், வீர 

திருமங்கைக்கு வணக்கம் தெரிவித்து, “நீங்க உடனே புறப்படும்படி உத்தரவாயிருக்கிறது” என்றார். 

திருமங்கை அவரை அலட்சியமாகப் பார்த்தாள்.

“யார் உத்தரவிட்டிருக்கிறார்கள்?” என்று கேட்டாள், அழுத்தத்துடன். 

“ஏன்? தங்கள் தந்தை கொல்லம் அரசர்தான்!”

“என்ன எழுதியிருக்கிறார்?” 

“தாங்கள் உடனே தஞ்சாவூருக்குச் செல்லவேண்டும் என்று கூறியிருக்கிறார். அவரும் ஊரிலிருந்து புறப்பட்டு விட்டார்! 

“அப்படியா! எங்கே அவரது லிகிதம்?” என்றாள், மங்கை! 

“ஆ.. அதைக் கொண்டுவர மறந்துவிட்டேன்!” கொண்டு வந்திருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்! நான் பார்க்க வேண்டாமா?”

“மறந்துவிட்டேன், இளவரசி! தாங்கள் என் சொலலை நம்பலாம்!”  

“சரி! இது என்ன திடுதிப்பென்று புறப்பாடு! நான் இன்னும் சித்தமாகவில்லையே!”

கோட்டையை அடைக்கப்போகிறார்கள். நான்தான் சொன்னேனே!. அதனால்தான் தாங்கள் கோட்டையை விட்டு வெளியே போய்விட்டால் போதும். அங்கே வைகைக்கரையில் எதாவது சத்திரத்தில் இரண்டு நாட்கள் சிரமப்பரிகாரம் எடுத்துக்கொண்டு கிளம்பலாம்!” ஒரு பெருமூச்சுவிட்டாள், திருமங்கை. 

“வீரபாளையத்தாரே! இப்போது நான் புறப்பட மறுத்தால்….” 

“அப்படித் தாங்கள் சொல்லலாமா!” 

“தங்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும்படி தங்கள் தந்தையார் கட்டளை!” 

“என் தந்தையார் ஒரு போதும் அப்படிக் கட்டளை இடமாட்டார்!” 

“ஆபத்துக் காலம் ஆயிற்றே! யாரேனும் அப்படிக் கட்டளை இட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!” 

அதனால் இழுத்துச் செல்வீராக்கும்! 

‘ஒகோர் அதற்காகத்தான் இத்தனை பேரையும் இங்கே நேற்று முதலே நிறுத்தி இருக்கிறீர்களாக்கும்!!! 

சத்தமில்லாமல் சிரித்தார், வீரபாளையக்காரர்.

“இந்தா மதனா!” 

மதனா ஓடிவந்தாள். 

“நாம் புறப்படுகிறோம்!” 

அப்படியும் நான்கு நாழிகை கழித்தே புறப்பட்டார்கள்.

அந்தப் பாதுகாப்பு மனிதர்கள் எங்கே மறைந்தார்கள்! எப்படித் தனித்தனியாகப் போனார்கள்! என்பது தெரியாது. 

கோட்டை அருகே போகும்போது அவளது பல்லக்குகள் இரண்டுதான் தெரிந்தன. வாசலில் அலிகள் வந்து மூடுதுணிகளைத் திறந்து உள்ளே பார்த்தார்கள். விசாரித்தார்கள். 

கோட்டைக்கு வெளியே போனதும், வைகைச் சாலையில் பல்லக்குகள் சென்றன. வைகைக்கரை அடைந்த பிறகு ஓரமாக உள்ள அழகர் சத்திரத்தில் அவர்கள் தங்கினார்கள். 

ஒரே ஒரு நாள் தங்கி இருப்பார்கள். 

“மீண்டும் புறப்படலாம்!” என்று கூறினார், வீர பாளையக்காரர். 

“ஏன் இன்னும் ஒரு நாள் இருக்கலாம்!” என்றாள், இளவரசி, 

“தாங்கமுடியாது! ஆபத்து இருக்கிறது!” 

“ஏன்? அப்படி என்ன ஆபத்து?” 

“பகைவர் படை கோட்டை நோக்கி வருவதாகத் தகவல்!” 

“மதனா! என்ன செய்ய?” 

“ஐயா” என்றாள், மதனா! “வைகையைத் தாண்டத் தற்சமயம் உத்தேசம் இல்லை! எனவே மேற்கே சற்று தூரத்தில் போய் அங்கே எங்கேயாவது தங்க இறங்கலாம்!” என்றாள். 

பாளையக்காரர் கண் சிவந்தது.

“அங்கே இடம் தேட வேண்டுமே” 

“நாம் என்ன படையா கொண்டுவந்திருக்கிறோம்! இடம் தாராளமாகப் பார்க்கலாம்”. 

பாளையக்காரர் என்ன சொல்லியும் இணங்கவில்லை! 

கடைசியில் அவளும் ஒத்துப்போக நேர்ந்தது.

பல்லக்குகள் புறப்பட்டன. 

ஒரு நாழிகைப் பிரயாணம். மேற்கு நோக்கிப் பிரயாணம் செய்தனர். 

பிறகு ஒரு தோப்புச் சூழ்நிலையில் சற்று இளைப்பாறத் தங்கினர். 

திருமங்கைக்குக் கவலை! 

எதாவது உதவ எங்கிருந்தாவது கிடைக்குமா?

எட்டத்தில் பார்த்தாள். காவல்காரர்கள் ஏதோ பாமர ஜனம் போல் நின்றார்கள். 

மரத்தடியில் திருமங்கை நின்றாள். 

மதனா அருகில் வர, ‘என்ன, மதனா எதாவது நடக்குமா?” என்றாள், ஆதங்கமுடன். 

“அதோ பாருங்கள்” என்றாள். 

திரும்பிப் பார்த்தாள், மங்கை, 

அத்தியாயம்-30 

வைகைக் கரை ஓரமாகத் தண்டு இறங்கி இருக்கும் போது, சேடி மதனாவின் கண்கள் சற்று எட்டத்தில் பார்த்தன. 

அங்கே தூசித்தோகை ஒன்று எழுந்து ஆகாயத்தில் விரிய. 

யாரோ வருகிறார்கள் எனபதை உணர்ந்து கொண்டாள். 

வீரபாளையக்காரர் ஆட்களும் பரபரப்பு தோன்றி அணிகள் அமைக்க முனைந்தார்கள்.

இளப்பாறியவர்களை எல்லாம் கூவி அழைத்து, ஒரே கலவரப்படுத்தினார்கள். 

ஒரு அதிகாரி இப்போது திருமங்கையை நோக்கி வந்தார். “இந்தாருங்கள்! வாருங்கள் இப்படி!” என்று அழைத்து, அவர்களை அரண்யப் பகுதிக்குள் கொண்டு போக ஆரம்பித்தார்.  

சற்று தூரம் சென்ற திருமங்கை, “இந்தாருங்கள்! இதற்குமேல் போவதற்கில்லை!” என்றாள் கடுமையாக. 

“இல்லை எஜமானி! கொஞ்சம் கண்காணாமல்” என்று அதிகாரி சொல்ல, 

“இந்தாரும் அதிகாரியே! இதற்குமேல் போக மாட்டேன்! எதாவது சொன்னீரானால் திரும்பப் பல்லக்கும் பக்கமே வந்துவிடுவோம்!” என்றாள். 

அதிகாரி திகைத்துக் கொண்டு பின்வாங்க, தூரத்துக் கும்பல் முழுவதும், குதிரை வீரர்கள் என்று தெரிந்து விட்டது. 

வீரபாளையக்காரரின் ஆட்கள் அனைவருமே சித்தமாகி விட்டார்கள். 

குதிரைகள் காற்றைச் சீறிக்கொண்டு, நுரை தள்ளி அங்கே வந்து நின்றன. 

அதன் தலைவன் உக்கிரமாகப் பார்த்தான்.

“எங்கே அந்தப் பெண்கள்?” என்றான்.

எட்டத்தில் மர ஓரம் நின்ற பாளையக்கார வீரன். 

“பெண்கள் யாரும் கிடையாது இங்கே!” என்றான்.

“அப்படியானால் பல்லக்கில் யார் வந்தார்கள்?”

“வெறும் பல்லக்குகள் அவை! வரும் வழியில் நோயாளிகளை ஏற்றிவருவதாக இருக்கிறோம்.” 

வந்த ஆசாமி உச்கிரம் குறையாது நின்றான்.

அவன் கண்களில் சூரியச் சுடர் தெறித்தது.

இங்கும் அங்கும் பார்வையைப் பதியவிட்டான்.

பிறகு அரணயம் பக்கம் அது திரும்பியது.

“அதோ! அதோ!” என்றான் மற்றவர்களைப் பார்த்து,

குபீர் என்று அத்தனை குதிரைகளும் கிளம்பின.

வனத்தை நோக்கி அவை செல்ல முயல, பாளையக்கார ஆட்கள் வாள் உறுவி அதைத் தடுத்தார்கள். அவ்வளவில் அங்கே ஒரு பூசல் எழுந்தது. 

“ஆ… விடாதே கொல்லு! வெட்டு!” என்று ஆவேச வார்த்தைகள் காற்றில் துண்டித்துவிட, 

அவற்றுக்குத் தாளம் இருப்பதுபோல் வாள் உரசல்கள் ‘டணார். டணார்’ என்று எழுந்தன. 

தூசித் தோகைகள் விரிந்து எழுந்தன. பூமி நடுங்கிக் கொண்டது. 

உலோகத்தோடு உலோகம் உராய பளிச்சிடும் மின்னல் சுடர்கள் தெறித்து ஓடின. 

அரை நாழிகை நேரம் நடந்த அற்ப யுத்தம் அது.

வந்த குதிரை வீரர்கள் பலரும் சிதறி ஓட,

வீரபாளையக்காரர்கள் வெற்றி முழக்கம் செய்தார்கள். 

அடுத்து அந்த அதிகாரி மீண்டும் ஓடிவந்து “வாருங்கள்! வாருங்கள்! உடனே புறப்படுவோம்!” என்று திருமங்கையிடம் வந்து கூறினார். 

திருமங்கை அங்கே நடந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆரம்பத்தில் வெகு, உற்சாகமாக இருந்தது. பின்னர் அது மழுங்கிவிட்டது.

நிச்சயம் அது அதிவீரனின் ஆட்கள் என்று நினைத்து இருந்தாள். 

அவளைத்தான் மீட்க வருகிறார்கள் வருகிறார்கள் என்று நினைப்புக் கொண்டிருந்தாள். 

வந்தவர்கள் உக்கிரமாகச் சண்டை போட்டனர், இருந்தாலும் போதிய போர்த்திறமை இல்லாமல் இருந்தார்கள்.

இப்போதுதான் பயிற்சி பெற்று களத்தில் இறக்கப் பட்டவர்கள் போலத் தோன்றினார்கள். 

அவர்கள் பாளையக்காரர்களின் எதிர்த்தாக்கு தானாமல் சீக்கிரமே தள்ளாடுவது தெரிந்தது. 

முடிவில் சிதறியடித்து ஓடினார்கள். 

திருமங்கைக்கு சோகமாக வந்தது. 

“வாருங்கள்!” என்றார் அதிகாரி மீண்டும். 

மங்கை தயங்கினாள். 

“இந்தாங்க! சீக்கிரம் வாருங்கள்!” என்று அதிகாரி கோபத்தைக் காட்டினார். 

‘சுள்’ என்று அது அடிவாரத்தில் எங்கேயோ போய்த் தைததது. 

அவரை நோக்கி ஒரு விழி விழித்தாள். 

“இந்தப் பார்வையைத் தயவுசெய்து என்னிடம் காட்டவேண்டாம்!  பல்லக்கு ஏறுங்கள்!” என்று அழுத்தமாகக் கூறினார் அதிகாரி. 

மங்கையின் கண்கள் கலக்கமாயின. மதனா அவளை இரக்கமுடன் கவனித்தாள். 

இருவரும் பல்லக்குகளை அடைந்தார்கள்.

பல்லக்குப் புறப்பட்டது. 

அதிவீரன் அந்த மாளிகையில் மேன் மாடத்தில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தான். 

தென்காசியை விட்டு வந்ததிலிருந்து ஏகமான விஷயங்கள் நடந்துவிட்டன.

உலகம் இப்போதுதான் அவருக்கு உண்மையில் தெரிந்தது. 

ஏட்டுச்சுவடிகளில் எத்தனை நாள் நிலைத்து இருந்து விட்டான. 

உண்மைதான்! அறிவு நிறைய வந்திருக்கிறது.

ஆனால், அறிவு மட்டும் இருந்து என்ன பிரயோசனம்!

வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்று தெரியாமல் போயிற்றே! 

வெளியே வந்து பார்த்தால் எத்தனை பயங்கர விஷயங்கள் நடக்கின்றன? 

எத்தனை சதித் திட்டங்கள், சூழ்ச்சிகள், துரோகங்கள்!

அத்தனையும் மனித வாழ்க்கையில் நடக்கும் என்று தெரிந்தும், எல்லாரும்  நல்லவர்கள்! என்ற மனப்பான்மையில் சும்மா இருந்துவிட்டோமே! 

ஏட்டுச் சுரைக்காய்க் கறிக்கு உதவாது என்பது நன்றாகத் தெரிந்துவிட்டதே! 

மதுரை வந்து பார்த்தால்தானே இங்குள்ள சூழ்ச்சிகளும் வஞ்சகங்களும் தெரிகின்றன.  

அடேயப்பா! ஒருத்தரை ஒருத்தர் கவிழ்ப்பதற்கு இப்படியா தந்திரங்கள் செய்வார்கள்?

இந்த வீரபாளையக்காரர் என்ன அக்கிரமாக்காரர்! நான் யார் என்பதைப் புரிந்து என்னை தம் வீட்டுக் கிடங்கில் கொண்டு போய் தள்ளிவிட்டார்? 

இந்த விஷயத்தை மட்டும் மதுரை நாயக்கரிடம் அவன் (அதிவீரன்) சொல்லிவிட்டால் வீரபாளையக்காரன் கதி என்னாவது? 

இருந்தும்… எதிரே தர்மசேனன் கவலையே குறியாக உட்கார்ந்திருக்க, 

அதிவீரனின் நினைவுகள் படர்ந்து சென்றன. 

கடைசியில் அவனை நோக்கித் திரும்பி, “நல்லது தர்மசேனா! இப்பொழுதாவது நாம் கண்ணை விழித்துப் பார்த்தோமே! இப்போது நினைத்தாலும் என் உடம்பு சிலிர்க்கிறது. அந்தத் திருமங்கை மட்டும் என்னை வீரபளையக்காரரின் கிடங்கில் இருந்து காப்பாற்றியிராவிட்டால் என் கதி என்னாகிறது!” 

“ஆம் ஐயா! நாமும் இந்த நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு மறு உபகாரம் செய்கிறோம்!” என்றான் தர்மசேனன். 

“வீரசேனன் அவர்களைப் போய்ப் பிடித்திருப்பானா?”

“பிடித்திருக்க வேண்டும்!” 

“எத்தனை பேர் அவனோடு சென்றிருக்கிறார்கள்?”

“பத்து பேர்” 

“போதுமா?” 

“அவ்வளவுதான் இங்கே திரட்ட முடிந்தது!” 

“போதும்! வீரசேனன் சமாளித்துவிடுவான்! எப்படியும் அந்தப் பெண்களை மீட்டுவிடுவான். ஆனால், கோட்டைக்குள் அவர்களைக் கொண்டுவர முடியாதே”

“அப்படி ஒரு நிலை வந்தால் நானே நாயக்கரிடம் சென்று கேட்டுக் கொள்வேன்!” 

“இங்கே ஏன் வந்தீர்கள்?” என்று அவர் கேட்டால்…”

சிரித்தான் அதிவீரன்! 

“உண்மையைச் சொல்லிவிடுவோம்! நானோ ரதி லீலை எழுதுகிறேன் என்று பெயர் நாலு இடத்தில் பரவி யாயிற்று! அதனால் அல்லிக்கொடி என்ற தாசியைத் தேடி மதுரை வந்தேன் என்பேன்!” 

“அவள் மீது அவ்வளவு அக்கறையா என்று நினைக்க மாட்டார்களா?” 

“பெண்களுக்கு அவள் ஒரு இலக்கணம் சொர்க்கத்தின் சுகம் அவளது கலவியில் பெறலாம்! என்று சொல்வேன்.” 

“தாங்கள் சாமர்த்தியக்காரர் ஆயிற்றே சுவாமி!”

அச்சமயம் வாசலின் கதவு திறக்க வீரசேனன் வருவது தெரிந்தது. 

”வா! வீரசேனா! வருக! வருக! எல்லாம் வெற்றி தானோ!” என்றான் அதிவீரன். 

வீரசேனன் குனிந்து கொண்டே வந்தான். 

அருகே வந்ததும் தலை நிமிராமல், 

“சுவாமி! ஏமாந்தேன்! தோல்வி அடைந்தேன்!” என்றான். 

அதிவீரனின் கண்கள் துள்ளின. “என்ன வீரசேனா?” 

“ஆமாம்! திருமங்கையை என்னால் மீட்க முடியவில்லை. நான் தோல்வி அடைந்தேன்!” என்று நடுக்கமுடன் கூறினான் அவன். 

அதிவீரனின் பார்வை கழல் ஆகியது. 

– தொடரும்…

– மன்மதப் பாண்டியன் (நாவல்), முதல் பதிப்பு: 1998, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *