அருகில் வந்த கடல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 15,544 
 
 

அவன் சுற்றுலாப் பயணங்களின் போதுதான் கண்ணெட்டும் தூரம்வரை விரிந்திருக்கும் பெரும் கடலைக் கண்டிருக்கிறான். ஆளற்ற கடற்கரையில் ஒருமுறை நண்பர்களோடு அலைகளில் புரண்டு திளைத்திருக்கிறான். அவன் வசிக்கும் சிறு நகரம் கடலிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தள்ளி உள்ளே ஒளிந்திருக்கிறது. அங்கு வாழ்பவர்களுக்கும் கடலுக்கும் இதுவரையிலும் எந்தத் தொடர்பும் இல்லை. விடுமுறை நாளான அன்று மாலையில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த பையன் ஆச்சரியத்தில் கூவினான். அச்சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டிலிருந்து ஓடிவந்த மற்றவர்களுக்கும் முதலில் என்னவென்று தெரிந்திருக்க வில்லை. தொலைக்காட்சியிலும் வானொலியிலும் முன்கூட்டிய எச்சரிக்கையோ அறிவிப்போ ஏதும் வெளியாகியிருக்கவில்லை.

அவனது அரைத் தூக்கத்தில் கூக்குரல்கள் மெதுவாகக் கேட்டன. எழுந்து பார்க்கையில் வீடு வெறிச்சோடியிருந்தது. சட்டையை அணிந்தவாறு வேகமாக வெளியே வந்தான். சூரியன் மஞ்சள் நிறம் பூசியிருந்தது. அவனுடைய மனைவியும் பையனும் தெருமுனையில் கூட்டத்தோடு நின்றிருந்தார்கள். தெரு நாய்கள் ஒன்றுகூடி ஓயாமல் குரைத்துக்கொண்டிருந்தன. அங்கு சென்று அவனும் அத்திசையில் பார்த்தான். வெகுதொலைவில் கானல் போல் நீல நிறத்தில் நீர் நிறைந்திருந்தது. அதிலிருந்து அலைகள் எழுந்து அசைவதும் தெரிந்தன. அவற்றின் பேரிரைச்சல் மெல்ல ஒலிப்பது போலிருந்தது. அடிவான் விளிம்புவரை கடலே காணப்பட்டது. அது அங்கேயே நிலைத்து நின்றிருப்பதாகத் தோன்றியது.

அவனுக்கும் பிறருக்கும் கடலைப் பார்ப்பதென்பது மகிழ்ச்சி தருவதாயிருந்தது. பட்டுத் துணிபோல் தெரிந்த நீலப்பரப்பு அற்புதமான காட்சியாக இருந்தது. சிறுவர்களுக்குக் கடலென்று அறிமுகப்படுத்தப்பட்டதும் “கடல்! கடல்!” எனத் தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தார்கள். கடலை நோக்கிச் சென்றது போக, அதுவே தேடி வருவதில் அனைவரும் பரவசத்தை அடைந்தார்கள். அருகிலேயே கடலிருந்தால் அதன் அழகை நாள்தோறும் இரசித்துக்கொண்டிருக்கலாம். மாலை வேளைகளில் கடற்கரைக்குச் சென்று காற்றாடலாம். சங்குகளையும் சிப்பிகளையும் பொறுக்கிப் பிள்ளைகள் ஈர மணலில் விளையாடும். கடல் மீன்கள் மலிவாகவும் எப்போதும் உண்ணக் கிடைப்பதாகவுமிருக்கும். ஏன், கப்பல்களிலும் படகுகளிலும் ஏறிப் பொழுதுபோக்காகப் பயணம் போகலாம். ஒரே மாதிரி ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை பல மாறுதல்களுக்கு உள்ளாகும்.

அவர்கள் கடலையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். வானம் மேகமூட்டத்துடன் சாம்பல் நிறமாக மாறியது. தூரத்தே அலைகள் வெண்ணிறமாகத் தெரிந்தன. அவனைப் பார்த்துவிட்டு மனைவி அருகில் வந்தாள். அவனுடைய பையன் வெற்றுடம்புடன் குதித்துக்கொண்டிருந்தான். “எவ்வளோ பெரிய கடல்!” என்றாள், வியப்பு இன்னும் அடங்காமல். அவன் தோள்களை உரசியபடி “எப்படி இவ்வள அருகே வந்திச்சிங்க?” என்று கேட்டாள். அவன் “எங்கியாவது புயல் உண்டாயிருக்கலாம்” என்றான். “பையனுக்குக் காலையிலிருந்து காய்ச்சல், படுத்திட்டிருடான்னா கேக்கமாட்டேன்றான்” என்றாள். பிறகு பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சென்றாள். “வீட்டுக்காரர் இப்போதான் வேலைக்குப் புறப்பட்டுப் போனார்” என்று பக்கத்து வீட்டுக்காரி சொல்வது கேட்டது. அவள் கரிய சிலையைப் போல் பளபளப்பாகச் செதுக்கிய உடலோடு இருப்பாள். தெருவில் ஆண்கள் எதிர்ப்பட்டால் தலை குனிந்து பதுமை போல நடந்துசெல்வாள். இங்கு குடிவந்த இவ்வளவு நீண்ட காலத்தில், சில சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அவளோடு பேசியிருக்கிறான். அவளும் ஓரிரு வார்த்தைகளில் பதிலளித்துவிட்டு நகர்ந்துவிடுவாள். அவள் கணவனும் யாருடனும் பேசுவதில்லை. முன் வழுக்கை பளிச்சென்று தெரியப் பல்வேறு வேளைகளில் சைக்கிளில் வேகமாக வேலைக்குப் போவதைப் பார்த்திருக்கிறான். வானின் ஒளி குறைந்துகொண்டிருந்தது. கீழே கடல் கரும் பச்சையாக நீண்டிருந்தது. அவன் திரும்பி அவர்களை நெருங்கிச் சென்றான். கடல் நீர் மிகுந்த உப்பாயிருக்கும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். “இப்பல்லாம் கடல் நீரைக் குடிநீரா சுலபமா மாத்திடலாம்” என்று கூறினான். அவன் மனைவி ஆச்சரியத்தோடு ஏறிட்டுப் பார்த்தாள். பக்கத்து வீட்டுப் பெண்ணின் கால்களை கறுப்பு பையன் ஓடி வந்து கட்டிக்கொண்டு “அம்மா, கடலுக்குப் போய்ப் பார்க்கலாம்மா” என்றான். அவள் புன்னகையுடன் பையனை அணைத்துத் தட்டிக் கொடுத்தாள்.

பின்னால் கடல் ஆழ்ந்த நீலத்தில் அமைதியுடன் தோன்றியது. அதன் நீராலான சுவர் தகர்க்க முடியாதது போல் நின்றிருந்தது. அது தீர்க்கமாக மெல்ல முன்னேறிக்கொண்டிருப்பதான பிரமையைக் கொடுத்தது. பறவைகள் கலவரமுற்றுச் சிறுபுள்ளிகளாக வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்தன. அந்தப் பக்கம்தான் மற்றொரு தொழில் நகரமிருக்கிறது. சிலர் மாடிகளில் ஏறி நின்று பார்த்துவிட்டுக் கடைசிவரை தண்ணீரே பரவியிருப்பதாகத் தெரிவித்தனர். பிள்ளைகள் தொடர்ந்த ஆரவாரத்திலிருந்தனர். சில சிறுவர்கள் குளிப்பதற்கு ஆயத்தமாகச் சட்டைகளைக் கழற்றிக் கைகளில் பிடித்துச் சுழற்றினர். பெரியவர்கள் உள்ளூரக் கவலையோடு அவர்களைக் கோபமாகத் திட்டினார்கள். பலரும் செல்போனை எடுத்துப் பிறருடன் பேச முயன்று தோற்றனர். அனைத்து இணைப்புகளும் பழுதாகி இருந்தன. வெளியுலகோடு தொடர்புகொள்ள இயலவில்லை. மின்சாரமும் காலையிலிருந்தே இருந்திருக்கவில்லை. தொலைக்காட்சிப் பெட்டிகளும் வானொலிகளும்கூடச் செயலிழந்து கிடப்பதாகத் தெரிவித்தனர். அவனும் உறவினர்களின் நிலையைத் தெரிந்துகொள்ளப் பலமுறை முயற்சியை மேற்கொண்டான். பிற பகுதிகளிலிருப்பவர்களோடு பேசவே முடியவில்லை. தனிமையின் தீவில் அகப்பட்டுக் கொண்டவர்களாக எண்ணி அனைவருக்குள்ளும் அச்சம் பெருகத் தொடங்கியது. அதைக் கூட்டுவதைப் போல் நாய்கள் தொடர்ந்து ஊளையிட்டுக்கொண்டிருந்தன.

சுற்றிலும் இருண்டு மழைபெய்யும் போலிருந்தது. கடல் கருமையடைந்து நெருங்கி வருவதுபோல் தோன்றியது. அலைகள் தென்னை உயரத்துக்கு எழுந்து தாழ்ந்துகொண்டிருந்தன. கடலின் ஓசை காதில் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பது போல்பட்டது. அனைவருக்குள்ளும் பயம் நிரம்பி அமைதியாக நின்றிருந்தார்கள். விளக்கேற்றும் வேளையில் பெண்கள் மெல்லக் கலைந்தனர். மெழுகுவர்த்திகளையும் அவசர விளக்குகளையும் தேடி ஏற்றி வேகமாக இரவு உணவைத் தயாரிப்பதில் ஈடுபட்டார்கள். ஆண்களும் நகரத் தொடங்கினார்கள். அங்கேயே ஓரிரு சிறுவர்கள் பிரிய மனமில்லாமல் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களை அவ்வப்போது வீடுகளிலிருந்து குரல்கள் அதட்டின. அவன் பையனை அழைத்துவந்து போர்த்திப் படுக்கவைத்துக் காய்ச்சலுக்கான மருந்தைப் புகட்டினான். அவன் மனைவி நெற்றியில் அழுத்தமாகத் தைலம் தடவிவிட்டாள். பையனுக்கு ஜுரம் கூடிக் கொண்டேயிருந்தது. ஜன்னி பிடித்தாற்போல் பிதற்றிக்கொண்டிருந்தான். “கடல், கடல் என்று உதடுகள் ஓயாமல் முணுமுணுத்தன. உடலிலிருந்து அனலடித்தது. பையன் அம்மாவின் கைகளை அழுத்தமாகப் பற்றியிருந்தான். திடீரென்று வெளியே கூக்குரல்கள் எழுந்தன. “கடல் வருது, கடல் கிட்ட வந்துடுச்சி!” என்று அலறினர். அவன் நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வெளியே ஓடிச்சென்றான்.

வெளியில் ஏற்கெனவே பலர் நின்றிருந்தார்கள். எப்போதும் மனிதருடனிருக்கும் தெரு நாய்கள் ஒன்றுகூட இல்லை. மழை இலேசாகத் தூறிக்கொண்டிருந்தது. சில நட்சத்திரங்களோடு நிலவின் ஒளி மங்கலாக வீசியது. கடல் நெருங்கிக்கொண்டிருப்பது நன்றாகப் புலப்பட்டது. அதன் அலைகள் இருட்டில் பால் போலப் பொங்கின. கடலின் பேரிரைச்சல் துல்லியமாகக் கேட்டது. அருகாமை நகரங்கள் இருந்ததற்கான அடையாளங்களில்லை. சில உயர்ந்த கட்டடங்கள் மட்டும் வெளியில் தலைகளை நீட்டியிருந்தன. ஓரிரு பெரும் மரங்கள் வெள்ளத்தில் அசைந்தாடின. அனைவரின் முகங்களும் பயமடைந்து கிடந்தன. ஒருவர் பெரும் பீதியுடன் “நாமெல்லாம் மூழ்கப் போறோம்” என்றார். மற்றொருவர் நம்பிக்கையற்ற குரலில் கடல் அங்கேயே நின்றிருக்கிறது என்று அபிப்ராயப்பட்டார். கொஞ்சம் மேடாயிருப்பதால் ஊருக்கு வெளியிலேயே கடல் நின்றுவிடும் எனச் சிலர் ஆறுதல் கொண்டனர். அப்படியே வந்தாலும் ஓரிரு அடிகள் தேங்கிக் காலைக்குள் வடிந்துவிடுமென்றனர். சில பெரியவர்கள் மட்டும் மொத்தமாக எதிர்த்திசையில் ஓரிரு ஊர்கள் அடுத்துள்ள மேட்டுப் பகுதிக்குத் தப்பித்துச் சென்றுவிடுவதே நல்லது என்றனர். முக்கியமான பொருட்களை எடுத்துக்கொண்டு அவரவர்களிடம் உள்ள வாகனங்களில் கிளம்பலாம். இல்லாதவர்கள் நடைப் பயணமாகச் செல்லலாம் என்றார்கள். குடும்ப உறுப்பினர்கள் அதிகமாக உள்ளவர்கள் தயங்கி அங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் மட்டும் அப்போதே மனைவி குழந்தையோடு இரு சக்கர வாகனங்களில் வேகமாகப் புறப்பட்டார்கள். அவனும் வீட்டிற்குச் சென்று மனைவியும் பையனோடும் இரண்டு ஊர் தள்ளியிருக்கும் அப்பாவின் வீட்டிற்குச் செல்லலாமென நினைத்தான். எல்லாக் கதவுகளையும் சன்னல்களையும் மூடிவிட வேண்டும். இரண்டு பயணப் பைகளில் மட்டும் வேண்டிய துணிமணிகளைத் திணித்துக்கொண்டு புறப்படலாம் என்று தீர்மானித்தான். அவர்கள் ஒருவருக்கொருவர் ஆலோசித்துக்கொண்டிருக்கையிலேயே கடலின் ஓங்காரம் காதில் நுழைந்தது. எலும்புகளை நடுக்கமுறவைக்கும் குளிர்ந்த காற்று ஊடுருவியது. அலைகளின் வெண் நுரைகள் பளிச்சென்று புலப்பட்டன. ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் முறியும் ஓசை அருகே கேட்டது. கணத்துக்குக் கணம் கடல் இரையும் சப்தம் கூடிக்கொண்டிருந்தது. அவர்கள் ஏதும் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். பயமுற்ற கால்கள் நகர மறுத்தன.

மேலே நிலவு வெளிச்சம் காய்ந்தது. அதில் சிறு கடலலைகள் பளபளத்தன. அவை மேடுபள்ளங்களை நிறைத்துக்கொண்டு வந்தன. பசுமையான செடிகொடிகள் வளைந்து மூழ்கின. பல அடிகள் முன்னேறி மீண்டும் பின்வாங்கிச் சென்றது நீர். நனைந்த புதர்கள் சொட்டியபடி மீண்டும் தலைதூக்கின. நெருங்காது என்று நினைத்த கடலின் எங்கோ தூரத்தில் ஒரு ராட்சத அலை புறப்பட்டு வந்தது. அது கிட்டத்தில் வந்து உடைந்தது. அனைவரும் அலறியவாறு பிரிந்து ஓடினர். அவர்களின் பின்னால் துரத்தி வந்த நீர் கால்களை நனைத்துவிட்டுச் சென்றது. அவன் நம்ப முடியாமல் தயங்கி நின்று பார்த்தான். நீரைக் காய்ந்த தெருக்களின் புழுதி சரசரவென்று கொப்புளங்கள் வெடிக்க உள்ளிழுத்தது. சற்று நேரம் கழித்துத் திரும்பிப் பார்க்கையில் ஒரு சிறு அலை எழும்பி வடிந்தது. நாலைந்து அலைகளுக்குப் பின்னால் மறுபடியும் ஒரு பெரும் அலை. அது ஆடைகளையெல்லாம் நனைத்தது. அப்போதுதான் கவனித்தான், ஈரக்கால்களில் நுண் மணல் ஒட்டியிருப்பதை. கீழே எங்கும் மணல் படிந்திருந்தது. அதில் வெண்மையான சங்குகளும் சிப்பிகளும் எஞ்சி நின்றிருந்தன. மறுடியும் ஓர் அலை அவற்றை எடுத்துச் சற்று முன்னால் வீசியது. அலைகள் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருந்தன. நீர்மட்டம் மெல்ல ஏறிக்கொண்டிருந்தது. சற்று தூரத்தில் தெரிந்த வீடுகளின் படிகளிலும் சுவர்களிலும் ஈரம் படர்ந்தது. உள்ளிருந்து அலறல் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அவர்களைக் காப்பாற்றி அழைத்துச் செல்லத் திரும்பினர். பையனும் மனைவியும் கட்டிலில் ஒட்டிப் படுத்திருப்பது அவன் மனத்தில் தோன்றியது. ஒரு பேரலை நடுவிலிருந்து எழுந்து வருவதைக் கண்டதும் ஒருவன் “ஓடுங்க, ஓடுங்க” என்று கத்தினான். மீண்டும் கூட்டமாக எதிர்த் திசையில் விரைந்தனர். முட்டியளவு நீரில் பாதங்களை மணலரிக்கத் தடுமாறினர். அலை தாக்கவும் யாரையும் பார்க்க முடியாமல் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு ஓடத் துவங்கினர். அக்கூட்டத்தோடு அவனும் முன்னால் இழுத்துச் செல்லப்பட்டான். சிலர் முதியவர்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பாகப் பற்றியிருந்தனர். அதையும் மீறிப் பலரை அலைகள் இழுத்துச் சென்றன. எங்கும் அனாதரவான கூக்குரல்கள் எழுந்துகொண்டிருந்தன. யாரையும் மற்றவர் காப்பாற்றும் நிலையில் இல்லை. ஒவ்வொருவரும் உயிராசையால் உந்தப்பட்டவர்களாக, மரணத்திலிருந்து தப்பிக்கத் தனித்தே போராடிக்கொண்டிருந்தனர். அவன் கால்கள் துவள தூரத்திலிருந்த சிறு குன்றே குறியாக ஓடிக்கொண்டிருந்தான். அவனுக்குள் வேறு எண்ணங்கள் அற்றிருந்தன. அருகாமை ஊரைக் கடந்து மேடிட்டிருந்த குன்றின் அடிவாரத்தை நெருங்கினர். உச்சியில் வண்ணங்கள் பூசிய சிறிதான கோபுரம் நின்றிருந்தது. அங்குதான் பலருக்குமான குலதெய்வக் கோயில் இருக்கிறது.

அவன் கீழ்ப்படியில் மூச்சிரைக்க வந்து நின்றான். ஏற்கெனவே ஒதுங்கியிருந்த சில நாய்கள் வேகமாக வாலை ஆட்டின. ஓரமாயிருந்த சிறு பாறையில் கால் நடுங்க உட்கார்ந்தான். பின்னால் பலரும் முண்டியடித்து மேலே வேகமாக ஏறினர். மற்றவர்கள் நிழலுருவங்களாக முட்டியளவு தண்ணீரில் சப்தமெழ இன்னும் ஓடிவந்துகொண்டிருந்தார்கள். சிலருடைய கைகளிலும் தோள்களிலும் சிறு மூட்டைகளும் கைப்பைகளும் இருந்தன. அவனுக்கு மங்கிய வெளிச்சத்தில் ஒருவருடைய அடையாளமும் தெரியவில்லை. அவனுடைய மனைவியும் பையனும் முன்பே தப்பி வந்திருக்கலாம். அவர்களின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிட்டுப் பார்த்தான். அவற்றின் எதிரொலிகளைப் போல் பலருடைய குரல்களும் வெவ்வேறு பெயர்களைக் கூவி அழைத்துக்கொண்டிருந்தன. காற்றில் பொருளில்லாமல் வெறும் சப்தங்களாக அலைந்துகொண்டிருந்தன. அவற்றில் அறிமுகமானவர்கள் என்று யாருமில்லை. மீண்டும் இறங்கி ஊருக்குச் சென்று வீட்டில் பார்த்து வரலாமா என்ற எண்ணம் தோன்றியது. எந்தத் திசையிலிருக்கிறோம் எனத் தெரியாத இருட்டுக் காட்டில் அகப்பட்டிருப்பது போலிருந்தது. பலமுறை கத்திக் கூப்பிட்டுக்கொண்டேயிருந்தான்.

“என் வீட்டுக்காரர பாத்திங்களா?” என்ற குரலைக் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்தான். அங்கங்கே படிக்கட்டுகளில் யாரோ கோயில் பந்தங்களைக் கொளுத்தி நட்டிருந்தார்கள். நிழலோடு ஆடுகின்ற ஒளியில், பக்கத்து வீட்டுப் பெண் அருகே நின்றிருப்பது தெரிந்தது. அவள் கையில் தன் மகனை இறுகப் பிடித்திருந்தாள். அவள் முகம் கல்லை போலிருந்தது. அவளைக் கண்டதும் அவனுக்கு அடைத்திருந்த கண்ணீர் பீறிட்டது. “நான் யாரையுமே பார்க்கலியே…” என்றபடி முகத்தைக் கைகளால் மூடிக் குலுங்கி அழுதான். “அழாதீங்க, வாங்க மேல போய்ப் பாப்போம்” என்றாள். அவன் பாரம் பெரிதும் குறைந்தவனாகக் கண்களை அழுந்தத் துடைத்துக்கொண்டு எழுந்தான். இங்கேயும் நீர் எட்டிவிடும்போல் அலைகள் கீழே மோதிக்கொண்டிருந்தன. இருவரும் படிகளில் நடந்தனர். அவன் துவண்டிருந்த பையனைக் கைத்தாங்கலாக அழைத்துவந்தான். தீச்சுவாலைகளின் வெளிச்சம் அவளின் கறுத்த உடலில் படிந்து திரை போல ஆடியது. “உன் வீட்டுக்காரரையும் காணலையா?” என்றான். “அவரு வேலைய விட்டு வீட்டுக்கே வரலை” என்றாள் மெதுவாக. “எப்ப வருவார்னு சொல்லிட்டுப் போயிருந்தாரு?” என்று கேட்டான். “அதெல்லாம் அவரு சொல்லமாட்டாரு… கேட்டா கோபப்படுவாரு” என்றாள் அழுதபடி. அவள் கண்களில் தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. பையனும் புரியாமல் உடன் அழுதான்.

அவர்கள் வளைந்த படிகளில் மௌனமாக ஏறிக்கொண்டிருந்தார்கள். பலரும் கூச்சலிட்டபடி எதிரில் ஏறி இறங்கிக்கொண்டிருந்தனர். ஒரு படியருகில் யாரோ கைவிட்டிருந்த சிறு மூட்டையில் இடித்துக்கொண்டு அவள் விழவிருந்தாள். அவன் உடனே அவளைத் தாங்கிப் பிடித்தான். அவளின் பிதுங்கிய இடுப்பு மடிப்பு கைகளில் மிருதுவாக உருண்டது. இருவரும் கீழே அப்படியே ஓரமாக உட்கார்ந்தார்கள். பையன் படிகளில் முன்னும் பின்னுமாக ஓடி விளையாடத் தொடங்கினான். அவள் சேலையைத் தூக்கிக் கால் விரல்களைப் பார்த்தாள். சுண்டு விரல் நகம் பெயர்ந்து இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. அவன் விரலால் இலேசாக அதை அழுத்திப் பிடித்தான். அருகிலிருந்த கறுப்பான விரலின் மெட்டி பளீரென்று ஒளிர்ந்தது. அவள் மீண்டும் அழத் தொடங்கினாள். அவன் மெல்ல அவள் முதுகில் தட்டிக் கொடுத்தான். “அழாத… என்ன பண்றது…” என்றான். அவள் மகன் திடீரென ஏறிவந்த ஒரு கூட்டத்தில் சிக்கித் தவித்தான். “அம்மா… அம்மா…” என்று அலறினான். அவள் “டேய்…” என எழுந்துகொள்வதற்குள் மற்றொரு திரள் மோதியது. அதில் இருவரும் கலந்து தடுமாறினார்கள். அதற்குப் பின் பையனின் குரல் கேட்கவில்லை. மேலே சென்று தேடினார்கள். மறுபடியும் கீழே ஓடி வந்தார்கள். பையன் எங்கும் காணப்படவில்லை. மீண்டும் படிகளில் ஏறத் தொடங்கினார்கள்.

மழை சிறு தூறலாகப் பெய்துகொண்டிருந்தது. அவள் விசும்பியபடி காற்றில் நனைந்த செடியைப் போல் தள்ளாடி நடந்துவந்தாள். அவன் அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்திருந்தான். அவர்கள் உச்சியை அடைகையில் பெரும் மனிதக் கூட்டம் நிரம்பியிருந்தது. எதிரே மண்டபத்தில் ஆண்களும் பெண்களுமாக நெருக்கி நின்றிருந்தார்கள். கருவறையிலும் சிலர் ஒண்டியிருப்பது தீபத்தின் ஒளியில் தெரிந்தது. எங்கும் நிற்க இடமில்லை. திறந்த வெளியில் அங்கங்கே பலர் உட்கார்ந்தும் நின்றும் இருந்தனர். சிலர் அந்த அரையிருளில் யார் யாரையோ தேடித் திரிந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் பையனின் பெயரைக் கூவியவாறு அங்குமிங்கும் நடந்தனர். சில பிள்ளைகள் யாருடைய துணையுமின்றி அலைந்துகொண்டிருந்தன.

இருவரும் நடந்து மண்டபச் சுவரையொட்டி உட்கார்ந்தார்கள். மழை புகைபோல் பொழிந்துகொண்டிருந்தது. அவள் அப்போதும் தேம்பிக்கொண்டிருந்தாள். “என் மகன் என்னவிட்டு எப்பவுமே பிரிஞ்சிருக்கமாட்டானே…” என்று அரற்றத் தொடங்கினாள். அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் அவளிடம் நகர்ந்து கைகளைப் பற்றி அழுத்தினான். அவை பனிக்கட்டிகளைப்போல் சில்லிட்டிருந்தன. அவளைத் தோளோடு சாய்த்துக்கொண்டான். அப்போதும் அவளிடமிருந்து கேவல்கள் பீறிட்டுக்கொண்டிருந்தன. திடீரென்று ஒருவன் விரைவாக வந்து அவர்களை நோக்கிக் குனிந்தான். ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டு தீக்குச்சியை அணைக்காமல் தூக்கிப் பிடித்துப் பார்த்தான். இருவரும் மூச்சடைத்துப் பேசாமலிருந்தார்கள். நெருப்பு வெளிச்சத்தின் பின்னால் தலையை ஆட்டி இளித்துக்கொண்டிருக்கும் முகம் புலப்பட்டது. ஒரு கணம் அது அவளுடைய கணவனுடையதைப் போல் அவனுக்குத் தோன்றியது. பின் அந்த உருவம் தீக்குச்சியை எறிந்துவிட்டுத் தள்ளாடிச் சென்று மறைந்தது. அவள் கணவனாக இருக்க முடியாது என்று நினைத்துக்கொண்டான். அதே போன்ற சாயலுள்ள வேறொருவனாக இருக்கலாம்.

அவர்கள் குளிரில் நடுங்கினார்கள். அவன் எழுந்து சற்று தூரமுள்ள பாறைகளுக்கு அவளை நடத்திச் சென்றான். அங்கு துருத்தியிருந்த சிறு பாறைக்குக் கீழே அமர்ந்தார்கள். அவளது உடல் இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தது. மேலே சேலையால் இழுத்துப் போர்த்திக்கொண்டிருந்தாள். அவன் கைகள் ஆதரவுடன் அவள் தலையைத் தடவி முதுகை வருடின. அவளின் பரந்த முதுகு அழுகையில் குலுங்கியது. அவளின் கலைந்த கூந்தல் பின்புறத்தில் படிந்து தவழ்ந்துகொண்டிருந்தது. “அழாம தைரியமாயிரு… பையன் எங்கியாவது உயிரோடுதான் இருப்பான்” என்று அவள் காதுகளில் கிசுகிசுத்தான். அவன் மூச்சு அவனுக்கே உஷ்ணமாகப்பட்டது. அவள் உடைந்து அழத் தொடங்கினாள். அவன் அவளுடைய தோளை அழுத்திப் பிடித்தான். அவன் மார்பில் தலையை மெல்லச் சாய்த்தாள். தூரத்தே தீப்பந்தங்கள் தூறலில் கரிந்து புகைந்தன. மெல்லிய வெளிச்சத்தில் அவளின் புறங்கழுத்தின் செம்பட்டை மயிர்கள் மின்னின. அவளைச் சேர்த்து அணைத்தான். அவன் கரங்களில் துவண்டிருந்த அவளின் அழுகை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. அவளின் ஈரமான இதழ்களை இழுத்து முத்தமிட்டான். அவை வாய்க்குள் உயிர்ப்போடு நெளிந்தன. அவன் கண்களில் நீர் துளிர்த்தது.

எக்காலத்திலும் அடைய முடியாதென நினைத்த அவள் உண்மையாகவே அவன் கைகளுக்குள் நிறைந்திருந்தாள். இத்தனை நாட்களாக அவள் கடலின் அடி யாழத்தில் முத்துக்களோடும் பவளங்களோடும் உறைந்திருந்திருக்கலாம். அவன் இதற்காகவே பல பிறவிகளாகக் கடற்கரையில் காத்திருந்திருக்கிறான் போலும்… அலைகள்தான் அவளை எடுத்து மேலே சேர்த்திருக்கின்றன. இப்போது அவன் மடியில் இரத்தமும் சதையுமாகக் கிடக்கிறாள். அனைத்துமே கற்பனையில் நடப்பவை போலிருக்கின்றன. ஆனால் அவள் அருகிலிருப்பது நிஜம். அவளின் மெத்தென்ற உடல் நெளிவுசுளிவுகளோடு எதிரிலேயே இருக்கிறது. அம்மாபெரும் கடலுக்கு அப்புறமாக மறுகரையில் அவனுடைய மனைவியும் பையனும் அவளுடைய கணவனும்கூட நிம்மதியாக உறங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ஏதும் ஆகியிருக்காது. ஒருவேளை இதெல்லாமே அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். வீட்டினுள்ளிருக்கும் அவர்களுக்கு இதை அறியும் வாய்ப்பில்லைதான். இந்தக் கடல் தாண்டி குன்றின் உயரத்தில் யாரும் காணாமல் அவனது ஒளிந்துகிடக்கும் இச்சைகள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அவன் கண்களை அவள் துடைத்துவிட்டு மடியில் சரிந்து படுத்தாள். அவளின் மேலாடைகளுக்குக் கீழே அவன் விரல்கள் தேடிச் சென்றன. அனிச்சையாக ஆடைகளை நீக்கி மார்பகங்களை நீவின. அவை அப்போதுதான் ஈன்றெடுத்த விலங்குக் குட்டிகளைப் போல் அசைந்தன. அந்தக் குளிர்ச்சியிலும் உள்ளார்ந்த வெம்மையோடு அவன் முகத்தில் அழுந்தின. அவன் நாவில் ஊறும் எச்சிலோடு உப்பின் சுவையும் கலந்தது. அவளின் ஒரு கரம் நீண்டு அவன் கழுத்தை அணைத்தது. அவன் கால்களால் அவளைப் பிணைத்து மேலே கவிழ்ந்தான். அவனது உடல் அவளிடம் உயிரின் தாபத்தோடு நாடியது. இருவரும் பாறையின் இடுக்கில் மேலும் குறுகித் தழுவிக்கிடந்தனர். தொலைவிலிருந்து சில பேச்சுக் குரல்கள் நெருங்கி வந்தன. உடைகளை அவசரமாகச் சரிசெய்துகொண்டு இருவரும் விலகிப்படுத்தனர். சிலர் நடந்துவந்து இடம் கிடைத்ததில் களைப்போடு அங்கங்கே சாய்ந்தனர். அனைவரும் அயர்ச்சியில் அரையுறக்கத்தின் மயக்கத்தில் ஆழ்ந்தார்கள்.

அவன் தலை கனத்து வலிக்கக் கண் விழித்துப் பார்க்கையில், பொழுது விடிந்து எங்கும் வெளிச்சம் படரத் தொடங்கியிருந்தது. அருகில் உறங்கிக்கொண்டிருந்த அவளை எங்கும் காணவில்லை. அங்கிருந்து முன்பே எழுந்து சென்றுவிட்டிருப்பாள் போலும். விடியலின் வினோதமான சப்தங்கள் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தன. கண்களெரியச் சுற்றிலும் நோக்கினான். கீழே தண்ணீர் சிறிதுமில்லை. மழை முழுதாக ஓய்ந்திருந்தது. கடல் பொங்கி வந்து தாக்கியதற்கான எவ்விதத் தடயங்களுமில்லை. வெளியில் ஈரமேயின்றி பூமி காய்ந்து வறண்டிருந்தது. வெயில் வெப்பத்தோடு வேகமாக வீசிக்கொண்டிருந்தது. அவள் இரவில் இருந்ததற்கான அடையாளம் காணப்படவேயில்லை. ஆனால் அவளின் கறுத்த உடல் வெம்மையோடு நினைவில் ஆழமாகப் பதிந்திருந்தது. அவள் முகம் எதிரில் விரிந்து சலனமற்று அவனைக் கடந்து நோக்கிக்கொண்டிருந்தது. கடக்க முடியாத பெரும் கடலில் அவளோடு தனியாக மூழ்கித் தவிப்பதாக நினைத்தான். எப்போதுமே அதை மறக்க முடியாது போலிருந்தது. அவன் அங்கிருந்து வேகமாக எழுந்தான். கடல் வெள்ளம் விட்டுச்சென்ற ஒரு பொருளாவது அருகில் கிடக்குமா என்று தேடிப் பார்த்தான். ஒரு சிப்பி, ஒரு சங்கு அல்லது கையளவு நீல நீர்… ஏதாவது ஒன்று கிடைத்தாலும் போதும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *